னார்த்தனன் கதவைப் பூட்டிவிட்டு, சாவியைப் பாக்கெட்டிற்குள் இட்டான். மெதுவாக படிகளில் இறங்கினான்.

கைப்பிடியின்மீது நின்றிருந்த பல்லி கவலை நிறைந்த கண்களால் அவனைப் பார்த்தது. அவன் வாசலுக்கு வந்தான். வாசலில் லேசான வெயில் பரவிக் கிடந்தது. சாயங்கால வெயிலில் தூரத்தை நோக்கி கண்களைப் பதித்தவாறு வீட்டு உரிமையாளரின் மகள் நின்றுகொண்டிருந்தாள். காலடிச் சத்தத்தைக் கேட்டதும் அவள் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் கவலை நிறைந்த ஒரு புன்னகை வெளிப்பட்டது.

அவளுடைய கண்களில் லேசான ஈரம் இருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது.

வெயில் ஒவ்வொரு நிமிடமும் குறைந்துகொண்டே வந்தது. பரந்து கிடக்கும் நீலநிறத்தின் எல்லையை நோக்கி குனிந்த தலையுடன் ஜனார்த்தனன் நடந்தான். பேருந்துகள் கடந்து போய்க்கொண்டிருந்தன. பேருந்து நிறுத்தத்தில் நீளமான வரிசைகளில் தளர்ந்துபோன உருவங்கள் காத்து நின்றிருந்தன. இளம்பெண்களின் கண்களில் மையும், உதடுகளில் சாயமும் பரவியிருந்தன. ஆண்களின் தலைமுடி அலங்கோலமாக விடப்பட்டி ருந்தது. எல்லாரின் தலைகளும் களைப்பு காரணமாக குனிந்த நிலையில் இருந்தன.

Advertisment

இருபத்து இரண்டாம் எண் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து பகல் முழுவதும் பணிசெய்து சோர்வடைந்த உருவங்கள் வெளியே இறங்கின. கவலை நிறைந்த கண்கள்... சிதறிய தலைமுடி... தரையைப் பார்த்தவாறு, தயானந்த் காலனிக்கும் அமர் காலனிக்கும் செல்லும் தெருக்களின் வழியாக தளர்ந்த கால்களை எடுத்துவைத்து அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.

பேருந்து நிறுத்தத்தைக் கடந்து ஜனார்த்தனன் நடந்தான்.

தளர்ந்துபோன உருவங்கள் காத்து நின்றிருக்கும் வரிசைகளைத் தாண்டி, ஊர்மிளா என்ற விலைமாதுவின் வீட்டை இலக்காக வைத்து நடந்தான். மிகுந்த இரைச்சலுடன் ஒரு ட்ரெய்லர் பேருந்து (ஒன்றோடொன்று பிணைந்து வேகமாக ஓடும் இரண்டு மிருகங்களைப்போல, ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பேருந்துகள்) கடந்து சென்றது. இரு பக்கங்களிலும் தூசி உயர்ந்து எழுந்தது. ஆளற்ற ஒரு குதிரை வண்டியும் அவனைக் கடந்து சென்றது. தளர்ந்து உயிரற்ற நிலையிலிருந்த கண்களை தூரத்தில் பதித்தவாறு, மேலும் கீழும் மூச்சுவிட்டுக்கொண்டே குதிரை மெதுவாக ஓடியது. வயதான குதிரை வண்டிக்காரன் அவனை ஆர்வத்துடன் பார்த்தான். அவனுடைய முடியும் புருவமும் தாடியும் நரைத்திருந்தன. கண்கள் இரண்டு குழிகள். நரம்புகள் பரவிக்கிடக்கும் மெலிந்துபோன கையால் கடிவானத் தைப் பிடித்து அசைத்தவாறு அவன் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான்.

Advertisment

எல்லையற்று நீண்டு செல்லும் மகாத்மா காந்தி சாலையின் வழியாக அவன் நடந்தான். மங்கலான வானத்தில் தளர்ந்துபோன தலைகளை உயர்த்திக் காட்டுவதற்காக சிரமப்படும் கட்டடங்கள் இரு பக்கங்களிலும்... ஒரு பங்களாவின் வாசலில், சாம்பல் நிறத் திலிருந்த கேட்டில் தாடையை வைத்தவாறு ஒரு இளைஞனான வெள்ளைக்காரன் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் தாடி வளர்த்திருக்கிறான். இன்னொரு பங்களாவின் வாசலில் நின்றவாறு ஒரு அல்சேஷன் நாய் கவலையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தது. அமர் காலனிக்குச் செல்லும் அகலம் குறைவான தெருவிற்கு அருகில் பகல் முழுவதும் தரையைச் சுத்தம் செய்வதும், துணியை நனைப்பதுமாக இருந்த தமிழ்ப்பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் உரையாடவில்லை. பெருமூச்சு விட்டவாறு டவ்வா காலனிக்குச் செல்லும் 43-ஆம் எண் பேருந்து கடந்து சென்றது.

