இருமல் சத்தத்தைக் கேட்டு எல்லாரும் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். வடக்குதிசை வாசல் திடீரென்று பேரமைதியில் மூழ்கியது.
வேலியின் மேற்பகுதி வழியாக காலைத் தூக்கி வைத்தன் காரணமாக இருக்கவேண்டும்- கிழவர் நின்று மேல்மூச்சு கீழ்மூச்சுவிட்டார்.
""கஷ்டம்!'' தாய் யாரிடம் என்றில்லாமல் கூறினாள்: ""என்ன நடந்திருக்குன்னுகூட அவரால புரிஞ்சிக்க முடியல.''
பிரசவம் பார்க்கும் கிழவி பரிதாபப்பட்டாள்.
""யார் செத்தா என்ன? சுய உணர்வு இல்லைன்னா கவலைப்பட வேண்டியதே இல்லைன்னு இதைத்தான் சொல்றாங்களோ?''
மூத்த அக்காள் கூறினாள்: ""தந்தியைப் படிக்கறத கேட்டப்பவும் இதே மாதிரிதான் இந்திருப்பார்போல...''
தாய் நீண்ட பெருமூச்சு விட்டாள்: ""எது எப்படியோ... ஆசானின் பிள்ளைகள்ல இந்த அளவுக்கு சாமர்த்தியம் மூத்த ரெண்டு பேருக்குமில்ல.''
தாங்க முடியாமல் பத்ரா அங்கிருந்து எழுந்தாள். பாவாடையின் சுருக்கங்களை சரிசெய்தவாறு, அரைச்சுவரின்மீது சென்று அமர்ந்து, வெளியே... வெயிலைப் பார்த்தாள்.
வாரியர் ஆசான் மேலும் ஒன்றிரண்டு அடிகள் நடந்தார். கிழக்கிலிருந்து புலர்காலைப் பொழுது வெயிலின் கைகள் அவர்மீது விழுந்து ஒரு மெலிந்த நிழலை மண்ணில் வரைந்தன. தோளிலிருந்த குடையும் சேர்ந்தபோது, நிழலுக்கு தண்டு ஒடிந்த ஒரு செடியின் தோற்றம் கிடைத்தது.
பின்னால்... கிழவி கூறுவது காதில் விழுந்தது: ""எது எப்படி இருந்தாலும்... சொந்த மகன் இறந்துட்டது தெரிஞ்சும் அதுக்கு அடுத்த நாள் பாடம் சொல்லித் தர்றதுக்கு வர்றதா சொன்னா...''
அக்காள் கூறினாள்:
""அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கக்கூடிய சக்தி கிடையாது, பாட்டி. பிறகு... எதுக்கு? காலையில இங்க வந்தா, இட்லி கிடைக்குமேங்குற உணர்விருப்பதால வர்றார். அவ்வளவுதான்.''
""இப்போதும் பாடம் சொல்லித்தர்ற விஷயத்தில எந்தவித மறதியும் இருக்காதா?''
தாய் பதில் கூறினாள்:
""அதுதானே அதிசயம்! எனக்கு கத்துக்கொடுத்தார்... இப்போ... இதோ.. பத்ராவையும் படிக்க வைக்கிறார். அந்த விஷயத்தில மட்டும் எந்தவொரு ஞாபக மறதியும் இல்ல.''
அவர் மிகவும் கவனமாக படிகளில் ஏறி, வாசலில் முதலில் பார்த்த நாற்காலியில் அமர்ந்தார். தொடர்ந்து சிரமப்பட்டு கால்கள் இரண்டையும் மடக்கி நாற்காலியிலேயே வைத்தார். கண்களை மூடி, தூங்க ஆரம்பித்தார்.
""பத்ரா!'' தாய் அழைத்துக் கூறினாள்: ""இட்லியைக் கொண்டு போய்க்கொடு.''
அது காதுகளில் விழாததைப்போல அவள் காட்டிக்கொண்டாள்.
