தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் 1953இல் வெளிவந்தது. அதுவரை தனிமனித மன உணர்வுகளையும், குடும்பச் சிக்கல்களையும், இல்லற ஏற்ற இறக்கங்களையும் வாழ்வியலாக வரையறை செய்த நாவல்கள் அதிகம் வெளிவந்தன. இச்சூழலில் மனிதனை வரலாற்றுச் சூழலுக்குள் வைத்து அவனின் வாழ்க்கைப் பாட்டை நுட்பமாக பதிவு செய்த முதல் நாவலாக பஞ்சும் பசியும் அமைந்தது.
தமிழ்நாட்டின் ஆகப்பெரும் இரு தொழில்கள் வேளாண்மையும், நெசவும்.
இவை ஆதித் தொழில்களும் கூட. விடுதலைக்குப் பின்னான முதல் பத்தாண்டுகளில் இந்தியாவில் தமிழ்நாட்டில் நேர்ந்த நெசவுத் தொழிலின் நலிவை சித்திரமாகத் தீட்டி விடுகிறார் தொ.மு.சி.
திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் தான் கதைக்களம். ஊரின் நடுவில் உள்ள அம்மன் சன்னதி. அதனைச் சுற்றி இருக்கும் நெசவாளர்களின் தெருக்களில் தான் கதை நிகழ்கிறது. ‘அம்மன் கோயில் சந்தியாகால மணியோசை கணகணத்து ஓய்ந்தது’ என்றுதான் நாவல் தொடங்குகிறது. அந்த அம்மன் நெசவாள மக்களின் குலதெய்வமான ‘லோகநாயகி அம்மன்’. ஆனால் அவளே கூட கட்டிக்கொள்ள நல்ல துணி இல்லாமல், கந்தலை அணிந்து மாற்றுத் துணிக்கு வழியற்று கிடக்கிறாள். நெசவாளரின் காவல் தெய்வத்துக்கே இதுதான் கதி.
இந்த கோயிலின் முன் மண்டபம்தான் மக்கள் சந்திப்பு மையம். அங்கே ‘வள்ளுவர் வாசகர் மன்றம்’ என்ற ஒன்று இருந்தது,. அதன் ஒரு பகுதியில் மூப்பனார் ஒருவரின் பெட்டிக் கடை. ஊர் வம்பு பேசுவோரின் ஓய்விடமாகவும், பிச்சைக்காரர் களின் புகலிடமாகவும், இராவிலே ரெங்காட்டம் நடைபெறும் இடமாகவும் அது திகழ்கிறது. மூப்பனாரின் பெட்டிக் கடைக்கடைக்கு வரும் நாளிதழ்கள், பத்திரிக்கைகள் வழி நாட்டு நடப்புகள் அலசப்படுகின்றன. உள்ளூர் நிலவரங்களும் அவ்வப்போது ஊர்க் கூட்டங்களும் இங்கேதான் நடைபெறு கின்றன.
அம்மன்கோயில் தர்மகர்த்தாவாக மைனர் முதலியார் என்றழைக்கப்படும் அருணாசலம் இருக்கிறார்.
அவர் நெசவாளரில் முதலாளி, பெரும் பணக்காரர். ஏழை பாழைகள் வயிற்றில் அடித்து, வட்டியைக் கறந்து, சொத்துக்களை அபகரித்து வாழ்பவர். அவரது தந்தையின் அசல் வாரிசு. கோயில் தர்மகர்த்தா என்பதைப் புகழுக்காக வைத்துள்ளாரேத் தவிர அம்மனுக்கு மாற்றுத் துணிக்குக் கூட வக்கில்லாமல்தான் வைத்துள்ளார். இது மக்கள் நடுவே பிரச்சனை ஆகிறது. தறிக்காரர்களில் முன்கை எடுப்பவராகவும், உரிமைக்குக் குரல் கொடுப்பவராகவும் திகழும் வடிவேல் முதலியார்தான் ஊர்க் கூட்டத்தில் நெசவானிகளுக்கு கூலி உயர்வையும், தர்மகர்த்தா மாற்றத் தையும் முன்வைக்கிறார், வேறு வழியின்றி கோயில் தர்மகர்த்தாவாக நல்ல மனிதரும் பக்தியாளருமான கைலாச முதலியார் தேர்வு செய்யப்படுகிறார். இதிலிருந்து பிரச்சினை உருவாகிறது.
