தமிழகம் பெரிதும் கொண்டாட வேண்டிய ஒரு ஞானக்கவிஞர், உரிய விளம்பர வெளிச்சத்தைக் காணும் முன்பாகவே காலவெளியில் கண்ணீர்க் காவியமாய்க் கரைந்துபோய்விட்டார்.
அவரை அறிந்த இலக்கிய நண்பர்களும், படைப்பாளர்களும்... அந்தக் கவிஞரின் பிரிவைத் தாளமாட்டாமல் இதயப்பூர்வமாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கவிஞனின் பெயர் கண்ணகன். அவரது இயற்பெயர் சுபாஷ் சந்திரபோஸ். குடந்தையில் வசித்து வந்த அவர், அங்குள்ள ஒரு பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பள்ளி மாணவர்களின் அன்புக்குரிய ஆசானாக வலம் வந்த அவர், இலக்கிய உலகில் தன் கவிதைச் சிறகுகளை உயிர்ப்போடு அசைத்து வந்தார். "பறவைக்குள் அடையும் கூடு' என்பது கண்ணகன் விட்டுச் சென்றிருக்கும் கவிதை நூல்.
அவருக்கென்று இலக்கிய நண்பர்கள் இருக் கிறார்கள். அவர்களை தனது தோட்ட வீட்டுக்கு அடிக்கடி கண்ணகன் அழைப்பார். இயற்கையின் ஏகாந்தத்திற்கு மத்தியில் அன்பான உபசரிப்பும் இலக்கிய ஜமாபந்தியும் அங்கே இரவுபகல் பாராமல் அரங்கேறும். அவரது ஞானத்தேடல் மிகுந்த கவிதைகள், அவரது நண்பர்களை மெய்மறக்க வைக்கும். நண்பர்களும் கவிதைபாடி இயற்கையைத் தாலாட்டுவார்கள்.
இப்படியாகத் தன் கடைசி நாள் வரையில் கவிதையும் நட்புமாக இருந்த கண்ணகன், பொங்கல் நேரத்தில் திடீரென்று எவரும் எதிர்பாராத வகையில் மரணத்தைத் தழுவினார். அது அவரவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது இலக்கிய நண்பர்களையும் பதறித் துடிக்கவைத்திருக்கிறது. குறிப்பாக முகநூல் வெளியே அவருக்கான கண்ணீர் மழையில் நனைந்திருக்கிறது.
முதுபெரும் தமிழறிஞரும் ஆய்வாளருமான பொதியவெற்பன், அன்று என்னினிய ஞானமகன் கண்ணகனைப் பறிகொடுத்தேன் என்று முகநூலில் தேம்ப, அது எல்லாத் திசைகளிலும் அதிர்ச்சி அலைகளாய்ப் பரவியது.
அவரே, ""அவனுக்கு மரணம் விடுதலைதான்!
அப்பறவைக்குள்
அடைந்ததிக்கூடு! '' என்றும்... சங்கத் தமிழ்நடையில்...
நெருநல் நெய்தல் கறங்க
ஈர்ந்தண் முழவே இன்றார்ப்ப
விடைபெற்றனன் பித்தவாரிசே
வந்துதித்தனன் ரத்தவாரிசு
எனைப் பாட்டனாக்கி
ஆருயிர் முறைவழிப் படூஉம் எனத்
திறவோர் காட்சியில் தெளிந்தனன்’
என்றும் தன் துயரத்தை வெளியிட்டபடியே இருந்தார். கண்ணகனின் ஆக்கமும், பிரிவின் தாக்கமும் எத்தைகையது என்பதை, அவரது இலக்கிய நண்பர்களின் உணர்ச்சிப்பிரவாகங்களில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. அத்தகைய நண்பர்கள் சிலரின் பதிவை நாம் பார்க்கலாம்.
*
கண்ணகனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த, கஜல் காதலரான கவிஞர் கோ. பாரதிமோகனோ,
பறவைக்குள் கூட்டை அடைத்தவன் சிறகடித்து விட்டான் -என்று கண்ணீரையே சொற்களாக அப்போது கொப்பளித்தார். கண்ணகனைப் பற்றியும் அவரது ஆற்றோரக் குடிலைப் பற்றியும்,
அவரிடம் ததும்பிய அன்பைப் பற்றியும் தன் கரிப்பு எழுத்துக்களால் பேசும் அவர்...
