ன் செல்லமே,

என்னிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முந்தைய நாள் நீ என்னை சமாதானப்படுத்தியவாறு கூறினாய்: "எல்லா ஆண்களிலும் என்னைக் காண்பதற்கு நீ கற்றுக்கொள்ள வேண்டும்.'

அன்றிரவு உன்னிடமிருந்து பிரிந்து நான் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, என்னுடைய கணவர் கண் விழித்தவாறு படுத்திருந்தார். அவர் கூறினார்: "நீ திரும்பி வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. உனக்கு என்ன நடந்துவிட்டதென்று நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.'

r"கார்மேகங்களுக்குப் பின்னால் நட்சத்திரங்கள் மறைந்துவிட்டதால், எனக்குப் பாதை தவறிவிட்டது' என்றோ, வேறு ஏதாவதோ நான் கூறியிருக்கலாம். ஆனால், அன்று அப்படிப்பட்ட பொய்களைக் கூறுவதற்கு... என்ன காரணத்தாலோ என்னால் முடியவில்லை. ஈரமான ஓரங்களைக்கொண்ட என் புடவையை அவிழ்த்து மாற்றி நான் சீக்கிரமாக உறங்குவதற்காகப் படுத்தேன். அவருடைய அணைப்பில் நான் முழுமையாக மரத்துப்போனேன். நான் இறந்து விட்டிருந்தேன். என் கிருஷ்ணா! உன்னிடம் விடைபெற்றுக்கொண்டு பிரிந்த அந்த நிமிடத்திலிருந்து நான் அசையும் ஒரு பிணமாக மட்டுமே ஆகிவிட்டேன்.

Advertisment

அவர் கேட்டார்: "ராதா... என் முத்தங்கள் உன்னை வெறுப்படைய வைக்கின்றனவா?'

"இல்லை.' நான் முனகினேன்; "இல்லை... இல்லை.... இல்லை...'

ஒரு பிணத்திற்கு, அதைக்கொத்தி இழுக்கும் குப்பைகளிடமும் அரித்துத் தின்னும் புழுக்களிடமும் வெறுப்பு உண்டாகுமா?

Advertisment

என் கணவரின் அணைப்பில் நான் மீண்டும் ஒரு வேசியானேன். உடைகளுக்காகவும் உணவிற்காகவும் ஒரு மனிதனுக்கு அடிமைப்படுபவள்தானே உண்மையான வேசி...! நான் அனைத்திற்கும் மேலாக அன்பு செலுத்தும் உன் கரங்களுக்குள் நான் என்றும் புனிதமானவளாக இருந்தேன். பத்தினியாக இருந்தேன். நான் உன்னுடன் நெருங்கியது சரீரரீதியான ஒரு ஸ்பரிசத்திற்காக மட்டுமே அல்ல. எனக்குள்... தோலுக்கும் சதைக்கும் எலும்பிற்கும் கீழே எங்கேயோ.. தனியாக... மீறப்பட்ட ஏதோவொன்று... ஒரு ஸ்பரிசம் காத்துக்கிடக்கிறதென்று எனக்குத் தோன்றியது. என்றாவது அது தொடர்ப்படும். அதற்குப்பிறகு இந்த வாழ்வின் சலனங்கள் அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டாகும்போது, நீலநிறமும் புனிதத் தன்மையும் கொண்ட உன் சரீரம் ஆகாயமாக மாறிவிடும். அதற்குக் கீழே நான் மேலும் பொறுமையற்றவளாகவும் பலம் கொண்டவளாகவும் ஆகிறேன். இந்த பூமியின் கொடூரமான, பயங்கரமான பசியை நானும் அப்போது அனுபவிக்கிறேன். இரண்டு நிலைகளுக்கும் நடுவில் அச்சுத்தண்டு என்பதைப் போலிருக்கும் உன்னுடைய ஆண்மைத் தன்மை சில நிமிடங்களுக்கு பூமியின் சுழற்சியை நிறுத்தி வைக்கிறது.

நீ கூறினாய்: "ராதா, நீ ஒரு காட்டு நெருப்பு. நானோ ஒரு சாதாரண காடு. என்னால் எரிவதற்கு மட்டுமே இயலும்.

ஆனால், எரிந்து முடிந்துவிட்டால் முற்றிலும் அணைந்துகிடக்கும் கனலுக்கு மேலிருக்கும் சாம்பலைப்போல லாவகமாக நீ என்மீது படுத்தாய். "இயல்பான நெருப்பே... நீ பற்றி எரி....' நான் எனக்குள் கூறிக்கொண்டேன்: "எரி.... எரி... இறுதியில் நிரந்தரமானதும் அழிவற்றதுமான அவனுடைய அந்த சரீரத்தின் நதிகள், உஷ்ணமான உயிர்த்தன்மையின் போதையுடன் எனக்குள் பாயட்டும்.'

