க்கீரன் இதழ் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலனாய்வுப் பாதையில் தெளிவாகவும் துணிவாகவும் நடைபோட்டு பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் நக்கீரன் நுனிப்புல் மேய்ந்ததில்லை. எந்த செய்தி நக்கீரன் காதுக்கு வந்தாலும், அதை அரைகுறையாக விட்டுவிடாமல், அதன் நுனி நூலைப் பிடித்துக்கொண்டு, அதன் கடைசி நுனிவரை ஆராய்ந்து எழுதுவதுதான் நக்கீரனின் தனித்தன்மை.

nakkheerangopal

Advertisment

இப்படி நக்கீரன் தன் புலனாய்வு வரலாற்றில், சமூகத்துக்கு எதிரான எண்ணற்ற திரைமறைவு விவகாரங்களையும் விதவிதமான வில்லன்களையும் அதிரடியாக அம்பலப்படுத்தி, மக்களிடம் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதழியல் துறையின் உரிமைகளுக்காகப் பல்வேறு முன் மாதிரித் தீர்ப்புகளை நக்கீரன் பெற்றுக்கொடுத்திருப்பதோடு, நீதித் துறையாலும் பலமுறை பாராட்டப்பட்ட பெருமையையும் கொண்டிருக்கிறது. அப்படி நக்கீரன், அடிமுதல் நுனிவரைப் புலனாய்ந்து முழுவதுமாய் அம்பலப்படுத்திய செய்திகள் கொஞ்சநஞ்சமல்ல.

vaikoமாத்தையாவால் பிரபாகரன் சுடப்பட்டதாக தகவல் வந்தபோது, தீவிரமாய்க் களமிறங்கி, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதைப் புகைப்பட ஆதாரத்தோடு நிரூபித்ததும் நக்கீரன்தான். 88- வாக்கில், ஆட்டோ சங்கர் விவகாரத்தை முழுதாக வெளிக்கொண்டுவந்து, பல பெரிய மனிதர்களின் முகத்திரையைக் கிழித்ததோடு, சங்கரைக் கொண்டே அவரது வரலாற்றை அப்பட்டமாய் எழுதச்செய்ததும் நக்கீரன்தான்.

91-ல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது, நக்கீரன் முழுமையாகப் புலனாய்வில் இறங்கி, சி.பி.ஐ. பார்க்காத கோணத்திலும் பார்த்து, அது மறைத்ததையும் வெளிப்படுத்தியது.

Advertisment

பக்தியின் பேரால் பெண்களைச் சீரழித்த மன்மதச் சாமியார் பிரேமானந்தாவின் ரகசியக் கதவுகளைத் திறந்துகாட்டியதும் நக்கீரனே.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றும் உரிமைப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட வெறியாட்டங் களை புகைப்பட ஆதாரங்களோடு வெளியிட்டதும் நக்கீரனே. நாம் வெளியிட்ட புகைப்பட ஆதாரத்தை வைத்துதான் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தை தனதாக்கிக் கொண்டார்.

91-ல் ஆட்சிபீடம் ஏறிய ஜெ.,’ சரசரவென கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்ததையும், அவருக்கு ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம் இருந்ததையும் புகைப்பட ஆதாரங்களோடு மக்கள்முன் கொண்டுவந்ததும் நக்கீரன்தான்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாமீது ஆசிட் வீச்சு நடத்தப்பட்ட பின்னணியையும், அதில் தொடர்புடைய குற்றவாளி சுர்லாவையும் நக்கீரன்தான் அம்பலப்படுத்தி யது. திருச்சி விமான நிலையத்தில் ப.சி.யைத் தாக்கிய அ.தி.மு.க.வினரை உரிய படங்களோடு பகிரங்கப்படுத்தி யதும் நக்கீரன்தான். டாக்டர் பிரகாஷ், சிவகாசி ஜெயலட்சுமி, ஜனனி ஆகியோரைப் பற்றிய வில்லங்க விவகாரங்களையும் மக்களிடம் நக்கீரன் தான் முழுமையாக எடுத்துச்சென்றது.

stalin93 தொடங்கி, சந்தன வீரப்பன் விவகாரத்தில் நக்கீரன் நடத்திய புலனாய்வும், அவனால் கடத்தப்பட்ட ஒன்பது வன இலாகா அதிகாரிகள் மற்றும் நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்ட சாதனையும் நக்கீரனின் மகுட சாதனையாகும்.

ஜெ.’ சொத்துக் குவிப்பு வழக்கு, கலைஞரின் நள்ளிரவுக் கைது, முன்னாள் தி.மு.க. அமைச்சர் களான ஆலடி அருணா கொலை, தா.கிருஷ்ணன் கொலை போன்றவற்றிலும் நக்கீரன் தன் புலனாய் வுத் திறனை நிரூபித்திருக்கிறது.

காஞ்சி சங்கராச்சாரியாரின் அடியாட்களால் கோயிலுக் குள்ளே சங்கரராமன் கொடூர மாகக் கொல்லப்பட்ட விவகாரத்தைத் தோண்டித் துருவி அப்பட்ட மாக்கிய பெருமையும் நக்கீரனுக்கே உண்டு. முத்திரைத்தாள் மோசடி விவகாரம், நித்தியானந்தாவின் மன்மத விவகாரம், ஜக்கி வாசுதேவின் வன ஆக்கிரமிப்பு விவகாரம் என சகலத்தையும் முழுமையாக அம்பலப்படுத்தியதும் நக்கீரன்தான். இப்படிப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் நக்கீரனிடம் தானாய் வந்து சேர்ந்த விவகாரம்தான் நிர்மலாதேவி விவகாரம். அது எப்படி நக்கீரனிடம் வந்தது?

நக்கீரனின் அருப்புக்கோட்டை நிருபரான தம்பி ராமகிருஷ்ணனை கடந்த ஏப்ரலில் போனில் தொடர்புகொண்ட ஒரு முதியவர், ""ஐயா, உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். ரொம்பவும் கஷ்டமான மனநிலையில் இருக்கேன். நேர்ல சந்திச்சீங்கன்னா நான் ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்வேன். இது காலேஜ்ல படிக்கும் பல பொம்பளைப் பிள்ளைகளோட வாழ்க்கைப் பிரச்சினை. அவங்களை நக்கீரன்தான் காப்பாத்தனும்''’என்றபடி அழுதார்.

இதைகேட்டுப் பதறிய தம்பி ராமகிருஷ்ணன், எனக்கு போன் போட்டு விவரத்தைச் சொன்னார். நான், ""நம்ம அருப்புக் கோட்டைதானே.. உடனே போய் அவரைப் பாருங்க தம்பி'' என்றேன்.

nram

அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டின் பின்பக்கம், கிரே கலர் பேண்ட், ஒயிட் கலர் சட்டையில் இருப்பேன் என்று அந்த முதியவர் சொல்லியிருந்த அடையாளத்தை வைத்து, அவரை நம் நிருபர் சந்தித்தார்.

அவர் எடுத்த எடுப்பி லேயே, “""ஐயா உங்க செல்போனில் "ஷேர் இட்'’ வசதி இருக்கா...? நான் ஒரு ரெக்கார்ட் செய்த பேச்சை அனுப்பறேன். கேட்டுப்பாருங்க''’ என்றபடி, ஒரு உரையாடல் பதிவை நிருபரின் செல்லுக்கு அனுப்பினார். அதைக் கேட்ட நம் நிருபர் பதறிப்போய்விட்டார்.

அதே பதற்றத்தோடு என்னைத் தொடர்புகொண்ட நிருபர் ராமகிருஷ்ணன், ""அண்ணே, பெரிய கொடுமை நடக்கு துண்ணே... நிர்மலாதேவின்னு ஒரு பேராசிரியை, காலேஜ்ல படிக்கிற பொம்பளப் பிள்ளைகளை எல்லாம், தனக்கு மேலே உயர் பதவியில் இருக்கும் ஆளுங்களுக்கு சப்ளை பண்றாங்களாம். அந்த பெரியமனுஷங்க லிஸ்ட்டில் கவர்னர் மாதிரியான ஆளுங்களும் இருக்காங்களாம். அந்தப் பெரியவர் முழுசாப் பேசமுடியாம அழுவுறார். அவர் தன்னோட பேரோ ஊரோ வெளியில் தெரியவேணாம்ன்னு சொல்றார். நான் எல்லா விசயத்தையும் உங்ககிட்ட கொட்டிட்டேன். நக்கீரன்தான் அதுக்குமேல ஆகவேண்டியதைச் செய்து, அந்தப் பொம்பளப் பிள்ளைகளைக் காப்பாத்தனும்ன்னு சொல்றாருண்ணே''’’ என்றார்.

