மின்னுட்டக் கட்டுரை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் எப்படிப்பட்ட கல்வியைக் கற்றார்கள்?
அவர்களின் அறிவுத் தேடலுக்குப் பின்னணியில் எத்தகைய சுவடியங்கள் இருந்தன? அவர்களது திறன்களை அறியும் போது இத்தகைய வினாக்கள் எழுகின்றன.
இடைக்காலத்தில் பெண்களுக்கான கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் அடுக்களைச் சிறைக் குள் அடைக்கப்பட்டதால்., பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்று கோஷமிட்ட பாரதி, பாரதிதாசனின் காலம், பின் தங்கிய காலமாக ஆகிவிட்டதெனில், சங்ககாலம் எப்படிப்பட்டது?
பல பெண் புலவர்கள் வாழ்ந்த பொற்காலம் அது.
போர்க்களம் கண்டவர்களாகவும், வீரத்தின் விளை நிலங்களாகவும் திகழ்ந்தனர் அவர்கள். மெல்லிய உணர்வுகளின் கசிவாகவும், ஏன் சில சமயங்களில் எமாந்தவர்கலாகவும் தன் காதலில் நம்பிக்கையுடையவர்களாகவும் சங்ககாலப் பெண் புலவர்கள் விளங்குகின்றார்கள்.
எழுத்துரிமை பெற்ற நிலையில் அவர்கள் காணப்பட்டாலும் பிற்காலத்தில் அவர்களின் பாடல்களைத் தொகுத்தவர்கள் சில மாற்றங்களைச் செய்து இருக்கிறார் கள். ""எல்லா உணர்வுகளையும் வாயால் சொல்லக் கூடாது"" என்று பெண்களுக்குத் தடைபோடப்பட்டது. எனினும் மிரட்டக்கூடிய மீறல்களும் இருந்தன.
குறிப்பாக இப்பெண்புலவர்களைப் பற்றி ஆதாரப்பூர்வமாகக் கூறிய மூன்று பெரும் பேராசிரியர்களை நாம் அறிந்தாக வேண்டும். பேராசிரியர் நா.சஞ்சீவி அவர்கள் ஆராய்ச்சி அட்டவணையில் இவர்களைப் பற்றிய வகைப்பாட்டைத் தந்துள்ளார். ஔவைநடராசன், தாயம்மாள் அறவாணன் அம்மையார் ஆகியோர் புலவர்களைப் பற்றிய முடிவான நல்ல தகவல்களைத் தந்துள்ளமை நோக்கத்தக்கதாகும்.
நான் அவர்களது உணர்வுகளைக் கூறவே நான் பெரிதும் விழைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த சங்கச் சகோதரிகள் தங்கள் வாழ்வை எவ்வாறு பிரதிபலித்திருக்கிறார்கள் என்ற தேடலுடன் அவர்களை நெருங்குகையில் வியப்பால் நம் விழிகள் விரிகின்றன.
முட்டிக்கொள்ளவா? .அறையவா? சத்தமிட்டுக் கத்தித் தாக்கவா? என்ற பெண்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் ஔவையாரை மூதாட்டியாகவே நாம் அறிவோம். குறுந்தொகை (28) ஔவை இளம்பருவப்பெண். முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? என்று கத்தி… என் உயவு நோயை நீங்கள் அறியவில்லையா? என்று தூங்குபவர்களை எழுப்புகிறார். தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு இரவு கொடியது தானே! இதனுள் அவளது ஆற்றாமை, அதனை உணராத பிறரின் அறியாமை, அதைத் தாங்காத இயலாமை எல்லாம் அடங்கியிருக்கிறது.
வெள்ளிவீதியாரின் பாடல்கள் ஆற்றாமையின் உச்சம். அவரது உவமைகள் "" கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணை உணங்கல் "" அழுத்தமானதாகும். "" கன்றும் உண்ணாது கலத்தினும் படாது"" வீணாகும் பாலின் உவமை அவளது அழகைப் பருகாதத் தலைவனைக் குறிக்கும். அதே நேரத்தில் அவளது அழகால் அவளுக்கும் பயனில்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுகிறது.
பாடலின் எண்ணிக்கை மிகுதியில் ஔவை நிற்கிறார்.
அகம், புறம், அகமும் புறமும் என பாடியவர்களை பட்டியலிடலாம். இவர்களுள் மிகுதியான பாடல்களைத் தந்தவர் ஔவையார் என்பது தெரிந்த செய்தி. இக்கட்டுரையில் பிறரால் மிகுதியும் எழுத்தாளப்படாத செய்யுள்களையும், அதிகம் நம் காதுகளில் ஒலிக்காத பெயருடையவர்களையும் பற்றி அறிய முற்படுவது பயன்தரும்.