எந்த சமயத்திலும் நீ இல்லாத ஒரு எதிர்காலத்தைப் பற்றி அன்று நான் நினைத்ததே இல்லை. காதலில் சிக்கிய பெண்ணின் தரிசனம் எந்த அளவுக்கு கட்டுக்குள் அடங்கியது! உன்னுடைய சரீரத்தின் எல்லைகளுக்கு அப்பால், அந்த குளிர்ந்த கால்விரல்களுக்கும் அப்பால், வெறுமையாகவும் எல்லையற்றும் நீண்டு நீண்டு கிடக்கும் ஒரு உலகத்தைப் பார்க்கவேண்டுமென்ற நிலை எனக்கில்லை. என்னுடைய உலகம் என்றென்றும் உன் ஆறடிக்குள் அடங்கக்கூடியதாக இருக்கவேண்டு மென்று நான் ஆசைப்பட்டேன். என் சரீரத்தால் பொறுப்புணர்வுடன் தாங்கிக்கொள்ள முடிகிற ஒரு சிறிய உலகம்...

ஆரம்ப காலத்தில் நீ ஒரு பிரச்சினையாக இருந்தாய். நான் காதலால் வளைக்கப்பட்டேன். சோர்வும் பரிதாப நிலையும் கொண்டவளாக ஆனபோது, நீயே பரிகாரமாக வடிவமெடுத்தாய். "நீ என்னைக் காதலிக்கிறாய் அல்லவா?' என்று நான் அப்போ தெல்லாம் எவ்வளவு முறை உன்னிடம் கேட்டிருக் கிறேன்! ஆனால், காதலைப் பற்றிக் கேட்கும்போ தெல்லாம் நீ உன்னுடைய காம உணர்வால் எனனை ஊமையாக்கிக்கொண்டிருந்தாய்.

ஒருமுறை அழுதவாறு நான் கேட்டேன்: "இப்போதாவது கூறு... நீ என்னைக் காதலிக்கிறாய் அல்லவா என்று...'

உன் உதடுகள் என் தொடையின்மீது சிவந்த ஒரு வார்த்தையை வரைந்தன. அது "ஆமாம்' என்று இருந்ததோ? யாருக்குத் தெரியும்? எனக்கு எந்தச் சமயத்திலும் மன அமைதி கிடைக்கவில்லை. சூரியனைப் போல பிரகாசிக்கக்கூடியதாக இருந்தாலும், இரக்கத்திற்குரிய காதல் மட்டுமே உள்ள இந்த உலகத்தை அடைந்து விழுந்தபிறகும் எனக்கு ஓய்வு கிடைக்கவில்லை. நீ முழுமையான திருப்தியை உண்டாக்கி முடித்த என் சரீரத்திலிருந்து, அமைதியை இழந்த ஆன்மா இடையில் உயிர்பெற்றெழும். என் கண்களையே உற்றுப் பார்க்கும். "ராதா.... இதுதானா நீ கனவு கண்டுகொண்டிருந்த ஆனந்த நிலை?' அது கேட்கும்: "இந்த உறவு நிரந்தரமானதா?'

உன் சரீரத்தை பலமுறை கீழ்ப்படுத்த முடிந்தது என்ற காரணத்தால், நான் ஒரு வெற்றிபெற்றவளாக இருந்தேன். ஆனால், ஒரு காவலாளியின் எச்சரிக்கை உணர்வுடன், நான் அபகரித்த கோட்டையை ஓய்வே எடுக்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். நான் தொடர்ந்து அதைச் செய்துகொண்டிருந்தேன். ஏதாவதொரு நிமிடத்தில், மேலோட்டமான ஒரு கொடூர விவேகம், உன்னிடம் என்னைவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தும் என்ற விஷயம் எனக்குத்தெரியும்.

அதனால் பல வேளைகளில் நான் உன்னுடைய கண்களை மூடச்செய்து முத்தமிட்டேன். உன் முகத்தை என் மார்பில் மறைத்து வைத்தேன். என்னைத் தவிர வேறு எதுவுமே உன்னுடைய பார்வையில் படக்கூடாது என்றும், உன்னுடைய உலகம் நானாக இருக்கவேண்டும் என்றும் நான் பொதுவாகவே விரும்பினேன்.

