பொம்மைக் கல்யாணத்தின் மணமகன் குழி தோண்டு வதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். உறுதியான மண்ணில் மண்வெட்டி விழக்கூடிய ஓசையை உள்ளே அமர்ந்திருந்தாலே கேட்கலாம். ஒவ்வொரு வெட்டும் மண்ணில் ஆழமாகப் பதியும்போது, உள்ளேயிருந்து வரும் அழுகைச் சத்தம் அதிகாரித்துக்கொண்டிருந்தது. ஒரு பொது சுடுகாடு இந்த ஊரில் இருந்திருந்தால், இந்த கவலை தரும் அனுபவத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கும். அனைத்தும் விதியின் சோதனையாக இருக்கலாம்!

கண்ணீரின் ஈரத்தைக்கொண்ட இந்த நாளின் நினைவு, மனதிலிருந்து வரும் நாட்களில் மறைந்துபோகப் போவதில்லை. இந்த இளம்வயதில் இப்படிப்பட்ட ஒரு அவல விதியை அனுபவிக்கும் அளவுக்கு என்ன தவறு செய்துவிட்டேன்? மனதறிய ஒரு எறும்புக்குக்கூட கெடுதல் செய்ததில்லை. கர்ம தொடர்புகள் அறுந்துவிட்ட அதிர்ஷ்டமற்ற பிறவிகளில் ஒருவனாகிவிட்டேன்.

அனைத்தும் நடக்கட்டும்! அனுபவித்துதான் ஆகவேண்டும்.

தோண்டிக்கொண்டிருந்த குழிக்கு வாசலி-ருந்து பத்து அடிகள்கூட தூரமில்லை. அங்கு என்ன நடக்கப் போகிறதென்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் குழி தோண்டும் செயலை மேற்பார்வை பார்ப்பதில் தனக்கு உரிமையிருக்கிறது என்பதைப்போல அவன் நின்றிருந்தான். ஒரு மூன்று வயதுள்ளவனுக்கு இந்த மன தைரியம் எங்கிருந்து கிடைத்தது? நேற்றிரவில் நடந்த சம்பவத்தைப் பற்றி அவனுக்கு ஏதாவது தெர்ந்திருக்குமா? அவன் பார்க்காமலிருக்க வேண்டும் என்பதற்காக, அறைக்குள் கொண்டுசென்று கதவை அடைத்துவிட்டோம்.

Advertisment

dd

சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு, மிகவும் தாமதமாவதற்கு முன்பே தூங்கி விடுவதுதான் வழக்கம். வழக்கத்திற்கு மாறாக, அவன் உறங்காமல் இருப்பதைப் பார்த்து மேலும் கவலை உண்டானது.

"மகனே... சாப்பிட்டுட்டு போய் தூங்கு'' என்று கூறியதற்கு தான் சாப்பிடப் போவதில்லை என்பது அவன் கூறிய பதிலாக இருந்தது. வேணுகா உடல்நலமில்லாமல் படுத்திருக்கிறாள் என்றும், அவளுடை நோய் குணமான பிறகே தான் சாப்பிடப் போவதாகவும் அவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான். வேணுகா வாழவேண்டுமென்று அவனும் ஆசைப்படுகிறான்!

"மகனே... வேணுகாவின் நோய் குணமாயிடும். நீ பிடிவாதம் பிடிக்காம கொஞ்சம் சாப்பிடு...'' அடக்கமுடியாத கவலையை மறைத்து வைத்துக்கொண்டு நான் கூறிப் பார்த்தும் பலன் உண்டாக வில்லை.

