லைசிறந்த மருத்துவர், சிறந்த கலைஞர், கட்டிட வல்லுநர், பொருளியல் நிபுணர், இயற்கையை வரவேற்பவர், புதின ஆசிரியர், உளவியல் அறிஞர், அறிவியல் மேதை, சமுதாய சீர்திருத்தச் சிந்தனையாளர், வரலாற்று ஆசிரியர், தேசப்பற்றாளர், விடுதலை இயக்கத்தின் பிதாமகன், கொள்கைப் பரப்பாளர், தத்துவ மேதை, சிறந்த சிற்பி, இசைவல்லுநர், உயர்ந்த பாடகர், பன்மொழி அறிந்தவர், கவிஞர், புதின ஆசிரியர் என வாழ்நாள் முழுவதும் தன்னை வெளிப்படுத்திய ஒரு ஆளுமையே 1861ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் நாள் பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த ஒசே ரிசால்.

பன்முக ஆளுமைத்திறம் கொண்ட இவர் கொல்லப் படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால், ஒரு சிமினி விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், முனைமழுங்கிய எழுதுகோல் ஒன்றின் துணையோடு எழுதிய இருபது வரிக் கவிதையால் அந்த தேசத்திற்கான விடுதலையைப் பெற்றுத் தரமுடிந்தது என்று சொன்னால் அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? காகிதமும் ஆயுதமே என்பதை தம் எழுத்தால் நிரூபித்தவரே ரிசால்.

அவருடைய தாய்மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டு காலம் கொடுஞ்சிறையில் அடைக்கப் படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் குற்ற மற்றவர் என நிரூபித்து விடுதலை அடைகிறார். பிலிப்பினோ இனத்தைச் சார்ந்தவள், அதுவும் பெண் என்பதால் அவளுக்கான நியாயம் மறுக்கப்பட்டதையும், நிரபராதி எனினும் தண்டனை அனுபவித்துக் கொண்டேதான் தம் மீதான நியாயத்தை நிரூபிக்க முடியும் என்ற கொடுங்கோன்மையையும் 11 வயதில் தன் அனுபவத்தால் உணர்ந்த ரிசால், நாட்டின் விடுதலைக்காகக் களமாட தன்னையே தயார்படுத்தத் தொடங்குகிறார்.

16ஆம் வயதில் இளநிலைப்பட்டம் பெற்றவர், சான்டோடோமாஸ் பல்கலைக் கழகத்தில் தத்துவம் பயின்றார். பின் அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கத் தொடங்கினார். தம் பிலிப்பினோ இனத்து மாணவர்கள் தரக்குறைவாக நடத்தப்படும் நிலையை அங்கும் அவரால் உணரமுடிந்தது. சமநீதியும், சம வாய்ப்பும் மறுக்கப்பட்டதால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று தம் 23 ஆவது வயதில் மருத்துவர் பட்டத்தைப் பெற்றார். ஆங்கிலம், ஜப்பான், அரபு, ஸ்பானியம், சமஸ்கிருதம் உட்பட 10 மொழிகளில் புலமை பெற்றிருந்தவர், மாட்ரிட் பல்கலைக்கழகத்திலும், பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்தில் மேற்படிப்பை மேற்கொண்டு நாடு திரும்பினார்.

Advertisment

நலிவுற்ற பிலிப்பினோ இனம் உலக அரங்கில் இருக்கும் இடம்தெரியாமல் ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட இவ்வினம் விழிப்புறச் செய்ய எழுத்தாற் றலை ஆயுதமாக எடுப்பதென முடிவுசெய்தார். 1887-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோலிமிடேன்கேரே எனும் புதினத்தையும், மதகுருமார்களின் விவேகமற்ற செயல்களுக்கும், ஸ்பெயின் நாட்டு ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மைக்கும் சாட்டையடியாக 1891-ல் எல்ஃபிலிபஸ்டி ரிஸ்மோ என்ற மற்றொரு புதினத்தையும் வெளியிட்டார். இப்புதினங்கள் மக்கள் உள்ளங்களில் புரட்சிக்கனலை உருவாக்கியது. அடக்கப்பட்ட மக்கள் விழிப்புற்றெழுந்தனர். பிலிப்பைன்ஸ் தன்னாட்சிபெற இவரது எழுத்துகள் பெரும் துணைபுரிந்தன.

