டக்பூகூருக்குச் செல்லவேண்டுùன்றால், இரண்டு நிறுத்தங்களில் இறங்கலாம். அவற்றிலொன்று மருத்துவமனை நிறுத்தம். மண் சுவர்களையும் ஒரு சிறிய முன்பகுதியையும் கொண்ட ஒரேயொரு அறைதான் மருத்துவமனை. ஒரு காலத்தில் அந்த முன்பகுதி நோயாளிகளால் நிறைந்திருந்தது. உள்ளே அசையக்கூடிய நாற்காலியையும், மேஜையையும் போட்டுக்கொண்டு டாக்டர் பிரதாப் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதற்காக அமர்ந்திருப்பார். மேஜையின்மீதிருக்கும் ஒரு சிறிய பலகையில் இப்படி எழுதிவைக்கப்பட்டிருந்தது- பிரதாப் காடார், ஹோமியோபத்! இனிப்பான மாத்திரைகள் நிறைக்கப்பட்டிருந்த புட்டிகளுக்குள் ஒரு துளி மருந்தை ஊற்றி, ஆறேழு கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகளை அவர் குணப்படுத்தினார். ஆனால், ஒருநாள் காலையில் டாக்டர் பிரதாப் காணாமல் போய்விட்டார். மேஜையும், நாற்காலியும், மருந்துப் பெட்டிகளும், எண்ணெய்க்கறை படிந்த மெத்தையும், அறையின் மூலையிலிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ்வும், கரி படிந்த பாத்திரங்களும், கொடியில் காயப்போட்டிருந்த மேற்துண்டும், வேட்டியும் அதே இடங்களில் இருந்தன. வீட்டிலிருந்து ஏதாவது ஆபத்தான செய்தியைக்கேட்டு, உடனடியாக வீட்டிற்குச் சென்றிருப்பார் என்று சிலர் எண்ணினார்கள். ஒருவேளை... கனவுகண்ட வேகத்தில் இமயமலைக்குச் சென்றிருப்பார் என்று வேறு சிலரும் எண்ணினார்கள். டாக்டர் பிரதாப் காணாமல் போனது, கிராமத்து மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. இறுதியில் அவர்கள் வேறொரு டாக்டரைக் கண்டுபிடித்தார்கள். வருடங்கள் பல கடந்து சென்றிருந்தாலும், சிதிலமடைந்திருந்தாலும், தரையில் இடிந்து விழாமல் மருத்துவமனை அங்கு நின்றிருந்தது. காலப்போக்கில் அந்த இடம் மருத்துவமனை நிறுத்தம் என்ற பேருந்து நிறுத்தமாக அறியப்பட்டது.

story

இரண்டாவது பேருந்து நிறுத்தம்- கடக்பூகூர் பேருந்து நிலையம். அங்கிருந்துதான் ராய்திகிக்கும் காக் தீவிற்கும் பாதைகள் பிரிந்து செல்கின்றன. எப்போதும் மக்களின் கூட்டம் நிறைந்திருக்கும் பகுதி அது. மூன்று... நான்கு இனிப்புப் பலகாரக்கடைகளும், வறுக்கப்பட்ட- பொரிக்கப்பட்ட பண்டங்கள் விற்பனை செய்யப்படும் கடையும், வளையல் கடையும், தையல் கடையும் தவிர, டி.வி. பழுதுபார்க்கும் ஒரு கடையும் அங்கு சமீபத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தது. சாயங்காலப் பொழுது வந்துவிட்டால், எக்ரோல்- நூடுல்ஸ் விற்பனை செய்யப்படும் ஒரு தள்ளுவண்டி தட்டுக் கடையும் அங்கு வந்துசேரும். "கடக்பூகூர் ரோல் கார்னர்' என்று பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ஒரு போர்டு அந்த தள்ளுவண்டியில் தொங்கிக் கொண்டிருந்தது.

மேலே கூறப்பட்ட இரண்டு நிறுத்தங்களில் இறங்கி, கிராமத்து மக்கள் வங்கியையும் வாத்துகள் நீந்தித் துடித்துக்கொண்டிருக்கும் குளங்களையும் கடந்து, நிழல் பரப்பிக்கொண்டிருக்கும் மரங்களுக்குக்கீழே நடந்துசென்றால், கடக்பூகூரின் மையப் பகுதியான கடைவீதியை அடையலாம். அங்கு போய்ச் சேர்வதற்கு காவ்ரா பாறை என்றொரு மூன்றாவது பாதையும் இருந்தது. ஆனால், அங்கு பேருந்து நிற்காது. ஒதுக்கப்பட்ட- தாழ்த்தப்பட்ட இனத்த வர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த வழியாக அது இருந்தது. காலங்காலமாக ஜமீன்தார்களின் பல்லக்குகளை அவர்கள்தான் சுமந்தார்கள். கஹார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காவ்ரா என்ற பெயர் உண்டானது. அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தவுடன், காவ்ரா பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதில்லை. அந்த இனத்தில் பிறந்து வளர்ந்த இளம்பெண்தான் ஃபுல்லறா காவ்ரா.