இரவில் அவன் எதுவுமே சாப்பிடாமலிருந்தான். பிஞ்சு மகளின் அதிகாரித்துக்கொண்டிருந்த மூச்சு விடுதலையைப் பார்த்துக்கொண்டிருந்ததில் அவனும் எங்களுடன் சேர்ந்திருந்தான். சிறிது நேரம் கடந்ததும் அவனுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. தூக்கக் கலக்கத்துடன் அப்படி அமர்ந்திருந்தது அர்த்தம் நிறைந்ததாக எனக்குத் தோன்றியது. இடையே அவ்வப்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். இறுதியில் என் மடியில் விழுந்து உறங்கிவிட்டான். அறைக்குள் கொண்டுபோய் படுக்கவைத்தேன். பிறகு அங்கு என்ன நடந்ததென்பது அவனுக்குத் தெரியாது.

டாக்டர் வந்ததும் மருந்து தந்ததும் குட்டிமகள் மரணமடைந்ததும் அவனுக்குத் தெரியாது.

அதிகாலையில் அவன் எழுந்தான். அவன் எழுந்தபோது, அழுது சோர்ந்துபோன அனைத்து உயிர்களும் சற்று கண்களை மூடியிருந்தன. அவனுடைய குரலைக் கேட்டுதான் கண்களைத் திறந்தோம். வேணுகாவைப் பார்க்கவேண்டுமென்று அவன் கூறினான்.

"வேணுகா தூங்கிக்கிட்டிருக்கா. மகனே... தூங்கி எழுந்ததும் நீ அவளைப் பார்க்கலாம்.'' நான் கூறிப் பார்த்தும், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த விஷயத்திலிருந்து அவனுடைய கவனத்தைத் திருப்புவதற்காக ஆகக் கூடியதையெல்லாம் செய்துபார்த்தேன். இறுதியில் வேணுகாவைக் காட்டிக்கொடுக்கவேண்டிய நிலை உண்டாகிவிட்டது!

வெளுத்த ஒரு துணியில் அவள் படுத்திருந்தாள். முழுமையாக மூடிப் போர்த்தப்பட்டிருந்தது. முகத்திலிருந்து துணியை அகற்றினேன். விழித்த கண்கள் அதே நிலையில் நின்றுகொண்டிருந்தன.

"வேணுகா தூங்காம படுத்திருக்கா. உண்ணி மாமா... ஏன் வேணுகா சிரிக்காம இருக்கா?''

கடவுளே... நான் என்ன சமாதானம் கூறுவேன்?

"வேணுகா எதையோ சிந்திச்சிக்கிட்டுப் படுத்திருக்கா. மகனே... நீ வந்ததைப் பார்த்திருக்க மாட்டா. கொஞ்சநேரம் கழிச்சு சிரிப்பா.'' தொண்டையின் உள்ளேயிருந்து வெளியே வந்த எல்லா தேம்பல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுக் கூறினேன்.

நம்பிக்கை வந்துவிட்டதென்று தோன்றியது. சிறிதுநேரம் குட்டிமகளின் முகத்தையே உற்றுப் பார்த்தான். இனம்புரியாத மனக் கஷ்டத்தை அவன் அனுபவித்துக்கொண்டிருக்கிறான் என்பதை முகத்தில் தெரிந்த கவலையிலிருந்து உணரமுடிந்தது.

கண்களை மூடியவாறு அவள் படுத்திருந்தால், உறங்கிக்கொண்டிருக்கி றாள் என்று கூறிவிடலாம். நீலநிறம் படர்ந்த திறந்த விழிகளுடன் மல்லார்ந்த நிலையில் படுத்திருக்கக் கூடிய குழந்தையைத் தூங்கிக்கொண்டிக்கி றாள் என்று கூறினால் அவன் எப்படி நம்புவான்?

அவனைப் பார்த்துவிட் டால் ஈறு தெரியும் வண்ணம் சிரிக்கக்கூடிய வேணுகா என்ன காரணத்தால் அவனைப் பார்த்தும், பார்த்ததைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள்? வேணுகா மிடுக்கைக் காட்டுகிறாளோ? அப்படியே இல்லையென்றாலும், தன் எதிர்கால மணமகனைப் பார்க்கும்போது வேணுகாவுக்கு அடையாளம் தெரியுமல்லவா? சீன மிளகாயின் அளவுதான் பெண்ணுக்கு. அவன் அப்படியெல்லாம் நினைத் திருப்பான்.