அரசாங்கத்தின் அடாவடி நடவடிக்கை களைத் தம் கதாபாத்திரங்கள் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டியதால் இவர் மீது குற்றம் சுமத்தி, 1892-ஆம் ஆண்டு டேபிடன் என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். கனிந்த நெஞ்சமும், உயர்ந்த குறிக்கோளும் கொண்ட ரிசால் இதனை எண்ணி கலக்கமடையவில்லை. தம் இன உயர்வுக்காக டேபிடன் நகரில் இடைவிடாது உழைத்தார். அங்கு இவர் விவசாயத் தொழில்நுட்பங்களை உணர்ந்து விவசாயத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். ஒரு மருத்துவமனைக்குப் பொறுப்பேற்று நடத்தினார். மாணவர்களுக்கு முறையான கல்வியையும், ஆங்கிலம், ஸ்பானியம் ஆகிய மொழிகளையும் கற்றுக்கொடுத்தார். பிலிப்பைன்ஸ் முன்னணி என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கினார். அந்த இயக்கமே பின்னர் ஸ்பானியர்களுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட கட்டிபுனான் என்ற பெயரில் தொடங்கப்பட்ட விடுதலை இயக்கம் தோன்ற காரணமானது.

தீவிரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பார்சிலோனா நகரில் கைதுசெய்யப்பட்டு மணிலாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

Advertisment

அங்கு நீதிமன்ற விசாரணையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1896-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் நாள் தமது 35-ஆம் வயதில் தம் இன மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க அமைதி வழி காட்டிய காரணத்தால் ஸ்பெயின் நாட்டு ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

dd

சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தையநாள் இரவு சிமினி விளக்கின் மங்கிய ஒளியில் ரிசால் எதையோ எழுதிக்கொண்டிருந்ததை காவலாளிகள் பார்த்தனர். மறுநாள் அவர் இருந்த சிறைச்சாலையைச் சுத்தம் செய்ய வந்த பெண், அவர் பயன்படுத்திய சிமினி விளக்கிற்குள் ஒரு தாள் இருப்பதைக் கண்டாள்.

அதை மிகுந்த சிரமப்பட்டு வெளியில் கொண்டு வந்தாள். ரிசாலின் நண்பர்களிடம் கொடுத்தாள்.

அதுதான் பிலிப்பைன்ஸ் தேசத்தின் விடுதலைக்குக் காரணமாக அமைந்த ரிசாலின் விடைகொடு என்ற கவிதை. அதைப் பிரதி எடுத்து தேசம்முழுதும் பரப்பினார்கள். தம் தேசத்தில் ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கம் தொடரக்கூடாது என்ற போராட்டம் பற்றி எரியத்தொடங்கியது.

ஆறு வருடத்திற்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என்ற மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது, ஹென்றி கூப்பர் என்கிற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாலின் கவிதையை வாசித்தார். சற்று நிசப்தத்திற்குப் பிறகு, ஒட்டுமொத்த சபையும் தம் கருத்தை மாற்றிக்கொண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என்கிற மசோதாவை நிறைவேற்றிக் கொடுத்தது. வரலாற்றின் நெடுகில் உயிர்ப்புடன் திகழ்கிற அந்தக் கவிதையின் உயிரார்ந்த சில வரிகள் மட்டும் இதோ.

விடைகொடு தாய் மண்ணே!

கதிரவன் இதமாய் தழுவும் நிலமே!

முத்துக்கள் விரவிய ஓரியன்ட் கடலே!

நாங்கள் இழந்துவிட்ட ஏதேன் தோட்டமே!

