நீண்டகால அலைச்சல்களுக்குப்பிறகு நான் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தேன்.
லோகமான்ய திலக்கின் 2- டயர் ஏ.ஸி. கம்பார்ட்மென்டில் ஆட்கள் மிகவும் குறைவா கவே இருந்தார்கள். அதனால் பெர்த்தில் ஏறிப் படுத்தவுடனே நான் தூங்கியும் விட்டேன். பின்பு ஏதோவொரு பெரிய ஸ்டேஷனை அடைந்த போது, நான் அதிர்ந்து எழுந்தேன். வண்டியில் ஏறுபவர்களின்...
இறங்குபவர்களின் உரத்த சத்தம்... உணவுப் பொருட்கள் விற்பவர்களின் சத்தமான கூக்குரல்கள்...
போர்ட்டர்களின் சலசலப்புகள்...
அனைத்தும் தாங்கமுடியாத அளவுக்கு இருந்தன. எனக்கு முன்னா லிருந்த பெர்த்திற்கும் ஆட்கள் வந்திருந்தார்கள்.
இளைஞனான ஒரு கணவனும் அவனுடைய மனைவியும் இரண்டு குழந்தைகளும்... அவர்களும் பேசிக்கொண்டிருந்தார் கள். ஆனால், அது மிகவும் தாழ்ந்த குரலில் இருந்தது. யாருக்கும் எந்தவொரு தொந்தரவும் உண்டாகாத வகையில்...
லக்கேஜ்களை நகர்த்தும்போதுகூட சத்தம் உண்டாகாமலிருப்பதில் அவர்கள் கவனமாக இருப்பதை நான் பார்த்தேன்.
வண்டி நகர்ந்தபோது... அதற்குப்பிறகு நான் படுக்கவில்லை. எனக்கு முன்னாலிருந்த சிறிய குடும்பத்தின் உரையாடல்களையும் செயல்களையும் கவனித்துக்கொண்டும், சில நேரங்களில் உரையாடல்களில் பங்கெடுத்துக்கொண்டும் அங்கிருந்த பெர்த்தில் இருந்தேன்.
முதலில் எனக்கு ஒருவகையான நம்பிக்கையின்மை இருந்தது. ஆட்கள் இப்படி இருப்பார்களா? பிறகு... ஆச்சரியம்! இறுதியில் இனம்புரியாத சந்தோஷமும்... இப்படியும் ஆட்கள் வேண்டுமல்லவா? இவர்களைத்தானே பூமியின் உப்பென்று கூறுகிறார் கள்!
அந்த தந்தைக்கும் தாய்க்கும் பிள்ளைகளுக்கு மிடையே இருக்கக்கூடிய ஒழுங்கு, செயலில் தெரியும் நெருக்கம், தாளப் பொருத்தம்- அனைத்துமே சிறிதும் நம்பமுடியாத அளவுக்கு இருந்தன. ஆனால், மிகவும் சந்தோஷம் உண்டாகக் கூடியதாகவும், அசாதாரணமாகத் தோன்றக் கூடியதாகவுமிருந்த அந்த காட்சியில் நான் கரைந்து... கரைந்து இறுதியில் முற்றிலும் இல்லாமலே ஆகிவிட்டேன்.
குழந்தைகள் இருவரும் மிகவும் அழகானவர்களாக இருந்தார்கள். அவர்களின் தந்தையையும் தாயையும் போலவே... அண்ணனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருப்பதைப்போல தோன்றியது. தங்கைக்கு ஐந்து வயதும்... மிகுந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் உள்ளவர்களாக இருந்தாலும், அதே அளவுக்கு அடக்ககுணம் கொண்டவர்கள் அவர்கள் என்பதை மிகவும் சீக்கிரமே நான் தெரிந்துகொண்டேன்.
இடைவெளியின் வழியாக உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு வரும் "வெண்டர்கள்' பக்கம் அந்த குழந்தைகள் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. குழந்தைகளின் ஆடைகளிலும் எந்தவொரு ஆடம்பரமும் இல்லை.
தாய்- தந்தை ஆகியோரின் ஆடைகளும் இதேபோலத்தான் இருந்தன. தாய்க்கு குறிப்பிட்டுக் கூறுகிறமாதிரி நகைகள் எதுவுமில்லை. நகைகள் என்று கூறுவதற்கு... மொத்தம் இருந்தவை ஒரு தாலிக் கொடியும் ஒரு வளையலும் ஒரு கைகடிகாரமும்! பிறகு... பெரிய பகட்டுகள் எதுவுமில்லாத ஒரு கம்மலும்...
