பாரதிதாசனைப் போல் எழுதுவதுதான் என் முதற்குறிக்கோள். சுரதாவின் புதிய உத்திகள் இளம் கவிஞனாகிய என்னைப் பெரிதும் வசீகரித்ததுண்டு. இன்று நான் நானாக எழுதுகிறேன் என்று தன்னைப் பற்றிய பெருமிதத்தோடு, கவிதைவெளியில் சிறகடித்துப் பறந்தவர் கவிஞர் முருகுசுந்தரம். 1968-லிருந்து 1975 வரை கொடிகட்டிப் பறந்த கவியரங்கப் பொற்காலத்தில் இவரின் கவிதைகள் திசைகளில் தித்திப்பைத் தூவிச் சென்றன. கலைஞரின் கவியரங்க அணிக் கவிஞர். புரட்சிக்கவிஞரின் அன்பில் திளைத்தவர். 1962-ல் அவரோடு ஏற்பட்ட தொடர்பைத் தொட்டு இவருக்குள் இருந்த கவிதை உணர்வு எழுச்சிகொண்டது. சண்முகசுந்தரம் என்ற தன்பெயரை முருகுசுந்தரம் என்று மாற்றிக்கொண்டதன் பின்னால் கவிதையின் அழகு கண்சிமிட்டுகிறது.

20.12.1929-ல் திருச்செங்கோட்டில் பிறந்தவர். தந்தை பெயர் வை. முருகேசன். தாய் பாவாய். 1947-ல் பள்ளி இறுதித்தேர்வு முடித்தவுடன் பதினைந்து நாள்கள் கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, அதே ஆண்டில் டிசம்பரில் திருச்செங்கோடு மகாதேவி வித்தியாலத்தில் ஆசிரியப் பணிபுரிந்தார். 1955-ல் தனித்தேர்வு எழுதி தமிழ் வித்துவான் ஆனார். பின்னர் சேலம் நகரவை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1961-ல் தனித்தேர்வராகத் தேர்வெழுதி முதுகலைப் பட்டம் பெற்றார். 1962-ல் இளநிலை ஆசிரியப் பயிற்சி முடித்தார். 1979-ல் ஈரோடு நகரவைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

2007-ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் காலவெளியில் கலந்து போன கவிஞரின் நூல்கள் 2010-ல் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

பனித்துளிகள், “கடைத்திறப்பு, “சந்தனப் பேழை, “தீர்த்தக் கரையினிலே, “எரிநட்சத்திரம், “வெள்ளை யானை’’ என்று படையெடுத்த அவரின் கவிதைத் தொகுப்புகள் தமிழ்க்கவிதையின் அன்றைய காலகட்டத்தில் புதுமையும் அழகும் கொண்டு விளங்கின. பாவேந்தரின் அடிதொட்டு நடந்த கவிஞர் அவரைக் குறித்த நினைவலைகளையெல்லாம் பாடுபட்டுத் தொகுத்து சில நூல்களாகக் கொண்டுவந்தார். பின்னாளில் அவற்றையெல்லாம் சேர்த்து "பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்' என்று வெளியிட்டார். பாவேந்தரோடு ஏற்பட்ட தொடர்பின் ஆரம்ப காலங்களிலேயே அவருடைய கவிதைகளை அழகுற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் முருகு. “குயில்’’ ஏட்டில் வெளிவந்தன. அதனால் புரட்சிக்கவிஞர் “நான்செய் தமிழ்ப்பாட்டை நல்லதோர் ஆங்கிலத்தில்

Advertisment

தான்செய் தளிக்கும் தகுதியிலே- வான்போன்றான்

வாழ்கவே நன்முருகு சுந்தரம்தான்../ வண்மையெல்லாம்

சூழ்கவே சீர்த்தி தொடர்ந்து’’

