தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா, கடந்த 15 ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.v தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் 21 தமிழறிஞர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுகளை வழங்கி, பொன்னாடை அணிவித்து வாழ்த்திப் பாராட்டினார்.
இந்த விருதுடன், விருதுத் தொகையாக தலா இரண்டு லட்ச ரூபாயும், ஒரு பவுன் மதிப்பிலான தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
திருவள்ளுவர் விருது பெற்ற மு.மீனாட்சி சுந்தரனார்,
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவராகவும் இருந்தவர். 2009-ல், கர்நாடகாவின் அல்சூர் ஏரிக்கரையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை கலைஞர் திறந்துவைத்தபோது, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டவர் இவர். திருச்சிராப்பள்ளிக் காரரான அவர், திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சில நாட்கள் முன்னர் காலமானார். எனவே அவருக்கு பதில், அவர் துணைவியார் விருதைப்பெற்றுக் கொண்டது அனைவரையும் நெகிழவைத்தது.
பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து அரசியலில் செயல்பட்ட பழுத்த தேசியவாதியும், காங்கிரஸ்காரருமான சொல்லின் செல்வர் குமரி அனந்தனுக்கு, பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், பேச்சாற்றலும் மிக்க தமிழறிஞரான இவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் அரசியலில் தடம் பதித்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான விருது, திராவிட இயக்கத்தின் நடமாடும் பல்கலைக்கழகமான எழுத்தாளர் க.திருநாவுக்கரசுவுக்கு வழங்கப்பட்டது. நூற்றாண் டைக் கடந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தகவல்களை, விரல் நுனியில் வைத்திருக்கும் இவர், திராவிட இயக்கத்தின் கணினி என்று கலைஞரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகத் தான் வழக்கறிஞராக இருந்த காலத்திலிருந்து போராடிய தோடு, தான் நீதிபதியாக இருந்த காலத்திலும், சமூக நீதியுடன் தீர்ப்புகளை வழங்கிய பெருமைக்குரிய நீதியரசர் சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. திராவிட இயக்க மேடைகள் அனைத் துமே திறன்மிகு பேச்சாளர்களால் அலங்கரிக் கப்படுவது பேரறிஞர் அண்ணா காலந்தொட்டே தொடர்கிறது. அந்த வகையில் இலக்கிய நயத்தோடும், அரசியல் தெளிவோடும், செறிவான மேடைப்பேச்சால் தமிழர்களின் உள்ளங்கவர்ந்த பேச்சாளர் நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது முதல்வரால் வழங்கப்பட்டது.
தனது கவிதைகளால் சுதந்திரத் தீ மூட்டிய முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியின் பெருமை யைத் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதைத் தலையாய பணியாகக் கொண்டு, எழுத்தாலும் பேச்சாலும் பாரதியாரின் புகழ்பரப்பும் பாரதி கிருஷ்ணக்குமாருக்கு, மகாகவி பாரதி விருது வழங்கப்பட்டது.
அதேபோல், தனது கவிதைகளையே தமிழ் காக்கும் வாளாக ஏந்திய புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பெயரிலான விருது, திராவிடப் புலவர் செந்தலை கவுதமனுக்கு வழங்கப்பட்டது. இவர் புரட்சிக்கவிஞரின் கவிதைத் தமிழை எங்கனும் பரப்பி வருவதோடு, பேரறிஞர் அண்ணாவின் உரைகள் முழுதையும் தமிழுலகத்துக்குத் தொகுத்தளித்த பெருந்தகை ஆவார். அவர் சிறப்பிக்கப்பட்டது பெருஞ்சிறப்பாகும்.
முன்னாள் துணை வேந்தரும் சிறந்த சொற்பொழிவாளரும் ஆழ்ந்த அறிஞருமான மா.ராசேந்திரனுக்கு, முத்தமிழால் மூவாத்தமிழுக்கு அணி சேர்த்த கி.ஆ.பெ.விசுவநாதன் பெயரிலான விருது வழங்கப்பட்டது.
பட்டி மன்றத்தின் மூலமாக, தமிழகத்தின் பட்டிதொட்டியிலிருந்து, உலகெங்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தமிழின் இலக்கியச் செழுமையை எளிய பேச்சுத்தமிழில் கொண்டுசெல்லும் பணியில் திறம்படச் செயல்படும் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருது வழங்கப்பட்டது.
இன்றைய அரசியலில் இணையம் மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது. இணையத்தின் மூலம் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைத் தெளிவாக எடுத்துவைத்துவரும் சூரியா சேவியருக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்பட்டது.