அவளுக்கு தங்கத்தாலான கொலுசுகள் இருந்தால் எப்படி இருக்குமென்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.
இல்லாவிட்டால்... வைரம் பதிக்கப்பட்ட ஒரு மூக்குத்தி... எந்த அளவுக்கு அழகான ஒரு காட்சியாக இருக்குமது!
"ஜூபலாலி'யிலிருக்கும் ஒரு ஜப்பானிய நிறுவனத் தில் பணியாற்றும் கெமிக்கல் எஞ்ஜினியரின் இளம்வயதில் உள்ளவளும் அழகியுமான மனைவி, துபாயில் கணவனுடனும் குழந்தைகளுடனும் சேர்ந்து வாழ்கிறாள்.
இவற்றையெல்லாம் வாங்கி அணிவதற்கு வசதியில்லை என்று யாராலும் கூறமுடியாது. பிறகு... வீட்டிலும் அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பதை அவர்களுடன் நடத்திய உரையாடலி-ருந்து என்னால் உணர முடிந்தது. எனினும்...
ஒருவகையில் கூறுவதாக இருந்தால்... பொற்குடத்திற்கு எதற்கு பொட்டு? நான் இதையும் கவனித்தேன். அவள் புருவத்தை "ஷேவ்' செய்திருக்கவில்லை. உதடுகளில் சாயம் தேய்த்திருக்கவில்லை. நகங்களுக்கு... கையிலும்... காலிலும்... நிறம் ஏற்றவுமில்லை. அவர்களுடைய குழந்தைகளின் பெயர்களும் மிகவும் பழமையானவையாக இருந்தன. கண்ணனும் பாருவும்...
நான் கேட்டேன்: "இவை ரொம்ப பழைய பெயர்களாச்சே?
இன்றைய காலத்தில இப்படிப்பட்ட பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பாங்களா?
இவங்க வளர்ந்து பெரியவங்களாகறப்போ சில நேரங்கள்ல...''
தந்தையும் தாயும் சிரித்தார்கள். என் சந்தேகத்திற்கு பதில் கூறியது தாய்தான். கணவனை நோக்கி சுட்டிக்காட்டியவாறு அவள் கூறினாள்:
"இவரோட அப்பாவோட அம்மா பேரு பார்வதி.
நாங்க "பாரு'ன்னு கூப்பிடறோம்.''
நான் கூறினேன்: "பார்வதி... நல்ல பேராச்சே!''
முன்பு எப்போதோ கேட்டு மறந்துவிட்ட... எனினும், எனக்கு மிகவும் விருப்பமான ஒரு புத்தகத்தின் வரிகள் அப்போது மனதிற்குள் கடந்துவந்தன.
"பாஹிபர்வத நந்தினி...'
பாருவின் தாய் கேட்டாள்: "ஸ்வாதித் திருநாள்..?''
நான் கூறினேன்: "சரியா தெரியல... அப்படி இருக்கறதுக்கு வாய்ப்பிருக்கு...''
வெளியே இருள் பரவ ஆரம்பித்திருந்தது.
சிறிது நேர அமைதிக்குப்பிறகு நான் கேட்டேன்: "இசை கத்திருக்கீங்களா?''
அவள் மறுப்பதைப்போல தலையை ஆட்டினாள்.
"ஏய்...'' கணவன் அப்போது உடனடியாகக் கூறினான்: "பொய்... படிச்சிருக்கா. அருமையா பாடவும் செய்வா.''
அப்போது கண்ணனும் உறுதியான குரலில் கூறினான்:
"அம்மா பாடுவாங்க.''
அவள் மீண்டும் மறுத்தாள்.
"ஏய்...''
அப்போது அவளின் முகம் பிரகாசமாக இருந்தது.
நாங்கள் எல்லாரும் சிரித்தோம்.
வண்டியின் வேகம் குறைந்துகொண்டு வந்தது.
தண்டவாளத்தின் பலக்குறைவு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.
நான் கூறினேன்: "எட்டரை மணிக்குப் போய்ச்சேர வேண்டியது... இப்போதே எட்டு ஆயிடுச்சு. இப்படி போனா இனி எப்போ..?''