கவலை இல்லாமல் கரிசனத்தோடும், அவமானத்தின் சுருக்கங்களற்றும்,

கண்களில் நீர் சுரக்காமலும் மென்புருவங்கள் உயர்ந்திருக்கும்படியும்

உன்னைக் காணவேண்டுமென்பதே என் கனவு.

இப்பிறப்பு வாய்த்திட்டநாள் முதல் எனக்குள் வந்திடும் கனவு.

பதின்ம பருவத்திலும், மிடுக்கான உருவத்தில்

என்னோடு வாழ்ந்திட்ட கனவு.

என் வாழ்வின் தீராவேட்கையின் கனவே

விடைபெறப் போகும் என் உயிர் உன்னை வாழ்த்திப் புலம்புகிறது.

நீண்ட இரவில் மருளியலான உன் மடியில் முடிவிலா உறக்கம் கொள்வது

எத்தனை உத்தமமென்று உன்னை வாழ்த்திப் புலம்புகிறது.

உனக்காக காலாவதியாவது எத்தனை இன்பமென்று.

உன்னை வாழ்த்திப் புலம்புகிறது.

யாதொரு வலியும் தயக்கமுற்று, போர்க்களத்தின் கோர உக்கிரத்தில்

உனக்காக உயிரை நீத்தார் பலர்.

மண்ணைக் காக்க தன்னுயிரைக் கொடுக்கத் துணிந்தவனுக்கு

சைப்ரசோ, லாரலோ, வெண் லில்லியோ, வெட்டவெளியோ.

தூக்குமேடையோ, போர்முனையோ எல்லா இடமும் ஒன்றன்றோ!

என் வாழ்வு உயிர்ப்போடு இருந்தபோது

அதை உன் பாதங்களில் சேர்க்க நான் எப்போதும் தயங்கியதில்லை.

நீண்ட அயர்வான இந்த இரவு தன் சாயமிழந்து

பகலை முன்மொழியும் விடியலாக நாளை உடையும்.

அதிகாலையை தரிசித்தப்படியே நான் மரணிப்பேன்.

அந்த செவ்வானம் ஒருவேளை தன் சாயலில் சற்று பொலிவிழந்திருந்தாலும்,

என் குருதியைத் தொட்டு அதற்கு முலாமிடுங்கள்!

அந்த அடர்சிவப்பு நிறத்தை முளைக்கும் ஒளிக்கதிர்கள் பூசிக் கொள்ளட்டும்.

நாளை என்னை புதைத்துவிடுவார்கள்

என் கல்லறைமேலே அடர்ந்த புற்கள் மண்டிக்கிடக்கும்

அந்த புற்களுக்கிடையில் எளிய பூக்களும் பூத்துக் கிடக்கும்!

என் தேசத்தில் நாளை உலா வரவிருக்கும்

விடுதலைக்காற்றே அந்த எளிய பூக்களின் அருகே

உன் உதடுகளைக் கொண்டுபோ அதை வருடி முத்தமிடு

குளிர் உறையும் கல்லறைக்குள்ளே கிடக்கும் நான்

உன் மூச்சுக்காற்றின் வெப்பத்தை என் புருவங்களின் மீது உணருவேன்

என் ஆன்மாவை வருடி நீ முத்தமிட்டதாக உணர்ந்து

கல்லறைக்குள்ளிருந்து உன்னை தரிசிப்பேன்!

வாடிய என் உயிரை மார்புடைக்கும் மகிழ்வோடு

இப்போது உனக்குப் பரிசளிக்கிறேன்

போய் வருகிறேன் விடைகொடு தாய் மண்ணே!

பிலிப்பைன்சின் விடுதலை வீரராகவும், அவர் இறந்த நாள் ரிசால் நாள் என்ற பெயரில் விடுதலை நாளாகவும் நினைவு

கூரப்படும் இன்றைய தினங்களிலும், விடுதலை தேடும் தேசங்களின் மக்களைத் தம் கவிதை வரிகளால் தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கிறார் ரிசால் என்பது மறுக்கவியலாத உண்மை.