கவிஞர் கண்ணகன், 1981-ல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருக்கும் பட்டீச்சுரத்தில் பிறந்தவர்.
தன் இயற்பெயரில் "சுபாசு சந்திரபோசு' என்று வடமொழி தவிர்த்துக் கையொப்பமிடும் வழக்க முள்ளவர். அவரது விவசாயக் குடும்பத்திலிருந்து அவர் மட்டுமே படித்து மேலேறி வந்தவர். தமிழ் முதுகலை பயின்றவர். தமிழ் நவீன கவிதைகள் குறித்து ஆய்வு பட்டப் படிப்பையும் முடித்தவர். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பயின்றவர்.
இதே கல்லூரியில் தற்காலிகப் பேராசிரியராய் பயணித்தவர். பின்னாளில் தமிழக அரசுப் பள்ளியில் மேனிலை ஆசிரியராக இருந்தார். பழைய வழக்கமான முறையில் இல்லாமல், மாணவர்களுக்கு எப்படிச் சொன்னால் பாடம் எளிதில் விளங்குமோ அப்படி உணர்ந்து வகுப்பெடுக்கும் வழக்கமுள்ளவர் கண்ணகன்.
இவரிடம் பயின்ற மாணவர்கள் பெரிதாகத் தேர்வில் தோற்றதாகத் தகவல் இல்லை. இவரின் தமிழறிவு வியக்கத்தக்கது. ஏனோ திருமணம் செய்துகொள்ள மறுத்து, தனிமையும் இலக்கியமுமாக தன் நாட்களை நகர்த்திவந்தார்.
நவீன தமிழ்க் கவிதை உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாளர் கண்ணகன். எனினும் தமிழ் மரபில் நன்கு தேர்ச்சி பெற்றவர். சங்க இலக்கியத்தில் ஊறித் திளைத்த இளம் இலக்கிய ஞானியாய் வலம் வந்தவர் இவர். கல்லூரிக் காலங்களில் பேராசிரியர்களுக்கு தமிழ்மொழியில் ஏற்படும் ஐயங்களை கண்ணகன்தான் களைவார் என்று சொல்வார்கள். தமிழ் இலக்கிய விமர்சகர் வே.மு. பொதியவெற்பன் இவரை ஞானமகன் என்றே செல்லமாக அழைப்பார்.
பட்டீச்சுரத்தில் காவிரியாற்றின் கிளை நதிகளான திருமலைராஜன், முடிகொண்டான் ஆறுகளின் இடைக்கரையில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கிறது கண்ணகனின் தோப்பு வீடு. தென்னம் ஓலை வேயப்பட்ட அழகிய குடிசை வீடு. இயற்கையின் பசுமைசூழ்ந்த இந்தத் தோப்பு வீட்டை கவிஞர்களின் வேடந்தாங்கல் என்று வர்ணித்தால் அது மிகையில்லை. மா, பலா, வாழை, தென்னை, நெல்லி, சோளம் மற்றும் பூப்பூக்கும் தாவரங்கள், செடிகொடிகள், மூலிகைகள், மிளகுக்கொடிகள் என தாவர இனத்தின் அனைத்து வகைளையும் கொண்ட ஒரு குறுவனம் என்றே கண்ணகனின் தோட்டத்தைக் குறிப்பிடலாம். கும்பகோணத்திற்கு வருகைதரும் கவிஞர்கள் பலருக்கும் கண்ணகனின் தோப்பு வீடே... அன்பு ததும்பும் ஆனந்தமான பாடிவீடு. ஐயா வே. மு. பொதியவெற்பன், கவிஞர்கள் பிரான்சிஸ் கிருபா, யூமா வாசுகி, த. விஜயராஜ், விஷ்ணுபுரம் சரவணன், ராணி திலக், குடந்தை ஆடலரசன், விஜயபாரதி உள்ளிட்ட அனேக படைப்பாளர்கள் கண்ணகனின் தோப்பு வீட்டில் கூடி அடிக்கடி இலக்கிய உரையாடல்களில் திளைப்பது வழக்கம். கவிஞர் பிரான்சிஸ் கிருபாதான் இவருக்கு "கண்ணகன்' என்ற புனைபெயரைச் சூட்டியவர். கண்ணகன், சக படைப்பாளர்கள் மீதும் பிற உயிர்கள் மீதும் பேரன்பு கொண்டவர். "அன்பு முதற்றே உலகு' என்பது கண்ணகனின் தாரக மந்திரச் சொல்.
