ல நேரங்களில் வாசித்துக் கேட்டுமட்டும் அறிமுகமான சில இடங்களில் திடீரென போய்ச் சேரக்கூடிய சூழல் நேரும்போது, சிறிதும் எதிர்பாராமல் ஒரு பழைய உறவினரின் வீட்டிற்குள் மீண்டும் நுழையும்போது உண்டாகக்கூடிய உணர்வுதான் நமக்கு ஏற்படும். அங்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்திற்கும் நாம் நேரடி சாட்சியாக இருந்தோம் என்றொரு தோணல் உண்டாகிறது.

அங்குள்ள ஒவ்வொரு சிதிலமடைந்த தூணும் சரிந்து கிடக்கும் சுவரும் அறையும் மூலையும்... முன்பு எங்கோ பார்த்துப் பழக்கமானவையாக இருக்கின்றனவே என்ற பலமான ஒரு சந்தேகம் தோன்றுகிறது.

நானும் மிஸ்டர் ஹமீதும் தில்லியிலிருக்கும் "புராண கில்லா' என்ற பழைய கோட்டையின் மேற்குப் பகுதியிலுள்ள கோபுரத்தின்மீது அமர்ந்து பேசிக் கொண்டிருக் கிறோம். வரலாற்றுரீதியான பல தொடர் சம்பவங்களைப் பற்றியும் உரையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை.

வரலாற்று மாணவரான மிஸ்டர் ஹமீதிற்கு தில்லியின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பண்டைய வரலாறைப் பற்றி எவ்வளவு கூறினாலும் போது மென்றே தோன்றவில்லை.

Advertisment

கேட்ட எனக்கும்...

பௌர்ணமியாக இருந்தாலும், குளிர் காலத்தின் மூடுபனி நிலவுக்கு ஒரு மெல்லிய போர்வையை உண்டாக்கியிருந்தது. புராண தில்லியின் கிழக்குப் பக்கத்தின் பின்னணி ஒரு வெண்ணிற பாறைக் கூட்டத்தைப்போல இருந்தது. அது அந்த மூடுபனியின் சித்து வேலை.

முன்பு... ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால்...

Advertisment

பாண்டவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த புகழ்பெற்ற இந்திரப்ரஸ்தம் இருந்த இடத்தில்தான் இந்த புராண கில்லா நின்றுகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மயன் உண்டாக்கிய அந்த மாயசக்தி படைத்த இந்திரப்ரஸ்தம்! இருபது வருடங்கள் நீண்டு நின்ற ராஜஸூயம் என்ற யாகம் நடைபெற்ற புண்ணிய இடம்!

சம்பவங்கள் ஏராளம் இருக்கும் மகாபாரதத்தின் மர்ம கர்மங்கள் நடைபெற்ற ஒரு மிக முக்கியமான இடம்.

துவாபர யுகத்துடன் அந்த அறுவடை முடிந்தது. அந்த விவசாய இடம் மட்டும் எஞ்சியது. பிறகும்... காலம் வித்துகளை விதைத்தது. ஆனால், பிறகு கொஞ்ச காலத்திற்கு உண்டான விளைச்சலைப் பற்றி நமக்கு அதிகமாக எதுவும் தெரியாது. முகலாய ஆட்சியின் ஆரம்பத்துடன் தில்லியின் வரலாறு மீண்டும் எழுதப்பட்டது.

கிறிஸ்துவ ஆண்டு 1540-ல் ஷேர்ஷா ஸுரி இந்த இடத்தைத் தன்னுடைய தலைநகரமாக்கி னார். இங்கு இந்த கோட்டையைக் கட்டினார்.

அந்த நாடகமும் நீண்டு நிற்கவில்லை. இன்று... இங்கு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் வானரர்கள் மட்டுமே.

வரலாற்றின் ஆச்சரியப்படத்தக்க அந்தச் சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் அமர்ந்து கொண்டு நான் மேற்கு திசையில் சற்று கண்களைச் செலுத்தினேன்.

