அதிகாலை நான்கு மணிக்கு தொலைபேசியின் இடைவிடாத சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்தது. கடவுளே... யாருடைய அழைப்பாக இருக்கும்? கணவரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. மாமியாரின் நிலையும் அந்த அளவுக்கு நன்றாக இல்லை. அழைப்பு எங்கிருந்து வருவதாக இருக்கும்? தொலைபேசியை எடுப்ப தற்கு முதலில் பயந்தாலும், ஓடிச்சென்று எடுத்தேன்.
"ஹலோ... யாரு? நிபா?''
நான் கூறினேன்: "ஆமா... யாரு? ஜீஜா..?''
அக்காவின் கணவர்...
"அத்தான்... வணக்கம். நல்லா இருக்கீங்கள்ல? என்ன ஆச்சு? அதிகாலை வேளையிலயே... பிரச்சினை எதுவுமில்லியே?'' ஒரே மூச்சில் நான் கேட்டேன்.
"பிரச்சினை எதுவுமில்ல. அங்க... எல்லாரும் நல்லா இருக்கீங்கள்ல?'' அத்தான் கேட்டார்.
"என்ன ஆச்சு அத்தான்? அதிகாலை நேரத்துல?''
"நிபா... நீ இன்னிக்கே இங்க வா.''
"இன்னிக்கேவா? அத்தான்... என்ன சொல்றீங்க? இன்னிக்கே எப்படி வர்றது? எதுக்கு? கடந்த பத்து நாட்களுக்குள்ள ரெண்டு முறை வந்தேன்ல? இனி மூணாவது முறையாவும்..?
ராகுலுக்கு பள்ளிக்கூடம் திறந்தாச்சு. சுபாஷ் அலுவலகத்துக்குப் போகணும். எல்லாத்தையும் கிடப்புல போட்டுட்டு திடீர்னு எப்படி வர முடியும்? அது மட்டுமில்ல. பயணச் சீட்டும் கிடைக்காது. முன்பதிவு கிடைக்கறது கஷ்டம்...'' நான் ஒரு வகையாகக் கூறிமுடித்தேன்.
"முன்பதிவு விஷயத்தையெல்லாம் நான் சரிசெஞ்சு அனுப்பியிருக்கேன். ரெண்டு நாளுக்காவது இங்க வா. பெரியக்கா எப்போதும் உன் பேரை உச்சரித்துக்கிட்டே இருக்கா. கடந்த மூணு நாளா எதையும் சாப்பிடவோ குடிக் கவோ இல்லை. நீ வர்றதா சொல்லி ஆசையை உண்டாக்கி எப்படியோ எதையாவது கொடுக் கப் பார்க்கறேன். ஆனா, நேத்து காலையில இருந்து எதுவுமே சாப்பிடல. நிபா... நீ உடனடி யாக இங்க வரணும். மெயிலைத் திறந்து பயணச் சீட்டை எடுத்துக்கோ...''
அத்தான் எப்படியோ விஷயத்தைக் கூறிப் புரியவைத்தார். நான் தர்மசங்கடமான நிலையில் இருந்தேன். கடவுளே.... நான் என்ன செய்வது? சுபாஷிடம் இதை எப்படி கூறுவேன்? என்ன நினைப்பார்? தோன்றுகிற நேரத்திலெல்லாம் செல்வதற்கு இவளுக்கு அக்காவின் வீடு மட்டும்தான் இருக்கிறதா?
அக்கா இவளை மயக்கி கைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறாள் என்று தோன்றியிருக்கும்.
"நீ கேட்கிறேல்ல? கட்டாயம் வரணும்.'' அத்தான் உறுதியான குரலில் கூறியதைக்கேட்டு நான் சிந்தனையிலிருந்து விடுபட்டேன்.
"சரி... பார்க்கறேன். சாயங்காலம் ஐந்து மணிக்கு இருக்குற வண்டிதானே?'' நான் கேட்டேன்.
"ஆமா. ஏழு மணிக்கு இருக்குற ரயில்தான். வராம இருந்துராதே. ரொம்பவும் முக்கியம்...''
இவ்வளவையும் கூறிவிட்டு அத்தான் நிறுத்தினார். என்ன செய்யவேண்டுமென தெரியாமல் நான் முழுமையான குழப்பத்தில் மூழ்கினேன். இந்த பெரியக்காவுக்கு இப்போது என்ன ஆயிற்று? எந்தவொரு காரணமும் இல்லாமல் வெறுமனே பிடிவாதம் பிடிக்கிறாள்...