அப்போது கண்ணனின் தந்தை வெறுப்புடன் கூறினான்: "காஞ்ஞாங்காட்டை பத்தரை மணிக்கு அடையணும். இன்னிக்கு பன்னிரெண்டு மணிக்குதான்...''
நான் கேட்டேன்: "இந்த நேரத்தில அங்க ஏதாவது வாகனம் இருக்குமா?''
அவன் கூறினான்: "வீட்ல இருந்து வண்டி அனுப்பு வாங்க.''
சிறிது நேர அமைதிக்குப்பிறகு, கண்ணனின் தந்தை மீண்டும் கேட்டான்: "வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?''
நான் அதிர்ச்சியடைந்தேன்.
வீடு..? எதுவுமே கூறாமல் நான் சிரிப்பதற்கு முயற்சித்தேன். ஆனால்... என் முயற்சி பரிதாபத்திற்குரிய ஒரு முயற்சியாக மட்டுமே இருந்தது.
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கக்கூடிய முயற்சியில் தாய் இருந்தாள். பெட்டியிலிருந்து ஸ்டீலாலான சோற்றுப் பாத்திரத்தை எடுத்து வெளியே வைத்துவிட்டு, அவள் என்னிடம் கேட்டாள்: "நீங்க..?''
நான் கூறினேன்: "நானும் கொண்டுவந்திருக்கேன்.''
காயங்குளம் ஸ்டேஷனில் முஹம்மது கொண்டுவந்து தந்த பொட்டலம் என்னிடம் இருந்தது. வாட்டிய வாழையிலையில் கட்டப்பட்டிருந்த அந்த சிறிய பொட்டலத்தைத் திறந்தபோது வந்த வாசனை அளவற்ற சந்தோஷத்தைத் தந்தது. சப்பாத்தியும் வெஜிட்டபிள் குருமாவும்... சப்பாத்தி என்று கூறினால்...
தாளைப் போன்ற மெல்லிய அடுக்குகளுடன் உள்ள... கூட்டு எதுவுமே தேவையில்லை. வாய்க்குள் வைத்தவுடனே கரைந்து போகக்கூடியது... பிறகு... குருமாவை எடுத்துக்கொண்டால்... மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய ரெடிமேட் பாக்கெட் தூள்களைச் சேர்த்து தயாரித்தது அல்ல... முஹம்மதின் சமையலறையில் "ஃப்ரெஷ்'ஷாக அரைத்து எடுக்கப்பட்ட மசாலாவைக் கொண்டு...
உணவை சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னையே பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணனின் தந்தை. எனக்கு கூச்சமெதுவும் தோன்றவில்லை.
நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டுக் கூறினேன்: "காயங்குளத்தில ஒரு நண்பன் இருக்கான். முஹம்மது... எவ்வளவோ வருஷங்களா இருக்கக்கூடிய உறவு... இதுக்கான ஆரம்பம்... பல வருஷங்களுக்குமுன்பு வளைகுடாவில... அது இப்பவும் தொடருது. வேண்டிய அளவுக்கு வேலைக்காரங்க இருந்தாலும், முஹம்மதுவின் வீட்ல... அடுக்களையில மனைவி நீனா மட்டுமே இருப்பா.
கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் விருந்தாளி களுக்கும் உணவை தானே தயாரிக்கணும்ங்கறதுல நீனா கறாரா இருப்பா. என் வாழ்க்கையில நான் பல நாடுகளுக்கும் போயிருக்கேன். பல இடங்கள்லயும் உணவு சாப்பிட்டிருக்கிறேன். நீனாவைப்போல இந்த அளவுக்கு கைவண்ணமுள்ள வேறொருத்தரை நான் இதுவரை பார்த்ததில்லை.''
சிறிதுநேர அமைதிக்குப்பிறகு நான் மீண்டும் கூறினேன்:
"ருசியான உணவு ஒரு அதிர்ஷ்டம்தான்...''
அப்போது கண்ணனின் தந்தை கூறினான்:
"அப்படிப்பட்ட உணவை அன்போட சமைச்சு தர்றதுகு ஒரு மனைவி இருக்கணும்... அதுவில்லியா பெரிய அதிர்ஷ்டம்?''
குழந்தைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்த அவனுடைய மனைவி அப்போது புன்னகைத்தாள்.
நான் கவனித்தேன்- குழந்தைகளின் உணவு... சோறு தவிர, மோர்க் குழம்பும் கூட்டும் மட்டுமே இருந்தன. முதலில் தாய் ஒரு கவளம் சோற்றை கண்ணனின் வாயில் வைத்தாள். பிறகு... அதேபோல பாருவின் வாயிலும்... இவ்வாறு மாறி... மாறி...
