றந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

-என்பார் வள்ளுவர். இதன் பொருள், மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு செய்ய அறமே இறங்கி வந்து அவனை முற்றுகையிடும் என்பதாகும்.

வள்ளுவரின் இந்த எச்சரிக்கை பிரதமர் மோடி தரப்புக்கு மிகவும் பொருந்தும்.

Advertisment

காரணம், இரண்டாம் முறையாக இந்தியாவின் அரியணை சுகத்தை அனுபவிக்கும் மோடி, தொடர்ந்து தானே பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கவேண்டும் என்று துடிக்கிறார். அதனால் தன் பதவிக்கு எந்தவிதத்தி லும் பங்கம் வந்துவிடக் கூடாதே என்று எதிர்க்கட்சி களைக் கண்டு மிரளுகிறார்.

குறிப்பாக ராகுல் காந்தி என்றால் அவருக்கு சிம்ம சொப்பனமாகத் தெரிகிறார். தனது முகத்திரையைக் கிழித்தெறிய வந்த இளஞ்சிங்கமாக அவரைப் பார்த்து பயப்படுகிறார். காரணம்-

காங்கிரஸ் தலைவர் என்பதைத் தாண்டி, ராகுல் காந்திக்கு அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகிறது. குறிப்பாக அவர் எங்கு சென்றாலும் இளைஞர்களும் இளைஞிகளும் அவரை மொய்க்கிறார்கள். எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் அவர், விரைவில் இந்தியாவின் கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு அவர் இந்தியா முழுக்க ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் மக்களின் நடுவே நடைபயணம் மேற்கொண்டார்.

Advertisment

கடந்த செப்டம்பர் 7-ல் முதல்வர் ஸ்டாலின் பச்சைக் கொடி அசைக்க, அவரது பயணம் தொடங்கியது. ஏறத்தாழ 137 நாட்கள், 14 மாநிலங்களைக் கடந்து ஏறத்தாழ 3,800 கி.மீ.தூரம் அவர் பயணித்திருக்கிறார். அவர் சென்றவழி நெடுக மக்கள் அவரை ஆரவாரமாக வரவேற்றனர்.

அவரோடு ஆங்காங்கே இளைஞர்கள் சேர்ந்துகொண்டு நடைபோட்டனர்.

செல்வாக்கோடும் செல்வச்செழிப்போடும் வளர்க்கப் பட்ட ராகுல், கிடைத்த இடங்களில் தங்கி மக்களோடு தன்னை அப்போது கரைத்துக் கொண்ட பண்பு, மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை ஏகத்துக்கும் உயர்த்தியது.

rr

ராகுலுக்குப் பெருகிவரும் இந்த செல்வாக்குதான் பிரதமர் மோடியை மிரட்டியது. போதாக்குறைக்கு ராகுல், மோடியின் அரசியல் பித்தலாட்டங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் தொழிலதிபரான அதானியோடு, மோடி காட்டிவரும் நெருக்கத்தையும், அதனால் அதானி குழுமத்துக்கு அரசின் அத்தனை சலுகைகளும் குவிந்து வருவதையும், மோடி வெளிநாடு செல்லும்போதுகூட, அத்தகைய நாடுகளிலும் அதானிக்கு தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏராள மான தொழில் தொடர்பான டெண்டர்களை யும் உரிமங்களையும் பெற்றுத் தருவதையும் அவர், புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்தி, மோடி தரப்பை அலறவிட்டார். போதாக்குறைக்கு நாடாளுமன்றத்திலேயே மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படத்தைக் காட்டி, சூறாவளி கிளப்பினார்.

இதனால், நாடாளுமன்றமே மோடிக்கு எதிராகக் கொந்தளித்தது. இது மோடி தரப்பை மேலும் அச்சத் தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரம் லண்டன் சென்றிருந்த ராகுல், அங்கு பத்திரிகை யாளர்கள் கேள்வி கேட்டபோது "இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றெல் லாம் இங்குள்ள நிலையை அம்பலப்படுத்தினார். உலக அளவில் தன் முகம் தோலுரிக்கப்படுவதைக் கண்டு, மோடி ரொம்பவே ஆடிப்போய் விட்டார். அதனால்....

இனியும் ராகுலை வெளியே விட்டுவைக்கக்கூடாது. தேர்தல் களத்துக்கே இப்போதைக்கு வரமுடியாதபடி ஏதாவது செய்யவேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டார் மோடி. இந்த நிலையில்தான், செத்துப் போயிருந்த ஒரு அவதூறு வழக்கைத் தேடிப்பிடித்து, தூசு தட்டி, விசாரணை யைத் துரிதப்படுத்தி, ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் அளவிற்கு ஒரு பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டார்.

