"விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்தொழுகு வார்'

-என்பது வள்ளுவன் வாக்கு.

இதன் பொருள், பிறர் வீட்டுப் பெண்களிடம் தகாத செயலிலில் ஈ.டுபடுகிறவன் பிணத்துக்குச் சமமானவன் என்பதாகும். பொள்ளாச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல; ஒரு பிணக் கும்பலே சதைவெறி பிடித்த பேய்களாய் மாறி, பெரும்புள்ளிகளின் உதவியோடு அப்பாவிப் பெண்களின் உடலையும் ஆன்மாவையும் வேட்டையாடித் தின்று தீர்த்திருக்கிறது.

Advertisment

n

தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கிக் கொண்டிருக்கிற கொடுமை இது.

இந்த பொள்ளாச்சி விவகாரத்தை நக்கீரன் எப்படிக் கையில் எடுத்தது?

Advertisment

கடந்த மாதம் மார்ச் 6-ஆம் தேதி நம் நக்கீரன் அலுவலகத்துக்கு அந்த வீடியோ வந்துசேர்ந்தது.

அதைப் பார்த்த நக்கீரன் பொறுப்பாசிரியர் தம்பி லெனின், பதட்டமாக என்னிடம் வந்து, "அண்ணே... இப்படியொரு வீடியோ வந்திருக்கிறது. அதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பொள்ளாச்சியில் ஒரு வக்கிர கும்பல் தொடர்ந்து நடத்திவரும் ஒரு பெரிய பெண் வேட்டைக்கான ஆதாரம்தான் இந்த வீடியோ' என்று அதைக் கொடுத்தார்.

அவர் சொல்லும்போதே, அது பெரிய விபரீதமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால் அந்த வீடியோவைப் பார்ப்பதற்கு முன்பே மெல்லிலிய பதட்டம் ஆரம்பித்துவிட்டது. அந்த வீடியோக் காட்சியைப் பார்த்ததும் இதயமே தெறித்துவிடும் போலிலிருந்தது. ஒரு இளம்பெண்ணை ஒரு கும்பல் பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய்து, பலவந்தமாக உடல் வேட்டையாடுவதையும், அந்தப் பெண், "அண்ணா... பெல்ட்டால் அடிக்காதீங்கண்ணா....' என்று கதறியழுவதையும் பார்த்து நொறுங்கிப்போனேன்.

அந்த வீடியோவில் ஆபாசம் தெரியாதபடி, சில பகுதிகளை "பிளர்' செய்து மறைத்து, அந்த சம்பவத்தின் தீவிரம் மட்டும் தெரியும்படியாக, அந்த வீடியோவை நக்கீரன் வெளியிட்டது. அது தமிழகத்தையே அதிர்ச்சியில் மூழ்கடித்தது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் நீதி கேட்டும், குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலிலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. இவ்வளவு பெரிய கொடூரம் நம் சமூகத்திலேயே நடந்துகொண்டிருக்கி றதா? என்று மக்கள் பரிதவித்தாலும், அங்குள்ள காவல்துறை அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

நம் பொள்ளாச்சி நிருபரான தம்பி அருள்குமாரை கடந்த 12-ஆம் தேதி தொடர்பு கொண்டு, அங்கே என்னதான் நடக்கிறது? என்று கேட்டேன்.

அவரோ, ""பொள்ளாச்சியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவியை, சபரீஸ் என்பவன் ஆசைவார்த்தை சொல்லி பிப்ரவரி 12-ஆம் தேதி வாக்கில் தன் நண்பர்களோடு காரில் அழைத்துச் சென்றிருக்கிறான். வழியில் அவர்கள் காரில் வைத்தே அந்தப் பெண்ணிடம் சில்மிஷம் செய்து அதை செல்போனில் படம் எடுத்திருக்கிறார்கள். அந்தப் பெண், காரிலேயே கூச்சல் போட்டுப் போராடியதால், அதற்கு மேல் அவரை சமாளிக்க முடியாமல் நடுரோட்டில் இறக்கி விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தக் கொடுமையை அந்த மாணவி தன் வீட்டில் போய்ச் சொல்லி அழுததால், அவருடைய அண்ணன் கொதித்துப்போய், அந்த சபரியை யும் அந்தக் கும்பலுக்குத் தலைவனான திருநாவுக்கரசு என்பவனையும் மடக்கி, அவர்களிடமிருந்த நான்கு செல்போன்களையும் பிடுங்கியிருக் காங்க. அந்த செல்போன்களில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் இருந்திருக்கு. அதைக் கண்டு பதறிப்போன அந்த மாணவி யின் அண்ணன், அந்த செல்போன் களை பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையத்தில் அப்போதே கொடுத்து, இதை விசாரிக்கனும்ன்னு புகாரும் கொடுத்திருக்கார். பாதிக்கப்பட்ட மாணவியும் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்ணீர் விட்டுச் சொல்லி அழுதிருக்கார். இதைக் கண்டு குற்றவாளிகளை அதிரடியாக மடக்க வேண்டிய காவல்துறை அமைதியாக இருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை. பிறகு பிப்ரவரி 24-ஆம் தேதிதான் இந்தப் புகாரின் பேரில் சபரி, திருநாவுக்கரசு, வசந்த், சதீஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது போலீஸ்.