கைலாச முதலியார் நெசவாளியாக இருந்து, உழைத்து, கடனை உடனை வாங்கி வீடு, நிலங்களை உருவாக்கி சிறுவியாபாரியானவர். சக நெசவாளிகளுக்கு உதவுவது, கூலி விவசாயத்தில் தாராளமாக நடந்து கொள்வது, நேர்மையாக வாழ்வது என்று இருப்பவர். அவரது மனைவி தங்கம்மாள். மகன்கள் சுப்ரமணியன் என்ற மணி, ஆறுமுகம்.
ஊரில் மட்டுமல்ல அப்பகுதியிலேயே பெரும் பணக்காரர் பெரிய முதலாளி என்ற தானுலிங்க முதலியார். துணி, நூல் ஏற்றுமதி, தேயிலை எஸ்டேட் இன்னும் பல தொழில்களை எல்லாவித வணிகக் கேடுகளோடும் நடத்தி வருபவர். அவரது வீடே அரண்மனை போல இருக்கும், ‘மங்கள பவனம்’.
ஆங்கிலேயர் காலத்தில் ‘ராவ்சாகிப்’ பட்டம் பெற்றவர். விடுதலை அடைந்ததும் அதைத் துறந்து ‘தேசியத் தியாகி’ ஆனவர். அவரது மனைவி தர்மம்மாள். மகன் சங்கர். மகள் கமலா.
மைனர் முதலியாரும் பெரிய முதலாளி தானுலிங்க முதலியாரும் கோவில் தர்மகர்த்தா இழப்பையும். நெசவாளிகள் ஒன்று கூடி கூலி உயர்வு கேட்டதையும் பொறுக்கமாட்டாமல் பொறுமுகிறார்கள். நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் கைலாச முதலியாரைப் பழி வாங்கத் துடித்துத் திட்டமிடுகிறார் கள்.
பெரிய முதலாளியின் மகன் சங்கர், மகள் கமலா, கைலாச முதலியாரின் மகன் மணி ஆகிய மூவரும் திருநெல்வேலியில் கல்லூரி படிப்பு படிக்கிறார்கள். ஒன்றாக ரயிலில் சென்று வருவதுடன் நெருங்கிய நட்பாகவும் உள்ளனர். சங்கர் பொதுநல நாட்டத்துடன் செயல்படுகிறான். கம்யூனிச நூல்களைப் படித்து லி இயக்கத்தோடு தொடர்பில் இருக்கிறான். எதையும் துணிவுடன் விவாதித்துப் போராடும் மனநிலை பெற்றவன். மணியோ படிப்பில் கெட்டிக்காரன். மற்ற விசயங்களில் ஈடுபாடில்லாத உள் ஒடுங்கிய நபராக இருக்கிறான். அவனது அறிவும் அழகும் கமலாவின் அழகும் செயல் துடிப்பும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதல் கொள்ளக் காரணமாகின்றன.
கைலாச முதலியார் பெரிய முதலாளியிடமும், மைனர் முதலியாரிடமும், பிறரிடமும் ரொக்கக் கடனும் நூல்க் கடனும் பெற்று வியாபாரம் செய்கிறார். கொஞ்சம் நிலம், நகை, வீடு என அமைத்துக் கொள்கிறார். அதேநேரம் குறுக்கு வழி, கள்ள வணிகம் இவற்றில் ஈடுபடாதவர். நெசவாளிகளுக்கும் கூலி சரியாகக் கொடுப்பவர். அவர் கோயில் தர்மகர்த்தா ஆனதும், நெசவாளிகள் கூலி உயர்வுக்கு ஆதரவளித்ததும் மைனர் முதலியார் பெரிய முதலாளி ஆகியோரைக் கோபம் கொள்ளச் செய்கிறது.
