"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.'

-இது உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நம் வான்புகழ் வள்ளுவர் வகுத்திருக்கும் இலக்கணம்.

நீதி தவறாமல் இருக்கவேண்டும். நன்மைகளைச் செய்ய வேண்டும். தன் பதவி மக்களுக்கு பயன்படும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால், அவர்களை இந்த உலகமே பாராட்டும் என்பது இந்தக் குறளின் பொருளாகும்.

Advertisment

ஆனால், இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துவருகிறார். அவர் நீதியை மதிப்பதில்லை. நன்மைகளையும் செய்வதில்லை. மக்கள் பயன்படும்படியும் நடப்பதில்லை. அதனால் அவரை இந்தத் தமிழ்கூறு நல்லுலகம் பாராட்டுவதற்கு பதில், கடும் விமர்சனங் களை வைத்து வருகிறது.

rr

கலைஞர் இருந்தபோதுகூட இவ்வளவு ஆபத்தான கவர்னர்கள் இருந்தது இல்லை. அதிலும் தற்போது இருக்கும் ஆர்.என்.ரவி என்கிற கவர்னர் பெரிதும் ஆபத்தானவர்.

காவல்துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர். அதனால் அவர் பணி ஓய்வுபெற்ற பிறகு, அவரை நாகாலாந்து, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராக, பிரதமர் மோடி உட்கார வைத்திருந்தார். அவர் ஏவிய வேலைகளை கனகச்சிதமாகச் செய்து, அவரின் மனம் கவர்ந்தவர் ஆனதால், அடுத்து அவரை கடந்த 2021 செப்டம்பர் 18-ல் தமிழக கவர்னராக மோடி நியமித்தார்.

அவரை நியமிப்ப தற்கு முன்பே, இங்குள்ள தி.மு.க. அரசுக்கு செக் வைக்கும்படி யான ஒரு கவர் னரை, டெல்- நியமிக்கப் போகிறது என்கிற தகவல், டெல்லியிலிருந்தே பரவியது.

இந்த செய்தி உண்மை என்பது போலவே கவர்னர் ரவி, தமிழக கவர்னராக வந்து உட்கார்ந்த நொடியில் இருந்தே தமிழக அரசுக் கும் தமிழக மக்களுக்கும் எதிரான தனது தர்பாரை நடத்த ஆரம்பித்து விட்டார். அதுதான் இப்போது, பெட்ரோல் குண்டு விவகாரத்தை தி.மு.க. அரசுக்கு எதிராகத் திருப்பும் அளவிற்கு முற்றிப்போய் இருக்கி றது.

இந்த பெட்ரோல் குண்டு விவகாரத்தைப் பார்ப்பதற்கு முன், தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் குறிப்பாக, முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரையும் கொந்தளிக்க வைத்திருக்கும் விவகாரத்தைப் பார்ப்போம்.

rr

100 வயதைக் கடந்திருக்கும் முதுபெரும் கம்யூனிசத் தலைவரும் சுதந்திரப்போராட்ட வீரருமான சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என்று பலதரப்பினரும் வேண்டுகோள் வைக்க, இதைத் தமிழக அரசு, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு மகிழ்வோடு பரிந்துரைத்தது.

இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக செனட்டும் சிண்டிகேட்டும் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னர் ரவிக்கு அனுப்பியது. தமிழக அரசின் கோப்புகளை மறுதலிப்பதுபோல், சங்கரய்யா தொடர் பான கோப்பினையும் அற்ப புத்தியால் நிராகரித்துவிட்டார் கவர்னர்.

இதுதான் அனைவரையும் கொதிப்படைய வைத்தது. இது தவறு என்று அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட தமிழகப் பிரமுகர்கள் குரல்கொடுத்தும், கவர்னர் ரவி கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை.

இதைப் பார்த்த உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, கவர்னரின் இந்த பிடிவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2 ஆம் தேதி, கவர்னர் ரவி தலைமையிலான காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். வெட்டிப் பிடிவாதவாதியான கவர்னரைக் கண்டித்து, மதுரையில் அவருக்குக் கருப்புக்கொடி காட்டப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அறிவித்தனர்.