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.governor

அந்த உரையாடல் பதிவிலிருந்து நூல் பிடித்து, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், பல்கலைக் கழக விடுதி என புலனாய் வைத் தொடங்கி முன்னேறினோம். அது ராஜ்பவன் வரை போய் நின்றது. நிறைய அதிர்ச்சித் தகவல்கள் அணிவகுத்து வந்தபடியே இருந்தன. இதுபற்றிய முதல் அதிரடி ரிப்போர்ட், 2018 ஏப்ரல் 8-ஆம் தேதி நக்கீரன் இதழில் வெளியானது.

இதைக்கண்டு தமிழகமே பதறியதைப் பார்த்ததும், தமிழக அரசு ஐந்து பேர்கொண்ட விசாரணைக் குழுவை அறிவிக்க, பதறிப்போன கவர்னர், "என்னை நானே ஒரு நபர் கமிஷன் அமைத்து விசாரித்துக் கொள்கிறேன்' என்றபடி சந்தானம் கமிஷனை அமைத்தார். வழக்கு சி.பிசி.ஐ.டிக்குப் போக, அது அந்த நிர்மலாதேவியையும் அவரோடு பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தது. இவர்களை மட்டுமே குற்றவாளியாக்கி, அங்கேயே வழக்கை முடிக்க முனைந்தது போலீஸ். அப்போது, பேராசிரியர் கருப்பசாமியின் மனைவி சுஜா பதற்றத் தோடு நக்கீரனிடம் பேசினார். ’""என் கணவர் அப்பாவி. மாணவிகள் பலியாக்கப்பட்ட விவகாரத்தில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாரையோ காப்பாற்ற என் கணவர் உள்ளிட்ட மூவரையும் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்'' என்று கதறினார்.

அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மீடியாக்களிடம் முறையிட்டார். அதேபோல், நிர்மலாதேவியும், "என்னைக் கொல்லப் பார்க்கிறார் கள்' என்று கதறத் தொடங்கினார்.

lawyerteam

அவரது பயம் நியாயமானதுதான். ஏனென்றால் ஏற்கெனவே சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை, இப்படிக் கொன்றி ருக்கிறார்கள். இது குறித்து நாம் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதி யும் அவன் கதை யைக் கச்சிதமாய் முடித்துவிட்டார்கள். அதேபோல் நிர்மலாதேவிக்கும் ஆபத்து இருப்பதை அறிந்த நாம், அம்பலப்படுத்தும்விதமாக, அதுவரை கிடைத்த அத்தனை செய்திகளையும் தொகுத்து வெளியிட்டோம்.

lawyers‘"நான்கு முறை கவர்னரை சந்தித்தேன்! பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து'’ என்ற தலைப்பில் அது விரிவான ரிப்போர்ட்டாக செப் 26-28 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது. இதைத் தொடர்ந்துதான் என்னைக் கைது செய்யும் படலம் அரங்கேறியது.

கைது செய்வதென்றால் முறையாக வாரண்டைக் காட்டி என் வீட்டிலோ அலுவலகத்திலோ கைது செய்திருக்கலாம். ஆனால், 9-ஆம் தேதி புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நிலையில், அங்கே ரெஸ்ட் ரூமுக்கு சென்றபோது, ஒரு தீவிரவாதியை மடக்குவதுபோல் என்னை மடக்கினார்கள்.