அக்கா எழுந்து நின்று தலைமுடியைக் கட்டினாள்.
""கடைசி காலத்தில விசாரிக்கறதுக்கு அந்தப் பையனாவது இருக்கான்னுதான் எல்லாரும் நினைச் சாங்க.''
""பத்ரா...'' தாய் மீண்டும் அழைத்தாள்.
அங்கு எந்த இடத்திலும் பத்ராவைக் காணவில்லை.
""இந்தப் பொண்ணு எங்க போய்ட்டா?''
பத்ரா வாசலுக்குச் சென்றிருந்தாள். அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டு நிற்பதற்குக்கூட அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. வாசலில் ஒரு பெரிய கொன்றை மரம் பூத்து நின்றுகொண்டிருந்தது. மே மாதத்தின் காற்று வாசல் முழுவதும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
அவளுடைய இரண்டு வகுப்பிற்கு மேலே அவன் படித்துக்கொண்டிருந்தான். ஆறாவது வகுப்பில் வெற்றிபெற்று, "க்ளாஸ்' கையில் இருந்தாலும், இரண்டு வருடங்கள் சுருக்கெழுத்தையும் தட்டச்சையும் கற்றான். இறுதியில் கடந்த மாதம்... பணி தேடி கல்கத்தாவிற்குச் சென்றான். நேற்று தந்தி கிடைத்தது: "மணிக்குட்டனுக்கு ரயில் நிலையத்தில் ஒரு விபத்து உண்டாகி இறந்துவிட்டான்.'
இன்று காலையிலும் படிப்பு கற்றுத் தருவதற்காக வந்திருக்கிறார்- தந்தையாக இருந்தாலும்கூட! இல்லை... அவள் வெறுப்புடன் உதட்டைக் கடித்தாள்: "பேராசை பிடித்தவர்... பேராசை பிடித்தவர்... காப்பி பருகுவதற்காக வந்திருக்கும் பேராசை பிடித்தவர்...'
தாய் அரைச்சுவருக்கு அருகில் வந்து நின்று கொண்டு கேட்டாள்: ""அடியே... நீ எதுக்காக இங்க வந்திருக்கே?''
""எதுக்குமில்ல...''
""அப்படின்னா... காப்பியைக் கொண்டுவந்து ஆசானுக்கு கொடுக்கக் கூடாதா?''
""என்னால இப்போ முடியாது.'' அவள் முணு முணுத்தாள்.
காரணம் என்னவென்று தெரியாமல் தாய் திகைப்புடன் பார்த்தாள். தினமும் படிப்பதில்தான் என்ன உற்சாகம்! ஒரே மாதத்தில் சித்த ரூபமும், அமரகோசமும் முடிந்துவிட்டன. காவியத்தில் ஐந்தோ ஆறோ பகுதிகள் இருக்கின்றன. இன்று ஏன் இப்படி?
தாய் அக்காவிடம் கூறுவது காதில் விழுந்தது:
""அப்படின்னா... நீ போய் காப்பியை கொடு. காலையில இருந்தே எல்லார்கிட்டயும் அவளுக்குக் கோபம்.''
எதுவுமே கேட்காதைப்போல பத்ரா காட்டிக் கொண்டாள். கொன்றை மலர்களின் நிழலுக்கு நடந்துசென்றாள். இந்த உணர்ச்சி வேறுபாட்டை யாரும் பார்க்காமலிருந்தால்...? தலைக்கு மேலே பூவிதழ்கள் சிதிறி விழுந்தன.. மண்ணில் மிகவும் நீளமாக "ப்ராக்கெட்கள்'போல கொன்றை மலர்களின் இதழ்கள் விழுந்து கிடந்தன.
