சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். அது 1958-ஆம் ஆண்டு. பள்ளி ஆண்டு விழாவுக்கு வருகை தந்த புரட்சிக்கவிஞர் தன் ஆசான் பாரதியாரைப் பற்றி உணர்ச்சி ததும்ப உரையாற்றுகிறார். பாரதி எப்படி உண்பார் என்பதை எடுத்துச் சொல்கிறார். விருந்துக்கு எவரேனும் பாரதியாரை அழைத்தால், வலது கைப்பக்கம், பக்கவாட்டில்தான் இலைபோடச் சொல்வாராம். உணவுப் பொருள்கள் யாவும் பரிமாறப்பட்டபின் வலது கையால் தலை குனியாமல் உணவை வாயில் எடுத்துப் போட்டுக்கொள்வாராம். ஏன் அப்படி? முன்னால் இலையைப் போட்டால் பரிமாறுபவன் முன் தலைகுனிந்து உண்ண வேண்டியதிருக்குமாம். எவருக்கும் தலைவணங்கக் கூடாது என்கிற பாரதியின் சுயமரியாதை எண்ணம் இலையிலும் எதிரொலித்திருக்கிறது. அப்படியே நிமிர்ந்து உட்கார்ந்துதான் உண்பாராம். இந்தச் செய்தியைப் புரட்சிக்கவிஞர் சொல்லக் கேட்ட அரங்கம் வியப்பில் ஆழ்ந்து போனது.

ff

அதைக் கேட்ட சிறுவனுக்குள் சுய மரியாதைச் சூடு ஏறியிருக்கிறது. அவ்வப்போது அந்தச் சிறுவனும் கவிதை எழுதுவான். ஆசிரியர் தட்சிணாமூர்த்திப்புலவர் உற்சாகப் படுத்துவார். அன்று, சிறுவனை அழைத்துக் கொண்டுபோய்ப் புரட்சிக்கவிஞர் முன் நிறுத்துகிறார். அடுத்தநாள் சிறுவன் கவிதை களோடு அவரைச் சந்திக்கிறான் படித்துப் பார்த்தவுடன் அன்போடு வாழ்த்துரை வழங்குகிறார் புரட்சிக்கவிஞர். அந்த வாழ்த்துரையே முன்னுரையாக 1961ஆம் ஆண்டு வெண்ணிலா என்ற முதல் கவிதைத் தொகுதி வெளிவருகிறது. அந்தச் சிறுவன் தான் பின்னாளில் மக்கள்திலகத்தின் மனங்கவர்ந்த கவிஞராக அவருடைய ஆட்சிக் காலத்தில் மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் இருந்த கவிஞர் முத்துலிங்கம். திரை இசைப்பாடல்கள் ஆயிரத்து அறுநூறுக்கு மேல் எழுதித் திசைகளெங்கும்

“அன்புக்கு நான் அடிமை-தமிழ்ப்

Advertisment

பண்புக்கு நான் அடிமை’’

என்று தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடியில் 1942ஆம் ஆண்டு மார்ச் திங்கள் இருபதாம் நாள் சுப்பையா சேர்வை, குஞ்சரம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1966 முதல் 1972 வரை கலைஞரின் முரசொலி நாளிதழில் துணையாசிரியராகவும், 1972 முதல் 1975 வரை அலைஓசை நாளிதழில் துணையாசிரியராகவும் இருந்தார். அவரே குறிப்பிட்டதுபோல் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களைத் தான் அதிகம் பார்ப்பேன். அதில் வருகின்ற பாடலைப் போல் நமது பாடலும் திரைப்படத்தில் வெளிவருமா என்று ஏங்கினேன் அதற்காகவே சென்னை வந்தேன். அப்போது பத்திரிகைத் துறைதான் என்னை ஏற்றுக் கொண்டது.