சங்கப் பாடல்கள் பாடிய புலவர்கள் = 473
மொத்த பெண் புலவர்கள் = 45
மொத்த ஆண் புலவர்கள் புலவர்கள் = 428
பதிற்றுப்பத்தில் உள்ள ஒரே ஒரு பெண்பாற் புலவர் காக்கைப்பாடினியார் ஆவார்.
இப்பெண்களின் பாடல்களில் உள்ள செய்திகளைக் காண்கையில் வியப்பாக இருக்கிறது. சேலைக்குச் சோற்றுக் கஞ்சியிட்டு உலர்த்திய செய்தியும் காணப்படுகிறது. (நற்:90)
பனை நாரால் ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கிறார்கள். ஔவையார் ஆறு திணைகளில் பாடியுள்ளார். குறிப்பாகப் புறத்திணைகள்
அவை. ஒக்கூர் மாசாத்தியார் மூதின் முல்லை, முல்லை துறைகளில்
சிறந்த பாடல்களைத் தந்துள்ளார். பத்துப்பாட்டில் ஒன்றான பொருநராற்றுப்படை நூலைப் பாடியவர் முடத்தாமக்கண்ணியார். இவரை ஆண் புலவராகவும் காட்டியுள்ளனர். இது அக்கால பெண் எழுத்துலக அரசியலாகும். அக்காலத்தில் வேறு விதமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
முக்காலங்களிலும் பெண் பார்க்கப்படுகிற விதம் வேறு… பெண் பார்க்கும் விதம் வேறு. காவற் பெண்டு என்னும் புலவர், பெண்ணின் புறப் பொருளை மட்டும் பாடியுள்ளார். இவர்களுள் அரசியர் மூவர். (ஆதிமந்தியார், பாரிமகளிர், பெருங்கோப்பெண்டு ). நெட்டிமையார் என்று இருக்கும் பெயர் அவரது நீண்ட இமையால் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
பொன்மணியார் என்ற பெண் குறுந்தொகையில் 391 ஆம் பாடலில் காட்டும் காட்சி பெண்களின் மனநிலையை நன்கு படம் பிடிக்கிறது. ஆறுதல் சொல்லும் பெண் மென்மையாகத் தானும் அழுவதை இவர் கூறுகிறார்.
முல்லைத் திணைப் பாடலிது.
காமம் சேர்குலத்தார் என்ற பெண் ,மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லும் இயல்பை வெளிப்படுத்தியுள்ளார்.
""நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே"" என்ற வரிகள் இதனைக் கூறும்.
நப்பசலையாரின் அகநானூற்றின் 160 ஆவது பாட;லின்
"" நிறை சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண ""
-மேற்கண்ட வரிகள், பெண் நண்டு
முட்டையிட அதை ஆண் நண்டு அடை காப்பதைச் சொல்கிறது. என்ன அழகு.. என்ன உணர்வு.. மானுடம் நண்டிடம் தோற்றுப் போகிறதே! பெண்பாற் புலவரின் ஆழ்ந்த, கூர்மையான அறிவியல், உயிரியல் பார்வையல்லவா இது.. இதன் மூலம் தலைவன் தலைவியிடம் கொண்ட அன்பு, பொறுப்புணர்வு, சந்ததியைக் காக்கும் திறன் இப்படி எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.
நற்றிணையின் 250 ஆவது பாடல் மருதத்திணைப் பாடலாகும். நூலாசிரியர் நல்வெள்ளையார், ஒரு குழந்தையின் வர்ணனையை இப்படித் தருகிறார்.
கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழி புதல்வன் ரசனையோடு அமைந்த ஒரு காட்சியைத் தன் தாய் கண்களால் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பெண்ணின் மனது ஒரு பேராற்றல் நிரம்பிய பெட்டகம். அதிலிருந்து வரும் சொற்கள் இயல்பான அழகுடனேயே வரும்.
கைம்பெண்ணாயிருந்து பாடும் தாபத நிலை எனும் துறையும் காணப்படுகிறது. வட்டார வழக்குகளையும் காண்கிறோம். வீட்டுக் கதவை அடைத்தல் என்ற சொல் மதுரை வழக்காகும் குறுந்தொகையில் 118 பாடலில் இதனை நச்செள்ளையார் புள்ளும் மாவும்…
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்’’
- என்று பாடியுள்ளார்.
அக்காலத்தில் தாய்வழிச் சமூகம் இருந்த., தாய்வழி மரபை அவர்கள் வெளிப்படுத்துவதில் கவனமாயிருந்தார்கள்.
