நான்கு மணிக்கு அலாரம் உரத்து ஒலித்தது.
எங்கும் இருள் பரவியிருந்தது. மலர்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் பாடுகின்றன. குளிர்ந்த காற்று வீசுகிறது.
தூக்கத்திலிலிருந்து கண் விழித்த தாய் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு படுத்திருந்தாள். ஜானகியின் அறையில் சத்தமில்லை. அசைவுகளில்லை. யாரும் எழுந்து விளக்கெரிய வைக்கவில்லை. ஜானகி விழிக்கவில்லையா?
தாய் மேலும் சிறிது நேரம் காத்திருந்தாள். ஜானகி எழுந்திருக்கவில்லை. அவள் கொட்டாவி விட்டவாறு எழுந்தாள். தீப்பெட்டியைத் தடவி எடுத்து, விளக்கைப் பற்றவைத்தாள். ஜானகியின் அறைக்குள் வெளிச்சம் சென்றது. தாய் அங்கு சென்றாள். அவள் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் சுவருடன் சேர்ந்து ஒரு பூனையைப்போல படுத்திருந்தாள். மெலிலிந்த மார்புப் பகுதி உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தது.
""ஜானு...''
தாய் அழைத்தாள். அழைத்ததை அவள் கேட்கவில்லை. அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தன்னுடைய பிரச்சினைகளையும் வேதனைகளையும் மறந்து அவள் உறங்கிக்கொண்டிருந்தாள்.
""அடியே ஜானு...''
தாய் அவளைக் குலுக்கி அழைத்தாள்.
அவள் கண்களைத் திறந்து விழித்துப் பார்த்தாள்.
""ஜானு... நீ அலாரம் அடிச்சதைக் கேட்கலையா? மணி எவ்வளவுன்னு நீ நினைக்கிறடீ?''
அவள் பாயிலிருந்து எழுந்து அமர்ந்தாள். ரவிக்கையின் கீழ்ப்பகுதியைப் பிடித்து இறக்கி விட்டாள். தலைமுடியைக் கட்டினாள். எழுந்து முண்டைச் சரிசெய்தாள்.
""ஜானு, உனக்கு என்ன இந்த அளவுக்கு களைப்பு?''
அவள் எதுவும் கூறாமல் சமையலறையை நோக்கி நடந்தாள். விளக்கைப் பற்ற வைத்தாள். முட்டை விளக்கின் சிவந்த இருட்டு வெளியே படர்ந்தது.
""அரிசியை அரை ஜானு. ஏழரை மணிக்கு வண்டிங்கற விஷயத்தை ஞாபகத்தில வச்சிக்கணும்.''
கிணற்றின் கரையை நோக்கி நடந்தாள். நீரை மொண்டு பாத்திரத்தில் நிறைத்தாள். நீரைச் சுமந்தவாறு சமையலறையை நோக்கி வந்தாள்.
அம்மியைக் கழுவி, ஊறவைத்த அரிசியை அரைக்க ஆரம்பித்தாள்.
அவள் அரிசியை அரைக்கும் சத்தத்தை, கண் விழித்துப் படுத்திருந்த தினேஷன் கேட்டான்.
அவள் அரிசி அரைக்க ஆரம்பித்து எவ்வளவு காலமாகிவிட்டது! நான்கு மணிக்கு ஆரம்பித்தது அல்ல... நேற்று ஆரம்பித்தது அல்ல... நேற்றைக்கு முந்தைய நாள் ஆரம்பித்தது அல்ல...
எவ்வளவோ காலமாக அவள் அரைக்கிறாள்.
அவள் அரைக்கத் தொடங்கி வருடக் கணக்காகி விட்டது. சகாப்தங்களாகிவிட்டன. கர்ப்பப்பைக் குள்ளிருந்து வெளியே வந்ததே கழுத்தில் தொங்கவிடப் பட்ட அம்மியுடன்தான்...
அரிசிப் பொடியின் வாசனை சமையலறைக் குள்ளிருந்து வெளியே பரவியது.
அவள் நீர் இறைக்கும் சத்தத்தை அவன் கேட்டான்.
தரையைப் பெருக்கும் சத்தத்தைக் கேட்டான்.
நெருப்பின் முன்னால் நின்று, வியர்வையை வழியவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
தானியப் பெட்டிக்கு மேலே இருட்டில் முனகல் கேட்டது. பாட்டியின் வயதான சத்தம் வெளியே வந்தது.
""லட்சுமி... கொஞ்சம் இங்க வாடீ...''
