கடலூரைச் சேர்ந்த எழுத்தாளர் வளவ துரையன் நீண்ட காலமாக இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருபவர். கதை, கவிதை, கட்டுரை, நாவல் என பல்வேறு தொகுப்புகளை வெளியிட்டு இருப்பவர். சங்கு இதழை இடைவிடாது நடத்திக்கொண்டு வருபவர். தமிழ்ச் சிற்றிதழ்கள் அனைத்திலும் எழுதிவருபவர். ஒரு நல்ல சொற்பொழிவாளர். இனிய உதயம் இதழுக்காக எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களிடம் ஒரு நேர்காணல்...
பொன்.குமார் : தங்களின் எழுத்துப் பயணம் எப்பொழுது தொடங்கியது?
வளவ துரையன் : எட்டாம் வகுப்புப் படிக்கும்போது கையெழுத்திதழ் தொடங்கி னேன். காதுகளில் இதுவரை கேட்ட கதைகளை அதில்எழுதி நண்பர் வட்டாரத்தில் சுற்றுக்கு விட்டேன். ஓசை நயமுள்ள பாடல்களை அதிகம் எழுதத் தொடங்கினேன். பள்ளி இறுதிவகுப்பு முடித்து வளவனூர் திருக்குறட்கழகத் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் முழு எழுத்தாளனா னேன் எனச் சொல்லலாம். அதில் அர. இராசாராம னோடு அப்போதிருந்திருந்த எல்லா நண்பர் களுக்கும் பங்கு உண்டு. எல்லாருமே எழுத்தாளர் கள். அனைவருமே நிறைய எழுதினோம். எழுதவேண்டும் என்பதற்காகவே பல கையெழுத்திதழ்கள் தொடங்கப்பட்டன. நான் அர. இராசாராமனை சிறப் பாசிரியராக் கொண்டு ‘சங்கு’ எனும் இதழ் ஆரம்பித்தேன். அர.இராசாராமன் அறிமுகப்படுத்திய மரபுப் பயிற்சியின் விளைவால் வெண்பா, ஆசிரியப்பா விருத்தங்கள் பழக்கமாயின. மாதம் ஒரு கவியரங்கமும் அதில் பாடப்படும் கவிதைகளை அப்பொழுதே விமர்சிப்பதும் ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தோம். திண்டிவனத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த குயில், திருச்சியிலிருந்து வந்த கவியுகம், கோவேந்தனின் கவிஞன் ஆகியவற்றில் எனது கவிதைகள் வரத் தொடங்கின. எனது பெரும்பாலான மரபுக் கவிதைகள் தெசிணி நடத்திய கவிதை எனும் இதழில்தான் வெளிவந்தன என்பதைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். மீண்டும் கதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆண்டுவிழாவில் நடத்த ஒரு நாடகம் எழுதச் சொன்னதுதான் அதற்குக் காரணமாகும். ஓர் இளவரசியின் மீது ஆசைப்பட்டு கொடூர மனங் கொண்ட முகலாய மன்னன் அவள் நாட்டின் மீது படையெடுப்பதாகவும் அவளோ நாட்டைக் காக்க தன் மார்பகங்களை அறுத்து அவனுக்குப் பரிசாக அனுப்புவதாகவும் ஒரு கதை எழுதினேன். ’ பரிசு வந்திருக்கிறது. ’ எனும் தலைப்பில் அக்கதை நாவலர் நெடுஞ்செழியன் இரண்டாவது முறை ஆரம்பித்து நடத்திய மன்றம் இதழில் வந்தது. இதுதான் அச்சில் வெளிவந்த என் முதல் கதையாக இருக்கும்.