ஆன்றோர் கணவ’தேவி ஈன்ற மகன்’’ என்றெல் லாம் பதிற்றுப்பத்தில் நச்செள்ளையார், காக்கைப்பாடினியார் பாடக் காண்கிறோம், பெண்ணியம் சங்க காலத்திலேயே தோன்றி வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் காணப்படும் செய்திகளிலிருந்து இவர்களின் பாடற் செய்திகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இவர்களது பாடல்களில் எதார்த்த உணர்வும் மெல்லிய இழையோடு கூடிய உணர்வுகளும் ஆற்றொழுக்காகக் காணப்படுகின்றன.
யானையின் இயல்புகளைச் சங்ககாலப் பெண்கள் மிகுதியாக அறிந்திருந்தனர். குறுந்தொகையின் 30 ஆவது பாடல் அழகியதொரு கனவைக் காட்டுகிறது. இதை எழுதியவர் கட்சிப்போட்டு நன்னாகையார் ஆவார்.
அமளி தைவந்தனனே’’ இதில் படுக்கையைத் தடவிப்பார்த்து கனவு என அறியும் நிலையை வெளிப்படுத்துகிறார். தலைவனை கொடியன் கொடியோர் என்று உரைப்பதும் காணப்படுகிறது.
குறுந்தொகையில் 238 வது பாடல் மிக மிக அருமை. “என் தோழியை மறந்து பிரிந்து போன நீ என்ன தைரியத்தில், இனி சரியாக இருப்பேன் என்று இப்போது வந்து நிற்கிறாய்.
அவளிடமிருந்துன் நீ கொள்ளை கொண்ட அவளுடைய பெண்மையைத் திருப்பித் தந்துவிட்டுப் போ’’ என சரியான சாட்டையடியாக, தோழியின் கூற்றாக இது வெளிப்படுகிறது.
திருவள்ளுவமாலை' என்ற நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள் பட்டியலில் ஔவையார், நாமகள், பொன்முடியார், வெள்ளிவீதியார் ஆகியோர் இருக்கின்றனர்.
அழகிய உவமைகள் பெண்களுக்குக் கைவந்த கலையாகும். எதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அவர்கள் பார்வைக்கு ஒரு சான்று. அள்ளூர் நன்முல்லையார் என்ற புலவர் கிளி மஞ்சள் நிற வேப்பம் பழத்தை வாயில் வைத்து இருக்கும் காட்சியைத் தாலி பிரித்துக் கோர்த்தல் என்ற சடங்கைக் கூறுகையில் நினைவுகூர்ந்து ஒப்பிடுகி றார். தங்கக் காசைப் புது நூலில் மற்றும் பெண்ணின் கைக்கு அது உவமையாகிறது. குறுந்தொகையின் பாடல்...
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல வொருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. “
-இதில்தான் எத்தனை செய்திகள்... பெண்கள் தங்கள் கூரிய நகங்களைச் செம்பஞ்சுக் குழம்பால் நிறம் மாற்றியிருந்தார்கள் (மருதாணி) என்றும் அறிகிறோம்.
ஆதிமந்தியார் காவிரி ஆற்றிலே தன் கணவரைத் தொலைத்த அவலம் அவரது பாடலில் இருக்கும் அதே நேரத்தில் மீண்டும் அவனைப் பெற்ற பெருமகிழ்வினையும் பதிவு செய்திருக்கிறார்.
அகநானூற்றின் 45,76, 135, 222, 236 ஆகிய ஐந்து பாடல்களில் நான்கு பாடல்களில் ஆற்றாமை,
அவலம் பீறிடுகிறது. ஒரே ஒரு பாடலில் மகிழ்வு வெளிப்படுகிறது.
இன்னொரு அவலம் நற்றிணையின் 90 ஆவது பாடல்; தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையின் பால் சென்ற தலைவன் அவள் ஊடியதால் மறுபடி தலைவியிடமே வருகிறான்… இதன் பின் இருக்கும் மனநிலை அவலம்தானே!
அஞ்சில் அஞ்சியாரின் பாடலிது; தான் வாழும் ஊரைச் சபிக்கிறாள் “நயனில் மாக்கள்’’ என்றும் கூறுகிறாள்.
“ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்’’
என்று இப்பாடல் துவங்குகிறது.
புறநானூற்றில் 250 வது பாடல் தாயங்கண்ணியாரால் பாடப்பட்டது அதில் காட்டப்படும் அக்கால விதவைகளின் கோலம், இன்று படித்தாலும் உள்ளம் கலங்க வைக்கிறது.
“ கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி... அல்லி உணவின்….’’ -எனச் செல்கிறது அப்பாடல்.