எந்தவொரு காரணமும் இல்லாமல் அழைப்பாள். "என்ன செய்றே?' என்று விசாரிப்பாள். அங்கு போய்ச் சேர்ந்தபிறகு இருக்கக்கூடிய நாடகம் வேறு... சுபாஷுக்கு முன்னால் இந்த விஷயத்தை எப்படிக் கூறுவதென்பதை நினைத்து சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
ராகுலின் ஸ்கூல் பேக்கையும் டிஃபனையும் தயார்செய்து கொடுக்கவேண்டும். அனைத்தையும் எப்படிச் செய்வது? நேரம் ஆறு மணியாகிவிட்டது. அலாரத்தின் ஓசைகேட்டு சிந்தனையிலிருந்து வெளியே வந்தேன்.
"ராகுல்... மகனே... ராகுல்... எழுந்திரு.
மகனே. பள்ளிக்கூடத்துக்கு புறப்படுறதுக்கு தயாராகு...''
ராகுலின் ஆடையை குளியலறையில் கொண்டுபோய் வைத்தேன். அவனுடைய கையில் பற்பசையையும் ப்ரஷ்சையும் கொடுத்துவிட்டு சிற்றுண்டி தயாரிக்க ஆரம்பித்தேன்.
"பை மம்மீ...''
"பை மகனே..''
ராகுலின் பள்ளிக்கூடப் பேருந்து புறப்பட்டது. தேநீர் தயாரித்து சுபாஷை எழுப்பினேன்.
எழுந்தவுடன் கேட்டார்: "அதிகாலையில யாரோட ஃபோன்? நான்கரைக்கு முன்பே இருக்கணும்.''
என் உள் மனம் துடித்தது. "ஜீஜாவோட ஃபோன். கொல்கத்தாவிலிருந்து. நிபாவைக் கூப்பிடுங்கன்னு சொல்லி அக்கா அழுவுறாளாம். சொல்லுங்க. இப்படி உடனடியா நான்...''
"இது என்ன புது நாடகம்!'' முழுமை செய்ய சுபாஷ் சம்மதிக்கவில்லை. தேநீருக்கு அதிக கசப்பு இருப்பதைப்போல தோன்றியது.
"இன்னிக்கே... அத்தான் இன்னிக்கான பயணச்சீட்டை எடுத்து மெயில்ல அனுப்பியிருக்கார்.'' நான் எப்படியோ சொல்லிமுடித்தேன். முடிப்பதற்கு முன்பே சுபாஷின் பதில் வந்தது:
"அப்படின்னா போ. இந்த அளவுக்கு சிந்திக்கறதுக்கு என்ன இருக்கு! பயணச்சீட்டு எடுத்தாச்சுன்னா பயணம் முடிவாயிருச்சுன்னு அர்த்தம்.''
மீனாவிடம் வீட்டை சுத்தப்படுத்துமாறும் பாத்திரங் களைக் கழுவி வைக்குமாறும் கூறினேன். மாமியாருக்கு உணவு எப்படித் தரவேண்டும் என்பதை விளக்கிக் கூறினேன். சாயங்கால ரயிலில் புறப்பட்டேன். வண்டி யில் ஏறும்போது சுபாஷ் கூறினார்:
"சவுகரியம்போல வந்தாபோதும். இங்கிருக்கற விஷயங் களை நினைச்சு கவலைப்படவேண்டாம். அவசரப்பட்டு வரவேணாம்.''
சுபாஷ் எந்த தொனியில்

சுபாஷ் எந்த தொனியில் கூறினார்? கோபத்துடனா?
அல்லது இனிமையான சொற்களுடனா?
கொல்கத்தா ரயில் நிலையத்தில் அத்தானும் நீலேஷும் எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தார்கள். வீட்டின் வாசற்படியில் பெரியக்கா சோர்வடைந்த சரீரத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். காலைத் தொட்டு வணங்குவதற்குமுன்பே கட்டிப்பிடித்து அழ ஆரம்பித் தாள்.
"பெரியக்கா... என்ன இது? ஏன் பயப்படணும்? நான் கொஞ்ச நாளுக்கு முன்னதானே வந்தேன்? பெரியக்கா... பத்து நாட்கள் உங்க கூடவும் பிள்ளைகள் கூடவும் இருந்தேன்ல? பிறகு ஏன் இந்த அளவுக்கு கலவரத்தை உண்டாக்கறீங்க? உங்களோட சுபாஷையும் ராகுலையும் அங்கே விட்டுட்டு எப்போதும் இங்க வர்றதுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கு.'' நான் சிறிது கோபத்துடன் கூறினேன்.
உணர்ச்சியே இல்லாமல் அவள் அவையெல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்றிருந்தாள். அவள் வேறேதோ உலகத்தில் இருப்பதைப்போல தோன்றியது.
நிம்மதியாக இன்று பெரியக்கா உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கினாள். சாப்பிட்டபிறகு நானும் நீலேஷும் அத்தானும் சிறிதுநேரம் ஒவ்வொன்றையும் பேசிக் கொண்டிருந்தோம். நீலேஷ் மெதுவாக தூக்கத்தில் மூழ்கினான்.