முன்பு ஒரு புலர்காலைப் பொழுது வேளையில்... மிகவும் பனி படர்ந்திருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்... அவள் கண்விழித்து வந்தவுடன் மண்ணில் அமர்ந்து இதழ்களைக் கோர்த்து மாலை உண்டாக்கிக் கொண்டிருந்தாள். மிகவும் இளம்வயதிலிருந்தே விருப்பமுள்ள ஒரு பொழுதுபோக்கக் கூடிய விஷயமாக அது இருந்தது. ப்ராக்கெட்டுகளைப்போல இருந்த இதழ்களை மேலும் சற்று வளைத்து இரண்டு முனைகளையும் ஒன்று சேர்க்கவேண்டும். பிறகு... அந்த மோதிர வளையத்திற்குள் அடுத்த இதழை நுழைக்கவேண்டும்.
ரவிக்கைக்குள் சமீப காலத்தில்தான் அணிய ஆரம்பித்திருந்த தோள் பட்டைகள் இடம் மாறிக் கிடந்தன. உறக்கத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். தன்னுடைய சரீரத்தில் சமீபகாலமாக உண்டாகிக் கொண்டிருக்கும் மாறுதல்களைப் பற்றித்தான் முழு சிந்தனையும் இருந்தது. விரல்கள் இயந்திரத்தனமாக அசைந்துகொண்டிருந்தன. கையில் மாலையின் நீளம், அறியாமலே அதிகரித்துக்கொண்டு வந்தது. அத்துடன் கிழக்கு திசையிலிருந்து இலைகளுக்கு மத்தியில் சாய்ந்து விழுந்துகொண்டிருந்த நிழல் களுடையதும்...
செம்பருத்திச் செடிகள் படர்ந்து நின்று கொண்டிருக்கும் வடக்கு திசையிலிருந்து அவன் வந்தான். கையிலிருந்த ஓலையாலான தட்டு முழுவதும் செம்பருத்திப் பூக்கள்...
வயதிற்கு வந்தபிறகு முதன்முறையாகப் பேசுகிறான்: "மாலை கோக்கிறியா?'
தலையை உயர்த்தினாள். அப்போது வெளியே நழுவி விழுந்த பட்டைகளைப் பற்றி ஞாபகம் வந்தது. வெட்கப்பட்டு முகத்தை குனிந்து கொண்டாள்.
அவன் நான்கு பக்கங்களிலும் பார்த்தவாறு ஒரு குறும்புத்தனத்துடன் கேட்டான்: "இந்த மாலை யாருக்கு?'
முன்பகுதியில் யாருமில்லை. சமையலறையிலிருந்து தாயின் பேச்சும், தோசையின் வாசனையும் வெளியே வந்தன.
"தீர்மானிக்கல...' அவள் எங்கும் பார்க்காமல் கூறினாள். கை நடுங்கியது.
ஒரு கொன்றை மலர் இதழ் எவ்வளவு முயற்சித்தும், இணைக்க ஒத்துழைக்கவில்லை.
"எனக்குத் தருவியா?'
அவளுக்குக் கோபம் வர ஆரம்பித்தது: "கோவில்வாசிதானே? தந்தாலும் கொண்டுபோய் அம்மனுக்கு சாத்திடுவீங்க.'
"இல்லை.'
கோபத்துடன் பார்த்த தைரியத்தின் ஒரு அடையாளம்...
"தரமாட்டேன்.' அவள் தீர்மானமாகக் கூறினாள்: "உங்களுக்கு என்ன உடல் நலக்கேடு?'
அவன் பயந்துவிட்டான். பூத்தட்டை எடுத்துக்கொண்டு சோர்வுடன் படியைக் கடந்து செல்லும்... ஒரு மடிப்பு வேட்டியை மட்டும் அணிந் திருந்த... மெலிந்த உருவத்தைப் பார்த்தவாறு அமர்ந் திருந்தாள். தட்டிலிருந்து உதிர்ந்த மலர்கள் கீழே விழுந்துகொண்டிருந்தன.