Advertisment

திராவிட இயக்க உணர்வுள்ளவன் என்ற காரணத்தால் கலைஞர் கருணாநிதி அவர்களின், முரசொலி நாளேட்டில் ஏழாண்டு காலம் துணையாசிரியராகப் பணியாற்றினேன். என் கவிதைப் பூக்கள் மலர்வதற்கு என் சிந்தனை மரத்திற்கு நீர்வார்த்த இடம் முரசொலி. அப்போதுதான் பல கவியரங்கங்களில் நான் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றேன். அதில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அண்ணா கவியரங்கம் குறிப்பிடத்தக்கது. அவர் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய பிறகுதான் கவியரங்கத்திற்குப் பெரும் வரவேற்பும் எழுச்சியும் தமிழ்நாட்டில் ஏற்பட்டது.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு அவர் தனிக்கட்சி தொடங்கிய பிறகு, எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்த “அலைஓசை’’ என்ற பத்திரிகைக்குக் சென்று விட்டேன். நானும் அ.தி.மு.க.வில் சேர்ந்து மேடைப்பேச்சாளனாகவும் ஆகிவிட்டேன்.’’(காற்றில் விதைத்த கருத்து பக் 171). 1973ஆம் ஆண்டு வெளிவந்த “பொன்னுக்குத் தங்க மனசு’’ என்ற படத்தில்தான் முதன்முதல் பாடல் எழுதினார். காலஓட்டத்தில் எவ்வளவோ மாற்றம். அவர் இலக்கிய வாழ்விலும் ஏற்றம்.

கவிஞரின் கவிதையை உவமைக்கவிஞர் சுரதா, தான் நடத்திவந்த “இலக்கியம்’’ இதழில் முதன்முதல் வெளியிட்டுக் கவிஞராக உலகுக்கு அறிமுகப்படுத்தினார். “பறக்கும் நாவற்பழம் எது கூறுக?’’ என்று இலக்கியம் ஏடு நடத்திய குறள்வெண்பாப் போட்டியில்

“திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே

பறக்கின்ற நாவற் பழம்’’

என்று எழுதி முதற்பரிசைப் பெற்றார். தான் கவிதை எழுதுவதற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் சுரதாதான் என்று நன்றியுணர்ச்சியோடு நவில்பவர் கவிஞர். 1981ஆம் ஆண்டு “பாவேந்தர் விருது’’வழங்கும் விழாவில் “பாரதிதாசன் மிகவும் தன்மானம் உள்ள கவிஞர். அப்படிப்பட்ட கவிஞர் பெயரிலேயே கொடுக்கக் கூடிய விருதை தன்மானமுள்ள மனிதராகவும், கவிஞராகவும் விளங்கும் முத்து லிங்கத்திற்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பது?’’ என்று சொல்லி அன்றைய முதல்வர் மக்கள்திலகம் வழங்கினார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்? மக்கள் திலகம் ஒருமுறை பண உதவி செய்ய முயன்றபோது, “எனக்குப் பணம் வேண்டாம். வேலை கொடுங்கள்’’ என்று கேட்டவர் கவிஞர்.

mm

காலநதியில் கரையாதவன்“ என்று தன்னைக் குறித்து எழுதிய வரிகள் இயல்பானவை. அமைதியும் அடக்கமும் கொண்டவராக விளங்கும் கவிஞர்

“எதையும் வியாபாரம் ஆக்காதவன்-என்

எதிரிக்கும் தீமை நினைக்காதவன்

எதையும் எதிர்பார்த் தெழுதாதவன்-நான்

இன்னொரு நக்கீரன் என்றானவன்.

தஞ்சைநெற் கதிர்போல் பணிகின்றவன்-எந்தச்

சமயமும் தீமைமுன் நிமிர்கின்றவன்.’’