அமெரிக்கப் பஞ்சின் வருகை, ஏற்றுமதி இல்லா நிலை, நூல் விலை உயர்வு, துணி வியாபார வீழ்ச்சி ஆகியன காரணமாக துணி தேங்கி வியாபாரம் படுத்து விடுகிறது. இதனையே நம்பி இருந்த கைலாச முதலியார் போன்ற சிறு வணிகர்களும், அன்றாடம் நூல் வாங்கி, நூற்று கூலி பெற்று வாழும் தறியாளர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒத்துக்கொண்ட கூலி உயர்வை தரமறுத்து நெசவாளிகளை விரட்டி அடிக்கிறார் தானுலிங்க முதலியார். மைனர் முதலியார் இதனை வழி மொழிகிறார். கைலாச முதலியாரும் கடன் சுமையால் தறிக்காரர்களுக்கு உதவ முடியாத நிலை. முரண் முற்றுகிறது. பஞ்சமும் பசியும் பெருகி நிற்கிறது.
பெரிய முதலாளி தானுலிங்க முதலி கைலாசத்திடம் தனக்கு வர வேண்டிய கடனுக்காக விடாமல் தொல்லை தருகிறார். கையில் இருந்த பணம், மனைவியின் நகைகள், இருப்பிலுள்ள நூல், துணி எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறார். மைனர் முதலியாரும் தன் பங்கக்கு நெருக்குகிறார்.
வீடு அவரிடம் அடமானத் தில் இருக்கிறது. என்றா லும் பணம் கேட்டு தகாத முறையில் திட்டுகிறார்.
இந்நிலையில் கைலாச முதலியாரின் இளைய மகன் ஆறுமுகம் நோய்வாய்ப்படுகிறான். டாக்டர் வந்து சிகிச்சை செய்கிறார். டைபாய்டு ஜுரம். ஊசி மருந்து வாங்கக் கூட பணமில்லை. இருளப்பக் கோனாரின் உதவியில் மருந்து வருகிறது. அத்தருணத்தில் மைனர், கடனுக்காய் கைலாச முதலியாரை நெருக்கிச் செல்கிறார்.
டாக்டர் வரும் தருணம், மாடிக்குத் தன் தந்தையை அழைக்கச் சென்ற மணி, அலறி அடித்துப் படிக்கட்டில் விழுகிறான். மண்டை உடைந்து பெருங்காயம் உண்டாகி விடுகிறது. கைலாச முதலியார் தூக்கில் தொங்கி விடுகிறார்.
இளைய மகன் ஆறுமுகம் ஜுரம் ஜன்னி கண்டு இறந்து விடுகிறான். மூத்த மகன் மணி அப்பா தற்கொலையைப் பார்த்த அதிர்ச்சியில் விழுந்து தலை உடைந்து நினைவு தப்பி மருத்துவமனையில் இருக்கும் நிலை.
ஊரே கலவரப்படுகிறது. கைலாச முதலியாரின் தற்கொலையும், அவர் மகனின் சாவும் நெசவாளர்களை கலங்கடிக்கிறது. ஒன்று கூடுகிறார்கள். பெரிய முதலாளி மைனர் முதலியார் ஆகியோரின் அடாவடி அம்பலப்படுகிறது. சங்கர் தன் கருத்து நிலையாலும், நட்பினாலும் மணியின் குடும்பத்துக்குத் துணை செய்கிறான். இறப்புச் செலவுக்குப் பணம் தருகிறான்.
மணியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுகிறான். சங்கரும் கமலாவும் மணியைக் குணப்படுத்த முழு அளவில் ஈடுபடுகிறார் கள். மணி, கமலா காதலை வாழ்த்தி, திருமணத் துக்கு சங்கர் இசைவளிக்கிறான். அவனின் தாயாரும் உடன்படுகிறார். பெரிய முதலாளி தானுலிங்கமோ பெரும் எதிர்ப்பைக் காட்டி துவேஷம் கொள்கிறார்.
தந்தையின் தற்கொலை, தம்பியின் சாவு, காதலுக்கு எதிர்ப்பு, தீராக் கடன்கள் எனத் தன்னால் என்ன செய்ய இயலும் எனத் தன்னுள் புலம்பித் தவிக்கிறான் மணி. கொஞ்சம் சொத்து சுகம் இருந்தபோதே காதலை மறுத்து சினமுற்ற கமலாவின் அப்பா, இனி எப்படிச் சம்மதிப்பார்? கமலா கிடைக்கமாட்டாள் என்ற முடிவுக்கு வரும் மணி மருத்துவமனையிலிருந்தே இரவோடு இரவாக ஓடிப்போகிறான்.