தற்போது தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வரவிருக்கும் நிலையில்தான், அண்மையில் எம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு கண்ணகன் சிறகடித்துவிட்டார்'' என்று கையறு நிலையில் கைபிசைகிறார் பாரதிமோகன்.
கவிஞர் கிருஷ்ணமூர்த்தியோ...
நீந்திக் கொண்டிருப்பது நிற்காத வரை
மீன்களை ஈக்கள்
மொய்க்க முடியாது
என்று எழுதிய எங்கள் கும்பகோணம் கல்லூரியின் நவீன இலக்கிய ஆதர்சம் அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ் என்கிற கவிஞர் கண்ணகன் இன்று இல்லை.
கவிஞர் யூமா வாசுகியின் "அமுதபருவம் வலம்புரியாய் அமைந்ததொரு சங்கு' என்ற கவிதைத் தொகுப்பை ஆழ்வார் பாசுரங்களோடு ஒப்பிட்டு அண்ணன் விளக்கியதை, தோழமை விஜயராஜ் சோழன் அடிக்கடி பிரமித்து சிலாகிப்பார் என்று மலரும் நினைவுகளை ஆழ்ந்த துயரத்தோடு அசைபோட்டுவிட்டு...
""நீங்கள் என் போன்றவர்களுக்கு இளங்கலை நுழைந்த காலத்திலிருந்து பிரமிப்பாகவே இருந்தீர்கள். போய்வாருங்கள் அண்ணா...'' என்று கண்ணக னுக்குக் கனத்த சோகத்தோடு கையசைக்கிறார்.
*
கவிஞர் சோழநிலா... ""ஒவ்வொரு முறையும் அவர் இல்லம் வரும்போ தெல்லாம் கைகள் இறுகப் பற்றி உன் அரசியல் பார்வையே வேறடா தம்பி என்று முத்தம் பொழியும் தோழர்.....'' என்று விழி ஈரம் கசிந்துவிட்டு...
""கடைசியாக மகள் இசைப்பிரியாவின் பிறந்த நாளில் அண்ணன் பாரதி மோகனின் அலைபேசி யிலிருந்து அழைத்து கண்ணீர் மல்கப் பேசியது இன்னும் ஒலித்து கொண்டி ருக்கிறது...
"யாழ்' சிற்றிதழில் தலையங்கம் படித்துவிட்டு யாருக்காகவும் உன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதேடா தம்பி என்று சொல்லும் போது மகிழ்வாகயிருந்தது.
இன்னும் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். உனது
உடலுக்குதான் மரணம்
எழுத்துக்கல்ல....''
என்கிறார் கனத்த மௌனத் தோடு.
கண்ணகனின் இன்னொரு இலக்கிய நண்பரான த.விஜயராஜ் இப்படி எழுதுகிறார்....
""ஆயிற்று ஒருவாரம் கண்ணகா... கடந்த புதன்கிழமை (15.01.2020) தைப்பொங்கல் நாளின் பிற்பகலில் உங்கள் வீட்டில் சந்தித்தேன். கவிஞர் ஜெயாபுதீன் எழுதிய, "பிள்ளைத்தானியம்' நூலை உங்களுக்காகக் கொண்டு வந்தேன். அதிலுள்ள கவிதைகளை நான் படிக்கப் படிக்க கேட்டுக் கொண்டே... நீங்கள் சிறிதளவு மது அருந்தினீர்கள். மேலும் மேலும் படிக்கச் சொன்னீர்.
அந்நூலில் உள்ள தங்கை வீடு என்ற தலைப்பிலான கவிதைகளைப் படித்தவுடன் நெகிழ்ந்து போய்க் கண்ணீர் சிந்தினீர்கள். என்னிடம் சொன்னீர் "அவன் பெரிய கவி. அவனை கோவை சென்று சந்திப்போம்' என்றீர். நானும் மகிழ்ந்து நிச்சயமாக சந்திப்போம் என்றேன். மேலும் பிள்ளைத்தானியம் நூல் வெளியீட்டு விழாவில் தோழர் பாமரன் பேசிய யூடியூப் காணொலியைச் சிரித்துச் சிரித்து ரசித்தீர். பின்னர் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பேசிய காணொலி, கவிஞர் ஜெயாபுதீனின் ஏற்புரை ஆகியவற்றைக் கண்டுவிட்டு... மீண்டும் சொன்னீர், நாம் இந்த கவியைக் கொண்டாட வேண்டும் என்று.