புகார் கொடுக்கப்பட்ட செய்தி போலீஸ் மூலம், குற்றவாளிகள் தரப்பிற்குப் போக, அவர்கள் சார்பாக, அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க. புள்ளியான 34-ஆவது வட்ட ஜெ.’ பேரவைச் செயலாளரான பார் நாகராஜன், தன் நண்பர்களான செந்தில், பைக் டீலிங் பாபு, கெரோன் உள்ளிட்டவர்களோடு சென்று புகார் கொடுத்த மாணவியின் அண்ண னைக் கடுமையாகத் தாக்கியிருக்கார். இதன் பிறகே, விவகாரம் பெருசா யிடும்ன்னு நினைச்ச போலீஸ், 25-ஆம் தேதி பாலியல் வீடியோ குற்றவாளி களான சபரி, வசந்த், சதீஷ் ஆகியோரைக் கைதுசெய்ததோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பாக பார் நாகராஜன் டீமையும் கைது செய்தது. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே பார் நாகராஜனை மட்டும் காவல்துறை ஏக மரியாதையோடு ஜாமீனில் வெளியே அனுப்பிவிட்டது’ என அங்கே நடந்ததை விவரித்தார்.

""மேலும்...’இந்த வக்கிரம் பிடிச்ச கும்பல் கடந்த பல ஆண்டுகளாக, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகளையும், குடும்பப் பெண்களையும் ஆசைகாட்டி மயக்கி, பின்னர் மிரட்டி குரூப்பாக வேட்டையாடியிருக்கு. அதைப் படமாகவும் எடுத்துவைத்துகொண்டு தொடர்ந்து அவர்களை இச்சைக்குப் பயன்படுத்தியிருக்காங்க. அதோடு, அந்தப் படத்தைக் காட்டி, பாதிக்கப்பட்ட பெண்களிடம் பணம், நகைன்னு பிடுங்கி வந்ததோடு, அவர்களைப் பலருக்கும் அந்தக் கொடூரர்கள் சப்ளை செய்திருக்கானுங்க. குறிப்பாக மேலிடப் புள்ளிகளுக்கு விருந்து படைச்சிருக்கானுங்க. இப்படிப் பட்ட செய்திகள்தான் இப்ப பொள்ளாச்சி மக்களிடம் பதட்டமாக அடிபடு துண்ணே'' என்றார்.

d

இந்தத் தகவல்கள் மேலும் எங்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியான திருநாவுக்கரசு மார்ச் 1-ஆம் தேதி தான் பேசிய ஒரு ஆடியோவை வெளியிட்டான். அதில்... ""என் மேல பொய் வழக்கு போட்டிருக்காங்க. அதனால் இதை சி.பி.ஐ. விசாரிக்கனும். அந்த ஆபாச வீடியோவில் முக்கியமான கட்சிக் காரங்கள்லாம் இருக்காங்க. நான் ஒரு பெரும் உண்மையை சொல்லப் போறேன். உயிரே போனாலும் பரவாயில்லை. வழக்கறிஞர்களும் நீதிபதி களும் பொள்ளாச்சி மக்களும் எதிர்க்கட்சித் தலைவர் தளபதியும், இந்த உண்மை எல்லாம் வெளிவர உதவனும்''’ என்ற ரீதியில் பேசுகிறான்.

இதில் திருநாவுக்கரசு சொல்லும் அந்த முக்கிய கட்சிக்காரப் புள்ளிகள் யார்? அவன் சொல்ல விரும்பிய பெரும் உண்மை என்ன? அதைத்தான் தொடர்ந்து கேட்கிறோம்.

அடுத்து 4-ஆம் தேதி அதே திருநாவுக்கரசு இன்னொரு வீடியோவை வெளியிட்டான். அதில் ""எனக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இல்லை. யாராவது ஒரு பெண் நான் தப்பான வன்னு நிரூபிச்சா, அந்தப் பொண்ணு கையாலேயே தண்டனையை வாங்கத் தயாரா இருக்கேன். நான் எதுவும் செய்யலை. என் குடும்பத்தினருக்கு போலீஸ்காரங்க என்னைக் கேட்டு டார்ச்சர் கொடுக்குறாங்க.