பிஞ்சு மகள் படுத்திருப்பதற்கு மிகவும் அருகில் சிறிய ஒரு குத்துவிளக்கு எரியும்படி வைக்கப்பட்டிருந்தது. மின்விளக்கு எரிந்துகொண்டிருக்கும் அறையில் ஏன் குத்து விளக்கை எரியச் செய்யவேண்டுமென்ற கேள்வியை நான் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு "ஷாக்' அடித்ததைப்போல நான் அவனை இறுகத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றேன். என் கண்ணீர் விழுந்து அவனுடைய முகம் ஈரமானது. அவன் என் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்டான். "உண்ணி மாமா... எதுக்கு குழி தோண்டுறாங்க?''

"நம்மோட குறிஞ்சிப் பூனை செத்துடுச்சு மகனே...''

எப்படி இறந்தது என்பதாக இருந்தது அடுத்த கேள்வி.

"காய்ச்சல் வந்து இறந்திடுச்சு'' என்று கூறிப் பார்த்தேன். குழி தோண்டப்படும் இடத்திற்கு அவன் வேகமாக செல்வதைப் பார்த்தேன். தடுக்கவில்லை. மறைத்து வைத்துப் பயனில்லை. நடப்பவை அனைத்தும் நடக்கட்டும்!

எத்தனை... எத்தனை எதிர்பார்ப்புகள்! அனைத் தையும் பிஞ்சு மகள் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாள்! எப்படிப்பட்ட பொருட்களையெல்லாம் அவள் விட்டுச் சென்றுவிட்டாள்! அவளுடை விளையாட்டு பொம்மைகளில் ஒன்றான அந்த ஆடையணிந்த பொம்மையைப் பார்த்தபோது, நான் பலவித நினைவு களிலும் மூழ்கிவிட்டேன். பிஞ்சு மகளுக்கும் அந்த பொம்மைக்குமிடையே ஒற்றுமை இருந்தது. குட்டி மகளின் மாமா அந்த பொம்மையை சிங்கப்பூரிலிருந்து அனுப்பியிருந்தார்.

சிவந்த ஆப்பிள் பழத்தைப் போன்ற கன்னத்தையும், கருத்த முந்திரியின் கண்களையும் கொண்டிருந்த பொம்மை! பொன் வண்ணத்திலிருந்த ஒரு சில்க் "ஃப்ராக்'கை பொம்மை அணிந்திருந்தது.

அதிகபட்சம் ஆறு மாதங்களையே வயதாகக் கொண்ட ஒரு மனிதக் குழந்தையின் முழுமையான தோற்றம் அந்த பொம்மைக்கு இருந்தது. ஹார்ட் போர்டால் செய்யப்பட்ட ஒரு வெல்வெட் பெட்டியில்தான் அந்த பொம்மை வந்தது. பிஞ்சு மகளைப்போலவே அவளும் அழகானவளாக இருந்தாள். குட்டி மகள் பிடிவாதம் பிடித்து அழும்போது, பொம்மையைக் காட்டுவேன். உடனே அவள் அழுகையை நிறுத்திவிடுவாள். தன் தோழியின் முகத்தைப் பார்த்து ஈறு தெரிய சிரிப்பாள். வேதனையும் கஷ்டமும் அவளை சிரமப்படுத்தும்போது, அந்த பொம்மைதான் ஒரேயொரு நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது.

பொம்மையின் தொப்புளுடன் சேர்ந்துப் பொருத்தப்பட்டிருந்த பொத்தானை அழுத்தினால், இரண்டு கைகளையும் நீட்டியவாறு பொம்மை தலையைக் குனிய வைத்துக்கொண்டு பிஞ்சு மகளுக்கு முத்தம் கொடுப்பதற்காக வரும். பொம்மையின் கைகள் பட்டவுடன், குட்டி மகளின் உற்சாகமுண்டான சரீரம் முழுவதும் ரோமாஞ்சத்தின் வித்துகள் உண்டாகும். எழும் மயிர்க்கூச்செரிதல்! அடக்க முடியாமல் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருப்பாள்.