பின்னர் கவிஞர் ஃப்ரான்ஸிஸ் கிருபாவின் நேர்காணலையும் (கலைஞர் டிவியில் வந்தது) யூடியூப் காணொலியில் கண்டீர். கிருபா அண்ணனுடனான நினைவுகளைக் கொஞ்சம் பகிர்ந்தீர். (நெல்லி மரம் பூத்திருக்கு).
பின்னர் கவிஞர் கார்த்திக்திலகன் எழுதிய "அந்த வட்டத்தை யாராவது சமாதானப்படுத்துங்கள்' கவிதை நூல் மற்றும் கவிஞர் பூவிதழ் உமேஷ் எழுதிய "வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி' கவிதை நூல், மற்றும்.. கவிஞர் ராணிதிலக் எழுதிய "ப்ளக் ப்ளக் ப்ளக்' கவிதை நூல் என அவற்றில் இருந்த கவிதைகளை மாறி மாறிப் படித்தோம். திணையும் வாழ்வும்... முயங்கிய கவிதைகளுக்கு ஆயுள் அதிகம் என்றீர்கள்.
இருட்டத் தொடங்கிய பின்னர் விடைபெறும் போது, நகுலன் கவிதைகள் தொகுப்பு நூல் என்னிடம் இரண்டு இருக்கு.. ஒண்ணு நீ வச்சுக்கோ என்று தந்தீர்கள். தான் கைப்பட எழுதிய கவிதைகளை, கவிஞர் ராணிதிலக்கிடம் தந்துள்ளதாகவும் சொன்னீர்கள்.
இந்த நெகிழ்வான நாள் குறித்து அடுத்த நாள் இரவு கவிஞர் பாரதிமோகனிடம் பகிர்ந்தேன். இரவு நெடுநேரம் இருவரும் பேசிப் பிரிந்தோம். கண்ணகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு சற்று முன்னரே வந்திருந்தால்... இன்னும் எவ்வளவோ கவிதை அதிசயங்கள் நிகழ்ந்திருக்கும்'' என அவர் பேசியதும் நெகிழ்வு...’
என்றெல்லாம் நினைவுகளை நினைவுபடுத்திவிட்டு, கவிஞர் கண்ணகனின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தன என்பதை, அவரே விவரிக்கிறார்.
""மீண்டும் உங்களை ஞாயிற்றுக்கிழமை (19.1.2020) நண்பகல் நானும் என் மனைவி அனிதாவும் சந்திக்க வந்தபோது... மிகப் பெரிய உயிர் வலியில் நெஞ்சு ஏறி இறங்க பெருமூச்சு விட்டு துடித்துக்கொண்டிருந்தீர்கள்... அப்பாவும் அம்மாவும் அக்காவும் அண்ணனும் நாங்களும் கண்ணீர் மல்க... உங்களை ஆம்புலன்சில் செல்ல காரில் இடம்மாற்றிய வலிமிகுந்த கணங்களை நினைக்க நினைக்க கண்ணீர்தான். தங்களது அம்மா ஒரு வயர் கூடையில் உங்களது உடுப்புகளுடன் உங்களுக்கான செருப்பையும் எடுத்துக் கொண்டே வண்டியேறினார். பின்னர், உங்கள் மறைவுச் செய்தியடைந்த பொழுது துடித்துப் போனேன். இன்னும் அழுகிறேன். நீங்கள் தந்த நகுலன் கவிதைகள் நூலில், உங்கள் தோப்பில் உதிர்ந்த மயிலிறகு ஒன்றை இரவு கண்டதும்... மீண்டும் மீண்டும் கண்ணீர் பெருகுகிறது. இனி நான் யாரிடம் கேட்பேன்...மொழிசார்ந்த ஐயங்களை... நள்ளிரவுக் கவிதை உரையாடல்களை... அந்த கனிவு ததும்பும் சிரிப்பை....'' எழுத்துக்களில் தெரிகிறது கண்ணீர்க் கரிப்பு.
கவிஞரும் எழுத்தாளருமான விஷ்ணுபுரம் சரவணனின் கனத்த பதிவு இது. இதில் கண்ணகனின் தாவரக் காதலும் நட்பைக் கொண்டாடும் அன்பின் அடர்த்தியும் தெரிகிறது.
