நூற்றாண்டு தொடங்கும் நேரத்தில் கலைஞரின் கடந்த கால நிமிடங்களில் கொஞ்சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன இங்கே நாம் பகிரும் அவருடைய இரண்டு அந்தரங்கக் கடிதங்கள்.
தமிழாய்ந்த தமிழராக தமிழகத்தை ஐந்துமுறை ஆண்டவர் கலைஞர். இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆற்றல் கொண்ட அரசியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். நிர்வாகத்திறன் மிக்கவர். திரையுலகிலும் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்பியவர். இலக்கியம் படைப்பதிலும் வல்லவர். நிர்வாகத்திறன் மிக்கவர். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் தனது கம்பீரக் குரலால் அனைவரையும் வயப்படுத்தி வைத்திருந்த அரங்க நாயகர்.
தந்தை பெரியாரின் நம்பிக்கையையும் பேரறிஞர் அண்ணாவின் பேரன்பையும் பெற்றவர். திராவிட ஒளிப்பிழம்புகளான இவர்களின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய சுயமரியாதை நெறியாளர். 14 வயதிலேயே பொதுவாழ்வில் களமிறங்கி 94 வயது வரை ஏறத்தாழ 80 ஆண்டுகள் தன்னைத் தமிழ்ச் சமூகத்துக்காக சந்தனமாய்க் கரைத்துக் கொண்டவர்.
தனக்குப் பிறகும் தன்னுடைய ஒளிப்பிரவாகம் தொடர, முதல்வர் மு.க.ஸ்டாலினை படைத்துவிட்டுச் சென்றவர்... இப்படி அவரை வியந்துகொண்டே போகலாம். அப்படிப்பட்ட கலைஞர் தன் இளைமைப் பருவத்திலேயே எப்படிப்பட்ட தனித்தன்மையைக் கொண்டிருந்தார் என்பதற்கு இது ஒரு இனிய சான்று....
எதையும் வித்தியாசமாக முயன்று பார்க்கக்கூடியவர் கலைஞர். அந்த வகையில் தனது 21 ஆம் வயதில் ஈரோட்டில் தந்தை பெரியாரின் குடியரசு இதழில் பணியாற்றியபோது, தனது நண்பரான திருவாரூர் கு. தென்னனுக்கு குறும்பு கொப்பளிக்க, கலைஞர் எப்படிக் கடிதம் எழுதுகிறார் பாருங்கள்.
கடிதம்-1
இந்தக் கடிதத்தில் கலைஞர் எழுதி இருப்பது இதுதான்....
தோழர் தென்னன் அவர்களே! வணக்கம். தங்கள் உடல் நலத்தை அறிய ஆவல் மிகவும். ஈ.உ.ங. கடிதத்தில் விளக்கம் காணவும். 9.12.45-ல் குற்றாலம் உண்டா? என்பதை எழுதவும். எப்போதும் போல், அலட்சியம் வேண்டாம். ராமநாத அண்ணனுக்கும் ஸ்.ள்.ல்.யாகூப்புக்கும் வணக்கம் கூறவும். எல்லாவற்றுக்கும் பதில். வீட்டைப் பார்த்துக்கொள்ளவும். ப.ட.த?
மு.க.
அன்பு!
அதேபோல் 68 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தென்னனுக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதம்.
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர், எழுதிய இந்தக் கடிதம் மிக முக்கியமானது. மிக மிக உயர்ந்த இடத்தில் இருந்தபோதும், கலைஞர் தன்னை எவ்வளவு எளிமையாக வைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு இந்தக் கடிதம் சான்று.
இந்தக் கடிதத்தின் பின்னனி இதுதான்:
2008 டிசம்பரில் தமிழ்நாட்டின் முதல்வரான கலைஞரைப் பார்க்க அவரது நண்பரான தென்னன் கோபாலபுரம் வீட்டிற்கு வருகிறார், அப்போது ஏதோ ஒன்றிற்காக தென்னனை கலைஞர் கடிந்து கொள்கிறார். தென்னன் திருவாரூர் கிளம்பிச் சென்றுவிட்ட நிலையில், ’அடடா... நண்பனின் மனதைப் புண்படுத்திவிட்டோமே’ என்று கலைஞர் மனம் வருந்துகிறார். அவர் மனம் தென்னனைச் சுற்றியே வட்டமடிக்கிறது. தலைமைச் செயலகம் வந்து தனது இருக்கையில் அமர்கிறார் கலைஞர். உடனே தனது லெட்டர் பேடை எடுத்து, கடிதம் எழுத ஆரம்பிக்கி றார்...
கடிதம்-2
அன்புள்ள நண்பர் தென்னனுக்கு,
நீ சென்னையில் வீட்டுக்கு வந்தபோது, அன்று என்னைக் கப்பியிருந்த சோகத்திலும்-கோபத்திலும் உன்னை மனம் நோகச் சொன்ன வார்த்தைகளுக்காக வருந்துகிறேன்.
வழக்கம்போல் பொறுத்துக்கொள்க.
என்றும் உன் நண்பன்,
முக
-என்று மன்னிப்புக் கேட்பதுபோல் வருத்தம் தெரிவித்து எழுதி, அதில் தன் கைப்படவே தென்னனின் முகவரியையும் எழுதி அவருக்கு அனுப்புகிறார்.
ஒரு முதல்வராக இருந்தபோதும், அதற்குரிய அதிகாரப் பெருமிதம் எதுவும் இன்றி, கலைஞரைப்போல் நட்பைக் கொண்டாடியவர் எங்கேனும் இருப்பார்களா? என்றால் சந்தேகம்தான். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் வியப்பூட்டுகிறவராகவே திகழ்கிறார் கலைஞர்.
-நாடன்