தாய் இருட்டிற்குள் நடந்து சென்றாள்.
""ஏழரை வண்டியிலதானே வர்றா? இப்போ மணி என்ன?''
""முதல் வண்டியில வர்றதால்ல ராதா எழுதியிருந்தா?''
""என் மகள் தடிமனா ஆகியிருப்பா.''
""காலையிலேயே தேவையில்லாததைப் பேசாதடி... லட்சுமி. அவள் தடிமனா இருக்கறதைப் பார்க்கணும்னு நான் எவ்வளவு காலமா ஆசைப்பட்டுக் கிட்டிருக்கேன்!''
""தடிமனா ஆகியிருப்பா அம்மா.''
""மெலிஞ்ச பொண்ணுங்க திருமணமானபிறகு தடிமனா ஆயிடுவாங்க. அதுதான் நடக்கும்.''
அரிசியை அரைத்து முடித்த ஜானகி தேங்காயைத் துருவ ஆரம்பித்தாள். தேங்காயின் வாசனை சமையலறையில் எழுந்தது.
கிழக்கில் ஆகாயம் வெளிறியது. அதிகாலைப் பொழுதின் மெல்லிலிய வாசனை காற்றில் கலந்து வந்தது. நட்சத்திரங்கள் அணைந்தன. உதிர்ந்து விழுந்தன.
காகங்கள் கரைந்தவாறு கூட்டைவிட்டுப் பறந்தன. காகங்களின் வாசனை காற்றில் பரவியது.
இரவு முழுவதும் ஓசை எழுப்பித் தளர்ந்துபோய் விட்ட வெட்டுக்கிளிகள் மண்ணில் விழுந்து உறங்கின.
காளைகள் ஒவ்வொன்றாக வயலுக்குள் இறங்கின. வயலை உழுதன.
தேங்காய் துருவி முடிக்கப்பட்டது.
அதிகாலைப் பொழுது எங்கும் நிறைந்தது. வெயில் உதயமானது. பற்றி எரிந்துகொண்டிருந்த அடுப்பிற்கருகில் வியர்வை வழிய ஜானகி நின்று வேலை செய்துகொண்டிருந்தாள்.
பல் துலக்கிவிட்டு வந்து ராஜன் சொன்னான்:
""தேநீர் கொடு.''
""தேநீர் தயாரிச்சிட்டியாடி ஜானு?''
""இல்ல...''
குற்றவுணர்வுடன் ஜானகி கூறினாள்.
அவள் வேறொரு அடுப்பிலும் விறகை நிறைத்தாள். ஊதி... ஊதி... நெருப்பை எரியவைத்தாள். தேநீர் தயாரித்தாள்.
தானியப் பெட்டிக்கு மேலே இருந்தவாறு பாட்டி கேட்டாள்:
""மணி என்ன ஆச்சு லட்சுமி?''
""ஏழாயிருச்சு.''
""என் மகளைப் பார்க்கறதுக்கு இனியும் அரை மணிநேரம் இருக்கு. இன்னும் ஒருமுறை பார்க்குறதுக்கான அதிர்ஷ்டத்தை எனக்கு தந்திருக்கிறியே... கடவுளே!''
பாட்டி கடவுளுக்கு நன்றி கூறினாள்.
மேலும் சிறிது நேரம் ஆனபிறகு, பாட்டி கேட்பது காதில் விழுந்தது:
""வண்டி ஏழரைக்குத்தானே வருதுடீ?''
""மத்தவங்க தலையில நெருப்பு வச்சுக்கிட்டு நடக்குறாங்க. அம்மா... கொஞ்சம் பேசாம இருங்க.''
நேரம் ஆக ஆக பாட்டிக்கு பரபரப்பு வந்து தொற்றிக்கொண்டது. அவர்கள் சமையலறைக்குள் ஓடித்திரிந்தார்கள். அடுப்பில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. சமையலறை முழுவதும் நெருப்பு நிறைந்திருந்தது. நெருப்பிற்கு மத்தியிலிருந்து ஜானகி கழுதையைப்போல கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய ரத்தம், வியர்வையாக வழிந்து இறங்கிக்கொண்டிருந்தது.
தந்தை குளித்துவிட்டு வந்தார். ஆடைகளை மாற்றினார். செருப்பை அணிந்தார். சிகரெட்டைப் பற்றவைத்தார்.
""நான் புறப்படட்டுமா? வண்டி வர்ற நேரமாகிட்டது.''