Advertisment

என்று பாராட்டி மகிழ்ந்தார். பொங்கிப் பெருகிய புதுக்கவிதையின் ஓட்டத்தில் இவர் தன் கவிதை ஓடத்தை மிதக்கவிட்டார். அதுமட்டுமல்லாமல் “புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் என்ற நூலில் சார்ல் போதலர், ஆர்தர் ரெம்போ, ரெய்னர் மேரியா ரில்க், எஸ்ரா பவுண்ட், மெரீனா ஸ்வெட்டேவா, மாயகோவ்ஸ்கி, கார்சியா லார்கா, பெர்டோல்ட் ப்ரெக்ட், பாப்லோ நெரூடா ஆகியோரைப் பற்றிச் சுவைபடப் பதிவுசெய்தார். அந்த நூல் ஆகஸ்ட் 1993-ல் அன்னம் வெளியீடாக வெளிவந்தது. தமிழுக்கு இப்படிப்பட்ட அறிமுகக் கட்டுரைகள் தேவையாக இருந்த காலகட்டத்தில் இவருடைய நூல் பலருக்கும் விருந்தாக இருந்தது. கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு, சிறுவர் நூல்கள், ஒப்பாய்வு என்று சுமார் 24 நூல்கள் எழுதிப் பல தளங்களில் இயங்கிய முருகுவின் தனி முத்திரை, கவிதைகளில்தான் வெளிப்பட்டது.

திராவிட இயக்கத்தின்மீது தீராத பற்றுக்கொண்ட கவிஞரின் கவிதைகள் அன்றைய மரபுக் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகவே இருந்தன. வழக்கமான சொல்லாடல் இல்லாமல் புதிய பார்வையில் தன் சொற்களைக் கட்டமைத்தார். வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் தன் கற்பனைகளைக் கவினுறக் கலந்து வடித்த கவிதைகளோடு, தனித்தன்மைமிக்க கதைக் கவிதைகளையும் எழுதினார்.

பாவேந்தர், சுரதாவின் கலவையாக அவர் கவிதைகள் விளங்கின. விஞ்சிநிற்கும் உவமைகளும், உருவகங்களும், படிமங்களும் அடுக்கடுக்காக அவர் கவிதைகளில் தாமே வந்தமர்ந்து, படிப்பவர் நெஞ்சங்களில் அப்படியே படிந்துகொண்டன. அறிஞர் அண்ணாவைப் பற்றி மிக அழகாக உருவகம் செய்கிறார்.

அறிஞர் அண்ணாவா? யாரவர்? அவரோர்

இலக்கியக் குறும்பலா.. இருமொழிக் கொண்டல்

தீந்தமிழ் பரப்பும் திராவிட அகத்தியர்

நற்றமிழ் என்னும் பளிங்குத் தூணில்

சிற்றுளி வேலை செய்யும் சிற்பி.

அடிவைத் தேறி அரங்கில் நின்று

பொடிவைத்துப் பேசும் புத்தகப் பிரியர்

இந்தக் கவிதைக்குத் “திராவிட அகத்தியர்’’ என்ற தலைப்பிட்ட கவிஞர், அண்ணாவை,

நடக்கும் காவியம்.. நாட்டில் மடமை

முடக்கு வாதத்தை முறிக்கும் மருந்து

என்கிறார். இன்றும் “அண்ணா’’ என்று அழைக்க மனமில்லாமல் “அண்ணாதுரை என்று வெந்து புழுங்குகிறவர்களைப் பார்க்கிறோம். அதனால்தான், கவிஞர் அன்றைக்கே “அறிஞர் அண்ணாவா.. யாரவர்?’’ என்று கேள்வியோடு கவிதையைத் தொடங்குகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணாவைப் பாடுகிற கவிஞர் பெரியாரைப் பாடாமல் இருப்பாரா?

தலைநரைத்த பெரியாரோ இந்த நாட்டின்

தன்மானத் தத்துவத்தேர்! கிரேக்க நாட்டின்

அலெக்சாந்தர் போர்க்களத்தில் தோற்ற தில்லை

அவனைப்போல் பெரியாரும் தோற்ற தில்லை

என்கிறார். எத்தனையோ தலைவர்களில் அவரும் ஒரு தலைவரா? இல்லை என்பதை

களைக்கொட்டைப் போல்தலைவர் இந்த நாட்டில்

கணக்கெடுத்தால் ஆயிரம்பேர்.. சமுதா யத்தை

தலைகீழாய்ப் புரட்டிவைத்த ராம சாமி

தன்மானப் புல்டோசர்

என்று உருவகித்துக்கொண்டே போகிறார். இன்றைக்கு மகாத்மாவைப் பற்றியும் பண்டிதர் நேரு குறித்தும் எத்தனையோ எதிர்க்கருத்துகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறோம்.