இருளப்பக் கோனார்லிமாரியம்மாள் சிவகிரி ஜமீனில் விவசாயியாக இருந்து, கூலியாக மாறி, பஞ்ச நிலைமையில் மகன் வீரையாவுடன் மேற்கு மலைத் தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்றவர். அங்கு கொடுமைகளை அனுபவித்து, தன் மகனையும் தொலைத்தவர். கைலாச முதலியாரின் அன்பைப் பெற்று அவருடைய உதவியால் இங்கு வந்து வாழ்பவர். கைலாச முதலியார் இருந்தவரை அவருக்கு உதவியாக இருந்தவர் கைலாச முதலியார் தன் மகன் என்றேனும் வருவான் எனக் காத்திருக்கும் அவர்கள், மணி ஓடிப்போன பின்னால், வீட்டையும் மைனர் முதலியிடம் இழந்து நின்ற தங்கத்தை, தங்கள் குடிசையில் வைத்துப் பராமரிக்கிறார்கள்.
ஓடிப்போன மணி பாளையங்கோட்டையில் நண்பர்கள் அறைக்குச் சென்று பின் திருச்சிக்குச் செல்கிறான். அங்கு தன் நண்பனைப் பார்க்க முடியாமல் வேலைக்கு அலைந்து, பல இன்னல்களுக்கு ஆளாகிறான். வாழ்வின் துயர் மிக தருணங்களை அனுபவித்து உதிரியாகிறான். பின்னர் ‘மதுரையில் வேலைக்கு ஆள் எடுப்பு’ எனும் அறிவிப்பைக் காண்கிறான். மதுரை வருகிறான். நிர்கதியாகி பசி, பட்டினியில் உழல்கிறான். மிகக் கொடிய நிலைமையில் ஒரு தொழிலாளர் ஊர்வலத்தைப் பார்க்கிறான். அது நெசவாளர் தொடர்புடையது. பழைய நினைவுகள் உந்த ஊர்வலத்தில் செல்கிறான். பசி மயக்கத்தில் மயங்கி விழுகிறான் ஊர்வலத்தில் வந்தோர் காப்பாற்றித் தங்கள் தலைவர் ராஜுவிடம் ஒப்படைக்கிறார்கள். தொழிற்சங்க அலுவலகத்தில் தங்குகிறான். மணியின் படிப்பு, வாழ்க்கை எல்லாம் அறிந்த ராஜு அவனைத் தொழிற்சங்க இயக்கத்தில் பயிற்றுவிக்கிறான். மணி மிகு விரைவாக இயக்கவாதி ஆகிறான். போராட்டங்களில் முன் நிற்கிறான். வகுப்பு எடுக்கிறான். ராஜுவிடம் இருந்த இருளப்பக் கோனார்லி மாரியம்மா படத்தின் வழி காணாமல் போன வீரையாதான் ராஜு என அறிந்து ஆனந்தமடைகிறார்கள்.
கமலா, மணியின் பிரிவால் வாடி வதங்கி மிகவும் பாதிக்கப்படுகிறாள். சங்கர் அவளைத் தேற்றுகிறான். சங்கர் மணி தாயாருக்கு உதவியாக இருப்பதுடன், நெசவாளிகளின் வறுமை, சாவு, தொழில் நலிவு ஆகியவற்றுக்கு அரசும், அரசின் கொள்கைகளும்தான் காரணம் எனக்கூறி நெசவாளர் கள் ஒன்றுபட வலியுறுத்துகிறான். வடிவேல் முதலியார் தலைமையில் நெசவாளர்கள் ஒன்று கூடுகிறார்கள். பல இடங்களிலும் நடக்கும் போராட்டங்களை அறிகிறார்கள். இங்கும் போராட நாள் குறிக்கிறார்கள். போராட்டத்துக்கு வலு சேர்க்க ராஜுவைப் பேச அழைக்கிறார்கள். ராஜுவுடன் மணியும் வருகிறான். சங்கரும், ஊராரும் பரவசமடைகின்றனர். மணி, ராஜுதான் இருளப்பக் கோனாரின் மகன் வீரையா என்று சொல்ல… குதூகலம். சங்கர் மணியைக் காண கமலாவை அழைத்து வருகிறான், அங்கு வரும் தானுலிங்க முதலி சங்கரையும் கமலாவையும் திட்டி, கமலாவை அழைத்துப்போக முயல்கிறார். சங்கர் தன் அப்பாவைக் கடுமையாக எதிர்த்து சடண்டையிடுகிறான். உடன் இருந்தவர்கள் விலக்க, தானுலிங்க முதலியார் தலைகவிழ்ந்து வெளியேறுகிறார்.
