மைதியற்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், தந்தையும் தாயும் எட்டு வயது மகனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அப்போதுதான்... கஷ்டம்!

இதோ.... இப்படித்தான் ஆரம்பம்... ஒரு உரையாட லிருந்து:

""அடியே ரஜில்....'' தந்தை கூறினார்: ""நீ கொஞ்சம் இங்க வா.''

""கூப்பிட ஆரம்பிச்சாச்சு...'' அவள் வெறுப்புடன் கூறினாள்: ""மணி ஏழரையாகிட்டது. காலை உணவு தயாராகல. மதியத்திற்கு நாம கொண்டுபோக வேண்டிய சாப்பாடு தயாராகல. எனக்கு ரெண்டு கைங்கதான் இருக்கு.''

Advertisment

""அடியே... எல்லா மனுஷங்களுக்கும் ரெண்டு கைங்கதான் இருக்கு. பிரம்மனுக்குதான் நாலு கை இருக்கு. நீ கொஞ்சம் இங்க வா. ஒரு படத்தைக் காட்டுறேன்.''

""எந்தவொரு சினிமாக்காரனோட, சினிமா நடிகை யோட படத்தையும் நான் பார்க்க விரும்பல. தொலைக் காட்சியைப் பார்த்தாலும், வார இதழைப் பார்த்தாலும், தெருவுல இறங்கிப் பார்த்தாலும் அவங்களோட புகைப்படங்கள்தான்... வெறுப்பாகிட்டது.''

""ரஜில்... இது சினிமாதுறையில இருக்கறவங்களோட படமில்ல. ஸனீஷோட புகைப்படம்...''

Advertisment

""எந்த ஸனீஷ்?''

""எந்த ஸனீஷா? நமக்கு தெரிஞ்சவன் ஒரேயொரு ஸனீஸ்தான். நம்ம சசீந்திரனோட மகன்.''

தோசைக்கல்லில் வெந்துகொண்டிருந்த தோசையை மறந்துவிட்டு, கையில் உயர்த்திப் பிடித்த எண்ணெய் புரண்ட கரண்டியுடன் அவள் ஓடிவந்தாள். கரண்டியின் வாயிலிருந்து சூடான எண்ணெயுடன் கரிந்த தோசையின் புகையும் உயர்ந்து வந்துகொண்டிருந்தது.

""ஸனீஷின் படமா? நீங்க ஆள் மாறிப் பார்த் திருக்கலாம்.''

""அடியே... வளவளன்னு பேசாம, வந்து பார்.''

கடந்த ஓணம் பண்டிகை காலத்தில் மாதத்தவணையில் வாங்கிய முப்பத்தைந்தாயிரம் ரூபாய் விலைகொண்ட ஸோஃபாவில் கையில் நாளிதழுடன் அவர் அமர்ந் திருந்தார். இரண்டு கைகள் மட்டுமே உள்ள மனைவி சமையலறையில் மூச்சு விடுவதற்குக்கூட நேரமில்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்போதுகூட, அவர் பத்திரிகையை வாசித்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அப்போது பூமி குலுங்கினால்கூட அவர் தான் வாசித்துக்கொண்டிருப்பதை நிறுத்தமாட்டார். வாசித்து முடித்துவிட்டால் உடனே கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு சமையலறைக்குள் நுழைவார். தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொடுப்பார். அரிசியைக் கழுவித்தருவார். வெங்காயத்தின் தோலை உரித்து அரிந்து தருவார். கோதுமை மாவில் சற்று உப்பைப்போட்டு அதை நன்றாக பதம் வரும்வரையில் குழைத்துக் கொடுப்பார்.