அந்த வழக்கே எப்படி, திட்டமிட்டு விசாரணைக்கு கட்டி இழுத்து வரப்பட்டது என்பதைப் பார்த்தாலே, இதன் பின்னணியில் இருக்கும் பழிவாங்கும் அரசியல் புரிந்துவிடும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரச்சாரம் செய்த ராகுல், வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆன வைர வியாபாரி நீரவ் மோடி, கிரிக்கெட்டை வைத்து பலகோடி மோசடி செய்த லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு, எல்லாத் திருடர்களும் ஏன் "மோடி' என்ற ஒரே குடும்பப் பெயரை வைத்திருக்கிறார்கள் என்று கேள்வியெழுப்பினார்.

அதே தேர்தலின்போது காங்கிரஸ் பற்றியும் சோனியா பற்றியும் ராகுல் பற்றியும் பிரியங்கா பற்றியும் அவர் கணவர் வதேதரா பற்றியும் மிக மோசமாக பா.ஜ.க.வினர், விமர்சித்தனர். அதையெல்லாம் தேர்தல் நேர வெப்ப நிலை என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை காங்கிரஸ்.

ஆனால், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் அமைச்ச ரான பூர்னேஷ் மோடி, அங்குள்ள சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், பிரதமர் மோடியை அவதூறாகப் பேசினார் என்று அவர் மீது 2019 ஏப்ரல் 10-ஆம் தேதி வழக்கைத் தொடுத்தார். பிறகு அவரே, 2022 மார்ச் 7-ஆம் தேதி அந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தடை கோரியிருந்தார்.

இந்த நிலையில், அதானி விவகாரத்தைக் கிளப்பி, மோடியின் கோபத்துக்கு ராகுல் ஆளான நிலையில், ராகுலைக் குறிவைத்து அந்த வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. நிறுத்திவைக்கப்பட்ட வழக்கை பூர்னேஷ், மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து, சூரத் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி அந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியது. அடுத்த ஐந்தே நாளில், அதாவது கடந்த 23-ஆம் தேதி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி என்று நிரூபணமானதாகவும், அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சூரத் நீதிபதி எச்.எச். வர்மா தீர்ப்பளித்து விட்டார்.

விசாரணை தொடங்கி ஐந்தே நாளில், எங்காவது இப்படி அதிரடியாக எந்த வழக்கிலாவது நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கிறதா? அதுதான் மோடியின் சித்துவேலை.

நீதிமன்ற நடைமுறையின்படி, மேல்முறையீட் டுக்கு அவகாசம் கொடுக்கும் வகையில் 30 நாள்கள் அந்த தண்டனையை நிறுத்திவைப்பதாவும் அந்த நீதிபதி அறிவித்திருக்கிறார். அப்படி இருந்தும் அடுத்தகட்ட அதிரடிகள் அதிவேகத்தில் தொடங்கின.

raghul

சூரத் தீர்ப்புக்கு மறுநாளே, அதாவது 24-ஆம் தேதியே ராகுலுக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப் பட்டிருப்பதால், அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வினித் ஜிண்டால் மூலம் மக்களவைச் செயலாளர் உத்பால் குமார் சிங்கிற்கு கடிதம் கொடுக்க வைத்தது மோடி அரசு. இதைத் தொடர்ந்து அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ராகுல், எம்.பி, பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேவேகத்தில், ராகுலின் எம்.பி. தொகுதியான வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகிறது. அதே வேகத்தில் ராகுலுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டையும் அவர் காலி செய்யவேண்டும் என்று ஒன்றிய அரசின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ராகுலை ஓரம்கட்டுவதில் எவ்வளவு வேகம்? "வாம்மா மின்னல்' என்பது போல், ராகுலைப் பழிவாங்க அரசு எந்திரமே அங்கும் இங்குமாக மின்னல் வேகத்தில் பறந்து பறந்து பழிவாங்கும் வேலைகளைச் செய்கிறது.

இதற்குமுன் இதேபோல் பதவி நீங்கிய எம்.பி.க்களும் ஒன்றிய அமைச்சர்களும் இப்படி இதே வேகத்தில் அரசு இல்லத்தைக் காலி செய்யும்படி, நிர்பந்திக்கப்பட் டார்களா? இல்லை. எடுத்துக்காட்டுக்குச் சொல்வதா னால், அ.தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கப்பட்ட சசிகலா புஷ்பா, பா.ஜ.க. வில் ஐக்கியமானார். அவரது பதவி முடிந்து 2 வருடகாலம் ஆகியும், அவரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தாமல் விட்டுவைத்திருந்தது இதே மோடி அரசு.

