ன்பு எனும் பண்புவழியில் தனிமனித ஆளுமையும் அதன் தொடர்ச்சியாக சமுதாய மேம்பாடும் அமையும். ஒருவனால் அவன் குடும்பம் மட்டும் உயர்ந்தால் அது ஆளுமைப் பண்பு ஆகாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலையை கைப்பற்றியவனால்தான் சமுதாயம் உயரும். இதன்படி மக்களுக்குத் தொண்டுசெய்து மக்களுக்காகவே தன் வாழ்நாளை அமைத்துக்கொண்ட கலைஞரின் ஆளுமைப் பண்பு மகத்தானது.

மனிதநேயத் தொண்டு

ரூபாய் இரண்டுக்கு ஒரு கிலோ அரிசி; இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, ஏழ்மைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் ஆகியவற்றை ஆட்சியைப் பிடித்தால் தி.மு.க. அளிக்கும் என்றது அதன் தேர்தல் அறிக்கை. இடதுசாரி கட்சிகளே முடியுமா? என்று இதைக்கண்டு திகைத்தன. விமர்சகர்கள் அறிக்கையைக் கடுமையாக விமர்சித்தார்கள், மக்களை முட்டாள்கள் என்று நினைக்கமுடியாது என்றார்கள். ஆனால் எதிரணிக்குக் கலக்கம் ஏற்பட்டது. ஜெயலலிதா இது ஒரு தேர்தல் தந்திரம் என்று அதை ஒதுக்கினாலும் அவரும் அவசரமாகச் சில சலுகைகளை அறிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை கலைஞர் எப்படி நிறைவேற்றப் போகிறார் என்ற விமர்சனம் அவர் பதவியேற்றவுடனேயே இரண்டு ரூபாவுக்கு ரேஷன் அரிசி என்ற அரசாணையில் கையெழுத்திட்டபோது அடங்கிப்போயிற்று. ஒரு மாதத்திற்குள் டி.வி. விநியோகமும் இலவச காஸ் இணைப்பு விநியோகமும் படிப்படியாக அரங்கேற ஆரம்பித்தன.

Advertisment

(கலைஞர் எனும் கருணாநிதி, வாஸந்தி,ப.81)

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

Advertisment

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அஃது ஆமே ? ( திருமந்திரம்,1857)

-என்ற திருமூலரின் பாடல் ஈண்டு உணரத்தக்கது.

சமுதாயம் முன்னேற கலைஞர் பல்முனைகளில் சுழன்று சூறாவளியாகச் செயல்பட்டார். உணவளிக்கும் செயலின் மூலம் உயிரை நிலைப்படுத்த முடியும் என்பதை சங்கப் புலவர்களின் வழியேயும் மணிமேகலையின் வழியேயும் முன்னரே அறிந்திருந்த காரணத்தினால் ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி வழங்கினார் கலைஞர்.

அனைவராலும் போற்றப்பட்ட திட்டங்கள் இரண்டு இருந்தன. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு அளித்தது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலைஞர் உயிர்காக்கும் உயர் மருத்துவ சிகிச்சையைத் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏழைகள் அந்தத் திட்டத்தின்கீழ் பெறலாம். (கலைஞர் எனும் கருணாநிதி, வாஸந்தி,ப.168) -இப்படியாக கலைஞரைப் பாராட்டுகிறார் நம் சமகால பெண் எழுத்தாளர்.