அவள் கண்கள் நிறைய அதைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

சசீந்திரனின் மகன் ஸனீஷ்தான்... செய்திக்தாளின் உள்ளே இரண்டாவது பக்கத்தில் அந்த வண்ணப்புகைப் படம் பிரசுரமாகியிருந்தது. அவனுக்கு பொதுவாக பார்ப்பதைவிட நல்ல நிறம்... கன்னங்கள் சிவந்து காணப்பட்டன. கூப்பிய கைகளைப்போல நடுவில் மேல்நோக்கி உயர்த்தி வாரப்பட்ட தலைமுடி... பெரிய, கறுத்த பொத்தான்களைக் கொண்ட நீலநிற சட்டையை அணிந்திருந்தான். ஆனால், அவற்றுடன் சிறிதும் பொருத்தமற்ற ஒரு அப்பாவிக் குழந்தையின் உணர்ச்சி கண்களில் தெரிந்தது. யாரோ தன்னைத் துன்பப்படுத்துவதைப் போன்ற உணர்ச்சி... ஓவியப் போட்டியில் முதல்பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து நாளிதழில் புகைப்படம் பிரசுரமாகியிருக்கிறது.

""பையனுக்கு என்ன ஒரு நிறம்!''

""அவனோட தாயின் நிறம் அவனுக்கு வந்து சேர்ந்திருக்கு.''

""ஏய்... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல... அது கலர் புகைப்படமா இருக்கறதாலதான்.''

அவள் மறுத்துக் கூறினாள்.

""நாம சசீந்திரனை கொஞ்சம் கூப்பிட்டா என்ன?''

""கூப்பிடணும் ஜனு அத்தான். இது என்ன சின்ன விஷயமா? ஊர்ல உள்ள எல்லாரும் பார்க்குறாங்கள்ல?''

சமையறையிலிருந்து கரிந்த தோசையின் வாசனை வந்ததும், ரஜிலா மீண்டும் கரண்டியை உயர்த்திப் பிடித்தவாறு சமையலறையை நோக்கி ஓடினாள். ஆனால், வென்டிலேட்டரில் கொண்டு வந்து படுக்க வைத்தாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு பெரியவர் கரிந்து போயிருந்தார். தோசைக் கல்லிலிருந்து கரிந்த புகை நான்கு பக்கங்களுக்கும் உயர்ந்து பரவியது.

பதினோரு முறை சசீந்திரனை அழைத்தும் கிடைக்கவில்லை. விந்துஜாவை அழைத்து கிடைக்க வில்லை. இரண்டுபேரின் அலைபேசிகளும் பிஸியாக இருந்தன.

பன்னிரண்டாவது முறை அழைத்தபோது, கடவுளே... கிடைத்தார்.

""காலையில இருந்து ஆளுங்க கூப்பிடோ கூப்பிடுன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க ஜனார்த் தனா... எங்கேயிருந்தெல்லாம் கூப்பிடறாங்க! என் கடவுளே... என் அலைபேசியில மட்டுமில்ல... விந்துஜா அலைபேசியிலும் கூப்பிடோ கூப்பிடுன்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. இதுவரை ஒருமுறை பாத்ரூமுக்குள்கூட... போகல. பல் தேய்க்கல. இப்போ நான் என்ன செய்வேன்? அலுவலகத்துக்குப் போகவேணாமா? குளிக்காமலும் சவரம் செய்யாமலும் எப்படி போறது? மகனோட புகைப்படம் வந்தது, புலிலிவாலாகிட்டது!''

""இன்னிக்கு விடுமுறை எடுத்துடு. இப்போ இல்லைன்னா பிறகு எப்போ நீ விடுமுறை எடுக்கப்போற சசீந்திரா?''

""அதையேதான் விந்துஜாவும் சொல்றா. மகனோட புகைப்படம் செய்தித்தாள்ல வந்திருக்குற நேரத்துல எடுக்காம பிறகு எப்போ விடுமுறை எடுக்கறதுன்னு விந்துஜா கேட்கிறா.''

""அவள் சொல்லுறதுதான் சரி. விடுமுறை எடுத்துடு. நாம சாயங்காலம் பார்ப்போம். நானும் ரஜீலாவும் சேர்ந்து அங்க வர்றோம்.''

அதைத் தொடர்ந்து ஜனார்த்தனனின் வீட்டில் அனைத்து விஷயங்களிலும் தாளம் மாறின. தோசை கரிந்ததற்குப் பின்னால் பால் கொதித்து வழிந்து கியாஸ் ஸ்டவ்வின் அடிப்பகுதியில் தங்கி நின்றது. ஒற்றைக் குழாய்க்குக் கீழே கிடந்த தோசைக்கல்லில் புகையும் வாசனையும் வந்துகொண்டிருந்தன. ஆனால், இப்போது அடிப்பகுதி கரிந்த பால்பாத்திரத்திலிருந்து கரிந்த வாசனை வந்து கொண்டிருந்தது. மகனின் பள்ளிக்கூட பேருந்து வரக்கூடிய நேரம்... மதிய உணவு டப்பாவைக் காணோம். நேற்று மகன் பள்ளிக்கூடத் திலிருந்து வந்தவுடன் அவள் அதைக் கழுவி சுத்தப்படுத்தி வைத்தாள். எங்கு வைத்தாள்? அதோ.... அந்த சமயத்தில் பள்ளிக்கூடப் பேருந்தின் ஹார்ன் சத்தம் அருகில் கேட்டது.

""மம்மீ... என் மதிய உணவு டப்பா.''

மகன் பதைபதைத்தான். அதோ... பேருந்து வீட்டிற்கு முன்னால் "ப்ரேக்' போடப்பட்டு நின்றுகொண்டிருக்கிறது.

""அதை அப்பா பள்ளிக்கூடத்தில கொண்டு வந்து தருவாரு மகனே, நீ கிளம்பு.''

தயங்கி நின்றுகொண்டிருந்த மகனை அவள் கதவு திறந்துகிடந்த பேருந்தின் வாய்க்குள் தள்ளி ஏற்றினாள்.

""ஸ்ரீஜிஷ்... நீ ஏன்டா அழறே?''

""என் மதிய உணவு டப்பா...''

பேருந்தில் அமர்ந்து அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான். முதன்முறையாக அவன் கையில் மதிய உணவில்லாமல் பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறான்.

அவனுடைய வீட்டில் அமைதியற்ற நிலை தொடர்ந்தது. இரண்டு இரவுகள் தூக்கமே வராமல், ஜனார்த்தனனும் ரஜீலாவும் நேரத்தைச் செலவிட்டார்கள். அவர்கள் படுக்கையில் திரும்பிக்கொண்டும், புரண்டு கொண்டும் படுத்துப் பார்த்தார்கள். இரண்டு மணி ஆனபிறகும் தூக்கம் வரவில்லை. இரண்டரை ஆனபிறகும் தூக்கம் வரவில்லை.

மூன்று மணிவரை பேசிக்கொண்டும், மவுனமாக இருந்துகொண்டும் படுத்திருந்த அவர்களுடைய தலைக்குள் திடீரென்று வெளிச்சம் நுழைந்தது.

""அதேதான்... நாம அதைச் செய்வோம். வேற வழியில்லை.''

அவர்கள் ஒருவரோடொருவர் கூறிக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து திறக்கப்பட்டிருந்த சாளரத்தின் இடைவெளிகள் வழியாக தூக்கம் இளம்காற்றாக வர, அவர்கள் ஒன்றாகக் கண்களை மூடினார்கள்.

காலையில் பல் துலக்குவதற்கு முன்பே அவர் லிபிராஜை அழைத்தார்:

""இது... ஜனார்த்தனன்...''

""எந்த ஜனார்த்தனன்?''

""கிராம அலுவலகத்தில வேலை செய்யற ரஜிலாவோட கணவர்... புரியுதா?''

""இப்போ புரியது. சொல்லுற முறையில் சொன்னா,

யாருக்கு புரியாம இருக்கும்? என்ன விஷயம் ஜனார்த்தனா?''

""நீ எனக்கொரு சிறிய உதவி செய்யணும். நான் சொல்லுற நேரத்துல நீ கொஞ்சம் காவல் நிலையத்திற்குப் போகணும். உன் மனைவியோட நாலரை பவுன் எடை இருக்கிற தாலிலிச் சங்கிலிய வங்கி லாக்கர்லயிருந்து எடுத்து வர்றப்போ, அது வழியில தொலைஞ்சு போயிருச்சுன்னு சொல்லணும்.''

""உன் தலைக்கு சுகமில்லையா? உனக்கு காலையிலேயே பைத்தியம் பிடிச்சிருச்சா?''

brain

""ஒரு ஆபத்து வேளையில இந்த நண்பனுக்கு நீ கொஞ்சம் உதவக் கூடாதா?''

""என்ன உதவி வேணும்னாலும் நான் செய்றேன். ஆனா, காவல் நிலையத்துக்குப் போய் பொய் சொல்லச்சொல்லி மட்டும் நீ என்னை கட்டாயப்படுத்தாதே.''

""நான் அங்க வர்றேன். எல்லாத்தையும் விளக்கிச் சொல்றேன். "மாட்டேன்'னு சொல்விடாதே. இதைப் போல ஒரு உதவி செய்றதுக்கு எனக்கு வேற யாருமில்ல. சாயங்காலம் கடையப் பூட்டிட்டு, நான் உன் வீட்டுக்கு வர்றேன். சரியா?''

""வர்றப்போ ரஜிலாவையும் அழைச்சிட்டு வா. என் மனைவியும் வீட்ல இருப்பா. உன் மனைவியைப்போல அவளுக்கு வேலை எதுவுமில்லையே! நாம கொஞ்ச நேரம் எதையாவது பேசிக்கிட்டு இருப்போம்.''

அனைத்தும் அவ்வாறே நடந்தன. மாலை கிராம அலுவலகத்திலிருந்து உரிய நேரத்தில் குடையுடனும் பேக்குடனும் ரஜிலா வெளியே வந்தபோது,

அவளுடைய கணவர் பைக்கில் ஒருபக்கம் தரையில் காலை ஊன்றியவாறு, அவளுக்காகக் காத்திருந்தார். அவள் ஓடிவந்து பைக்கின் பின்னால் ஏறி அவருடைய வயிற்றில் கையைச் சுற்றியவாறு அமர்ந்தாள். பைக் ஓட ஆரம்பித்ததும் அவள் அவருடைய முதுகின்மீது சாய்ந்தாள்.

லிபிராஜ் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அன்று காலையில் "டை' பூசியிருந்த காரணத்தால், அவருடைய தலையும் மீசையும் கரியைப்போல கறுத்து இருண்டிருந்தன.

வரவேற்பறைக்குள் நுழைந்தவுடனேயே ஜனார்த் தனன் பேக்கிலிருந்து ஒரு புட்டி நெப்போலியன் பிராந்தியை வெளியே எடுத்தார். கொஞ்சம் மிக்ஸரை யும் மஸாலா பிஸ்கட்டையும் அவர் ஏற்கெனவே வைத்திருந்தார். ரஜிலா உள்ளே சென்று லிபிராஜின் மனைவியிடம் குசலம் விசாரித்துக்கொண்டிருந்தாள். ஜனார்த்தனனும் லிபிராஜும் குடித்துக்கொண்டும் மிக்ஸரையும் மசாலா பிஸ்கட்டையும் மென்றுகொண்டும் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீஜிஷை ரஜிலாவின் சகோதரியுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பற்றிய ஞாபகம் வந்தவுடன், நெப்போலியனின் கடுமையான போதையிலிருந்து அவர் கண் விழித்தார். அனைத்துமே அவனுக்காகத்தானே? பிறகு... திடீரென்று அவர் லிலிபிராஜிடம் விஷயத்தை விளக்கிக் கூறினார்.

அவர் ஒரு பெரிய மடக்கு பிராந்தியை உள்ளே செலுத்திய வாறு கூறினார்: ""உனக்காகவும் ரஜிலாவுக்காகவும் நான் அதைச் செய்வேன்.''

அதைத் தொடர்ந்து எஞ்சியிருந்த அரை புட்டி நெப்போலியனை மீண்டும் எடுக்காமலேயே, ரஜிலாவை அழைத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு வேகமாகப் பறந்தார்.