தொடர்ந்து அரு.ராமநாதன் நடத்திய ’ காதல் ’ இதழில் ஒரு கதை வெளிவந்தது. ”வாத்து மேய்ப்பவள்” எனும் அக்கதை தன்னைக் காதலித்துக் கெடுத்துக் குழந்தையும் கொடுத்த ஒரு பணக்கார இளைஞனை வாத்து மேய்க்கும் ஒரு சாதாரணமானவள் பழிவாங்கும் கதையாகும். திருமணம் செய்ய மறுத்த அவனை நகரத்தில் பார்க்கும் போதெல்லாம் அனைவர் முன்னிலையிலும் குழந்தையைக் காட்டி "இதுதான் உன் அப்பா” என்று அவள் சொல்வது போல் செல்லும். அதன் பிறகு ஒரு பத்தாண்டுகள் கதை எழுதாமல் மரபுக் கவிதைகள் எழுதி வந்தேன். என்னுடைய ஒரு மரபுக் கவிதைத் தொகுப்புதான் வெளிவந்துள்ளது. இன்னும் மூன்று தொகுப்புகள் கொண்டுவரக்கூடிய அளவிற்குக் கவிதைகள் உள்ளன.
தொண்ணூறுகளில் நவீன இலக்கியம் அறிமுகமான பிறகு என் எழுத்தின் கருப் பொருளே மாறிவிட்டது. சிற்றிதழ்கள் வாசிப்பு அதிகமாகியது. சிறுகதையின் வடிவம் கைக்குள் வசப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் “சுகன்” என் சிறுகதைகளை நிறைய வெளியிட்டதால் என் எழுத்தின் மீது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. தற்பொழுது ஆறு சிறுகதைத்தொகுப்புகள் நான்கு கவிதைத்தொகுப்புகள் இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.
எழுத்தாளருக்கும் மக்களுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?
எழுத்தாளன் என்பவனும் இச் சமுதாயத்தின் ஓர் அங்கம்தானே?அவன் தன் கண்முன் காணும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க இயலாது. அவர்களின் துன்பங்களை, கவலைகளைக் காணும் போது அவற்றைத் தன் எழுத்தில் கொண்டுவந்து வெளிப்படுத்தக்கூடிய பெரும்பங்கு அவனிடம் இருக்கிறது. அவனால் மற்றவர்கள்போல வீதிக்கு இறங்கிப் போராட முடியாது. ஆனால் அமைப் பின் சார்பாக இயங்கக்கூடிய எழுத்தாளர் பலர் வீதிகளிலும் இறங்கிப் போராடுகிறார்கள். அது வரவேற்புக்குரிய ஒன்று. மக்களின் நிலையை எழுத்தாளன் வெளிப்படுத்தும்போது அது கலைஞர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பார்வையில் படுகிறது. எனவே மக்களின் உணர்வுகளை அறிந்து அவற்றை வெளிப் படுத்துவதுடன் அவர்களின் உணர்வுகளுக்குத் தீனி போடும் ஆற்றலுள்ளவனாக எழுத்தாளன் விளங்க வேண்டும்.
சங்கு இதழ் தங்களின் அடையாளமாக உள்ளது. தற்போதுவரை 184 இதழ்கள் வந்துள் ளன. இதழ் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் எப்பொழுது, ஏன் ஏற்பட்டது?
நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே கையெழுத்துப் பத்திரிக்கை மீது காதல்கொண்டு தொடங்கி நடத்தியவன். உயர்நிலைப்பள்ளி சென்ற பின்னும் தொடர்ச்சியாக நடத்தவில்லை என்றாலும் அவ்வப்போது நடத்திவந்தேன். திருக்குறட் கழகத்தில் எல்லாருமே படைப்பாளிகள். பெரும் பாலும் கவிஞர்கள். எழுதும் படைப்பைப் பிறரிடம் காட்டவேண்டும் அல்லவா? அதற்காகவே சங்கு இதழ் தொடங்கப்பட்டது. அதன் இறுதியில் படித்தவர் கள் தத்தம் கருத்துகளை எழுத இடம்விட்டிருந்தோம். வளவனூர் நூலகத்திலும் அதை அனைவரும் படிக்க வாய்ப்பளித்தோம். நூலகத்தில் சில நாள்கள் இருந்தபின் அது பக்கத்துக் கிராமங்களுக்கும் நண்பர்கள் மூலம் சென்றது.
