அச்சுக் கலை வருவதற்கு முன்பாகவே, அந்தக் கலை வளர்வதற்கு முன்பாகவே தமிழ் மொழியின் ஊடகமாகச் செயல்பட்டவர்கள் புலவர்கள்.
அவர்கள்தான் அன்றைய செய்தியாளர்கள். அதுவும் படைப்புத் திறன்கொண்ட செய்தியாளர்கள்.
அரசனின் ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதை மக்களிடம் பதிவு செய்யக்கூடியவர்களாக, மன்னருடைய அவையிலேயே அதைப்பற்றி எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக இருந்தவர்கள் புலவர்கள்.
"இன்றைய செய்தி நாளைய வரலாறு' என்று முரசொலியின் முகப்பில் அச்சிட்டிருப்பார் முத்தமிழறிஞர் கலைஞர். அதன்படி பார்த்தால், நேற்றைய செய்தி இன்றைய வரலாறு. தமிழ்ப்புலவர்கள் பாடிவைத்த செய்யுள்கள் அன்றைய நாட்டு நடப்பின் வரலாறுகள். தமிழ்மொழிக்கு இருந்த இன்னொரு சிறப்பு, அன்றைய செய்தியாளர்களான புலவர்களில் ஆண் புலவர்களும் இருந்தார்கள். பெண் புலவர்களும் இருந்தார்கள். அப்போதே சமத்துவத்தைக் கொண்ட இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் சொல்ல முடியும்.
நம்முடைய வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், புலவர்களின் இலக்கியங்களும், மன்னர் காலத்துச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் வரலாற்றின் முக்கிய தருணங்களைப் பதிவு செய்து வைத்துள்ளன.
அச்சுக்கலை தோன்றிய பிறகு 19-ஆம் நூற்றாண் டில் ஊடகத்தின் தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கினர். அப்போது தமிழ்நாட்டு மக்கள் தொகையில் படித்தவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அளவில்தான் இருக்கும். ஆனாலும், அன்றைய அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளால் நாளிதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றின் தேவை இருந்தது.
இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் குரலாக "சுதேசமித்திரன்', "தி இந்து' போன்ற இதழ்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒலிக்கத் தொடங்கின. அதுபோல சமுதாயத்தின் குரலாக அயோத்திதாச பண்டிதரின் "ஒரு பைசா தமிழன்', "திராவிட', "பாண்டியன்', "பறையன்' உள்ளிட்ட இதழ்கள் ஒலித்தன. அரசியல் தளத்தில் நிலவிய அடிமைத்தனத்தையும், சமுதாய தளத்தில் இருந்த ஒடுக்குமுறைகளையும் பத்திரிகைகள் வெளிப்படுத்தத் தொடங்கின. அதனை கருத்தரங்குகளில், பொதுக்கூட்டங்களில் தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் பேசினார்கள். பாமர மக்களை விழிப்படையச் செய்தனர்.
பத்திரிகையில் ஒரு செய்தி வந்தால் அது நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்ற எண்ணம் மக்களின் மனதில் ஏற்பட்டது. அதன் விளைவாக, சுதந்திரப் போராட்டத்திலும், சமூக விடுதலைப் போராட்டத்திலும் படிக்கத் தெரியாத மக்களும் பங்கேற்கத் தொடங்கினர். படிப்பதற்கான ஆர்வத்தையும் பெற்றனர்.
மெல்லமெல்ல படித்தோரின் எண்ணிக்கை உயர்ந்ததில் பத்திரிகைகளின் பங்கு முக்கியமானது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுத்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியும், மக்களிடம் படிக்கும் பழக்கம் வளரத்தொடங்கியிருந்ததும், அரசியல்- சமுதாயச் சூழல்களும் தமிழ் ஊடகத்துறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் திலகர், கோகலே ஆகியோரைத் தொடர்ந்து காந்தியின் பங்களிப்பு முக்கியமானது.
