வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரி- அப்பர் ப்ரைமரி- உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
பத்தாவது வகுப்பில்தான் ஒருவரையொருவர் பிரிந்தோம். நான் மூன்றாவது தடவையாக தேர்வு எழுதி, பத்தாவது வகுப்பின் கடும் சுவரைத் தாவிக் கடந்தேன். தீரபாலன் முதல் தடவையிலேயே முக்கி முனகி பாஸ் மார்க் வாங்கி கடந்து விட்டான். நான் பயனற்ற நான்கு வருடங்களை கல்லூரியில் கழித்தேன். எங்கள் இருவருக்கும் நீண்டகாலத்திற்கு எந்தவொரு பணியும் கிடைக்கவில்லை. எந்த வேலை கிடைத்தாலும், நாங்கள் அதைச் செய்து முடிப்பதற்குத் தயாராக இருந்தோம். ஆனால், என்ன காரணத்தாலோ...எதுவுமே கிடைக்கவில்லை.
வழி கிடைக்காத குடும்பங்களில் பிறந்த நாயர் பையன்களாக இருந்ததுதான் நாங்கள் இப்படி வெட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று கருதி சமாதானப்படுத்திக்கொண்டோம். நான் வேலைக்காக யாரையும் சென்று பார்த்து அழுது கேட்கவில்லை. யாரும் என்னை அழைத்து வேலை தரவும் இல்லை. ஒரே தொழில் அரசியல் செயல்பாட்டாளன் என்ற ஊர் சுற்றியாக அலைவது என்று ஆனது. இதற்கு நேர்மாறாக இருந்தது தீரபாலனின் நிலை. மண் வேலைக்குச் சென்றான். ஜாதி, மத, பிரதேச வேறுபாடின்றி... பிறகு... செம்மனூர் மைதானத்தில் விஷு பண்டிகையையொட்டி நடைபெறும் சந்தையில் பட்டாசு வியாபாரத்தைச் செய்தான். சிறிது காலம் வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிந்தான். தேநீர்க்கடை ஆரம்பித்தான். செங்கல் சுமந்தான். வாய்க்கால் வேலைக்குச் சென்றான். ஒரு சிறிய கோவிலில் அர்ச்சகராக இருந்தான். வாசக சாலையில் பணியாற்றினான்.
கரி விற்பனை செய்யும் மேஸ்திரியாக இருந்தான். பலவற்றிலும் சென்று சிக்கினான். எதுவுமே நடக்கவில்லை.
பொறுப்புகள் அதிகம் இருந்ததால், அலைபாய்ந்து திரிந்தான். ஒரே உறவினராக இருந்தவர்... ஒரு மாமா. அந்த மாமாவின் மரணத்திற்குப் பிறகு, அனைத்தையும் விற்று, பொறுக்கித் தின்று விட்டுத்தான் தீரபாலன் துபாய்க்கு கட்டுகளைக் கட்டிக் கொண்டு கிளம்பினான். அதுவும்... ஏரியிலிருந்து கிளம்பிய ஒரு பாய்மரப் படகில்...
கள்ளக்கடத்தல் செய்பவர்களின் கூட்டத்தில் சேர்ந்து சென்றான் என்பதை இறுதியாகத் தெரிந்து கொண்டேன்.
இடத்தை விட்டுச் செல்லும்போது, என்னிடம் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. பரம ரகசியமான ஒரு ஒளிந்தோடிய சம்பவமது. தீரபாலன் ஊரை விட்டு சென்றுவிட்டான் என்ற தகவல் தெரிந்தபோது, இரண்டு நாட்களின் இரவு வேளைகளில் நான் தூக்கமே இல்லாமலிருந்தேன். பல முறைகள் நான் ஒரு சிறிய குழந்தையைப் போல கண்களைக் கசக்கிக் கொண்டு அழு தேன். அழுது... அழுது... அப்படியே நினைவுகளில் மூழ்கிக்கிடந்தேன்.
எவ்வளவோ நெகிழ்ந்தும்அழுதும் கடந்து சென்ற எங்கள் இருவரின் வாழ்க்கை! இளமைக் காலம்! ஆண்டி வேடமணிந்து கொண்டு வயல்களுக்கு மத்தியில்... நெருப்புப் பறக்கும் வெயிலில் ஒவ்வொரு வீடாகஏறி இறங்கிய காட்சிகள்... அரிசியும் நெல்லும் மரவள்ளிக் கிழங்கும் காசும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலம்பையும் மணியையும் ஒலிக்கச் செய்தவாறு, கிரீடம் அணிந்து கொண்டு கிராமத்துதெய்வங்களாக ஓடித்திரிந்த காலங்கள்...
மழைக்காலம் பிறந்து... மிதுனம், கர்க்கடகம்... இரண்டு மாதங்களிலும் பெரும்பாலும் அரைப் பட்டினிதான்!
அடர்த்தியான செம்மண்ணில் குழைத்துஅம்மா மூடிவைத்திருந்த பலாக்கொட்டையைச் சுட்டுத் தின்றவாறு மழையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருத்தல்...ஆகாயத்தில்... நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்கள்...மேகத்தின் கர்ஜனை... இடி...மின்னல்! அணில் கடித்து பாதியாக்கியிருக்கும் ஒரு மாம்பழம்...சர்க்கரையும் கேழ்வரகும் சேர்த்து உண்டாக்கப்பட்ட கஞ்சி... தேங்காய் துருவிப் போடப்படாத கஞ்சி... என்ன ஒரு சுவை அதற்கு!
பழைய பொன்னானி தாலுக்காவில் உள்ள பதினெட்டரைக் காவின் திருவிழாக்களான ஒன்பது நிகழ்ச்சிகளிலும் நாங்கள் பார்வையாளராகவும் வேடம் அணிந்தவராகவும் பங்கெடுத்தோம். நாட்டின் பறையரினத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பிறப்புரிமையில் நாங்கள் கை வைத்தோம். மூக்காம் சாத்தன், காளி ஆகிய வேடங்களை அணியக்கூடிய உரிமை தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கிறது. அதுவும்...பாரம்பரிய வேர் உள்ளவர் களுக்கு மட்டுமே உரிமையானது.
நல்ல வேளை...அவர்களிலிருந்து யாரும் எங்களிடம் சண்டைக்கு வரவில்லை. நாயர்களின் பிள்ளைகள் நாட்டு நடப்பின் படி செய்யக்கூடாத கேவலமான செயல்களில் ஒன்று அது. ஊரிலுள்ள நாயகர்களுக்கு மத்தியில் விமர்சனத்திற்கு ஆளானோம். விவரித்துக் கூறப்படுபவர்களாக ஆனோம். விவாதத்திற்குரிய விஷயமாக ஆனோம். அந்தக் காலத்தில் எங்களுடைய வீடுகளில் சாப்பாட்டிற்கு அரிசி அளந்து தந்தவர்கள் அவர்கள் அல்ல. வறுமை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்குஅதைப் பற்றி அந்தக் காலத்தில் எந்த விளக்கமும் கூறுவதற்கான பிறப்புரிமை இருந்தது. அவர்கள் பாடிக் கொண்டே நடந்தார்கள். நாங்கள் ஆடிக்கொண்டும்...
தெய்வம் நீதிமான் அல்லவா? அப்போது ஏன் பயப்பட வேண்டும்? நாங்கள் திருடவோ பொய் கூறவோ செல்லவில்லை. உழைத்து... கஷ்டப்பட்டு...ஊர்ந்தும் நகர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எங்களுக்கு வீட்டிற்கு முன்னால் பத்து பறை நெல்லை அறுவடை செய்து வைப்பதற்கான இடம் இருந்திருந்தால், இந்த கேடு கெட்ட நிலை வந்து சேர்ந்திருக்குமா? விவசாய நிலங்களோ செழிப்பான தென்னந்தோப்புகளோ இல்லாத வர்கள்...வங்கியில் ஒரு நயா பைசாகூட டெப்பாஸிட் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்...
குடும்பம் உள்ளவர்கள் மட்டுமல்ல,அனைத்து விதமான கலைகளையும் அறிந்து வைத்திருக்கும் மனிதர்களாக இருந்தார்கள் சிற்றிலஞ்சேரியில் தீரபால பணிக்கரும், மறவஞ்சேரி மஞ்ஞளாவில் ராமகிருஷ்ணன் நாயரும்.
தீரபாலனின் குடும்ப வீட்டில் களரியும் சமையல் கூடமும் இப்போதும் இருக்கின்றன. தகர்ந்து போன அந்த சரித்திர எச்சங்கள் இப்போதும் பழைய பூமியில் பரவிக் கிடக்கின்றன. இப்போது அதன் உரிமையாளர் அம்பலமேட்டில் அவறான் சாஹிப்.எங்களின் குடும்ப வீட்டிலும் பரதேவதையின் கோவிலும், தெற்கு- வடக்கு என்ற இரு பக்கங்களிலும் இரண்டு நாகத்தின் காவுகளும் இருக்கின்றன.
இப்போது அது இரண்டு பழைய பாம்பின் புற்றுகளாக அலங்கோலப்பட்டு கிடக்கின்றன. பழைய பெரியவர்கள் என நிறைய சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் கிட்டத்தட்ட பழைய பெருமையிலேயே வாழ்கிறார்கள். அணிந்திருக்கும் துணிக்கு மாற்றுத் துணியில்லாத காரணத்தால் வெளியே செல்ல வழியற்ற பெண் பிள்ளைகள் உள்ள தாய் வழியில் பிறந்தவன் நான். அன்றுஎன் தாய்வழிக் குடும்பம் தீரபாலனின் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்தது. ஆனால், தீரபாலனுக்கு ஒரு மாமாவைத் தவிர, உதவிக்கு யாருமில்லை.
சிற்றிலஞ்சேரி பெரிய வீட்டில் குஞ்ஞுண்ணி நாயரின் மருமகன் என்ற முகவரி இருந்ததென்னவோ உண்மை. இந்த மாமாதான் தீரபாலனை பத்தாவது வகுப்பு வரை படிக்க வைத்தார். உரிய நேரத்தில் ஃபீஸ் கட்ட இயலவில்லை. எனினும், அந்த மாமா தன் மருமகனைப் படிக்க வைத்தார். பத்தாவது வகுப்பில் மருமகன் தேர்ச்சி பெறுவதைப் பார்த்து விட்டு, கண்களை மூடினால் போதும் என்ற விருப்பத்தை மனதில் வைத்திருந்தார். தேர்வின் முடிவு வரும்போது, மாமா உலகை விட்டு நீங்கிவிட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால், படுக்கையில் கிடக்கவில்லை. மூன்று நாட்கள் இருந்த வயிற்றாலை, வயிற்றாலையாக மட்டும் இருக்கவில்லை...