கையெழுத்திதழ், பின் ஒளிஅச்சு இதழ், பின் உருட்டச்சு இதழ் என்று தன் பயணத்தை தொண் ணூற்று ஒன்பது இதழ்கள் நடந்து நூறாவது இதலிருந்து அச்சிதழாக வருகிறது. அதில் எழுதிய படைப்பாளிகள் என்று பாவண்ணன், நாஞ்சில் நாடன், தேவதேவன், அன்பாதவன், பழமலய், எஸ்ஸார்சி, முருகேச பாண்டியன், எஸ். சங்கர நாராயணன் போன்றோரைச் சொல்லலாம். கேட்டவுடன் கவிதை அனுப்பிய நீல. பத்மநாபன், கலாப்ரியா ஆகியோரையும் சொல்ல வேண்டும். இவர்களின் படைப்புகள் எல்லாமே முக்கியமானவை. மேலும் பொன்னீலன், சி. மகேந்திரன், பேராசிரியர் சற்குணம், ஹரணி, முருகேசபாண்டியன் போன்றோரின் நேர்காணல்கள் அதில் வெளிவந்துள்ளன.
பொன். குமாரின் நேர்காணலும் வந்துள்ளது.
ஒரு சிற்றிதழ் நடத்துவது மிகவும் சிரமமான பணியாயிற்றே? அந்த அனுபவம் பற்றிக் கூறுங் களேன்?
சிற்றிதழ் தொடங்குவதற்குத் தேவை முக்கியமான இரண்டு. ஒன்று பொருளாதாரம். இன்னொன்று படைப்புகளின் வருகை. எல்லாச் சிற்றிதழ்களுமே பொருள் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அந்தந்த ஆசிரியரின் மன நிறைவுக்காகவே நடத்தப்படுகின்றன. எனக்குப் பொருள்நிலையில் இழப்பு ஏற்பட்டாலும் தாங்கக்கூடிய நிலையில் இருக்கிறேன். எனக்குப் பல்வேறு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பு இருப்பதால் படைப்பு பற்றாக்குறையும் இல்லை. நான் வரும் படைப்பு சுமாராக இருப்பினும் வெளியிட்டு விடுவேன். ஆனால் அடுத்தடுத்து அதேபோல் வந்தால் மறுத்து விடுவேன். ஏன் என் படைப்புகளை வெளியிடவில்லை என்று கேட்கும்போது அதற்கான காரணங்களையும் கூறிவிடுவேன். எனக்கு வாய்த்த அச்சக நண்பர்கள் இதுவரை மிகவும் நல்லவர்கள். எனவே எனக்கு அதிக சிரமம் ஏதும் இல்லை.
சங்கு இதழின் தொடக்கக் காலப் படைப் பாளிகளுக்கும் தற்போதுள்ள படைப்பாளி களுக்கும் என்ன வித்தியாசம்?
சங்கு இதழின் தொடக்கக் காலப் படைப்பளிகள் மரபு வழி வந்தவர்கள். தொடக்கக் காலத்தில் சங்கு இதழில் வெண்பாக்கள்கூட வெளிவந்துள்ளன. பின்னால் போகப்போக அவர்கள் எழுதுவதை நிறுத்திவிட்டனர். புது எழுத்தைப் பின்பற்றும் எழுத்தாளர்கள் தற்போது நிறைய எழுதுகிறார்கள். ஆனாலும் சங்கு இப்பொழுதும் புதுக் கருத்துகளைக் கூறும் மரபுக்கவிதைகளை வெளியிட்டுதான் வருகிறது.
தாங்கள் ஓர் இதழாளர். மற்ற இதழ்களில் எல்லாம் தவறாது எழுதி வருகிறீரே? எப்படிச் சாத்தியமாகிறது?
என்னைப் பொருத்தவரையில் நான் முதலில் ஒரு படைப்பாளன். அதன்பின்தான் ஓர் இதழாசிரியன்.