நாடறிந்த தலைவராக காந்தி வளர்ந்திருந்தார். அவருடைய சொற்களுக்கு கோடிக்கணக்கான காங்கிரசார் கட்டுப்பட்டிருந்தனர்.
காந்தியின் வாழ்வில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் உண்டு. அவர் முதன்முதலில் இடுப்பில் வேட்டியும் மேலே துண்டும் அணிந்த நாம் பார்க்கும் காந்தியாக மாறியது மதுரையில்தான்.
சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமுதாய இயக்கங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருவதையும் அது ஏற்படுத்தியுள்ள மாற்றத் தையும் நேரில் அனுபவித்தார் காந்தி. அதனால் அவர் நடத்திய "யங் இந்தியா', "ஹரிஜன்' போன்ற இதழ்களில் தமிழ்நாட்டின் நிலவரம் குறித்து பலமுறை எழுதியிருக்கிறார். அவற்றை "தேசாபிமானி', "சுதேசமித்திரன்', "நவசக்தி' போன்ற ஏடுகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டன. சுதந்திரப் போராட்டத்தில் மக்களை அணி திரட்டுவதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்கு இருந்தது. அதில், மகாகவி பாரதியாரின் எழுத்து நெருப்புப் பொறியாக இருந்தது. பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள் ஆகியவை அவருடைய "இந்தியா' பத்திரிகையில் வெளியாகின. அது மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியான காலகட்டத்தில், அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் வளர்ந்து வந்தன. நீதிக்கட்சியின் உண்மையான பெயர் தென்னிந்திய நல உரிமை சங்கம். அந்த அமைப்பினர், ஆங்கிலத்தில் "ஜஸ்டிஸ்' என்ற பத்திரிகையை நடத்தியதால், அந்தப் பத்திரிகையின் பெயரால் அதனை "ஜஸ்டிஸ் பார்ட்டி' என்று பலரும் அழைத்தனர். அது அப்படியே தமிழில் "நீதிக் கட்சி' என்றாகிவிட்டது. ஊடகத்தின் வலிமை ஓர் இயக்கத்தின் பெயரையே மாற்றிய வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு.
அந்த நீதிக்கட்சி சார்பில் தமிழில் "திராவிடன்' என்ற பத்திரிகை வெளியானது. ஈரோட்டிலிருந்து பெரியார் "குடிஅரசு', "புரட்சி', "விடுதலை' ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். இவை சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி, சமூகநீதியையும் பகுத்தறிவையும் பரப்பின.
1920களிலிருந்து 50கள் வரை விடுதலைப்போராட்ட உணர்ச்சியையும், சமுதாய உணர்ச்சியையும் மக்களிடம் தூண்டக் கூடிய வகையிலே பல பத்திரிகைகள் வெளியாகின. திரு.வி.க.வின் "நவசக்தி', வரதராஜூலு நாயுடுவின் "தமிழ்நாடு' ஆகியவை காந்தியின் குரலாக ஒலித்தன. சமுதாயத் தளத்தில் அண்ணாவின் "திராவிட நாடு', புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் "குயில்', கலைஞரின் "முரசொலி' போன்ற இதழ்கள் வெளியாகி சிந்தனைப் பொறிகளைத் தூவின.
இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் வளர்ந்து வந்ததால் தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் இருந்தது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் எழுத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாகத் திகழ்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் "ஜனசக்தி', "தாமரை' போன்ற ஏடுகள் பொதுவுடைமைச் சிந்தனையை உழைக்கும் வர்க்கத்திடம் கொண்டு சேர்த்தன.
இதே காலகட்டத்தில், எந்த இயக்கத்தையும் சாராமல் பொதுவாக வெளியான பத்திரிகைகளும் உண்டு. குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் "ஆனந்தவிகடன்', "பிரசன்ட விகடன்', "கல்கி' உள்ளிட்ட இதழ்களைச் சொல்லலாம். இவற்றில் மக்களின் ரசனைக் கேற்ற கதைகள், துணுக்குகள், கட்டுரைகள், திரைப்படச் செய்திகள் ஆகியவை வெளியான போதும், அரசியல் தளத்தில் தங்களுடைய பார்வையையும் பதிவு செய்யத் தவறவில்லை.
இந்தியா விடுதலை அடைந்தபிறகு, மக்களின் எதிர்பார்ப்புகளும் மனப்போக்குகளும் இயல்பாக மாற்றம்பெறத் தொடங்கின. அத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கமும் திராவிட இயக்கமும் காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் போட்டியாக வளரத்தொடங்கின. இந்த அரசியல் போட்டியிலும் அச்சு ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது.
திராவிட இயக்கத்தலைவர்களில் பலரும் பத்திரிகை நடத்தினர். பெரியாரின் திராவிடர் கழகமும், அதிலிருந்து பிரிந்து வந்து அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் தங்களின் கொள்கைப் பரப்பு சாதனங்களாக பொதுக்கூட்ட மேடைகள், நாடக மேடைகள், திரைப்படங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தின. ஊர் ஊருக்குப் படிப்பகங்கள் தொடங்கப்பட்டன. அங்கே திராவிட இயக்க இதழ்களுடன், முற்போக்கு சிந்தனையை வளர்க்கும் புத்தகங்கள், "தினத்தந்தி', "தினமணி' உள்ளிட்ட நாளேடுகள், "விகடன்', "குமுதம்', "கல்கண்டு', "ராணி' போன்ற வார இதழ்கள் ஆகியவையும் அந்தப் படிப்பகங்களில் இருக்கும். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அந்த வழியே போகிறவர்கள் நிழலுக்கு ஒதுங்கும்போதும், அங்குள்ள தண்ணீர்ப் பானையில் நீர் எடுத்து தாகம் தணித்துக் கொள்ளும்போதும் பத்திரிகைகளைப் படிப்பது வழக்கமானது.
இது தமிழ்நாட்டில் இயல்பாக நடந்த ஓர் அறிவுப்புரட்சி. ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும், எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்களும் இத்தகைய படிப்பகங்களுக்கு வருவதும், பத்திரிகைகளைப் படிப்பதும் இயல்பானதாக மாறியது. திராவிட இயக்கங்கள் மட்டுமின்றி, இடதுசாரி இயக்கங்கள் சார்பிலும் படிப்பகங்கள் அமைக்கப்பட்டன. காங்கிரஸ் இயக்கத்தின் சார்பிலும், பொதுநலன் கருதியும் உருவான படிப்பகங்கள்-நூலகங்கள் ஆகியவை 1950களிலும் 1960களிலும் வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் பெருக்கியதுடன், அவர்களை அரசியல்மயப்படுத்துவதிலும் மிக முக்கிய பங்காற்றியது. படிப்பகங்கள் போலவே முடிதிருத்தும் நிலையங்கள், வாடகை சைக்கிள் கடைகள் போன்ற இடங்களிலும் நாளிதழ் படிப்பதும், நாட்டு நடப்பை விவாதிப்பதும் மக்களின் அன்றாட வழக்கமானது.
அதன் தாக்கத்தையும் விளைவையும் 1965-ல் நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் வெளிப்படுத்தியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காத்திட வேண்டும் என்று களம் கண்டு போராடி, இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றம் பெறச் செய்ததில் பத்திரிகைகளின் பங்கு முக்கியமானது.
இந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் உண்டு. தீக்குளித்தும் விஷம் குடித்தும் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் உண்டு. எனினும், அரசாங்கத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர், "முரசொலி' நாளேட்டின் நிறுவனர் கலைஞர், இன்னொருவர் "முரசொலி' நாளேட்டின் ஆசிரியர் மாறன். இதிலிருந்தே பத்திரிகை ஏற்படுத்திய விளைவை புரிந்துகொள்ள முடியும்.
