"கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்'
என்பார் வள்ளுவர்.
இதன் பொருள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் கள், நடுநிலைமை தவறி தம் விருப்பம்போல் செயல் படலாம் என்று நினைக்கத் தொடங்கினாலே, அவர்கள் கெட்டழியப் போகிறார்கள் என்பதாகும்.
திருக்குறள்மீது திடீர்க்காதல் கொண்டு, அண்மை யில் திருக்குறளுக்கு "ஜே' போட்ட பிரதமர் மோடி, மேற்கண்ட திருக்குறளைப் படிக்கவில்லை. அதனால் தான் நடுநிலைமையோடு எல்லோருக்கும் பொது வான ஆட்சியைத் தரவேண்டும் என்ற நினைப் பின்றி, இந்து மக்களுக்காக மட்டுமே ஆளவேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையோடு பரபரத் துக்கொண்டு இருக்கிறார்.
அவரால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆபத்தைச் சந்திக்கிறது. இங்கே எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
பண மதிப்பிழப்பு அறிவிப்பைப்போல், என்ன மாதிரியான திடீர் அறிவிப்புகள் வரும்? ஜி.எஸ்.டி. போல் எப்படிப்பட்ட புதுப்புது வரிவிதிப்புகள் திடீரென எழுந்துவந்து பொதுமக்களின் கழுத்தை நெறிக்கும்? குடியுரிமை சட்டத் திருத்த மசோதாபோல் இன்னும் என்ன மாதிரியான திடீர் மசோதாக்கள் பிறந்துவரும் என்பதற் கெல்லாம் எந்த வரையறையும் இல்லை. நாடாளுமன்றத்தில் மிருகபலம் இருக்கிறது என்ற திமிரில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தான் நினைத்ததை எல்லாம் சாதிக்கப் பார்க்கிறது.
மதச்சார்பற்ற நம் நாட்டை இந்து நாடாக மாற்றிவிட வேண்டும் என்று காவிக்கும்பல் துடிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற மோசமான இலக்கை நோக்கி, அரசு எந்திரத்தை உருட்டிக்கொண்டு போகிறார் மோடி. அவருக்கு மூளையாக ஆர்.எஸ்.எஸ்.சும், அபாயகர மான கைகளாக அமித்ஷா போன்றவர்களும் இருப்ப தால்.... இந்தியா படுபயங்கரமான பாதாளத்தை நோக்கி உருண்டுகொண்டே இருக்கிறது. நாளைய இந்தியா எப்படி இருக்கும் என்கிற அச்சம், எல்லாப் பக்கமும் வியாபித்திருக்கிறது. குடிமக்களிடையே ஒருமைப் பாட்டை வளர்க்கவேண்டிய ஆட்சியாளர்களே, அவற்றை உடைத்தெறியும் காரியங்களில் இறங்கிவிட்டார்கள்.
அவர்களின் முதல் குறி இஸ்லாமியர்கள். அவர்களைத் தங்களின் இந்து மதத்துக்கு மாற்றவேண்டும் அல்லது இஸ்லாமிய நாடுகளுக்குத் துரத்தியடிக்கவேண்டும் என்று மனப்பால் குடிக்கிறார்கள். அதனால்தான், குடியுரிமை சட்ட மசோதாவையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தையும் இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி எதிர்த்தபோதும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிசம்பர் 12-ல் நிறைவேற்றிவிட்டார்கள்.
அன்று இரவே குடியரசுத் தலைவரின் கையெழுத்தையும் பெற்று, அதை அவசரகதியில் அமலுக்குக் கொண்டு வந்துவிட்டது நயவஞ்சக மோடி அரசு.
ராஜ்யசபாவில் பா.ஜ.க.வுக்குப் போதுமான பலமில்லை என்ற நிலையில், இந்தக் குடியுரிமை சட்டம் நிறைவேற, அவர்களின் அடிமைகளான அ.தி.மு.க.வைச் சேர்ந்த 10 எம்.பி.க்களும், பா.ம.க.வைச் சேர்ந்த ஒரே ஒரு எம்.பி.யுமான அன்புமணியும் அதற்கு ஆதரவாக வாக்களித்து, இந்திய அரசியல் சட்டத்துக் கும் மதச்சார்பின்மைக் கோட்பாட் டிற்கும் மாபெரும் துரோகத்தைக் கூச்சமில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இது இஸ்லாமியர்களுக்கு மட்டு மல்லாது நம் தொப்புள் கொடி உறவு களான ஈழத்தமிழ் அகதிகளுக்கும் எதிரான மசோதா என்பது தெரிந்தா லும், அடிமைகளான அ.தி.மு.க.வினர், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தார்கள். அதே போல் அடிக்கடி ஈழம்பற்றி வாய் கிழியப் பேசும் பா.ம.க. நிறுவனரான மருத்துவர் ராமதாஸோ, "கூட்டணி தர்மத்துக்காக அந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தோம்' என்று அறத்தை மறந்து பேட்டி கொடுக்கிறார்.
இந்த குடியுரிமை சட்ட மசோதா என்பது மகா மட்டமான ஓரவஞ் சனை மசோதா. இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு எதிராக, இந்துத் துவா சகுனிகள் ஒன்றுகூடி உருவாக் கிய மசோதா. இந்த பாரபட்ச மசோதாவுக்கு வாக்களித்த இப்படிப் பட்ட இந்துத்துவா கைக்கூலிகளை, வரலாறு மன்னிக்கப் போவதில்லை.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிறது நமது அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால் இந்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா என்ன சொல்கிறது?
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இங்கு வந்த இந்துக்களுக்கு இங்கே குடியுரிமை உண்டு. கிறிஸ்துவர்களுக்கும் பார்சிகளுக்கும் சீக்கியர்களுக்கும் குடியுரிமை உண்டு. சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் குடியுரிமை உண்டு. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் இங்கே குடியுரிமை இல்லை என்கிறது.
இதுதான் மதச்சார்பின்மையுள்ள தேசத்துக்கான லட்சணமா?
"இப்படி ஓரவஞ்சனை செய்யாதீர்கள். இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்து, கடந்த 36 ஆண்டு களாக இங்கேயே வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்குக் குடியுரிமை உண்டா?' என்று கேட்டால், "அவர்களுக்கும் குடியுரிமை இல்லை' என்று அலட்சியமாகச் சொல்கிறது திமிர்பிடித்த டெல்லி.
இந்து மதத்தைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட்டம் போடும் மோடி அரசு, "இந்துக்களாக இருந்தா லும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை தரமுடியாது' என்கிறது. தமிழர்கள் என்றால் டெல்லிக்கு அவ்வளவு கசப்பு.
இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் வஞ்சிக்கும் மோடி அரசின், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து என அத்தனை வடகிழக்கு மாநிலங்களும் பற்றி எரிகின்றன. டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங் களில், கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்து இந்தியாவையே கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருக்கி றார்கள். மாணவர்களின் போராட் டத்தை ஒடுக்குவதாகச் சொல்லிக் கொண்டு இந்த கேடுகெட்ட மோடி அரசு, மாணவர்கள்மீது போலீஸை ஏவி, வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. உ.பி.யில் மட்டும் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டிருக்கிறார் கள். சொந்த மக்களைக் கொன்று குவிக்கும் இந்த அரசை எப்படி குடிமக்களின் அரசு என்று ஏற்பது?
டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்திலும், உ.பி. அலிகார் பல்கலைக் கழகத்திலும் போலீஸ் நடத்திய வெறியாட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரான வெறியாட்டம். இந்த பாசிஸ மோடி அரசுக்கு எதிராக தமிழக மாணவர்களும் போர்க்கோலம் பூண்டு, கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் கள். இவர்களோடு இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஏனைய இன மக்களும் எவ்வித வேறுபாடும் இன்றி கைகோத்துக்கொண்டு, தங்கள் எதிர்ப்பை பா.ஜ.க.வுக்குத் தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்கமே கிடுகிடுக்கும் வகையில் அம்மாநில முதல்வரான மம்தா, டெல்லியை எதிர்த்துப் போராடுகிறார். தமிழகத்திலும் தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பேரணியை நடத்தி, டெல்லியை அதிரவைத்திருக்கின்றன. ஆனா லும், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோதும், நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டு இருந்ததைப்போல், பிரதமர் மோடியும் அமித்ஷாவும் எதுவுமே இங்கு நடக்காததுபோல் உலா வந்துகொண்டு இருக்கிறார்கள். காந்தி தேசமான இந்தியாவை, ஹிட்லர் பாணியில் ஆளப்பார்க்கிறார் மோடி. ஹிட்லர் யூதர்களை அழித்ததுபோல், மோடி இஸ்லாமியர்களையும் ஈழத் தமிழர்களையும் நசுக்கப் பார்க்கிறார்.