ஏன் மடக்கினார்கள்? எதற்கு மடக்கினார்கள் என்று அப்போது சொல்லவில்லை. அது கைது நடவடிக்கையா என்றுகூட அப்போது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எதுவும் சொல்லாமல் அங்கும் இங்குமாய் நான் அலைக்கழிக்கப்பட்டேன். பின்னர் போலீஸ் டீம் புடைசூழ என்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்குக் கொண்டுபோய் உட்காரவைத்தார் கள். அங்கு முதல் ஆளாக வந்தவர் அண்ணன் வைகோதான்.

அவர் வைத்த பொறிதான் பெருந்தீயாய்ப் பரவி இந்தியா எங்கும்- ஏன் உலகெங்கும் கொளுந்துவிட்டு எரிந்தது. "நான் ஒரு வழக்கறிஞராக கோபாலைப் பார்க்கவேண்டும். இதோ நான் வழக் கறிஞர் என்பதற் கான அடையாள அட்டை' என்று, அடையாள அட்டையைக் காட்டியும்கூட வைகோவை அவர்கள் அனுமதிக்க வில்லை. இது அராஜகம் என்றபடி சாலையில் உட்கார்ந்து தனி மனிதராக தர்ணா நடத்திய வைகோவை அவர்கள் பலவந்தமாகக் கைது செய்தனர்.

அங்கே பிரமுகர்கள் படையெடுக்க ஆரம்பித்ததைப் பார்த்து, அவசர அவசரமாக என்னை, மருத்துவப் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணியில் இருக்கும் கோஷா (கஸ்தூரிபாய்) ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். செய்தியைக் கேள்விப்பட்டு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அங்கே வந்தார். அவரோடு துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஆ. ராசா, சேகர்பாபு ஆகியோரும் வந்தனர். என்னைச் சந்திக்க அவர்களையும் அனுமதிக்கவில்லை. உடனே அண்ணன் ஸ்டாலின், "சிகிச்சைக்காக நான் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்' என்று சத்தமிட்டபடி, உள்ளே வந்து என்னைப் பார்த்து ஆறுதல் சொன்னார்.

"சர்வதிகார நாட்டிலா இருக்கிறோம். நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால், பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்' என்று அங்கிருந்தே அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். அங்கும் கூட்டம் கூடுவதைப் பார்த்த போலீஸ், நேராக எழும்பூர் அல்லிக்குளம் 13-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்தியது.

அங்குதான் என் மீது 124-ஆம் சட்டப்பிரிவின்படி வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதும், இந்த வழக்கில் என்னையும் சேர்த்து என்னுடன் பணியாற்றும் 35 பேர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதும் எனக் குத் தெரியவந்தது.

என் கைதை தனி நபர் பிரச்சினையாகக் கருதாமல், 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கே திரண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். திருமாவளவனை நீதிமன்ற அறைக்குள் போலீஸ் அனுமதிக்கவில்லை. அதனால், தான் ஒரு வழக்கறிஞர் என்றபடி திருமா நீதிமன்ற அறைக்குள் வந்தார். அதேபோல் முத்தரசன் அவர்கள், "நான் வக்கீல் குமாஸ்தா' என்றபடி உள்ளே வந்தார். அடுத்து, மரியாதைக்குரிய சகோதரர் இந்து பத்திரிகைக் குழுமத் தலைவர் என். ராம், அவருடன் அவரின் உதவியாளர் விஜயகுமாரும் அங்கே வர, அவரை ஊடகப் பிரதிநிதி என்ற முறையில் உள்ளே அனுமதித்த நீதிபதி, எதிர்பாராத நிலையில், ""நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா'' என்று என். ராம் அவர்களிடம் கேட்டார். அவருடைய கேள்விக்கு பதிலளித்த என்.ராம், இந்த வழக்கில் மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். ""முதலாவதாக, ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டு 124-ஆவது பிரிவின்கீழ் வரத் தகுயில்லாதது ஆகும். இரண்டாவதாக, நக்கீரன் கோபாலை நீதியரசர் ரிமாண்ட் செய்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மற்றவர்களுக்கும் காலாவதியான இந்த பிரிவை பயன்படுத்தும் தைரியத்தை கொடுத்துவிடும். மூன்றாவ தாக, இந்த நடவடிக்கை தேவை யற்ற வகையில் ஆளுநர் மாளிகையை யும் குடியரசுத்தலைவர் மாளிகை யையும் சர்ச்சைக்குள் இழுத்துவிடும்'' என்றார் என். ராம்.