என்பது அவரைக் குறித்து அவரே தீட்டிய சொற்சித்திரம். ஆர்ப்பாட்டமில்லாத எளிய நடையில் தான் சொல்ல வந்த கருத்துகளை அடுக்கிச் சொல்வதில் வல்லவர்.. இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை அன்றே

“தகுதி அற்றவர்கள்- இன்று

தலைவர்கள் ஆகிவிட்டார்

தர்ம நியாயங்களை- அவர்கள்

தரைக்குள் புதைத்துவிட்டார்.

காந்தி படம்போட்ட- நோட்டு

கையில் இருந்த தென்றால்

ஆட்சியைப் பிடித்திடலாம்- நீதியை

ஆட்டிப் படைத்திடலாம்.

ஊழல் புரியெனவே- இந்தியா

உலகில் விளங்குதடா- இதை

உருப்பட வைப்பதற்கே-வழியொன்றும்

புலப்பட வில்லையடா..’’

என்று “தேசப்பிதா திரும்பி வந்தால்’’ என்கிற கவிதையில் தெளிவாகச் சொல்கிறார். காரணம் ஏழை இந்தியன் எவனும் நலமாக இருக்க முடியுமா? ஊழல் முதலைகள் நாட்டையே விழுங்குகின்றன. ஒப்புக்குச் சப்பாணியாக உதவாத தத்துவங்கள் எத்தனையோ உலாவருகின்றன. கவிஞர்

“ஊழல் முதலைகள் உலாவரும் இந்நாட்டில்

ஏழை இந்தியன் எவன்இங்கே வாழ்கின்றான்?

செத்துப் பிழைத்துத்தான் தினம்தோறும் எழுகின்றான்!’’

என்கிறார். தேர்தல் திருவிழாவில் முதலில் காணாமல் போவதே ஜனநாயகமாகத்தான் இருக்கிறது. கள்ளச்சாராயத்திற்கும் காசுக்கும் விலைபோய்விடுகிற வாக்காளப் பெருமகன் என்ன எதிர்காலத்தைக் காண முடியும்? பதவி வெறி, வேட்டை குதறி எடுக்கிறது. “பாரதியார்“- குறித்து 25.9.2010-ல் தேவகோட்டையில் நடைபெற்ற கவியரங்கில்

“ஜனநாயகம் என்னும் தக்கதொரு பேராலே

பணநாய கம்தான் பாரதத்தை ஆள்கிறது.

சில்லறையைக் கண்டுவிட்டால் தீர்ப்பின் முடிவுகளும்

கல்லறைக்கும் போகின்ற காட்சிகளைக் காணுகின்றோம்

சன்மானம் தந்துவிட்டால் சட்டமெல்லாம் வளைந்து

தன்மானம் இழந்து சலாம்போட்டு நிற்கிறது.

ஜேப்படித் திருடர்களைச் சிறைக்குள்ளே போட்டுவிட்டுக்

கொள்ளை அடிப்பவர்க்குக் கொடிதூக்கும் தேசமிது!’’

என்று கடுமையாகச் சாடுகிறார். அதோடு விட்டாரா கவிஞர். ஆட்சியைத் தக்க வைக்க நடத்துகிற நாடகங் களைக் கண்டு வெம்பிக் குமுறுகிறார். கொள்கையாவது வெங்காயமாவது.. கொள்ளையடித்தால் போதும் என்பதே கொள்கையானபின் இனமாவது மொழியாவது? அதனால்தானோ என்னவோ

dd

“முதலமைச்சர் ஆனவரை முறையின்றிக் கவிழ்த்துவிட்டு

முதலமைச்சர் ஆனவர்கள் முறைப்படி சிலருண்டு!

பதவிக்காய் கட்சியைப் பலரிடம் அடகுவைக்கும்

முதலைத் தலைவர்களும் முக்கால் வாசியுண்டு!’’

என்பவர் 2009-ல் நடைபெற்ற “கடமை’’ என்ற கவியரங்கக் கவிதையில்

“ஆட்சி யாளரின் அருங்கடமை இன்றென்ன?

தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு

இனத்தை மொழியை எவரிங்கே அழித்தாலும்

அதற்குத் துணைபோகும் அருஞ்செயல் புரிவதுதான்!

சான்றோர்கள் கடமை தீமையைக் கண்டித்தல்

சர்க்காரின் கடமை தீயோரைத் தண்டித்தல்

இன்று

தண்டிக்கப்பட வேண்டியதே சர்க்காராய் இருக்கிறது.“

என்று பாடினார். எக்காலத்தும் பொருந்துகிற எரிதழல் வரிகளாக இருக்கின்றன. பதவியை இழந்து விட்டால் இப்படிப்பட்டவர்களின் நிலை என்ன என்பதை

“இன்றைக் கமைச்சராய் இருக்கும் பலரும்

பதவியைத் துறந்து பாதசாரி யாய்ச்சென்றால்

ஆரென்றே எவருக்கும் அடையாளம் தெரியாது.’’

என்கிறார். இந்த உண்மை சுடத்தான் செய்யும். ஏனென்றால் கொதித்துப் போன “தொழிலாளியின் குரல்“ எப்படி ஒலிக்கிறது என்பதை

“நீதியைக் கேட்டே உழைப்பவர் கூட்டம்

நித்தம் தேய்கிறார் பாதியாய்-காரில்

நீங்கள் போகிறீர் ஜாலியாய்-இது

நீடிக்கு மானால் உங்கள் அதிகாரம்

நிச்சயம் போய்விடும் காலியாய்-இராதீர்

நெடும்பயிர் மேயும் வேலியாய்! ’’

mm

என்று எச்சரிக்கையை எழுப்புகிறார். எத்தனை போராட்டங்களை எப்படி, எங்கே நடத்தினாலும் ஏனென்று குறைகேட்காத மக்கள் விரோத அரசுகள் பேய்களின் அரசாட்சியாகவே இருக்கும். காரணம்

“கொடிபிடிக்க ஆளிருந்தால் போதும், தண்டக்

கோவேறுக் கழுதைகளும் தலைமை தாங்கும்.’’

என்கிற உண்மையை உணர்ந்து மக்களுக்கு உணர்த்துகிறார்.

கவிஞர் திராவிட இயக்க உணர்வுள்ளவர். மொழியுணர்வும் இனஉணர்வும் கனவுகளாய்ப் போய்விடக் கூடாதே என்று கவலைப்படுபவர். அதனால்தான் “பாரதநாடு-“ என்கிற கவிதையில்கூட

“ஆரியர்கள் இந்நாட்டில் அடியெடுத்து வைக்குமுன்னே

சிந்துவெளி நாகரிகம் செழித்திருந்த பூமியிது

அந்த நாகரிகம் ஆதித் தமிழர்களின்

சொந்த நாகரிகம் தூய நாகரிகம்.

இந்தநாக ரிகம்தான் இந்திய நாகரிகம்

குமரிக்கண் டத்தில் குருத்துவிட்ட நாகரிகம்!’’

என்று அவரால் பாடமுடிகிறது. இன்றைக்கு

நம் ஆதி நாகரிகத்தை அழித்தொழிக்க, அடையாளங்

களை மாற்ற நடக்கிற தகிடுதத்தங்களை நாமுணர வேண்டும் என்பதை நயம்பட உரைக்கிறார். மாநில உரிமைகள் குறித்து வெறும் வாய்ப்பந்தல் போடுவதில் பயனில்லை. அரசியல்தளத்திலும் இயங்கிய கவிஞர் என்ன நடக்கிறது நாட்டில் என்பதை அறியாதவரா என்ன?