’மெட்ராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என மாற்றியது. நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரை அமைத்தது. அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டு வந்தது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய நீராடும் கடலுடுத்த...’ பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தது. அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்க வைத்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக்கியது. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது, குடிசை மாற்று வாரியத்தைத் தொடங்கியது உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பொது விநியோக திட்டத்தை வலுவாக்கியது கலைஞரின் தி.மு.க. அரசுதான். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீது கவனம் செலுத்தியது. மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெற்றதும் கலைஞர் அரசின் பலம்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், மாநில சுயாட்சி தீர்மானம், அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, கைரிக்சாவுக்குத் தடை, இலவச சைக்கிள் ரிக்?ஷா, விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம், விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம், சிறுலி குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தை, டெஸ்மா சட்டம் ரத்து, பிச்சைக்காரர்கள் - தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லம், மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம், மேயருக்கு நேரடித் தேர்தல், மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.... என கலைஞர் பதவி ஏற்றவுடனேயே மாயங்கள்போல் புதிய திட்டங்கள் அமலாயின.

இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், மாணவ- மாணவியருக்கு இலவச தொழிற் கல்வி, உயர் படிப்புவரை இலவசக் கல்வி, மாணவ- மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கவனத்தில்கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கூடங்கள் அமைத்தது. மனப்பாட முறையை ஒழித்து குழந்தைச் செல்வங்கள் மகிழ்ச்சியுடன் விளையாட செயல்வழிக் கற்றல் முறையைக் கொண்டுவந்தது, அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாகப் பேச, படிக்க, எழுத ஆங்கில மொழிக்கூடங்கள் அமைத்தது, தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்கள் அமைத்தது..... என்றெல்லாம் நீண்டு.....

தொழில்நுட்பப் பூங்கா, ஆதிதிராவிடர் களுக்கு இலவச வீடு, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி, விதவைகள் மறுமணத்திற்கு நிதி உதவி, கலப்புமணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை, பாதாள சாக்கடைத் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், இப்படியாக கலைஞரின் மனிதநேய சமுதாய முன்னேற்றப் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தூற்றுவோர் தூற்றட்டும்

நன்மையைத் தீமையென்றும் தீமையை நன்மையென்றும் சொல்லுகிற மனப்பான்மை மிகக்கொண்ட அரசியல்வாதிகள் வாழ்ந்த சமகாலத்தில் கலைஞர் சமுதாயத்திற்குச் செய்த அனைத்துப் பணிகளையும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தனர். “ஒரு தீய சக்தி, ஊழல்வாதி’ என்று எம்.ஜி.ஆரும் பிறகு ஜெயலலிதாவும் விடாமல் சொல்லிச் சொல்லி அதுவே மக்களின் அடிமனதில் படிந்து போயிற்று” என்கிறார் நீதியரசர் சந்துரு. “கலைஞர் மிகச்சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை; சமூக நீதியைப் பற்றி உண்மையான அக்கறையுடன் சிந்தித்து பல சட்டத் திருத்தங்களைக் கோரிக்கை வைத்த உடனேயே நிறைவேற்றியவர். எனது அனுபவத்தில் கண்டு சொல்கிறேன். கலைஞரின் நிர்வாகத் திறனுடன் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதா வையும்கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாது”. (கலைஞர் எனும் கருணாநிதி, வாஸந்தி,ப.81)

ss

இரண்டரை ஆண்டுகளில் வீராணம் திட்டம் முடிவடைந்திருக்கும், ஆனால் தி.மு.க.விற்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்றே அதைச் செயல்பட முடியாமல் செய்தனர்.

சண்டையை விரும்பாத ஆளுமைப் பண்பு

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நெடுங்காலமாக ஆர்வம்கொண்டவரான கே.எஸ். ராதாகிருஷ்ணனின் திருமணம் 86-ல் நடந்தது. கலைஞரின் தலைமையில் பழ. நெடுமாறன், வைகோ, பி.ராமமூர்த்தி போன்ற எல்லா கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் , உயர்நீதிமன்ற நீதிபதிகளும் வந்திருந்ததோடு விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனும், பேபி சுப்பிரமணியனும் வந்திருந்தார்கள்.