அத்துடன் விஷக் காய்ச்சல் வேறு. மாமாஇறந்தபோது, தீரபாலனின் வம்ச தொடர்ச்சி கிட்டத்தட்ட இல்லாமற் போனது.யாருமே இல்லாத ஒருவன்! அந்தக் காலத்தில் இரவு வேளைக்கான உணவைத் தானே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு, பந்தத்தைப் பற்ற வைத்துக்கொண்டு என் வீட்டில் படுப்பதற்காக வருவான். ஒதுங்கிக் கிடக்கும் அறையில்... தெற்கு எல்லையின் மூலையில்... இடது பக்கத்தில் ஒரே பாயில் இரவு வேளையில் நாங்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்கினோம்.
ஊரைவிட்டு எங்கேயாவது போகவேண்டும் என்ற தகவல் எதையும் கூறவில்லை. நிலத்தையும் வீட்டையும் அம்பலமேட்டில் அவறானுக்கு விற்று விட்டு ஊரை விட்டுபோய் விட்டான் என்ற செய்தியே பிறகுதான் தெரிந்தது. திரும்பி வருவான் என்று நீண்டநாட்களாகவே எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். தொடர்ந்து தீரபாலனைப் பற்றிய நினைவுகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அடிமனம் விலக ஆரம்பித்தது. நாட்டில் ஆங்காங்கே மிதந்து வரும் அடையாளம் தெரியாத இறந்த உடல்களைப் பற்றிய செய்திகள் காதுகளில் வந்து விழும்போதெல்லாம் தீரபாலனைப் பற்றிய நினைவுகள் எழுந்து வரும். அந்த இறந்த உடல், ரகசியமாக ஓடிப்போன என் நண்பன் தீரபாலனின் உடலாக இருக்குமோ? பதைபதைப்புகளுக்கு மத்தியில்... இறந்து விட்டான் என்றும் இறக்கவில்லை என்றும் பேசிக்கொண்டிருப்பதற்கு மத்தியில்அந்தச் செய்தி பரவியது.
தீரபாலன் பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு திரும்பி வந்திருக்கிறான்! அந்தத் திரும்பிவந்த சம்பவத்தை ஊரில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வகையில் அறிந்துகொண்டார்கள். புன்னத்தூர் கோவிலுக்கருகில் இளைய தம்புரானின் கைவசத்திலிருந்த ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கினான். அதில் நல்ல ஒரு பங்களாவைக் கட்டினான்.சுற்றிலும் கருங்கல்லால் ஆன சுவர்... காரும், லாரியும் உள்ளே நுழைந்து வரக்கூடிய அளவிற்கு இருந்த இரும்புகேட்... மூன்றரை ஹார்ஸ் பவர் கொண்ட பம்பிங்செட்... கோடை காலத்தில் நிலத்தில் எப்போதும் வந்து கொண்டிருக்கும் சுத்த நீர்... நான் தீரபாலனைப் பார்க்கவில்லை.
அவனுடைய பொருளாதார நிலையைப் பற்றிய தகவல்களை ஆராய்ந்து பார்க்கவுமில்லை. காரணம்- ஊருக்கு வந்து இவ்வளவு காரியங்களைச் செய்து முடித்த நிலையில், தீரபாலன் என் வீட்டிற்குள் சற்று நுழைந்து வந்து பார்க்கவில்லையே என்ற கோபம் எனக்கும் இருந்தது. இப்போது நட்பைப் புதுப்பிப்பதற்காக அங்கு தேடிச்செல்வது பலவித கெட்ட சிந்தனைகளுக்கு வழி வகுத்துக் கொடுக்கும்.. பணத்தைப் பார்த்து வால்களை ஆட்டிக்கொண்டு செல்பவர்களின் கூட்டத்தில் என்னையும் நினைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு எண்ணத்திற்கு இடம் தரக்கூடாது என்பதில் முடிந்த வரைக்கும் கவனமாக இருந்தேன்.
பலவித கவலைகளுடன் செல்லக்கூடிய நபர்களின் கண்ணீரைத் துடைப்பதில், ஊருக்கு வந்த பிறகு தீரபாலன் பெரிய ஒரு பங்கை வகிக்கிறான்என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இரக்க மனம்கொண்ட அந்த மனிதன் யாரையும் வெறும் கையுடன் திரும்ப அனுப்புவதில்லை. அந்த அளவில் நல்ல விஷயம்தான். பணம் இருக்கிறது என்பதால் மட்டுமே ஒரு ஆள், பெரிய மனிதனாக ஆகிவிட முடியாதே! பணத்தை வேண்டிய வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்த நண்பனைப் பற்றி எனக்கு மனப்பூர்வமான மதிப்பு உண்டானது.
எனினும், நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு சந்திப்பிலிருந்து வேண்டுமென்றே விலகிக் கொண்டிருந்தோம். தீரபாலனை என்றாவதொரு நாளில் நான் சந்திக்காமல் இருக்கப் போவதில்லை. எவ்வளவு காலம் ஆனாலும், பொறுமையுடன் காத்திருப்பதற்கு என் மனம் தயாராக இருக்கும். வராமல் இருக்கமாட்டான். ஏதாவதொரு நாளன்று என் நம்பிக்கை இன்று இல்லாவிட்டாலும் நாளை என்னைக் காப்பாற்றும். காத்திருந்தேன்.
முழுமையான மிடுக்குடன் ஒருநாள் ஒரு சிறப்புவிருந்தாளி நான்கு கால்களில் என் வீட்டிற்குள் நுழைந்து வந்தது. கறுத்து.. தடித்த... நன்கு தொப்பை போட்டிருந்த ஒரு உயர் தர நாய்! கிட்டத்தட்ட ஜெர்மன் பெடிக்ரியின் இனத்தைச் சேர்ந்தது. என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் நான் சிறிது நேரம் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். குன்றிமணியைப் போன்றிருந்த கண்களில் அன்பு கலந்த குணம் அலையடித்துக் கொண்டிருந்தது. நேசமும் அன்பும் பெருமையும் கனிவும் மிடுக்கும் கலந்த ஒரு குணம்...நான் அருகில் சென்றேன். அதன்கழுத்தில் கிடந்த பட்டையில் ஒரு எழுத்து குறிக்கப்பட்டிருந்தது. அது எனக்கானதாக இருக்கவேண்டும்.
பட்டை கட்டப்பட்டிருந்த கழுத்தை அந்த நாய் என்னைநோக்கி நன்றியை வெளிப்படுத்தும் ஒரு சத்தத்துடன் நீட்டியது. நான் அன்புடன் அதைத் தடவினேன்.முகத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்தேன். நீண்டகாலமாக தெரிந்ததைப் போல அது என் நாசியை நக்கியது. அந்த நாய் கூறும் செய்தி என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக என் இதயம் ஆர்வத்துடன் இருந்தது. அது மிகவும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஆர்வத்துடன் பட்டைக்கு மத்தியில் சொருகி வைத்திருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்தேன். முன்பே மனதில் நினைத்ததைப் போல, அது என் பெயருக்கு எழுதப்பட்டிருந்த ஒரு கடிதம்தான்.
கடிதத்தின் உள்ளடக்கம் வேதனை நிறைந்த கதைகளாக இருந்தது. பழைய காலத்து ஞாபகங்களின் கண்ணிகளைச் சேர்த்து இணைக்கக்கூடிய ஒன்றிரண்டு சம்பவங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் நிறைய குற்றவுணர்வு வெளிப்பட்டது. செய்யக் கூடாத கொடூரமான குற்றச் செயலைச் செய்துவிட்டோமே என்ற உணர்வு உள்ள கடிதம்... உலகத்தில் எதுவுமே நிரந்தரமல்ல என்று அதில் கூறப் பட்டிருந்தது. தனக்கு ஷீடோஃப்ரேனியா என்ற நோய் இருப்பதாக அவன் உறுதியாக நம்புகிறான்! அவன் இப்போது போதை மருந்துகளுக்கு அடிமை!
தன் பால்ய கால நண்பனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். பார்த்து விட்டு, இறப்பது...ஏதாவது கூறுவதற்கு இருந்தால், கூறி முடிப்பது...""ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததால், இருவருக்குமிடையே இருந்த நெருக்கம் இல்லாமல் போய்விட்டது என்று தவறாக நினைக்கவேண்டாம்.இது இறுதி ஆசை. நீ என் வீட்டிற்கு வரவேண்டும். வராமல் இருக்கக்கூடாது.இந்த கடிதத்தைக் கொண்டு வருபவன் என் நெருங்கிய நண்பன். டிமூர் என் அனைத்து ரகசியங்களையும் அறிந்தவன்.'' கடிதத்தை வாசித்து முடித்து பாக்கெட்டில் வைத்துவிட்டு, நானும் நண்பனை மீண்டும் உற்றுப் பார்த்தேன். பல முறைகள்... அது ஏதோவொரு பதிலுக்காக காத்திருக்கிறது.
""வருகிறேன். வராமல் இருக்க மாட்டேன். ஒன்று... இன்றைக்கே.. இல்லாவிட்டால்.. நாளைக்கு.'' நாளை! நாளை! அதற்கு முடிவே இல்லை. அதனால்,இன்றே போகவேண்டும். இப்போது... இந்த நிமிடமே... பதில் குறிப்பு எழுதி, பெல்ட்டில் சொருகி வைத்தேன். டிமூர் என்ற சி.ஐ.டி.யை கேட் வரை பின்தொடர்ந்தேன். கேட்டைக் கடந்ததும், அவன் மேலுமொரு முறை திரும்பிப் பார்த்தான். வாசனையை முகர்ந்து.. முகர்ந்து பார்த்தவாறு வேகமாக ஓடினான். நான் சென்று சேர்வதற்கு முன்பே டிமூர் அங்கு போய்ச் சேர்ந்திருந்தான்.
டிமூர் கொண்டு போய் கொடுத்த குறிப்பை வாசித்துவிட்டு, என் நண்பன் தீரபாலன் தன் புதிதாக கட்டப்பட்ட பங்களாவின் வாசலில் சாய்வு நாற்காலியில் பைப்பைப் புகைத்தவாறு படுத்திருந்தான். தேக்கு தடியைக் கொண்டு தனி கவனம் செலுத்திதயாரிக்கப்பட்ட டீப்பாயின்மீது கால்கள் இரண்டையும் தூக்கி வைத்திருந்தான். ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்தான். வந்து நுழையும் ஆளின் முகம் உடனடியாகஅதன் காரணமாக தெரியாது. மறைப்பதைப் போல அருகில் மேஜையின் மீது ஒரு ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது.
மொத்தத்தில் வாசலில் வாடிய முல்லை மலரின், எரிந்த கற்றாழையின் ஒரு கலவையான வாசனை தங்கி நின்றிருந்தது. அது வெறுக்கக்கூடியதா, காட்டமானதா,வாசனையானதா என்பதைக் கூற முடியவில்லை.
எனினும், சூழல் இனம் புரியாத ஒரு போதைப் பொருளின் மாய வலையில் சிக்கிக் கிடந்தது. எதையோ நினைத்தவாறு அசாதாரணமான ஒரு ஆனந்தத்தில் மூழ்கி தீரபாலன் படுத்திருந்தான். சரீரம் சாதாரணமாக இருப்பதை விட வீங்கிப் போய் காணப்பட்டது. அந்த உறுதியான பழைய சரீரம், இப்போது கிட்டத்தட்ட ஒரு உருண்டையைப் போல ஆகியிருந்தது.
கன்னங்களும் சாதாரணமாக இருப்பதைவிட அதிக சதைப்பிடிப்புடன் இருந்தன. முகத்தில் என்னவென்று கூற முடியாத ஒரு வெளிறிப்போன தன்மை படர்ந்திருப்பது தெரிந்தது. எப்போதும் மது அருந்திக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முக வெளிப்பாடு...கண்கள் முழுமையாக சொருகிப் போய் காணப்பட்டன. எந்தக் காலத்திலும் அப்படிப்பட்ட ஒரு தோற்றத்தை எதிர்பார்க்கவில்லை. பழைய உருவமும் வடிவமும் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தன. தாடியும் தலையும் அளவிற்கும் அதிகமாக வளர்ந்து நின்றிருந்தன. ஒழுக்க நெறிகள் இல்லாமற் போன பயணியான ஒரு மனிதனின் நிலை... ஏதோ ஒரு மாய காட்சியைப் பார்த்து கவலையில் மூழ்கிப் படுத்திருப்பதற்கு மத்தியில் என் வருகை... அந்த வருகையை நீண்ட நாட்களாக... ஒரு வகையில்... எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம்.
""தீரபாலா... என்ன ஆச்சு? நான் எதிர்பார்த்தது இப்படிப்பட்ட ஒரு தோற்றத்தை அல்ல. மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறாயே! ஏன் இந்த நிலை?''- பார்த்தவுடனே ஆச்சரியத்தில் கூறிவிட்டேன். அதைக் கூறியிருக்க வேண்டியதில்லை என்று பின்னர்நான் நினைத்தேன். ""இல்ல... யார் இது? உண்ணியா? உண்ணி... நீ எப்போ வந்தே? என்ன விசேஷம்... உண்ணி? நீ தீரபாலனை மறந்துவிட்டாய். இல்லையா? என்கிட்ட அது வேணுமா? நீ வருவேன்னு நான் எதிர்பார்த்து... எதிர்பார்த்து....'' -திடீரென பதைபதைப்பால் தீரபாலனால் முழுமை செய்ய முடியவில்லை. தீரபாலன் அழுதான்.
""தீரா... நீ அவற்றையெல்லாம் விடு. நானும் நீயும்... இரண்டு பேரும் இருவர் அல்ல. இரண்டும் ஒண்ணுதான்... எந்தக் காலத்திலும்.மரணத்தில்கூட...'' தீரபாலனின் தாடையைப் பிடித்து அன்புப்பெருக்குடன் தடவினேன். மூன்று... நான்கு நிமிடங்கள் நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதோம். குற்றவுணர்வின் காரணமாக எங்களை ஒருவகையான ஹிஸ்டீரியா பாதித்திருந்தது.
""நீ வந்ததை நான் பார்க்கல. நான் தூக்கத்தில் இருந்தேன்.'' -தொண்டை இடறியது. ""நீண்ட நாட்களாகவே உன்னைப் பார்க்கணும்னு நான் நினைத்துக் கொண்டே இருந்தேன். இதற்கிடையில் பலவிதமான பிரச்சினைகள் என் வாழ்க்கையில் உண்டாகி விட்டது. அவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்துகொண்டிருக்கும் நேரத்தில்தான் உன் வருகை.. என்னால் வந்து பார்க்க முடியவில்லை. மன்னிக்கணும்...'' நானும் தீரபாலனிடம் மன்னிப்பு கேட்டேன்.
""சௌதாமினி... வா...''- உள்ளே சென்று தன் இனிய குரலுக்குச் சொந்தக்காரியை அழைத்தான். ""இது... இது... யாருன்னு பாரு... என் பால்ய காலத்து நண்பன் உண்ணி. நான் கூறக்கூடிய அந்த உண்ணிகிருஷ்ணன்தான் இது. நான் இவனை உண்ணி என்றும், இவன் என்னை தீரன் என்றும் அழைத்துக் கொள்வோம். இப்போது நான் உண்ணியாகவும், இவன் தீரனாகவும் உருவ மாற்றம் பெற்றிருக்கிறோம்.'' -தீரபாலன் எதையோ நினைத்ததைப்போல கூறினான். சௌதாமினி புன்னகையுடன், அதே சமயம்.... பணிவுடன் வந்து முகத்தைக் காட்டினாள். வணங்கினாள்.
""அவர் வாழ்க்கையில் ஒரு நாளில் ஒரு நூறு முறையாவது அந்த பெயரைக் கூறாமல் இருக்கமாட்டார். நானே ஆச்சரியப்படுவேன். என்னைவிட விருப்பத்திற்குரிய இன்னொரு மனிதர் அவருக்கு இருக்கிறார் என்பதை நினைத்து...எங்களுக்கு முன்னால் உயிருடன் வந்து நின்று கொண்டிருக்கும் உண்ணி அண்ணன்.''- அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டாள். எளிய தோற்றம். இந்த அளவிற்கு பாசத்தை வைத்திருக்கக்கூடிய இந்த பெண் இவனுக்கு வாழ்க்கையில் எப்படி கிடைத்தாள்? அதிர்ஷ்டசாலி! ஒரு பத்து முறையாவது என் மனம் முணுமுணுத்திருக்கவேண்டும்.
""இது உன்னுடைய மனைவிதானே?'' ""நீ சந்தேகப்படவே வேண்டாம். இது என்னுடைய மனைவிதான். என் அக்கா அல்ல. ஆனால், இவள் என் ஒரே மாமாவின் மூத்த மகள். திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் முடிவதற்குமுன்பே கணவர் இறந்துவிட்டார். விதவையாகி விட்டாள். குழந்தைகள் இல்லை. நான் நேரில் போய்இவளை மாமாவின் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். பலரும் நெற்றியைச் சுளித்தார்கள்.
எனினும், நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. என் மாமா எனக்கு அவ்வளவு பெரியவர்! அந்த கதை உனக்குத்தான் தெரியுமே!'' நான் அவளைத்தான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
""எப்படிப் பார்த்தாலும், நீ அதிர்ஷ்டசாலி!''-நண்பனின் கரங்களை நெஞ்சின்மீது அழுத்திப் பிடித்து வைத்தவாறு நான் உயிர் காதலியைத் தடவு வதைப் போல சிறிது நேரம் தடவினேன். ""காபி பருகுவதற்கு முன்னால் எனக்குள்இரண்டு புகை செல்லட்டும். நல்ல.. முதல் தரமான சரஸ்.. நேப்பாள் கஞ்சாவின் எùஸன்ûஸ எடுத்து தயாரிக்கப்பட்டது. நீ இதை ஒருமுறை கொஞ்சம் பயன்படுத்திப்பார். நல்லஅனுபவமாக இருக்கும். வார்த்தைகளால் விவரித்துக் கூற முடியாத ஒரு ஆனந்தம்!'' -தீரபாலன் பைப்பை என்னை நோக்கி நீட்டினான். அந்த அன்புப் பரிசை பலவீனத்தின் காரணமாக மறுக்க முடியவில்லை.
""நான் இதுவரை அப்படிப்பட்ட ஆனந்தங்களை அனுபவித்தது இல்லை."" ""அப்படின்னா... எனக்காக இரண்டு தம் எடு..''
""வேண்டாம். தலை சுற்றும்.''
""முன்பு நாம் மூக்குதல கண்ணேங்காவில் திருவிழாவைப் பார்ப்பதற்காகச் சென்றபோது, இந்த சரக்கை நிலத்தில் அமர்ந்து இழுக்கலையா? உனக்குஇப்போது அது ஞாபகத்தில் இருக்கிறதா? அதே போல இருக்கக்கூடிய ஒரு சரக்குத்தான் இது. சிறிதும் பயப்பட வேண்டாம். எதுவும் நடந்தால்தான் பயப்படணும். சிறிது நேரத்திற்கு நாம் அனைத்தையும் மறந்து விடுவோம். கடந்துசென்ற சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றும். அந்த பழைய பால்ய காலங்களுக்கு சிறிது நேரம் நாம் திரும்பிச் செல்லலாம். நீண்ட கால ஞாபகங்களில் மூழ்கிப் போகலாம்'' -தீரபாலனின் வார்த்தைகளில் கவிதையும் ஆவேசமும் ததும்பின.