அவங்களை டார்ச்சர் பண்ணவேணாம். நாளை நான் பொள்ளாச்சிக்கு வர்றேன்''’ என்றெல்லாம் பேசுகிறான்.

திருநாவுக்கரசு தன் ஆடியோவில் முக்கிய கட்சிக்காரர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னதால்தான், அவன் எல்லோரையும் அம்பலப்படுத்திவிடுவானோ? என்ற பயத்தில்தான், அவர் பெற்றோரை மிரட்டி டார்ச்சர் செய்து, அவனை சரண்டராக வைத்துக் கைது செய்திருக்கிறார்கள்.

திருநாவுக்கரசு தன் ஆடியோவில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் இந்த உண்மை வெளிவர உதவனும்ன்னு சொல்வதி லேயே... இதில் தி.மு.க.வினருக்குத் தொடர்பு இல்லை என்பதும், ஆளுங்கட்சிப் புள்ளி களுக்கே தொடர்பு இருக்கிறது என்பதும் வெளிப்படுகிறதே. ஆனால் போலீஸ் பிடிக்கு வந்த பின், திருநாவுக்கரசு , அந்த அரசியல் புள்ளிகள் பற்றி வாயையே திறக்க வில்லை. ஒரு வட்டச் செயலாளரைப் பற்றிக்கூட வாயைத் திறக்கவில்லை. அவன் வாயை இறுக்கமாகப் பூட்டிவிட்டார்கள்.

ஏழு ஆண்டுகளாக இப்படியொரு கொடுமை நடந்தும் அது வெளியே வரவில்லை என்றால், இந்தப் பாலியல் பயங்கரத்தின் பின்னணியில் ஒரு வலிமையான கும்பல் இருக்கும் என்ற யூகத்திற்கு வந்தோம். அதனால்தான் திருநாவுக்கரசுவுக்கு வாய்ப் பூட்டு போடப்பட்டிருக்கிறது என்பதை யும் புரிந்துகொண்டோம். இந்த நிலையில் தான்... துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கும் இந்த வக்கிரக் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்ற தகவலும் வந்துசேர்ந்தது.

அதேபோல் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்குத் இதில் தொடர்பு இருக்கிறது என்ற செய்தி பரவும் முன்பாகவே, ஆபாச வீடியோ வெளியான உடனேயே, பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களான பிரவீன், முகுந்தன் ஆகியோர், தங்கள் முகநூல் கணக்குகளை அவசர அவசரமாக நீக்கிவிட்டார்கள். இதிலேயே அவர்களின் பயமும் பதட்டமும், அவர்களுக்கு இருக்கும் தொடர்பும் நமக்குத் தெளிவாகிறது.

இந்த நிலையில் நாம் வெளியிட்ட அந்த மாணவியின் கதறல் வீடியோ தமிழகத்தில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியது. குறிப்பாக- 11-ஆம் தேதி தமிழகமே திகுதிகுவென தீப்பிடித்த மாதிரி ஆனது.

பொள்ளாச்சிக் குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என்ற குரலைத் தமிழகமே எழுப்பியது. நக்கீரனைப் பொறுத்தவரை யாரைப் பற்றிய செய்தியாக இருந்தாலும், அதில் தொடர்புடையவரின் விளக்கத்தைக் கேட்டு வெளியிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் நம் நிருபர் தம்பி அருள்குமார், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனைத் தொடர்புகொண்டு, அவர் மகன்களுக்குத் தொடர்பு இருப்பது பற்றிக் கேட்டபோது.. பதட்டமான அவர்... ""என்கிட்ட யாருமே இப்படி கேட்க மாட்டாங்க. நீங்கள்தான் இப்படிக் கேட்கறீங்க.. என் பையனுக்கு இப்பதான் 20 வயசு ஆகுது. அவன் இப்படி செஞ்சிருப்பானா?'' என்ற ரீதியில் எதிர்க்கேள்வி கேட்டார். அதில் "தொலைத்துவிடுவேன். கொன்றுவிடுவேன்'…என ஏராளமான அபாய வார்த்தைகள் மறைந்திருக்கின்றன. உண்மையை வெளிப்படுத்தினால் அவ்வளவு கோபம் அவருக்கு.