அஞ்சலைப் பிரிக்கும்போதே அல்லது மின்னஞ் சலைப் படிக்கும்போதே அது வெளியிட ஏற்றதானால் அதற்கான கோப்பிற்கு அது போய்விடும். குறிப்பிட்ட காலத்தில் அக்கோப்பைப் பார்த்து தேவையானவை அச்சகம் போகும். பின் மெய்ப்பு பார்க்கவும், தேவையான திருத்தங்கள் செய்யவும் ஐந்து அல்லது ஆறு நாள்கள் ஆகும். இதுவே சங்கிற்கு நான் தரும் உழைப்பு. மேலும் சங்கு காலாண்டிதழ். அதனால் இதழுக்கான பணி என்பது சிரமம் இல்லை. எனவே எழுதும் பணிக்கு இதழ் நடத்தும் பணி குறுக்கிடுவதே இல்லை.
சிற்றிதழ்களின் தற்போதைய போக்கு எப்படி உள்ளது?
சிறப்பாகவே இருப்பதாக உணர்கிறேன். எனக்கு சங்கு இதழுக்கு மாற்றிதழாக சுமார் நாற்பது இதழ்கள் வருகின்றன. மேலும் இணையத்தில் ஏறக்குறைய பத்துச் சிற்றிதழ்கள் வாசிக்கிறேன். அவரவர்கள் தத்தம் குறிக்கோளுக்கேற்ப சிற்றிதழ்களை நடத்துகிறார் கள். புதிதாக எழுத வருபவர்களுக்குச் சிற்றிதழ்கள் கைகொடுத்து மேலே தூக்கிவிடுகின்றன. பொதுவாக இவற்றுக்குச் சந்தா செலுத்துவோர்கள் மிகக்குறைவு. தங்கள் படைப்புகளை வெளியிடும் இதழுக்குக் கூடச் சந்தா செலுத்தும் மனம் இவர்களுக்கு இருப்பதில்லை. ஆனாலும் சந்தாதாரரா என்று பார்க்காமல்தான் படைப்புகளைச் சிற்றிதழ்கள் வெளியிடுகின்றன. தனிநபர் தாக்குதல்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் போன்றவை சிற்றிதழ்களில் இப்பொழுது அறவே இல்லை.
சிற்றிதழாளர், கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், நாவலாசிரியர், என இயங்கி வருகிறீர். தாங்கள் விரும்பி இயங்கும் தளம் எது? ஏன்?
கவிதைதான். அதில்தான் எண்ணத்தை அழகு ணர்ச்சியோடு சொல்ல முடியும். சிறுகதையிலோ கட்டுரையிலோ அழகுணர்ச்சி என்பது இடையூறா கவே இருக்கும். கவிதைக்கு அழகுணர்வு மேலும் அதற்கு மெருகூட்டும். மேலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து வாசகனின் மனத்தில் இடம் பிடிப்பது கவிதையே. அது ஒரு சவாலும் கூட. அதை எழுதுவதில் நான் இன்பம் அடைகிறேன். தவிர மனத் தில் பட்ட தீப்பொறி பட்டென வெளிப்பட்டுச் சிதறுவது கவிதையில்தான். சிறுகதையில் கட்டுரை யில் அதை அசை போட்டபின்தான் பிரசவிக்க இயலும்.
படைப்புகள் மீது விமர்னமும் செய்து வருகிறீர். ஒரு படைப்பாளி என்னும் விதத்தில் விமர்சனத்தின்போது சமரசம் செய்துகொள்வீரா? இல்லை கறாராக இருக்குமா விமர்சனம்?
எழுத்தாளர் என்று வருவதே சிலர்தான். அதிலும் நீடிப்பவர் மிகக்குறைவு. அவர்களின் படைப்புகளின் மீது கறாரான விமர்சனம் வைத்துக் காயப்படுத்தி அவர் எழுதுவதையே நிறுத்திவிடலாம் என்று கருதும் எண்ணத்திற்கு நாம் பாதை போட்டுக் கொடுக்கக்கூடாது என்பது என் கருத்து. ஆனால் குறைகளைச் சொல்லிக் காட்டத்தான் வேண்டும். அது கடிதோச்சி மெல்ல எறிக என்றிருக்க வேண்டும். நிறைய குறைகள் இருப்பின் அவற்றை அவருக்குத் தனிப்பட்ட முறையில் சொல்லிக் காட்டுவேன்.
புதுக்கவிதையும் எழுதுகிறீர்; மரபுக் கவிதையும் எழுதுகிறீர்; மரபிற்கான வரவேற்பு நவீனமயமாகிவிட்ட சூழலில் எப்படி உள்ளது?