2

சுற்றிலுமிருந்த வெளிப்பகுதிகளில் விழுந்து கிடந்த சாணத்தைக் கூடையில் அள்ளி நிறைத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வாசலில் அமர்ந்து தலைமுடியை வாரிக்கொண்டிருந்த தாய் சனகாவை ஃபுல்லறா பார்த்தாள். கயிறைப் பயன்படுத்தி முடியைக் கட்டும்போது இறுக்கமாக இருப்பதைப்போல தோன்றுவதால் புடவையின் நுனிப்பகுதியைக் கிழித்தெடுத்துதான் அவள் தலைமுடியை வாரிக்கட்டுகிறாள். நரை படர்ந்த தலைமுடியை சிவப்புநிறப் புடவையின் நுனியைக்கொண்டு கட்டுவதைப் பார்த்து அவளுக்கு என்னவோ போலிருந்தது. செந்தூரச் சிவப்பு பதிந்திருக்க வேண்டிய முன்நெற்றி எதுவுமே இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவள் கவலைப்பட்டாள். அவளுடைய தந்தை துகெ மரணமடைந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அது ஒரு இயல்பான மரணமல்ல. துகெ கொலைசெய்யப்பட்டான்.

துகெ காவ்ராவிற்கு எந்தக் காலத்திலும் நிரந்தரப்பணியென்று எதுவுமில்லை. சில வேளைகளில் அவன் நித்ய சாஹுவின் சிமெண்ட் கடையில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியாகப் பணி செய்வான். அது இல்லாத நாட்களில் கள்ளுக் கடையிலோ நடனப் பெண்களின் வீடுகளிலோ அவன் இருப்பான். நன்றாகப் பாடக்கூடிய துகெ, துக்கம் நிறைந்த பாடல்களைப் பாடும்போது, அங்கு கூடியிருக்கும் கொடூரமான கொலை செய்தவர்களின் கண்களில்கூட ஈரம் படர்ந்துவிடும். துகெ பாடும் போது, நண்பன் சாகர் டோலக் அடிப்பான். தாளத்துடனும் பாடலுடனும் அவர்கள் முன்னோக்கி வர, நடனப் பெண்கள் உற்சாகமடைந்து மதுவையும், தொட்டுக் கொள்ளக்கூடிய கறிகளையும் பரிமாறி அவர்களை உபசரிப்பார்கள். அந்த சமயங்களில் இரு பெண்களின் புடவைகளின் நுனிகளும் திரும்பத் திரும்ப சரிந்து விழ, சதைப்பிடிப்பான மார்பங்கள் வெளியே தெரியும். தவமிருக்கும் முனிவர்களின் மனதைக்கூட அசைத்துவிடும் காட்சி அது. நிலைமை அப்படியிருக்க... மிகவும் சாதாரண மனிதனான துகெயைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? அந்த இரு பெண்களில் யார்மீது அதிக விருப்பம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக துகெ கடுமையாக முயற்சித்தான். இதற்கிடையில் இருவரையும் சமநிலையில் வைத்துக் கையாண்ட சாகர், தன் எதிராளியாக துகெயைக் காண ஆரம்பித்தான்.

இந்தச் சூழ்நிலையில் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக துகெயும் சாகரும் சென்றிருந்தார்கள். நிகழ்ச்சி முடிவடைந்து, சாகர் மட்டுமே திரும்பிவந்தான். சில நாட்களுக்குப்பிறகு பாசி பிடித்த ஒரு வாய்க்காலில் துகெயின் அழுகிப்போன உடல் மேலே மிதந்துகொண்டிருந்தது. சனகாவை அழைத்து துகெயின் இறந்த உடல்தான் அதுவென்று காவல்துறை உறுதிப்படுத்தியது. உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், பஞ்சாயத்துத் தலைவரின் தூரத்து உறவினன் என்பதாலும் சந்தேகத்தின் சிறிய விரல்கூட சாகரை நோக்கி நீளவில்லை. ஆனால், பள்ளிக்கூட வாசலில் இருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து நீரெடுப்பதற்காக வரும் பெண்கள் அந்த விஷயத்தைப் பற்றி வாய்மூடாமல் பேசவும், சாகரைக் குற்றவாளி ஸ்தானத்தில் நிறுத்தவும் செய்தார்கள். அவன்தான் தந்தையைக் கொலை செய்தவன் என்பதில் ஃபுல்லறாவும் உறுதியாக இருந்தாள். சனகாவின் வெறுமையான முன்நெற்றியைப் பார்க்கும்போதெல்லாம் ஃபுல்லறா விற்கு பயங்கரமான அந்த நாட்களைப் பற்றிய நினைவு வெறுப்பை அளித்தது.