“ஆறுகளைப் பொதுவுடைமை ஆக்கவேண்டும் என்கிறார்

ஆனால் இங்கே காவிரியை அணைபோட்டுத் தடுக்கிறார்

உரிமையுள்ள தண்ணீரைப் பெறவும் நம்மால் முடியலே

ஒரேநாடாய் பாரதமும் இருக்குமான்னு புரியலே..’’ என்று நீர்வளத்தைப் பற்றி யோசிக்கிறார். அதோடு

“தாகத்தி னாலே தமிழினம் மடியினும்

காவிரி நீர்தரக் கன்னடம் மறுக்கிறது

பெரியாற்று நீர்தரக் கேரளம் எதிர்க்கிறது

மாநில ஒற்றுமையே மணற்கயிறாய் இருந்தால்

இந்திய ஒற்றுமை எவ்வாறு ஏற்படும்?’’

என்ற வினாவை வீசுகிறார். இந்த உண்மையை உணராமல் போலித் தேசியம் பேசிப் பயனில்லை என்பதை

“பாரதத்தில் இருக்கின்ற தலைவ ரெல்லாம்

பல்வேறு மாநிலத்தின் பிரச்சி னைக்குத்

தீர்வெதுவும் காணாமல் உதட்டில் மட்டும்

தேசியத்தைப் பேசுவதால் லாப மில்லை.“

என்று “எது தேசியம்?’’ என்கிறார். அவர் கேட்ட கேள்விக்கு விடைகிட்டாமல்தான் இன்றுவரை காலம் நம் மக்களை எங்கெங்கோ இழுத்துக் கொண்டே போகிறது. “அங்கே’’ எவர் ஆட்சியில் அமர்ந்தாலும் நமக்குக் கிடைப்பதென்னமோ “நாமம்’’ தான்.

மதவெறியைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீரழிக்கும் நச்சுப் பாம்புகளின் கைகளில் மக்கள் கடிபட்டுக் கடிபட்டுக் கதறிச் சாகிறார்கள். வள்ளலார் பெருமான், விவேகானந்தர் போன்ற பெருமக்களின் சிந்தனைகளை எண்ணிப் பார்க்கிற எவரும் மதவெறிக்கு மண்டியிட மாட்டார்கள். இதோ கவிஞரின் சிந்தனை ஓட்டம் “வீரத்துறவி’’ யைப் பற்றிச் சொல்கிறபோது

“பாவிக ளெல்லாம் காவிகளில்- நித்தம்

பவனி வருகின்ற காலமிது!

காவி கட்டிய துறவிகளில்- அந்தக்

கடவுள் விரும்பிய துறவியிவர்’’ (வீரத்துறவி -32)

என்று விரிகிறது. அதே போல் பசிப்

பிணி போக்க அணையா அடுப்பெரித்த அண்ணல் வள்ளலாரைப் பற்றிச் “சுதந்திரத்தின் மாட்சி“ கவிதையில்

“பாலின்றிப் பிள்ளையெலாம் ஏங்கியழும் போது

பாலாபி ஷேகங்கள் கோயிலிலே நூறு

சீலமுடன் வாழ்ந்திருந்த இராமலிங்க அடிகள்

தெய்வநிலை பற்றியிங்கு சாற்றியதும் என்ன?

பாலமுதம் தினம்படைத்துக் கற்பூரம் கொளுத்திப்

பகவானைத் தொழுவதினும் பசித்தமுகம் பார்த்து

காலமெலாம் அன்புசெய்தே உணவளிக்கும் மாந்தர்

கடவுளென்று சொன்னாரே யாரிதனைக் கேட்டோம்?’’

என்று விரித்துரைக்கிறார். அதனால்தானோ என்னவோ “திருந்துவதெப்பொழுது?’’ என்று

“எல்லா மதமும் அன்பினைத் தானே

எடுத்துச் சொல்கிறது- அது

சொல்லா நெறியில் சிலரது மனங்கள்

எதனால் செல்கிறது- அட

எல்லாம் இங்கே ஓட்டுக் காக

என்பது புரிகிறது-அவரை

அல்லா ஜீசஸ் இந்துக் கடவுளர்

திருத்துவ தெப்பொழுது?’’

