(கடந்த இதழில் வெளியான தமிழறிஞர் ஔவை நடராஜன் அவர் களின் நேர்காணல் தொடர்ச்சி... )
* அற்புதமான நினைவாற்றலும் ஆங்கிலப் புலமையும் கொண்டவர் நீங்கள். இவற்றை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள் ?.
நினைவாற்றல் என்பது பழக்கத்தினால் ஏற்படுவது தான். நல்ல தொடர்கள், கவர்ச்சியான கருத்துக்கள் , கலை மிளிரும் சொற்கள், கற்பனை மிகுந்த பகுதிகள், எழுச்சியூட்டுகின்ற எண்ணங்கள் என்றெல்லாம் படிக்கும் போதே நெட்டுருச் செய்யும் இயல்பும் எனக்கு இருந்தது. எந்த நூலையும் நான் கையில் எழுதுகோல் இல்லாமல் படிக்க மாட்டேன். படித்ததில் பிடித்த பகுதியை அடிக்கோடு போட்டுவிட்டு, அதை மீண்டும் படிப்பேன். அதனால்தான் நினைவாற்றல் வந்திருக்குமோ என்று நினைக்கிறேன். நீங்கள் மதித்துப் போற்றுகிற அளவுக்கு நினைவாற்றல் மிகவும் நீண்டது என்று சொல்ல முடியாது.
நான் ஒருமுறை கூட்டத்தில் பேசும்போது, கலைஞரின் புறநானூற்று வரைவரிகளைச் சொல்லத் தொடங்கினேன்.
"" குடிசைதான் அங்கு வரிசையாய் வேல்கள் நின்றிருக்கும்"" என்று தொடங்கினேன். அடுத்த வரி எனக்கு நினைவுக்கு வரவில்லை, பாருங்கள்!
முத்தமிழ்க் கலைஞர் அவர்கள், உடனே ஒலிபெருக்கியை எடுத்து எழுந்து நின்று, நான் சொல்கிறேன் என்று அந்த நாற்பதுக்கு மேற்பட்ட வரிகளைச் சொன்னபோது மேடை அதிர்ந்தது. தமிழ் உலகமே அந்த நினைவாற்ற லைக் கண்டு வியந்தது. அந்த பாட்டு வரிகளை இப்போது நடிப்புச் செல்வமாக - இலக்கியக் கடலாக வாய்த்திருக்கும் அருமை நண்பர் சிவகுமார் அவர்கள் அப்படியே கலைஞர் வரிகளைச் மேடைகளில் முழங்கியதை நான் கேட்டிருக்கிறேன்.
அதற்கு முன்னால் கலைத்திலகமாகத் திகழ்ந்த மனோரமா அவர்கள் மேடையில் அந்தப்பாட்டு வரிகளை எடுத்துச் சொன்னதையும் கேட்டிருக்கிறேன். புறநானூற்றில் இல்லாத புதுமையாக நம்முடைய "" முத்தமிழறிஞர் "" அவற்றை எப்படி மாற்றினார் என்று சான்று வேண்டுமென்றால், ""அந்த மகனுக்குப் பால் கொடுத்த என் மார்பை நான் அறுத்தெறிவேன்"" - என்ற அளவோடு நிற்கிறது புறநானூற்றுப் பாடல். கலைஞரோ, வாள் இங்கே!… என் மகனா புறமுதுகிட்டான் என்று கூறிய பொய்யன் நாவு எங்கே"" என்று கேட்பார். இது புதுமையும்- புரட்சியும் கலந்த தொடர்களாக நிலைத்துவிட்டன. இவை எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன.
அதேபோல், பச்சையப்பன் கல்லூரிக்கு என்னை அழைத்துப் போய்ச் சேர்க்க வந்தவர் என் மாமனார். என் மாமனாருக்கு மகள் இருவர் உண்டு. அவர்களின் இளைய மகளாக மருத்துவம் பயின்று கொண்டிருந்த தாரா அவர்களை நான் அப்போதே விரும்பினேன்.
எங்கள் காதல் அப்படி மலர்ந்தது . நான் என்ன சொன்னாலும் அவர்கள் ஆங்கிலத்திலேயே விடை சொல்லிப் பழக்கப்பட்டு விட்டார்கள். என் துணைவியாரின் நெருக்கமும் நட்பும் எனக்குப் பெருகப் பெருக நானும் ஆங்கிலம் படிக்கிறேன் என்பேன். அப்போது அவர்கள் அழைப்பார்கள்- நீங்களும் வந்து என்னோடு உட்காருங்கள். நாம் இந்தப் புதினம் படிக்கலாம். அப்படி உந்துதல் பீறிட்டு வந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் நான் எண்ணற்ற நூல்களைப் படித்தேன்.