அவற்றை வைத்து அரசியல் நடத்தமுடியுமா என்று ஆசையோடு அலைவதையும் பார்க்கிறோம். ஆனால் மறைந்த நேரு மிகச்சிறந்த அறிஞர். தேர்ந்த எழுத்தாளர். உருது மொழியில் கவிதை எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர். அப்பெருமகனார் நாட்டு மக்களுக்காக விட்டுச்சென்ற செய்தியை அழகுறக் கவிதையாக்கினார் முருகு. "கங்கையின் காதலன்' என்ற தலைப்பில்…

சமயத்தைச் சடங்கைப் பொய்மைச்

சாத்திரக் கூத்தை யெல்லாம்

உமியைப்போல் கருதி யென்றன்

உள்ளத்தில் ஒதுக்கி வாழ்ந்தேன்.

நமையும்ஏ மாற்றிக் கொண்டிந்

நாட்டை ஏமாற்று தற்காய்

சமைத்தபொய்ச் சடங்கை யென்றன்

சாவுக்குச் செய்ய வேண்டாம்

என்று பண்டிதரின் பகுத்தறிவைப் பறைசாற்றுகிறார்.

வரலாற்றுச் செய்திகளைக் கவிதையாக்குவதில் வல்லவரான முருகு, மாவீரர் லெனின் எழுதிய “சமயமும் சமதர்மமும்’’ என்ற கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரையின் பிழிவாகத் “தெய்வீகப் பெருஞ்சுமை என்ற கவிதையைத் தீட்டினார்.

என்றைக்கோ எழுதிய கட்டுரையின் கருத்துகள் இன்றைக்கும் முருகுவின் கவிதை வரிகளில் காலத்தைச் சுட்டிக் காட்டிக்கொண்டே சிரித்துக் கொண்டிருக்கின்றன.

எலிப்பொறிதான் சமுதாயம்..இந்த நாட்டின்

ஏழைகளின் நல்வாழ்வை.. மிகக்கு றைந்த

நிலப்பிரபும் செல்வர்களும் சுரண்டு கின்றார்

நீர்ப்பாம்பு திமிங்கலத்தை விழுங்க லாமா?

என்கிறார். மகத்தான தலைவரின் கருத்துகள் கவிஞரின் சொற்களில் அனல் வீசுகின்றன.

அரசாங்கப் பதிவேட்டில் மக்கள் பேரை

அடுத்துவரும் மதக்குறிப்பு யாவும், சற்றும்

இரக்கமின்றி எடுத்தெறியப் படுதல் வேண்டும்.

இந்நாட்டுப் பொதுப்பணத்தைக் கோவி லுக்கும்

குருக்களுக்கும் மானியமாய் அன்ப ளிப்பாய்க்

கொடுக்கின்ற பகற்கொள்ளை ஒழிய வேண்டும்.

குருத்திளைஞர் பள்ளிகளை மடமை விற்கும்

குருக்களிட மிருந்தின்றே மீட்க வேண்டும்

இக்கவிதை வரிகளினூடே ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டால் மூடத்தனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை எப்படியெல்லாம் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுகொள்ள முடியும். அறிஞர் அண்ணாவின் பேச்சை யார் மறக்கக் கூடும்? மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அண்ணா பேசிய பேச்சையே “கூடல் நகர் பெற்ற பாடல் என்று கவிதையாக்கினார். அக் கவிதையில்,

முழுவயிறு காணாதார்.. உழைத்து ழைத்து

முதுகெலும்பு முறிந்தவர்கள்.. பிறர்உ ழைப்பை

விழுங்குபவர் கைகளிலே பகடைக் காயாய்

விழுந்தவர்கள்..ஓடப்பர் ஆகி யோர்மேல்

வழிகின்ற வியர்வையினால் அன்றோ..கல்வி

வளர்க்கின்ற கலைக்கழகம் எழுப்பி யுள்ளோம்?

எழுந்துவரும் இளஞ்சிங்க அணிவ குப்பே!

இதையுணர்ந்து பொறுப்போடு நடந்து கொள்க!