இனி இரண்டாவது பகுதி... தெரிகிறதா?

பையனுக்கு எட்டு வயதே ஆகியிருக்கிறது. ஆனா

ல், பார்த்தால் பன்னிரண்டு வயதுபோல தோன்றும்.

அந்த அளவுக்கு பெரிய உடல்... "டேய்... உன் அறிவு உன் உடம்பைப்போல இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!' என்று ஜனார்த்தனன் கூறுவார். 'பப்பா... எனக்கு ஒரு ஸ்கை கோன் வாங்கித் தாங்க. என் அறிவு பெரிசாயிடும்' என்று பையன் கூறுவான். எதையாவது பேசி ஆளை விழச்செய்வதில் அவன் தன் தந்தையைப்போலவே மிகவும் கைதேர்ந்தவன்.

அய்யோ... ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு மறந்துவிட்டேன். ஒரு நாள் மற்றவர்களுக்கு முன்னால் பையன் தன் தந்தையை "பப்பா' என்று அழைக்காமல் "அப்பா' என்று அழைத்துவிட்டான். மற்றவர்கள் சென்றபிறகு, பப்பா பையனின் காதைப் பிடித்துத் திருகினார். காது எரிந்து சிவந்துவிட்டது. அன்று அவனுக்குப் புரிந்துவிட்டது- காதுக்குள் நெருப்பு இருக்கிறது என்ற விஷயம்... பிறகு அவன் தன் தந்தையை "அப்பா' என்று அழைத்ததில்லை. அறியாமல் அப்படி அழைத்துவிட்டால், உடனடியாக பதைபதைத்துப்போய் திருத்திக்கொள்வான்.

""டேய்... இங்க வா.''

அந்த அன்பு நிறைந்த அழைப்பைக்கேட்டு, அவன் தன் தந்தையின் அருகில் சென்றான். இப்படிப்பட்ட ஒரு அழைப்பை அவன் இதுவரை கேட்டதே இல்லை. அவன் ஆச்சரியத்துடன் அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

""டேய் தடியா... உனக்கு ஸ்கை கோன் வேணுமா?''

""அய்யோ... வேணும் பப்பா.''

பருமன் அதிகரிக்கும் என்பதால், அவன் எந்த அளவுக்கு சிணுங்கினாலும் அவர் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பதில்லை. இன்று... இப்போது... என்ன ஆச்சு?

அப்பா... ஸாரி.... பப்பா... கூறியதைக் கேட்டு அவனுடைய வாயில் நீர் ஊறியது.

""நான் சொல்றத கேட்டா, உனக்கு நான் ஒண்ணில்ல... ரெண்டு கோன் வாங்கித் தர்றேன். ஞாயிற்றுக்கிழமை ட்யூஷன் முடிஞ்சு நீ நடந்து வர்றப்போ... அதோ.. நம்ம தாமுவின் துணிக்கடை இருக்குதுல்ல..,. அதன் திருப்பத்தில யாருமே இல்லாத இடத்தில நாலரை பவுன் எடை இருக்கக்கூடிய ஒரு தாலிலிச் சங்கிலிலி கிடக்கறதை நீ பார்க்கிறே. நீ அதை எடுத்துக்கிட்டு நேரா காவல் நிலையத்துக்குப் போகணும். அவங்ககிட்ட சொல்லணும்.. "காவல்துறையினரே... வழியில விழுந்த ஒரு தாலிலிச் சங்கிலிலி எனக்கு கிடைச்சது. பாவம்...

அதோட சொந்தக்காரி வீட்ல கிடந்து அழுதுகிட்டி ருப்பா. அந்த அக்காவைக் கண்டுபிடிச்சு இதை அவளிடம் கொடுக்கணும்'னு. நீ வேற எதுவுமே செய்யவேணாம். நேரா வீட்டுக்கு வா. ஃப்ரிட்ஜ்ல ரெண்டு ஸ்கை கோன் உன்னை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கும்.''

