உலகமயமாதல் என்ற அகில வலையிலும், தொழில்நுட்பம் என்ற நுண் கொலையிலும் பழங்கலை இலக்கிய மரபுகள் தங்கள் கடைசிக் காலத்தை எண்ணிக்கொண்டிருக்கின்றனவோ என்ற கவலைக்காரர்களில் நானும் ஒருவன். கவின்கலைகளைத் தொடர்ந்து பேணுவது என்பது உலகெங்கும் ஆகச் சிறந்த அறைகூவலாக இருக்கிறது. ஊடகப் பெருக்கம் கவிதைகளைக் கடைசித் தேர்வாகக் கருதிக்கொண்டிருக்கும் வேளையில் "இனிய உதயம்' பத்திரிகை கவிதைகளை உயர்த்திப் பிடிப்பது அன்பான ஆறுதலாகத் திகழ்கிறது. கவி
உலகமயமாதல் என்ற அகில வலையிலும், தொழில்நுட்பம் என்ற நுண் கொலையிலும் பழங்கலை இலக்கிய மரபுகள் தங்கள் கடைசிக் காலத்தை எண்ணிக்கொண்டிருக்கின்றனவோ என்ற கவலைக்காரர்களில் நானும் ஒருவன். கவின்கலைகளைத் தொடர்ந்து பேணுவது என்பது உலகெங்கும் ஆகச் சிறந்த அறைகூவலாக இருக்கிறது. ஊடகப் பெருக்கம் கவிதைகளைக் கடைசித் தேர்வாகக் கருதிக்கொண்டிருக்கும் வேளையில் "இனிய உதயம்' பத்திரிகை கவிதைகளை உயர்த்திப் பிடிப்பது அன்பான ஆறுதலாகத் திகழ்கிறது. கவிஞர்கள் அற்றுப் போகவில்லை என்பதற்கும் கவிதைக் காப்பாளர்கள் பட்டுப்போகவில்லை என்பதற்கும் இந்தக் கவிதைப்போட்டி ஓர் எடுத்துக்காட்டு.
மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையும், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களையும் "பாட்டுத் திறத்தை பாலிக்க' வந்தீர்கள் என்று பாராட்டுகிறேன். சடையப்ப வள்ளலின் மரபணுக்கள் சமூகத்தில் இன்னும் அற்றுப்போகவில்லை. கவிதைக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் வழங்க முன் வந்திருக்கும் கல்வி வள்ளல் பாலாஜி சொசைட்டி கர்னல் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நல்ல தமிழின் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன்.
அற்புதமாக எழுதுகிறார்கள் இளம் கவிஞர்கள். வாழ்க்கை யின் சந்து பொந்துகளிலெல்லாம் அவர்களின் கண்கள் துழாவி எழுதுவதை நான் வியப்போடு பார்க்கிறேன். உள்ளடக் கத்திலும் மொழியிலும் வடிவத்திலும் பழைய மரபுகளைக் காற்று நடந்து போவதுபோல் கடந்து போகிறார்கள்.
பத்துக்கவிதைகளைத் தந்து ஒரு கவிதையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள் சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களும், ஆரூர் தமிழ்நாடன் அவர்களும். "காணாமல் போகும் கிணறு' என்ற கவிதையை முதற்பரிசுக்குரிய கவிதையாக என் பார்வையில் தேர்ந்தெடுக்கிறேன். அந்தக் கவிதையில் இருக்கும் ஒற்றைத் தன்மையும், தனிமனித வலியை சமூக வலிலியாக மாற்றியிருக்கும் ரசவாதமும், உலகச் சுற்றுச் சூழலுக்கான சன்னமான ஆனால் திண்ணமான குரலும், பாசாங்கு இல்லாத பசையுள்ள மொழியும் என்னை இந்தக் கவிதையைத் தேர்ந்தெடுக்கப் பணித்தன. கவிஞரின் பெயர் கவிதையில் இல்லை. பெயர் பெற்ற கவிதையை எழுதிய பெயர் தெரியாத கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.
வளரும் கவிஞர்களுக்கு ஒரு வார்த்தை. ஒரே ஒரு கவிதையோடு இலக்கியமோ வாழ்வோ முடிந்துபோவதில்லை. தொடர்ச்சி முக்கியம்; தொடர்ந்து எழுதுங்கள். நாளை எழுதப் போகும் கவிதையைப்போல் முதிர்ச்சியானது எதுவுமில்லை. போட்டியில் கலந்துகொண்ட கவிதையாளர்கள் அனைவருக்கும் என வளர்பிறை வாழ்த்துக்கள். இன்று இல்லாமல் போயிருக்கலாம்; ஆனால் உங்களுக்கான பரிசு கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது.