மதுரையம்பதிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. "விழா அறா மூதூர்' என அதனை அழைப்பர். வருடம் 365 நாளும் மதுரையில் ஏதாவது ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அதுபோன்று, ""விருது வாங்கா நாளெல்லாம் நாள் அல்ல"" என்று நாளும் விருதுக்கோலம் பூணும் பெருந்தகை கவிஞர் மரிய தெரசா. கவிஞர்; சிறுகதையாளர்; நாவலாசிரியர்; கட்டுரையாளர்; ஆன்மீகவாதி; சிறுவர் இலக்கிய கர்த்தா; கல்வியாளர்; மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் கவிஞர் மரியதெரசா.
தோற்றத்தில் எளிமை. பழகுவதில் இனிமை. விருதுகள் குவிந்தாலும் பெருமை கொள்ளாப் பேராண்மை. அனைவரையும் உறவாகப் பாவிக்கும் நல்லாண்மை என்று இவரைப் பலவாறாக வர்ணித்துக் கொண்டே போகலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மும்மொழிப் புலமை கொண்டவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியில் முதுகலைப் பட்டமும் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் கல்வியல் பட்டமும் பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனாலும் படைப்பாக்கத் திறனிலிருந்து ஓய்வு பெறாதவர். முன்னிலும் ஆற்றலோடு நாளும் புதுப்புது நூல்களைத் தந்து வருபவர். இவர் படைத்த நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, லிமரைக்கூ, குறும்பா, சிறார் பா, சென்ரியு, மோனைகூ, எதுகைகூ, போதனைகூ, முரண்கூ, மூன்றுயோ என்று இவர் எழுதிய கவிதை வகைகள் ஏராளம்... ஏராளம்.
கவிஞர் மரியதெரசா காரைக்காலில் ரொபோ சேழான்- பிளான் ஷேத் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர்.
இவர் தாயும் தம்பியும் கவிஞர்களே. இவர்கள் குடும்பமே தமிழுக்குத் தொண்டாற்றி சிறந்த குடும்பமாகும் .
கவிஞர் மரியதெரசா பொதிகை மின்னல், கவி ஓவியா, ஏழைதாசன், தாய்மண், கண்ணியம், மின்மினி ஹைக்கூ, எழுத்தாணி, இலக்கியச் சோலை, நம்பிக்கை வாசல் என்ற இதழ்களின் அட்டைப்படங்களை அலங் கரித்தவர். பல தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் பேட்டி கள் பல அளித்த பெருமைக்குரியவர்.
லிமரைக்கூ பா வகையில் பதினோரு நூல்களையும், மோனைகூ பா வகையில் பத்து நூல்களையும், எதுகைக்கூ பாவகையில் ஏழு நூல்களையும் மூன்றியோ பா வகையில் இரண்டு நூல்களையும், போதனைக்கூ பா வகையில் ஒரு நூலையும், முரண்கூ பா வகையில் ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார். 2018 மார்ச் மூன்றாம் தேதி தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் ஒரே மேடையில் 40 நூல்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் கவிஞர் மரியதெரசா.
ஹைக்கூ என்பது ஜப்பானியக் கவிதை வடிவம். மூன்று அடிகளில் உலகை பேசும் சிறப்பிற்குரியது. முதல் இரண்டு அடிகள் ஒரு போக்கினதாகவும், மூன்றாவது அடி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தந்து கவிதையைத் திசைதிருப்புவதாக அமைந்திருக்கும்
பகலிலே ஊடல்
இரவிலே கூடல்
இமைகள்
இம் மூன்று அடி தரும் சுவைதான் என்னே! இப்படிச் சிறக்கும் மூன்று அடி கவிதையின் பிரிவுகளாக வந்தவைதான் லிமரைக்கூ, சென்ரியூ கவிதைகள். ஹைக்கூ, லிமரைக்கூ சென்ரியு இம்மூன்று கவிதைகளையும் தமிழுக் குக் கொண்டு வந்து, தமிழில் எதையும் படைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவிஞர் தமிழன்பன். அவருக்குப்பின் இம்மூன்றையும் கையாள்வதில் கவிஞர் மரியதெரசா தேர்ச்சி பெற்றவராக விளங்குகிறார். இன்னும் கூறப் போனால், அவர் இதிலிருந்து இன்னும் விரிவாக முயன்று தமிழின் யாப்பு வகைக்கு ஏற்ப அவர் எதுகைக்கூ, மோனைக்கூ, முரண்கூ, மூன்றியோ, போதனைக்கூ என்று புதிய வகை மூன்று அடி பா வகைகளைத் தமிழுக்குத் தந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆவின் பாலுக்கு
ஆடைகட்டி அழகு பார்க்கிறது
நெருப்பு
இது மோனைக்கூ கவிதை.
பூவில் வண்ணத்துப்பூச்சி
பறந்தது
மனம்
இது முரண்கூ கவிதை.