அவர்களைக் கண்டு கலைஞருக்கு எத்தனை சங்கடமாகி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமமில்லை. அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம், ஈழவேந்தன், சந்திரஹாசன் போன்று வேறு பல இலங்கை ஈழத்தமிழ்த் தலைவர்களும் இருந்தார்கள். அன்று மணமக்களை வாழ்த்திப் பேசிய கலைஞர், கடைசியில் தெளிவாக, கவனமாக வார்த்தைகளைக் கோர்த்து ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அவருடைய அரசியல் பார்வை மிக தீர்க்கமாகவும் கண்ணியமாகவும் வெளிப் பட்டது.

“வாழ்த்த வந்திருக்கின்ற ஈழத்துத் தலைவர்களும் போராளிகளும் கூட, மேடையில் இருக்கிற காட்சியினை நான் காண்கிறேன்.... தமிழ் நாட்டு மக்களிடத்திலே வழக்குரைக்க வந்திருக்கிறார் கள். ஆனால் எனக்குள்ள கவலையெல்லாம் வழக்குரைக்க வந்தவர்களே புதிய வழக்குகளை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்பதுதான். இந்த மணவிழாவில் அமர்ந்து, எதிரில் இருக்கும் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளைக் காணும் போது ஏதோ ஒரு பளு என்னுடைய உள்ளத்தை அழுத்திக்கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கே சொல்லாமல் இருக்கமுடியாது. நான் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உடன் பிறப்பே என்று உங்களையெல்லாம் அழைக்கின்ற நேரத்திலேகூட, நான் அண்மையில் இழந்துவிட்ட உடன்பிறப்புகளை எல்லாம்கூட எண்ணிப் பார்த்து கண் கலங்குகிறேன். தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்ற குறிக்கோளை மறந்து குரூரமான சகோதர யுத்தத்தில் செல்வோரை இனி தமிழகம் தாங்காது என்றார். (மேலது, பக். 90-91). இதுதான் கலைஞர். இந்தத் தெளிவுதான் கலைஞர்.

சிறுகதைகளின் மூலம் சமுதாய முன்னேற்றப் பணி

பாலர் மணம், விதவைகள் அவலம், ஏழை எளிய மக்களிடம் இருந்த மூட நம்பிக்கைகள், சாமி-மத அவலம்...இவைகளைப் போக்க தந்தை பெரியார் தலைமையில் ‘திராவிடர் கழகம் தோன்றியது. இக்கழகத்தில் முன்னணிப் போராளிகளாய் திகழ்ந்தவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி... என பலர் இருப்பினும், மக்களைச் சென்றடைய பத்திரிகையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள் அறிஞர் அண்ணாவும் அவரின் அன்புத் தம்பி கலைஞர் கருணாநிதியும்தான்.

இருவருமே சிறுகதை, நாவல், நாடகம், சினிமா, கவிதை, கட்டுரைகள், பத்திரிகைகள், சொற்பொழிவு கள் என பல்வேறு உத்திகள் மூலம் சமூக மேம்பாட் டிற்காக தங்களின் ‘மனஎழுச்சி’களைப் பயன்படுத்தி ‘மக்களை’ முன்னேற்றப் ’பாதைக்குக் கொண்டுவந்தனர்.

இவர்கள் இருவரும் ‘திராவிட இலக்கியம்’ என்ற புது ராஜபாட்டை’ தோன்ற வழிவகுத்தனர். அண்ணாவின் வழிவந்த கலைஞர், அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு இதழில் (25.04.1942) ‘இளமைப் பலி’ என்ற முதல் கட்டுரையை எழுதினார். விதவைப் பெண்ணின் அவலத்தை சொல்வதாக இக்கட்டுரை அமைந்திருந்தது. அறிஞர் அண்ணாவால் பாராட்டப் பட்டு, அந்த இதழைப் படித்த அனைவரையும், ஒரு பெண்ணின் அவலத்தை இப்படியும்’ வெளிப்படுத்த முடியுமா என்று திடுக்கிட வைத்தார். சமூக விழிப் புணர்ச்சிக்காக சிறுகதை வழியாகவும் தனது கொள்கை வழியில் வெற்றி கண்டார் கலைஞர் எனலாம்.