அதோ கிடக்கிறது.. .ஒரு கல் தூரத்தில் தில்லியின் வரலாற்றுப் பெருமைகொண்ட... எட்டாவது தலைநகரம். புது தில்லி! வைர மாலைகளைப் போன்ற மின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும் அதன் மார்புப் பகுதியையும், மத்தியில் ஒரு நிழல் வடிவத்தில் தெரிந்த தலைமைச் செயலகம், சட்டமன்ற கட்டடம், வைஸிராயின் வசிப்பிடம் ஆகிய பிரம்மாண்ட கட்டடங்களின் தொடர்ச்சிகளையும், சுற்றிலும் சிதறிக் கிடக்கும் அரசர்களின் அரண்மனைகளையும் பார்த்துப் பார்த்து நான் சிந்தனையில் மூழ்கியிருக்க, என் சிந்தனையை கிட்டத்தட்ட யூகித்து அறிந்துகொண்டார் என்று தோன்றக்கூடிய வகையில் மிஸ்டர் ஹமீத் என் தோளைத் தட்டியவாறு கூறினார்:

"நண்பரே, எதிர்கால வரலாற்றுப் பெட்டகத்தில் என்னவெல்லாம் இருக்குமென யாருக்குத் தெரியும்? ஒரு நூற்றாண்டிற்குப்பிறகு, நம்மைப்போன்ற இரண்டு நண்பர்கள் இங்கு அமர்ந்துகொண்டு மேற்கு திசையில் சிதிலமடையும் கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு நகரத்தைச் சுட்டிக் காட்டியவாறு, "அதோ கிடக்கிறது இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி நினைவுச் சின்னமான ஒரு நகரத்தின் மிச்சம்மீதிகள்...' என்று கூறமாட்டார்கள் என்று யாருக்குத் தெரியும்?''.

உண்மைதான். வித்தபிரம்மதத்தாவின் வித்துகள் தான் அங்கெல்லாம் விதைக்கப்பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி உண்டாக் கப்பட்ட அரண்மனைகளிலிருந்தும், மூன்று லட்சம் ரூபாய் செலவழித்துக் கட்டப்பட்ட "போர் நினைவுச் சின்னத்திலிருந்தும் கண்களை இழுத்து மீண்டும் நான் கோட்டையின் உட்பகுதிக்குத் திருப்பி அமர்ந்தேன்.

ஒரு காலத்தில் ரத்தினத்தாலான சுவர்கள்கொண்ட கட்டடங்கள் நிறைந்து நின்றிருந்த அதனுள் இன்று காணப்படுவது என்ன? ஷேர்ஷா கட்டிய ஒரு பள்ளிவாசலும் ஹுமாயூன் பயன்படுத்திய ஒரு வாசக சாலையும் ஒரு சிறிய குந்தி ஆலயமும் மட்டும்...

பிரம்மாண்டமான மற்ற கடடடங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. ஒரு கல் தூரத்தைவிட சுற்றளவுகொண்ட உயரமான கோட்டையின் சுவர்களால் பாதுகாத்துக் காப்பாற்ற முடிந்தது- வரலாற்றின் வெறுமையான ஏடுபோல கிடக்கும் பரந்த ஒரு புல்வெளியை மட்டுமே! அந்த வெறுமைச் சூழலில் திரைச்சீலையில் திரைப்படங்கள் தெரிவதைப்போல வரலாற்று சம்பவங்கள் ஒவ்வொன்றாகத் தோன்று வதை நான் பார்த்தேன். ஷேர்ஷா அங்கு பதவியில் இருப்பதையும், பட்டாளங்கள் உயிரை எடுப்பதையும்... பிறகு ஹுமாயூன் இடத்தை மீண்டும் பிடிப்பதையும் நான் தெளிவாகப் பார்த்தேன்.

திடீரென நான் அதிர்ச்சியடைந்தேன். என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. கோட்டை மைதானத்தில் சுமார் ஐம்பது பேர் இருக்கக்கூடிய முகலாய பட்டாளக்காரர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதோ எந்த வழியாக கோட்டைக்குள் நுழைந்தார்கள் என்பதோ எனக்குத் தெரியவில்லை. நான் கனவு காண்கிறேனோலி

அனைத்துமே என் மூளையின் விளையாட்டுகளாக இருக்குமோ என்று நான் சந்தேகப்பட்டேன். ஆனால், அந்த பட்டாளக்காரர்கள் அங்கு இரண்டு வரிசை களாக நின்றுகொண்டிருந்தனர்.

நான் மிஸ்டர் ஹமீதின் முகத்தையே பார்த்தேன். அவரும் அந்த இடத்தின்மீது ஆச்சரியத்துடன் பார்வையைப் பதித்துக்கொண்டிருந்தார். நான் அவருடைய கையைப் பிடித்து அழுத்தினேன். பயம்கலந்த ஒரு மெல்லிய ஓசைதான் அதற்கு பதிலாக வந்தது. அவர் உதட்டில் விரலை வைத்து சத்தம் எழுப்ப வேண்டாமென சைகை காட்டி, மிகவும் மெதுவான குரலில் என்னிடம் கேட்டார்: "இன்று என்ன கிழமை? வெள்ளிக் கிழமையா?'' "ஆமாம்...'' என்று நானும் முணுமுணுத்தேன்.