அதைக் கேட்டவுடன் சிறுவனின் வாயில் மீண்டும் நீர் ஊறியது.

தந்தை சொல்லிலிக்கொடுத்ததை அவன் அருமையாகச் செய்தான். நூற்றுக்கு நூறு மதிப்பெண்! துணிக்கடையின் சுவருக்குப் பின்னால் மறைந்து நின்றவாறு அவர் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கற்றுத்தருவதை இந்த அளவுக்கு அருமையாகப் படித்திருந்தால், அவன் வகுப்பில் முதல் மாணவனாக வந்திருப்பானே? ஆசிரியர்களைவிட நல்ல ஆசிரியர் தான்தான் என்று சிறுவனின் பப்பாவிற்குத் தோன்றியது.

ஆனால், அவன் ஒரு சிறிய தவறைச் செய்துவிட்டான்.

""காவல்துறையினரே... வழியில விழுந்த ஒரு நாலரைப் பவுன் எடை கொண்ட ஒரு தாலிலிச்சங்கிலி எனக்கு கிடைச்சது.''

அவர் சங்கிலியை வாங்கி திருப்பியும் புரட்டியும் பார்த்தார்.

""டேய்... இது நாலரைப் பவுன் எடை கொண்டதுன்னு உனக்கு எப்படித் தெரியும்? நீ ஆசாரியின் மகனா?''

அப்போது எஸ்.எச்.ஓ. தாஸன் மீசையைத் தடவியவாறு வெளியே வந்தார்.

""வா மகனே... உள்ள வந்து உட்காரு. உன்னைப்போல உண்மை பேசுறவங்கதான் நம்ம நாட்டுக்குத் தேவை. உன்னைப் போன்றவர்களுக்குத்தான் பத்மவிருது தந்து கௌரவிக்கணும்.''

அவர் ஒரு தேநீருக்கும் பருப்பு வடைக்கும் ஆர்டர் கொடுத்தார். அவனுக்கு அதில் சிறிதும் ஆர்வம் உண்டாகவில்லை. வீட்டிலிருக்கும் ஃப்ரிட்ஜில் ஃப்ரீஸரின் ஐஸ்க்ரீம் அவனுக்காகக் காத்துக் கிடக்கும்போது, யாருக்கு வேண்டும் தேநீரும் பருப்பு வடையும்? அவன் தேநீர் பருகாமல் வேகமாக ஓடினான்.

சிறுவன் சென்றவுடன் லிபிராஜ் வந்தார்.

""அய்யோ... என் மனைவியோட தாலிலிச்சங்கிலிகாணாம போய்ட்டது.''

""உன் மனைவியோட தாலிலிச்சங்கிலியை இப்போ நீ கழுத்துல கட்டிக்கிட்டு நடக்குறே?''

""அய்யோ... வங்கியில் பணயம் வச்சது... முதலையும் வட்டியையும் அடைச்சிட்டு சங்கிலியை வாங்கி பாக்கெட்ல போட்டுட்டு நடந்தேன். நம்ம தாமுவோட துணிக்கடைக்கு பக்கத்துல வந்து பார்த்தப்போ பாக்கெட்ல சங்கிலியைக் காணோம். கடந்து வந்த வழி முழுசையும் நல்லா தேடிப்பார்த்தேன். சங்கிலி இருக்கறதுக்கான ஒரு சிறிய அடையாளம்கூட தெரியல. இனி நான் அவகிட்ட என்ன சொல்லுவேன்? என்னை அடிச்சு சட்னி ஆக்கிடுவா.''

""அடிச்சு சட்னி ஆக்குறது அவளோட வேலை இல்ல... அது எங்களோட... போலீஸ்காரங்களோட வேலை...''

தாஸன் நாயர் மீசையைத் தடவினார்.

தாலிச் சங்கிலியை வாங்கிக்கொண்டு ஆறிப்போன தேநீரையும் பருப்பு வடையையும் சாப்பிட்டுவிட்டு லிலிபிராஜ் வீட்டிற்குச் சென்றார்.