* தமிழறிஞரான தங்கள் தந்தையார் உரை வேந்தர் ‘சைவக் கலாநிதி’ ஒளை துரைசாமி அவர்கள் ஆங்கில துப்பறியும் புதினங்களைப் படிப்பாராமே?’’
உண்மைதான். என்னுடைய தந்தையாரின் தமிழ்ப்புலமை அளப்பரியது என்பதை நாடே அறியும். அவர் தமிழ்ப்பணிகளுக்கு இடையே ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஆங்கிலத் துப்பறியும் கதைகளை ஆர்வத்துடன் படிப்பார். இதுபற்றி நான் கேட்டபோது, படிப்பது இரண்டு வகை. ஒன்று அகலப்படித்தல்; இன்னொன்று ஆழப்படித்தல். நான் ஆழச் சிந்தித்துக் கொஞ்சம் சோர்வு வருகிறபோது, இந்த எளிமையான நூலை எடுத்துப் படிக்கிற போது அந்த நாட்டினுடைய வழக்கம், ஒழுக்கம் ,பண்பாடு ,
பேசும் முறை இவற்றை எப்படிப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள் என்பதற்காகப் படிப்பேன். அதே போல் ஆங்கிலத் தத்துவ நூல்களையும் நான் படிப்பதை நீ பார்த்திருக்கலாமே என்றும் கேட்டார்.
* தஞ்சை சரபோஜி கல்லூரியில் பணியாற்றிய நாட்கள் பற்றிச் சொல்லுங்கள்?
அங்குதான் நான் என் பணியைத் தொடங்கினேன்.
எனக்கு அந்தப் பணி மனநிறைவைத் தந்தது.
அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் பேராசிரியர் முருகையன். அப்போது தமிழ்த் துறைக்குத் தலைவராக இருந்தவர் வேங்கடாசலம் என்ற பெருந்தகை. கல்லூரிக்கு அவர் சைக்கிளில் வருவார். அவர் கையில் ஆங்கிலத் துப்பறியும் கதை நூல் இருக்கும். அதை படித்தபடியே வருவார்.
எப்போதும் அந்த நூலைக் கையில் வைத்துக் கொண்டு, பல நிலைகளில் அவர் கதைநயத்தில் திளைத்து ஆங்கிலந்தான் நிறையப் பேசுவார். அவருடைய தலைமையில் பணியாற்றுவதில் நான் மகிழ்ந்தேன்.
என்னோடு பணியாற்றியவர்கள் தான் பேராசிரியர் கு சிவஞானம், பேராசிரியர் மது.ச .விமலானந்தம். பேராசிரியர் சிவஞானமும் பேராசிரியர் விமலானந்தமும் மாணவர் விடைத்தாள்களைத் திருத்துவதில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுவார்கள். அதில் நான் சுணக்கம் காட்டுவேன் அந்த மன்னர் கல்லூரியில் நான் இருந்தபோதே பேராசிரியர் சிவஞானத்திற்கு அடுத்த நிலையில் எனக் குத்தான் அடுத்த பதவி உயர்வு கிடைக்கப் போகிறது என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் விமலானந்தம் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். தன்னிகரில்லாத திறமை வாய்ந்தவர். அவர் மனம் பெரிதும் வருந்தியது. ஆனால் நான் முதன் முதலில் தஞ்சாவூருக்கு வந்து அவருடைய வீட்டில் தான் இருந்தேன். அது மட்டுமில்லை விமலானந்தத்திற்கு என் மீது அளப்பரிய அன்பு . நாங்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் . நீ ஏன் இங்கு வந்து சேர்ந்தாய் ? உனக்கு வாய்ப்பு எங்கும் கிடைக்கும்.
நான் தஞ்சாவூர்க்காரன் எனக்கு வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். தில்லி வானொலி நிலையத்தில் உங்களுக்கு ஒப்பந்தப் பணி தருகிறோம். நீங்கள் புறப்பட்டு உடனே வந்து சேரலாம் என்று எனக்குக் கடிதம் வந்தது. அதனால் இந்தச் சூழ்நிலையில் சரி தில்லிக்குச் செல்லலாமே என்று நான் தில்லிக்குச் சென்றேன். தில்லியில் பணியாற்றியதை இப்போது நினைக்கும் போது நகைப்பாக இருக்கிறது.