""கண்ணகனும் நானும் பயணித்த அனுபவங்கள் குறித்து எழுத ஏராளம் இருக்கின்றன. ஆனாலும், அதில் ஒன்றை விவரிக்கத் தொடங்கினாலும் இப்போது முட்டி மோதி கண்களைக் குளமாக்கிவிடும்.
அவரின் கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளை இருவரும் சேர்ந்து விவாதித்து, ஒவ்வொரு கவிதையைப் பற்றி நீண்ட உரையாடல் நிகழ்த்திய நான்கைந்து மணிநேரம் எப்போதும் என் நினைவில் இருக்கும். நவீனக் கவிதை குறித்த கண்ணகனின் பார்வையும் மரபை உள்ளிழுத்துக்கொண்ட ஞானமும் உரையாடலில் பகிரும்போது அத்தனை சுவாரஸ்யமானதாக மாறும். யூமா அண்ணனுடன் நானும், கண்ணகனும் இருந்த தருணங்களில் எல்லாம் கனவுலகு வாசிகளாகிவிடுவோம்.
கண்ணகனுக்கு ஒருவரை அல்லது அவரின் எழுத்துகளைப் பிடித்துவிட்டால், அவரின் பெயரால் மரக்கன்று அல்லது பூச்செடியை அவரின் தோட்டத்தில் நட்டுப் பராமரிப்பார். நண்பர்கள் அங்குச் செல்கையில் அந்த மரங்களை அறிமுகப்படுத்துவார். தமிழ்நதியின் நூல் விமர்சனக் கூட்டத்திற்கு அடுத்த நாள் அவரின் பெயரிலும் மரக்கன்று நட்டார். விஜயராஜ் மகன் அதியன் பிரபாகரன், என் மகள் தமிழினி... என அவரின் அன்பு, மரங்களாய் வளர்ந்த பட்டியல் நீளமானது.
எல்லோரின் மீது அன்பும் அக்கறையும் கொள்ளும் கண்ணகன், சில நேரங்களில் கறாரான விமர்சனம் செய்யவும் தயங்க மாட்டார். ஒரு நிகழ்வில் மூத்த எழுத்தாளரின் எழுத்துகள் மீதான தம் விமர்சனத்தைச் சமரசமின்றி முன்வைத்தார். அவரின் விமர்சன மரபு என்பது மிக நேர்த்தியானது.
தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப் பட்டினம், தஞ்சாவூர்... என இலக்கியக் கூட்டங்களுக்கு நானும் அவரும் என்னுடைய டி.வி.எஸ். எக்சலில் பயணித்த இரவுப் பொழுதுகள் அவ்வளவு ருசியானவை. முடிகளைக் கோதிக்கொண்டே சிரிக்கும் கண்ணகனின் அந்த உருவம் இப்போதும் நினைவில் வருகிறது. ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து வரும்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களை நிறுத்தி விசாரித்தபோது, கண்ணகன் பேசிய தூயதமிழ்ச் சொற்களைக் கேட்டு ஒரு நிமிடம் யோசித்தவர், மரியாதையுடன் 'நீங்க கிளம்புங்க' என்றார். பல கடைகளிலும் கண்ணகனின் நீண்ட தாடியைப் பார்த்த பலரும், சாமியார் என்றெண்ணி பேச்சுக்கொடுத்து கஷ்டங்களைச் சொல்லியதும் உண்டு. அற்புதமாகப் பாடுவார்; அநாயசமாக கம்பு சுற்றுவார்.
ஒருநாள் இரவு அவர் தோட்டத்தின் தரையெல்லாம் மின்மினிப்பூச்சிகள் படர்ந்து ஒளிரும் அழகை விதந்தோதி நீண்ட நேரம் பேசினார். அடுத்த நாள் காலையில் சன்னமான விசும்பலோடு குற்றவுணர்ச்சி ததும்ப அவர் பேசியது இப்போதும் காதில் கேட்கிறது. 'நேத்தைக்கு மரத்துக்கெல்லாம் பூச்சி மருந்து அடிச்சிருந்தாங் களாம். அதன் நெடி தாங்காது மின்மினிப்பூச்சிகளெல்லாம் தரையில் விழுந்து உயிருக்குப் போராடியிருந்துக்கு. நான் அது தெரியாம அழகுனு ரசிச்சிருக்கேன் சரவணன்' என்றார். அவருக்கென அம்மா கொண்டுவந்து வைக்கும் சாப்பாட்டில் பெரும் பங்கு பூனைக்கும் மயில்களுக் கும்தான் செல்லும்.