dஅதனால் நம் இணைய நிருபர் தம்பி பெலிக்ஸை அழைத்து, ""தம்பி கேமராவை ரெடி பண்ணுங்கள்'' என்றேன். அவர் ""ஆன் பண்ணு'' என்று சொன்னதும், கேமராமேன் தம்பி பாலாஜி கேமராவை ஓடவிட்டார். நான் அந்தப் பொள்ளாச்சி வக்கிரக் கும்பலின் கொடூரம் பற்றி என் மனக்குமுறலைக் கொட்டிப் பேசினேன். ஒரே டேக்கில் 23 நிமிடங்கள் பேசினேன். அதில் கடுமையான வார்த்தைகள் என்னையறி யாமலே வெடித்து வந்தன. அதற்குக் காரணம் அது சாதாரண கோபமல்ல; இரண்டு பெண்களைப் பெற்ற ஒரு தகப்பனின் மன உணர்வு. இந்த வீடியோ, தமிழகமெங்கும் பெரும் ஆவேச அலையை எழுப்பியது. இதில் உண்மை முழுவதும் வெளிப்பட்டதால் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பு மிரண்டுபோனது. உடனே, அவர் தரப்பு உளறல் விளக்கங்களைத் தர ஆரம்பித்தது.

பொள்ளாச்சி எஸ்.பி.பாண்டியராஜன் அவசரமாக நிருபர்களை அழைத்து,’""எங்களுக்கு அந்த பாலியல் விவகாரம் தொடர்பாக நான்கு வீடியோதான் கிடைத்தது. இதில் திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர் மட்டும்தான் குற்றவாளி. இதில் எந்த அரசியல்வாதிக்கும் தொடர்பில்லை'' என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியின் போதே... இந்த விவகாரத்தில் பணப்பறிப்பு இல்லை என்றும் பின்னர் சில ஆயிரங்கள் வசூலித்திருக்கிறார் கள் என்றும், முன்னுக்குப் பின் முரணாக உளறிக்கொட்டினார்.

அதேபோல் கோவை கலெக்டர் ராஜாமணியும், ’""சம்பந்தப் பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. இதில் மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதேசமயம் பெண்களுக்கு மனவேதனை ஏற்படும்படி நடப்பவர் கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவலை வெளிப்படுத்துகிறவர் களையே குறிவைத்தார். இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனான பிரவீனைக் காப்பற்றத் தான் எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் கள் என்பது வெளிப்படை யாகவே தெரிகிறது.

அதேபோல் சென்னைக் கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், ""பாதிக்கப்பட்ட மாணவி என்னிடம் வந்து சொன்னதும், நான்தான் எஸ்.பி.யைத் தொடர்புகொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தேன். ஆனால் இந்த விவகாரத்தில் என்னையும் என் குடும்பத்தினரையும் சம்பந்தப்படுத்தி அவதூறு பரப்பப் பார்க்கிறார்கள்'' என்று பதட்டமாகவே பேட்டி கொடுத்தார். ஒரே நேரத்தில் ஒரே மாதிரி எஸ்.பி., கலெக்டர், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய மூவரும் பேட்டிகொடுத்தது… அவர்களின் திட்டமிட்ட செயல் என்பதை உணர்த்தியது. அந்தப் பேட்டியிலேயே அவர் பதறுவதும் நீலிக்கண்ணீர் வடிப்பதும் தெரிந்தது. தன் மகன்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவருடைய பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்ததால்... மேலும் விசாரணையை நக்கீரன் முடுக்கியது.

பொள்ளாச்சி ஜெயராமன், நம் நிருபர் அருள் குமாரிடம், தன் மகன் பிரவீனுக்கு 20 வயதுதான் ஆகிறது.

அவன் இப்படிப்பட்ட வேலைகளில் இறங்குவானா? என்று கேட்டாரல்லவா? அந்த பிரவீனின் ஜாதகத்தை நக்கீரன் கிளறியபோது ஏகத்துக்கும் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

அந்த பிரவீன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் 18 ஆவது வயதிலேயே தன் பெண் தோழிகள் நான்கு பேருடனும் ஒரு ஆண் நண்பனுடனும் காரில் ஈரோடு நோக்கிச் சென்றபோது, அந்த கார் விபத்துக்குள்ளாகியது. அதாவது சென்டர் மீடியனில் மோதி, அதே வேகத்தில் எதிரே வந்துகொண்டிருந்த ஒரு காரில் மோதியது. அந்த விபத்தில் சுரேகா என்ற மாணவி இறந்துபோனார். அந்த மாணவியும் காருக்குள் பாலியல் நெருக்கடிக்கு ஆளாக்கப் பட்டு, அதிலிருந்து தப்பிக்கப் போராடியதில் அந்தக் கார் அலைக்கழிக்கப்பட்டு அந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணம், இந்த விவகாரத்திற்குப் பின் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

அதனால் இதுகுறித்து விசாரிக்க, நம் நக்கீரனின் தலைமை நிருபர் தம்பி பிரகாஷை களமிறக்கினோம்.