படையின் பலத்தோடு ஆழி
நடையாய் நடக்கும் அழகை
தடையிட தரணியில் யாருண்டு
இது மூன்றியோ கவிதை.
இப்படி மூன்றடியில் கவிதை உலகில் சிறகடித்துப் பறக்கிறார் மரியதெரசா. தமிழ்ச் சொற்கள் இவருக்கு வசப்பட்டு நிற்கின்றன. தமிழ் சீர்கள் இவருக்குக் கைகட்டிச் சேவகம் செய்கின்றன.
நாளும் எழுதிக் குவிக்கும் கவிஞர் மரியதெரசாவிடம் ""நீங்கள் கவிதைகளை எழுதிக் குவிக்கின்றீர்களே! எப்படி?'' என்று வினவினால், மிக எளிமையாக ""என்னோடு இறைவனும் தமிழும் எப்பொழுதும் உடன் இருக்கிறார்களே'' என்று பதில் கூறுகின்றார்.
அக்கூற்றில் காணப்படும் எளிமை யையும், அதன் உள்ளார்ந்த தத்துவத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
கவிஞர் மரியதெரசாவின் நூல்களைத் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளை/ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது மிக முக்கியச் செய்தி ஆகும். இவற்றில் நான்கு பிஎச்.டி. பட்ட ஆய்வுகளும், ஏழு ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களும் அடங்குவர்.
இவரது நூல்கள் கல்லூரி பாடத்திட்டங் களிலும் இடம்பெற்றுள்ளன.
கவிஞர் மரியதெரசா சமூக விழிப்புணர்வு செய்திகளையும் தம் கவிதைகளில் எடுத் துரைக்கின்றார். கண்தானம், சிவகாசி சிறார் தொழிலாளர்கள், மது ஒழிப்பு, சுற்றுச்சூழல், பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். இல்லறத்தை நல்லறமாக விழிப்புணர்வு தேவை என உணர்ந்து "பாரம் சுமக்கும் குருவிகள்' என்ற லிமரைக்கூ நூலையும் படைத்துள்ளார் . "கிழக்கின் மடியில் மேற்கு' என்ற நாவலையும், "முதுகில் நெளியும் மின்னல்', "நிறம் கேட்கும் மேகங்கள்', "வளையாத வானவில்', "சிலந்தி வலையில் சிங்கம்',
"சாதி வாங்கலையோ சாதி' என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். இவற்றைத் தவிர சிறுவர்களுக்காகச் சிறு சிறு கதைகளையும் எழுதி நூலாக்கியுள்ளார். இவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. பெரும்பாலும் தமிழ் ஹைக்கூ கவிதை நூல்களை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய நூல்களில் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட நூல்கள் பல்வேறு பரிசுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களின் வெளிச்சமும் இவர்மேல் படத் தவறவில்லை. ராஜ் தொலைக்காட்சி, வின் தொலைகாட்சி, தமிழன் தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி என்பனவற்றில் இவரது பேட்டிகளும் கவிதை வாசிப்புகளும் அரங்கேறியுள்ளன.
மலேசியா, அந்தமான், துபாய், தாய்லாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா என்று பல நாடுகளில் நடந்த சர்வதேச தமிழ்க் கருத் தரங்குகளில் பங்கு கொண்டு, பல கட்டுரைகளை நல்கியுள்ளார். 16-11-17 அன்று, தென்னாப்பிரிக்காவில் நடந்த நான்காம் உலக பொருளாதார மாநாட்டில் இவரது பத்து நூல்களை வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார். இலங்கை தடாகம் அமைப்பு இவருக்கு தமிழ்ச்சுடர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது பல இலக்கிய அமைப்புகளோடு இணைந்து செயலாற்றி வரும் கவிஞர் மரியதெரசா எதிர்காலத்தில் மரபுக் கவிதைகள் அதிகம் எழுதவும், மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரவும் முடிவு செய்துள்ளார். ஏழை எளிய மாணவர்களுக்கு உதவ ஒரு அறக் கட்டளையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.
கவிஞர் தன் உயிர்மூச்சாக விளங்கும் தமிழோடும், தன்னம் பிக்கையின் சிகரமாக விளங்கும் இறைவனோடும், புதிய படைப்பு களோடும் விருதுகளோடும் சிறக்க வாழ்த்துவோம். சாதாரண பெண்மணியான இவர் சாதனைப் பெண்மணியாக உயர்ந்த நிலையை அடைவதற்கு அவரது கடின உழைப்பும், தன்னம்பிக்கை யும், தளராத ஆர்வமும் , சேர்க்கும் செல்வமெல்லாம் நூல் ஆக்கத்திற் குச் செலவழிக்கும் மனப்பான்மையும் கவிதைகளைக் குழந்தை களாகக் கருதி கொஞ்சி மகிழும் மனப்பான்மையும் நம்மை வியக்க வைக்கிறது.