தந்தை ரயில் நிலையத்திற்குச் சென்றார்.
""லட்சுமி... என் கையைக் கொஞ்சம் பிடி. நான் இறங்கிக்கிறேன்.''
பாட்டி அவசரப்படுத்தினாள். அவள் தானியப் பெட்டியின்மீதிருந்து எழுந்து அமர்ந்தாள்.
""ராதா வரட்டும். வர்றப்போ இறங்கினா போதும்.''
""வண்டி நேரத்திற்கு வந்திடுமா? தாமதமாகுமாடீ?''
ஜானகி தோசை சுட்டுக்கொண்டிருந்தாள். கண்கள் சாளரத்திற்கு அப்பால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தன. நெருப்பைக் குறைப்பதிலோ தோசையைப் புரட்டிப் போடுவதிலோ ஆர்வமும் இல்லை.
தோசை கரிந்துகொண்டிருக்கிறது. கரிந்த தோசையின் வாசனை பரவிக்கொண்டிருக்கிறது.
""இது என்ன ஜானு! நீ கனவு கண்டுகிட்டிருக்கியா?''
தாய் கோபப்பட்டாள். அவள் அதிர்ச்சியடைந்தாள். கரிந்ததைப் பார்க்கவில்லை. வாசனையை உணரவில்லை.
""உன் தலையில என்ன? இந்த அளவுக்கு யோசிக்க என்ன இருக்கு?''
தாய் யாரிடம் என்றில்லாமல் தொடர்ந்தாள்:
""இவ எதைப்பத்திய யோசனையில இருக்காளோ தெரியல...''
""வண்டி சத்தம்தானே கேக்குது? ஏழரை மணி ஆயிருச்சாடி?''
வண்டியின் சத்தம்தான்.
எரிந்த நிலக்கரியின் வாசனை கிழக்கிலிருந்து வந்த காற்றில் இருந்தது.
""என் கையைக் கொஞ்சம் பிடி.''
பாட்டி அவசரப்படுத்தினாள். தாய் கையைப் பிடித்து அவளை இறக்கிவிட்டாள். பாட்டி மேற்துண்டை எடுத்து போர்த்திக்கொண்டாள். ஊன்றுகோலை எடுத்து தரையில் ஊன்றியவாறு வாசலை நோக்கி குனிந்துகொண்டே நடந்தாள். நடுங்கி... நடுங்கி நடந்தாள்.
ராஜன் தெருவில் இறங்கி நின்றிருந்தான்.
பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் வாசலுக்கு வந்து நின்றுகொண்டிருந்தார்கள்.
தந்தையும் ஸ்ரீநிவாஸனும் முன்னால் நடந்துகொண்டிருக்கிறார்கள். சற்று பின்னால் ராதாவும்... தோளின்வழியாக புடவையை இழுத்துவிட்டுப் போர்த்தியிருக்கிறாள்.
தாய் தெருவிற்கு ஓடிச்சென்றாள்.
ராதா தடிமனாகியிருக்கிறாள். ஸ்ரீநிவாஸனும் தடித்திருக்கிறான். அவனுக்கு தொப்பை வர ஆரம்பித்திருக்கிறது.
""ராஜன்... உன்னை அடையாளமே தெரியலையே?''
அவன் கூறினான்.
ராதா சொன்னாள்:
""பெரிய ஆளாயிட்டான்.''
அவன் பெரிய ஆளாகியிருக்கிறான். உயரம் உண்டாகியிருக்கிறது. மீசை வந்திருக்கிறது. கனமான கைகள்... சதைப்பிடிப்பான கழுத்து...
""பயணம் சுகமா இருந்ததா மகனே?''
""சுகமா இருந்தது. மெட்ராஸ்ல ஒரு நாள் தங்கினோம். அதனால ராதாவோட சோர்வு கொஞ்சம் குறைஞ்சது.''
அவனுடைய கண்களில் போதை இருந்தது.
இளமைக்கான போதை... கொதித்து ஓடிக்கொண்டிருந்த குருதியின் போதை... அவனுடைய சரீரத்திற்கு ராதாவின் சரீரத்தின் வாசனை இருந்தது. அவன், ராதா... ராதா ஸ்ரீநிவாஸன்...
""என் மகளைப் பார்த்துட்டேனே! பார்க்க வாய்ப்பு கிடைச்சதே கடவுளே!'' பாட்டி முன்னோக்கி வேகமாக வந்தாள்.