பிறகு... நாங்கள் ஒருவரோடொருவர் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. நான் மீண்டும் அங்கு பார்த்த போது, அந்த பட்டாளக்காரர்கள் அசையாமல் இரண்டு வரிசைகளாக அங்கேயே நின்றிருந்தார்கள். அவர்கள் முகலாயர்கள் முறைப்படி அணியக்கூடிய பட்டாள உடைகளை அணிந்திருந்தார்கள்.பாலைவனத்தில் கானல் நீர் தெரிவதைப்போல அந்த வெறுமையில் சரித்திர சம்பவங்கள் மீண்டும் தோன்றுவதற்கான ரகசியம் என்ன? பிசாசுக்களின்மீதும் பேய்களின்மீதும் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. ஆனால், எனக்கு முன்னால் தெரிவது என்ன? அதை என்னால் எப்படி நம்பாமல் இருக்கமுடியும்? என் தைரிய மனம்கொண்ட நண்பரும் சஞ்சல இதயம் கொண்டவராக ஆனதன் ரகசியம் என்ன? தில்லியின் குளிரைப்போலவே தடுக்கமுடியாத ஒரு பயம் என் மனதிற்குள் நுழைந்து வந்தது. அந்தப் பகுதி ஆவி உலகத்தின் வெளியோ? மேலும் சிறிது நேரம் கடந்தபிறகு, கிழக்கு கோபுர வாசலுக்குள் நுழைந்து ஒரு வெளுத்த உருவம் வருவதைப் பார்த்தேன். இதற்கெல்லாம் அர்த்தம் என்னவென்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் மிஸ்டர் ஹமீதிடம் கேட்டேன். ஆனால், அவர் என் வாயைப் பொத்திக்கொண்டு ஒரு மூச்சு விடுவதைப்போல மெதுவான குரலில் என்னை எச்சரித்தார்:

"உயிரின்மீது ஆசை இருந்தால், பேசாமல் இருங்கள்.''

மிஸ்டர் ஹமீதின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நான் அதற்குப்பிறகு சிறிதும் அசையவேயில்லை. ஏதோ வினோதமான சில சம்பவங்கள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன என்பதை மட்டும் என்னால் உணரமுடிந்தது. முன்னாலிருந்த வெளுத்த உருவம் இன்னும் சற்று நெருங்கிவந்தபோது, அது குதிரையின்மீது அமர்ந்துவரும் ஒரு தலைவர்- இல்லை... பாதுஷா என்பதை நான் புரிந்துகொண்டேன்.

அவர் ஒரு கருத்த குதிரையின்மீது நன்கு நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவர் அருகில் வந்தபோது, படைகள் முன்னோக்கி குனிந்து வணங்கின. கம்பீரமான தோற்றத்தைக் கொண்டவராகவும் மிடுக்கின் சின்னமாகவும் இருந்த பாதுஷா அந்தப் படைகளுக்கு மத்தியில் நுழைந்து, நாங்கள் அமர்ந் திருந்த கோபுரத்திற்குக்கீழே வந்து நின்றார்.

நாங்கள் ஒரு பெரிய தூணின் மறைவிலிருந்த காரணத்தால், பாதுஷாவால் எங்களைப் பார்க்க முடியவில்லை. அதாவது- நாங்கள் அவ்வாறு நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டோம்.

பாதுஷா அங்கிருந்தவாறு முகத்தை உயர்த்தி நான்கு பக்கங்களிலும் சற்று பார்த்தார். அந்த பார்வையில் மென்மைத்தனம் கலந்த ஒரு மிடுக்கு காணப்பட்டது.

d

குதிரையை நிறுத்திவிட்டு ஒரு கையால் கடிவாளத் தைப் பிடித்து முறுக்கிக் கொண்டும், இன்னொரு கையால் தன் கொம்பு மீசையைப் பிடித்து முறுக்கிக்கொண்டுமிருந்த பாதுஷா தன்னுடைய சதைப்பிடிப்பான கழுத்தை மெதுவாக நான்கு பக்கங்களிலும் திருப்பி கோட்டையை முழுமையாகக் கண்களால் அளந்து பார்த்துவிட்டு அர்த்தத்துடன் சற்று தலையை ஆட்டினார்.