என்று அண்ணாவின் கருத்துகளை அப்படியே பதியனிட்டுக் கொடுத்தார். இதைப்போலவே அமெரிக் கக் குடியரசுத் தலைவர் கென்னடி, நிறவெறியை எதிர்த்து 1962-ல் வானொலியில் உரையாற்றினார். அந்த உரையையே “எச்சிலிலை நாகரிகம் என்று கவிதையாக்கினார். சாக்ரட்டீஸின் பேச்சை "கட்டாரி நீட்டுகின்றார்' என்று பாடினார். இப்படிப்பட்ட சிந்தனைகளில் பல கவிதைகளை முருகு தீட்டினார். அவையெல்லாம் அழியாத சொற்சித்திரங்கள்.

பிரெஞ்சுக் காதற் பறவைகள்தான் அபெலார்டு- ஹெலாய். அவர்களின் வாழ்க்கை ஒரு கண்ணீர்க் காவியம். அவனோ துறவை ஏற்றுக்கொண்ட பாதிரி. அவளோ பத்தொன்பது வயது செல்வக் கொழுந்து. கண்திறந்த காதல் இருவரையும் கட்டிவைத்தது. மதவாதிகளும் சீமான்களும் சும்மா இருப்பார்களா? குரைத்தார்கள், காதலைக் குலைத்தார்கள். தொடர்ந்து துரத்தினார்கள். இறுதியாக இருவரும் துறவை ஏற்றார் கள். பிற்காலத்தில் அவர்களின் கூட்டு முயற்சியால் கிறித்துவக் கன்னிமாடப் பெண்களுக்குரிய விதிகள் வகுக்கப்பட்டன. அறுபத்து மூன்றாவது வயதில் அபெலார்டு, ஆதரவின்றி இறந்துபோனான். அவன் உடலை ஹெலாயிடம் ஒப்படைத்தார்கள். அதன் பின் இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவள் இறந்தாள். அபெலார்டுவின் கல்லறையின் அருகிலேயே அவளும் புதைக்கப்பட்டாள். ஹெலாய், அபெலார்டு வுக்கு எழுதிய காதல் கடிதத்துக்குக் “கற்புச் சிறை’’ என்று கண்ணீர் வழிந்தோடக் கவிதை வடிவம் தந்திருக்கிறார் முருகு. ஹெலாயின் மனக்கிடக்கை சொற்களில் இயல்பாக வந்து விழுகிறது.

சிந்தையில் உம்மை எண்ணிச்

செபமாலை உருட்டு கின்றேன்.

நொந்தநம் நைந்த வாழ்வை

நூல்களாய் எழுதி, இந்தப்

பந்தயச் சமுதா யத்தில்

பறையறை வித்தால் என்ன?

விந்தையிவ் வுலகை மீளா

வெட்கத்தில் சாய்த்தால் என்ன?

என்று அவள் எழுதுகிற வரிகளுக்குள் தகிக்கும் அவள் மனத்தைத் தரிசிக்க வைக்கிறார். இந்தக் கடிதத்தால் என்ன பயன் என்பதை அவள் மொழியில்…

எழுத்துவாய்க் கடித மொன்றே

எதிரிகள் குறுக்கி டாத

மொழித்திரை..காத லர்க்கு

முக்காட்டுத் தூது.. வார்த்தை

வழித்துணை..கனவுக் காதல்

வரிப்படம்..பேசும் அந்த

எழுத்துவா கனத்தால் அன்றி

என்னுயிர்ப் பயணம் இல்லை.

என்று எழுதுகிறார். உலக இலக்கியங்களை உற்சாகத்தோடு கற்றவர் முருகுசுந்தரம். அவ்வகைப் படைப்புகளின் வீச்சை வேண்டுகிறபோது தன் கவிதைக்குள் வைத்துச் சதிராடியவர். அனார், சலீம் காதல் கதையை அறியாதவர்கள் குறைவு. அதில் ஒரு சிறு துளியை “வேந்தன் அணைத்த விளக்கு என்று கவிதையாக்கினார். சலீம், தன் உயிருக்குள் ஊடாடிக் கொண்டிருந்த அனாரை எப்படி அழைக்கிறான் தெரியுமா?

கண்ணிகளின் நீகாஜல்.. பார சீகக்

காப்பியத்தில் ஷாநாமா. குரல்வ ளர்க்கும்

பண்ணிசையில் தான்சேனின் அமுத கீதம்

பாவைநீ நான்வணங்கும் பள்ளி வாசல்!