பொம்மையைப் பார்த்ததும் பிஞ்சு மகள் தெளிவற்ற வார்த்தைகளுடன் கொஞ்சுவதைக் கேட்கலாம்.

"பொ... பொ... ம்... ம..''

தோழியைப் பார்ப்பதில் சந்தோஷமென்று அதற்கு அர்த்தம். பொம்மையின் கூர்மையான கைகளைக்கொண்டு அவளுடைய முதுகிலும் நெற்றியிலும் கன்னத்திலும் தடவுவாள்.

முத்தமிடச் செய்வாள். முடிச் சுருள்களை வருடச் செய்வாள்.

இனிமேல் பொம்மைக்கு யார் தோழியாக இருப்பது? இனி என்றென்றைக்குமாக பெட்டிக்குள் அசைவே இல்லாமல் கிடக்கவேண்டியதுதான்! "பிஞ்சு மகள் மண்ணுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, நீ வெல்வெட் பெட்டியில் இருப்பாய். அவ்வளவுதான்... நீயும் அழுகிறாயா? உன் தோழி உன்னைப் பொருத்தமற்ற காலத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டாள் இல்லையா?'

பொம்மையின் கருத்த முந்திரிக் கண்கள் ஈரமாவதைப்போல தோன்றியது. அவை கருத்த முத்துக்களைப்போல ஒளிர்ந்தன.

தலையணையில் முகத்தை வைத்தவாறு நான் சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தினேன். வாசலில் காலடிச் சத்தம் கேட்டது. பெரிதாக ஒலிக்காத பேச்சுச் சத்தம் காதில் விழுந்தது. யாராக இருக்கும்? யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். சாற்றப் பட்டிருந்த கதவைத் தள்ளி திறந்தவாறு உள்ளே யாரோ வந்திருக்கிறார்கள். திரும்பிப் பார்க்க இயலாத நிலையில் இருந்தேன்.

தொட்டு அழைத்தார்கள்: "தூங்குறியா?''

"இல்ல... தேம்பிக்கிட்டிருந்தேன்.' இப்படித்தான் கூற விரும்பினேன். அதற்கு பதிலாக அந்த முகத்தையே சரிந்து பார்த்தேன். தினமும் பார்க்கக் கூடிய நண்பர்கள்தான்... தகவலைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறார்கள்.

"உண்ணி அண்ணா... நான்தான் ரகு. அழாம இருங்க..."

மேலும் வேதனை தோன்றியது. அவனுக்கும் இதே வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

"ரகு... உன் குழந்தை உயிருடன் இருக்கு. அதனால நீ எனக்கு ஆறுதல் சொல்ற. நிலைமை வேறு மாதிரி இருந்தாலும், இதேதான் நடக்கும். ஆறுதல் சொல்லக்கூடிய ஆள் நானாக இருப்பேன்;

அவ்வளவுதான்...'

இதைக் கூறவில்லை. அவ்வளவுதான்... இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் யாராலும் எதுவும் கூறமுடியாதே! "எழுந்திரு... இப்படி படுத்திருக்கக்கூடாது. மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய நீயும் பெண்களைப்போல அழ ஆரம்பிச்சா எப்படி?"

"பரவாயில்ல... இதெல்லாம் மனித வாழ்க்கையில சாதாரணமா நடக்கக் கூடியதுதான். சந்தோஷமும் துக்கமும் நிறைஞ்சதுதான் வாழ்க்கை. இனியும் குழந்தை பிறக்கும்.''

"உங்களுக்கு வயசு குறைவு. இனிமேலும் மனைவி பிரசவமாவாங்க. சில நேரங்கள்ல பெண் குழந்தை... சில நேரங்கள்ல ஆண் குழந்தையாவும் இருக்கும்.''

