தந்தை பெரியாரின் 48- ஆம் (டிசம்பர்-24) நினைவு நாள்!

(உலக சிந்தனையாளர்கள் வரிசையில் சுடரும் தகுதி படைத்தவர் தந்தை பெரியார். 96 வயது வரை சமூக விடுதலைக்காகவும், பகுத்தறிவை விதைப்பதற்காகவும், சுயமரியாதை உணர்வை உண்டாக்குவதற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். அவரை வெறும் நாத்திகர் என்ற சிறிய வட்டத்திற்குள் நிறுத்தமுடியாது. அவர் மனிதத்தின் உயர்வுக்காகவே இயங்கிய தனிப்பெரும் முற்போக்கு சக்தி. அவர் இல்லை என்றால் திராவிட இயக்கங்களும் தமிழக மறுமலர்ச்சியையும் நாம் சந்திக்காமலே போயிருப்போம்.

அந்த மானிதரின் மனம்கவர்ந்த மருத்துவராக இருந்த மருத்துவர் வேலூர் சி.எம்.சி.யில் பணியாற்றிய ஏ.சி.ஜான்சான். அவரது உடல் நலத்தை அவரது இறுதிக்காலத்தில் பராமரிக்கும் வாய்ப்பை இவர் பெற்றிருந்தார். பெரியாரின் இறுதி நிமிடங்கள் நெருங்கிய நிலையில், 23.12.1973-ல் விடியும் வரை பெரியாரைக் காப்பாற்ற போராடிய மூன்று டாக்டர்களில் இவரும் ஒருவர். இவர் தந்தை பெரியாருடனான தனது அனுபவத்தை உருக உருக எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இங்கே...

‘பெரியார்’ என்னும் சொல்லின் பொருள் காருண்யம் மிக்கது. ‘பெரியார்’ என்னும் அந்தச் சொல்லே பல்வேறு மக்களின் இதயத்தில் வலிமை வாய்ந்த உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவல்லது. சிலருக்கு அச்சம்; சிலருக்கு வெறுப்பு; சிலருக்குத் திகில்! பிறருக்கோ உண்மை அன்பு.

Advertisment

அவநம்பிக்கை, அச்சம், வெறுப்பு எல்லாம் பிரதானமாக யாருக்கு ஏற்படுகிறது? பெரியாரைத் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு - வெகுதொலைவில் நின்றுகொண்டு, குழம்பி மங்கிப்போன தங்கள் கண்களால் அவரைப் பார்ப்பவர்களுக்கு!

பெரியார் மீது நம்பிக்கை வைக்காதவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருந்திருக்க நியாயமில்லை. அவர் பேசுகின்ற கூட்டங்களுக்கு போய் மாட்டிக்கொள்ளாதபடி அதிஜாக்கிரதையாக நான் பார்த்துக் கொள்வேன். உண்மையில், எனக்கு 35 வயதுக்கு மேலாகும்வரை நான் அவரைப் பார்த்ததே கிடையாது. பெரியார், பிளேக் என்னும் கொள்ளை நோய்போல வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு மனிதர் என்று நான் கருதினேன்.

periyar

Advertisment

பெரியாரைக் கண்டேன்

பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; மேலும் அவர் எதையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறவர்.

எனவே, ஒரு மனிதனின்பால் இன்னொரு மனிதனை அன்புகொள்ளச் செய்யும் நல்லியல்புகள் எதுவும் அவரிடம் இருக்காது என்று மக்களில் பலர் கருதினார்கள்.

அப்போது, காலஞ்சென்ற முதல்வர் அண்ணா அவர்களின் இறுதி நாட்கள். நான் அன்னாருக்கு மருத்துவச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன். ஒரு நாள், முதல்வரைப் பார்க்க வந்திருந்த பழுத்த பழமான மனிதர் ஒருவரை நான்கு பேர் நடத்திக் கூட்டிக் கொண்டு வந்ததை நான் கண்டேன்.

உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்த முதல்வரைக் கண்டதும் அந்தப் பெரிய முதியவர் தமது அடக்க இயலாத துயரத்தின் காரணமாக இடிந்து விழுந்தாற்போல ஆகிவிட்டார்;

அண்டையில் நின்றவர்கள் ‘பெரியார்’ என்று கிசுகிசு’ குரலில் பேசிக்கொண்டார்கள். நாம் நிரம்ப விஷயங்கள் கேள்விப்பட்டோமே அந்த மனிதர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டேன். ஆனால், அவரது துயரம் மனிதாபிமானம் நிறைந்ததாக இருந்தது. இது என்னை வியப்பிலாழ்த்தியது.