1970களில் இந்திய அரசியலிலும் தமிழ்நாட்டு அரசியல் சமுதாயச் சூழலிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சினிமாவின் தாக்கம் அரசியலிலும் சமுதாயத்திலும் அதிகமாக இருந்தது. அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பரவலாகின. இயக்கம் சார்ந்த பத்திரிகைகள், அன்றாடச் செய்திகளை வெளியிடும் நாளிதழ்கள் இவை மட்டும் போதுமானவை யாக இல்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பத்திரிகை தணிக்கை முறை என்பது கட்சிக் கண்ணோட்டத்துடன் பயன் படுத்தப்பட்டது. அதனால் ஜனநாயகத்தின் குரலைப் பாதுகாக்க வேண்டிய தேவை பத்திரிகைகளுக்கு ஏற்பட்டது.
அத்துடன், வெறும் செய்திகளை மட்டும் வழங்காமல், அந்த செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை வழங்க வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டது. "துக்ளக்' போன்ற பத்திரிகைகள் அதன் ஆசிரியரின் பார்வையிலான அரசியல் கண்ணோட்டத்தை வெளிப் படுத்தின. 1980களின் நடுப்பகுதியில் புலனாய்வு இதழ்கள் வெளியாகத் தொடங்கின. "விசிட்டர்', "ஜூனியர் விகடன்', "தராசு' எனத்தொடர்ந்த இந்தப் புலனாய்வு இதழ்களின் வரிசையில் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் "நக்கீரன்' பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது.
ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கு அஞ்சாமல், மக்களிடம் உண்மையைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதே நக்கீரனின் இலட்சியம். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், "நக்கீரன்' என்ற பெயரை வைத்துவிட்டோம். "நக்கீரனைப் போலவே வாழ்வோம்' என்பதுதான் எங்களின் வாழ்க்கையாகவே மாறி விட்டது.
ஜெயலலிதா தலைமை யேற்ற நேரத்தில் அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த உள்கட்சிப் பூசல் முதல், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்கள் வரை எல்லாத் தகவல்களையும் நக்கீரன் இதழ்களைப் புரட்டினால் கிடைக்கும். அதுபோலவே தி.மு.க. தலைவர் கலைஞருக்கு இரண்டு ரேஷன் கார்டு என்பது முதல் மதுரை "தினகரன்' பத்திரிகை அலுவலகம் எரிப்பு வரையிலான அத்தனை செய்திகளையும் நக்கீரன் பதிவு செய்துள்ளது.
நக்கீரன் அம்பலப்படுத்திய ஆட்சியாளர்களின் ஊழல்கள் ஏராளம். இன்றுவரை விவாதிக்கப்படும் கொடநாடு பற்றி படத்துடன் முதலில் எழுதியது நக்கீரன்தான். ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகாவின் ஆசிட் வீசப்பட்ட கோர முகம், அதற்கு காரணமான பாம்பே ரவுடி, பல்வேறு முறைகேடுகள் அனைத்தும் நக்கீரனில் வெளியாகின.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.ப.சிதம்பரம், திருச்சி விமானநிலையத்தில் அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்ட புகைப்படத்தை நாம்தான் வெளியிட்டோம். ராஜீவ் கொலை -சர்வதேச பின்னணியை வெளிக்கொண்டு வந்ததும் நக்கீரன்தான். இப்பொழுது பரபரப்பாகப் பேசப்படும் சாத்தான்குளம் காவல்நிலைய கொலை, நக்கீரனால்தான் வெளிச்சத்துக்கு வந்தது. காசி என்பவனின் காம லீலைகளை வெளிக்கொண்டு வந்து, அவனை ஆயுள் சிறையில் தள்ளியதும் நக்கீரனே.
