அடைமழையில் தீபாவளி யையும், நடுங்கும் பனியில் பொங்கல் திருநாளையும் கொண்டாடிய இளம்பிராயம் என்னுடையது. அப்போவெல்லாம், தீபாவளி எப்போ வரும்? பொங்கல் நாள் எப்போ வரும்னு நாட்களை எண்ணிக் கொண்டிருப்போம்.
தீபாவளி நெருங்க நெருங்க ஊர்க் காற்றில் கந்தகப் புகை நாற்றம் கலக்கத் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக சத்தமும் புகையும் அதிகரித்து தீபாவளி அன்று எங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். யார் அதிக வெடி போடுகிறோம் என்பதில் போட்டி இருக்கும்.
ஆனால், பொங்கல் திருநாள் நெருங்குவதற்கான அடையாளம் வேறுமாதிரி இருக்கும். வீட்டுக் கூரைகள் பழுதுபார்க்கப்படும். சுவர்கள் சுண்ணாம்பு பூசிக் கொள்ளும். வீட்டுக்குள் தளம் பூசி மெழுகப்படும். புற்றுச் செம்மண் எடுத்து திண்ணைகளுக்கு வண்ணம் பூசப்படும். மாடுகளுக்கு லாடம் அடிப்பது, கொம்புகளைச் சீவுவது போன்ற வேலைகளும் நடக்கும்.
சிறுவர்கள் நாங்களோ எப்படா அரைப்பரீட்சை லீவு விடுவாங்க என்று காத்திருப்போம். லீவு விட்டதும், எங்கள் ஊர் அருகில் இருக்கிற கட்டியாரங் கரடுக்குக் கூட்டமாக கிளம்புவோம். பொங்கல் திருநாளுக்கு பயன் படுத்தும் கூரைப்பூ, ஆவாரம் பூ பறிப்போம். அவரவர் வசதிக்கு ஏற்ப இந்தச் சுமை கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். இந்தக் கரட்டுப் பயணம் ஆண்டுக்கு இரண்டு முறை நிச்சயமாக இருக்கும். கார்த்திகை மாதத்திலும் கரட்டுக்குப் போவோம். தீப்பந்தம் சுற்றுவதற்காக தரகம்புல், முஷ்டைக் கொடி ஆகியவற்றை அறுத்து வருவோம். அவற்றை வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்துவதே பெரிய வேலையாகச் செய்து கொண்டிருப்போம்.
வெறுமனே கூரைப்பூ, ஆவாரம்பூ, தரகம்புல்லுக்காக மட்டும் இந்தப் பயணத்தை நாங்கள் விரும்புவதில்லை. கூட்டமாக செல்வதில் கிடைக் கிற சந்தோஷம். அந்த சீசனில் கிடைக்கிற காராம்பழம், கடுக் காய்ப் பழம், சப்பாத்திக் கள்ளிப் பழங்கள் சாப்பிட கிடைக்கிற சந்தோஷம் என்று அது ஒரு ஜாலியான வேட்டைப் பயணமாக இருக்கும். காலையில் போனால் மதியம் சாப்பாடுகூட தேவைப்படாது.
இந்தப் பயணத்தில், ஆளாளுக்கு ஒரு ரகசிய சேமிப் பும் இருக்கும். சொட்டாங்கல் விளையாட அழகான கூழங் கற்கள், கடுக்காய் பழம், காராம் பழம் ஆகியவற்றை டவுசர் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டுவந்து அவரவருக்கு பிடித்த பெண் பிள்ளைகளுக்குக் கொடுப்போம். இதெல்லாம் அந்த வயதில் மிகப்பெரிய சாகசமாக இருக்கும்.
தை முதல் நாள் காலை அற்புதமாக இருக்கும். புகை மூட்டம்போல படர்ந்திருக்கும் பனிக்குள் ஆடு, மாடு, நாயுடன் ஊரணிக்குப் போவோம்.
அவற்றை குளிப்பாட்டும்போதே நாங்களும் ஊரணியில் குதியாட்டம் போட்டு குளித்து விடுவோம். பிறகு, ஆடு, மாடு களுக்கு வண்ணப் பொடியால் அலங்காரம் செய்வோம்.
வீட்டுக்கு வரும்போது, பொது மந்தையில் முத்தாளம்மனுக்கு பொங்கல் வைக்க மக்கள் கூடியிருப்பார்கள். அவரவர் வீட்டு வாசலிலும் தற்காலிக அடுப்புக்கூட்டி பொங்கல் வைக்க ரெடியாக இருப்பார்கள். இவ்வளவுதான் அன்றைக்கு. சந்தோஷம் வீட்டில் வைக்கிற சர்க்கரைப் பொங்கலை சாப்பிடுவதோடு முடிந்துவிடும்.