ஊன்றுகோலைப் பிடித்திருந்த கை நடுங்கிக் கொண்டிருந்தது. பார்வைசக்தி குறைந்த கண்கள் துடித்தன.
""இனி இறந்தாலும் கவலையில்ல... பார்த்துட்டேனே...''
பாட்டி நடுங்கிக்கொண்டிருக்கும் கைகளால் ராதாவைத் தழுவினாள். அப்போது உலர்ந்த கையிலிருந்து செதில்கள் உதிர்ந்து விழுந்தன. பாட்டியின் சரீரம் முழுவதும் செதில்... பாட்டி செதிலாக மாறிக்கொண்டிருந்தாள்.
"அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே?'
தாய், ஸ்ரீநிவாஸனிடம் கேட்டாள்.
""அடுத்து வர்றப்போ கூட்டிட்டு வர்றேன்...''
""என் தினேஷன் எங்கே?''
ராதா திடீரென்று கேட்டாள்.
தாய் வாய் திறக்கவில்லை.
""தினேஷன் எங்கேம்மா?''
""வெளியே போயிருக்கான்.''
ராஜன் கூறினான்.
""இவ்வளவு அதிகாலைல அவன் எங்க போனான்? நான் வர்றேன்னு அவனுக்குத் தெரியாதா?''
ராஜன் வாய் திறக்கவில்லை.
""தேர்வுல தோல்வியடைஞ்சுட்டான்ங்கற விஷயம் தெரிஞ்சப்போ நம்பவேமுடியல. தினேஷனுக்கு என்ன ஆச்சு?''
ஸ்ரீநிவாஸன் ஆச்சரியப்பட்டான்.
""படிக்காம இருந்தா எப்படி தேர்ச்சியடைய முடியும்? நாள் முழுக்க தூங்குறான். தேர்வுக்கு முந்தின நாள் படுத்துத் தூங்கிக்கிட்டிருந்தான்.''
""எந்த அளவுக்கு படிக்கக்கூடிய பையனா இருந்தான்?''
ராதா நினைத்துப் பார்த்தாள். ஒரு வகுப்பிலும் எந்தச் சமயத்திலும் தோல்வியைச் சந்திக்காதவன். படிக்காமலிருந்தாலும் தேர்ச்சிபெறக் கூடியவன். தோல்வியென்றால் என்னவென்று அறியாதவன்.
ஸ்ரீநிவாஸன் அறையில் அமர்ந்தான். ராதா சமையலறையை நோக்கி நடந்தாள். ஜானகி கதவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். ராதா அவன் கையைப் பற்றினாள்.
""என்ன ஆச்சு ஜானூ? ஏன் இந்த அளவுக்கு மெலிஞ்சிட்டே?''
ஜானகி புன்னகைத்தாள்.
அவளுடைய வெளிறிய முகத்திலும் தாழ்ந்து காணப்பட்ட மார்புப் பகுதியிலும் ராதாவின் கண்கள் பதிந்தன.
ஜானகி வாடிக்கொண்டிருக்கிறாள்.
""என் மகளைப் பார்க்க முடிஞ்சதே! அதுக்கான அதிர்ஷ்டம் உண்டானதே கடவுளே...''
""அம்மா... படுத்துக்கோங்க. இப்படி நடக்கவேணாம்.''
பாட்டி மூச்சு வாங்கியபடி நடந்தாள். தானியப் பெட்டியின்மீது அமர்ந்தாள்.
""காலையும் முகத்தையும் கழுவு... மகனே.''
தாய் வால் பாத்திரத்தில் நீர் கொண்டுவந்து வைத்தாள். ஸ்ரீநிவாஸன் நீரையெடுத்து முகத்தைக் கழுவினான்.
""ஜானு, நீ என்ன பேசாமலே இருக்கே?''
ராதா அவள் தோளில் கையை வைத்தாள்.
""ஜானுவுக்கு என்ன ஒரு கவலையம்மா?''
பொண்ணுக்கு காலையில இருந்தே ஒரு மந்தநிலை ஆரம்பிச்சிருச்சி.''
""ஜானு, உனக்கு அப்படி என்ன மந்தம்?'' ராதா சிரித்தாள்.
""விஷயங்களைப் பிறகு பேசிக்கலாம். முகத்தைக் கழுவிட்டு தேநீர் குடி மகளே.''
மேஜை நிறைந்தது. தட்டுகளும் குவளைகளும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. பலகாரங்கள் வந்தன. தேநீர் வந்தது. ஸ்ரீநிவாஸன் கூறினான்:
""அப்பா, உட்காருங்க.''
