அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.’
-என்ற வள்ளுவரின் இலக்கணப்படி, அறநெறி தவறாமலும், குற்றங்கள் பெருகாமலும், மான உணர்வு எனும் சுயமரியாதையோடும், துணிவோடும் இந்த தமிழ்நாட்டை ஐந்துமுறை அரசாண்ட மாண்புக்குரியவர், நம் முத்தமிழறிஞர் கலைஞர்.
1924 ஜூன் 3-ல் அஞ்சுகம் முத்துவேலர் தம்பதிகளின் அன்புப் பரிசாக, திருக்குவளையில் இருந்து தமிழர்களுக்குக் கிடைத்த தங்கப் புதையல் அவர்.
பெரியாரின் பாசறையிலும் அண்ணாவின் அரவணைப்பிலும் ஒளிப்பிழம்பாய் உருவான இனத் தலைவர் அவர்.
அவரது நூற்றாண்டு இந்த மாதம் தொடங்குகிறது என்று நினைக்கும்போதே மனதிற் குள் ஒரு திருவிழா சில்லிப்பாக நுழைகிறது. சகல கவலைகளையும் மறக்கடித்தபடி நமக்குள் மகிழ்ச்சி பிறக்கிறது. பூரிப்பும் பெருமித உணர்வும் உள்ளே பெருக்கெடுக்கிறது.
காரணம்-
இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல; வேறு எந்த நூற்றாண்டிலும் உலகம் சந்தித்திராத பன்முக ஆளுமை கொண்ட ஒரே தலைவராக கலைஞர் திகழ்ந்தார். அவர் எழுதாத, பேசாத, சிந்திக்காத துறைகளே இல்லை என்கிற அளவிற்கு இங்கே ஒரு மாபெரும் மக்களாட்சியை நடத்தியவர் அவர்.
தமிழ்நாட்டை ஐந்துமுறை ஆண்டி ருக்கிறார் என்பதோடு, அவர் தேர்தல் களத்தில் களமிறங்கிய 13 முறையும், மக்களால் வாக்களிக்கப்பட்டு அமோகமாக வெற்றிபெற்றவர். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர். தி.மு.க. என்னும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக அரை நூற்றாண்டுகள், அதை வழிநடத்தியவர். 75 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் கொண்ட முரசொலி இதழின் நெறியாளர். இவை எல்லாம் இதற்கு முன் எவருக்கும் இல்லாத வரலாறு.
அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதும் அவருடன் நெருங்கிப் பழகி, அவருடைய அன்புக்கும் அக்கறைக்கும் பாத்திரமானவர்களில் நாமும் இருந்தோம் என்பதும் பெரும் மன நிறைவை எனக்கு ஏற்படுத்துகிறது.
சான்றாண்மை- பொறையுடைமை- அறிவுக்கூர்மை- தமிழாய்ந்த புலமை நலம் -படைப்புத் திறம் - செயலாற்றல்- நிர்வாகத்திறன் -ஈடிலா உழைப்பு- இடையூறுகளை முறியடிக்கும் சாணக்கியம்- எதிரிகளையும் மன்னிக்கும் மாண்பு- இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யும் பேருள்ளம்- மறுமலர்ச்சிக்கான இயக்கம் - ஏழை பாளைகளுக்காகவே துடித்த ஈர இதயம்- நினைவாற்றலின் அறிவியல் அதிசயம் - முதுமையிலும் சோராத இளைமை வேகம்- சாதனைத் திறன்- என்று கலைஞரின் அடையாளங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவ்வளவு ஆளுமைப் பண்புகளைத் தன்னகத்தே வைத்திருந்த மாமனிதர் அவர்.
அவரது நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு ஏற்ப, கலைஞரின் மறுவடிவம் போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி இங்கே மலர்ந்திருப்பது காலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நல் வாய்ப்பாகும். எனவே, கலைஞரின் புகழையும் பெருமையையும் சாதனை வெளிச்சத்தையும் இந்த நூற்றாண்டு, மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் அசைபோட இருக்கிறது.
கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாட தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை நியமித்திருக்கிறது. அந்தக் குழு, இந்த மகத்தான விழாவை எப்படி எல்லாம் முன்னெடுக்கலாம் என்கிற திட்டங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறது.