பிரவீன் காரால் மோதப்பட்ட காரின் எண், கேரள எண் என்பதை அவர் கண்டுபிடித்து, அங்கே சென்று சுரேகா மரணம், இயல்பான விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

இப்படி பொள்ளாச்சியில், துணை சபாநாயகரின் மகன் டீம், ஒரு பெரும் வக்கிரக் கும்பலோடு சேர்ந்து கொண்டு கூத்தடித்து வந்ததை நக்கீரன்தான் துணிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது.

இன்னொன்றையும் சொல்கிறோம். இவ்வளவு நடந் தும்கூட-… மிகப்பெரிய ஒரு பெண் வேட்டை தொடர்ந்து நடந்திருக்கிறது என்பது வெளியே வந்தும்கூட… மாதர் அமைப்புகள் போதிய எதிர்ப்பைக் காட்டவில்லை என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆதங்கமாகும்.

டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, இங்கே பெரிய அளவில் கொதித்துக் கொந்த ளித்த பெண்ணிய அமைப்புகள், டெல்லியை விடப் பன்மடங்கு கொடூரமான இந்த பொள் ளாச்சி விவகாரத்துக்கு ஏன் நீதிகேட்டுப் போராடவில்லை? என்ற கவலை மேலெழுகிறது.

இதற்கிடையே டேஞ்சரஸ் கிரிமினலான திருநாவுக் கரசின் அம்மா லதாவின் பேட்டியை ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. அதில் அவர், ""என் மகனுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பே இல்லை'' என்று அப்பட்ட மாகப் பொய் சொல்கிறார். ஆனால் நாமோ, "அண்ணா என்னை பெல்ட்டால் அடிக்காதீர்கள்' என்று அந்த மாணவி கதறும் வீடியோவில் திருநாவுக்கரசு இருப்பதை ஆதாரத்தோடு நக்கீரனில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

தேர்தல் நேரத்து ஓட்டு அரசியல், இந்தப் பொள்ளாச்சி விவகாரத்தை அப்படியே விழுங்கி ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பார்க்கிறது. பொள்ளாச்சி ஜெயராமன் என்கிற ஒரு அ.தி.மு.க. பிரமுகரின் குடும் பத்தையும் இமேஜையும் காப்பாற்ற, அந்தக் கட்சியோடு தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் எல்லாம், இதைக் கண்டும் காணாதது போல் இருக்கின்றன. அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் அந்த வக்கிரக் கும்பலிடம் சிக்காததால், யாருக்கோதானே என்கிற நினைப் பில் கூச்சமில்லாமல் அங்கே ஓட்டு அறுவடை செய்ய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.

ஊடக தர்மத்தின்படி, ஒரு குற்றம் குறித்து நாம் நமக்குக் கிடைத்த செய்தியை வெளியிட்டால், "அது உண்மைதானா? அந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் யார் யார்?' என்று பொறுப்போடு கண்ட றிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல் துறை, குற்றத்தை காவல்துறையின் கவனத்துக்கும் சமூகத் தின் பார்வைக்கும் கொண்டுவரும் நக்கீரனுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பது எந்த வகையில் சரி? இப்போது இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினரின் தலைகளையும் உருட்டி, ஆளும்கட்சிக்கு சேவகம் செய்யவும் இப்போது காவல்துறை பரபரத்துக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

பொள்ளாச்சியைச் சுற்றி கடந்த ஏழு வருடங்களாக நடந்திருக்கும் கொலைகள், தற்கொலைகள் போன்றவற் றின் பின்னணியிலும் இந்தப் பாலியல் குற்றவாளிகள் இருக் கலாமோ? என்ற மக்களின் சந்தேகத்திற்கும் விடைதேட மறுக்கிறது காவல்துறை. பொள்ளாச்சி விவகாரத்தில் பொல்லாத ஆட்சியின் கோரமுகம் அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்கள் எந்த தைரியத்தில் மக்களிடம் ஓட்டுக்கேட்க வருகிறார்கள்? எத்தனை இடையூறுகள் வந்தாலும்… இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய அத்தனை குற்றவாளி களையும், அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அந்த உடல் வேட்டைக்காரர்களை கூண்டில் ஏற்றாமல் நக்கீரன் ஓயப்போவதில்லை.

-தீரா வருத்தத்தோடு,

நக்கீரன்கோபால்