ஸ்ரீநியும் தந்தையும் அமர்ந்தார்கள். ராஜனும் அமர்ந்தான். ராதா யாரிடம் என்றில்லாமல் கூறினாள்:
""இன்னும் தினேஷன் வரலையே?''
""சாப்பிடு ஸ்ரீநி!''
தாய் தட்டில் தோசையையப் போட்டுக் கொடுத்தாள். சட்னியை ஊற்றித்தந்தாள். தானியப் பெட்டியின்மீதிருந்து பாட்டி கேட்பது காதில் விழுந்தது:
""தோசையும் இட்லிலியும் பூனேயில கிடைக்குமா மகளே?''
""கிடைக்கும் பாட்டி. தினேஷன் எங்க போனான்?
அவன் இங்க வரட்டும். நான் இன்னைக்கு காட்டுறேன்.''
தேநீர் பருகுவதற்கு மத்தியில் ராதா வெளியே பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
""இனி வர்றப்போ பாட்டி இருக்கமாட்டேன்.
எனக்கு இன்னும் ஒரேயொரு ஆசை இருக்கு மகளே... நீ பிரசவமாகிப் பார்க்கணும்.''
""அதுக்காகத்தானே நாங்க வந்திருக்கோம்.''
ஸ்ரீநிவாஸன் கூறினான். ரசிகன்!
தோசையைச் சாப்பிட்டான். அடையைச் சாப்பிட்டான். தேநீரையும் பருகினான். அவனுக்கு கூச்சம் எதுவுமில்லை. "நேராக வா... நேராகப் போ' என்ற குணத்தைக் கொண்டவன்.
தேநீர் பருகுதல் முடிந்தது. ஸ்ரீநிவாஸனும் தந்தையும் வெளியே சென்று அமர்ந்தார்கள். சிகரெட் பற்றவைத்தார்கள்.
தாயும் பாட்டியும் ராதாவும் வீட்டு விஷயங்களைப் பேச ஆரம்பித்தார்கள்.
""வீட்ல இருக்கறதில்ல. நாள் முழுவதும் சுத்தித் திரிவான். இல்லைன்னா படுத்துத் தூங்குவான்.''
தாய் பெருமூச்சு விட்டாள்.
""சாப்பிடணும்னோ தண்ணீர் குடிக்கணும்னோ நினைப்பே இல்லை. காலையில வெளியே போனான்ல? பொழுது விடிஞ்சு தொண்டையை நனைக்கல.''
ராதா எதுவும் கூறாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அப்போது தந்தை அங்கு நுழைந்து வந்தார். ராதா கூறினாள்:
""தினேஷனை ஒரு டாக்டர்கிட்ட காட்டக்கூடாதா அப்பா?''
""தினேஷன் விஷயத்தைப் பத்தி எங்கிட்ட பேசவேணாம். நான் வெறுத்துப் போயிட்டேன். தோணுறபடி செய்யட்டும்... நடக்கட்டும்... எங்கிட்ட சொல்லவேணாம்.''
தந்தை அங்கிருந்து சென்றார்.
தாய் எதுவும் கூறவில்லை.
ராதா எதுவும் கூறவில்லை.
""என் மகனோட புத்தியை சரிசெய் கடவுளே!''
பாட்டி வேண்டிக்கொண்டாள்.
வேண்டிக்கொண்டதால் நல்லது நடக்குமா? தன்னை நோக்கித் திரும்பியவர்களை தெய்வம் வெறுமனே விடுமா?
தாய் வாசலுக்குச் சென்றாள். தந்தை ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். புகையிலையின் வாசனை நிறைந்தது.
""ஸ்ரீநி... உனக்கு விடுமுறை எத்தனை நாளு?''
""ஒரு மாசம் மட்டுமே இருக்கு. ஆறாம் தேதி இங்கிருந்து புறப்படணும்.''
""ஒரு மாசம்தான் இருக்குதா? இங்கும் அங்கும் போறதுக்கே ஆறு நாள் வேணுமே!''
""ராதாவை இங்க விட்டுட்டுப் போனா, உணவு விஷயத்துக்கு என்ன செய்வே மகனே?''
""நானே செஞ்சுக்குவேன். எனக்குத் தெரியும்.''
""இல்லன்னா... ஹோட்டல் இல்லையா லட்சுமி?''
""சப்பாத்தி தயாரிக்க ராதாவுக்கு கத்துத் தந்தது நான்தான்.''