சிறு வயதிலிருந்து தினமும் காலையிலும் மாலையிலும் ஃபுல்லறாதான் நீர் எடுப்பதற்காகச் செல்வாள். எவ்வளவு சீக்கிரம் சென்றாலும், மிகவும் இறுதியில்தான் அவளால் நீர் எடுக்க முடிந்தது. ஒருமுறை எதிர்த்ததற்கு மற்றவர்கள் ஃபுல்லறாவை அடித்து வீழ்த்த, விழுந்ததில் அவளுடைய மண்குடம் உடைந்து, நெற்றியில் காயம் உண்டானது.

அழுதவாறு வீட்டிற்கு வந்த மகளுடைய நெற்றியின் காயத்தில் சாமந்தி இலையை நசுக்கி இடும்போது சனகா கூறினாள்: "உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவங்க நீர் பிடிக்கற வரிசையில நாம நிக்கக்கூடாது. நம்ம கை பட்ட நீரை அவங்க குடிக்க மாட்டாங்க.' ஆனால், அரசாங்கத்தின் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் தன் கைபட்டதால் எப்படி அசுத்தமாகிறது என்ற விஷயத்தை ஃபுல்லறா எவ்வளவு சிந்தித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. வளர்ந்தபிறகு எல்லாரும் நீரை எடுத்துக்கொண்டு சென்றபிறகு, நீர் எடுப்பதென்பது ஃபுல்லறாவிற்குப் பழக்கமாகிவிட்டது. அதுதான் சட்டமென்பதை அவள் புரிந்துகொண்டாள். காவ்ரா பாறையைச் சேர்ந்த துகெ காவ்ராவின் மகளாகப் பிறந்ததால், அப்படிப்பட்ட சில எழுதப்படாத சட்டங்களைப் பின்பற்றியே ஆக வேண்டுமென்னும் விஷயத்தை அவள் புரிந்துகொண்டாள். அந்த விஷயங்களைச் சிந்திக்கும்போதெல்லாம் வாய்க்காலின் கரையில் தூக்கிப்போடப்பட்டிருந்த, பாசி ஒட்டியிருந்த, அழுகி நாற்றத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த தந்தையின் பிணம் அவளுக்கு நினைவில் வரும்.

ஒருநாள் மாலை வினோதமான முக உணர்ச்சி களுடன் சனகா, ஃபுல்லறாவிடம் கூறினாள்: ""ஒரு ஷாம்பு பாக்கெட் வாங்கியிருக்கேன். அதை எடுத்து தலையைக் கழுவிக் குளி. பிறகு... போனமுறை அத்தை தந்த நீலநிறப் புடவையைக் கட்டிக்கிட்டு நில்லு.'' தாயின் வார்த்தைகளைக் கேட்டு ஃபுல்லறா அதிர்ச்சியடைந்தாள். காரணம்- தாயிடமிருந்த ஒரேயொரு நல்ல புடவை அது மட்டுமே. முன்பு அணிவதற்கு பலமுறை கேட்டபோதெல்லாம் கிழிந்துவிடும் என்று கூறி, ஃபுல்லறாவிடம் அவள் தர மறுத்துக்கொண்டிருந்தாள். ஹரிசபையின் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதற்காக கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் புதிய ஆடைகளை அணிந்து நிற்கும்போது ஃபுல்லறா அந்த புடவையைக் கேட்டாள்... ஏமாற்றம்தான் இறுதியில் கிடைத்தது. அந்த புடவையைத்தான் அணியுமாறு கூறி இன்று தாய் கையில் வைத்து நீட்டிக்கொண்டிருக்கிறாள்.

தந்தையின் மரணத்திற்குப்பிறகு தாய் மிகவும் மாறிப்போயிருந்தாள். எட்டு... பத்து வீடுகளுக்கு வேலைக்குச் செல்கிறாள். இவ்வளவு கஷ்டப்பட வேண்டாமென்று கூறினால், தாய் மிகவும் ஆவேசப்படுவாள்.