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை சாமியார்களின் லீலைகள் அம்பலப்படுத்தப் பட்டன. இந்தியத் தலைநகர் டெல்லியா, காஞ்சியா என்கிற அளவுக்கு அதிகார மையமாக இருந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எத்தகைய படுபாதகச் செயலில் ஈடுபட்டார் என்பதை வெளிக்கொண்டு வந்ததும் நக்கீரன்தான்.
35 ஆண்டுகால புலனாய்வு இதழியல் பயணத்தில் நக்கீரன் வெளிக்கொண்டு வந்தது ஏராளம் என்றாலும், "நக்கீரன்' என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது வீரப்பன்தான். தமிழ்நாடு கர்நாடகா ஆகிய இரு மாநில அதிரடிப்படைக்கும், இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளே நுழைந்தும் சிக்காமல் சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பன் உண்மையில் யார், அவன் எப்படி இருப்பான், அவனைப் பிடிக்க கோடிக்கணக்கில் அரசுகள் செலவு செய்வது ஏன், அவன் இருக்கும் காட்டுப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் இருதரப்பிலும் துன்பப்படுவது ஏன் என்பதையெல்லாம் நக்கீரன் தனக்குத்தானே கேள்விகளாக எழுப்பியது. அதற்கான விடை தேடி மேற்கொண்ட கடுமையான காட்டுப் பயணம்தான் வீரப்பனை மக்களிடம் அடையாளம் காட்டியது.
வீரப்பனால் கர்நாடக வனத்துறையினரும் நடிகர் ராஜ்குமாரும் கடத்தப்பட்டபோது, இரு மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ தூதர் என்ற அங்கீகாரம் நக்கீரனுக்கு கிடைத்த பெருமை. இரு மாநில மக்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், எவ்வித உயிர்ப்பலியுமின்றி மீட்பு முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்தது நக்கீரன். அதுமட்டுமல்ல, நக்கீரன் மேற்கொண்ட சட்டப்பூர்வமான முயற்சிகளால் வீரப்பன் காட்டுப் பகுதி மலைவாழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் படி முடிவுக்கு வந்தன. நீதிபதி சதாசிவா கமிஷன் இது குறித்து விசாரித்து, நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.
புலனாய்வு இதழியல் என்பது வெறும் விமர்சனமல்ல, ஆக்கப்பூர்வமான செயல்பாட்டு வடிவம். நக்கீரனில் மரண தண்டனைக் கைதி ஆட்டோ சங்கர் மரண வாக்குமூலம் என்ற பெயரில் தொடர் எழுதியபோது அதற்கு காவல்துறை தடை விதித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று நக்கீரன் பெற்றுத் தந்த தீர்ப்புதான் இன்றளவும் ஊடக சுதந்திரத்திற்கான பாடத்திட்டமாக இந்தியாவில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு அமைந்துள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழகம் "க்ளோபல் ப்ரீடம் ஆப் எக்ஸ்பிரஷன்' வலைத்தளத்தில் நக்கீரன், உச்சநீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து நக்கீரன் மேற்கொண்ட சட்டப்போராட்டங்கள் ஏராளம். அதற்காக நக்கீரன் கொடுத்த விலையும் அதிகம். பொடா சட்டத்தின் கீழ் 252 நாட்கள் நக்கீரன் ஆசிரியரான நான் சிறைப்பட்டேன். நக்கீரன் இணையாசிரியர், நிருபர்கள் எனப்பலரும் பல பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டனர். அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் அத்துமீறல்கள் நடைபெற்றன. நிருபர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. சிறைக்கொடுமையால் அச்சகர் அய்யா கணேசன் உயிர் பறிபோனது.
குடும்பத்திலும் பல இழப்புகள். இவற்றையெல்லாம் கடந்து, நக்கீரனாக வாழ்வதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
வாழ்க்கை முழுக்க போராட்டங் களையே சந்தித்துவரும் நக்கீரனுக்கு, சில ஆறுதல் ஒத்தடங்களும் கிடைக் கத்தான் செய்தன. அவற்றை நக்கீரனின் புலனாய்வுகளுக்குக் கிடைத்த வெகுமதி யாகவே பார்க்கிறேன்.