அவன் மேலும் பேசிக் கொண்டே இருந்தான். பைப்பை என் உதட்டில் பொருத்தினான். புதிதாக மருந்து நிறைக்கப்பட்ட வெடி. நெருப் பைப் பற்ற வைத்ததும் தீரபாலன்தான். ""ஆழமாக இழு...'' -என்னிடம் ஆவேசத்தை உண்டாக்கிவிட்டு, மேலும்...மேலும் அருகில்அமர்ந்துகொண்டு பேசினான். எதையும் மறைத்து
வைக்காத இரண்டு நண்பர்கள். நீண்டகாலம் நெருக்கமாக இருந்தவர்கள் சந்திக்கிறார்கள். பேசுவதற்கு பலவும் இருக்கும். அவற்றை மிகவும் சாதாரண விஷயங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
சௌதினியம்மா அனைத்தையும் கேட்டுக்கொண்டு கதவிற்குப் பின்னால் மறைந்து சாய்ந்து நின்றிருந்தாள்.
சிரிப்பு வரக்கூடிய சந்தர்ப்பங்களில் அதைத் தவிர்த்தாள். தொண்டை வறண்டிருப்பதைப்போல தோன்றியது. நாவில் எச்சில் சிறிதுமில்லை. பஞ்சு பொதியைப்போல சரீரம் கொஞ்சம் கொஞ்சமாக பூமியிலிருந்து உயர்ந்து போய்க் கொண்டிருந்தது. பதைபதைப்பு.. ஒருவேளை... இது இந்த பூமியில் வாழ்ந்த வாழ்க்கையின் இறுதி நாளாக இருக்குமோ? இன்றைய இரவு மட்டுமே இருக்கிறது. நாளை இல்லை. நாளையைப் பற்றி சிந்திப்பவர்கள் இதை புகைக்க மாட்டார்கள்.நான் என்னையே சமாதானப்படுத்திக் கொள்ளும் பயனற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.
""தண்ணீ..- நான் கையால் சைகை செய்தேன்.அதையே அழைத்து கூறவும் செய்தேன்.சௌதாமினி ஒரு ஸ்டீல் கூஜா நிறைய பச்சை நீரைக்கொண்டு வந்து மேஜையின்மீது வைத்தாள். அப்பப்பா.....! நிம்மதி உண்டானது. நீரைப் பருகிவிட்டு, இறக்கலாமே! இனம் புரியாத ஒரு பெருமூச்சு எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது.
""உண்ணீ... எதையாவது கடிச்சு சுவைத்து சாப்பிடணும்போல உனக்கு இருக்குதா? சௌது... இனிப்பு ஏதாவது இருந்தால், கொண்டுவா.'' ""சீரக அப்பம் இருக்கு... க்ரீம் கேக் இருக்கு.. கொக்கோ சாக்லேட் இருக்கு. சர்பத் உண்டாக்கலாம்.'' -சௌதாமினி கூறினாள்.
""பழைய பலாப்பழ சிப்ஸ் இருக்குதா?'' -தீரபாலனின் கேள்வி.
""இருக்கு.'' ""அப்படின்னா... கொண்டு வா.'' சௌதாமினி பலாப்பழ சிப்ûஸ ப்ளேட்டில் கொண்டுவந்து வைத்தாள். ஒரு ப்ளேட்டைக் காலி பண்ணினான். இரண்டாவதொரு ப்ளேட்டிற்கு ஆர்டர் கொடுத்தான்.
""சாப்பாடு சாப்பிட வேண்டாமா?'' ""சாப்பிடணும். இன்று என் இரவு உன்னுடன்தான். சௌதாமினி அம்மாவிற்கு கோபம் உண்டாகுமோ.. என்னவோ?''
""உண்டாக நியாயமில்லை.''
சௌதாமினி மறைந்து நின்றுகொண்டு அனைத்தையும் கேட்டாலும், அவர்கள் ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள் என்பது தெரிந்ததும், சமையலறைக்கு இரவு வேளைக்கான சாப்பாடு விஷயத்தைக் கவனிப்பதற்காகச் சென்றுவிட்டாள்.
""உண்ணி...உன்னையும் உன் சகோதரியையும் அவளின் மூன்று குழந்தைகளையும் உன் மனைவியையும் பிள்ளைகளையும் வந்து பார்க்கணும்னு இந்த ஊரில் கால் வைத்த நாளிலிருந்தே நினைத்தேன். ஆனால், எனக்கு ஒரு பலவீனம் இருக்கிறது. எப்போதும் இந்த சரஸ் புகைப்பது... உனக்கு நான் தந்த சரக்கு எல்.எஸ்.டி. இனத்தைச் சேர்ந்த மிகவும் சக்தி படைத்த போதைப் பொருள். நான் இதை நிரந்தரமாக பயன்படுத்த ஆரம்பித்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இதிலிருந்து எனக்கு இனி விடுதலை இல்லை. இதை ஏதாவதொரு நாள் புகைக்காமல் இருந்தால், எனக்கு பெரிய பிரச்சினையாகி விடும். நான் இனிமேலும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதில் எந்தவொரு அர்த்தமுமில்லை என்று தோன்றுகிறது. இந்த உலகத்தில் யாருக்கும் யாரும் சொந்தமில்லை.
அப்படி இருப்பதாக நினைப்பது கேவலமான ஒரு மாயை. மொத்தத்தில் எனக்கென இருக்கக்கூடிய ஒரே உறவு இந்த கருப்பு நிற நாய்தான். என் கருத்த வளர்ப்புப் பிராணி! செல்ல டிமூர்... என் மன வேதனைகளை கிட்டத்தட்ட இவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் யாரென்று சௌதாமினிக்குக்கூட இப்போதும் தெரியாது. அவளுக்கு நான் அன்னியன்.என் மரணம் நெருங்கி விட்டது, உண்ணி.