3

பொதுவான திருமண வயதிற்கு மிகவும் முன்பே இளம்பெண்களுக்குத் திருமணம் செய்து அனுப்பிவைப்பதுதான் கிராமத்தின் வழக்கமாக இருந்தது. அந்த விஷயத்தில் இனத்தையோ மதத்தையோ பணத்தையோ யாரும் பிரச்சினையாகவே எடுப்பதில்லை. பொருத்தமான பையன் கிடைத்துவிட்டால், திருமணத்தை உறுதிப்படுத்திவிடுவார்கள். பத்தாவது வகுப்பு தேர்வெழுத முடியாமல், பல இளம்பெண்களும் மனைவிகளாக மாறுவார்கள். ஃபுல்லறாவோ பள்ளிக்கூடத்திற்கே சென்றதில்லை. போதாததற்கு... தந்தையை இழந்த இளம்பெண் வேறு! அதனால் இளம்பெண்ணான பிறகும், திருமண ஆலோசனை வந்தபோது யாரும் ஆச்சரியப்படவில்லை. ஆனால், மணமகனின் வீடு எங்கிருக்கிறது என்ற விஷயம் தெரிந்ததும், எல்லாருடைய கண்களும் அகல விரிந்தன. பம்பாயிலிருந்து ஃபுல்லறாவிற்கு திருமண ஆலோசனை வந்திருந்தது. காவ்ரா பாறையைச் சேர்ந்த கிராமத்து மக்களுக்கு பம்பாய் என்றாலே மனதில் தோன்றியது ஷாரூக்கானும் கத்ரீனா கைஃபும்தான். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஃபுல்லறா வின் தோழிகள் அவளை கேலி செய்தார்கள்.

அந்த கேலிகளைக் கேட்டு ஃபுல்லறாவின் உள்ளம் நெகிழ்ந்தது. தாயின் உறவிலுள்ள ஒரு சிற்றப்பாதான் திருமண ஆலோசனையைக் கொண்டு வந்திருந்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சிற்றப்பாதான் தன்னால் இயன்ற அளவுக்கு பல நேரங்களில் உதவியிருக்கிறார். பம்பாயிலிருக்கும் ஃப்ளாட்கள் நிறைந்த ஒரு கட்டடத்தின் காவலாளியாக அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பம்பாய் நகரத்திலிருந்து சற்று தூரத்திலிருந்த பித்தல்பூரில் மணமகனின் வீடு இருந்தது. வயதும் சற்று அதிகம்தான். மணமகனின் ஒரு மாமா கல்கத்தாவில் வசிக்கிறார்.

அவர் வந்துதான் பெண் பார்க்கும் சடங்கை முழுமை செய்தார். அந்த நாளன்றுதான் தாய், மகள் அணிவதற்கு நீலநிறப் புடவையைத் தந்தாள். மாமாவின் பெயர் பகவான்தாஸ்... பெண்ணைப் பார்ப்பதற்கு வந்தபோது, அவர் தன் நரைத்த மீசையைத் தடவியவாறு ஒரேயொரு கேள்வியைத்தான் ஃபுல்லறா விடம் கேட்டார்: ""தண்ணி எடுக்க எவ்வளவு தூரம் போகணும்?''

அந்த கேள்வியைக் கேட்ட ஃபுல்லறா அதிர்ச்சியடைந்தாலும், சரியாக பதில் கூறினாள். பதிலைக் கேட்டு பகவான்தாஸ் திருப்தியடையவும் செய்தார். ஓரிரண்டு மணி நேரம் வரிசையில் நின்றுதான் தினந்தோறும் நீர் எடுக்க வேண்டியதிருக்கிறது என்ற விஷயத்தை அறிந்து, அவர் மௌனமாகிவிட்டார். பொறுமைசாலியாகவும் எதையும் தாங்கிக்கொள்ளக் கூடியவளாகவும் ஃபுல்லறா இருக்கவேண்டுமென்று அந்த மனிதர் நினைத்திருக்கவேண்டும். பாக்கு, வெள்ளி ரூபாய், ஜரிகைப் புடவை ஆகியவற்றைக் கொடுத்து ஃபுல்லறாவை ஆசிர்வதித்துவிட்டுதான் பகவான்தாஸ் திரும்பிச் சென்றார்.

அவர் திரும்பிச் சென்று சில நாட்களிலேயே- நித்ய சாஹுவின் வீட்டில் பணி செய்துகொண்டிருக்கும் போது, சனகாவைத் தேடி தொலைபேசி வழியாக அந்த சந்தோஷச் செய்தி வந்தடைந்தது. மணமகனுக்கு ஃபுல்லறாவைப் பிடித்திருக்கிறது! ஆனால், விவசாயத்தையும் மற்ற விஷயங்களையும் விட்டுவிட்டு, மணமகனால் வரமுடியவில்லை. ஃபுல்லறா அங்கு செல்லவேண்டும் போலிருக்கிறது! பகவான்தாஸுடன் சேர்ந்து அனுப்பிவைத்தால் போதும் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.