கண்களைப் பறிக்கும் விளக்கொளிகள், காதைப் பிளக்கும் டிரம் ஓசைகள், வாண வேடிக்கைகள், பெயரே தெரியாத உணவு வகைகள் என்று இன்று திருமண நிகழ்வே நவீனமாகிவிட்டது. ஆனாலும் அட்சதைகளும் தூவும் பூக்களும் குத்து விளக்கும் தாம்பூலம் கொடுப்பதும் மறையவில்லையே. மரபுக் கவிதைகள் என்றும் வாழும். இன்று கவிதை, கவியுகம், கவிஞன், முல்லைச்சரம் என்று முழுமையாய் மரபை வெளியிடும் சிற்றிதழ்களில்லை. ஆனாலும் பல சிற்றிதழ்கள் சங்கு உட்பட மரபை வெளியிட்டுத்தான் வருகின்றன. மேலும் முன்பிருந்த புதுக்கவிதை-மரபுக்கவிதை சண்டை ஓய்ந்து போய் அவரவர் அவரவர் வழிகளைத் தேர்ந் தெடுத்துச் செல்கின்றனர். சங்கு இதழுக்கான நேர் காணலில் பொன்னீலன் “மரபுக் கவிதைதான் சமுதாயத் தைத் தட்டி எழுப்பும்’ என்று கூறியது நினைவுக்கு வருகிறது.
எழுத்தாளர்கள் பாவண்ணன், ஜெயமோகன் ஆகிய இருவருடனுமான நட்பு குறித்து?
பாவண்ணன் என் சொந்த ஊரான வளவனூ ரைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் சிறுகதைகள் எழுதலானார்.
எங்கள் ஊர்க்காரர் பாவண்ணன் தொடர்பு அவர் பணியேற்று பிற மாநிலம் சென்றபின் சற்று விலகி இருந்தது. இங்குக் கடலூரில் அவரின் சிறுகதைத் தொகுப்பு வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்பதை நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்து ஒரு விமர்சனம் எழுத மீண்டும் தொடர்பு ஆல்போல் தழைத்து விட்டது. என் முதல் நூலான ” தாயம்மா என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு அவர்தான் அணிந்துரை எழுதித் தந்தார். என் இரண்டாம் மதகு புதினத்திற்கும் அவர் சிறப்பான அணிந்துரை எழுதி உள்ளார்.. பெரும்பாலும் அவர் எழுத்தைப் படித்த உடன் அவருக்கு அது பற்றிக் கருத்து கூறி விடுவேன். என் எழுத்துகளுக்கு எப்பொழுதும் ஊக்கம் தருபவர். காய்தல் உவத்தல் இன்றிக் கருத்துகள் கூறுபவர். பின்தொடரும் நிழலின் குரல் படித்து ஒரு உள்நாட்டு மடலில் விமர்சனம் ஜெயமோகனுக்கு எழுத அவரிடமிருந்து ஆறு பக்கங்களுக்குப் பதில் வந்தது. மடல் தொடர்பு அதிகமாயிற்று. அப்போது நான் கேட்ட உடனே என் சங்க இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய சிகரங்கள் தொகுப்பிற்கு சுமார் முப்பது பக்கங்களுக்கு அருமையான அணிந்துரை எழுதித் தந்துள்ளார். மதுரையில் உயிர்மை வெளியிட்ட அவரின் குறுநாவல் முழுத்தொகுப்பை எனக்கு வெளியிட வாய்ப்பு தந்தார். இடையில் சில ஆண்டுக்காலம் இவரிடமும் தொடர்பு விட்டுவிட்டது. பின் புதுவைக்கு அவர் வரும்போதெல்லாம் சந்திக்க இப்பொழுது அவர் மனத்தில் நான் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறேன். இரண்டு மூன்று முறை கோவை விஷ்ணுபுரம் விழாவிற்கும் சென்று வந்துள்ளேன். ஓர் இணையவழிக் கலந்துரையாடலில் நான் மகாபராதத் தொடர் சொற்பொழிவு ஆற்றுவதை நினைவுகூர்ந்து குறிப்பிட்டிருக்கிறார்.