இதன்பிறகாவது, கவர்னர் தன் பிடிவாதத்தைத் தளர்த்தினாரா? என் றால், இல்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற பாணியில், கொஞ்சமும் சங்கடப்படாமல் அதிகார மமதையைக் காட்டும் விதமாய் அந்த விழாவுக்கும் சென்று, மேலும் வெறுப்பைச் சம்பாதித்தார்.

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாய், அந்தப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 6 பேரில் 3 பேர் விழாவைப் புறக்கணித்தனர்.

இதேபோல் செனட் உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்கவில்லை. இதனால் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காற்று வாங்கின. இதுமட்டு மில்லாமல், கவர்னரிடம் பட்டம்பெற இருந்த உதவிப் பேராசிரியர் களான சுரேஷ், ரமேஷ் ராஜ் ஆகியோர், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்களாம்.

அதுமட்டுமா? இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மும்பை நிகர்நிலை பல்கலைக் கழக துணைவேந்தர் காமாட்சியோ, கவர்னர் மேடையில் இருக்கும் போதே "பெண்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில் மாதம்தோறும் அவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் திட்டம் பாராட் டுக்குரியது'' என்று, அரசைப் பாராட்டி, அவர் முகத்தை சுருங்க வைத்திருக்கிறார்.

எல்லா வகையிலும் பலத்த எதிர்ப்பை உணர்ந்த கவர்னர் ரவி, அந்த நிகழ்ச்சியில், பட்டமளிப்பு உரையை வழங்காமல், வெறும் கலந்துரையாடலோடு அங்கிருந்து கிளம்பிச்சென்றிருக்கிறார். இப்படி பெருந்தன்மை இல்லாமல் அற்பப் புத்தியோடு நடந்து கொண்டு, வரலாற்றில் மாறாத வடுவை ஏற்படுத்தி யிருக்கிறார் ஆர்.என்.ரவி.

இவரது வறட்டுப் பிடிவாதமும், முரட்டுப்போக்கும் எந்த அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு, அந்த பெட்ரோல் குண்டு விவகாரமே சாட்சி.

கடந்த மாதம் 25 ஆம் தேதி மதியம், ராஜ்பவன் முகப்பில் ஒரு மர்ம நபர், பெட்ரோல் குண்டை வீசிய தாகப் பிடிபட்டான். அவனை போலீசார் மடக்கி விசாரித்தபோது, அவன் பெயர் கருக்கா வினோத் என்பதும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அவன், ஏற்கனவே பா.ஜ.க. அலுவலகத்தின் மீது, இதேபோல் பெட்ரோல் குண்டு வீசி கைதாகி இருக்கிறான் என்கிற விபரம் தெரியவந்தது.

மனம் பிறழ்ந்தவன்போல் இருந்த அந்த வினோத், நீட் தேர்வு விவகாரத்தில் தன் எதிர்ப்பைக் காட்டவே, கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டை வீசியதாகத் தெரிவிக்க, அந்த செய்திகள் அப்போதே வெளிவந்தன.

இதையொட்டி, அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் கொண்டுபோய் அடைத்தார்கள். விவகாரம் இதோடு முடிந்திருக்கவேண்டும். ஆனால் கவர்னரோ, இந்த விவகாரத்தை, தேவையின்றி தி.மு.க. அரசுக்கு எதிரான அஸ்திரமாகக் கையில் எடுத்தார். இந்த சம்பவத்தை வைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை பலவிதத்திலும் புனையத் தொடங்கினார்.

Advertisment

ee

இதைத் தொடர்ந்து, கவர்னரின் துணைச்செயலாள ரான செங்கோட்டையன், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகாரைப் பரபரப்பாகக் கொடுத்தார். அந்தப் புகாரில்.....