அதைக் கேட்டதும், அன்றுவரை கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள் பல விஷயங்களைக் கூறியும், காது கொடுத்து கேட்காமலிருந்த சனகா பதறினாள். முற்றிலும் அறிந்தே இராத ஒரு தூர மாநிலத்திற்கு- அதுவும் வேற்றுமொழி பேசக்கூடிய ஊருக்கு மகளை அனுப்பிவைக்கும் விஷயத்தில் முடிவெடுக்க முடியாத நிலை அவளைப் பாடாய் படுத்தியது. தன் கண்களுக்கு முன்னால் மகளின் திருமணத்தைப் பார்ப்பதற்கு அவள் விரும்பினாள். ஒரேயொரு முறை மட்டுமே பார்த்துப் பழகிய பகவான்தாஸுடன், உலக அறிமுகமே இல்லாத மகளை அனுப்பிவைப்பதில் சனகாவிற்கு பதைபதைப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட காரணத்தால் பகவான்தாஸ் கூறினார்: ""மகளே... நீ பயப்படவேண்டிய அவசியமே இல்ல. உன் மகளை நான் விபச்சார விடுதியில விக்கறதுக்காக கொண்டுபோகல. நேரா திருமணம் நடக்குற இடத்துக்குதான் அவளைக் கூட்டிட்டுப்போய் உட்கார வைப்பேன். அது மட்டுமில்ல... அவளோட சித்தப்பா அங்க இருக்காரே!''

சொல்லி முடிவுசெய்த நாளில் பகவான்தாஸ் வந்தார். நித்ய சாஹுவின் மனைவி தந்த பழைய துணிப்பையில் தன் சிறிய... சிறிய பொருட்களை எடுத்துவைக்கும்போதுதான், அதில் தாய் தன்னுடைய நீலநிறப் புடவையை வைத்திருப்பதை ஃபுல்லறா பார்த்தாள். திருமணமென்றால் தாயைவிட்டுப் பிரிந்து தூரத்திற்குச் செல்வதென்ற விஷயத்தை அவள் எந்த சமயத்திலும் நினைத்ததில்லை. அந்த விஷயத்தைதான் நீலநிறப்புடவை அவளுக்கு இரக்கமே இல்லாமல் ஞாபகப்படுத்தியது. அந்த வேதனையுடன் ஃபுல்லறா கட்டிலில் ஏறிப்படுத்தி நீண்ட நேரம் அழுதாள்.

4

புதிய இடத்தில் படுத்தால் தூக்கம் வராது என்றாலும், பித்தல்பூரை அடைந்து கட்டிலில் அமர்ந்ததும், ஃபுல்லறா தூக்கத்தில் மூழ்கினாள். இரண்டு நாட்கள் நீடித்த புகைவண்டிப் பயணத்தில் அவளால் சிறிதும் தூங்க முடியவில்லை. தாயைவிட்டுப் பிரிவதால் உண்டான கவலை ஒரு பெரிய குமிழியைப்போல அவளுடைய நெஞ்சில் வீங்கிப்போய் நின்றிருந்தது. அறிமுகமற்ற ஒரு ஆளுடன் சேர்ந்துள்ள பயணமும் அவளை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியிருந்தது. எந்த நிமிடத்திலும் தொல்லைதரும் ஒரு உயிரினம் தன்னை ஆக்கிரமிக்குமென்று அந்த இளம் மனம் பயந்தது.

ஸ்டேஷனில் இறங்கியபோது, எதிர்பார்த்து நின்றிருந்த சிற்றப்பாவைப் பார்த்து அவள் மிகவும் சந்தோஷப்படவும், நிம்மதிப் பெருமூச்சுவிடவும் செய்தாள். ஆனால், திருமண நாளன்று மட்டுமே அவரால் வந்துசேரமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டபோது, ஃபுல்லறாவுக்கு ஏமாற்றம் உண்டா னது. ஸ்டேஷனிலிருந்து இரண்டு பேருந்துகளில் மாறி... மாறி ஏறி, மாலை வேளையானபோது, அவர்கள் பித்தல்பூரை அடைந்தார்கள். மின்சாரம் எட்டிப்பார்த்திராத அந்த கிராமத்து வீடுகளில் சிம்னி விளக்குகளின் வெளிச்சம் சிதறிக் கிடந்தது. மண்பாதையின் வழியாக சிறிது தூரம் நடந்து மணமகனது வீட்டை அடைந்ததும், ஆள் வந்திருக்கும் சத்தத்தைக் கேட்டு யாரோ ஓராள் விளக்குடன் வாசலுக்கு வந்தான். ஒரு நடுக்கூடத்தைச் சுற்றி அவ்வப்போது உருவாக்கப்பட்ட அறைகள் கொண்ட ஒரு கட்டமே அந்த வீடு என்பதை மங்கலான வெளிச்சத்தில் ஃபுல்லறா தெரிந்துகொண்டாள். அவள் உள்ளே நுழைந்ததும், ஒரு கூட்டமாக குழந்தைகள் சத்தமிட்டவாறு ஓடிவந்தார்கள். அவர்களுடைய சலசலப்பிற்கு மத்தியில் ஒரேயொரு வார்த்தைதான் ஃபுல்லறாவிற்குப் புரிந்தது. "பானிபாய்.... பானிபாய்...'