கலைஞர் நூற்றாண்டை தமிழக அரசு மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்களும், தனியார் கல்லூரிகளும், தமிழகம் தழுவிய இலக்கிய அமைப்புகளும் கட்சி வேறுபாடுகள் கடந்து கொண்டாடவேண்டும். ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் உள்ளத்திலும் கலைஞரின் சிந்தனைகள் வீழ்படிவாகப் படிந்திடவேண்டும். ஏனெனில் கலைஞர் தி.மு.க.வினருக்காக மட்டும் உழைத்தவரல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் உயர, முன்னேற, ஓயாது பாடுபட்டவர்.
தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் அவர் பதித்த முத்திரைகள் இப்போதும் சுடர் வீசுகின்றன.
கலைஞரின் திட்டங்கள் நுழையாத ஊர்கள் என்று எதுவும் இருக்க முடியாது. கலைஞரால் எவ்வகையிலும் பயன் பெறாதவர்கள் என்று எவரையும் சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு அவரது சாதனைகளும், திட்டங்களும், அவை ஏற்படுத்திய பயன்களும் காற்றைப் போல் எல்லோருக்குள்ளும் நிறைந்திக்கின்றன.
தான் விதைத்த திட்டங்களாலும் தான் ஏற்படுத்திய சாதனைகளாலும் இப்போதும் பாமர மக்களை எல்லா இடங்களிலும் ஏந்திக்கொண்டிருக்கிறார் கலைஞர்.
*
ஊடக சுந்தந்திரத்தின் மீதும் அக்கறை கொண்ட கலைஞர், நக்கீரன் மீதும் என் மீதும் காட்டிய பேரன்பும் அக்கறையும் மறக்க முடியாதவை.
என் மீது பேரன்பு வைத்தும், நக்கீரன் பணிகளைப் பாராட்டியும் 2009 ஆம் ஆண்டிற்கான- சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை 2010-ல் மகிழ்வோடு எனக்கு வழங்கிச் சிறப் பித்தவர் கலைஞர்.
நக்கீரனுக்கு சோதனை வந்தபோதெல்லாம், ஒரு பத்திரிகையாளராக இதயம் துடித்துப்போனவர் கலைஞர். நக்கீரன் மீதான அடக்குமுறைகளை உடனுக்குடன் கண்டித்த பாதுகாப்பு அரண் அவர்.
அன்றைய ஜெ’ அரசின் அடக்குமுறையால், அச்சகத்தில் நக்கீரனை அச்சாக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, முரசொலி அச்சகத்தில் அதை அடித்துக் கொடுக்கச் செய்து, நக்கீரனின் சுமையை அவரும் சுமந்தார் என்பதை மறக்க முடியாது. அது நக்கீரன் பெற்ற பேறு.
அதுமட்டுமா? இரு மாநிலத் தூதர் என்கிற தகுதியை, இந்தியாவில் வேறு எந்த பத்திரிகையாளருக்கும் கிடைக்காத இந்தப் பெருமையை எனக்கு இரண்டு முறை கொடுத்தவர் கலைஞர். அந்த தருணங்கள் இப்போதும் மனதில் சுழல்கின்றன.
பணயக் கைதிகளாக பலரையும் வீரப்பன் பிடித்துவைத்த போதெல்லாம் அவர்களை மீட்கும் பொறுப்பை நக்கீரன் மீதான மதிப்பால் என்னிடம் ஒப்படைத்தவர் கலைஞர். குறிப்பாக கன்னட சூப்பர் ஸ்டாரான நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, அவரை மீட்க, நக்கீரனைத்தான் கலைஞர் பெரிதும் நம்பினார். முயற்சியில் இறங்கத்
தயங்கிய என்னை அவர்தான் இரு மாநில அரசுத் தூதுவராக வீரப்பன் காட்டுக்கு அனுப்பினார். காட்டுக்குச் செல்லும்போதும், தேவாரத்தின் போலீஸ் படையால் எனக்கு ஆபத்து வரலாம் என்று கணித்து, என் பாதுகாப்புக்கு துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பிய மனிதாபி அவர். அந்த முயற்சிகளில் கலைஞர் விரும்பியபடியே உயிரைப் பணயம் வைத்து செய்யவேண்டியதை வெற்றிகரமாகச் செய்து, அவரது பாராட்டைப் பெற்றேன்.
அதுபோல் 2012 ஜனவரியில், நக்கீரன் அலுவலகத் தைத் தகர்க்க வேண்டும் என்றும் என்னை ஒழிக்க வேண்டும் என்றும் அன்றைய முதல்வர் ஜெ’ போட்டு வைத்த சதித்திட்டத்தில் இருந்து, என்னைக் காப்பாற்றியவரும் கலைஞர்தான். இதை நக்கீரனில் வெளிவரும் என் ’போர்க்களம்’ தொடரிலும் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறேன்.