இரண்டு நாட்கள் கடந்தபிறகு, பிரபல முன்னணிப் பத்திரிகைகளில், வழியில் விழுந்துகிடந்த நாலரை பவுன் எடை கொண்ட தாலிச்சங்கிலிலியை காவல் நிலையத்தில் கொண்டு வந்து கொடுத்த நேர்மை குணம் கொண்ட எட்டு வயதுக்காரனின் வண்ணப் புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்தால், சிறுவனின் வீங்கிய முகத்தில் ஐஸ்க்ரீமின் அடையாளங்களைப் பார்க்கலாம்.

""காலைலயிருந்து ஆளுங்க கூப்பிடோ கூப்பிடுன்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க சசீந்திரா. எங்கிருந்தெல்லாம் கூப்பிடுறாங்க. என் கடவுளே... என் அலைபேசியில மட்டுமல்ல. ரஜீலாவோட அலைபேசி யிலும் கூப்பிடோ கூப்பிடுன்னு கூப்பிட்டாங்க. இதுவரை கொஞ்சம் பாத்ரூமுக்குக்கூட போகல... பல் துலக்கல... இப்போ நான் என்ன செய்வேன்? கடைக்குப் போக வேணாமா? குளிக்காமலோ சவரம் செய்யாமலோ எப்படி போகமுடியும்? பையனோட புகைப்படம் பிரசுரமாகி வந்தது புலிலிவாலாகிட்டது.''

சிறுவனின் பப்பா ஜனார்த்தனன், ஸனீஷின் தந்தை சசீந்திரனிடம் கூறினார்.

ஒரு மாதம் கடந்த பிறகும், லிபிராஜ் தாலிச்சங்கிலியைத் திரும்பத் தரவில்லை. ஒருநாள் அவர் கூறினார்... ""சங்கிலியை என் மனைவி கழுத்தில போட்டுக்கிட்டு எடச்சேரியிலிருக்கிற அவளோட அக்கா மகளோட திருமணத்திற்குப் போயிருக்கிறா. அவ வந்தபிறகு நான் அதைக் கொண்டுவந்து தர்றேன்: சரியா...

ஜனார்த்தனா?'' என்று. பிறகு ஒரு நாள் அவர் கூறியதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? ""என் ஜனார்த்

தனா... நீ எதுவும் நினைச்சுக்கக்கூடாது. நான் அதை வங்கியில பணயம் வச்சிட்டேன். கொஞ்சம் பணம் தேவைப்பட்டது.'' இப்படி ஒவ்வொன்றாகக் கூறி, இரண்டு மாதங்கள் கடந்தோடிவிட்டன.

""என்னால வெளியே இறங்கி நடக்க முடியல.

அலுவலகத்தில எல்லாரும் கேக்குறாங்க- கழுத்துல இருந்த தாலி எங்கே போச்சுன்னு. இனி அலுவலகத் துக்குப் போறதுக்கு என்னால முடியாது.''

ரஜீலா அழுதாள். அது முதலைக் கண்ணீரல்ல. நெஞ்சு உருகிய கண்ணீராக இருந்தது. கணவர் உயிருடன் இருக்கும்போது, கழுத்தில் தாலிலி இல்லாமல் நடக்கக்கூடிய சூழல் வரும்போது, எப்படிப்பட்ட ஒரு பெண்ணின் நெஞ்சும் உருகாமல் இருக்குமா?

நிலைமை இப்படி இருக்கும்போது, ஒருநாள் அதோ... லிபிராஜின் ஒரு அலைபேசி அழைப்பு: ""ரஜீலா... வா... வந்து உன் தாலிலியை வாங்கிக்கோ.''

அதைக் கேட்டதுதான் தாமதம்- அவள் அலுவலகத் திலிருந்து வெளியே வேகமாகப் பாய்ந்து ஆட்டோவைப் பிடித்து, லிபிராஜின் வீட்டிற்கு ஓடிச்சென்றாள்.

அவளுடைய மனைவி அப்போது அங்கில்லை.