என்று கேட்பதோடு அந்த மாற்றத்தைக் கொண்டு வர வழி சொல்வதுபோல

“மதங்களின் பேரைச் சொல்லி

மனிதப்போர் நடத்து வோரை

வதம்செய்தே இளைஞர் கூட்டம்

வரலாறு படைத்தல் வேண்டும்.’’

என்கிறார். அதோடு

“இந்து முஸ்லிம் கிறிஸ்து மதங்கள்

இணைந்தது நம் தேசம்-மனம்

நொந்திடும் வண்ணம் மதப்போர் நடந்தால்

நொறுங்கி விடும் நேசம்!’’

என்கிற உண்மையையும் “பொன்னொளிர் பாரதமாகக் காண்கிறார். ஏனென்றால் இந்த மண்ணில் என்ன நடக்கிறது என்பதை

“ஏய்ப்பவர்கள் எல்லோரும் இறைவனது பெயர்சொல்லி

ஏற்றும் கொண்டு

மேய்ப்பவர்கள் ஆனகதை மேதினியில் வரலாற்றில்

மிகவும் உண்டு.’’

என்று சுட்டிக்காட்டுகிறார். மதம், கடவுள் என்பதை வைத்தே தங்கள் பிழைப்பை ஓட்டுகிற பேர்வழிகளுக்கு “யார் கடவுள்?என்பதைச் சுட்டிக் காட்டுவது போல்

“கண்ணகிக்குக் கோயிலெல்லாம் உண்டு-பெருங்

கடல்கடந்த நாட்டிலெலாம் அன்று-நம்

கண்ணகியின் கோயிலையே மாரியம்மன் கோயிலென்று

கண்டபடி மாற்றிவிட்டார் இன்று-பொய்க்

கதைகளையும் புனைந்துவிட்டார் நன்று.

உயிர்நீத்த போர்மறவர் வேலை- உறையில்

உறங்காத அவருடைய வாளை-நம்

முன்னோர்கள் நாட்டிவைத்துப் பூத்தூவி வணங்கியதை

முனியாண்டி கோயிலென்றான் காளை-

அதை

முனீஸ்வரன் ஆக்கிவிட்டான் ஏழை!

மனிதனாக வாழ்ந்தவன்தான் சிவனும்- பின்பு

மகேசனாய் ஆகிவிட்டான் அவனும்-அட

கட்டுக்கதை புராணங்களைக் கட்டிவைக்க ஆளிருந்தால்

கடவுளாக உயர்ந்திடலாம் எவனும்-அதைக்

கண்டுகொண்டான் இன்றிருக்கும் யுவனும்.’’

வரலாற்று ஆய்வுச் சிந்தனைகளைச் சில வரிகளில் தந்து சிந்திக்க வைக்கிறார் கவிஞர். இப்படி ஒவ்வொரு

கடவுளுக்கும் பின்னால் உள்ள கதைகளைப் பட்டியிலிட் டுக் காட்டுகிற கவிஞர், தமிழா நீ ஏமாந்தால் எவனை வேண்டுமானாலும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளால் இறைவனாகவே ஆக்கிவிடுவார்கள், எச்சரிக்கையாயிரு என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஊறிய கவிஞர், தந்தை பெரியாரைப் பாடாமல் இருக்க முடியுமா?

“பொதுவாழ்வில் புகுந்துவிட்டால் மானம் அவமானம்

பார்க்கக் கூடாதென்று பகருவார் பெரியார்!

பெரியாரை வாழ்க்கையில் பின்பற்று வோர்தாம்

சமுதாயத் திற்காகச் சாதனைகள் புரிவார்கள்!

பெரியாரைப் போன்றவர்கள் பிறக்காமல் போயிருந்தால்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.ஆகி இருக்கும் பலர்

குலத்தொழிலைச் செய்துதான் குடல்கழுவி இருப்பார்கள்!

