ன்பத் தமிழ்மொழிக்கு

என்னுயிர் மூச்சும்

இனிய தமிழ்நாட்டைப்

பற்றிஎன் பேச்சும்

Advertisment

அன்பின் பிணைப்பினுக்கு

என்றன்கை வீச்சும்

அடங்காமல் என்றும்இத்

Advertisment

தரையில்நின்(று) ஓச்சும்.

- பாவலரேறு

பெருஞ்சித்திரனார் பாவலரேறு அவர்கள் மறைந்து 26 ஆண்டுகள் நிறைந்துவிட்டன. 11.6.2021. திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போதே 'தென்மொழி' இதழ்த்தொடர்பும் உலகத் தமிழ்க் கழகத் தொடர்பும் கிடைத்த வாய்ப்பால் கிடைத்ததுதான் இன்றைய என் தமிழாசிரிய வாழ்வு !

சொந்த ஊர் செந்தலையில் உ.த.க. கிளைத் தலைவராக அப்போதே நான் செயல்பட்டு வந்தேன்.திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் படிப்புதான் படிப்பேன் என நான் காட்டிய உறுதியை என் தந்தையார் வரவேற்கவில்லை. ' புலவர் படிப்பு சாமியார் படிப்பு ' என்றார், புலவர் படித்தால் 'பக்திமான்' ஆகிவிடுவேன் என்று என் தந்தையார் அஞ்சினார்.

(புலவர் படிப்பு நான்காண்டுப் படிப்பு .இப்போது பி.-ட்.எனப் பெயர்மாற்றம்)

எங்கள் செந்தலை இல்லத்திற்கு வந்த ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் "புலவர் படிப்பு வேண்டாம் என்று அவனிடம் சொல்லுங்கள் " என்று அப்பா எனக்கெதிராக ஆதரவு திரட்டினார்.

dd

செந்தலை திராவிடர்கழகத் தலைவராக இருந்தவர் என் தந்தையார் ச.நடராசன். ஆரிய எதிர்ப்பும் பகுத்தறிவுத் தெளிவும் என் தந்தையார் வழியாகவே எனக்குக் கிடைத்தன. பாவாணர் ,பெருஞ்சித்திரனார் எழுத்தையும் கருத்தையும் மனம் எளிதாகப் பற்றிக்கொண்டதற்குக் காரணம் , பெரியாரியக்கத் தொடர்பால் கிடைத்த வாசிப்புப் தூண்டுதலே !

பழைய தென்மொழி இதழ்களையும் பாவாணரின் அரிய நூல்களையும் தேடிப்படிக்க ஆறாப் பசியுடன் நான் அலைந்த நாள்கள் பல ! அப்போது என் அறிவுப்பசி தணித்த நன்றிக்குரியோர் சி.அறிவுறுவோனும் வைகறையும் பேராசிரியர் இரா.இளவரசும் !

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ' தென்மொழி' இதழ்வழியாக ஊட்டிய தமிழுணர்வு , எனக்குத் தமிழ்ப்புலவர் பட்டம் பெறும் உறுதியைத் தந்தது.

புலவர் தேர்வில், தமிழ்நாட்டின் முதல் மாணவராக நான் தேர்ச்சி பெறும் ஆற்றலையும் தந்தது. புலவர் கல்லூரி மாணவராயிருந்த போது , பெருஞ்சித்திரனார் நடத்திய தமிழக விடுதலை முதல் மாநாடு 'தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ' எனும் பெயரில் திருச்சிராப்பள்ளியில் நடத்தப்பட்டது.மாநாட்டுச் செய்தியை வெளியிட்டநாளேடுகள் ' தென்னிந்திய மொழிகளின் அபிவிருத்தி மகாநாடு ' என மனம் போன போக்கில் செய்தி வெளியிட்டதெல்லாம் தனிக்கதை .

திருவையாறு அரசர் கல்லூரி மாணவர் சார்பில் திருச்சிராப்பள்ளி (1972 சூன் 10 ,11 ) மாநாட்டில் பங்கேற்றது நான் மட்டுமே ! இரண்டு நாளுக்கும் தேவையான 'கட்டுசோறு மூட்டை'யுடன் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன் .விடுதி உணவிற்குச் செலவிடுவதை நினைக்க இயலாதகாலம் அது!