குறிப்பாக, 1997-ஆம் வருடம் சந்தனக்கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்டு வந்ததற்காக, இரு மாநில அரசுகளும் எனக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தன. அதே வருடம், நீதியரசர் கிருஷ்ணய்யர் விருதினை, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் மூலம் எனக்கு வழங்கினர். ஜேசிஸ் அமைப்பின் சார்பாக 1997-ஆம் வருடத்தின் சிறந்த 10 இந்திய இளைஞர்களில் ஒருவ னாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதேபோல் "இந்தியா டுடே' பத்திரிகை தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்வாக்கு படைத்த 25 பேர்களில் 10-ஆவது இடத்தில் என்னையும் தேர்வு செய்திருந்தனர். என் இதழியல் பணிகளைப் பாராட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், பெரியார் விருதை 2005-ல் வழங்கினார். அதுபோல், தமிழக அரசின் 2009-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், 15-1-2010 அன்று எனக்கு வழங்கி, என்னைச் சிறப்பித்தார்.
இதேபோல் சர்வதேச தொண்டு நிறுவனமான "யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்', ஆண்டுதோறும் "அமைதிக்கான தூதர்' விருதுகளை வழங்கி வருகிறது. லண்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, என்னை லண்டனுக்கே அழைத்து, எனக்கு இந்த விருதை வழங்கி, என் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தது.
தகவல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் இன்று அச்சு ஊடகங்களைவிட காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் அதிகளவில் மக்களிடம் சென்று சேர்கின்றன. முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஊடகங்களைக் கடந்து, செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஊடகங்களாக, ஊடகர்களாக ஆகிவிடலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால், அது ஏமாற்றமாக ஆகிவிடக்கூடாது.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை நக்கீரன் அச்சிலும் வெளியிட்டது. சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்தது. படித்தவர்களைவிட பார்த்தவர்கள் பல மடங்கு அதிகம். அதன் தாக்கமும் அதிகம். ஆனால், விளைவு என்கிறபோது நக்கீரனுக்கும் பயன் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுவரை நீதி இல்லை.
எல்லாவற்றுக்கும் செல்ஃபி எடுத்து நிரூபிக்கும் காலம் இது. அதனால், நக்கீரனும் யூலிடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் செயல்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையினருக்கு செய்திகளையும் அதன் பின்னணியையும் கொண்டு சேர்த்து வருகிறது. அங்கீகாரம் பெற்ற ஊடகங்களைவிட, தனிப்பட்ட முறையில் கவரக்கூடியவர்களே சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
சப்ஸ்கிரைபர்ஸ் மில்லியனைத் தொட்டு, லைக்கும் ஷேரும் அதிகமானால் அவர்கள் ஹீரோக்களாகிவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் பேசுவதெல்லாம் பஞ்ச் டயலாக் ஆகிவிடுகிறது. உண்மைத்தன்மை என்பது அச்சு ஊடகத்தில் இருந்த அளவுக்கு காட்சி ஊடகத்தில் வெளிப்படுவதில்லை. அதுமட்டுமின்றி 24 மணிநேரமும் செய்திகளைத் தந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகி இருப்பதால், எல்லாமும் செய்தியாகிவிடுகிறது. அதிலும் சாதா நியூஸ் என்று எதுவும் கிடையாது. எல்லாமே பிரேக்கிங் நியூஸ்தான்.
செய்தியும் அதன் பின்னணியும் காலத்திற்கேற்ற ஊடகங்களில் வெளிப்படுவது இயற்கை. அது எப்போதும் நம்பகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இன்று சொல்வதை நாளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைப்பது செய்தி அல்ல. அது வதந்தி. இன்றைய செய்தி- நாளைய வரலாறு என்பதே ஊடக அறம்.