தாங்கள் எழுதிய தொகுப்புகளில் தனித் துவமானது எது? ஏன்?
தனித்துவமானது என்று தேரு பிறந்த கதை சிறுகதைத் தொகுப்பைக் கூறலாம். தேரு பிறந்த கதை என்ற கதை இருந்ததாலேயே அத்தொகுப்பு எட்டயபுரம், கம்பம், மற்றும் சேலம் ஆகிய ஊர்களில் முதல் பரிசு பெற்றது என நினைக்கிறேன். அக்கதை பற்றிப் பலபேர் என்னிடம் பல விமர்சனங்கள் வைத்தார் கள். பாராட்டியவர்களும் உண்டு. கண்டித்தவர்களும் உண்டு. எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் ஓர் வைணவ அறிஞர் தேரை ஒற்றுமையின் சின்னம் என்போம், ஊர்கூடித் தேர் இழுப்போம் என்போம், என்ன நீங்கள் இப்படி எழுதி விட்டீர்களே ” என்று மிகவும் வருத்தப் பட்டார். நான் அதிகமாகத் தேரோட்டங்கள் பார்த்தது கிடை யாது. கிருஷ்ணாபுரம் பள்ளியில் பணி யாற்ற வந்தபோது தான் தேரோட்டத்தின் முக்கி யத்தை உணர்ந்தேன். கிருஷ்ணாபுரத்திலிருந்து வைணவ திவ்யதேசமான திருவந்திபுரம் மிக அருகில் இருந்தது. அக்கோயிலின் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுப் புற கிராமத்தினர் அனைவருமே அதைப் பார்க்கக் கூடுவார்கள். அதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் என்ணிக்கை மிகவும் குறையும்.
கிருஷ்ணாபுரத்திலிருந்து தொலைவில் இருக்கும் மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலின் தேரோட்டம் பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது வழக்கம். ஆண்டுக்கொருமுறை நடக்குமதற்குப் போக மாதம் தோறும் பணம் செலுத்திச் சீட்டுகட்டி மக்கள் போவதை கிருஷ்ணாபுரத்தில் பார்த்தேன். அத் திருநாளில் போய் அத்தேரைப் பார்க்காவிட்டல் ஏதோ பெரிய பாவம் செய்வதாய் அவர்கள் வருந்து வதைக் கண்டிருக்கிறேன்.
ஆனால் எனக்கு வியப்பைத் தந்தது எதுவென்றால் பெரும்பாலும் மேல் மலையனூர் செல்பவர் கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட வகுப் பினராக இருந்தது தான். அவர்கள் உள்ளூர்க் கோயிலில் நுழைய முடி யாத வர்கள். பெரும்பா லும் சாமி களின் வீதி புறப்பாடே கோயிலுக்கு நடந்து வர முடியாத வயதானவர்கள் தம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் சாமியைத் தரிசிக்கச் செய்த ஏற்பாடுதான் என்பது எண்ணம். இதே அடிப்படையில் சிந்தனை வளர்ந்து தேரு பிறந்த கதை உருவாயிற்று என்று கூறலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் உள்ளே போக முடியாதவர்கள் அன்று ஒரு நாள் இறைவனைத் தேரில் தரிசிக்கிறார்கள் என்ற கருவை வைத்து எழுதப் பட்ட கதை அது. கரு வளர்ந்து ஏன் தேரை உருவாக் கினார்கள் என்ற கேள்வியை எழுப்பி விடையையும் கண்டது எனலாம்.
தங்கள் கவிதைகளில் அதிகம் பேசப்பபட்ட கவிதை எது அல்லது எடுத்துக் காட்டப்பட்ட கவிதை எது?
இரண்டு கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். முதல் கவிதை எதிர்பார்ப்பு. இதுதான் ஓர் இதழில் வெளியான என் முதல் நவீன கவிதை. இதைத் தேர்ந்தெடுத்து சுஜாதா கணையாழியில் வெளியிட்டார்.