இரவு தூங்கியதும் மாநாட்டு ( தேவர் )

அரங்கிலேயேதான் !

திருச்சி மாநாட்டு ஊர்வலம் 10.6.1972 காலை நேரத் தொடக்க நிகழ்ச்சியாக அமைந்தது ஒரு புதுமை ! திருச்சி மாநகரையே காலை வெயிலில் நெடுந்தொலைவு காலால் அளந்தோம். சென்னை ஆசிரியர் கல்லூரியில் சேரும்வரை , நான் செருப்பு அணிந்தது இல்லை . வெறுங்காலோடு வெயில்சூட்டில் திருச்சி வீதிகளை வலம்வந்தது அழியா நினைவு.

அப்போது நடந்த மறக்க இயலாத இருநிகழ்ச்சி - திருச்சிச்சந்தை அருகே ஊர்வலத்தில் வந்த அனைவரும் காவல்துறையால் சுற்றி வளைக்கப் பட்டதும் ,பாவலரேறு தந்த அறிவிப்பும்!

"கையில் உள்ள பதாகைகளைக் கொடுத்து விடுங்கள் " எனக் காவல் துறையினர் சுற்றி வளைத்து நின்ற படிக் கூறினர். அடுத்த நொடியே சட்டென்று பாவலரேறு கூறினார். அவர் கூறிய சொற்களை, நாற்பத்தொன்பது ஆண்டு கடந்தும் மறக்க முடியவில்லை:

" நாங்கள் பதாகைகளைக் கொடுக்க மாட்டோம். வேண்டுமானால் பிடுங்கிக் கொள்ளுங்கள் " அய்யா ஆணையை ஏற்று நாங்கள் முழக்க அட்டைகளையும் பதாகைகளையும் இறுகப் பற்றியபடி நின்றோம். காவலர்கள் அவற்றை வ-யப் பறித்துக் கொண்டனர். அதன்பின் ஊர்வலம் நகர்ந்தது ; இருநாள் மாநாடும் முழுமையாக நடந்தது.

பெருஞ்சித்திரனாரின் தமிழாசிரியர் தமிழ்மறவர் புலவர் வை. பொன்னம்பலனார் , தோழர் வே.ஆனைமுத்து அவர்களோடு வந்து மாநாட்டில் பங்கேற்றது மகிழ்வான நினைவு.இருவரையும் முதன்முதலாகப் பார்த்தது அன்றைக்குத்தான்! அடுத்த மாநாடு மதுரையில்! அங்கு ஊர்வலம் மட்டுமே நடத்த முடிந்தது.மாநாட்டில் பங்கேற்கத் தந்தைபெரியார் வந்துவிட்டார் . நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்கவில்லை.

த.ச.தமிழனாரின் 'தமிழ்நூல்' இலக்கண நூலை நான்கு உரூபாவிற்கு வாங்கியது திருச்சி மாநாட்டில் !பெருஞ்சித்திரனாரின் சிறப்புப்பாயிரம்

"முப்புடை முந்நீர்

முழக்கிடைப் படுத்த' என்று

அந்நூலில் தொடங்குவதை இன்று படித்தாலும் மனம் மகிழ்வால் துள்ளும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார். எழுத்தால் ஊட்டிய உணர்வையும் சொல்லால் வழங்கிய துணிவையும் என்றும் மறக்காது எங்கள் மனம்.

திருச்சி மாநாடு நிறைவு பெற்றது. சூன் 11 ஆம் நாள் - 1972 இல். இன்று 50 ஆம் ஆண்டு தொடக்கம்.பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்வு நிறைவு பெற்றதும் அதே சூன் 11 ஆம் நாள் - 1995 இல் !

இன்று 26 ஆம் ஆண்டு நிறைவு. பாவாணர், பெருஞ்சித்திரனார் தந்த தமிழ்நெறியைத் தாங்குவோர் எண்ணிக்கை வளர்ந்தால், தமிழும் தமிழ்நாடும் செழிப்பது உறுதி.