புவியரசர்களின் நிழலில் கவியரசர்கள் பலர் தொன்று தொட்டு நின்று வந்துள்ளதை இலக்கியச் சுவடுகள் எடுத்துரைக்கின்றன. தமிழிலக்கியச் சூழலிலில் சங்கப்புலவர்கள் தொடங்கி, சமகாலக் கவிஞர்கள் வரை ஆட்சியாளர்களின் ஆசிகளையும், அதிகாரத்தின் நிழலையும், அரசாங்க விருதுகளின் ஆடம்பர வெளிச்சத்தையும், எதிர்பார்த்துக் கவி செய்பவர்களாகவே ஏராளம் பேர் உள்ளனர். விதிவிலக்காய்த் திகழ்கின்ற வீதிவிளக்குப் பாவலர்கள் சொற்பமானவர்கள். அவர்கள் அற்பமான விருதுவேட்கையை அறவே வெறுத்த அறப்பண்பால் கர்ப்பமானவர்கள்... சிதையாத கருத்தியலிலின் சிற்பமானவர்கள்.
பார்வேந்தர்களை மதிக்காத பாவேந்தனாய்த் திகழ்ந்த, பாரசீகக் கவிஞானி நிஜாமியின் வாழ்வையும், படைப்புகளையும் வாசிக்கத் தொடங்கினால், வியப்புக்குளத்தில் விழுந்து மனமே ஒரு மீனாகி விடும் என்றால் அது மிகையல்ல.
அஜர்பைஜானில் உள்ள நிஜாமி பிறந்த ஊரின் பெயர் கஞ்சா...
ஊர்ப்பெயரே உள்ளிழுக்கும் போதையாக இருக்கிறது. அவன் படைப்புகளோ உள்ளுணர்வு மிக்க உலகக் கவிகளுக்குப் பாதையாக இருக்கிறது.
""பழமைமிக்க இந்த வானத்திற்குக் கீழே...
நிஜாமியின் கவிதைக்கு நிகரான கவிதையில்லை''
என்று காஜா ஹாஃபீஸ் என்ற ஞானியும்,
""பரிசுத்தப் பனித்துளியால்
படைத்தவன் உருவாக்கிய
கண்ணியமிக்க முத்து...
நமது நிஜாமி,
மனித குலத்திற்கு நெடுங்காலம்
ஒளியூட்டியது அந்த முத்து,
அதனை,
சிப்பிக்குள் மீண்டும் வைத்துவிட்டான்
இறைவன்''
என்று இமாம் சா அதியும் நிஜாமி குறித்து நெக்குருகிப் பாடுவது, உண்மை உணர்வேயின்றி உயர்வு நவிற்சியல்ல என்பதை அவரது ஒளிவீசும் கவிதைகளுக்குள் பயணம் செய்தால் உணர்ந்துகொள்ள முடியும். அவர் கி.பி. 1141-ல் பிறந்தார்.
அவரது இயற்பெயர் இல்யாள் அபூமுஹம்மத் நிஜா முத்தீன், அதன் சுருக்கமாகவே அவரது புனைபெயர் நிஜாமி என்றானது. நிஜாமி கஸ்னவி என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். இளம் பருவத்திலேயே தந்தை யையும், தாயையும் அடுத்தடுத்து இழந்தவர். அவரது பிள்ளைப் பருவத்துக் கண்ணீர்த் துளிகளும், கவிதை முத்துக்களாக இறுகி ஒளிவீசின. தனது தந்தை இறந்த போது, அவர் எழுதிய இரங்கல் கவிதையே, மாபெரும் ஞானம் அவருக்குள் மறைந்திருப்பதை எடுத்துக் காட்டியது.
""எந்தை யூசுப்பின் ஸக்கி முஅய்யத்
எனது மூதாதையர் போலவே
இளமையில் இறந்தார்.
விதியோடு யார் போராடக்கூடும்
விதி பேசத் தொடங்கினால்
யாரும் முறையிட முடியாது.
என் முன்னோரிடமே என்
தந்தை சென்றுவிட்ட பின்
என் இதயத்திலிலிருந்து அவர் வடிவை
கிழித்தெடுத்துவிட்டேன்.
கசப்போ, இனிப்போ...