""இன்று நக்கீரன் கோபாலுக்கு நேர்ந்த நிலை, நாளை என்னைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் நிச்சயம் நேரும். இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கும் என்று அஞ்சுகிறேன்'' என்று அழுத்தம் திருத்தமாகத் தன் கருத்தை நீதிமன்றத்தில் வைத்தார். இதை நீதிமன்றம் பதிவுசெய்துகொண்டது.

nirmaladeviதகவல் கேட்டு பவானியிலிருந்து விமானம்மூலம் விரைந்து வந்தார் வழக்கறிஞர் பா.ப. மோகன். நம் மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாளும், ""124- ஆவது சட்டப் பிரிவில் வழக்கைத் தாக்கல் செய்ய எந்த அடிப்படையும் இல்லை. ஒரு பத்திரிகை விமர்சனம் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகச் சொல்வதை ஏற்கமுடியாது. வேண்டுமானால் இதற்கு அவதூறு வழக்குதான் போடமுடியுமே தவிர, வேறு எந்த குற்ற வழக்கும் போடமுடியாது'' என்று வாதிட்டார். விசாரணையை இடைநிறுத்தி வாதங்களை ஒரு மணி நேரம் ஆய்வு செய்த நீதித்துறை நடுவர், என்னைக் கைது செய்யும்போது எந்த காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதைக்கூட குறிப்பிடாத கைது குறிப்பாணையைச் சுட்டிக்காட்டி, ""இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின்கீழ் இவரை நீதிமன்றக் காவலில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை. அரசு தரப்பு அதற்கான எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. எனவே உரிய வகையில் வழக்கை நடத்தவேண்டும்'' என்று தீர்ப்புரைத்த நீதித்துறை நடுவர் கோபிநாத் அவர்கள், தனி நபர் ஜாமீனில் என்னை விடுதலை செய்தார்.

நமக்காக வழக்கறிஞர்கள் ராஜகோபால், இளங்கோவன், சிவகுமார், பாவேந்தன் ஆரோக்கியம், வெங்கடாசலபதி, வர்கீஷ், டெல்லிராஜ் போன்றோ ரும் நீதிமன்றத்தில் துணைநின்றனர்.

’அதிகாரத்தைக் கொண்டு எதையும் வளைக்கலாம். எந்த அளவிற்கு வேண்டுமானாலும் வளைக்கலாம்’ என்று கருதுகிற அதிகாரவர்க்கத்திற்கு கொஞ்சமும் இடம்தராமல், நீதியையும் ஊடக சுதந்திரத்தையும் கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் தெளிவான, அழுத்தமான தீர்ப்பை வழங்கிய நீதித்துறை நடுவருக்கு நம் நன்றி என்றும் உரியது.

எனக்காக களமிறங்கிப் போராடிக் கைதான அண்ணன் வைகோ, நேரில் வந்து அன்போடு ஆதரவு தெரிவித்த அண்ணன் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரோடு வந்த முன்னாள் அமைச்சர் கள் துரைமுருகன், பொன்முடி, ஆ. ராசா, எ.வ. வேலு, சேகர்பாபு, நீதிமன்றத் தில் ஒரு நாள் முழுவதும் என் விடுதலைக்காகக் காத்திருந்த முத்தரசன், திருமாவளவன், நீதிக்கான போராட்டத்தில் நக்கீரனின் தோளோடு தோள் நின்று நீதிமன்றத்தில் வாதாடிய சகோதரர் இந்து ராம், ஏனைய ஊடக நண்பர்கள், வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

’ஊடக சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் காரணமாக, நான் போலீஸ் பிடியிலிருந்து விடுபட்ட பின்னரும், கடந்த 12-ஆம் தேதி, நக்கீரனுக்கு எதிரான ஒரு அவதூறு அறிக்கையை கவர்னர் மாளிகை வெளியிட்டிருந்தது.