""இதோ... தாலி...'' அவர் சங்கிலியை அவளுடைய முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து, பெண்டுலத்தைப் போல ஆட்டினார். அவள் அதை கண்கள் நிறைய பார்த்தாள். அவருடைய கையிலிருந்து சங்கிலியைத் தட்டிப் பறித்து அதற்கு ஒரு முத்தம் கொடுக்கவேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அவளுடைய கழுத்திலிருந்து சென்று இரண்டரை மாதங்களாகி விட்டன.

அவள் ஆர்வத்துடன் சங்கிலிக்காக கையை நீட்டினாள்.

""இங்க... பக்கத்துல வா.''

அவள் எட்டு வைத்து அவரை நோக்கி நடந்தாள்.

""இன்னும் வா.''

அவள் மேலும் சற்று காலை முன்னோக்கி வைத்தாள்.

""இன்னும் வா.''

அவருடைய மூச்சின் வாசனையை அவள் உணர்ந்தாள்.

""இன்னும்...''

__________________

மொழிபெயர்ப்பாளரின் உரை

வணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று முத்துக்கு நிகரான மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். மூன்றும் மிகவும் மாறுபட்ட கதைக் கருக்களைக் கொண்டவை.

"மகள்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த எழுத்தாள ரான டி. பத்மநாபன். ஒரு பூனையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.

பிற உயிர்கள்மீது எந்த அளவுக்கு அளவற்ற பாசத்தை வைத்திருக் கிறார் பத்மநாபன் என்பதை கதையை முழுமையாக வாசித்து முடிக்கும்போது நம்மால் உணரமுடிகிறது. நாய்களுடன் தோழியாகப் பழகும் பூனை, இறுதியில் மூன்று குட்டிகளுடன் வந்து இன்ப அதிர்ச்சியைத் தருவதும், மன சந்தோஷத்துடன் கண்களை மூடிக்கொண்டு படுத்துக்கொண்டே சிரிப்பதும், பூனையைப் பற்றி கணவனும் மனைவியும் முழுமையான அன்புடன் உரையாடுவதும்... அடடா! எப்படிப்பட்ட கதை! மலையாளத்தில் இந்தக் கதையை வாசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு என் கண்களில் நீர் அரும்பியதென்னவோ உண்மை! அதுதான் இந்தக் கதையின் வெற்றிக்கு அடையாளம்.

"ஊசிமுனை' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற சாதனை எழுத்தாளரான உறூப் என்ற பி.ஸி. குட்டிகிருஷ்ணன். ஒரு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறும் ஒரு நோயாளியையும், ஒரு நர்ஸையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. அந்த நோயாளி மனிதரின் வாழ்க்கைக்குப் பின்னால் இப்படியொரு சோகம் நிறைந்த காதல் கதையா? கதையை வாசிக்கும்போது, நம் மனதில் அளவற்ற கவலை உண்டாவதைத் தவிர்க்கமுடியவில்லை. கதையின் இறுதிப்பகுதி கல் மனதையும் நெகிழவைக்கும். நர்ஸ் கதாபாத்திரமும் உயிரோட்டம் நிறைந்தது.

"பெற்றோர்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நவீன மலையாள இலக்கியத்தின் நட்சத்திரமான எம். முகுந்தன். வித்தியாசமான கதைக் கரு. அதை தனக்கே உரிய தனித்துவ உத்தியிலும், நடையிலும் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார் முகுந்தன். கதையின் இறுதிப் பகுதியில் தாலிச் சங்கிலியைத் தருவதாகக் கூறி, தன் வீட்டிற்கு வரவழைத்த ரஜிலாவிடம், லிபிராஜ் நடந்துகொள்ளும் முறை... உண்மையிலேயே நாம் எதிர்பார்த்திராதது! அதிர்ச்சியைத் தரக்கூடியது! கதையின் அந்தத் திருப்பம்தான்- முகுந்தனின் முத்திரை!

எனக்குப் பிடித்த இந்த மூன்று கதைகளும் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு நன்றி!

அன்புடன்,

சுரா