அன்று மட்டும் அன்று, என்னை நக்கீரன் அலுவலகத்தில் இருந்து தப்பிச்செல்லும் படி வலியுறுத்த வில்லை என்றால், இன்று நான் உயிரோடு உங்கள் முன் இப்படி எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். அந்த நன்றி உணர்வு எப்போதும் என் நெஞ்சத்தில் ஈரமாகவே இருக்கும்.
இப்படி எல்லா வகையிலும் நம் மனதில் நிலை கொண்டிருக்கும் மாமனிதரான கலைஞரின் நூற்றாண் டில், சில கருத்துக்களை நம் திராவிட முதல்வர் அன்புச் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
*
ஒரு காலத்தில் தி.மு.க. தெருத் தெருவாக கருத்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. திராவிட உணர்வில் ஊறிய பேச்சாளர்கள், தங்கள் உரைகளால் எல்லாத் திசையிலும் தீப்பொறி பறக்க வைத்தார்கள். திராவிட இயக்க எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் இதற்குத் தோதாக ஏடுகளில் எழுதிக்குவித்தும் மேடைகளில் முழங்கியும், மக்களின் உணர்வைக் கையில் எடுத்துக் கூர்தீட்டினார்கள். அங்கங்கே திராவிய இலக்கியங்கள் பரப்பட்டன . பகுத்தறிவுச் சிந்தனைகள் விதைக்கப்பட்டன. இன உணர்வும் மொழி உணர்வும் ஊட்டப்பட்டன. இதனால் மக்கள் மத்தியில் எழுச்சியும் புதுமை காணும் வேட்கையும் எழுந்தது.
அதுதான் இந்திக்கு எதிரான பெரும் போராட்டத்தை பேரெழுச்சியாய் இங்கே உருவாக்கி, டெல்லியைத் திகைக்க வைத்தது.
தமிழ்ப்புலவர்களும் ஆசிரியர்களும்கூட மாணவர்களின் உணர்வுகளைக் கூர்தீட்டினர். எங்கும் திராவிட மணம் கமழ்ந்தது. இப்படி எல்லாம் ஒரு காலத்தில் திராவிட இயக்க எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் செய்த சிந்தனைப் புரட்சிதான், மகத்தான மாற்றத்துக்கு நம் தமிழ்நாட்டைத் தயார் செய்தது. அதன் விளைவாகத்தான் 67-ல் தி.மு.க. முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தது.
அத்தகைய கருத்துப் புரட்சியை மீண்டும் கையில் எடுத்தாகவேண்டிய காலகட்டம் இது. இன்று நம் பெரியார் மண்ணிலேயே மதவாதம் கோலோச்ச முயல்கிறது. ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளுக்கு சிறகு வளர்க்கும் முயற்சிகள் நடக்கிறது. பாசிச பா.ஜ.க. இங்கே வலுவாக கிளைவிரிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, திராவிட இயக்கக் கருத்துக்களையும் சிந்தனைகளையும் மீண்டும் மக்களிடம் விதைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பு வேலியைக் கட்டும் வேலையில் இறங்கியாகவேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம்.
எனவே, திராவிட இயக்கப் படைப்பாளர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் செயல்படக் களம் அமைத்துக்கொடுக்கவேண்டும். அரசு நடத்தும் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் திராவிட இலக்கியம் பேசப்படவேண்டும். அரசு மேடைகளில் ஆபத்தான வலதுசாரிகளும் முகமூடி அணிந்த இந்துத்துவ ஆசாமிகளும் இடம்பெறாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பள்ளிப் பாடத் திட்டத்திலும் நூலகங்களிலும் திராவிட இயக்கச் சிந்தனைகளை விதைக்கும் படைப்புகள் இடம்பெற வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள்தான், கலைஞருக்கு நாம் செய்யும் மகத்தான மரியாதையாக இருக்கமுடியும். இதை அரசும் தமிழக முதல்வரும் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கலைஞரின் நூற்றாண்டு விழாக்களில், திராவிடச் சிந்தனைகள் ஒளிரட்டும். மதவாத சிந்தனைகளுக்கு எதிரான அதிர்வேட்டுகள் முழங்கட்டும். சுயமரியாதையும் சமத்துவமும் எங்கும் இனி கோலோச்சட்டும்.
-மகிழ்வும் நம்பிக்கையுமாக,
நக்கீரன்கோபால்