வானம் மேலும் மங்கலாகி இருண்டது. வெயில் வற்றிப் போய்விட்டது.

மகாத்மா காந்தி சாலையைக் குறுக்காகக் கடந்தவாறு லிங்க்சாலை, ஹான்காஜியை நோக்கி நீண்டு சென்றது.

ஏ.ஸி. மருத்துவமனைக்கு முன்னாலிருக்கும் போக்குவரத்து சக்கரத்திற்கு அருகில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள்.

ஆன்ட்ரூஸ் கஞ்ச்சைக் கடந்து சதர்ன் எக்ஸ்டென்ஷன் மார்க்கெட்டை நோக்கி அவன் நடந்தான். நிலவு வெளிச்சம் எல்லா இடங்களிலும் பரவிக் கிடந்தது. கார்கள் மூச்சுவிட்டவாறு போய்க்கொண்டிருந்தன. ஒரு பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோரின் ஷோரூமிலிருந்து செயற்கையாக உண்டாக்கப்பட்ட ஒரு கீரி பரிதாபமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்கள் நிறைய வேதனை தெரிந்தது.

ஒரு நடனப் பள்ளிக்குச் செல்லும் குறுகலான படிகளில் அவன் ஏறினான். மெலிந்து காணப்பட்ட ஒரு இளைஞன் அவனை வரவேற்றான். அவனுடைய கண்கள் உயிரற்றுக் காணப்பட்டன. ஜனார்த்தனன் கேட்டான்:

""ஊர்மிளா இருக்காளா?''

""இல்லையே! சுமன் இருக்கா.''

""எனக்கு ஊர்மிளா வேணும்.''

ஜனார்த்தனன் படிகளில் இறங்கினான். ஊர்மிளாவின் வீட்டை நோக்கி நடந்தான். அவளுடைய வீட்டு வாசலில் ஊர்மிளாவின் பூனையை அவன் பார்த்தான். கவலை நிறைந்த கண்களை அவன்மீது பதிய வைத்தவாறு பூனை மெதுவாக சத்தம் உண்டாக்கியது. அவன் மணியை அடித்தான். மணி, அறைக்குள் ஒரு சத்தத்தை உண்டாக்கியது. அவன் ஆர்வத்துடன் உள்ளே பார்த்தான். ஊர்மிளா நடந்து வருவதை அவன் பார்த்தான். அவள் கதவைத் திறந்தாள். அவனைப் பார்த்ததும் கவலை நிறைந்த அவளுடைய கண்களில் மேலும் கவலை நிறைந்தது. தாழ்ந்த குரலில் அவள் கேட்டாள்: ""நீயா? நீ எதுக்கு திரும்பவும் வந்திருக்கே?''

""உன்னைப் பார்க்கறதுக்கு.''

அவனுடைய குரலில் பதட்டம் காணப்பட்டது.

""வா...''

அவள் கூறினாள். அவன் ஊர்மிளாவைப் பின் தொடர்ந்து நடந்தான். அவளுடைய அறையில் அமர்ந்தான். அவள் நின்று கொண்டிருந்தாள். அவன் கூறினான்:

""எனக்குப் பக்கத்தில உட்காரு.''

அவள் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

அவள் கூறினாள்:

""நீ இன்னிக்கு வரமாட்டேன்னு நான் நினைச்சேன்.''

""என்ன காரணத்தால?''

அவளுடைய வெளிறிப்போன முகத்திலிருந்து கண்களை விலக்காமலே அவன் கேட்டான்.

""நேத்து வந்தேல்லியா?''

அவன் பதில் கூறவில்லை. அவன் அவளை தன்னுடைய மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டான். ஏராளமான ஆட்கள் முத்தமிட்டு... முத்தமிட்டு தேய்ந்துபோன அவளுடைய உதடுகளில் முத்தமிட்டான். அவளுடைய கூந்தலை வருடினான்.

""உனக்கு குடிக்கறதுக்கு ஏதாவது வேணுமா?'' அவள் கேட்டாள்.

""வேணும்.''

""என்ன வேணும்?'' அவனுடைய எந்தக் காலத்திலும் சிரித்திராத, புகையிலைக் கறைபடிந்த உதடுகளில் தன்னுடைய முகத்தைச் சேர்த்து வைத்தவாறு அவள் கேட்டாள்: ""தேநீர் போதுமா?''

ss

""உன் ரத்தம்.''