வேலூர் மருத்துவ மனையில்

அடுத்த முறை எனக்குப் பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அம் மருத்துவமனையில் நான் கதிரியக்கச் சிகிச்சை மருத்துவனாகப் பணியாற்றி வருகிறேன்.

பெரியாருக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த ஹெர்னியாவுக்காக (குடல் இறக்கம்) அறுவைச் சிகிச்சை செய்வதற்காக டாக்டர் பட் அழைத்து வரப்பட்டிருந்தார். இதன் காரணமாக, பெரியாரின் சிறுநீர்க்கழிவு உறுப்புகளின் ஒரு பகுதி குடலிறக்கத்தினுள் இழுக்கப்பட்டு சிக்கிக் கிடந்தது. இதன் விளைவாக, சிறுநீர்க்கழிவுக்கு ஓரளவு தடை ஏற்பட்டிருந்தது.

சிறுநீர்க்கழிவுப் பாதையை எக்ஸ்ரே மூலம் பரிசோதிக்கும்போது நான் அழைக்கப்பட்டேன். பெரியாரின் மூத்திரப் பையினுள் ஒரு குழாய் செருகப்பட்டது. மாறுபட்ட திரவம் ஒன்று உள்ளே செலுத்தப்பட்டது. இப்பொருள் உள்ளே செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறுநீர்ப்பை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நான் கண்டேன். இயல்பாக, இது நோயாளிக்கு மிகுந்த வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும். ஆம்; பெரியார் வேதனையாலும் துன்பத்தாலும் துடிதுடித்துக் கொண்டுதான் இருந்தார்.

வலியை ஏற்றுக்கொண்டவர்

துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை ஆசுவாசப்படுத்துவதற்காக நான் கேட்டேன், “வலிக்கிறதா, அய்யா?’’ பெரிய புள்ளிகளுக்குப் பரிசோதனை நடைபெறுகிறது என்றால் அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். பரிசோதனையின்போது அவர்களுக்கு வலி ஏற்பட்டுவிட்டாலோ, அவர்களுள் பெரும்பாலோரால் அதைத் தாங்கிக் கொள்ளவே இயலாது. அவர்கள் கண்டபடி கத்துவார்கள்; புகார் சொல்லுவார்கள்; பக்கத்தில் நிற்பவர்களையெல்லாம் திட்டித் தீர்த்து விடுவார்கள்.

ஆனால் பெரியார் என் கைகளில் ஒன்றைச் ‘சட்’டென எட்டிப் பிடித்தார். “உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யுங்கள்; நீங்கள் அருகிலே இருப்பதால் இப்போது வலி அதிகமாக இல்லை’’ என்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டே என் கையை எடுத்துத் தமது கன்னத்தோடு வைத்து அணைத்துக் கொண்டார். தனது தாயின் ஆதரவில் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் செயலைப் போன்றிருந்தது இது.

இச்செயல் எனக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. இந்தப் பேராளரின் பெருந்தன்மை பேராற்றலுடன் என்னுள்ளே பதிந்தது. அவரது சிறு நீர்ப்பையின் நிலைமையை நான் கண்டதும் அவர்மீது நான் கொண்ட வியப்பு மேலும் பெருகியது. இவரது சிறுநீர்ப்பை இருந்த நிலையில் உடல் நல மிக்க எந்தவொரு பலசாலி இளைஞனின் சிறுநீர்ப்பையும் இருந்திருந்தால் உடலாலும் மனத்தாலும் எதையும் செய்யமுடியாத அளவு அவன் உடைந்து போயிருப்பான்.

மன வலிமை

சிறுநீர்ப்பாதையில் கிருமி தாக்கினால் அது மனத் தையும் இலகுவில் பாதித்துவிடும். புத்தி மாறாட்டத்தை உண்டாக்கிவிடும். பரிசோதனை முடிவடைந்தது.