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது அது குறித்துப் பேசக்கூடாது என்பது தான் விதி. ஆனால் இந்த விதியை பற்றியெல்லாம் கவலைப்படாமல், "எங்களை யார் கேட்க முடியும்?' என்ற அதிகார மனநிலையோடு கவர்னர் மாளிகை அவதூறு அறிக்கையை பகிரங்கமாக வெளி யிட்டிருக்கிறது.

அதில் நக்கீரனை ’"மஞ்சள் பத்திரிகை'’ என்று தரம் தாழ்ந்து கவர்னர் மாளிகை விமர்சனம் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட விமர்சனமே அவர்கள் தகுதியும் தரமும் எப்படிப்பட்டது என்று உணர்த்துகிறது. இத்தனைக்கும் கவர்னர் பத்திரிகை நடத்துகிறா ராம். அவரே ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்குபவை பத்திரிகைகள் என்பதை மறந்து விட்டுத் தன் கையாலேயே நக்கீரன்மீது சாக்கடையை வாரி இறைத்திருக்கிறார்.

"நெற்றிக்கண்' திறப்பினும் குற்றம் குற்றமே’ என்றபடி, சமூக அநீதிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தோடு எழுதுகோல் பிடிக்கும் நக்கீரன் அவருக்கு மஞ்சள் பத்திரிகையாம்.

சிலரின் பச்சையான நடவடிக்கைகளை ஊடகம் கண்டித்தால், அது அவர்களுக்கு மஞ்சளாகத் தெரிகிறது.

"காமாலை கண்டவர்களுக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரியும்' என்பார்கள். கவர்னரின் பார்வையில் என்ன பழுதோ? அவருக்கு அவரைப் பற்றி எழுதிய செய்திகள் மஞ்சளாகத் தெரிகிறது.

இந்த மஞ்சள், செய்தியின் நிறமல்ல; அவர்களது செயலின் நிறம் என்பதை தமிழகமே உணர்ந்திருக்கிறது. நக்கீரனை மஞ்சள் பத்திரிகை என்று அவதூறு கிளப்பும் கவர்னர்மீதும் மாளிகைமீதும் யார் வழக்கு தொடுப்பது?

இந்த வழக்கே ஒரு அத்துமீறிய அதிகார துஷ்பிரயோகத்தின் அடிப்படையில் புனையப்பட்ட வழக்குதான்.

எப்படியென்றால், "நிர்மலா தேவி விவகாரத் தைத் தோண்டித் துருவும் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களை இன்னும் நீங்கள் விட்டுவைக்கலாமா?' என்று கவர்னர் மாளிகை எடப்பாடி அரசைக் கேட்டுக் கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து முதல்வரை கவர்னர் பன்வாரிலால் நேரில் வருமாறு அழைக்க, 5-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கவர்னரை சந்தித்தார். அப்போதும் கவர்னர் அதையே முதல்வரிடம் வலியுறுத்தினார் என்கிறார்கள். அதற்கு முதல்வர் தயங்கியதால், மறுநாள் காலை ஒரு கருத்தரங்கில் பேசிய கவர்னர், "பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனங்களில் இங்கே ஊழல்கள் நடந்திருக்கிறது' என்று எடப்பாடி அரசு மீது ஒரு வெடிகுண்டை பகிரங்கமாக வீசினார். அதனால், "இதன் பின்னும் இந்த அரசு நீடிக்கலாமா?’ என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகளை எழுப்பின. ஒரு கவர்னரே மாநில அரசின்மீது ஊழல் புகார் சுமத்தினார் என்றால், அது அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல். அதனால் எடப்பாடி அரசு பதறியது.

இதன்பின்னரே 9-ஆம் தேதி காலை, கவர்னர் மாளிகை புகாரின் பேரில் என்னை, ஒரு தீவிரவாதியை மடக்குவது போல் கைது செய்தது தமிழக அரசு. நான் கைது செய்யப்பட்ட அன்றைய மாலையிலேயே, எடப்பாடி அரசு மீது, தான் வைத்த ஊழல் புகாரில் ரிவர்ஸ் அடித்தார் கவர்னர். "அரசு மீது, கல்வியாளர்கள் சொன்ன குற்றச் சாட்டைத்தான் நான் சொன்னேன்' என்றார் கவர்னர்.