அவர்கள் யாரை அழைக்கிறார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை. அங்கு மணமகளை பானிபாய் என்று அழைப்பார்களோ? அப்போது முன் கோபம்கொண்ட நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி வந்து, ஃபுல்லறாவிற்கு குளியலறைக்குச் செல்லும் வழியைச் சுட்டிக்காட்டியவாறு கறாரான குரலில் கூறினாள்: ""இதுவொரு வறட்சியான பகுதி. வங்காளத்தைப் போல பசுமையான இடமில்ல இது. அதனால நீரை மிகவும் கவனமா பயன்படுத்தணும்.''

கடக்பூகூரில் குடிநீருக்காகப் பல மணிநேரம் காத்து நிற்கவேண்டியதிருக்குமென்றாலும், எல்லா நேரங்களிலும் நீர் எளிதில் கிடைக்கும். குளத்தில் சந்தோஷத்துடன் குளிக்கலாம். இரவில் பரிமாறப் பட்ட தடிமனான கோதுமை ரொட்டியையும், சுவையே இல்லாமலிருந்த குழம்பையும் சாப்பிட்டபோது, ஃபுல்லறாவிற்கு கவலை உண்டானது நீரைப்பற்றி நினைத்துதான்.

இரவில் வயதான ஒரு பெண்ணுடன் சேர்ந்து அவள் படுத்தாள். புரியாத மொழியில் அவள் என்னவோ விஷயங்களைப் பற்றி ஃபுல்லறாவிடம் கூறிக்கொண்டும், முதுகைத் தடவிவிடவும் செய்தாள். ஏதோ நேரத்தில் அவளுடைய கை ஃபுல்லறாவின் இடுப்பை அடைந்து, விரல்கள் அவளுடைய இடுப்பெலும் புகளை அழுத்திச் சோதனை செய்தன. அவளுடைய கையை விலக்குவதற்குக் கடுமையாக முயன்று, எப்போதோ அவள் உறங்கிவிட்டாள். இரவில் எப்போதோ பெண் குழந்தைகளின் அழுகைச் சத்தத்தையும் ஆண்களின் உரத்த சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தபோது, அவளுடன் படுத்திருந்த பெண் அங்கில்லை.

காலையில் யாரோ பலமாகக் குலுக்கி அழைத்த போதுதான் ஃபுல்லறா கண் விழித்தாள். முந்தைய நாளில் பார்த்த நடுத்தர வயதைக்கொண்ட பெண் நின்றிருந்தாள். கோபத்துடன் அவள் கூறினாள்: ""இவ்வளவு நேரம் வரை படுத்திருந்தா நீர் எடுக்க யார் போவாங்க?''

அதைக்கேட்டு மிகவும் அருகில் இருந்த யாரோ கூறினார்கள்: ""அவ இப்போதானே வந்திருக்கா. திருமணம் நடக்கட்டும்.''

அந்த பதிலைக் கேட்ட நடுத்தர வயதுப்பெண் சிறிதும் தாமதிக்காமல் திரும்பக் கூறினாள்: ""திருமணம் வரைக்கும் ஏன் காத்திருக்கணும்? முதல் நாளிலிருந்தே இதையெல்லாம் பழகிக்கணும். இல்லன்னா கட்டில்லயே இருந்திருவா.''

அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு வீட்டைச்சேர்ந்த பெண் சிரித்துக்கொண்டே கூறினாள்: ""அதுக்கு... உங்கிட்டயிருந்து கட்டில் கிடைச்சாதானே அவ படுக்கமுடியும்? இப்பவும் நீங்கதானே கட்டிலோட எஜமானி!''

அதைக் கேட்டதும் நடுத்தர வயதுகொண்ட பெண் கோபத்துடன் வேகமாக நடந்துசென்றாள். அவள் சென்றபிறகு, ஃபுல்லறாவின் கட்டிலைச் சுற்றி வந்தமர்ந்த இல்லத்தரசிகளான பெண்கள் கூறினார்கள்: ""சீக்கிரமா எழுந்திரு கண்ணு. இன்னிக்குதானேனக்கு கல்யாணம்?''

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டதும், ஃபுல்லறாவின் நெஞ்சுத் துடிப்பு அதிகமானது. சிற்றப்பா கூறியதன்படி பார்த்தால், திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள்.

""ஆனா, அந்த நாளுக்கு மட்டும் நீர் எடுக்கறதுக்காக ஒரு பெண்ணைக் கொண்டுவர முடியாதே?'' அவர்களில் ஒருத்தி கூறினாள்.

அங்கு வந்தபிறகு, ஃபுல்லறா திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்த ஒரு வார்த்தை... "நீர்...' கட்டிலிலிருந்து எழுந்ததும், ஃபுல்லறா சோர்ந்து போய்விட்டாள். அதைப் பார்த்து சுற்றி அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தி கூறினாள்: ""கஷ்டம்! உடல்நலமில்லாத இந்த பெண்ணையா "பானிபாய்'யா கொண்டு வர்றதுக்கு பகவான் மாமா கண்டுபிடிச்சார்?'