நான் இனி அதிக நாள் உயிருடன் இருக்கப் போவதில்லை. என் மூளை முழுவதும் பழுதாகி விட்ட... ஓட்டைகள் விழுந்த ஒரு பாத்திரமாக எனக்குத் தோன்றுகிறது. எதுவுமே என் நினைவில் நீண்ட நேரம் தங்கி நிற்காமல் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. எதன் மீதும் எனக்கு ஈடுபாடு இல்லை. அடங்காததாகங்களெல்லாம் அடங்கி விட்டன என்ற எண்ணத் துடன் நான் உறங்குகிறேன். என் படுக்கையைப் பங்கிடுவதற்கு நான் எந்தவொரு பெண்ணுக்கும் சந்தர்ப்பம் தருவதில்லை.
சௌதாமினிக்குக்கூட என் பல நடத்தைகளும் பழக்க வழக்கங்களும் விரும்பக்கூடியதாக இல்லாமற் போகலாம். ஒரு வகையான பைத்தியக்காரத் தன்மை என்னை பாதித்து விட்டிருக்கிறது. நிபுணரான ஒரு மனநல மருத்துவர் என்னைச் சோதித்துப் பார்த்துவிட்டு கூறினார்... "ஷீடோஃப்ரேனியா என்ற நோயின் பாதிப்பிற் குள்ளாகி இருக்கிறீர்கள்' என்று. சுருக்கமாக கூறுவதாக இருந்தால், போதைப் பொருள் என்ற பாம்பு என்னை இறுகப் பிடித்திருக்கிறது. இனி அவன் முழு ரத்தத்தையும் குடித்துவிட்டுத்தான் அடங்குவான்.''
தீரபாலன் கூறிய அனைத்தையும் நான் மிகவும்அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். அவனிடம் ஏதாவது கூறி, பதிய வைக்கக்கூடிய மனநிலையில் இல்லை.நான் முற்றிலுமாக தளர்ந்து போய் செயலற்ற நிலையில் இருந்தேன். என் சரீரம் முழுவதும்...அனைத்து பகுதிகளிலும் வேதனையாக இருந்தது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிகள்! ""தங்க நண்பனே... உண்ணீ... நீ என்னை மறந்துவிடாதே.என்னை மன்னித்து விடு...'' -தீரபாலன் மீண்டும் அழ ஆரம்பித்தான். போதைப்பொருள் உள்ளே இறங்கும்போது, அந்த அழுகை தானாகவே நின்று விடும் என்ற விஷயம் எனக்குத் தெரியும். அதனால் தேற்றுவதற்கு முயலவில்லை. இரவில் உணவு சாப்பிடுவதற்கு மிகவும் தாமதமாகி விட்டது. தீரபாலன் மிகவும் பலவீனமடைந்து காணப்பட்டான்.
ரத்தத்தில் போதைப் பொருளின் வீரியம் கலந்து விஷமாக மாறியிருக்குமோ? மதுஅருந்துபவர்களுடன் எனக்கு நீண்ட கால உறவு இருக்கிறது. அபின் உட்கொள்ளக் கூடியவர்கள் எனக்கு தெரிந்தவர்களின் வளையத்தில் இருந்தார்கள். ஆனால், மரிஜுவானா, எல்.எஸ்.டி. ஆகியவற்றை நிரந்தரமாக பயன்படுத்தி, செயலற்ற நிலைக்கு ஆளான ஒரு உறவினனை... ஒரு நல்ல நண்பனை... நான் முதல் தடவையாக பார்க்கிறேன்.
அன்று இரவு என் நண்பன் மூன்று... நான்கு முறைகள் வாந்தியெடுத்தான். கட்டியான... ஒருவகையான திரவம் வாயிலிருந்து நுரை தள்ளி வழிந்து கொண்டிருந்தது.
ஆமணக்கு எண்ணெய்யைப்போல... கட்டியாக... மஞ்சளும் இளம் பச்சையும் கலந்த ஒரு திரவம்.... நான் மூன்று...நான்கு தடவைகள் முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து, வீசிவிட்டேன். என் மடியில் நீண்ட நேரம் தலையை வைத்து, கண்களைத் திறந்து வைத்து என்னைப்பார்த்தவாறு தளர்ச்சியின் சோர்வில்அப்படியே படுத்திருந்தான். அந்த இரவில் நான் ஒரு பொட்டுக்கூட கண்மூடவில்லை. பலவித கெட்ட கனவுகளையும் கண்டேன். இறுதியில் வெற்றி பெற்ற போதைப் பொருளின் உச்சியில் ஏறி கொடி நாட்டிய காட்சிகளைக் கண்டு புளகாங்கிதத்தால் உணர்ச்சி வசப்பட்டேன்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அதிக நாட்கள் கடப்பதற்குமுன்பே என் நண்பன் தீரபாலன் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டான். நான் அங்கு சென்றபோது, அந்த இறந்த உடலுக்கருகில் கருப்புநிற டிமூர் காவல் காத்தவாறு படுத்திருந்தது.
-உண்ணிகிருஷ்ணன் புதூர்
தமிழில்: சுரா