நடப்பது எதுவாகினும்
படைத்தவன் முன் நான் பணிந்துவிடுகிறேன்''
தமிழில் ஐம்பெருங் காப்பியங்களாக, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்று பட்டியல் உள்ளது. இவை ஐந்தும் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன. ஐந்து பெரும் புலவர்கள் தமிழன்னைக்குப் பூட்டிய ஐவகை அணிகலன்கள் என்று இதை நயந்துரைப்பர். பாரசீகக் கவிஞானி நிஜாமி எழுதிய ஐந்து காப்பியங்களை, பஞ்சகஞ்ச் என்கின்றனர். பாரசீக மொழிக்கு ஒரே கவிஞனே, ஐவகை அணிகலனை அணிவித்திருப்பது அவனது ஆற்றலைக் காட்டுகிறது.
மக்ஸானுல் அஸ்ரார் (இரகசியங்களின் பொக்கிஷம்)
குஸ்ரூ வஷிரின் (குஸ்ரூவும் ஷிரீனும்)
லைலா- மஜ்னூன் (லைலா மீது பித்தானவன்)
ஹப்தே பைகார் (ஏழு அழகிகள்)
இஸ்கந்தர் நாமா (அலெக்சாண்டர் வரலாறு)
ஆகியவை நிஜாமி எழுதிய ஐம்பொருட்காப்பியங்கள் ஆகும்.
எந்த அரசனிடமும் வலிந்து சென்று வணங்கி நில்லாத, தன்மான குணம்மிக்க நிஜாமி தனது காப்பியங்களை அரசர்கள் சிலருக்கு அர்ப்பணம் செய்து அவர்களது பெயரை வாழவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்ஸானுல் அஸ்ரார் நூலை அஜர்பைஜான் அரசன் இல்திகிஸ் என்பவருக்கும், குஸ்ரூவஷீரின் என்ற காப்பியத்தை இல்திகிஸின் பிள்ளைகளான முஹம்மது மற்றும் காஸில் அர்சலானுக்கும், செல்ஜிக்கிய இறுதி மன்னன் துக்கல்பில் அர்சலானுக்கும், லைலா மஜ்னூவை ஷிர்வான் மன்னன் அக்திசான் மினு இஹ்திக்கும், இஸ்கந்தர் நாமாவை நஸ்ரூதீன் அபூபக்கருக்கும் அர்ப்பணம் செய்துள்ளார். அரசர்களுக்குக் காப்பியங்களை அர்ப்பணித்தாலும், நிஜாமி அரசவைப் புலவராக இருக்க அணுவளவும் மனம் ஒப்பவில்லை.
அறிவையும், அறத்தையும் அரசவைப்பதவிக்காக அடகு வைத்துவிட்டு, தலைக்கனக் கூட்டத்துக்கு மத்தியில் தலையாட்டி பொம்மையாய் அறிவார்ந்த கவிஞன் அமர்ந்திருப்பதை அருவருப்பானதாகக் கருதினான் நெஞ்சுரமே வடிவான நிஜாமி.
அரசவைக் கவிஞர்கள் பற்றி அவன் வடித்த ஒரு கவிதை, தடித்த தோல் கொண்ட தன்மானம் அற்ற புலவர்களுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய எரிமலைக் குழம்பாகவே கொதிக்கிறது.
""தமது மகத்துவமிக்க கவியாற்றலை
பொன்னுக்காக விற்கும் புலவர்கள்
அந்தப் பொன்னைப் போலவே இதயமற்றவர்கள்...
உணர்வால் கிளர்ந்தெழும் கவிகளை
உணர்வற்ற உலோகத்துக் காகப்
பண்டமாற்று செய்பவர்கள்
ரத்தினங்களைத் தத்துவிட்டு
கற்களைப் பொறுக்குபவர்களே
தங்கிக் கிரீடம் இன்று அவர்கள்
தலையில் வைக்கப்படலாம்.
நாளை ஓர் இரும்புச் சங்கிலி இவர்களைத்
தலைகுனியச் செய்யும்''
"ரகசியங்களின் பொக்கிஷம்' என்ற தனது முதல் நூலிலில் இதயத்திற்கு இதோபதேசம் செய்வதாக எழுதுகிறார்.