அறுவைச் சிகிச்சை செய்யப்படும்போது தன்னுடன் நான் இருக்க இயலுமா? அதற்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்க என்னால் இயலுமா என்று பெரியார் என்னிடம் கேட்டார். இதற்கு நான் டாக்டர் பட் அவர்களிடம் அனுமதி பெற்று அறுவை சிகிச்சை நடந்தபோது பெரியாருடனேயே இருந்தேன்.

நான் பார்த்த பிற அறுவைச் சிகிச்சைகளைவிட இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. முறையாக உள்ள உறுப்பு அமைப்புகளைக் காண்பது அரிதிலும் அரிதாக இருந்தது. சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றுவதற்காக மாட்டப்படும் குழாயை உடம்பின் எந்த இடத்திலே துளைத்துப் பொருத்துவது? சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது டாக்டர் பட் அவர்களுக்கு இமாலயப் பிரச்சினையாகி விட்டது.

டாக்டர் பட் ஆன்றடங்கிய அறுவை மருத்துவர். இதை நான் நன்கு அறிவேன். எதற்கும் நிலைகுலையாதவர் அவர். (சில ஆண்டுகளுக்கு முன் அவரது சொந்தச் சகோதரிக்குப் பெரிய அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் செய்யும் படி ஏற்பட்டது; அப்போது கூட அவரிடம் கலக்கமே இல்லை) அத்தகைய டாக்டர் பட் அவர்களுக்கே இது பெரிய காரியமாகப்பட்டது. அவர் பெருமளவு பதைபதைப்புடன் இருந்தார்.

சிக்கலான உடல் நிலை

பெரியாரின் பழுத்த வயது காரணமாக அவரது இருதய நிலை பற்றி சற்றுப் பயம் ஏற்பட்டிருந்தது. மயக்க மருந்தை அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது பற்றியும் அச்சமேற்பட்டிருந்தது. சிறுநீரை வெளியேற்றுவதற்கு இடுப்புக்கு மேலே குழாய் பொருத்துவது என்பதுதான் மிகவும் சாதாரணமான மருத்துவ நடைமுறை. இந்தக் குழாய் பெரியாருக்குப் பல்லாண்டு நிலைத்து இருக்கவேண்டும்; இதனை எப்படிப் பொருத்துவது என்பதற்கு டாக்டர் பட் அவர்களின் அறிவு அனைத்தும், ஆதாரம் அனைத் தும் திரட்டிப் பயன்படுத்தப்படவேண்டியதிருந்தது. இவற்றை அவர் திரட்டிப் பயன்படுத்திய அந்த நாளை நான் எம் மொழியில் பாராட்டுவேன்! டாக்டர் பட் அவர்களின் உதவியாளனாக நான் இருந்த நாளைவிட இந்த நாளில் தான் நான் அவரை உச்சிமேற்கொண்டு மெச்சிப் பாராட்டினேன்.

இறுதியாக, அறுவைச் சிகிச்சை நடந்தேறியது. பெரியார் வார்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டர். மறுநாள் நாங்கள் பெரியாரைப் பார்க்கப் போனோம்.

டாக்டர் பட் அவர்களுக்கும் எனக்கும் நன்றி சொல்லப் பெரியார் விரும்பினார். எங்களை எப்படியாவது தொட்டு நன்றி கூறவேண்டும் என்று முயன்று கொண்டிருந்தார் பெரியார்.

pp

பணிவின் சிகரம் அவர் மல்யுத்தப் போட்டியின்போது எதிரியின் காலைப் பிடித்து அவர்களை அப்படியே தாக்கி அப்பால் வீசியெறியும் மாமல்லர்களை நான் கண்டிருக்கிறேன். “வெல்வதற்காக குனிதல்’’ என்ற ஆங்கிலச் சொற்றொடரைப் பற்றியும் நான் கேள்விப்பட்டி ருக்கிறேன். ஆனால், ஒரு மாபெரும் முதிய தலைவர் - தொண்ணூறுக்கும் அதிகமான வயதடைந்தவர் - என்னை நோக்கி வளைந்து குனிகிறார்; அதன் மூலம் அவர் பால் நான் கொண்டிருந்த பகைமையைக் கெல்லியெறிகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை! கேவலம் பொருள் சிதைந்து அழிவுறும் சொற்களால் அவரது பணிவினை எப்படி விளக்குவது?