* பேரறிஞர் அண்னாவுக்கு முன் உரையாற்றிய உங்கள் அனுபவம்?
பேரறிஞர் அண்ணா அவர்கள் செயின்ட் மேரீஸ் அரங்கத்தில் பிரதாப முதலியார் சரித்திரம் நூலை வெளியிடுவதற்காக வந்தார். அவர் வருவதற்காக மேடையில் மக்கள் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஒருவர் எழுந்து நின்று அண்ணா வரும் வரையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஔவை நடராசனைப் பேச வையுங்கள் என்று சொன்னார்கள்.
நானும் போய் மேடையில் பத்து மணித்துளிகள் பேசிக்கொண்டிருக்கும் போதே அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். அது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. அவர் நீ பேசு பேசு என்று சொன்னார். என்னால் அதற்கு மேல் அவருக்கு முன் பேச முடியாது போயிற்று. அந்தக் கூட்டத்தில் அன்று நான் கண்ட நண்பர் தான் ஒய் எம் சி ஏ செயலர் பக்தவத்சலம். அன்று தொடங்கிய கேண்மை கொடுமையான தீநுண்மியால் எங்களைப் பிரித்தது .அவர் நோய்க்கு இரையாகி வாழ்க்கை முடிந்தது .பண்பின் பெட்டகமான அவர் பிரிவு என்னைத் தவிக்க வைத்துவிட்டது.
* கலைஞர், மக்கள் திலகம், ஜெயலலிதா அம்மையார் ஆகிய அனைவரும் தங்கள் மீது அன்பும் ஆதரவான உள்ளத்தோடும் இருந்திருக்கி றார்கள்.அவர்களின் நனி சிறந்த பண்புகளாக எவற்றைப் பார்க்கிறீர்கள் ?
நான் அரசுப் பணியில் இருந்த பொழுது, முத்தமிழறிஞரை அன்றாடம் காணும் வாய்ப்பு வரும். முத்தமிழ்க்கலைஞரின் திறமைக்கு எல்லையே இல்லை. அவரது பெருமையை விட அவரது திறமை என்பது எல்லோரும் கண்டு வியக்கத்தக்கதாகும். எந்தத் துறை யிலும் எந்தக் குறிப்பையும் உடனே அதைக் கண்டு தெளிவு செய்கிற திறமை அவருக்கு இருந்தது. கனிவு இருந்தது போலவே அவருக்குக் கண்டிப்பும் இருந்தது. இத்தனைக்கும் சிறகாக இருந்த செய்தித்துறையில் அலுவலர்களாக நாங்கள் இருந்தாலும் எந்த அலுவலர்களாக இருந்தாலும் நெருக்கமாகவும் வைத்துக் கொள்ளத் தெரியும் அவர்களை விலக்கி வைக்கவும் தெரியும். அப்படிப்பட்ட பெரும் திறமை அவரிடத்தில் இருந்ததால் நாங்கள் நாளும் பட்டுப்பட்டு வடிவமைக்கப்பட்டோம் .
முதலமைச்சர் புரட்சித் தலைவரைப் பற்றி சொல்வது என்று சொன்னால், புரட்சித் தலைவர் பதவியேற்ற உடனே அவருக்கு நன்றாகத் தெரியும். முதல்- இரண்டு மாதங்கள் என்னைப் பார்த்த அவர் ஒன்றுமே பேசாமல் தலையசைத்து விட்டுப்போவார்கள். நானும் போய் பார்ப்பதற்கு வாய்ப்பில்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், பிறகு பாருங்கள் - மொழிபெயர்ப்புத் துறையில் நான் இருந்த போதே பல்வேறு நிலைகளில் புரட்சித் தலைவரைக் காணும் வாய்ப்பு வந்தது. அவரும் என்னை அந்த இரண்டு மாதத்திற்குள் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. நெருங்கிவிட்டார். எத்தனையோ கருத்துக்களை அவருக்கு செயலாள ராக இருந்தவர்கள் கூறியபோதும் கூட, இது சரிதானா என்று என்னி டம் தமிழ், தமிழர் வளர்ச்சி, தமிழ்க் கலை இவற்றை எப்போதும் கேட்டுச் செய்தது அவர் இயல் பாக இருந்தது. அது எனக்குத் தனிப்பெருமையைத் தந்தது. இந்திய ஆட்சிப் பணியில் மூத்தவர் களுக்கு மட்டுமே வாய்த்த அரசு செயலர் என்ற ஒரு பதவியை, இதற்கு முன் எவருக்கும் இல்லாத வகையில் எனக்கு வழங்கிய பெருமையும் அவரைத்தான் சாரும்.
