ள்ளிரவு வேளையில் தாக மெடுத்து கண்விழித்தபோது, தன் படுக்கையில் சுருண்டுபடுத்து உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயதுக் காரியைப் பார்த்து பாட்டி ஆச்சரியப் பட்டாள்.

அவளைத்தட்டி எழுப்புவதற்கும் அவளுடைய புதிய கணவனிடம் திருப்பி அனுப்பி வைப்பதற்கும் பாட்டிக்கு மனம் வரவில்லை. ஆனால், தட்டி எழுப்பாமல் எப்படி இருக்கமுடியும்? அவள் அந்த இளம்பெண்ணின் கூந்தலில் விரலால் வருடியவாறு அழைத்தாள்: "அம்மூ....'' அம்மு கண்களைத் திறந்தாள்.

அவை சற்று அழுத கண்களாக இருந்தன. கலங்கிச் சிவந்த கண்கள்... பாட்டியின் இதயம் வேதனைப் பட்டது.

எனினும், அவள் கூறினாள்:

Advertisment

"அம்மூ... நீ அங்கு போ. அந்த ஆள் என்ன நினைப்பான்? எப்போதும் பாட்டியின் படுக்கையில் படுத்துக் கிடக்க முடியுமா?'' "நான் பாதி இரவு அங்கு இருந் தேன்ல?'' அம்மு கேட்டாள்: "இனி நான் உறங்க வேண்டாமா? திருமணம் நடந்த பிறகு தூங்கக்கூடாதா?''

ss

பாட்டி சிரித்தாள். அம்மு சுவரைப் பார்த்தவாறு திரும்பிப் படுத்தாள்.

"அந்த ஆள் என்ன நினைப்பான்?'' பாட்டி முணுமுணுத்தாள்.

"பாட்டி.... அம்மு அழைத்தாள்.

அவளுடைய குரல் சற்று இடறியது.

"என்ன?''

"நான் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந் தால், யாரும் என்னைத் திரு மணம்செய்து வைத்திருக்க மாட் டார்கள். அப்படித் தானே?''

"பெண் பிள்ளைகள் கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா?'' பாட்டி கேட்டாள்: "பெண் பிள்ளைகள் கொஞ்சம் படிச்சு, என்ன கிடைக்கப் போகுது?''

‌"நான் தேர்ச்சி பெற்றி ருந்தால், இப்போ திருமணம் நடந்திருக்காது.'' அம்மு கூறினாள்: "இன்னும் கொஞ்சம் நல்லா படிச் சிருக்கலாம்.''

அம்மு எழுந்து நின்று தன் காதிலும் கழுத்திலும் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி, அலமாரியைத் திறந்து அவை முழுவதையும் ஒரு இழுவைக்குள் வைத்தாள்.

தொடர்ந்து அணிந் திருந்த ஜரிகை போட்ட புடவையை அவிழ்த்து கட்டிலின் தலைப் பகுதியில் எறிந்தாள். சிறிதும் வளர்ச்சி தெரியாத ஒரு மெலிந்த சரீரத்தை அவள் கொண்டிருந்தாள்.

அவளின்மீது பாட்டிக்கு இரக்கம் உண்டானது.

ஆனால், அவள் கூறினாள்:

"அம்மூ.... அந்த ஆள் எதிர்பார்த்து காத்திருப் பான். நீ இங்கு படுத்து உறங்கினால், அவன் என்ன நினைப்பான்?''

அம்மு கட்டிலில் அமர்ந்து தன் முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டாள்.

‌‌"நான் இன்னும் கொஞ் சம் மனதைச் செலுத்தி படிச்சிருக்கணும்.'' அவள் முணுமுணுத்தாள்.

Advertisment

____________

மொழிபெயர்ப்பாளர் உரை

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த மலையாளச் சிறுகதைகளை நான் மொழி பெயர்த்திருக்கிறேன்.

மூன்று கதைகளுமே மாறுபட்ட கதைக் களங்களையும் வேறுபட்ட கதைக் கருக்களையும் கொண்டவை.

"நனைந்த சிறகுகள்' கதையை எழுதியவர்... மூத்த மலையாள எழுத்தாளரும், கேரள சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான உண்ணி கிருஷ்ணன் புதூர்.

இரு கிளிகளின் தெய்வீக காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கிளிகளை வைத்து இப்படியொரு அற்புதமான கதையை எழுத முடியுமா? வியக்கிறேன்.

இந்த கதை 1963-ஆம் வருடத்தில் எழுதப்பட்டது.

கோழிக்கோடு அகில இந்திய வானொலியில் இக்கதையை தன் குரலில் உண்ணிகிருஷ்ணன் புதூர் வாசிக்க, அதற்கு கேரளம் முழுவதும் பெரிய அளவில் வரவேற்பு!

தொடர்ந்து இக்கதை "மாத்ருபூமி' வார இதழில் அதே வருடத்தில் பிரசுரமானது.

சமீபகாலத்தில் நான் மொழிபெயர்த்த கதைகளிலேயே மிகச் சிறந்த கதை இதுதான்.

கதையின் இறுதிப் பகுதி இதை வாசிக்கும் அனைவரையும் கண் கலங்க வைக்கும் என்பது நிச்சயம்.

"தண்டனை' என்ற கதையை எழுதியவர்... மலையாள பெண் எழுத்தாளர் களின் அரசியும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக் குட்டி.

15 வயதில் திருமணமான ஒரு இளம்பெண்ணை மையமாக வைத்து எழுதப் பட்ட கதை.

தான் தேர்ச்சி பெற்றிருந்தால், தனக்கு திருமணம் நடந்திருக்காது என்று ஆழமாக சிந்திக்கும் அம்முவை 1968-ஆம் ஆண்டிலேயே கதாபாத்திரமாக படைத்த மாதவிக்குட்டியைப் பார்த்து நான் வியக்கிறேன்.

"பயம் விலகிய பக்கத்து வீட்டுக்காரர்' கதையை எழுதியவர்... மலையாள நவீன இலக்கியத்தின் சிற்பிகளில் ஒருவரும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான ஒ.வி. விஜயன். இந்த கதை ஒரு ஆழமான விஷயத்தை அடிநாதமாகக்கொண்டது.

கதையின் இறுதிப் பகுதி நம்மைச் சிந்தனையில் ஆழ்த்தும். அதுதான் ஒ.வி. விஜயனின் முத்திரை!

இந்த மூன்று கதைகளும் உங்களின் இதயங்களில் என்றும் வாழும்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மதிப்புமிக்க இலக்கிய மொழிபெயர்ப்பு படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதய நன்றி.

அன்புடன்,

சுரா