அத்தான் கூறினார்:
"உன் பெரியக்காவின் ஞாபக சக்திக்கு ஏதோ நடந்தி ருக்கு. பழைய விஷயங்களை ஞாபகத்துல வச்சிருக்கா... புதியவை எதுவும் ஞாபகத்துலயே இல்ல. எப்போதும் பழைய விஷயங்களை நினைச்சு வாழ்ந்துகிட்டிருக்கா. டாக்டரிடம் காட்டினேன். எல்லாம் படிப்படியா சரியாகும்னு சொல்றார். இது சரியாவறதுக்கு வேறெது வுமே செய்யமுடியாதாம். மனதை அலைக்கழிக்கக்கூடிய... கவலைப்பட வைக்கக்கூடிய சூழல் உண்டாகாம பார்த்துக்க வேணும்னும் டாக்டர் சொன்னார். டென்ஷன் உண்டாகாம பார்த்துக்கணும். நிபா... நான் என்ன செய்றது? சொல்லு...''
"அத்தான்... எல்லாம் சரிதான். பெரியக்காவோட விஷயத்தை நினைச்சு நீங்க எல்லாரும் கவலைப்படுறீங் கன்றது எனக்குத் தெரியும். ஆனா இடையே அப்பாவை யும் அம்மாவையும் சகோதரர்களையும் அழைக்கக் கூடாதா? எப்போதும் இப்படி வர்றதுங்கறது எனக்கு சிரமமான விஷயம்.''
நான் வெளிப்படையாகக் கூறினேன்.
"உன் பெரியக்கா சொந்த மகளான நீரஜாவைக்கூட நினைக்கறதில்ல. ஆனா உன்னை மகளைப்போல நினைக் கறா. எப்பவும் உன்னைக் கூப்பிடறதிலும் தன்னோட வச்சுக்கறதிலும் பிடிவாதமா இருக்கா. உணவு சாப்பிடுறதுக்கு மறுக்குறா. எதுவுமே செய்யாம வெறுமனே உட்கார்ந்திருக்கிறா. நாங்க என்ன செய்றது? உன் கஷ்டங்கள் எங்களுக்குத் தெரியும் நிபா. ஆனா இந்தச் சூழ்நிலையில வேறொரு வழியும் தெரியல.''
அத்தானின் நெற்றியில் சுருக்கங்கள் தெளிவாகத் தெரிந்தன.
காலையில் ஐந்தரைக்கு பெரியக்கா எழுந்தாள். உடனே ஒவ்வொன்றையும் பேச ஆரம்பித்துவிட்டாள்.
"நிபாவுக்கு உணவு தரலையா? நிபாவுக்கு புடவை வாங்கணும். நிபாவுக்கு ரோஸ் நிறம்னா பிடிக்கும்.''
இப்படி ஒவ்வொன்றையும்... எனக்கு அதிகமான கோபம் உண்டானது.
"அக்காவுக்கு ஏதாவது ஆயிடுச்சா? வீடு முழுவதும் தன் தலையிலங்கற நினைப்பு...'' நான் கோபப்பட்டேன்.
"கொஞ்சம் சும்மா இருக்கக்கூடாதா? அத்தானுக்கு வேற வேலை எதுவுமில்லியா? அக்கா... உங்க விஷயத் தைப் பார்த்தா மட்டும் போதுமா? அவருக்குன்னு வேலை இல்லையா? எப்போதும் நிபா... நிபா! நிபா செத்துப் போயிட்டா.''
திடீரென பெரியக்கா பேரமைதியில் மூழ்கிவிட்டாள். அறையின் ஒரு மூலையில் சென்றமர்ந்து தேம்பி அழ ஆரம்பித்தாள். நான்கு நாட்கள் கடந்தன. திரும்பிச் செல்ல ஆரம்பித்தபோது, மீண்டும் அழ ஆரம்பித்தாள். எதுவும் சாப்பிடாமல் இருந்தாள். என்ன செய்வது என்பதைப் பற்றி சிந்தித்தவாறு... இறுதியில் பாசத்து டன் அருகில் சென்று அமர்ந்தேன். சொல்லிப் புரிய வைப்பதற்கு முயற்சித்தேன்.
"பெரியக்கா... ரெண்டு நாளுக்குப்பிறகு நான் திரும்பவும் வர்றேன். இப்போ கிளம்பட்டுமா? உணவைச் சாப்பிட்டுட்டு சுகமா தூங்குங்க. ராகுல் என்னை எதிர் பார்த்துக் காத்திருப்பான்ல?''