"குழியிலிருக்குற குழந்தையோட மடியில... அடுத்த வருஷம் இந்த இழப்பு கட்டாயம் ஈடுசெய்யப்பட்டுவிடும்.''

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு ஆறுதல் கூற முயன்றார்கள். சிலர் நீண்டநேரம் அமர்ந்து பேசினார்கள். சிலர் சில வார்த்தைகள் மட்டும்...

கை மாறியது. சிலர் சூழலின் இறுக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் விஷயத்திலிருந்து விலகிச் சென்றும் பேச ஆரம்பித்தார்கள். ஒரு ஆள் மட்டும் தன் கையை விரித்து வைத்தவாறு யாரும் கேட்காத வகையில் கூறினார்:

"தைரியமா இரு. அப்படி இருக்க முடியலைன்னா நல்லா அழு. அழுது... அழுது... ஆறுதல் அடை..''

ஒரேநாளில் தான் அளவற்ற அன்பு வைத்திருந்த மனைவியையும் குழந்தையையும் இழந்த ஒரு மனிதர் அவர். அறுவை சிகிச்சை பிரசவத்தில் இருவரும் மரணமடைந்துவிட்டார்கள். அந்த துக்கத்தின் வடு ஆறுவதற்கு முன்பே, எனக்கு ஆறுதல் கூறுவதற்காக நூறு மைல் தூரத்திலிருந்து காரை ஓட்டி வந்திருக்கிறார்.

ஒரு பச்சைக் குழந்தையைத் தேற்றுவதைப்போல என் முன்நெற்றியை மிகவும் மெதுவாக வருடினார். ஒரு சிகரெட்டைப் புகைக்கும்படி கூறினார். அவர் கூறியபடி நடக்கவும் செய்தேன்.

உறவினர்களைத் தவிர, வந்தவர்களில் முக்கால்வாசி ஆட்கள் போய்விட்டிருந்தார்கள். இனி எப்போது இந்த பொம்மைக் கல்யாணம் நடக்கும்?

பிஞ்சு மகளைப் படுக்க வைத்திருந்த அறைக் குள் சென்றேன். சுற்றிலும் ஆட்கள் இருந்தார் கள். மனைவியின் தேம்பியழும் சத்தம் இன்னும் நிற்கவில்லை. அம்மா நாராயண நாமம் உச்சரித்துக்கொண்டிருந்தாள்.

"அப்பு... ரமேஷன் எங்க போனான்?'' தந்தையின் குரல்.

"அவன் குழிதோண்டும் இடத்துல நின்னுக் கிட்டிருக்கான்.''

"அவனுக்கு அந்தக் காட்சியைக் காட்டக்கூடாது.''

"வெளியே எடுத்துட்டுப் போறதுக்கு முன்னால பையனை அறைக்குள்ள வச்சு கதவை அடைச்சிடு...''

"வேணாம்... அவன் அனைத்தையும் பார்க்கட்டும்.''

"பயந்து கூப்பாடு போடுவான்.''

அதற்கு பதிலெதுவும் கூறவில்லை.

"இனி தாமதப்படுத்த வேணாம்.'' யாரோ உரத்த குரலில் கூறுவது கேட்டது: "எல்லாம் தயாராயிடுச்சு.''

"என்ன தயாரா இருக்கு? பிணக் குழியா?"

"என்ன..? உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா? உள்ளே போ. இதிலெதிலும் தலையிடவேணாம்.'' குட்டி ராமண்ணனின் கம்பீரமான முரட்டுக்குரல் என்னை சற்று அமைதியாக இருக்கச் செய்தது.

கல்யாணத்தை உறுதிப்படுத்தியதும், ஜாதகம் பார்த்ததும், குழந்தையை அழைத்துக்கொண்டு வருவதற்கு நல்ல நேரம் பார்த்ததும், சோறு உண்பதற்கான நாளைத் தீர்மானித்ததும்.... அனைத் துமே குட்டி ராமண்ணன்தான். இப்போது குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்பதும் அவர்தான். வழிகாட்டியும், நண்பரும், குருநாதரும் ஒரே ஆள்தான்.