""சோறாக்குறதுக்கு... தேநீர் வைக்கறதுக்கு... பால் காய்ச்சுறதுக்கும்கூட...''
ராதா சேர்த்துக் கூறினாள்.
ஸ்ரீநி வாய் திறந்து சிரித்தான்.
தாயும் தந்தையும் சிரித்தார்கள்.
ராஜனும் சிரித்தான். தானியப் பெட்டியின் மீதிருந்தவாறு பாட்டியும் சிரித்தாள்.
ஜானகி சிரிக்கவில்லை.
காலடிச் சத்தம் கேட்டது.
படிகளில் ஏறி வாசலுக்கு வந்தான்.
வெயில் பட்டு, முகம் சூடாக இருக்கிறது. கண்கள் உள்நோக்கிப் போயிருக்கின்றன. வெட்டாத தலைமுடி காடென வளர்ந்து கிடக்கிறது. பொத்தான் இடாத சட்டையிலும், வேட்டியிலும் தெருவின் மண்ணும் சேறும் ஒட்டியிருந்தன.
""தினேஷா?''
ராதா அழைத்தாள். அவன் முகத்தை உயர்த்திப் பார்த்தான்.
""நீ எங்க போயிருந்தே மகனே? நான் வருவேன்னு உனக்குத் தெரியாதா?''
அவன் எதுவும் கூறவில்லை.
""என்ன மகனே, நீ எதுவுமே பேசாம இருக்கே?''
அவள் நாற்காலியைவிட்டு எழுந்தாள். அவன் அருகில் சென்றாள். முடியை வருடினாள். கட்டிப் பிடித்தாள்.
""அக்காமேலே உனக்கு கோவமா?''
எதுவும் கூறவில்லை. அவளுடைய பிடியை விடுவித்துவிட்டு, மெதுவாக நடந்துசென்றான்.
கட்டிலிலில் சென்று படுத்தான்.
கண்கள் மூடுகின்றன.
மார்புக் கூடு உயர்ந்து தாழ்ந்துகொண்டிருக்கிறது.
_____________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று அருமையான மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த் திருக்கிறேன்.
"கட்டிய தாலியின் கதை'யை எழுதியவர் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான "ஞான பீடம்' பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை. ஒரு ஏழைப் பெண்ணையும், அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் தாலியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. தகழியைத் தவிர வேறு யாராலும் இப்படியொரு கதையை எழுதமுடியாது. ஒரு விஷயத்தை அவர் எந்த அளவுக்கு ஆழமாகவும், நுணுக்கமாகவும் பார்க்கிறார் என்பதை நினைக்கும்போது, உண்மையிலேயே அவர்மீது நமக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகும். கதையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது, நம் மனதில் இனம் புரியாத ஒரு சோகம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
அதுதான் இந்தச் சிறுகதையின் வெற்றிக்கான அத்தாட்சி.
"ராதா' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நட்சத்திரமான எம். முகுந்தன். எந்தவொரு படைப்பை எழுதினாலும், மாறுபட்ட உத்தியைப் பயன்படுத்தும் முகுந்தன், நம் அனைவரையும் வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்கிறார். இதை கதை என்று கூறுவதைவிட, வித்தியாசமான குணங்களையும் நடவடிக்கைகளையும் கொண்ட சில கதாபாத்திரங்களின் சங்கமம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். முகுந்தனின் முத்திரை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இருக்கிறது.
"இளம் நண்பன்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாள ரான டி. பத்மநாபன். அன்வர் என்ற சிறுவனுடன் உரையாடும் பத்மநாபனை நம்மால் எப்படி ரசிக்காமல் இருக்கமுடியும்? இறுதியில் அவர் கூறும் அறிவுரையின்படி சிறுவன் அன்வர் நடக்க, விலைமதிப்புள்ள அமெரிக்காவின் மோட்டார் சைக்கிளான "ஹார்லி டேவிட்ஸன்மீது அமர்ந்து புயலென பறக்கும் அன்வரை டி. பத்மநாபன் கனவுகாண...
இப்படியொரு கதையை எழுதிய பத்மநாபனுக்குப் பரிசாக- ஒரு அன்பு முத்தம்!
"இனிய உதயம்' இதழில் இடம்பெற்றிருக்கும் இந்த மூன்று கதைகளும் உங்களுக்கு மாறுபட்ட அனுபவங்களைத் தரும்.
தொடர்ந்து நான் மொழிபெயர்க்கும் இலக்கியப் படைப்புகளை வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி!
அன்புடன்,
சுரா