பெண்ணினத்தில் பொன்னினம்நீ! வான்வ ளர்க்கும்

பேரினத்தில் பிறையினம்நீ! அன்பே! உன்னைக்

கண்ணென்றால் நமையுறக்கம் பிரிக்கும்.. ரத்தக்

கால்வாய்நீ என்னுடம்பில்..நடக்கும் மூச்சு!’’

என்கிறான். ரத்தக்கால்வாய் நீ என்ற சொல்லாட்சி யில் காதல் உள்ளத்தை அப்படியே கவிழ்த்துக் கொட்டுகிறான் சலீம். இருவருக்கும் இடையில் நடக்கும் வார்த்தை விளையாட்டு காதல்வாழ்க்கையின் விளையாட்டாக விளையாட்டுக் காட்டுகிறது.

அடுக்குமுத்து மாதுளையைப் பார சீகர்

அனார்என்று சொல்லுகிறார் கண்ணே! உன்றன்

எடுப்பதற்குக் குறையாத முத்த வாயை

என்னவென்று கூறட்டும்?

என்று கேட்டான்.

படுக்கைப்பூ முப்பத்தி ரண்டு முத்தைப்

பதுக்கிவைத்த சிப்பியென்று சொல்லு மென்றாள்

கடிக்காதே முத்தென்றான்..இந்த முத்து

கடிக்கின்ற கணுக்கரும்பு முத்தே! என்றாள்.

இயல்பாக வந்து விழுகிற காதற் சொற்கள் நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றன. “குலப்ஜாமூன் முத்தம், சுரங்கச்சொல், சொற்சதங்கை, சிற்ப ரதி என்றெல்லாம் சொற்கள் வந்துவிழுகின்றன.

கண்ணீர்த் தவம்’’ என்ற குறுங்காவியத்திலும் அவலச் சுவை மேலோங்கி நம்மை அலைக்கழிக்கிறது. காதலனைத் தந்தையும் தனயனும் சேர்ந்து கொன்றுவிடுகிறார்கள். அவள் கனவில் அவன் வருகிறான். நடந்ததைச் சொல்கிறான். அவள் தேடி அலைந்து காதலனின் தலையை எடுத்துவந்து தொட்டியில் வைத்துப் புதைத்து அதன்மேல் ஒரு செடியை நட்டு வளர்க்கிறாள். தந்தையும் தனயனும் அறிந்துகொள்கிறார்கள். அவள் இல்லாத நேரத்தில் அந்தத் தொட்டியைக் கொண்டுபோய் எங்கோ உடைத்துவிடுகிறார்கள். தொட்டிக்குள் காதலனின் தலையையும் கைக்குட்டையையும் பார்த்த தந்தை அதிர்ச்சியில் அங்கேயே இறந்து போய்விடுகிறான். தமையனோ வெளியூருக்கு ஓடிவிடுகிறான். அவளோ, பொங்கி அணைந்து புகையும் நெருப்பானாள்

கட்டழகுக் கண்களிலே கண்ணீர் அணைகட்டித்

தொட்டியெங்கே? தொட்டியெங்கே? என்று புலம்பித்

தெருவோரம் நின்று திகைப்போடு கேட்டாள்

வருவோரைப் போவோரைப் பார்த்து

என்கிறார். தொடர்ந்து அவள்

கண்ணீர்த் தவங்கள்

கடைப்பிடித்து நான்வளர்த்த

பன்னீர் வரங்களைப்

பறித்தெடுத்துச் சென்றவரார்?