பிறகு முதல்வராக வந்த ஜெயலலிதா அவர்கள் தலைமைச் செயலகத்தில் மிகவும் இறுக்கமாகவே எப்பொழுதும் இருப்பார்கள். என்னைப் பார்த்த பொழுதெல்லாம் எப்பொழுதும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். ஆங்கிலத்தில் சொல்லி இந்தக் கருத்து எப்படி உங்கள் துறைக் குப் பொருந்தும் என்று வினவுவார்கள். நான் அப்போது தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக இருந்ததால் அவரைக் காணும் வாய்ப்பு எனக் குப் பலமுறை வாய்த்தது.
ஒருமுறை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கு, வழங்கப்படும் தொகையைக் கொஞ்சம் கூடுதலாகக் கேட்கிறார்கள். அந்தக் கோப்பைப் பரிந்துரைக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். உடனே என் பக்கத்தில் இருந்த தலைமைச்செயலாளர் ஏற்கனவே நிதிப் பற்றாக் குறையில் அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றார்.
உடனே ஜெயலலிதா, என் பரிந்துரையை ஏற்று கொண்டு உதவித்தொகையை உயர்த்தினார்.
* ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் சில ஆண்டுகள் இருந்தீர்கள். அப்போது தமிழகத் தோடும் புதிய தமிழ் இலக்கியங்களோடும் எப்படி தொடர்பு வைத்திருந்தீர்கள்?
நானும் என் துணைவியாரும் ஆஸ்திரேலியாவில் போய் ஆண்டுக்கணக்கில் தங்கி இருந்ததற் குக் காரணம் என் மகன் அங்கே திருமணமாகி யிருந்தான். அங்கே இரண்டு பேரும் மருத்துவர் களாக இருந்தார் கள். எனவே மகிழ்ச்சியோடு இருந்தோம்.
தென் ஆப்பிரிக்காவிலும் என் மூன்றாம் மகன் பரதன் மருத்துவத்துறையில் இருந்ததாலும் அவருக்கு மணமகள் அங்கேயே இருந்ததாலும் நாங்கள் அங்கே இருந்தோம். அங்கே இருந்தாலும் கூட ஆஸ்திரேலியாவில் நான் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டேன். அங்கே இனம், மொழி என்னும் உணர்வுகளுக்கு ஊக்கம் தந்து வளர்த்த பெருமை அங்கிருந்த ஈழத் தமிழர்களைத் தான் சேரும்.
* தந்தை பெரியார் வழி வந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியில் 50 ஆண்டுகளில் தமிழகம் பிற மாநிலங்களை விடப் பல துறைகளிலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எனினும், சிலர் திராவிட இயக்கங்களின் மீது புழுதிவாரித் தூற்றுகிறார்களே?
நிச்சயமாக. தந்தை பெரியார் வந்தபிறகுதான் தமிழகத்தில் சிந்திக்கும் திறம் என்பதே பிறந்தது என்று நான் துணிவாகச் சொல்வேன். அந்த வகையில் தான் சமுதாயத்தில் எளியவர்கள், இல்லாதவர் கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், துன்பப்பட்டவர்கள் எனத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைத்த ஒரே விரல் தந்தை பெரியாரு டைய விரல்தான். தந்தை பெரியார் தொடங்கிய அந்த இன எழுச்சிதான் நமக்குப் பெரிய பயனாக வாய்த்தது என்று சொல்வதைவிட நமக்கு அது பெறற்கரிய பேறாக வாய்த்தது.
அவர்தான் தமிழகத்தினுடைய கண்களைத் திறக்கச் செய்த பெருமை பூண்டவர் . அந்தக் கருத்தை தாங்க முடியாமல் அவர் கொடுத்த வெம்மையான சாட்டை அடிகளுடைய வீக்கம் தணியாமல் சிலர் மனம் துடிப்பதாகச் சொல்கிறார்களே தவிர, துடிக்க வேண்டியவர்கள் துடிக்கத்தான் வேண்டும்.
வீக்கம் வந்தவர்களுக்குத் தானாக அது தணிய வேண்டும். அவ்வப்போது கார் காலத்து காளான்கள் முளைப்பது போல மூடக் கருத்துக்கள் பிறக்கும். பிறகு தானாகத் தேய்த்துவிடும் என்று நான் நம்புகிறேன்.
நேர்காணல்: சென்னிமலையார்
உதவி: பிரதீப்