வாசலி-ருந்து உள்ளே வந்த ஒரு ஆள் எல்லாரிடமும் கூறினார்: "கொஞ்சம் விலகி நிக்கணும்.''

இறுதியாக குட்டி மகளைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு...

உள்ளேயிருந்து கூட்டமாக அழும் சத்தம் உரத்துக் கேட்டது. இனம்புரியாத தேம்பல்கள்...

அழுத்திப்பிடித்த இதயத் துடிப்புகள்...

குத்து விளக்கை அகற்றி வைத்தேன். விரிப்பைத் தட்டிவிட்டு எடுத்தேன்.

"துணியைப் போட வரட்டுமா? தங்க நிறத்தில ஓரம் அமைச்சு தைச்ச பட்டுத்துணிய எடுத்துப் போட்டுவிடுங்க. ரிப்பனால அவளோட தலைமுடிய ரெண்டு பக்கமா பிரிச்சுப் பின்னுங்க. எல்லா நகைங்களையும் எடுத்துப் போடுங்க. காதுகள்லயும் கழுத்திலயும் இடுப்பிலயும் அவளுக்காக செய்யப்பட்ட புதிய நகைங்களையும் எடுத்துப் போடுங்க... பவுடரைப் பூசுங்க... கண் மையைத் தடவுங்க... வாசனைப் பொருட் களைத் தேய்ச்சு விடுங்க... பொம்மைக் கல்யாணத்தோட மணமகள் இல்லியா? அவளை அலங்காரம் செஞ்சு வெளியே கொண்டு போங்க...'' குலுங்கிக் குலுங்கி அழுதவாறு ஒரு பைத்தியம் பிடித்தவனைப்போல நான் புலம்பினேன்.

"நீ சொன்னதைச் சீக்கிரம் செய். அவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு....''

"பைத்தியம் பிடிச்சவனா இருந்தாலும், என்மேல கருணை காட்டுங்க...'' நான் குட்டி ராமண்ணனின் தோளைப் பற்றியவாறு கெஞ்சினேன்.

வாழ்க்கையில் ஒருமுறைகூட அழுது பார்த்திராத குட்டி ராமண்ணன் தோளில் போட்டிருந்த மேற்துண்டால் கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்தேன்.

"உண்ணீ... நீ உள்ள போ... எங்களைக் கவலைப்பட வைக்காதே.'' குட்டி ராமண்ணன் தன் வலக்கையை இறுக்கினார்.

இறுதி முறையாக நான் பிஞ்சு மகளை வாரியெடுத்தேன். அவளுடைய முகத்தில் நீண்டநேரம் நான் என்னுடைய கன்னத்தையும் உதட்டையும் முகத்தையும் அழுத்தி வைத்தேன். கண்ணீர் விழுந்து ஈரமான குட்டி மகளின் முகம் வெளிறிப் போனதைப்போல தோன்றியது. அனைவரையும் விட்டுப் பிரிந்துசெல்கிறோம் என்ற வேதனை இறுகச் செய்துவிட்டதோ?

டஜன் கணக்கில் உடைகள் இருக்க, எதையும் அணியாமல் சாதாரண ஒரு பழைய துணியுடனா நீ செல்கிறாய்?

"கஷ்டம்! இப்படியும் ஆம்பளைங்க இருப்பாங்களா?'' குட்டி ராமண்ணன் தனக்குள் கவலைப்படுவதைப்போல கூறினார்.