ஒரு காதலியானபோது, நான் அழகு படைத்த வளானேன். உன்னுடைய கை பட்டு என் தோல், தேய்த்து பளபளப்பாக்கிய பித்தளை விளக்குகளைப் போல ஒளிர்ந்தது. உன் விரல்கள் எந்த அளவுக்கு அன்புடன் எல்லா இடங்களுக்கும் ஓடி நடந்தன! ஒரு நாள் நான் என் சரீரம் முழுவதும் சந்தனத் தைலத்தைப் பூசிக்கொண்டு உன்னைப் பார்ப்பதற்காக வந்தேன்.

ஆனால், அன்று நீ நம்முடைய ரகசிய இடத்திற்கு வரவே இல்லை. அந்த சாயங்கால வேளையில் யமுனையின் கரையில் கவலையுடன் அமர்ந்திருந்தபொழுது எனக்குத் தோன்றியது- இந்த உலகத்தில் எவ்வளவு பொருட்கள் வீணாகிவிடுகின்றன என்று... எவ்வளவு சந்தனத்தைலம்! நறுமணங்கள் நிறைந்திருக்கும் பெண்ணின் சரீரம் எந்த அளவுக்கு பயனற்று விழுகிறது!

மறுநாள் நான் உன்னிடம் கேட்டேன்: "உனக்கு வேறொரு காதலி இருக்கிறாளா?'

பொறாமை என்ற பகுதி எனக்கு அன்று வரை தெரியாத ஒன்றாக இருந்தது. அதனால் அங்கு ஒரு சிற்றறிவின் காலெட்டுகளுடன் மட்டுமே என்னால் நடக்க முடிந்தது. நீ என்னுடைய கேள்விக்கு பதில் கூறவில்லை. ஆனால், சிரித்துக்கொண்டே கேட்டாய்: 'ராதா... நான் போய்விட்டால் உனக்கு வேறு காதலர்கள் உண்டாக மாட்டார்களா?'

"அது எப்படி?' நான் கேட்டேன்: "நீதான் பாதையின் முடிவு. உனக்குப் பிறகு வேறு எதுவுமே இல்லை.

நான் உன்னுடைய மடியில் தலைவைத்துப் படுத்திருந்தேன். நீ கூறினாய்: "ராதா... நான் வேறொருத் தியை அணைத்தால், அதற்கும் காரணமாக இருப்பவள் நீதான். காரணம் அவளை என்னுடைய கரங்களின் வளையத்திற்குள் கொண்டுவரச் செய்வது உன் மோகம்தான். ஆணிடம் அபயம் தேடும் எந்தப்பெண்ணும் உண்மையிலேயே நீயாகத்தான் இருப்பாய். உலகத்தின் இறுதிவரை எந்த காதலியின் சரீரமும் உன்னுடைய அடங்காத மோகத்தின் உறைவிடமாக இருக்கும்.'

உன் வார்த்தைகள் எனக்கு மன அமைதியைத் தரவில்லை. அதனால் பக்குவமற்ற என்னுடைய மனதின் அறிவுரையை மட்டுமே நான் கேட்டேன். அது முணுமுணுத்தது:

"அவனை உன்னிடம் நெருங்கச் செய். அவனுடைய சரீரத்தையாவது திரும்பத் திரும்ப மையல் கொள்ளச் செய்து அடிமைப்படுத்து.'

நான் பற்களாலும் நகங்களாலும் துடிக்கக்கூடிய கை கால்களாலும் உன்னை வேதனைப்படச் செய்தேன். பிறகு... காயம்பட்ட அந்த அழகான சரீரத்தை ஒரு வெற்றிபெற்றவளின் கர்வத்துடன் பார்த்தபிறகு, மீண்டும் நான் ஆணவமற்றவளாக மாறி, உன்மீது கருணையை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நான் கொடூரமானவளாக இடையில் அவ்வப்போது ஆனேன். பிறகு... சாதாரணமாக உன் காயங்களில் முத்தமிட்டேன். நான் கண்ணீர் சிந்தினேன்....

ஒருநாள் உன் கைகளில் ஓய்வெடுத்துப் படுத்திருந்தபோது, நான் கூறினேன்:

"கிருஷ்ணா... நமக்கு ஒரு வீடுகட்ட வேண்டும். நம் இருவருக்கும் சொந்தமான ஒரு வீடு. அதைச் சுற்றிலும் உஷ்ணத்திலும் பாதிப்படையாமல் வளரும் கொடிகளை நட்டு வளர்க்க வேண்டும். சிவப்பு நிற உரோமங்களைக் கொண்டிருக்கும் இதழ்கள் உள்ள காட்டு மலர்கள் அங்கு மலரும்... காலையில் சூரியன் சாளரத்தின் வழியாக வரும்போது, உன்னுடைய இருண்ட சரீரத்தால் நீ என்னுடைய நிர்வாணத்தை மறையச் செய்வாய். சொல், செல்லமே.... அப்படிப்பட்ட ஒரு வீடு நமக்கு ஒருநாள் உண்டாகுமல்லவா?'