பாரதி நிலையம் வெளியிட்ட கலைஞரின் சிறுகதைத் தொகுப்பில் ‘38’ கதைகள் உள்ளடங்கியிருந்தன. புகழேந்தி, நளாயினி, சபலம், குப்பைத்தொட்டி, சங்கிலிச் சாமி, ஏழை, பிரேத விசாரணை...முதலிய கதைகளில் சிலவும் சில சிறுகதைகளையும் சேர்த்து 1995-ல் பதினாறு கதையினிலே என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது திருமகள் நிலையம். “"பதினாறு கதையினிலே” என்ற தலைப்பில் வந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி கலைஞர் தன் முன்னுரையில் ...” என்னை அணுகி நான் எழுதிய சிறுகதைகள் பலவற்றைச் சுட்டிக்காட்டி அவற்றில் சில கதைகளை நானே தேர்வுசெய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒப்புதல் அளித்தேன். நான் தேர்ந்தெடுத்த 16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத் தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும், சில மருந்துகள்கூடக் கசக்கும். ஆனால் அவைதாம் ‘நோய் தீர்க்கும்’ என தன் முன்னுரையில் கூறினார் கலைஞர் (காலத்தின் நாயகன் கலைஞர்,பக்.215-216)

கலைஞரின் குணம்

இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவரான சு.சுமுத்திரம் தன் நூலில் தேர்தல் பற்றிய முன்னோட்ட விவரத்தை கலைஞரிடம் தெரிவித்த தொரு நிகழ்வில் கலைஞரிடம் வெளிப்பட்ட சமுதாய முன்னேற்ற ஆளுமைப்பண்பை இப்படி விவரிக்கிறார்.

”வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலைப் பற்றி இன்னின்ன இடங்களில் கலைஞருக்கு ஆதரவு இருக்காது என்பதைச் சொன்னேன். எனது நோக்கம் கலைஞரை உஷார்படுத்த வேண்டும் என்பதுதானே தவிர ஊக்க குறைப்பிற்காக அல்ல என்பதை எடுத்துக்காட்டினேன்’ கலைஞரோ எனது கருத்தாக்கம் - எதிர்க்கருத்தாக்கம் என்ற தத்துவார்த்தப் போக்கை புரிந்தவர்போல் மெல்ல தலையாட்டினார். நான், மீண்டும் மீண்டும் அவருக்கும் கட்சிக்கும், மக்கள் மத்தியில், குறிப்பாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்திய தால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை தெரிவித்த போது கலைஞர், மனம்விட்டு என்னிடம் ஆணி யடிப்பது போல் இந்த பாணியில் பேசினார்.

‘சமுத்திரம்! எல்லாருக்கும் நன்மை செய்யணுமுன்னுதான் நான் நினைக்கிறேன். கட்சிக்கு அப்பால் எல்லா மக்களையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன். பல நல்ல காரியங்களை செய்து வருவது உங்களுக்கே தெரியும். அப்படியும் யாராவது ஓட்டுப் போடாவிட்டால் அதற்கு நான் என்ன சமுத்திரம் செய்யமுடியும்’ என் கண்கள் கலங்கிவிட்டன. ஒரு மகத்தான தலைவர், மாபெரும் முதல்வர், ஒரு எழுத்தாளர், சாமனியனிடம் எப்படியெல்லாம் மனம் விட்டு பேசுகிறார்! கட்சிக்காரர்களிடமும், அமைச்சர் களிடமும்கூட கூறமுடியாத ஒரு கருத்தை என்னிடம் எப்படி முன்வைக்கிறார் என்பதை நினைத்ததும், நான் ஆடிப்போனேன். குறிப்பாக சண்முகநாதன் மூலம் முரசொலியை தருவித்து கலைஞரே, தனது நெல்லை மாவட்ட சுற்றுப் பயண நிகழ்வு புகைப்படங்களை என்னிடம் காட்டியது என்னை பிரமிக்க வைத்தது. (என் பார்வையில் கலைஞர், சமுத்திரம்.சு., ப.142)

கலைஞரின் தமிழ் தொடர்பான ஆளுமைப் பண்பு

ஆசிய மொழிகளை ஆராய நிறுவனத்தைத் துவக்கி அதில் தமிழியல் ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கினார்.