உண்மையில், தம்மோடு தொடர்பு கொள்கிறவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் இவ்வாறே நடக்கிறார். அவர்கள் பெரியவர்களா? சின்னவர்களா? என்பது பற்றியோ அவர்கள் ஏழைகளா, பணக்காரர்களா என்பது பற்றியோ அவருக்கு அக்கறை இல்லை. இந்த நிகழ்ச்சியின் விளைவாக என் உள்ளத்தில் ஒரு தீர்மானம் உருவாகியிருந்தது. இந்த ஒப்புயர்வற்ற மனிதரை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தத் தீர்மானம். இதன் பிறகு நான் அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்தேன்; அவரது அரசியல், சமுதாய இலட்சியங்கள் அனைத்தையும் பற்றி அவரிடம் மிகவும் மனந்திறந்து விவாதித்திருக்கிறேன்.

நான் பல பெரிய மனிதர்களையும் நோயாளி களையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் 60 வயதுக்குப் பிறகு மாறாத குறிப்பிட்ட கருத்துக்களைப் பிடிவாதமாக மனதில் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள். 70 வயதுக்குப் பிறகு அவர்களின் கருத்துக்கள் ஆட்டம் கண்டிருக்கும். 80 வயதுக்குப் பிறகோ நொய்ந்துபோன பல கருத்துக்களே அவர்களிடம் இருக்கும். இவையும் கூட அவர்களுடைய குணப்பண்புகளுடன் கூட புதைக்கப்பட வேண்டியவைதான்.

உயர்ந்த சிந்தனையாளர்

ஆனால், நான் பெரியாருடன் உறவாடத் தொடங்கியபோது அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் மிகவும் உயர்ந்தவையாக, மிகவும் உன்னதமானவையாக இருக்கக் கண்டேன். இந்தத் தொண்ணூற்று வயதுப் பழுத்த முதியவரின் உள்ளம் எனக்குத் திறந்து காட்டிய ஆழங்களையும் உயரங்களையும் அரைகுறையாகப் புரிந்துகொள்வதற்குக் கூட நான் எனது மனத்தை முற்றிலும் ஒருமுகப்படுத்த வேண்டியிருந்தது.

அத்துணை உயர்வும் உன்னதமும் படைத்தவை அவரது சிந்தனைகளும் கருத்துகளும்.

அவரது கூர்ந்த மதி எவராலும் நம்பொணாத அளவு அத்துணை கூர்மை யானது. அவருடன் பிறர் பேசிக்கொண்டிருக்கும் போது, அப்பேச்சிலுள்ள ஒரு தெளிவற்ற வாக்கியத்தைப் பிடித்துக் கொள்வார் - அதில் இரு பொருள் தொனிக்கும் வகையில்!

அரசியல்வாதிகளால் வேறு ஏதோ காரியத்துக்காகச் சொல்லப்பட்ட வாக்கியங் களையும் அவர்தம் மனதில் பிடித்துக் கொள்வார். எப்படி? அவருக்கோ காது கேட்பதில் சிரமம், கேட்கும் கருவியைக் காதிலே பொருத்திய வண்ணம் பிறர் பேசுவதைக் கேட்டு அதில் தமக்கு வேண்டிய வாக்கியங்களை அப்படியே மடக்கிப் பிடித்துக் குறித்துக் கொள்வார்.

அவரது கண்கள் வயது காரணமாக ஓரளவு மங்கலாகி விட்டன. என்றாலும் இந்தக் கண்களைக் கொண்டே துருவித் துருவிப் படித்துவிடுவார். இதற் காக அவர் பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தினார்.

அசல் ஷெர்லாக்ஹோம்ஸ் தான்! துப்பறிவதற்கு உண்டான ஒரு தடயத்தைக் கூட அவர் தப்பவிட்டு விடமாட்டாரே! 94ஆவது 95ஆவது வயதுகளின் போது அவர் எழுதிய நாட்குறிப்பேடுகளையும் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று குழம்பிப் போகாதபடி அவர் தேதி கொடுப்பதையும் நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும்!