"அப்படிப்பட்ட ஒரு வீடு இப்போதே எங்கேயோ இருக்கவேண்டும். அங்கு இந்த நேரத்தில் நீ என்னுடைய கரங்களுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருப்பாய். அந்த செடிகளின் கொடிகளில் இப்போது நிலவு வெளிச்சம் விழுந்துகொண்டிருக்கும். இவையெல்லாம் நடக்காது என்று உனக்கு எப்படித் தெரியும்?'

அப்போது நான் கேட்டேன்: 'நான் இறந்துவிட்ட பிறகும், அந்த வீட்டில் ராதா இறந்துபோகாமல் இருப்பாளா?'

"இல்லை...' நீ கூறினாய்; "அங்கிருக்கும் ராதாவுக்கும் அவளுடைய கிருஷ்ணனுக்கும் மரணமென்பது இல்லை. அவள் உன்னுடைய கனவுகள்... கனவுகளுக்கு மரணம் இல்லை. அவை மட்டுமே அழிவற்றவையாக இந்த உலகப் பரப்பினை வென்று வாழ்ந்து கொண்டிருக்கும்.'

என்ன காரணத்தாலோ... அன்று நான், மன அமைதி யுடன் உன்னுடன் சேர்ந்து படுத்து உறங்கிவிட்டேன். தூங்கி எழுந்தபோது நிலவு மறைந்துவிட்டிருந்தது. காட்டின் இருட்டும், என் கரங்களுக்கு மத்தியிலிருந்த பயங்கரமான வெறுமையும் என்னை பயமுறுத்தின. மரங்களுக்கு மத்தியில்... நதியின் கரையில்... வீட்டிற்குச் செல்லும் பாதைகூட தெரியாமல் நான் நீண்டநேரம் அலைந்து நடந்துகொண்டிருந்தேன்...

ஓ... அழகு படைத்த கிருஷ்ணா... நீ என்னுடைய சந்தோஷமாக இருந்தாய். என் வேதனையும்.... சந்தோஷம் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டது. ஆனால், எந்தச் சமயத்திலும் இந்த வேதனையை என்னிடமிருந்து நீக்காதே. இது நிலைபெற்று இருக்கும்போது, நீ என்னுடைய ஆண்... நூறு நாழிகைகளுக்கு அப்பால் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கும் அந்த மதுராவில், அழகு படைத்த உன் மகாராணிகளுடன் உடலுறவு கொள்ளும்போதும், ஆழமான வகையில் பார்த்தால்... நீ என்னுடையவன்தான். என் காதல்தான் அந்த அழகிகளை உன்னிடம் வரச்செய்திருக்கிறது. என் அடங்காத ஆசையும்...

இன்று காலையில் யமுனையின் கரையில் இருந்தபோது, ஒருத்தி என்னைப் பார்த்து சிலரிடம் கூறுவதைக் கேட்டேன்; "அதோ போகிறாளே...

அவள்தான் ராதா. மன்னரின் பழைய காதலி...

அவளுடைய கண்களை மட்டும் நீங்கள் பார்த்து விடாதீர்கள். அவற்றுக்குள் அவளுடைய ஆன்மா இறந்துகிடக்கிறது. ஒதுக்கப்பட்ட அறைகளில் ஒட்டடை இருப்பதுபோல, கவலை அந்த கண்களில் மூடுபடலமென காணப்படுகிறது.'

அப்போது இளமைத் தன்மையால் கர்வத்துடன் இருந்த ஒரு அழகி கேட்டாள்: "அவள் ஏன் வாழ்கிறாள்? அவள் இறக்கக்கூடாதா?'

உண்மைதான்... நான் இறக்கலாம்... நீ இனி எந்தச் சமயத்திலும் என்னைத் தேடி இந்த கிராமத்தின் நதிக்கரைக்கு வரப்போவதில்லை. இனி எந்தக் காலத்திலும் நான் உன்னைப் பார்க்கப்போவதில்லை....

எனினும், உன் ராதா வாழ்கிறாள். காரணம்- மானிட வாழ்க்கை நீண்ட ஆயுள் கொண்டதாகிவிட்டது.

இப்படிக்கு

உன்னுடைய ராதா..