மறுநாள் போராட்டப் பேரணியில் வடிவேல் முதலியார் முன்செல்ல அவருக்குப் பின்னாள் இளைஞர்கள் அணிவகுப்பில் ராஜு, மணி, சங்கர், கமலா முதலியோர் அணிவகுத்துச் செல்கிறது.
வேலை அல்லது நிவாரணம்”
நூல்கொடு அல்லது சோறுகொடு”
மக்கள் வயிற்றில் அடிக்காதே”
நாவல் நிறைவடைகிறது.
1950களில் தமிழ்நாட்டின் நெசவாளர்கள் பட்ட இன்னல் களின் இலக்கிய சாட்சி இந்நாவல். ‘நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ தறிபடுமோ’ என்பான் பாரதி. அந்தக் கைத்தறி நெசவாளர்கள் லி மானம் காக்கும் ஆடை தந்தவர்கள் அவமானப்பட்டுக் கூனிக் குறுகி நின்ற வரலாற்றின் பிழிவு. பசியும் பட்டினியும் தற்கொலைச்சாவும் கஞ்சித் தொட்டிகளும் கண்முன் நிற்கின்றன. 1952 வாக்கில் தமிழகத்தில் ஏற்பட்டப் பஞ்சமும் இம்மக்கள் வாழ்வில் விளையாடித் தீர்த்தது.
இந்நாவலின் பாத்திரப் படைப்புகள் அபாரம். ரகுநான் உயிரோவியங்களாகத் தீட்டி விடுகிறார். கைலாச முதலியார் தமிழ் வாழ்வின் அடையாளம். “கைலாச முதலியார் என்ற கடவுள் பக்தி மிகுந்த நெசவாளி. பதின்மூன்றாவது அத்தியாயத்தோடு அவருடைய வாழ்வும் முடிகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிடுகிறார்.
அவரைச் சாகடித்துவிட்டு, மறுதினமே என்னால் கதையை நடத்திச் செல்ல முடியவில்லை. அவருக்காக மூன்று தினங் கள் என்னுள்ளே நான் ‘துக்கம்’ கொண்டாடிய பின்னர் தான் என்னால் மீண்டும் பேனாவைத் தொட முடிந்தது” என்பார் ரகுநாதன். அவ்வளவு தூரம் தான் படைத்தக் கதாபாத்திரங்களோடு ஒன்றி இருந்தார்.
செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து வாழும் சங்கர் கருத்துக்களின் வழி அரசியல் மயமாகி தன் தந்தையையே எதிர்க்குமளவுக்கு நடக்கிறான். தன் படிப்பு, தன் வாழ்வு என்பதைத் தவிர ஏதும் அறியாத பிள்ளையாகி சிக்கல்களும் துன்பங்களும் நேரும்போது தந்தை தற்கொலையுண்டு, தம்பி நோவில் செத்து, வாழும் வீடு உட்பட எல்லாம் இழந்தத் தருணத்தில், பெற்ற தாயை நிராதரவாக விட்டு ஓடிப்போகிறான் மணி. வாழ்க்கை அனுபவங்கள் படிப்பினைகளாகி சமூக நடப்பை உணர்ந்து போராட்ட வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டு ஓர் இயக்கத் தலைவனாக மலர்ச்சி கொள்கிறான். தாலி கட்டி தன்னை உயர் நிலையில் வைத்திருந்தாலும் தன் கணவனின் அதிகாரப் பசியும் பணப்பித்தும் வெறுப்பைத் தர அவனின் செயல்களில் மனம் வருந்தி தன் பிள்ளைகள் பக்கம் சாய்வு கொள்கிறாள் தர்மாம்பாள்.