அவனுடைய மெலிந்துபோன கைகள் அவளுடைய சரீரத்தை இறுக அணைத்துக் கொண்டிருந்தன. அவளுடைய உதடுகளில் புன்னகையும், கண்களில் கண்ணீரும் நிறைந்து வெளிப்பட்டன. அவள் பணியாளை அழைத்தாள். சோகம் நிறைந்த ஒரு சிறுமி வந்தாள். அவள் தேநீர் தயாரிக்கும்படி கூறினாள். சிறுமி மெதுவாக சமையலறையை நோக்கி நடந்து சென்றாள்.

அவளுடைய சரீரத்தின் வெப்பத்தை வாங்கியவாறு படுத்திருந்தபோது, அவன் தன்னுடைய அனைத்து வேதனைகளையும் மறந்துவிட்டான். அவனுடைய கண்கள் நிறைந்தன. அவளுடைய கண்ணீரும் அவனுடைய கண்ணீரும் ஒன்றுசேர்ந்து வழிந்தன. மனிதனின் கண்ணீர்...

புறப்பட்டபோது அவன் பைக்குள்ளிருந்து நாற்பது ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான். அவளுடைய தொகை... அவள் வாங்கவில்லை. அவள் கூறினாள்:

""எனக்குப் பணம் வேணாம்.''

அவனும் அவளும் பேசிக்கொண்டிருந்த அறைக்கு மிகவும் அருகிலிருந்த இன்னொரு அறையிலிருந்து, இருட்டிற்குள் ஒரு குரல் நகர்ந்து வந்தது.

""ஊர்மிளா...''

அவள் பணத்தை வாங்கிக்கொண்டாள்.

குனிந்த தலையுடன் அவன் நடந்தான்- ஒயின் கடையை இலக்காக வைத்து. தெரு விளக்குகள் கவலையுடன் புன்னகைத்துக் கொண்டிருந்தன. ஒரு மந்திரத்தைப்போல காற்று வீசியது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒயின் ஷாப்பும் அடைக்கப் பட்டிருந்தது. அவன் கடையின் பின்பகுதிக்குச் சென்றான்.

நடனப் பள்ளிக்கு ஏறிச்செல்லும் குறுகலான படிகளுக்குக் கீழே, இருட்டில், தெற்கு டில்லியின் புகழ்பெற்ற ரவுடியான கே. சாவ்லா நின்றிருந்தான். இருட்டில் கிஷன் சாவ்லாவின் கண்களில் கவலை நிறைந்து கிடப்பதை அவன் பார்த்தான்.

ஒயின் கடைக்குப் பின்னாலிருந்த கதவை அவன் தட்டினான். கடையின் உரிமையாளர் கதவைத் திறந்தார். ரம்மும் விஸ்கியும் ட்ரை ஜின்னும் பீரும் வரிசையாக இருப்பதைப் பார்த்தான். பதினைந்து ரூபாயை எடுத்து நீட்டியவாறு அவன் கூறினான்:

""அரை புட்டி...''

உரிமையாளரின் வெளுத்து சிவந்த முகம், கவலையின் உறைவிடமாக இருந்தது. அவர் தன்னுடைய எலும்புக்கையால் ஒரு அரை புட்டியை எடுத்து தாளில் சுற்றி அவனிடம் கொடுத்தார். அவன் பொட்டலத்தைப் பைக்குள் வைத்தவாறு மெதுவாக இறங்கி நடந்தான். பலம் குறைந்துபோன அவனுடைய கால்கள் நடந்தபோது குழைந்தன.

மகாத்மா காந்தி சாலையில் கால் வைத்தபோது, பகுதி- இரண்டின் புகழ்பெற்ற விலைமாதுவான நீலுசர்மா வாடகைக் கார் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். கவலை நிறைந்த அவளுடைய கண்கள் அவன்மீது பதிந்தன.

""உன்னைப் பார்க்க முடியலையே? நீ ஏன் வரல?'' ""நான் ஊர்மிளாகிட்ட போய்ட்டேன்.''

""நாளைக்கு வர்றியா?''

""வர்றேன்.''

அவன் கூறினான். நாளைக்கு எப்படி முப்பது ரூபாயை உண்டாக்க முடியும் என்பதைப் பற்றி அவன் யோசித்தான்.