அதற்கு பதில் என்பதைப்போல இன்னொரு பெண் கூறினாள்: ""அதுக்கு பக்கத்து கிராமங்களிலிருந்துகூட யாரும் வர தயாரா இல்லியே! அதனாலதானே ஒரு வங்காளப் பொண்ணை பகவான் மாமா கண்டுபிடிச்சிருக்காரு! வங்காளப் பொண்ணுங்க சொன்னா, அதன்படி நடப்பாங்க! இவளோ... அப்பா இல்லாத சின்னப்பொண்ணு.''

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணாக அமர்ந்திருக்கும்போதும், ஃபுல்லறாவின் மூளையில் "பானிபாய்' என்ற வார்த்தை உரத்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. புதிய மணப் பெண்ணை அந்த ஊரில் "பானிபாய்' என்று அழைப்பார்களோ? பகவான் மாமாவை எந்த இடத்திலும் பார்க்கமுடியவில்லை. பார்த்திருந்தால், தொலைபேசியில் தாயை அழைத்துத் தரும்படி கூறியிருக்கலாம். இப்போது நித்ய சாஹுவின் வீட்டில், தாய் அறைகளைத் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பாள். மகள் சுமங்கலியாகிறாள் என்ற விஷயம் தாய்க்குத் தெரிந்திருக்குமா?

ஒவ்வொரு சிந்தனைகளிலும் மூழ்கியிருந்தது காரணமாக இருக்கவேண்டும். மணமகன் அருகில் வந்து அமர்ந்ததை ஃபுல்லுறா அறிந்திருக்கவில்லை. பெண் குழந்தைகளின் ஆரவாரத்தைக் கேட்டுதான் அவளுக்கு சூழலைப் பற்றிய உணர்வே மீண்டும் வந்தது. நல்ல உடலமைப்பைக் கொண்ட மனிதனாக இருந்தான் மணமகன். அங்குள்ள நாட்டு நடப்பின்படி அவன் பூமாலையால் முகத்தை மறைத்திருந்தான். முகூர்த்த நேரம் வந்ததும், யாரோ அழைத்துக் கூறினார் கள்: ""கிஷன்லால்... மாலையை எடு.'' மணமகன் முகத்தை மறைத்துக்கொண்டிருந்த மாலையைக் கழற்றியபோது, ஃபுல்லறாவின் மூக்கிற்குள் ஒரு அழுகிய நாற்றம் வேகமாக நுழைந்தது. அப்போது அவளுக்கு, கெட்ட நாற்றம் வந்துகொண்டிருந்த தன் தந்தையின் பிணம் ஞாபகத்தில் வந்தது. சுற்றிலும் நின்றிருந்த பெண்கள் நறுமண மலர்களை திருமணம் நடைபெறும் இடத்தை நோக்கி எறிந்துகொண்டிருந்தார்கள். அடர்த்தியான வாசனை கொண்ட தைலத்தை கிஷன்லால் சரீரம் முழுவதிலும் தேய்த்திருந்தான். அவற்றையெல்லாம் தாண்டிதான் பழைய நாற்றம் அங்கு பரவிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- கிழவர்களின் உடல்களிலிருந்து வரக்கூடிய... சுருக்கங்கள் விழுந்து சிதிலமடைந்த தோலின், அசைந்து கொண்டிருக்கும் பற்களின் வாசனை அது. நீண்டகாலமாக உலகத்தைப் பார்த்ததன்மூலம் அகம் அழுகிப்போனதால் உண்டான நாற்றம்! ஃபுல்லறாவிற்கருகில் மணமகனாக அலங்கரித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மனிதனுக்கு எழுபதிற்குக் குறையாத வயதிருந்தது. எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் அவன் ஃபுல்லறாவைப் பார்த்தான். அந்த பார்வையில் பதினாறு வயதுகொண்ட ஃபுல்லறாவின் இளம் சரீரம் உருகிப்போய் அமர்ந்திருந்தது. அதிகம் தாமதிக்காமல் அவள் சுய உணர்வை இழந்து சாய்ந்து விழுந்தாள்.