பிஞ்சு மகள் என் தாயாரின் ஒரு பழைய துணியைப் போர்த்தியிருந்தாள். பாட்டியைப் பார்ப்பதற்குத்தானே அவள் வந்தாள்? அவளுக்கு அதிக விருப்பம் பாட்டியின் வாசனையாக இருக்கலாம். கடைசியாக அவளுடைய முகம், பாட்டியின் துணியால் மூடப்பட்டது. இறுதியாக அவள் ஒரு பழைய துணியை மட்டுமே கொண்டுசெல்கிறாள்.

சத்தமாக அழக்கூடிய மனைவியையும் அம்மாவையும் தங்கையையும் கண்டித்தவாறு குட்டி ராமண்ணன் அறையில் அங்குமிங்குமாக நடக்க ஆரம்பித்தார். அழ இயலாத நான் மட்டும் அறையைவிட்டு வெளியேறிச் சென்றேன்.

குட்டி ராமண்ணனின் தலைமையில் வெளுத்த துணியால் மூடப்பட்ட ஒரு சிறிய பொட்டலமாக, பிஞ்சு மகள் இறுதியாக வெளியேறினாள். பொட்டலத்தைக் குழிக்குள் படுக்கவைப்பதற்குமுன்பே, குழி தோண்டப்பட்டிருக்கும் இடத்திலிருந்து பொம்மைக் கல்யாணத்தின் மணமகனை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு முடிந்தவரைக்கும் முயற்சிசெய்தும்,

அவன் அசையவில்லை. சம்மதிக்கவில்லை.

இந்த வெளுத்த பொட்டலத்துடன் எவ்வளவு நேரம் வாசலிலேயே காத்து நின்றிருப்பது? இறுதியில் பலத்தைப் பயன்படுத்தித் தூக்கிக் கொண்டு வரவேண்டுமென்ற நிலை உண்டானது. அவனைத் தூக்கிக்கொண்டு வரலாமென சென்றபோது, குழிக்குள் இறங்கி மண்ணில் கவிழ்ந்து படுத்திருப்பதைப் பார்த்தேன்.

குட்டி ராமண்ணனும் அங்கு கூடியிருந்தவர்களும் இந்த காட்சியைப் பார்த்து திகைத்துப் போய் விட்டார்கள்.

குழியிலிருந்து அவனைத் தூக்கியபோது,

முழுமையாக வியர்வையில் மூழ்கிக் குளித்திருந்தான்.

மண்ணும் தூசியும் சேறும் படிந்திருந்த அவனுடைய கன்னத்தில், கண்ணீரின் தடிமனான அடையாளங்கள் தெரிந்தன. இறுதியாக குழிக்குள் வெளுத்த பொட்டலத்தைத் தாழ்த்தி இறக் கும்போதும், மூன்றரை வயதுள்ள அந்தச் சிறுவன் கைகளையும் கால்களையும் அடித்து ஆரவாரம் உண்டாக்கிக் கொண்டிருந்தான்.

மண்ணுக்குள் இறக்கப்பட்ட பொட்டலம் அவனுடைய முறைப்பெண் ஆயிற்றே! மண்வெட்டியிலிருந்து குழிக்குள் மண் விழுவதைக் கேட்டவாறு நான் ஒரு சிலையைப்போல வாசலில் அமர்ந்திருந்தேன்.

பொம்மை கல்யாணத்தில் பங்கேற்று தளர்ந்துபோன மணமகனை மார்போடு சேர்த்துப் பிடித்து வைத்தவாறு, அழ இயலாத நான் அவனைத் தேற்றுவதற்கு முயன்றாலும், அவனுடைய கண்ணீரையோ தேம்பலையோ தடுக்கமுடிய வில்லை. அந்த பிஞ்சு மனதின் தேம்பல்கள் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

மண்ணிலும் விண்ணிலும் நடக்க வாய்ப்பில்லாத பொம்மைக் கல்யாணத்தின் களிமண் மணமகளை நினைத்து அழக்கூடிய கோமாளிகளின் உலகமே இதுவென்று எனக்குத் தோன்றியது.

அனைத்தும் விளையாட்டு அதிபதியின் விருப்பப்படி நடக்கட்டும்!