முழங்காலில் கன்னத்தை வைத்தபோது, அறியாமலே கண்ணிமைகள் கண்ணீரில் நனைந்தன. அவ்வாறு கூறியிருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. கையிலிருந்த மாலையை உள்ளங்கையில் மடக்கிவைத்து, கசக்கி... தூள் தூளாக்கினாள். துகள்களைச் சிதறவிட்டு எறிந்தாள்.
மறுவாரம் அவன் கல்கத்தாவிற்குச் சென்று விட்டதாகக் கேள்விப்பட்டாள்.
""பத்ரா!'' பின்னாலிருந்து அக்காள் அழைத்தாள்: ""காப்பி குடிச்சி முடிச்சிட்டார். உன்னை வந்து உட்காரும்படி சொன்னார்.''
உலகத்தின்மீது முழுமையான வெறுப்பு உண்டானது. அதற்கான காரணம் தெரியவில்லை. அலமாரியிலிருந்து புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் தேடி எடுக்கும்போது ஆச்சரியப்பட்டாள்.
ஏன் தனக்கு இந்த அளவுக்கு அமைதியற்ற நிலை!
தரையில் விரிக்கப்பட்டிருந்த புல்லாலான பாயில் ரகுவம்சத்தை விரித்து அமர்ந்தபோது, வெறுமனே ஆசைப்பட்டாள்.
அவனைப் பற்றி ஏதாவது கூறுவாரா? எப்படி இறந்தான் என்பதைக் கூறுவாரா?
அவள் ஆர்வத்துடன் அவருடைய முகத்தைப் பார்த்தாள்.
ஆசான் பலமுறை தலையை சொறிந்தார். நரைத்த சிறு முடிகளுக்கு மத்தியில் சத்தத்துடன் வருடினார். தொடர்ந்து எந்த காரணமுமில்லாமல் எதையோ நினைத்துக்கொண்டு முணுமுணுக்க ஆரம்பித்தார்.
அவள் சுவாசத்தை அடக்கிக்கொண்டு காத்திருந்தாள்.
""அப்படி... அவனும் போய்ட்டான்'' என்று ஒரு வாக்கியத்தையாவது கூறியிருந்தால்...! அவனைக் குறிப்பிட்டு ஒரு ஆளாவது கவலைப்படுவதாகத் தெரிந்தால் ஒரு நிம்மதியாவது கிடைத்திருக்கும். தாயும் சகோதரிகளும்... யாருமே இல்லாத ஒரு ஆள் இறந்தால், தந்தைதானே கவலைப்படவேண்டும்?
ஆசான் என்னவோ கூறுவதற்காக தொண்டையை சரிப்படுத்தினார். குரல் தெளிவில்லாமல் இருந்ததால், அவள் காதுகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டு காத்திருந்தாள். இறுதியில் வார்த்தைகள் தடுமாறிய வாறு வெளியே வந்தன. ""சொல்லு... இன்னிக்கு ஏழாவது அத்தியாயத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.''
கண்களில் வெறுமனே நீர் அரும்பியது. புத்தகத்தை நோக்கி குனிந்து, அலட்சியமாக தாள்களைப் புரட்டுவதற்கு மட்டுமே முடிந்தது. இல்லை... யாருமில்லை.
எந்த பக்கத்தை எடுக்கவேண்டுமென்பதையும், எந்த சுலோகத்தைக் கூறவேண்டுமென்பதையும்... அனைத்தையும் மறந்துவிட்டாள்.
மனம் ஒரு நனைந்த கிளியாக மாறியிருந்தது. சிறகுகள் முழுவதும் மழையில் ஒட்டிய நிலையில் ஒரு மைனா... பறக்கமுடியாமல் வேலிக்கருகில் ஒட்டியவாறு நடுங்கிக்கொண்டிருக்கும் ஒரு செயலற்ற நிலை...
பத்ரா கண்களை முழுமையாக மூட ஆரம்பித் திருந்தாள்.
திடீரென்று அவளுடைய மனம் அவளைப் பார்த்து பரிதாபமாக அழ ஆரம்பித்தது-
நிறுத்தாமல்.