பொங்கல் திருநாளின் மிகப்பெரிய சந்தோஷமே அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுதான். ஒவ்வொரு கிராமத் திலும் கோவில் காளை இருக்கும். அந்தக் கோவில் காளையை பொங்கல் திருநாளுக்கு ஒரு வாரம் முன்பே மந்தையில் கட்டிப் போட்டுவிடுவார்கள். தினமும் மாலை நேரம் விசில் பறக் கும். தூணில் கட்டிய காளையை நெருங்கி வாலைத் தொடவும், திமிலைத் தொடவும் இளைஞர்கள் முயற்சிப்பார்கள். அடிக்கிற விசில் சத்தத்தில் மாடு ஆத்திரமாகி, அங்கும் இங்கும் பரபரத்து தன்னை யாரும் தொட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
இதெல்லாம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான ஒத்திகைதான். வாடி வாசலில் காளையைத் திறந்து விடும்போது காளை பயந்து விடக்கூடாது என்பதற்கான பயிற்சிதான் இது. நான் பார்த்த ஜல்லிக்கட்டு ரொம்ப சிம்பிளானது.
அதுதான் கிராமத்து பூர்வீக ஜல்லிக்கட்டு. வாடிவாசலில் இருந்து இருபுறமும் கொஞ்சதூரம்தான் மேடை அமைக்கப்பட்டிருக்கும்.
அப்புறம் வெறும் கட்டை வண்டி களே மேடையாக இருக்கும். வண்டி யில் நின்றபடியும், தரையில் நின்றபடியும்தான் காளைகள் வருவதை வேடிக்கை பார்ப்போம்.
வண்டியில் நின்று பார்த்திருக் கிறேன். பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு எங்கள் ஊர் காளையுடன் வாடிவாசல் வரை சென்று, காளை அவிழ்த்துவிடப் பட்டதும் எங்கள் ஊர் ஆட்களோடு வெளியேறுவோம். இடையில், அவிழ்த்துவிடப்படும் சிறிய காளைகளின் முதுகில் தட்டுவதில் கிடைக்கிற சந்தோஷம் இருக்கிறதே அது தனி ரகம். இப்போ வெல்லாம் மாடு பிடிக்கிறவுங்களைத் தவிர வேறு யாரும் காளையை பக்கத்திலிருந்து பாக்கவே முடியாது.
ஜல்லிக்கட்டு விளையாட்டே கார்பரேட் விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கிறது. வாடி வாசலில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளை, ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தைப் பிளந்து கொண்டு விரையும் அந்தக் காட்சி இனிக் காணக்கிடைக்காது. கட்டை வண்டியிலும், குட்டிப் பரண்களிலும் குடும்பத்தோடு அமர்ந்து வேடிக்கை பார்த்த அந்த ஜல்லிக்கட்டு இப்போது இல்லை. எல்லாம் பணமயமாகிவிட்டது. இரண்டடுக்கு மூன்றடுக்கு பரண்களை அமைத்து, விளம்பரதாரர் களின் ஸ்பான்ஸர்களுக்காக அலையும் விளையாட்டாக மாறிவிட்டது. ஊடக வெளிச்சம் ஜல்லிக்கட்டு விளையாட்டின் இயற்கைத் தன்மையை மீட்காமல், வெறும் பரபரப்பு விளையாட்டாக மாற்றிவிட்டது.
ஜல்லிக்கட்டு மட்டுமா இயல்புத் தன்மையை இழந்துவிட்டது. எங்கள் கிராமமும்தான் அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிட்டது. “""இதோ இருக்கு பாருங்க கட்டியாரங் கரடு இதுக்கு அடியில் மிகப்பெரிய நீர்த்தேக்கம் இருக்கு. அதுதான் இந்த ஊருக்கு தண்ணீர் டேங்க்'' என்று எனது பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்வார்.
அந்தக் கரடு எங்களின் பாதுகாப்பு அரணாக இருந்தது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது. கால்நடைகளின் மேய்ச்சல் காடாக இருந்தது. ஆனால், கரடு முழுவதையும் இப்போது தனியார் விலைக்கு வாங்கி செம்மண் குவாரி ஆக்கிவிட்டார்கள். அந்தக் கரடு இப்போது சிறுகச் சிறுக கரைந்து கொண்டி ருக்கிறது. மண் எடுக்கும் இடத்துக்கு அருகில்கூட கிராமத்தினர் நெருங்க முடியாத மர்மப்பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது. எங்கள் ஊரின் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. குடிநீருக்கே தட்டுப்பாடாகிக் கொண்டிருக்கிறது. எங்கள் ஊர் மக்களுக்கே தங்கள் சந்தோஷம் காணாமல் போனது பற்றிய உணர்வு இல்லை. எனது சிறுவயதில் கிடைத்த எந்தச் சந்தோஷமும் இன்றைய தலைமுறைக்கு கிடைக்கவே போவதில்லை என்பதை நினைக்கும்போது கண்கள் ஈரமாகின்றன.