பெரியக்கா அனைத்தையும் புரிந்துகொண்ட தைப்போல நடந்துகொண்டாள். அவளுக்கு என்ன புரிந்ததென்று எனக்குப் புரியவில்லை.
எனக்கு ஐந்து உடன்பிறப்புகள் இருக்கிறார்கள்.
பெரியக்காதான் எல்லாருக்கும் மூத்தவள். ஸுஹானி... கீழே நீலிமா அக்காவும் மாலா அக்காவும்... பிறகு இரண்டு அண்ணன்கள் நிசிகாந்தும் சசிகாந்தும். நான் எலலாருக் கும் இளையவள் நிபா... வயதில் எனக்கும் பெரியக்கா வுக்கும் இடையே 15-16 வயது வேறுபாடு இருக்கிறது. அப்பா பட்டாளத்தில் இருந்தார். சசிகாந்த் பிறந்தபிறகு எல்லையில் எங்கோ இடமாற்றம் உண்டானது. பனிமூடிய லே- லடாக் பகுதியில் எங்கேயோ இருக்க வேண்டும். வருடக்கணக்கில் சொந்த ஊருக்கு வர முடியவில்லை.
தாத்தாவின், குழந்தைகளின் குரலைக் கேட்பதற்காக அஞ்சல் அலுவலகத்திற்கு ஃபோன் செய்வார் என்று அம்மா கூறியிருக்கிறாள். லேயில் பணியிலிருந்த காலத்தில் எப்போதோ விடுமுறையில் வந்திருந்தார்.
அந்த சமயத்தில்தான் நான் பிறந்தேன். எல்லாருக்கும் இளைய குழந்தை என்பதால், பெரியக்காவிற்கு என்மீது மிகுந்த அன்பு. என் துணிகளை சலவை செய்வது, தலை முடியை வாரிவிடுவது, குளிப்பாட்டுவது, விளையாடச் செய்வது... எல்லாவற்றையும் பெரியக்காதான் செய்தாள். வேறு யாருமல்ல.பெரியக்காவுக்கு எல்லா விஷயங்களிலும் நல்ல திறமை இருந்தது.
பலவகையான ஃப்ராக்குகளை எனக்காகத் தைப்பாள். அவ்வாறு இருக்கும்போது, அக்காவின் திருமணம் நடந்தது. கணவரின் வீட்டிற்குச் செல்லும்போது, என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நீண்டநேரம் வாய்விட்டு அழுதாள். விடாமல் இறுக சேர்த்துவைத்துக் கொண்டாள். மிகவும் சிரமப்பட்டுதான் காரில் ஏற்றி அனுப்பிவைத்தோம். அக்காவின் அழுகைச் சத்தம் நீண்டநேரம் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. கொஞ்ச நாட்கள் நெஞ்சுக்குள் தாங்கமுடியாத அளவுக்கு வேதனை இருந்தது. இன்று மீண்டும் அதே நிலை... பெரியக்கா விடுவதாகத் தெரியவில்லை.
வீட்டிலிருக்கும் மற்றவர்கள் யாரிடமும் இந்த அளவுக்கு நெருக்கத்தைக் காட்டுவதில்லை. இப்போது மில்லை. என்மீது மட்டும் இந்த அளவுக்கு ஈடுபாடு வைத்திருப்பதற்கு எது காரணமாக இருக்கவேண்டும்? ஒருவேளை..நான் இளைய குழந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் என்னைவிட சிறியவர்கள் அல்லவா அக்காவின் குழந்தைகள்? என்மீது மட்டும் இந்த அளவுக்குப் பாசத்தை ஏன் வைத்திருக்கிறாள்?
தீபாவளி போன்ற கொண்டாட்டங்கள் வரும்போது, எனக்கான ஆடைகள், இனிப்புப் பலகாரங்கள், வாழ்த்து அட்டைகள்... எல்லாவற்றையும் நன்றாகப் பேக் செய்து கொடுத்தனுப்புவாள். என்மீது மட்டுமே பெரியக்கா இந்த அளவுக்குப் பிரியத்தை வெளிப்படுத்துவாள்.
எதற்கு? எதற்கு இவ்வாறு பாசம் வைக்கவேண்டும் காரணம் என்னவாக இருக்கும்? தலைவலிக்க ஆரம்பித்தது. இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன்.
ஜம்ஷேத்பூருக்கு செல்வதற்கு முன்னால் சொந்த வீட்டிற்குச்சென்று அப்பாவையும் அம்மாவையும் பார்க்கவேண்டும். அவர்களிடம் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கூறவேண்டும். பெரியக்காவின் இப்போதைய நிலையை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
மனதிற்குள் கோபம் கொந்தளிக்க ஆரம்பித்தது. இப்போது எனக்கும் ஒரு வீடும் குடும்பமும் இல்லையா? அவர்கள்மீது இருக்கக்கூடிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டாமா?