உலகையே அன்பால் நேசித்த கண்ணகன், தன் உடல் மீது அக்கறை வைக்க வில்லை. பலமுறை நாங்கள் வற்புறுத்தியும் அவர் அதைப் பொருட்படுத்தவும் இல்லை.
பல நாள்கள் நான் சண்டை போட்ட பிறகே சாப்பிட் டிருக்கிறார். சில நாள்களில், "நீ ஊட்டி விட்டால் சாப்பி டுகிறேன்' என்று குழந்தை போல அடம்பிடித்த இரவுகள் உண்டு. இப்போதும்கூட ஊட்டிவிட நான் தயாராக இருக்கிறேன்; வந்துவிடு கண்ணகா'' இதேபோல் ஈழக்கவிஞ ரான தமிழ்நதியும் கவிஞர் கண்ணகனோடு அதிகம் பழகியிராத நிலையிலும் அவருக்காகக் கவலையுறுகிறார்.
""கவிஞர் கண்ணகனை இரண்டு தடவைகளே சந்தித்திருக்கிறேன். ஒரு தடவை சென்னையில்.
மற்றோர் தடவை, திருவாரூரில் நடந்த ஒரு கூட்டத்தில். எனது கவிதைகளைப் பற்றி அவர் பேசியபோது. இரண்டு தடவைகளும் நான் அவதானித்தது, அன்பில் கரைந்துருகும் மனிதர் அவர் என்பதையே. தான் இழைத்திராத தவறுக்கும் குற்றவுணர்வு கொள்ளும் கருணை இதயம் கொண்டவர். திருவாரூர் கூட்டத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைப் பற்றிப் பேசியபோது கண்ணீர் சிந்தி அழுதார்.
கண்ணகனின் தோட்டத்தில் உட்கார்ந்து நானும் யூமாவும் பேசிக்கொண்டிருந்தோம் என்று விஷ்ணுபுரம் சரவணன் சொல்லும்போதெல்லாம், அந்த இடத்தையும் கண்ணகனையும் பற்றியொரு மனச்சித்திரம் தோன்றும். ஒருநாள் நானும் அந்தத் தோட்டத்துக்கு வருவேன்’என்று சரவணனிடம் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். வழக்கம்போல காற்றில் கரைந்த வார்த்தைகளாயின அவை.
ஒருவர் மறைந்தபிறகே அவரைப்பற்றி நினைத்துக்கொள்வதும் அரற்றுவதும் மாறா வழமை. நீங்கள் உடல்நலங்குன்றி இருந்தபோது வந்து பார்த்திருக்கலாம் என்ற குற்றவுணர்வு மேலிடுகிறது கண்ணகன்! அதுபோலவே, இந்தச் சிறிய வயதில் உங்களை இப்படி அழித்துக்கொண்டீர்களே என்ற வேதனையும். ஆனால், மறைந்தவர்களுக்கு அறிவுரை சொல்வதைப்போன்ற கயமை வேறேது மில்லை. அப்படிச் சொல்லும்போது, ‘நான் பெரிய ஒழுங்காக்கும்’என்ற பாவனை வந்துவிடுகிறது. போய்வாருங்கள் கண்ணகன். மரணம் என்பது சிலசமயம் விடுதலையும் அல்லவா?''
கீழ்வருவது கண்ணகனின் கவிதை...
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு...
எச்சரிக்கையாயிருங்கள்
எங்கள் பூமிக்கு
உப்பாயிருந்தவர்களைப் பற்றி
தேவன் சொப்பனத்தில் எச்சரித்ததாய்
கள்ளத் தீர்க்கதரிசிகள் கதைக்கும்
பிரசங்கக் கூட்டங்களின்
மனிதாபிமான உலகமீட்பர்கள்
பிணியாளர்களை சொஸ்தப்படுத்தியாயிற்று
என்று
நீதியின் மேல் பசிதாகமற்றவர்களாய்
விசனிக்கிறீர்கள்
அவர்களின் மோசடி விசுவாசத்திற்குப்
பாத்திரனாகாதவனின் புதிய நற்செய்தி
ஆகாயத்துப் பறவைகளின் கூடு
தரையில் பிய்த்தெறியப்பட்டிருக்கலாம்
பறவைகள் விதைப்பதும் அறுவடை செய்வதும்
இனியும் தொடரும்
ஆதலால் மீண்டும் கூடுகட்டும்’
கண்ணகனின் நட்புவட்டத்தைச் சேர்ந்த
அம்மாசத்திரம் சரவணனின் துயரப்பதிவு இது...