ஒரு காலத்தில் வருவோர் போவோரையேல்லாம் தடுத்து நிறுத்தி சுவையான உணவு தந்த தலைவி இன்று இருக்கும் கோலமும் அவள் உண்ணும் உணவும் காலம் செய்த கோலம் என்று கூறுகிறார் பாடலாசிரியர். இப்பாடலைப் படிக்கையில் கல்கியின் சிறுகதையும் அனுராதா ரமணனின் இதுபோன்ற ஒரு படைப்பும் நினைவிற்கு வருகின்றன. கணவனை இழந்து இப்படி வாழ்வதைவிட உடன்கட்டை ஏறுவது நல்லது என்ற காவற்பெண்டு பாடலும் இங்கு நினைக்கத் தக்கதாகும். இதே நேரத்தில் கூந்தல் என்பதற்குச் சங்க காலம் தந்த மதிப்பு வித்தியாசமானது. நீண்ட கூந்தலின் அழகைத் தலைவனும் விரும்பி னான். நீண்ட கூந்தல் உடையவளே அழகி என்று பேசப்பட்டாள்.
உடை உணவு உறைவிடம் வாழ்வைப் பார்க்கும் எதிர்கொள்ளும் மனோபாவம் இவைகளும் மிகப்பெரிய அளவில் மாறியுள்ள சூழலில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கூந்தலைப் பெண்களே சுமையாகக் கருதும் நாகரிகம் இந்த பரபரப்பு வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுத்தாகும்.
மதுரை நல்வெள்ளியார் நயமாகப் பெண்ணின் நெஞ்சத்தை காட்டும் நான்கு பாடல்களை தந்துள்ளார். அக்காலப் பெண்கள் ஊரின் பெயரோடு தன் பெயரை இணைத்துக்கொண்ட நிலையையும் அறிகிறோம். எ.கா. ஒக்கூர் மாசாத்தியார்.
சங்க இலக்கியம் ஒரு கடல். அதில் பெண்பாற் புலவர்களின் பாடல்கள் குறைவே என்றாலும் அவற்றைத் தேடிப்பிடித்து வாசிக்கையில் எளிதில் வெளியே வர இயலாது ஏனென்றால் அவை அக்கால வாழ்வின் பிழிவுகள்.
பெண்ணின் எழுத்தாற்றல் அப்பாடல்களில் முப்பரிமாணங்களைத் தாண்டி நிற்கின்றன;
அவர்களது எழுத்தை வாசித்து அறிய இக்கால முனைவர் பட்டம் போதாது. சங்கப் பெண்களின் பாடல்களை வாசிக்க ஈரமும் வீரமும் கலந்த நெஞ்சம் வேண்டும். சமூக உறவுகளோடு ஒன்றி நிற்கும் கூட்டுமனப்பான்மை வேண்டும்; இயற்கையை வாசிக்கக் கற்றிருக்க வேண்டும்; பறவை விலங்கினங்களின் நெளிவு சுளிவுகளை அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக சங்கப் பாடல்களில் வரும் தோழியின் தியாகம் பொறுமை தன் தலைவியின் நலம் பேணல் இதெல்லாம் நாம் அறியாதவை என்றே சொல்வேன். பகிர்தல் ( ஷேரிங் இல்லை ) இன்று ஷேர் மார்க்கெட் புரிந்த அளவிற்கு கூட நமக்கு புரியவில்லை. பயிற்சியும் இல்லை.
இன்று போர்க்களம் போகும் மனோபாவம் ஆண்களுக்கே இல்லை. யாரோ எல்லையைக் காக்கிறார்கள் இன்று தொல்லை இன்றி வாழ மட்டுமே பழகியிருக்கிறோம். என் பங்கு இது என்று தன் குழந்தையையும் போருக்கு அனுப்பும் பெண்ணைச் சங்க இலக்கியம் காட்டுகிறது.
சங்கப் பெண்பாற் புலவர்களைப் பார்க்கின்றபோது அவர்களது படைப்புகள் பிரமிப்பூட்டுகின்றன. ஒட்டுமொத்தமாகக் சங்க இலக்கியம் காட்டும் பெண்களை அறிந்தால்…. வேண்டாம் வேண்டாம் அவை நம்மை யார் என அடையாளம் காட்டி விடக்கூடும்.
சங்கப் பெண் புலவர்களின் படைப்புகள் என்னும் உரை கல்லில் உரசிப் பார்த்தால் இக்கால இலக்கியங்கள் பெண்பாற் கவிஞர்களின் படைப்புகள் என்னவாகும் என்ற கேள்வியோடு அச்சத்தோடு மிச்சத்தைச் சொல்லாமல் முடிக்கின்றேன்.