அத்தான் பயணச் சீட்டு எடுத்ததன்படி கொல்கத்தா விலிருந்து முதலில் பாட்னாவிற்குச் சென்றேன். நேராக வீட்டிற்கு... எதிர்பாராமல் என்னைப் பார்த்ததும் அப்பாவும் அம்மாவும் திகைத்துப் போய்விட்டார்கள். "நிபா... நல்லா இருக்கேல்ல?'' அம்மா அடிமுதல் முடிவரை கூர்ந்து பார்த்தாள். செந்தூரம், வளையல், மாலை... அனைத்தையும் அணிந்திருந்தேன்.
நிம்மதியடைந்தவாறு அம்மா கூறினாள்: "வா...'' உட்காரு. தண்ணி குடி... தொடர்ந்து மூன்றுபேரும் சேர்ந்தமர்ந்து தேநீர் பருகினோம். குளித்து முடித்து ஓய்வெடுக்கும்போது, பெரியக்காவின் நடவடிக்கையில் வந்த மாறுதல் காரணமாக எனக்கு உண்டான கவலையை அவர்களிடம் கூறினேன். அவர்கள் மிகுந்த கவலைக்குள் ஆழ்ந்தார்கள். அப்பா ஒரு சிலையைப் போல நின்றிருந்தார். அம்மா எதுவுமே பேசவில்லை. அப்பா வாசலில் கையை பின்னால் கட்டிக்கொண்டு குழப்பமடைந்த மனதுடன் அங்குமிங்குமாக நடக்க ஆரம்பித்தார். ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும் போது, அப்பாவின் ஒரு செயல் அது. அக்காக்களின் திருமணத்தின்போதும் பாட்டியின் மரணத்தின்போதும் இதைப் பார்த்திருக்கிறேன்.
சொல்லியிருக்க வேண்டியதில்லை என்று மனம் முணுமுணுத்தது. இவர்களிடம் இதை இப்போது ஏன் கூறினேன்? வயதான காலத்தில் வெறுமனே இவர்களின் மனதை வேதனைப்பட வைத்துவிட்டேன். இரவு முழுவதும் பயணம் செய்த களைப்பால், அம்மாவின் மடியில் தலையை வைத்துப் படுத்து உடனடியாக உறங்கிப் போய்விட்டேன். கண் விழித்தபோது, அப்பாவும் அம்மாவும் தங்களுக்கிடையே மெதுவான குரலில் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். நான் எழுந்து விட்டதைப் பார்த்து இரண்டு பேரும் மௌனமாகி விட்டார்கள்.
அம்மா எழுந்து சென்று தேநீர் கொண்டுவந்தாள். அப்பா நாற்காலியை இழுத்துப் போட்டவாறு எனக் கருகில் வந்து அமர்ந்தார். ராகுல், சுபாஷ் ஆகியோரைப் பற்றிய விசேஷங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னர் கூறினார்:
" நிபா... உங்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லணும். நீ தெரிஞ்சுக்கவேண்டிய விஷயம்...'' இவ்வளவையும் கூறிவிட்டு, பேரமைதியில் ஆழ்ந்துவிட்டார். நான் வேகமாக எழுந்து கேட்டேன்:
"அப்பா... என்ன விஷயம்?''
தலையணையின் தையல் பிரிந்துவிட்டதைச் சரி செய்யும் பாவனையில் அம்மா தலையைத் தாழ்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். அப்பா அம்மாவிடம் கூறினார்:
"கேளு... நான் கடைக்குப்போய் காய்கறிங்களையும் மத்த பொருளுங்களையும் வாங்கிட்டு வந்திடுறேன். அதுக் குள்ள நிபாகிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிடு.''
இதைக் கூறிவிட்டு, அப்பா வேகமாக பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
மனமெனும் கடலில் சுனாமியின் அலைகள் புரள்வதைப்போல தோன்றியது. "என்ன விஷயம்னு சொல்லுங்க?'' என்று கட்டாயப்படுத்த, அம்மா மெதுவாக ஆரம்பித்தாள்:
"பெரியக்காவுக்கு பதிநாலு வயசு நடக்கறப்போ, ஒரு போஸ்ட் மாஸ்டர் கிராமத்திலிருந்து இடமாறுதல் வாங்கி வந்தாரு. வெளியே இருந்த கட்டடத்தோட ஹால்ல வாடகைக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் செயல்பட்ட விஷயம்தான் உனக்குத் தெரியுமே! போஸ்ட் மாஸ்டரின் பேரு கிரிஜாநந்தன் பாஸ்வான். குடும்பத்தோட வசிச்சாரு. மூத்த மகன் பானுநந்தன் பாஸ்வானும் அவரோட இருந்தான். தன் தந்தையோட பானு பெரும்பாலான நாட்கள்ல அஞ்சல் அலுவலகத்துக்கு வருவான்.
