1931 இல் அக்டோபர் 29-ஆம் தேதி சீனிவாசன் - பொன்னம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் கவிஞர் வாலி. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். பப்ளிசிட்டீஸ் என்கிற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கிய வாலி, அது வணிக ரீதியாக பலனளிக்காதது அவரது துரதிர்ஷ்டம்… நமது அதிர்ஷ்டம். அந்த துரதிர்ஷ்டம்தான் நமக்கு கண்ணதாசனுக்கு இணையான ஒரு பாடலாசிரியரை நமக்கு வழங்கியது.
இயற்கையோடு கலந்துபோன காவியக் கவிஞர் வாலியின் 92-வது பிறந்தாள் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா, இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள குமாரராஜா முத்தையா மன்றத்தில் அக்டோபர் 29, மாலை 5 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக, கவிஞர் வாலி எழுதிய திரை யிசைப் பாடல்களை மட்டுமே உள்ளடக்கிய மெல்லிசை நிகழ்ச்சியை திரைப்பட இசையமைப்பாளர் தாயன்பன் வழங்கியது பார்வையாளர்களை உற்சாகமடைய வைத்தது.
நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்களை வாலி பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பாரதி சங்கர் வரவேற்றுப் பேசினார்.
நல்லி குப்புசாமி செட்டியார் விருது வழங்கும் விழாவுக்கு தலைமையேற்று கவிஞர் திருப்புகழ் மணிவண்ணனுக்கும், திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான வாலி விருதுகளை வழங்கிச் சிறப் பித்தார். இந்த விருது பாராட்டுப் பத்திரத்துடன் 50,000 ரூபாயையும் உள்ளடக்கியதாகும்.
தமிழ்நாடு இயல் இசை மன்ற உறுப்பினர் திருமதி விஜயா தாயன்பன் கவிஞர் வாலியின திருவுருவப் படத்தினை திறந்துவைத்து உள்ளத்தை உருக்கும் உரையொன்றை ஆற்றினார். திரைப்பட இயக்குநர் ஏ.வெங்கேடஷ் கவிஞர் வாலியின் திரையிசைப் பாடல்களின் தொகுப்பை மேடையில் வெளியிட, சிவாலயம் ஜெ.மோகன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.
மேடையில் பேசிய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும் பட்டிமன்ற தலைவருமான ஐ.லியோனி, “கவிஞர் வாலி தனது திரைப்படப் பாடல்கள் மூலம் சமூக, சமத்துவக் கருத்துகளை வளர்த்தவர் வாலி” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைத்து நடத்தியதுடன், விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த வர்களுக்கு நன்றியுரை தெரிவித் தார்.