பாதுஷாவின் ஆடைகளை என்னால் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இடுப்பிற்கு மேலே சட்டையின் அளவிலும், கீழே சுருக்கமற்ற பாவாடையின் அளவிலும் தைத்து உண்டாக்கப்பட்ட முகலாய அரசர்களின் அந்தச் சிறப்பு ஆடைகளைத்தான் அணிந்திருந்தார்.

அதில் இங்குமங்குமாக நட்சத்திரத்தின் தோற்றத் திலிருந்த நவரத்தினங்கள் மின்னிக்கொண்டிருந்தன. இடுப்பில் தங்க நிறத்தில் ஜரிகைகொண்ட ஒரு பட்டுத் துணியைக் கட்டியிருந்தார். தொங்கிக் கொண்டிருந்த அதன் ஓரத்தில் ரத்தினத்தின் ஒளி சிமிட்டிக்கொண்டிருந்தது. நிலவின் ஒளியில் மின்னிக்கொண்டிருக்கும் ரத்தினத்தாலான பிடியைக்கொண்ட கூர்மையான ஒரு வாளை இடுப்பில் செருகியிருந்தார்.

வெண்ணிறப் பட்டுகொண்டு செய்யப்பட்ட தரமான அழகான தலைப்பாகையிலும் ரத்தினங்கள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. தலைப்பாகையில், சிறிய விசிறியின் தோற்றத்தில் ஒரு தொங்கல் மேலே தொங்கிக்கொண்டிருந்தது.

எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த பாதுஷாவையே கண்கள் குளிர நான் சற்று பார்த்தேன். அவர் குதிரையை நான்கைந்து வட்டங்கள் போடவைத்தார். தொடர்ந்து மேற்கு திசை கோபுரத்தின் வாசல் வழியாக மறைந்துபோனார்.

பட்டாளக்காரர்களும் பிரிந்து சிதறி கோட்டையின் வடக்குப் பகுதியில் பயனற்றுக் கிடந்த ஒரு பழைய நுழைவு வாயிலின் வழியாக வெளியே கடந்து அருகிலிருந்த புதர்களுக்குள் சென்று மறைந்தார்கள். நீண்ட நேரத்திற்கு எனக்கு பேசுவதற்கான சக்தி கிடைக்கவில்லை.

ஒரு குளிர்ந்த காற்று என் நரம்புகளை மரத்துப்போகச் செய்தது. நான் அந்த இருட்டையே மீண்டும் பார்த்தேன்.

மிஸ்டர் ஹமீத் கூறினார்: "புத்துபாதுஷாவையும் படையையும்தான் இங்கு இப்போது பார்த்தோம்.''

"புத்துபாதுஷாவா?'' நான் என் மூளையில் தேடியவாறு கேட்டேன்: "அந்தப் பெயருடன் உள்ள ஒரு பாதுஷா இந்தியாவை ஆண்டதாக நான் படித்ததில்லையே?''

"அப்படிப்பட்ட ஒரு பாதுஷா இந்தியாவை ஆண்டாரென யார் சொன்னது?''

"பிறகு... நாம் இப்போது பார்த்தது?''

மிஸ்டர் ஹமீத் என் முகத்தையே உற்றுப் பார்த்தார். "நீங்கள் கனவு காண்கிறீர்களா? இல்லாவிட்டால் மூளையில் ஏதாவது கோளாறு உண்டாகி விட்டதா?''

எனக்கு மிகுந்த கோபம் உண்டானது.

"மிஸ்டர் ஹமீத்... நீங்கள் என்னை கிண்டல் செய்கிறீர்களா? திட்டுகிறீர்களா? என்ன செய்கிறீர்கள்?'' நான் மிடுக்கான குரலில் கேட்டேன்.

மிஸ்டர் ஹமீத் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

"வாருங்கள் நண்பரே. எழுந்திருங்கள். நீங்கள் கனவு உலகத்திலிருந்து புராண கில்லாவின் பழைய கோபுரத்திற்கு இறங்கிவாருங்கள். 18-ஆம் நூற்றாண் டிலிருந்து 20-ஆம் நூற்றாண்டிற்கு வாருங்கள். பிறகு... நான் கூறுவதை முழுமையாக... கவனித்துக் கேளுங்கள்.''

நான் மிஸ்டர் ஹமீதின் முகத்தையே கூர்ந்து பார்த்தேன். அவர் தொடர்ந்து கூறினார்: "புத்து இந்த மாவட்டத்தின் புகழ்பெற்ற ஒரு பழைய "கேடி'. பத்து பதினைந்து பசுக்களும் கொஞ்சம் ஆடுகளும் இவனுக்குச் சொந்தமாக இருக்கின்றன. இவனேதான் அவற்றை மேய்க்கிறான். அதற்காக ஒரு குதிரை யும் இவனுக்கு இருக்கிறது. இங்கிருக் கும் ஏழைகள் அனைவரும் இந்த போக்கிரிக்கு பயந்து இவன் கூறுகிறபடி வாழ்பவர்கள்.