அவங்களுக்கான தேநீரும் உணவும் வழக்கமா வீட்டிலயிருந்து கொடுத்தனுப்பப்படும். உன் அப்பாவும் கிரிஜாபாபுவுடன் நெருங்கிய நட்போட இருந்தார்.
சசிகாந்தோடயும் ஸ்ரீகாந்தோடயும் சேர்ந்து பானு விளையாடுவான். படிப்புல திறமைவாய்ந்த பானு இன்டர்மீடியட்டும் பொறியியல் தேர்வும் எழுதியிருந்தான். தொடர்ந்தும் என்னவோ படிச்சிக் கிட்டிருந்தான்.
இதுக்கிடையில... எப்போன்னு தெரியல... சுஹானியோட அவன் நெருக்கமா ஆகியிருக்கான். பானு சிந்திக்கல.
எப்பவோ பானுவும் சுஹானியும் ஒழுக்கத்தோட எல்லா எல்லைங்களையும் மீறியிருக்காங்க. அவனுக்கு பொறியியல் படிப்புல நுழையறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.
மதராஸில இருக்கும் ஒரு கல்லூரியில படிக்கறதுக்குப் போனான்.
சுஹானியோட நடவடிக்கைகள்லயும் உணவு ருசியிலயும் உண்டான மாறுதலைப் பார்த்து, விஷயம் அந்த அளவுக்கு சரியில்லைனு எனக்குத் தோணுச்சு. கர்ப்பத்தைக் கலைக்கறதுக்கு கட்டாயப்படுத்தினா லும், சுஹானி எந்த விதத்திலும் தயாரா இல்ல. தன் காதலின் சின்னமான குழந்தைக்குப் பிறவி தர்றதா அவ உறுதியான குரல்ல சொன்னா.
நான் பயந்து... பயந்து உன் அப்பாகிட்ட என் சந்தேகத்தைச் சொன்னேன். வேறெதையுமே பார்க்காம என்னையும் சுஹானியையும் சிலிகுடியிலிருக்கற ஒரு நண்பரோட வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.
நாங்கள எல்லாரும் பயந்துட்டோம். சுஹானி உயிரில்லாத பிணத்தைப்போல ஆகிட்டா. ஆனா அப்பா யார்கிட்டயும் எதுவும் சொல்லல.
எங்களுக்கான உணவையும் தங்கறதுக்கான வசதியையும் அந்த நண்பர் சரிசெஞ்சு தந்தார். அவரும் யார்கிட்டயும் சொல்லல. அங்க சுஹானி அழகான ஒரு பெண் குழந்தையைப் பெத்தெடுத்தா.
நாங்க அங்கேயே மூணு வருஷம் இருந்தோம். தனக்கு இடமாறுதல் உண்டானதாவும், ஒரு பெண் குழந்தை பிறந்ததாவும் கிராமத்திலிருந்த எல்லார்கிட்டயும் சொன்னார். தாயை கவனிச்சுப் பார்த்துக்கறதுக்காக சுஹானிய இருக்கும்படிச் செய்ததா சொன்னாரு. யார்கிட்டயும் எதையும் சொல்லக்கூடாதுன்னு சுஹானிகிட்டயும் சொல்லிப் புரியவச்சாரு. தன் காதலோட விளைவை பூமிக்குக் கொண்டுவர்றதுக்கு உதவிய மகத்தான மனங்களுக்கு முன்னால அவளும் இந்த விஷயத்தை மனசுக்குள்ள குழிதோண்டிப் புதைச்சா. சுஹானி அதுக்கான பக்குவத்தையும் தைரியத்தையும் இதற்குள்ள அடைஞ்சிட்டா. கிராமத்துக்கு திரும்பி வந்தபிறகு, அவளோட படிப்பு தொடர்ந்தது. மெட்ரிக் தேர்வுல தேர்ச்சியடைஞ்சா. தான் சம்பந்தப்பட்ட மகாரகசியத்தை ரெண்டு காது களுக்குத் தெரியாம அவ காப்பாத்தினா. நானும் இதுக்காக அவளை அறிவுறுத்தவும் பயமுறுத்தவும் செஞ்சேன்.
நல்ல... அழகான குழந்தை! நிபா... அவ எங்களோட மகளா ஆனாள். சுஹானி தன் பெயரோட இறுதி எழுத்தையும் பானு பெயரோட முதல் எழுத்தையும் சேர்த்து "நிபா'ன்னு பேரு வச்சு என் மடியில போட்டா. அரை மனசோட உலகத்திற்கு காட்டுறதுகாக மட்டும்...