இதிலிருந்தே கவர்னர் மாளிகை, அரசை மிரட்டித்தான் என்னைக் கைது செய்யவைத்தது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

124-ஆவது சட்டப்பிரிவின் படி நக்கீரன் மீது நடவடிக்கை எடுக்கச்சொன்ன கவர்னர், அந்த அறிக்கையில் எப்படியெல்லாம் நக்கீரன் அந்த சட்டப்பிரிவைப் பிரயோகப்படுத்தும் வகையில் செயல்பட்டது என்று தெரிவிக்க வில்லை.

124-ஆவது சட்டப்பிரிவு என்பது ஜனாதிபதி மற்றும் கவர்னரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அவர்களைத் தாக்கி காயப்படுத்துதல் ஆகிய குற்றச்செயலுக்கான பிரிவாகும்.

நக்கீரன் எந்த வகையிலும் கவர்னரின் அன்றாடப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அவர் வழக்கம்போல் அங்கங்கே கூட்டிப்பெருக்கும் வேலையையும் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார். அவருக்கு இருக்கும் வேலைகளைத் தாண்டி, இதுபோன்ற பொய் வழக்குகள் போடுவதிலும் இப்படிப்பட்ட அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதிலும்கூட ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

இதில் எங்கே அவரது பணிகள் பாதிக்கப்பட்டன? கடைசியாக தாமிரபரணி புஷ்கர விழாவி லும் கலந்து கொண்டு நீராடி விட்டு வந்தார். அதேபோல் அவர் தாக்கப்படவும் இல்லை. காயப்படுத்தப்படவும் இல்லை.

ஆக எந்தவகையிலும் சம்பந்த மில்லாத 124-ஆவது பிரிவின் படி நக்கீரன்மீது அவர், வழக்குத் தொடுக்கச் சொன்னதே அதிகார துஷ்பிரயோகம்தான். இந்த சட்டப் பிரிவில்தான் வழக்கைப் பதிவுசெய்யவேண்டும் என்று காவல்துறைக்கு அவர் உத்தரவிடுவதே, அதன் அதிகாரத்தில் தலையிடுவதுதான்.

அதேபோல், நிர்மாலாதேவியின் வாக்குமூலத்தில், எந்த இடத்திலும் அவர் கவர்னர் என்று குறிப்பிடவில்லை என்றும் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். நிர்மலாதேவியின் வாக்குமூலத்தில் கவர்னர் பெயர் இல்லாதது கவர்னருக்கு எப்படித் தெரியும்? அப்படியென்றால் நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கியிருக்கிறார் என்றுதானே அர்த்தம்? "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற ரீதியில், கவர்னரின் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

நக்கீரனில் 35 பேர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்படிருப்பது, உலகில் வேறெங்கும் நடக்காத அத்துமீறல். கவர்னர் மாளிகையே, நக்கீரனை முடக்கும் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுதான் அந்த எஃப்.ஐ.ஆர். இதற்கெல்லாம் நக்கீரன் அஞ்சப்போவதில்லை. சட்டத்தின் துணையோடு நக்கீரன் வழக்கம்போல் நீதியை வென்றெடுக்கும்.

இந்த நேரத்தில் ஒன்றைத் தெளிவாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

நக்கீரன், தனிப்பட்ட நிர்மலாதேவி என்ற பேராசிரியர் விவகாரத்தைக் கையில் எடுக்கவில்லை. மேலிடப் புள்ளிகளின் அந்தரங்க வெறிக்கு அப்பாவிக் கல்லூரி மாணவிகள் பலிகடா ஆவதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விவகாரத்தை நக்கீரன் கையிலெடுத்தது.

பிள்ளைக் கறி சாப்பிடும் பெரிய மனிதர்களின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும், அவர் களிடமிருந்து அப்பாவி மாணவிகளைக் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர, நக்கீரனுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

கவர்னருக்கும் நக்கீரனுக்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமோ பகையோ இல்லை. அதற்கான காரணங்களும் இல்லை. ஆனால் சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டிய பெரிய மனிதர்கள், சின்ன மனிதர்களாக இருப்பதை எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது?

என்றென்றும் துணிவோடு

நக்கீரன்கோபால்