இதனால் உலகமே மோடிக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்பத் தொடங்கிவிட்டது.
மோடி அரசின் இந்தக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமெரிக்க நாட்டின் வெளி விவகாரக் குழு கடுமையாகக் கண்டித்திருக்கிறது. அதே போல் ஐ.நா.சபையின் மனித உரிமைக் குழு, தன் பலமான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல; மலேசியப் பிரதமர் மகாதீர் மொகமது, "மதச்சார்பற்ற இந்தியா இப்படி யொரு சட்டத்தைக் கொண்டுவந்தது தவறு. இதேபோன்ற ஒரு சட்டத்தை நாங்களும் கொண்டுவந்தால், மலேசியாவில் இருக்கும் இந்தியர்கள் என்ன செய்வார்கள்?' என்று இங்குள்ள மரமண்டை பா.ஜ.க. அரசைப் பார்த்து எச்சரித்திருக்கிறார்.
இருந்தும், தேசிய குடியுரிமைப் பதிவேடு திட்டத்தையும் நாடுமுழுக்க அமல்படுத்தும் முயற்சியிலும் பா.ஜ.க. மும்முரம் காட்டுகிறது. இந்தியாவிலே இருக்கும் அத்தனை பேரும் தாங்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபித்து, அதற்கான குடியுரிமைப் பதிவேடான குடிமக்கள் பதிவேட்டில் தங்களைப் பதிந்துகொண்டு, அடையாள அட்டையை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தப் பார்க்கிறது.
இதுகுறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலேயே, "நாடு தழுவிய அளவில் (சதஈ) என்னும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசு திட்டம் வகுத்திருக்கிறது' என்று சுட்டிக்காட்டினார்.
அதேபோல் உள்துறை அமைச்சரான அமித்ஷா நாடாளுமன்றத் திலேயே, "தேசிய குயுரிமைப் பதிவேட்டை இந்தியா முழுக்க எல்லா மாநிலங்க ளிலும் அமல்படுத்தியே தீருவோம்' என்று கர்ஜித்தார்.
இதற்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, பா.ஜ.க.வோடு தோழமை பாராட்டும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்றவர்களே, "ஏற்க முடியாது' என்று போர்முரசு கொட்டுகின்றனர்.
இதையெல்லாம் பார்த்த மோடி, கடந்த 21-ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "நாடு தழுவிய அளவில் (சதஈ) கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய அரசு விவாதிக்கக்கூட இல்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதனால்தான் அசாமில் மட்டும் குடியுரிமைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது' என்று அப்படியே ஜகா வாங்கிப் பேசினார். ஆனால் இதன்பிறகும் மத்திய மந்திரிகள், "குடியுரிமைப் பதிவேடு அமல்படுத்தப்படும்' என்று வரிந்துகட்டிக் கொண்டு கூவிவருகிறார்கள்.
"என்.ஆர்.சி. பற்றி நாங்கள் இன்னும் ஆலோசிக்கவே இல்லை' என்று பிரதமரான மோடி சொல்வது உண்மையா?
"அனைத்து மாநிலங்களிலும் என்.ஆர்.சி.யை அமல்படுத்தியே தீருவோம்' என்று அமித்ஷா உள்ளிட்ட சங்பரிவார்கள் கூச்சலிடுவது உண்மையா?
முதல்கட்டமாக அசாமில் 1600 கோடியைச் செலவிட்டு குடியுரிமைப் பதிவேட்டுக் கணக்கை எடுத்து, அங்கே 19 லட்சம் பேர் இந்திய குடிமக்கள் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் அரசு கேட்ட சான்றுகளை அவர்களால் கொடுக்கமுடியவில்லையாம்.