ஊர்க்காரங்க மேலயிருந்த பயம், வீட்ல உள்ளவங் களோட அழுத்தம் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே தன்னோட கையற்ற நிலையாலயும் வேறு வழியில்லாத சூழலாலயும் அவளுக்கு அப்படிச் செய்யவேண்டிய கட்டாயம் உண்டானது.''
இதைக்கேட்டு என் சரீரம் மரத்துப்போனது. ரத்தம் வற்றிவிட்டதைப்போல... இது நான்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக என் சரீரத்தைக் கிள்ளி பார்த்துக்கொண்டேன்.
பெரியக்கா...
இதுதானே...
இதனால்தானே...
பெரியக்கா... அம்மா... பெரியக்கா... அம்மா...
முழுமையாக உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அறையின் உறுதியான சுவரில் மோதி தலைநொறுங்கு வதைப்போல... எனக்கு எதுவுமே தெளிவாக இல்லை.
அந்த பானுநந்தன் எங்குபோனார்? நான் பிறந்த செய்தியை அந்த ஆள் அறிந்திருப்பாரா?
"நிபா... ஹே நிபா... நான் குழந்தைங்களுக்கு காஜா, அரிசி உருண்டை, மனோர் லட்டு ஆகிய பலகாரங்களை வாங்கியிருக்கேன். சுபாஷுக்கும் லட்டு பிடிக்கும்னு எனக் குத் தெரியும்.''
அப்பாவின் உரத்த சத்தத்தைக் கேட்டு நான் சிந்தனையிலிருந்து விடுபட்டேன். "அப்பா...'' என்று அழைத்தபோது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் நிறைந்து வழிந்ததை நான் அறியவில்லை. என் தலையில் கைவைத்தவாறு அப்பா கூறினார்: "நீ என்ன பைத்தியத்தனத்தை வெளிப்படுத்தறே? உனக்கு ரெண்டு அம்மாக்களோட பாசம் போதும்ன்ற அளவுக்கு கிடைச்சதுல்ல? ரெண்டு பேரோட இதயங்களும் உனக் காக துடிக்குது. நீ எங்களோட மக. என் மானமும் சுஹானியோட உயிரும்...''
இவ்வளவையும் கூறியபோது, அப்பாவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுது அழுது முகம் கலங்கிப் போய்விட்டது. நான் ஓடிச்சென்று அப்பாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பியழ ஆரம்பித்தேன்.
தந்தைக்கும் மகளுக்குமான இப்படியொரு சந்திப்பை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அம்மாவின் அழுகையும் நிற்கவில்லை.
"அப்பா... நான் எங்க போவேன்? என்ன செய்வேன்? எப்படி அறிமுகப்படுத்துவேன்?''
தேற்றியவாறு அப்பா கூறினார்: "தைரியமா போ... பட்டாளக்காரனோட மகளான நீ இவ்வளவு சின்ன விஷயத்துக்கு அழக்கூடாது.''
நான் தைரியத்தைத் திரும்பப் பெற்றேன். கண்களைத் துடைத்துவிட்டு அம்மாவின் அருகில் சென்று கட்டிலில் பிடித்து அமரச்செய்தேன். என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டேன். அப்பா டம்ளரில் நீரை எடுத்து எங்களுக்கு பருகுவதற்காகத் தந்தார். நான் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டதாகக் கூறினார். காலையில் ஜீப்பில் போகலாம். அம்மா பலகாரம் தயாரிக்க ஆரம்பித் தாள். என் மனம் பல பிரச்சினைகளில் உழன்று திரிந்தது.
நான் இங்குவந்து சேர்ந்த விஷயத்தை ஜீஜா விடம் கூறவில்லையே என்பதை திடீரென நினைத் துப் பார்த்தேன். எதற்குக் கூறவேண்டும் என்ற கோபத்தில் முன்பு இருந்தேன். இப்போதே அழைத்துக் கூறலாம்...
"ஹலோ... அத்தான்... வணக்கம். அக்கா எப்படி இருக்கா?'' கேட்பதற்கிடையே என் தொண்டை இடறியது. என்ன கூறினேன் என்று தெளிவாகத் தெரியவில்லை.
"ஹாய் நிபா... என்னாச்சு? சிரமமெதுவும் இல்லாம போய் சேர்ந்துட்டேல்ல? முட்டாள்... நீ எதுக்கு அழறே? நீ எங்களோட மகளில்லியா? என் சுஹானியோட மூத்த மகள்... நான் எப்போதாவது மனைவியோட தங்கையா உன்னைப் பார்த்திருக்கேனா? நீரஜா, நீலேஷ் கிட்ட இருக்கறதைவிட கொஞ்சமாவது பாசத்தில் குறைவைக் காட்டியிருக்கேனா? சொல்லு... என்ன நீ. அழறியா? அமைதியா... சந்தோஷத்தோட போ... இடையே நீ பெரியக்காவைப் பார்க்கறதுக்கு வரணும். சுகமா வீட்டுக்குப் போய் எங்களோட ஆசீர்வாதத்தைச் சொல்லு. காலையில புறப்படுறேல்ல?