எதிர்பார்ப்பு
காம்பவுண்டுச் சுவர்மேல்
ஒரு சோற்றுக் கவளம்
அம்மா அடித்துத்
துணி துவைக்கும் சத்தம்
ஜன்னலோரம் பையன்
பாடம் படிக்கிறான்
பேருந்தின் ஓங்கார
பெரிய இரைச்சல்
வானொலியில் திரை இசை
வேப்பமரக்கிளையில்
காத்திருக்கும் காக்கை
மற்றொரு கவிதை வாழ்க்கை . இக்கவிதையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டில் பேனரில் வரைந்து மாட்டி வைத்திருந்ததாகச் சில தோழர்கள் சொன்னார்கள்.
வாழ்க்கை
விடியல் நேரம்
விரைவாய் மிதிக்கும்
பால்காரர்கள்
தலையில் குட்டு வாங்கிக்
குவளையைக் கழுவும்
கடைப்பையன்
விபூதி குழைத்திட்டுத்
தயாராகும் பிச்சைச்சாமியார்
சுமக்க முடியாத கூடையுடன்
கீரைக்காரிகள்
தனிப்படிப்பு நாடிப் பறக்கும்
தளிர்ச் சிறுவர்கள்
தூக்கக் கலக்கத்துடன்
காய்ந்த பூவுடன்
தளர்நடையிடும்
இரவு உழைப்பாளி
எப்படியோ
வாழ்ந்துதான்
தொலைக்க வேண்டி இருக்கிறது
வாழ்க்கையை
இதுவரை எத்தனை விருதுகள் கிடைத் துள்ளன? விருதுகள் தங்கள் பணியைத் தொடரச் செய்கிறதா?
எந்தப் படைப்பாளியும் விருதுகளை எதிர் பார்த்து எழுதுவதில்லை. இருந்தாலும் ஒரு விருது பெறும்போது மகிழ்ச்சி அதிகமாக வருகிறது. நம் எழுத்தையும் பாராட்டுகிறார்கள். இன்னும் எழுத்தில் கவனத்துடன் செயல்படவேண்டும் என்னும் எண்ணம் உண்டாகிறது. பரிசுகள், விருதுகள் பெற்றவை ஏராளம்.
தங்கள் குடும்பம் குறித்து?
எனக்கு எந்த எதிர்பார்ப்பும் அதிகம் இல்லாத தால் நீர்வழிப்படும் புணை போல ஓடிக் கொண்டி ருக்கிறேன். என் இலக்கியப் பணி எனக்கு முழு மன நிறைவளிக்கிறது. என் மனைவி அலர்மேல் மங்கை தமிழில் பட்டம் பெற்றவர். ஆனால் பணிக்காலம் முழுதும் முதல் வகுப்பு மாணவர்க்கே கற்பித்து நற்பெயர் பெற்றவர். நானும் அவரும் ஒரே பள்ளியில் பணிக்காலம் முழுதும் கழித்தோம். காரணம் அது ஒரு தனியார் பள்ளி. என் எழுத்துகளை முதலில் படிப்பார். கருத்துகள் சொல்வார்.
என் மகன்கள் இருவருமே கணினித்துறையில் பணியாற்றுபவர்கள். இருவரும் என் எழுத்தை வாசிப்பவர்கள். மூத்த மகன் எழிலன் மரபில் தோய்ந்தவன். சங்க இலக்கியம் முதல் தற்காலம் வரை இலக்கிய நயங்களை எழுதி ”உள்ளம் படர்ந்த நெறி” என்னும் ஒரு நூல் எழுதி உள்ளான். சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. அது தவிர அறுசீர் விருத்தங்களில் ’கண்ணன் போற்றி” என்னும் நூலும் எழுதி உள்ளான். இளையவன் முகிலன் புதுக்கவிதைகள் எழுதி உள்ளான். என் எழுத்தில் மட்டுமின்றி எல்லா நவீன எழுத்தாளர்கள் எழுத்துகளிலும் ஈடுபடு உடையவன். என் ஒரே மகள் அல்லி. அவரும் பட்டதாரி. மருமகன் புதுக்கோட்டையில் தனியார்பள்ளி ஆசிரியர் சிவக்குமார். அவரும் தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்.