மகாத்மா காந்தி சாலையின் வழியாக வாகனங்கள் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தன. சாலையின் ஓரத்தில் அவன் நடந்தான். கோட்லாவைத் தாண்டி ஆடூஸ்கஞ்ச் பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது, எதிரில் பீட்டர் வந்துகொண்டிந்தான். பீட்டரின் கவலையின் வறட்சி பாதித்த முகம் தெரு விளக்கின் பிரகாசத்தில் நன்றாகத் தெரிந்தது. அவனைப் பார்த்ததும் பீட்டர் வறண்டுபோன உதட்டை நாக்கால் நனைத்து சிரிக்க முயற்சித்தான். அவன் ஒரு மெல்லிய குரலில் கேட்டான்:

""ஒரு புட்டி இருக்கு வேணுமா?''

""இப்போ வேணாம்.''

அவன் பொட்டலத்தில் சுற்றப்பட்டிருந்த அரை புட்டியை எடுத்துக் காட்டினான்.

""இன்னைக்குத்தானே? நாளைக்கு வேணாமா?''

""காசு இல்லை பீட்டர்.''

""பிறகு தந்தா போதும்.''

பீட்டர் யோசித்தவாறு கூறினான். அவன் இடுப்பிலிருந்து ஒரு புட்டியை வெளியே எடுத்தான். ரேஸ் கோர்ஸிலோ ஸ்டேடியத்திலோ இருக்கக்கூடிய "வெட் கேன்டினிலிருந்து திருடி எடுத்த ஒரு புட்டி ரம்...

""பதினாறு ரூபாய்.''

பீட்டர் விலையை ஞாபகப்படுத்தினான். அவன் தலையை ஆட்டியவாறு ஒப்புக்கொண்டான்.

அவன் பையிலும் கையிலும் புட்டிகளுடன் நடந்தான். சாலையில் ஆட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. வாகனங்களின் ஓட்டத்தின் பலம் குறைந்தது. மங்கலான நட்சத்திரங்களின் வெளிச்சம் நகரத்திற்குமேலே சிறிதுசிறிதாக விழுந்து கொண்டிருந்தது.

அவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான். சமையலறைக் குள் சென்று குவளையை எடுத்தான். குழாய்க்குக்கீழே நேற்று சோறு சாப்பிட்ட பாத்திரங்கள் கிடந்தன. இன்று தான் எதுவும் சாப்பிடவில்லை என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். அலமாரியில் காலையில் வாங்கிய ரொட்டியும் வெண்ணெயும் இருப்பதைப் பார்த்தான். அப்போது அவனுக்கு வாந்தி எடுக்க வேண்டும்போல தோன்றியது. ரொட்டியையும் வெண்ணெய்யையும் எடுத்துச் சமையலறையிலிருந்த குப்பைக்கூடையில் போய் போட்டுவிட்டு புட்டியைத் திறந்தான். அப்போ அவனுக்கு கடுமையான தாகமும் பசியும் தோன்றின. குவளையில் ஊற்றி அவன் வெறியுடன் குடித்தான். சிறிது நேரம் தாண்டியபிறகு, அவன் மேலும்கீழும் மூச்சுவிட ஆரம்பித்தான். நெற்றியில் வியர்வை அரும்பியது. அவனுடைய கண்கள் மங்கலாயின. மூளை மரத்துப்போனது. அரை புட்டி முடிந்தது. ரம் புட்டியை அவன் திறந்தான். புட்டியைப் பாதியாக ஆக்கியபோது, எம்.ஸி. மருத்துவமனையின் கடிகாரம் வேதனை கலந்த ஓசையை உண்டாக்கியது. பன்னிரண்டு முறை...

அவன் நாற்காலியிலிருந்து எழுந்தான். விழுந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக சுவரைப் பிடித்தவாறு மேஜையை இலக்காக வைத்து நடந்தான். மேஜையின்மீது அவனுடைய க்ராஃமபோன் இருந்தது. நடுங்கிக்கொண்டிருந்த கையால் அவன் இசைத்தட்டைத் தேடி எடுத்தான்.

அவனுடைய க்ராமஃபோன் இயங்கியது. முதலில் அமீர்கானும், உஸ்தாத் அலி அக்பர்கானும், பிறகு நைனார் தேவியின் ஒரு தும்ரி... சித்தேஸ்வரீ தேவி, வசந்த் பஹார் என்ற ராகத்தை ஆலாபனை செய்தாள். வேதனை நிறைந்த சத்தங்கள் தேவியின் தொண்டை வழியாக வெடித்துப் பாய்ந்தது...

அவன் தூசி நிறைந்த, விரிக்கப்படாத படுக்கையில் கவிழ்ந்து படுத்து, சித்தேஸ்வரீ தேவியின் பாடல்களைக் கேட்டவாறு தூங்கினான்.