மைல்கற்கள் எல்லாம் மகாலிங்கம் ஆயிருக்கும்

மனிதனை மனிதனாய் மாற்றியவர் பெரியார்தான்!.’’

அதுதான் சிலருக்கு இன்னும் அடிவயிற்றில் நெருப்பைப் பற்ற வைக்கிறது. அதேபோல் அறிஞர் அண்ணாவைப் பற்றி

“எக்குறியும் இல்லாமல் ஏமாந்த தமிழ்நாட்டுத்

தற்குறிகளைத் திருத்தத் தன்எழுது கோலால்

சொற்குறிகள் போட்டவர் சுடரறிஞர் அண்ணா..!’’

என்கிறார். ஏனென்றால்

“இன்று

தமிழில் எழுதித் தமிழால் பிழைத்துக்கொண்டே

தமிழைவிட உயர்ந்தது சமஸ்கிருதம் என்றுசொல்லும்

நன்றிகெட்ட மனிதர்களும் நம்மிடத்தில் இருக்கின்றார்!’’

என்பதை நாளும் கண்டு நெஞ்சம் வெகுண்டு நிற்பவர் கவிஞர். அதனால்தான்

“பதவிக் காகக் கால்வருடும்-புன்மைப்

பழக்கம் நமக்குக் கிடையாது

எந்த நிலையிலும் விலைபேசி-நமை

எவரும் வளைக்க முடியாது.’’

என்று உரக்க முழங்குகிறார். அந்த உணர்வு திராவிட இயக்கச் சிந்தனைகளால் எழுந்தது என்பதை மறுக்க முடியுமா?

கவிஞர் திரைத்திரையில் இருந்தாலும் அங்கே காண்கிற அவலங்களையும் சுட்டிக் காட்ட தவற வில்லை. பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிற மனிதர்களையும் அவர் அறிவார். இதை

“காசு கிடைக்கமெனில் காக்கை இனத்தையெல்லாம்

கானக் குயில்களென்று கூறுவார்-அவர்

கவிஞர் எனத்தமையும் ஓதுவார்-நெஞ்சில்

மாசு படைத்தஇவர் பேசும் மொழிகளையே

மண்ணில் சிலர்வியந்து பேசுவார்-சிலர்

மகுடம்வைத்து விசிற வீசுவார்.

பணத்தைக் கொடுத்துவிட்டால் தமிழும் ஒழிகவென்று

பாட்டு வரியும்இவர் போடுவார்-அதற்குப்

பரிசு தரும்நபரைத் தேடுவார்-தமிழ்

இனத்தின் உணர்வும்மொழி உணர்வும் அற்றவர்கள்

எங்கள் திரைத்துறைக்குள் இருக்கிறார்-அவர்

இனிய தமிழ்வரியைக் கெடுக்கிறார்!’’

என்று கொதிக்கிறார்.

கவிஞர் முத்துலிங்கம் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவையெல்லாம் ஆவணபடுத்தப்படாமல் இருப்பதாகவே தெரிகிறது.

“இன்று

அடாவடிச் செயலுக்கும் ஆணவத் திற்குமே

அதிகாரப் பதவிகள் கிடைக்குது-ஊழல்

அதனால் கொடிகட்டிப் பறக்குது.

தடாலடி யான ஆணை களாலே

தர்மம் சிலநேரம் தவிக்குது-அதனால்

சான்றோர் மனங்களும் பதைக்குது!’’

என்பதைக் கவிஞர் நன்கறிந்திருந்தாலும், தன்வழியில் பணிவும் துணிவும் கொண்டவராகப் பவனி வருகிறார். இவை எழுதிப் பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் இன்றும் ஒளிவீசுகின்றன. கவிஞரின் கவிதைகளில் முத்துகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை மாலையாக்க வேண்டியது நம்மவர் பொறுப்பல்லவா?