= பெட்ரோல் குண்டுகளுடன் வந்த சில மர்ம நபர்கள் ராஜ்பவன் பிரதான நுழைவுவாயில் கேட் எண் 1-ன் வழியாக நுழைய முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்ததால் அவர்களால் ராஜ்பவனுக்குள் நுழைய முடியவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

= இருந்தாலும் ராஜ்பவனின் பிரதான நுழைவுவாசலில் முதல் குண்டு வீசப்பட்டது. அது பெரிய சத்தத்துடன் வெடித்தது.

ee

= மற்றொரு குண்டு வீசப்பட்டதில் ராஜ்பவன் பிரதான நுழைவு வாயில் பகுதி, சேதம் அடைந்தது.

-என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், கடந்த 2022 ஏப்ரல் 18 அன்று, கவர்னர் தரும புரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, அவர் தடி மற்றும் கற்களால் உடல்ரீதியாகத் தாக்கப் பட்டார் என்றும், இதுகுறித்து புகாரளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

-இந்தப் புகாரைப் பார்த்து காவல்துறையே திகைத்துப் போய்விட்டது. காரணம் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களை, மிகப் பொறுப்பான பதவியில் இருக்கும் கவர்னரே சொல்கிறாரே என்கிற திகைப்புதான் அவர்களுக்கு.

உடனே, 28-ஆம் தேதி, தமிழக காவல்துறை தலைவரான டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி. அருண், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உள்ளிட் டோர் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்து கவர்னரின் புகார்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.

அப்போது.... சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆதாரமாக வெளியிட்டு, அதில் நந்தனம் சிக்னலில் இருந்து அந்த கருக்கா வினோத் என்கிற நபர், ஒரு பிளாஸ்டிக் பையுடன் நடந்து வருவதையும், சென்னை சைதை நீதிமன்றம் அருகே, பெட்ரோல் குண்டுகளை தன் இடுப்பில் செருகிக்கொண்டு, பையைத் தூக்கி வீசிவிட்டு அவன் நடப்பதையும், அந்த குண்டுகளில் இரண்டை அவன், ராஜ்பவன் வாசல் பகுதியில் வீசுவதையும், அவை வெடிக்காமல் கீழேவிழுந்து உடைவதையும், உடனே அவனைக் காவலர்கள் மடக்கிப் பிடிப்பதையும் ஆதாரமாகக் காட்டிலி "ராஜ்பவனுக்குள் சிலர் வெடிகுண்டுகளுடன் நுழைய முயன்றார்கள்' என்று கவர்னர் மாளிகை சித்தரிக்க முயன்றதை, தவிடுபொடியாக்கினர்.

மேலும் ராஜ்பவனின் முன்பகுதி சேதமடைந்ததாக கவர்னர் தரப்பு சொன்னதிலும் கொஞ்சமும் உண்மை இல்லை என்பதை அப்பட்டமாக நிரூபித்தனர். ஆக அந்த பெட்ரோல் குண்டு விவகாரத்தில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கி, கவர்னர் மாளிகை கொடுத்த புகார், பொய்ப் புகார்தான் என்று நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்திவிட்டார்கள்.

அதேபோல், கடந்த ஆண்டு தருமபுர ஆதீன நிகழ்ச்சிக்கு கவர்னர் சென்றபோது, அவருக்கு வெறுமனே கறுப்புக் கொடி காட்ட சிலர் முயன்றதையும், அங்கே வேறு அசம்பாவிதங்கள் எதுவும் அரங்கேறவில்லை என்பதை யும் வீடியோ காட்சிகளின் மூலமே விளக்கினர். இருப் பினும் கருப்புக்கொடி காட்டியதற்காக அங்கே 73 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் உறுதி செய்தனர்.

ஆக, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் முறைப்படி காவல்துறை கவனித்து, உரிய நடவடிக்கையை எடுத்திருக் கிறது என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது. உண்மை இப்படி இருக்க, ஒரு பொறுப்புள்ள கவர்னரே தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் முழுக்க முழுக்கத் தவறாக சித்தரிக்க முயன்றது சரியா? என்கிற கேள்வி இப்போது மக்கள் மனதில் பெரிதாக எழுந்திருக்கிறது.

கவர்னர் இந்த விவகாரத்திலும் திட்டமிட்டு, உள் நோக்கத்துடன், தமிழக அரசுக்கு எதிராக செயல் பட்டிருக்கிறார் என்பது தெளிவாகி இருக்கிறது.

தமிழக கவர்னராக இவர் வந்ததிலிருந்து இவர் செய்த சாதனைகள் என்ன? அரசுக்கு எதிராக தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திவருவதுதான் அவரது பெரும் சாதனை!

ஏழுபேர் விடுதலையை முடிந்தவரை இழுத்தடித்து, மக்களின் எதிர்ப்பை கவர்னர் சந்தித்தார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் வைத்திருந்தார்.

gg

நம் மாநிலத்தின் பெயரை "தமிழ்நாடு' என்ற அழைக்கக் கூடாது என்றும், தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் தன் அறிவுத் தெளிவைக் காட்டி மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தார். பட்ஜெட் உரையில் தமிழகம் என்று வாசிக்கமறுத்து, முதல்வரின் கடும் எதிர்ப்பால், மிரண்டுபோய், சட்டசபையில் இருந்து ஓடாத குறையாக வெளியேறினார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு அனுமதி யளித்த கவர்னர், அதன் சட்ட வடிவத்திற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார். அவரது சந்தேகங்களுக்கு சட்ட அமைச்சரான ரகுபதி நேரில் போய் விளக்கம் கொடுத்த பிறகும், அதைத் திருப்பியனுப்பி, தன் அழிச்சாட்டியத் தைக் காட்டினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான தேடுதல் குழுவைத் தன்னிச்சையாக நியமித்து, அதிலும் மூக்குடை பட்டார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கான கோப்புகளையும் விடாப்பிடியாக நிறுத்தி வைத்திருக்கிறார் கவர்னர். இப்படியாக, தமிழக அரசின் 25-க்கும் மேற்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டுவைத்து, இயன்றவரை இடைஞ்சல் தருவதைத் தனது கடமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் கவர்னர்.

இதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதவியை பறிப்பதாக தன்னிச்சையாக அறிவித்து, அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இப்படி அவரது எதிர் மறை நிலைப்பாடுகள் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதுமட்டுமல்லாது.... தமிழகத்துக்கு எதிரான விஷமக் கருத்துக்களைப் பரப்புவதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் கவர்னர்.

குறிப்பாக, உலகப்பொதுமறையாக திருக் குறளை, ஆன்மீக நூல் என்றும், ஜி.யு.போப் போன்ற ஆங்கிலேயர்கள் அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டார் கள் என்றும் திருவாய் மலர்ந்தார். இதனால் தமிழ் அறிஞர்கள் கொடுத்த பதிலடியையும் வாங்கிக்கட்டிக் கொண்டார்.

சனாதனமே தமிழர்களின் ஆதிக்கொள்கை என்றார்.

வடலூர் வள்ளலாரை ஒரு சனாதனி என்று தன் போக்கில் அறிவித்தார். அதேபோல், அண்மையில், திராவிடம் என்ற ஒன்றே இல்லை. அது கற்பனை என்று திருவாய் மலர்ந்து பலரது விமர்சனத்தையும், கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார்.

இப்படி எல்லா வகையிலும் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் எதிர்மாறான நிலைப்பாட்டையே எடுத்து வரும் கவர்னரால், கவர்னர் மாளிகையான ராஜ்பவன், மக்களிடம் இருந்து விலகி தனித்தீவாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் மசோதாக்களை எல்லாம் கையெழுத்திடாமல் நிறுத்திவைக்கும் கவர்னருக்கு எதிராக, தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கைத் தொடுத்திருக்கிறது. அதில், "ஆளுநர் ஆர்.என். ரவி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் அரசாங்க உத்தரவுகளை பரிசீலிக்க ஒரு காலக்கெடுவினை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும்? என ஒட்டு மொத்த இந்தியாவும் கவனிக்கத் தொடங்கி இருக்கிறது.

அதே எதிர்பார்ப்போடு நாமும்,

நக்கீரன்கோபால்