இந்தப் பகுதியில், இங்கு காணப் படும் கட்டடங்கள் அனைத்தும் கட்டப்படுவதற்கு முன்னால் இங்கொரு பெரிய காடு இருந்தது. அன்று இந்த காட்டின் அனைத்து அதிகாரங்களையும் பெற்றவனாக இருந்தான் புத்து. இவனுடைய நண்பர்கள் அனைவரும் இவனை புத்துபாதுஷா என்றுதான் அழைப்பார்கள்.

அரசாங்கம் இந்த இடங்களைக் கைக்குள்ளாக்கி இங்கு மிகப்பெரிய கட்டடங்களைக் கட்டியது இவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தில்லியின் இறுதி அரசரான பகதூர் ஷாவின் ஒரு தூரத்து வம்சத்தைச் சேர்ந்தவன் என்று ஏதோவொரு ரசிகன் இவனுக்குத் தவறாக கூறியதிலிருந்து, இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்ற ஒரு ஆசை இந்த நண்பனுக்குள் நுழைந்து சிலகாலம் ஆகிவிட்டது.

நீங்கள் இவை எதையும் நம்பாமல் இருக்கலாம். ஆனால், உண்மை அதுதான். பிரிட்டிஷ் பட்டாளக் காரர்களைத் தொல்லைப்படுத்திய காரணத்திற்காக ஒன்றிரண்டு முறை இவன் சிறை தண்டனைகூட பெற்றிருக்கிறான்.

இவன் இந்த கோட்டைக்குள் ரகசியமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன் நண்பர்களுக்கு பட்டாள வேடத்தைக் கட்டி, தானும் அந்த நாடகத்தில் ராஜபார்ட் வேடம் கட்டி குதிரையின்மீது ஏறி நடிப்பதுண்டு.''

விஷயங்கள் அனைத்தும் தெரியவந்தபோது, எனக்கு அடக்கமுடியாத அளவுக்கு சிரிப்பு வந்தது.

நான் மிஸ்டர் ஹமீதிடம் கூறினேன்: "நான் புத்து பாதுஷாவை இன்று இந்தியாவிலுள்ள எந்தவொரு மகாராஜாவையும்விட அதிகமாக மதிக்கிறேன்.''

"காரணம்?'' மிஸ்டர் ஹமீத் மிடுக்குடன் கேட்டார்.

"காரணம்... புத்துபாதுஷா அதிகமான சுதந்திரத்தைக் கொண்டவன். இன்னும் சொல்வதாக இருந்தால், சில பேரரசர்களுக்குத் தங்களுடைய நாட்டின்மீது இருக்கக்கூடிய அதிகாரத்திற்கு சமமானது, புத்துபாதுஷாவுக்கு இந்த புராண கில்லாமீது இருப்பது...''

மறுநாள் நானும் ஹமீதும் சேர்ந்து ஹுமாயூனின் கல்லறையைப் பார்ப்பதற்காகச் செல்லும் வழியில் மிஸ்டர் ஹமீத் என் கையைப் பிடித்து அழுத்தி, என்னுடைய வலது பக்கத்தை நோக்கி கண்களைச் சிமிட்டினார். நான் அந்தப் பக்கத்தில் பார்த்தபோது கொஞ்சம் பசுக்களை செலுத்தியவாறு கருப்புநிற குதிரையின்மீது ஒரு தடிமனான மனிதன் செல்வதைப் பார்த்தேன்.

ஆள் யாரென உடனடியாக எனக்குப் புரிந்து விட்டது. அவனுடைய கறுத்து இருண்ட பெரிய உடலையும் சதைப்பிடிப்பான கழுத்தையும் தலையையும் கொம்பு மீசையையும் நான் ஆர்வத்துடனும் சிறிது பயத்துடனும் வெறித்துப் பார்த்தேன்.

நண்பன் குதிரையின்மீது சிந்தனையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து மிஸ்டர் ஹமீத் என் காதில் முணுமுணுத்தார்: "பாதுஷா எதைப் பற்றி ஆழமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என்பதை உங்களால் கூறமுடியுமா?'' நான் கூறினேன்: "சந்தேகம் இருக்கிறதா? தன்னுடைய பாக்கிஸ்தானைப் பற்றிதான்...''

dd