நிகரில்லா மாமேதை

இவையனைத்துக்கும் மேலாக, நூற்றாண்டினை எட்டி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த அவரது உடல் வலுதான் என் உள்ளத்தில் வெகு ஆழமாகப் பதிந்தது. சாக்ரட்டீஸ், பெர்னாட்ஷா, இங்கர்சால் போன்ற பெரிய பெரிய சமுதாய தொண்டர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மாபெரும் சக்தி படைத்த, மாபெரும் இலட்சியங்களை வரித்துக் கொண்ட மனிதர்கள் தங்களது உன்னதமான இலட்சியங்களை எழுத்தில் வடித்துச் சென்றவர்கள் ஏராளம். எனினும் இந்த மனிதருக்கு ஈடு நிற்கக்கூடியவர்கள் வெகுசிலரே - ஏன், யாருமே இல்லையென்று கூட கூறலாம். ஏனென்றால்... இவர் மட்டுமே காலை 7 மணிக்குக் கன்னியாகுமரியிலே ஒரு கூட்டத்துக்கு தேதி - நேரம் ஒதுக்கிவிட்டு அதே நாள் மாலை 5 மணிக்கு ஈரோட்டிலே இன்னொரு கூட்டத்துக்கும் அதற்கு மேல் நள்ளிரவில் 200 மைல் தொலைவிலுள்ள இன் னொரு ஊரில் கூட்டத்துக்கும் நேரம் கொடுக்கக்கூடியவர்.

அவர் மனித உருவில் ஓடிக் கொண்டிருந்த ஓர் என்ஜின், அது மட்டுமா? அவர் அளவு வேகத்தில் ஓடக்கூடிய ஓட்டப்பந்தய வீரர் யாருமே இல்லை. டாக்டர் பட் அவர்கள் நகைச் சுவையாகக் குறிப்பிட்டார் கள் - அவர் ஒரு கார் பாட்டரியைப் போன்றவர். இடைவிடாமல் கார் ஓடிக் கொண்டே இருந்தாலன்றி பாட்டரி மீண்டும் மீண்டும் சக்திபெற (சார்ஜ்) இயலாது!

பயமுறுத்திய உடல் நிலையிலும்

ஒருமுறை கடுமையான வயிற்றுப் போக்கினைத் தொடர்ந்து ஏறத்தாழ மயக்கமடைந்து விட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அவருடைய வயதுக்கு அது அவரது உயிருக்கே உலை வைக்கக் கூடியது. ஊசி குத்துவதையோ செயற்கை முறையில் உணவு ஏற்றப் படுவதையோ பெரியார் எப்போதுமே பெரிதும் வெறுத்து வந்தார். அவரது தொண்டையில் சில அவுன்ஸ் திரவ உணவை உள்ளே இறக்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.

திரவ நிலை சில மணி நேரத்துக்குள் ஓரளவு சமமாகி விட்டது. அரைகுறை மயக்க நிலையிலிருந்து பெரியார் விழித்துக் கொண்டார். “நாம் எங்கே இருக்கி றோம் என்று கேட்டார். மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதையும் தாம் மயக்கமடைந்திருந்த நிலையிலேயே தமது சிறுநீர் வெளிப்போக்குக் குழாய் மாற்றப்பட்டிருப்பதையும் தாம் சிறிது திரவ உணவு உட்கொண்டிருப்பதையும் உணர்ந்தார். உடனடியாக, “சரி! சரி! அடுத்து மாநாட்டுக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நேரமாகி விட்டது! எனக்கு இப்போது எல்லாம் சரியாகிவிட்டது!’’ என்று கூறிக் கொண்டே அவர் எழுந்து விட்டார்.

எந்தக் கூட்டத்துக்கும் அவர் காலந்தவறிப் போனார் என்பது என்றும் நடக்காத ஒன்று. கூட்டம் 4 மணிக்குத் தொடங்கவேண்டும் என்றால், அவர் சரியாக 3-55 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்துவிடுவார்.

அவர் நடமாடியதே ஆச்சரியம்

உடல் தொடர்பான வசதிக் குறைவுகள், அதிகமான உடல் எடை, ஓரளவு கீல்வாதம், பெருமளவிலான குடலிறக்கம் இது அவரது சிறுகுடல், சிறு நீர்ப்பை, மற்ற உயிர்நாடியான உள்ளுறுப்புகள் ஆகியவற்றின் அளவில் பாதிக்குமேல் இருந்தது - ஆகியவை காரணமாக அவர் நடமாடுவதே மிகவும் கஷ்டமான காரியம்.