இந்த 19 லட்சம் பேரையும் நாட்டைவிட்டு வெளியேறும்படி இப்போதே நிர்பந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் பிள்ளை குட்டிகளோடு எங்கே போவார்கள்? அப்படி நாட்டைவிட்டுப் போகவில்லை என் றால் இந்த 19 லட்சம் பேரையும் அகதிகள் முகாமில் அடைக்கப் போகிறார்களாம். இதற்காக 46 கோடி ரூபாய் செலவில் அங்கே முகாம் ஒன்றைக் கட்டப் போகிறார் களாம். அதுவும் 46 கோடியில் 3000 பேருக்குதான் முகாம் கட்ட முடியும். இதன்படி மீதமுள்ள 18 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு முகாம் கட்ட ஆகும் செலவு ரூ.24,000 கோடி. ஹிட்லரையும் மிஞ்சும் மோடிகள். இத்தனை நாள் நிம்மதி யாக வாழ்ந்த அந்த அப்பாவி அஸ்ஸாம் மக்களை, முகாம் என்ற பெயரில் சிறையில் அடைக்கத் திட்டமிட்டிருக்கிறது மோடி அரசு.
இதே நிலைதான் நம் தமிழகம் உள் ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் வரும்.
ஏறத்தாழ 130 கோடி பேர் கொண்ட இந்தியாவில் தோராயமாக 20 கோடி பேருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என் கிறது உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம். அப்படி என்றால், இந்தியாவில் வாழும் அத்தனை கோடி பேரையும் முகாமில் அடைக்கப்போகிறதா மோடி அரசு?
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏறத்தாழ 75 வாக்குறுதிகள் இடம்பெற்றன. அதில் குறிப்பாக, "இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு விரோதமான முத்தலாக் மசோதா கொண்டுவரப்படும். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும். மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்' என்று பகிரங்கமாகவே இந்துத்துவாவை மட்டுமே மையப்படுத்தும் நச்சுத்தன்மை கொண்ட அம்சங்கள் இருந்தன. இவையெல்லாம் மதவெறியோடு உருவாக்கப் பட்ட அம்சங்கள். அவற்றைத்தான் வேகவேகமாக செயல் படுத்திக் கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு.
2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் நடுரோட் டில் இஸ்லாமிய பெண்ணை வயிற்றைக் கீறி பச்சைக் குழந்தையை வெறித்தனமாக வெட்டித் தூக்கி எறிந்த வர்கள் இன்று முத்தலாக்குக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அடுத்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைப் பறிமுதல் செய்து அந்த மாநிலத்தை இந்த நிமிடம்வரை நெருப்பு வளையத்திற்குள் வைத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பாபர் மசூதி வழக்கில் அதிரடித் தீர்ப்பை வரவழைத்து, அங்கே ராமர் கோயிலைக் கட்டும் வேலையையும் தொடங்கிவிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் இப்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும், குடிமக்கள் குடியுரிமைப் பதிவேட்டையும் மக்களுக்கு எதிராகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
அடுத்து... இந்தியா இந்து நாடு என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள். இப்படிப்பட்ட கொடியவர்களின் அறிவிப்புகளை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜெர்மன் மாணவர் ஜேக்கப்பை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டி ருக்கிறது மூட அரசு. அவரும் கிளம்பிவிட்டார். சென்னை ஐ.ஐ.டியே ஜெர்மன் அரசின் உதவியோடுதான் கட்டப்பட்டது என்ற உண்மை இந்த ஐ.ஐ.டி. முட்டாள் களுக்குத் தெரியவில்லை.
அதேபோல், குடியுரிமை சட்டத்தை விமர்சித்தார் என்பதற்காக இங்குவந்த நார்வே சுற்றுலாப் பயணி ஜான்னி-மெட்டீ-ஜோஹன்சன் என்பவரையும் நாட்டைவிட்டு வெளியேறும்படி குடியேற்றத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கேலிக்கூத்துக்களும் இப்போது தொடர ஆரம்பித்திருப் பது தேசம், சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறது என்பதற் கான அபாய அறிகுறியாகும்..
ஆக, ஹிட்லர் சாகவில்லை. தமிழர்களை உயிர்வதை செய்யும் ராஜபக்ஷேக்களும் இலங்கையில் மட்டும் இல்லை... இங்கும் இருக்கிறார்கள்.
மிகுந்த கவலையோடு...
நக்கீரன்கோபால்