""உன் உணர்ச்சி
உன்னைக் குறிவைக்கும்போது
நீ குறி வைக்காதே...
குதிரையாக நீயே இருக்கும்போது
சவுக்கைச் சொடுக்காதே
சோம்பி நில்லாதே...
இதயக் கதவுகளைத் தகர்த்துத் திற
உன் புலன்களைக் கெடுப்போரின்
பொல்லா நட்பை விடு
உன் இதயத்துக்கு வழி தெரியும்
உனக்கு உன்
இதயத்தைத் தெரியுமா?
என்று சுண்டி இழுத்து, நெஞ்சும் சுண்டிப் போகாதிருக்கக் கவிப்பாதை காட்டுகிறார்.
மதுவின் வாடையைக் கூட நுகர்ந்ததில்லை என்று அழுத் தந்திருத்தமாகக் கூறும் கவி நிஜாமி, எழுதிய லைலா மஜ்னு காப்பியம் உலகப்புகழ் பெற்றது. காதலர் உலகின் தேசிய நூலாகவே திகழக்கூடியது. லைலா மஜ்னூன் காவியம் இறைவாழ்த்தோடு தொடங்குகிறது. நபிகளையும் கலீபாக்களையும் போற்றுகிற பாடல்களும் இடம்பெறுகின்றன. நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணமும் பாடப்படுகிறது. ஷிர்வான் மன்னனுக்குப் பாடாண் திணைப்பாடலும் இடம்பெறுகிறது.
லைலா மஜ்னூன் கதைச் சுருக்கம் இதுதான்.
கைஸ் என்ற கவின்மிகு அரபு இளைஞன். அமீரி குடும்பத்தைச் சேர்ந்த லைலாமீது நேசம் கொண்டான். குழந்தைப் பருவத்தில் உண்டான அன்பு, நேசமாகி பின்பு காதலாகி முதிரும் நிலையில், லைலாவின் தந்தை, கைஸை நிராகரித்து அதிரும் முடிவை அறிவிக்கின்றான். கைஸ், லைலா மஜ்னூன் (லைதா பித்தன்) ஆனான். காடு, மலைகள் தோறும் தனது காதலை எதிரொலித்தான்.
நௌபல் என்ற அரபுத்தலைவன் கைஸின் நண்பன். மஜ்னூனாய் மாறிவிட்ட தன் நண்பனுக்காக, லைலா கூட்டத்தார் மீது போர் தொடுத்து அடக்குகிறான். ஆனாலும், லைலாவைத்தர, அவள் தந்தை சம்மதிக்கவில்லை.
இதனிடையே இப்னுசலாம் என்ற அரபுத் தலைவன் லைலாமீது ஒருதலைக்காதல் கொண்டு பெற்றோரிடம் கேட்டு மணமுடிக்கிறாள். மஜ்னூனிடம் மனம் பறிகொடுத்த லைலா மனதுக்கொவ்வாதவனுடன் மஞ்சத்தைப் பகிர மறுத்து, தனது நெஞ்சத்தைப் பகிர்கிறாள். கைஸின் காதலைப் கூறுகிறாள்.
கடைசியாக ஒருமுறை கைஸை சந்திக்க வருகிறாள் லைலா, கைஸ் மௌனத்தில் உறைந்திருக்கிறான். லைலாவின் கவிச் சொற்கள் அவனை உருக்குகின்றன.
""நாவுகளைக் கட்டிப்போட்டு விடுகிற
இந்தத் துயரம் எவ்வளவு அற்புதமானது.
மலர்கள் இல்லாத வனாந்தரத்திலே
புல்புல் பறவை சோகக் குரல் எழுப்பும்
பூக்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவைக் கண்டதும்
தனது காதலுக்குரிய ரோஜா மலரிடம்
தன் இன்பக் குரலை ஓங்கி எழுப்பும்
கயஸ் -நீதான் அந்த புல்புல் பறவை
நான்தான் அந்த ரோஜாமலர்''
தனது இதயத் துடிப்பையே இசையாக்கிய பாரசீகக் கவி, லைலா- மஜ்னூன் காவியத்தின் மூலம் அமர கவியாகவும் ஜொலிக்கிறார்.