தமிழ் வழியில் கற்றவர்களுக்கு வேலைவாய்ப் பில் 1974-ஆம் ஆண்டு ‘அகரமுதலி’ திட்டத்தை கொண்டு வந்தார்.

தமிழில் ஐ.ஏ.எஸ். எழுத ஆவன செய்தார்.

பத்தாம் வகுப்பு தமிழ் மொழி கட்டாயப்பாடம் என சட்டம் கொண்டு வந்தார்.

தமிழ் மன்னர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக் கும் சிலைகள் அமைத்தும், மணிமண்டபங்கள், நினைவிடங்கள் அமைத்தும் அவர்களைப் பெருமைப்படுத்தினார்.

மெட்ராஸ் என்ற பெயரை 30.9.1996-ல் சென்னை என மாற்றினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதியை ஒதுக்கினார்.

இலங்கை, சிங்கப்பூர், மொரிசியஸ், மலேசியா, என 22 நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு நூலகங்கள் அமைக்க நூல்களை அனுப்பினார்.

வாகனங்களின் பதிவு எண்களை தமிழில் எழுத அனுமதி கொடுத்தார். தமிழில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினார்.

தமிழில் அறிவியல் நூல்களை கொண்டு வர நிதி ஒதுக்கினார். சென்னை அருங்காட்சியகத் தில் தமிழ் வளர்ச்சி வளாகத்தை உருவாக்கினார்.

மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கிச் சிறப்பித்தார். மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தமிழ் மையத்தை அமைத்தார்.

ஆகம நூல்களை தமிழில் கொண்டுவர ஆவன செய்தார். திருக்குறளை அரசு அறிவிப் புப் பலகைகளில் எழுதச் செய்தார்.

சிறந்த படைப்பாளிகளுக்கு குறள்பீட விருது ரூ 2 லட்சம் வழங்க ஆவன செய்தார்.

தமிழில் அர்ச்சனை - வழிபாடு நடத்த உத்தரவு பிறப்பித்தார். உலக இணைய தமிழ் மாநாட்டை 1999-ஆம் ஆண்டு நடத்தினார்.

1987- ஆம் ஆண்டு ‘சங்கத்தமிழ்’ நூலை வெளியிட்டார். சங்க நூல்களில் செய்யுள் களுக்கு எளிய உரையை எழுதினார்.

-அறிஞர் அண்ணா துவக்கிய கழகத்தை 70 ஆண்டுகள் கட்டிக் காத்து, அரசியலிலும் கலை இலக்கியத் துறையிலும் கோலோச்சி திராவிட பகுத்தறிவுக் கொள்கைகளை வாழ்நாள் முழுதும் பரப்பிய கலைஞர் ஒரு சாகாவரம். இன்றும் தமிழ்நாட்டின் மூச்சுக் காற்றாக கலந்து நிறைந்திருக்கிறார். சமூக முன்னேற்றம் எனும் ஆளுமைப் பண்பு மூலம் பகுத்தறிவு பூமியாக, தமிழ்ச் சமுதாயமாக, சாதி அற்ற சமத்துவ நிலமாக தன் பேச்சு, எழுத்து, சொல், செயல் என தன் வாழ்நாளை அர்ப்பணித்து பொன்றாப் புகழ் பெற்றவர் கலைஞர். அவரது கனவுகளை அவர் புதல்வர் ஸ்டாலினின் ஆட்சியும் சிறப்பாக நிறைவேற்றி வருவது காலத்தின் கொடையாகும்.