இது போதாது என்று, சிறுநீர்ப் போக்குக்காகப் பொருத்தப்பட்டிருந்த குழாய் வேறு. இந்தக் குழாய் ஒரு பாட்டிலுடன் இணைக்கப்பட்டு அந்தப் பாட்டில் ஒரு வாளியினுள் வைக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட வேண்டும். அவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் நடமாட்டத்தையோ பிரயாணத் தையோ தவிர்த்திருப்பார்கள். ஆனால் பெரியார் அப்படியல்ல, எப்போதும் அவர் பயணம் செய்து கொண்டே இருந்தார். தினம் இரண்டுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் கொடுத்தார் - இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் 200க்கு மேற்பட்ட மைல் தொலைவு இருக்கும்!

நான் இப்போது என் வாழ்வில் இளமை துள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நான் விளையாட்டு வீரனும் கூட! ஒரே நாளில் சென்னைக்குப் போய்த் திரும்புவது என்றால் எனக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது; இரவில் நான் மிகவும் களைத்துப் போய்விடுகிறேன். ஆனால் பெரியார் என்றுமே களைப்பறியாதவர். தாம் களைத்துப் போயிருப்பதாக அவர் தமக்குத் தாமே கூட ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, தமது கார் ஒரு முறை நடு வழியில் பழுது பட்டுப்போனபோது தாம் போகவேண்டிய திசையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றினை நிறுத்தி, அதில் ஏறி, கூட்டத்துக்குச் சரியான நேரத்தில் இருக்கும்படியாகத் தாம் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார் - சிறுநீர்ப் போக்குக் குழாய், பாட்டில், வாளி இவற்றுடன்! நடமாடுவதற்கே பெரும் கஷ்டப்பட வேண்டிய நிலையில்!

மேடை ஆளுமை

பொதுக் கூட்டங்களில் ஏதோ படுகிழடுகள் ஊர்வது போல அவர் என்றுமே இருக்க மாட்டார். மிகவும் சாதுரியமும் எதையும் அளந்தறிந்து பேசும் அறிவாற்றலும் பெற்றவர் அவர். சாமானிய மக்கள் பேசும் பாணியில் பேசத் தொடங்கியவர் அவர். ஆனால் மக்கள் மனத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவிப் பதியும் வண்ணம் அவர் பேச்சு அமைந்தது. அப்பேச்சு மக்களின் மனத்தை கவர்ந்து ஆட் கொண்டது. ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ மக்கள் கவனத்தைப் பிறிதின்பால் செலுத்த முடியாதபடி இழுத்து வைத்துக் கொண்டது.

நான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாத வன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு போயிற்று. பலமுறை, கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பாக, அவர் சொல்லொணாத உடல் வேதனையி னால் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த வேதனையே அவரது மனத்தின் கவனத்தை அலைக்கழித்துவிடும் என்று நான் அஞ்சியிருக்கிறேன். எனினும், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஒரு தடவை கூட இடர்ப்பாடு அடைந்ததை நான் கண்டதில்லை. இது ஒன்றே பெரிய சாதனையாகும் - மனித இயல்பினை மீறிய அதிமனித சாதனையாகும்.

அவர் உத்தரவிட்டி ருந்தால்...

அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு - அவரது பொதுக் கூட்ட உரைகள் சிலவற்றை நான் கேட்ட பிறகு - அவர் என்னைப் பார்த்து, உன் மருத்துவத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டுத் தமது பணியில் நாட்டை மேம்படுத்தும் அவர்தம் பணியில் சேர்ந்துவிடும்படி கேட்டிருப்பாரேயானால், நான் அவ்வாறே செய்திருப்பேன்; அது எனக்குப் பெரிய கௌரவம் என்றும் கருதியிருப்பேன், நான் அந்த அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டேன்.

அறிவியல் அடிப்படையிலான நிகழ்ச்சி ஒன்றினை நான் எவ்வாறு ஆராய்ந்திருப்பேனோ அதே போலப் பெரியாரையும் நான் ஆராய்ந்திருக்கி றேன். நான் எனது இந்த ஆய்வில் மிகவும் ஜாக்கிரதை யாக, இருந்தேன்; மிகுந்த கவனத்துடன் நான் படுத்து ஆராய்ந்தேன், என் அறிவில் பட்டது இது தான் - பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் மாமனிதர்களுள் ஒருவரே பெரியார்.