இதழியல் துறையில் மிகவும் திறம்படச் செயலாற்றிவரும் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு, எங்கோ பிறந்து தமிழ் உணர்வாளராகவே வாழ்ந்த தமிழறிஞர் ஜி.யு.போப் பெயரிலான விருது வழங்கப்பட்டது. தொன்மைவாய்ந்த தமிழிசை குறித்த ஆய்வுகளை நடத்தி, தமிழிசையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் நா.மம்முதுவுக்கு சீறாப்புராணம் மூலம் தமிழை உய்வித்த உமறுப்புலவர் பெயரிலான விருது வழங்கப்பட்டது.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள், இலக்கியத்தில் ஆழ்ந்த ஞானமிக்கவர். இவரது மேடைப்பேச்சில் தமிழ் இலக்கிய அழகும், நெல்லைத் தமிழும் ஒருசேரக் கொஞ்சி விளையாடுவதைக் காணலாம். அரசியல் மேடைகளிலும் அதிரடிப் பேச்சுக்களை அரங்கேற்றியவர். அவருக்கு தமிழின் உயர்ந்த காப்பியப் புலவரான இளங்கோவடிகள் பெயரிலான விருது வழங்கப்பட்டது.
ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன், தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றி வருபவர். தேர்ந்த அறிஞர். சிந்தனையாளர். அவருக்கு மொழி ஞாயிறு பாவாணர் பெயரிலான விருது வழங்கப்பட்டது. தீக்கதிர் பத்திரிகை மூலமாக பொதுவுடமைச் சிந்தனையைப் பரப்பிவரும் பத்திரிகையாளர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர், கவிஞர், மதுக்கூர் ராமலிங்கத்துக்கு பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்த்த சிங்காரவேலர் பெயரிலான விருது வழங்கப்பட்டது.
ஆன்மீகச் சொற்பொழிவிலும், பட்டி மன்றங் களிலும், சமூக நல்லிணக்கத்துக்கான பல்வேறு நற்கருத்துக்களைப் பரப்பிவரும் சொல்வேந்தர் சுகி.சிவத்துக்கு தனித்தமிழுக்காக இயக்கம் கண்ட தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் விருது வழங்கப்பட்டது. வள்ளலாரின் நெறிநின்று செயல்படும் முனைவர் இரா.சஞ்சீவிராயருக்கு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெயரிலான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அயோத்திதாசர் சிந்தனைகளை நூலாக வெளிக் கொண்டுவந்து பரப்பிவரும், ஆய்வாளர் ஞான அலாய்சியஸுக்கு, தமிழன் - திராவிடன் என்ற இரண்டு சொற்களையும் முந்தைய நூற்றாண்டிலேயே அரசியல் களத்தில் பதிய வைத்த அயோத்திதாசப் பண்டிதர் விருது வழங்கப்பட்டது. கணினித் துறையில் முனைப்பாகச் செயல்படும் முனைவர் தனலட்சுமிக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதும் இந்த விழாவில் வழங்கப்பட்டது. இலக்கிய இதழ்களின் வரிசையில், தனி இடம் பிடித்த உயிர்மை இதழுக்கு, செய்தித்தாளை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டுசேர்த்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரிலான விருது வழங்கப்பட்டது. மலேசிய மண்ணில் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்துவரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு. தமிழ்த்தாய் பெயரிலான விருது வழங்கப்பட்டது.
தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிப் பேருரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “உங்களுக்கு வழங்கியதன் மூலமாக இந்த விருது பெருமை அடைகிறது. எனது கையால் வழங்கியதன் மூலமாக நானும் பெருமைப்படுகிறேன். தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள், அவர்களது படைப்புகளின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய தீரமிகு எழுத்தாளர்கள், கனல் தெறிக்கும் பேச்சாளர் கள், களம் கண்ட போராளிகள், ஆய்வு அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இந்த விருதுகளை இங்கே பெற்றுள்ளார் கள். வாழும் காலத்திலேயே தகுதிசால் தமிழ்த் தொண்டர்களைப் பாராட்டியது தமிழ்நாடு அரசு என்ற விருதை தமிழக அரசு அடைகிறது. இதுதான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
கொரோனா காலத்தில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதனை மனதில் வைத்துக்கொண்டு, ஐம்பது லட்சம் ரூபாயை தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.
இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளோம். அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசு சார்பில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை இங்கே வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்.” என்று பலத்த ஆரவாரத்துக்கு நடுவே அறிவித்தார். இந்த விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தமிழக அரசின் இந்த விருது விழா, தமிழறிஞர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உத்வேகம் தரும் வகையில் அமைந்திருந்தது.