"ஆமாம்...''
வணக்கம் கூறிவிட்டு ரிஸீவரைக் கீழே வைத்தேன். எனக்கொரு சந்தேகம்... அத்தானுக்கு அனைத்து விஷயங்களும் தெரியுமோ? அப்பா, அம்மா, பெரியக்கா ஆகியோருடன் அத்தானும் எல்லா விஷயங்களையும் அறிந்துவைத்திருக்கிறார். நான் மட்டும் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லை. இனி என்ன செய்வது? எப்படி வீட்டிற்குச்சென்று சுபாஷின் முகத்தைப் பார்ப்பது? எப்படி எதிர்வினை ஆற்றுவார்? அறிவு பதறுகிறது... செவி வெடிக்கிறது... கேள்விக்கடலில் மூழ்கித் தாழ்வதைப்போல...
காலையில் எழுந்து குளித்துமுடித்துப் புறப் படுவதற்குத் தயாரானேன். விடை பெறும்போது கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்பாவின், அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுவதைப் பார்த்து அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் பதைபதைத்துப் போனார்கள்.
இப்படியொரு விடைபெறுதலையும் அழுகையையும் அவர்கள்முன்பு பார்த்திருக்கமாட்டார்கள். மிகவும் சிரமப்பட்டு அப்பா என்னை ஜீப்பிற்குள் அமர வைத்து விடைகொடுத்தார். நான் விரும்பியதும் அதைத்தான். ஜீப் காற்றின் வேகத்தில் முன்னோக்கிப் பாய்ந்தது.
பயணத்தின்போது நான் எனக்குள் பேசிக் கொண்டிருந்தேன்.
என்னைச் சுற்றிலும் ஏராளமான கேள்விகள் வலம்வந்துகொண்டிருந்தன.பானுநந்தன் இந்த நிகழ்வில் ஒன்றுமேயில்லை. அப்படியே இருக்கட்டும்... ஆனால் பெரியக்கா... எனக்காக நீங்கள் எத்தனைமுறை பிறக் கவும் இறக்கவும் செய்திருக்கவேண்டும்? உங்களுக்குள் எத்தனைமுறை யுத்தம் செய்திருக்கவேண்டும்? சமூகத்தை சந்தித்திருக்கவேண்டும்? எத்தனை முறை அப்பாவிடமும் அம்மாவிடமும் சண்டை போட்டிருக்க வேண்டும்? இந்த போராட்டத்தில் எத்தனைமுறை நீங்கள் விழவும் எழவும் செய்திருக்கவேண்டும்? அனைத் துமே இந்த... எனக்காகத்தானே? எனக்காக மட்டுமே... உங்களின் காதலுக்காக மட்டும்... ஓ..!
பெரியக்கா! உங்களிடம் என்ன கூறுவேன்? சுபாஷிடம்? என் வாழ்க்கையிலிருக்கும் இந்த உண்மை சுபாஷுக்குத் தெரியாது. இந்த உண்மையை மறைத்துவைத்துதான் எங்களின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை...
அவரிடம் வெளிப்படுத்தியது அநீதி... நான் இந்த உண்மையை சுபாஷிடம் கூறாமலிருப்பது சரியான செயலா? திறந்து கூறினால் எதிர்வினை என்னவாக இருக்கும்? அந்த அளவுக்கு பரந்த மனதுடன் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியுமா? ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. பதினேழு... பதினெட்டு வருடங்களுக்குமுன்பு... அக்காவின் திருமணத்திற்குப்பிறகு, மனசாட்சியின் குரலைக்கேட்டு அத்தானிடம் இந்த உண்மையைத் திறந்து கூறியபோது, ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய மனநிலையை வெளிக்காட்டினார் அல்லவா? இன்று... காலம் எந்த அளவுக்கு மாறியிருக்கிறது! சுபாஷிடம் கூறுவதில் என்ன தவறிருக்கிறது? சுபாஷ் ஏற்றுக் கொள்ளாமல் போனால் என்ன செய்வது? நான் எங்கு போவேன்?
இன்னொரு பிரச்சினையும் முன்னால் நிற்கிறது. சுபாஷின் வாழ்க்கையில் இதைப்போன்ற பிரச்சினை உண்டாகி, அதை எனக்கு முன்னால் கொண்டுவந்து வைக்கும்போது நான் என்ன செய்வேன்? நான் அதை எனக்குள் அலசிப் பார்க்க முயற்சித்தேன்.