இதேபோல் பா.ஜ.க.வைச் சேர்ந்த சு.சாமி, 2016 ஏப்ரல் முதல் 2022 ஏப்ரல் அவரை மாநிலங்களவை உ றுப்பினராக இருந்தார். இருந்தும் 2022 செப்டம்பர் வரை, அவர் கோர்ட்டில் வழக்குப்போட்டு அவர் தீர்ப்பை அடையும் வரை, அவரையும் விட்டுவைத்திருந்தது மோடி அரசு.

இப்படி 2014-லேயே 20 முன்னாள் ஒன்றிய அமைச்சர் களும் 120 முன்னாள் எம்.பி.க்களும் வீட்டைக் காலிசெய்யாமல் இழுத்தடித்தார்கள். அப்போதெல்லாம் இவ்வளவு அவசரம் காட்டப்படவில்லை. ஆனால் ராகுலைப் பழிவாங்கும்போது மட்டும், மோடி அரசுக்கு அசுர வேகம் வருகிறது.

ராகுலுக்கு எதிராக ஏன் இவ்வளவு மின்னல் வேக நடவடிக்கைகள்?

ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி ரானி "பிரதமரைத் தூற்று கிறவருக்கு அரசு இல்லம் எதற்கு?' என்று பகிரங்கமாகவே கூச்சமில்லாமல் கேட்கிறார். அப்படியானால் மோடி அரசுக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டும்தான் இனி அரசு இல்லம் என்று அவர் சொல்லாமல் சொல்கிறாரா?

ராகுலும் பெருந்தன்மையாக, நான் இருபது ஆண்டு கள் வசித்த துக்ளக் லேனில் இருக்கும் இல்லத்தைக் காலி செய்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

ராகுல்மீதான வழக்கைக் காரணம் காட்டி, அப்பீலில் என்ன மாதிரியான தீர்ப்பு வரும் என்று காத்திருக்கும் பொறுமைகூட இல்லாமல், அவர் பதவியை அவசர அவசர மாகப் பறித்த மோடி அரசு ஒரு விசயத்தை மறந்து விட்டது.

நாட்டின் இந்த 17 ஆவது மக்களவையில் இருக்கும் 539 உறுப்பினர்களில் 233 எம்.பி.க்கள் மீது கொலை, சதித்திட்டம், கலவரம், பெண்கள் மீதான வன்முறை என்றெல்லாம் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இவற்றில் 116 எம்.பி.க்கள் மோடியின் பா.ஜ.க.வைச் சேர்ந் தவர்கள்தான். இதை அசோசியேசன் ஃபார் டெமாக் ரட்டிக் ரீஃபார்ம்ஸ் நிறுவனம் ஆதாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இப்படி 116 கிரிமினல் பேர்வழிகளைக் கையில் வைத்துக்கொண்டுதான், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் மீது வெட்கமில்லாமல் மோடி அரசு தன் அதிகாரத் திமிரைக் காட்டி இருக்கிறது.

இந்த 116 பா.ஜ.க. கிரிமினல் எம்.பி.க்களுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்புகள் வந்தால், அவர்களையும் இதே வேகத் தில் அவர்களின் பதவியைப் பிடுங்கி, அரசு இல்லத்தில் இருந்து அவர்களை அதே வேகத்தில் துரத்துவார்களா?

ராகுல்மீதான இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம், மோடி அரசு எதை பிரகடனம் செய்ய நினைக் கிறது? எங்களை யார் விமர்சித்தாலும் அவர்களுக்கும் இதே கதிதான் என்று எதிர்க்கட்சிகளை இதன்மூலம் மிரட்டுகிறது. இதைவிட சர்வாதிகாரப்போக்கு என்ன இருக்கப்போகிறது?

ஒரு நாட்டில் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக இயங்கி னால்தான் அங்கே ஜனநாயகம் இருக்கிறது என்று பொருள். இல்லை என்றால் அது திறந்தவெளி சிறைச் சாலையாகும். இந்தியாவில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளை உலகமே இப்போது, உதடு பிதுக்கிய படி கூர்ந்து கவனித்து வருகிறது. இது இந்தியாவிற்கே அவமானம். ஜனநாயகத்தைக் கொன்றால், அதுவே தேர்தலைக் கொண்டுவந்து எதிராக நிறுத்தும்.

நாடாளுபவர்கள், நாட்டில் இருக்கிற குடிமக்களின் நலன்களையும் உரிமைகளையும் காப்பாற்றவேண்டிய கடமை உள்ளவர்கள். அதை மறந்துவிட்டு, எதிர்க்கட்சி யினரை எதிரிகளாக நினைத்துப் பழிவாங்கத் துடிப்பது, அவர்களின் வஞ்ச மனதையே காட்டுகிறது.

ஒழுக்க சீலர்களைப்போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகர்களைப் பார்த்து, அவர்களின் உடலில் கலந்துள்ள பஞ்சபூதங்களே அவர்களை எள்ளி நகையாடும் என்றும் கூறுகிறார் வள்ளுவர்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.