என்று புலம்பிச் சிரிக்கிறாள். அதாவது பைத்தியமாக மாறிவிடுகிறாள். இந்தக் கண்ணீர்க் குறுங்காவியததைக் கவிஞர் எழுதியிருக்கும் விதம் உள்ளத்தை உருக்கக் கூடியது. இயற்கையும் மனித வேட்கையும், குரூரங்களும், காதலும் என்று பல பரிமாணங்கள் தெறித்து விழுகின்றன. அகலிகையை வைத்துப் பலரும் பலவிதமாகக் கவிதைப் படைப்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால் முருகுவோ தன் “வெள்ளையானை’’ காவியத்தில் அகலிகையை மீமெய்ம்மைப் பாத்திரமாகப் படைத்துள்ளார். இளமையில் அகல்யாவின் அடிமனத்தில் ஏற்பட்ட ஏக்கங்களும் ஏமாற்றங்களுமே அவள் வாழ்க்கையின் பின்விளைவுகளாக உருப்பெற்றன என்பதே இக்காப்பியத்தின் அடிப்படை. நசுக்கப்பட்ட பெண்ணியம் தன் விலங்கொடித்துக் குமுறியெழும் சீற்றத்தை இக்காப்பியத்தில் காணலாம் என்கிறார். அகலிகை என்கிற தொன்மத்தை வைத்துக்கொண்டு பல்வேறு காட்சிகளின் வழியே நசுக்கப்பட்ட பெண்ணியத்தைக் காணச்செய்கிறார். பால காண்டம், சுயம்வர காண்டம், ஆரண்ய காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்று ஐந்து காண்டங்களாக விரிகிற இக்காவியத்தில்

தாடிக்குக் கொடுக்கும்

மரியாதையைக் கூட

தர்ம பத்தினிக்குக் கொடுக்காத

தவசிரேஸ்டர்கள்

பாரதப் பெண்கள்

பறிப்பதற்கு முன்

வாய்திறக்கும் மலர்கள்.

பறித்தபின்

பிணத்திற்குச் சூட்டினாலும்

மௌனித்து மரிப்பவர்கள்

போன்ற தெறிப்புகள் நம்மைச் சுடும். சர்ரியலிசக் கற்பனை பின்னிய இக்காவியம் தமிழுக்குப் புதியது தான். ஈழப் பிரச்சனையை வைத்து அவர் எழுதிய “எரி நட்சத்திரம்“ ஒரு புதுக்கவிதை நாடகம். இருபத்து நான்கு காட்சிகளில் பல்வேறு சிந்தனைத் தெறிப்புகள்.

பயங்கர வாதம்

சமயவாதியின் மந்திரக்கோல்

அரசியல் வாதியின்

கைத்துப்பாக்கி

போன்ற உரையாடல்களைப் பல தளங்களில் நாம் வைத்து அளவிட்டுப் பார்க்கவேண்டும். அன்றைய கால கட்டத்தில் நடந்த பல அரசியல் நிகழ்வுகளை அங் கங்கே தொட்டுச்செல்கிறார். இறுதியாக

அவள்

ஓர் எரிநட்சத்திரம்

வீழும் போது

கண்ணைப் பறிக்கும்

பேரொளியோடுதான்

வீழ்ந்திருக்கிறாள்!

என்று முடிக்கிறார்.

கவியரங்கத்தில் மின்னிய கவிஞர் மரபுக் கவிதை களில் மகுடம் சூட்டிக்கொண்டார். புதுக்கவிதையில் தன் சிறகை விரித்துப் பறந்தவர். “வானம்பாடியின்’’ ஐந்தாவது இதழில் ஒரே ஒரு கவிதையைத்தான் எழுதினார். ஆனால் முக்கியமான கவிதை. சுழியம் என்பதை எழுத்தால் எழுதாமல் 000 என்று குறிப்பிட்டு

நாங்கள்

எண் வர்க்கத்தின்

ஏழைப்பிரதிகள்.

வறுமையின் வரிவடிவங்கள்.

தட்டுப்பாட்டின்

வட்டக் குறியீடுகள்.

என்று தொடங்கி

எங்கள் அறியாமையைப் பயன்படுத்தி

எங்கள் முன்னிருப்பவர்கள்

அதிகாரம் பெற்றுவிடுகிறார்கள்.

நாங்கள் பலர் சேர்ந்து

ஒருவனைக் கோடீஸ்வரன் ஆக்குகிறோம்

என்று முடித்திருப்பார். இன்றைக்கல்ல, என்றைக் குமே இக்கவிதை சத்தியமாக இருக்கும். சமகால அரசியலைப் பேசிக்கொண்டே இருக்கும். தமிழ்க் கவிதையுலகில் முருகு தீட்டிய கவிதைச் சித்திரங்கள் என்றும் எழில் குன்றாமல் இருக்கும். படித்துப் பார்ப்பவர்களுக்கு அது புரியும்.