""காலையிலிருந்து அலையலையாய் தவித்துக் கொண்டிருக்கிறது மனது. நெஞ்சமெல்லாம் அன்பால் நிரம்பியிருந்த தம்பி சுபாஷ் சந்திரபோஸ் என்கிற கவிஞர் கண்ணகன் இறந்துபோய்விட்டான் எனபதை ஒப்பமறுக்கிறது மனம். அவனது தோப்பு வீட்டில் பலமுறை பேசி உறவாடியிருக்கிறோம். எங்கள் ஊர்த்தோப்புக்கு வந்து உரையாடி ஆற்றில் குளித்துக் கும்மாளமிட்டுச் சென்றிருக்கிறான்.
அவன் அன்பு அலாதியானது. திகட்டத் திகட்ட அவனைப்போல் அன்பைப் பரிமாற பிறிதொருவரால் இயலாது. அவனிடம் பேசிக்கொண்டிருப்பது பெருவிருப்பமானது. தேர்ந்த வாசிப்பாளன். தீவிரமான இலக்கியப் பிடிமானம் கொண்டவன். நல்ல கவிஞன் என்பதையெல்லாம் கடந்து அன்பால் சகமனிதரை அரவணைத்துக்கொள்பவன். எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காது தன் காரியங்களைச் செய்தவன். குழந்தைகள் மீது அசாதாரணமான அன்பைப் பொழிபவன். அவனை ஒரு ஆசிரியராக அல்லாது குடும்ப உறவைப்போல நெருங்கிப் பழகும் வாய்ப்பை பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கியவன்.
இறந்தபிறகு இப்படியான ஒருவனை இங்கே அறிமுகம் செய்யவேண்டிய அபத்தத்தை எண்ணி கழிவிரக்கம் கொள்கிறேன். மார்க்ஸ் 70 நிகழ்வின்போதே அவனைப் பற்றிய சில அதிர்ச்சியான தகவல்களை தோழர் பொதியவெற்பன் சொல்லியிருந்தார். காலக்கேடு, அவனைச் சந்திக்க வாய்க்கவில்லை. இன்று அவனது இறப்புச் செய்தி கேட்டபின் போய் ஒரு எட்டு அவனைப் பார்த்து வந்திருக்கலாம் என்று நண்பர் இளங்கோவிடம் அங்கலாய்த்ததைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. அவனது உயிரற்ற உடலைப் பார்க்கவும் நேரம் கைகூடவில்லை. அண்ணே அண்ணே என்று மிகுந்த அன்போடு அழைக்கும் அவனது குரலோசை பேரிரைச்சலுக்கிடையேயும் இப்போது கேட்டுக்கொண்டேயிருக்கிறது. சமீப வருடங்களாக வாழ்வியலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவன் கைக்கொண்ட போராட்டத்தில் இப்போது வெற்றியை ஈட்டியிருக்கிறான். என்னுள் முங்கியிருக்கும் உனது அன்பை சேமித்து வைக்கிறேன் பத்திரமாய்'' என்று கண்ணகனின் நினைவைப் பதியம் போடுகிறது இந்த எழுத்துச் சித்திரம்.
கண்ணகனுக்காக சக கவிஞர்களும் நண்பர்களும் வடிக்கும் கண்ணீரில் தெரிகிறது அவரது கவித்துவம் மிக்க அன்பின் அடர்த்தி. கண்ணகனை அவரது இலக்கிய நண்பர்கள் மட்டுமல்லாது அவர் தோட்டத்துத் தாவரங்களும், அவரது குறுவனத்தில் சிறகடிக்கும் பறவைகளும் கூடத் தேடிப் பரிதவிக்கின்றன அன்பின் தீராப் பசியோடு.
சிறந்த மனிதர்களையும் கவிஞர்களையும் நீண்டநாள் வாழவிடாத இயற்கையை, எந்தச் சொல் கொண்டு சபிப்பது?