குழந்தைகள் சாப்பிட்டபிறகுதான் வாழ்க்கையில் என்னை மிகவும் திகைப்படயவைத்த ஒரு காட்சியை நான் பார்த்தேன்.
கணவனும் மனைவியும் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள். குழந்தைகள் சாப்பிட்டவைதான்... அவர்களுக்கும்- காய்ச்சிய மோர்க்குழம்பும் கூட்டும்... இருவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதற்கு பதிலாக, கணவன் மட்டும் சாப்பிட்டான். கவளங்கள் ஒவ்வொன்றையும் அன்புடன் கணவனின் வாய்க்குள்... சற்றுமுன்பு குழந்தைகளுக்கு ஊட்டியதைப் போலவே... அறிமுகமற்ற வேறொரு மனிதன் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற தர்மசங்கடமான நிலை எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்களுடைய உலகத்தில் அப்போது அவர்கள் மட்டுமே இருந்தார்கள்.
நான் ஆச்சரியத்துடன்...
சாப்பிட்டு முடித்தபிறகுதான் மனைவி நான் இருக்கும் உணர்வுக்கே வந்தாள்.
சிறிது வெட்கத்துடன் அவள் கூறினாள்: "இது எப்பவுமில்ல... புரியுதா?''
நான் அப்போது சிரித்துக்கொண்டே கூறினேன்:
"ஏன் எப்பவுமாவே இருக்கக்கூடாது?'' இருக்க வேண்டும்!
பிறகு... எதுவும் கூறாமல் புன்னகைத்துக்கொண்டி ருந்த கணவனிடம் கூறினேன்: "கொடுத்து வச்ச விஷயமில்லியா?''
குழந்தைகளை அழைத்துக்கொண்டு கையைக் கழுவுவதற்காக பாத்ரூமிற்கு அவர்கள் சென்றபோது நான் தனியாக இருந்தேன். நிலவு வெளிச்சத்தில் மெதுவாக அசைந்தவாறு கிடக்கும் கடலைப்போல என் மனம் இருந்தது. அலைகளின் மந்திர ஓசையில் கரைந்த நிலையில் நான்... முன்பு எப்போதோ பார்த்து மறந்துவிட்ட... ஒரு திரைப்படத்தின் இனிமையான பாடலின் வரிகள் அப்போது மனதில் திரும்பத் திரும்ப....
"வீட்டின் வாசலில்
அன்பு மலரும்
பூ நிலா... மனைவி...
கவலை முட்களை
விரல் நுனியால்
மலர்களாக்கும்
மனைவி...
எவ்வளவு எரிந்தாலும்
எண்ணெய் வற்றாதிருக்கும்
ஓவிய விளக்கு
மனைவி...
எண்ணினால் முடியாத
பிறவிப் பெருங்கடலில்
அன்னமளிக்கும் ஈஸ்வரி.. மனைவி'
இந்த வரிகளில் கரைந்து...
அனைத்தையும் மறந்து... அவர்கள் பாத்ரூமிலிருந்து திரும்பிவந்தது எனக்குத் தெரியாது. பிறகு நான் பார்த்தது... அவர்கள் படுத்திருப்பதைத்தான். மகனும் தந்தையும் மேலே இருந்த பெர்த்தில்... மகள் கீழே... தாய் படுக்கவில்லை. பெர்த்தின் ஒரு மூலையில் சாய்ந்து.... அவளின் ஒரு கை மகளின் தலையில் இருந்தது.
நான் இறங்கவேண்டிய ஸ்டேஷன் நெருங்கிக் கொண்டிருந்தது. முதலில் அவர்களிடம் விடைபெற்று விட்டுப் போகலாமென்றுதான் நான் நினைத்தேன். பிறகு... அதை மாற்றிக்கொண்டேன்.
வேண்டாம்... இனிய கனவுகளைக் கண்டுகொண்டு அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கட்டும்.
போவதற்குமுன்பு அந்த மனைவியின் முகத்தை நான் பார்த்தேன். அசாதாரணமான ஒரு பிரகாசம் அவளிட மிருந்து வெளிவருவதைப்போல உணர்ந்தேன்.
நான் எழுந்து கனமான இதயத்துடன் வண்டியின் வாசலை நோக்கி நடந்தேன்.