சிலருக்கு அறிவாற்றல் மிகுந்திருக்கும்; ஆனால் அதற்கு இணையான உடல் வலிமை இருக்காது. இவை இரண்டும் பெற்றிருந்தால், முரண்பாடுகளைச் சந்திக்கும் துணிச்சலும் பெரியார் பாதிக்கப்பட்டிருந்த அளவு உடல் நிலையில் இடர்ப்பாடுகள் நிறைந்து 90 வயதிலும் கூட கடுமையாக உழைக்கும் தெம்பும் பெற்றவர்கள் வரலாற்றில் யாருமே இருந்ததில்லை.

உலகமே பாராட்ட வேண்டிய தலைவர்

ஒரு அறிவியலறிஞன் என்ற முறையில் நான் கண்டது “மருத்துவத் துறையின் அற்புதமே பெரியார்’’ என்ற உண்மையைத் தான். அவர் இந்த நூற்றாண்டின் அற்புதம். அவர் மட்டும் இந்த நாட்டில் பிறக்காமல் வேறு ஏதேனுமொரு நாட்டில் பிறந்திருந்தாரானால் இந்த உலகமே அவரது புகழ் பாடியிருக்கும். ஆனால் பெரியாரைப் பெற்றிருந்தது இந்தியாவின் நல்வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். இந்த மாமனிதர் என்ன செய்துள்ளார் என்பதை நமது நாடு முழுமையாகப் புரிந்துகொண்டு பாராட்டாமலிருக்கலாம் என்ற போதிலும், இந்திய வரலாற்றின் போக்கினைப் பெரியார் மாற்றியமைத்தார் என்ற உண்மை எவராலும் மறுக்கவொண்ணாதது.

மூடநம்பிக்கை, பேராசை, சுயநலம், அச்சம், துணிவின்மை போன்ற பலப்பல சக்திகள் பெரியாரின் இலட்சியங்களுக்கு எதிராக இன்னமும் கூட செயற்படு கின்றன. எனினும் பெரியார் சீர்திருத்தச் சகடத்தின் சக்கரங்களை இயக்கி வைத்து விட்டார். பெரியார் நட்டு வளர்த்துள்ள மரம் ஒரு நாள் கனி தரும் என்பதை நாம் நம்பலாம்.

பெரியார், சாதாரணமான மனிதன் ஒருவனைப் போலத் தமது வாழ்வின் சுவைகளை என்றுமே அனுபவிக்கவில்லை. அவரது வாழ்க்கை முழுவதுமே தியாகமயமானது. பணங்காசில் அவர் மிகவும் காரியக்காரராக இருந்தார் என்று பலர் பலபடப் பேசுகிறார்கள். பணம் தான் பெரியாருக்கு வைட்டமின் சத்து என்று கூட நகைச்சுவையாகக் கூறப்பட்டது. இது உண்மையே! என்றாலும் அவர் இந்த வைட்டமின் சத்தினைத் தமக்காக என்றுமே சாப்பிட்டதில்லை. நாட்டுக்கே அந்தச் சத்தினை வழங்கினார். நாட்டுக்குத் தானே அந்தச் சத்துப்பொருள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. தன்னிடமிருந்த சத்துப் பொருளை (பணத்தை) அவர் மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தும் அறக்கட்டளைகள் என்ற வடிவில் வாரி வழங்கிவிட்டார்.

படுத்துறங்குவதற்கு வசதியான படுக்கை அவருக்கு இருந்ததில்லை. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப மனிதன் தனக்குத் தேவையென்று விரும்பக் கூடிய வசதிகளைக் கூட அவர் அனுபவிக்கவில்லை.

ஓயா அதிர்வுகள்

இந்தத் தலைவரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இடிக் குரலில் பெரியார் முழங்கும் பேருரைகளை இனி ஒலிப்பதிவு நாடாக்களிலன்றிக் கேட்க இயலாது. கருணை பொங்கித் ததும்பும் அவரது திருமுகத்தையும் அவரது அபாரத் துணிச்சலையும் இனி நமது இதயத் தின் நினைவலைகளிலும் புகைப்பட உருவங்களிலும் தான் காணமுடியும். என்றாலும் அவர் இயக்கிவைத்த சிந்தனையின் அதிர்வு அலைகள் ஓய்ந்துவிடவில்லை. அவற்றை ஒழிந்துவிடுவது என்பதும் யாராலும் எப்போதும் இயலாது!

(நன்றி; விடுதலை- 96ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் மலர்)