நிலவுடைமை, முதலாளியம் ஆகிய இரண்டின் கோரத் தாக்குதலையும் அனுபவித்த இருளப்ப கோனார் நன்றி உணர்வின் சிகரமாகிறார். வாழ்வையும் சமூகத்தையும் புரிந்து எதிர் நீச்சல் போட்டு நம்பிக்கையோடு மக்களைப் போராடத் தூண்டும் வடிவேல் முதலியார் நாவலின் எளிய முக்கியப் பங்கு வகிக்கிறார். சுப்பையா முதலியார் போன்ற பிழைப்பு வாதிகள் எல்லா காலத்துக்குமான சான்றுகளே நாவலின் ஒவ்வொரு நகர்விலும் மைனர் முதலியார், பெரிய முதாலாளி போன்ற தனி மனிதர் கொடுமைகள் மட்டும் காரணமல்ல, அரசும் அரசின் கொள்கைகளுமே நெசவாளர் வாழ்வின் கேடுகளுக்கு பொறுப்பு என்பதை உணர்த்தும் விதத்தில் நாவலின் அரசியல் முன்னிலை பெறுகிறது.
எல்லாவற்றையும் தாண்டி ரகுநாதனின் கலையியல் கருத்தியலாக மலரும் விதம் அருமை. அவரின் எழுதுகோல் விளையாடுகிறது. கவித்துவம் மிளிரும் நடை புதுமைப்பித்தன் போல் எள்ளல். மனித மனவோட்டங்களை நுட்பமாகச் சித்தரிக்கும் இலாவகம். கைலாச முதலியார் தூக்கில் தொங்குவதைப் பார்த்து கண்ணீர் சிந்தாமல் நாவலை வாசிக்க முடியாது. மதுரை வீதிகளில் எழுச்சியோடு செல்லும் செங்கொடிப் பேரணியில் சேர்ந்து நரம்புகள் புடைக்க முழக்கம் எழுப்பாமல் யாரும் தப்ப முடியாது.
கதைக்களமான அம்பாசமுத்திரத்தை ரகுநாதன் இப்படி அறிமுகம் செய்வார்:
“அம்பாசமுத்திரம் திருநெவ்வேவி ஜில்லாவில் தாமிரபரணி நதியின் தலைப் பகுதியிலுள்ள ஊர். ஊருக்கு தெற்கே அம்பாசமுத்திரத்துக்கும் கல்லிடைக் குறிச்சிக்கும் எல்லை கிழித்த மாதிரி ஸ்படிகத் தெளிவுகொண்ட தாமிரபரணி நதி ஓடிக் கொண்டிருக்கிறது. ஊருக்கு மேற்கே ஐந்தாறு மைல் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை மஞ்சு தழுவும் முகடுகளோடு அரண்வைத்து கோட்டைச் சுவர் மாதிரி வானளாவி நிற்கிறது. மலைத்தொடரின் அடிவாரத்தில், தமிழ் பிறந்த தென்னன் பொதிகைச் சாரலில் வெள்ளைக்கார பெரு முதளாலியான ஹார்வியின் பஞ்சாலை கொடிகட்டி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்டுச் சுதந்திரத்தின் அபிநயப் பாண்டிய குமாரனாக ஹார்வி தென்பாண்டி நாடு முழுவதிலும் கால் பரப்பி அந்தப் பகுதியின் பொருளாதாரத்தின் மீது பேராதிக்கம் செலுத்தி வருகிறான். ஹார்வி மில்லுக்கு மேலே மலைமீது முண்டந்துரை என்ற கீழணைப் பிராந்தியத்தில் பாபநாச ஜலமின்சார உற்பத்தி நிலையம் கொலுவீற்றிருக்கிறது. தாமிரபரணித் தாய் வாரி வழங்கும் மகா சக்தியான மின்சாரத்தைக் கூட அவளுடைய மக்கள் நெல்லை ஜில்லா வாசிகளுக்கு ஒரு வெள்ளையன்தான் தரகுக்காரனாக இருந்து வினியோகித்து வருகிறான். மின்சார நிலையத்துக்கு மேலாக பழைய நீலகண்டன் வசம் இருந்த இடத்தில் அப்பர்டாம் என்ற காரையார் அணைக்கட்டும், அணைக்கட்டினால் ஏறப் பட்ட ஆர்தர் ஹோப் ஏரியும் இருக்கின்றன”.(பக்.11லி12) நாவல் முழுக்க அரசியல் சமூக விமர்சனங்கள் மிகக் கூர்மையாகப் பதிவாகின்றன.
“வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருவதில்லை; சூழ்நிலைதான் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும்”(ப.178) இதன்படிதான் மணி தன்னையும் சமூகத்தையும் இறுதியில் உணர்ந்து கொள்கிறான்.
மணி தன் அனுபவம் வழியாகவே வாழ்வைக் கண்டடைகிறான். அவன் பட்டப் பாடுகள் சொல்லி மாளாது. “கடைசியில் அவனும் அந்த நகரங்களிலுள்ள ஏழைபாழைகளைப் போல், கூலி வேலை தேடியலைந்தான். அந்த பிழைப்புக்கும் ஆயிரம் போட்டி; அடிபிடி எனினும் ஊயிராசை அவனையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது. அவனும் ரயில், பஸ், பிரயாணிகளின் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிப் பிழைத்தான். பெட்டியடி டீ ஹோட்டல்களில் பத்துப்பாத்திரம் துலக்கி ஒரு வேளைப்பாட்டைக் கழித்தான், கை வண்டி இழுக்கத் துணையாளாகச் சென்றான்; துட்டுக் கிடைத்த வேளையில் வயிற்றைக் கழுவினான்; கிடைக்காத வேளையில் பட்டினி கிடந்தான்.”
“அவனுக்கு வாழ்க்கையே மரத்துப் போய்விட்டது. மாறிப் போய் விட்டது. அவன் கமலாவை மறந்தான்; எனினும் அவன் தன் சாண் வயிற்றை மட்டும் மறக்கவில்லை; மறக்க முடியவில்லை”. (ப.252)
தொ.மு.சி ரகுநாதன் ‘நாவல் பிறக்கிறது’ என்ற தலைப்பில் 13.08.1961 கல்கி இதழில் இந்நாவலை தான் எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் நாவலின் தோற்றத்தைச் சொல்லும்போது, “எனது நாவல் வாழ்க்கையிலிருந்தே பிறந்தது; வாழ்க்கையிலேயே வேரூன்றி நிற்பதன் காரணமாகத்தான் அதன் வலுவையும் வெற்றியையும் யாரும் அலட்சியப் படுத்த முடியவில்லை. எனது அரசியல் போக்கையும் இலக்கிய நோக்கையும் ஒப்புக் கொள்ளாதவர்களும் ஒதுங்கி நிற்பவர்களும்கூட அந்த நாவலின் கதாபாத்திரங்களின் வலுவையும் வனப்பையும் புறக் கணிக்க முடியவில்லை. அரை மனசு குறை மனசாகவேனும் அதை ஒப்புக் கொண்டாக வேண்டி நேர்ந்தது” என்பார் ரகுநாதன்.
ஆம். தமிழில் சோசலிச யதார்த்தவாதம் எனும் போராட்ட அழகியல் கோட்பாட்டின் கலை வடிவமே ‘பஞ்சும் பசியும்’ நாவல். இது ஒரு வகையில் வரலாற்று நாவலாகவும், மற்றொரு வகையில் அரசியல் நாவலாகவும் அறியப்பட்டது. ரகுநாதன் தனக்கே உரிய கலை அழகியல் கூறுகளையும், அக மனித உணர்வுகளையும் சேர்த்துப் பிணைத்தே நாவலை படைத்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தின் புதுத்தடம் பாய்ச்சியதன் காரணமாகவே, தமிழிலிருந்து அயல் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் நாவல் எனும் சிறப்பினை இது பெற்றது. செக்கோஸ்லாவாக்கியாவின் ‘செக்’ மொழியில் அறிஞர் கமில் சுவலபில் அவர்களால் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டது. முதல் பதிப்பிலேயே 50,000 பிரதிகள் விற்று சாதனைப் படைத்தது. தமிழிலும் பல பதிப்புகளைக் கண்டது.