மீண்டும் சுயஉணர்வு வந்தபோது, அவளுடன் சேர்ந்து படுத்திருந்த வயதான பெண் அருகில் அமர்ந்திருந்தாள். இடையில் அவ்வப்போது பாசத்துடன் அவள், அவளுடைய நெற்றியைத் தடவிவிட்டாள். தாயைப் பற்றிய நினைவு அதிகமாக வர, ஃபுல்லறா அழ ஆரம்பித்தாள். தேம்பித் தேம்பி அழும் ஃபுல்லறாவைத் தேற்றியவாறு அந்த பெண் கூறினாள்: ""மணமகனோட வயசையும் தோற்றத் தையும் பார்த்துதானே நீ அழறே? இது... பேருக்கு நடக்கக்கூடிய திருமணம் என்பதையும், அந்த மனிதன் பேருக்கு இருக்கக்கூடிய கணவன் என்பதையும் புரியறப்போ உன் கவலையெல்லாம் விலகி ஓடிடும்.'' பிறகு... அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பித்தளைக் குடத்தைச் சுட்டிக்காட்டியவாறு அவள் கூறினாள்: ""வெளிப்படையா சொல்றதா இருந்தா... அதுதான் உன்னோட உண்மையான கணவன்!''

நாட்கணக்கில் ஃபுல்லறா நிறுத்தாமல் அழுதாள். அப்போதெல்லாம் வயதான பெண் தேற்றியவாறு அவளுடன் இருந்தாள். ஒரு நாள் ஆறுதல் கூறும் வகையில் அவள் கூறினாள்: ""நீ என்ன ஒரு முட்டாள் பெண்! இப்போதும் கணவனோட வயசை நினைச்சு கவலைப்பட என்ன இருக்கு? அந்த மனுசன் எந்த சமயத்திலும் உன்னை படுக்கையறைக்குள் அழைக்கல. அதுக்கு அவருக்கு ஆஷாபாய் இருக்காளே! அவதான் அவருடைய மனைவி. ஆனா, ஒரு விஷயம் இருக்கு... ஆணோட காமம் எப்போ... யாரைப் பார்க்கும்போது தோன்றி உயரும்னு சொல்லமுடியாது. ஒருமுறை ஆஷாபாய் பிரசவத்திற்காக தாய்வீட்டுக்குப் போயிருந்தப்ப அவர் என்னைப் பிடிச்சு படுக்க வச்சார். என்னால முடியாதுன்னு சொல்லவும் முடியல. பானிபாயா இருந்தாலும், அவர் தாலிகட்டிய பெண்ணாச்சே நான்! இயலாத நிலை காரணமா நான் இப்போது நீர் கொண்டுவரப் போறதில்லை. ஒருவேளை... என் சரீரத்தோட சுவை அவருக்குப் பிடிச்சிருந்தது காரணமா இருக்கலாம்- பிறகு அவர் என்னை விரட்டியடிக்காம இருந்ததுக்கு... எனக்குப் பிறகும் எத்தனையோ பானிபாய்ங்க வந்து, திரும்பிப் போயிருக்காங்க.

வயதான பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டு தன்னுடைய அழுகையை நிறுத்திவிட்டு, ஃபுல்லறா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். தன்னுடன் அமர்ந்து ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும் வயதான பெண்ணும் கிஷன்லாவின் ஒரு மனைவி என்பதை வேதனையுடன் அவள் தெரிந்துகொண்டாள்.

கிழவி தொடந்தாள்: ""உண்மையிலேயே இது ஒரு வறட்சியான பகுதி. நீர் கொண்டுவர்றதற்கு இரண்டு...

மூணு கிராமங்களைத் தாண்டிப் போகணும். காலையில்ல ஒரு குடத்தோட போனா சாயங்காலம் தான் திரும்பிவர முடியும். அந்த அளவுக்கு அதிகமான நீர் பற்றாக்குறையைச் சந்திக்கக்கூடிய கிராமமா இருக்கறது காரணமா இருக்கணும்- நீரைச் சுமந்து வர்றதுக்காக மட்டுமே "பானிபாய்' மனைவிங்க இங்க உண்டானாங்க. திருமணம் செஞ்சுகிட்டு வர்றதால மாசந்தோறும் சம்பளம் கொடுக்கவேண்டியதில்ல. இரண்டோ மூன்றோ வேளைகளில சப்பாத்தியும் பருப்புக் குழம்பும் கொடுத்தா போதும். ஆனா, ஆட்களுக்கு மத்தியில கிஷன்லாலைப் பத்தி நல்ல அபிப்பிராயம் இல்ல. அதனால அவருக்கு பக்கத்து கிராமங்கள்லருந்து பானிபாய்ங்க கிடைக்கறது சிரமமான விஷயமா இருந்தது. பானிபாயா வந்த ஒரு இளம்பெண்ணை அவர் அடிச்சிக் கொன்னுட்டாருங்கற பேச்சு ஆட்களுக்கு மத்தியில இருக்கு!'' அதற்குமேலும் ஏதோ கூற ஆரம்பித்த கிழவி திடீரென்று அமைதியாகிவிட்டாள். அந்த அமைதி யிலிருந்து ஃபுல்லறா பலவற்றையும் சேர்த்து வாசிக்க முயற்சித்தாள். வறட்சியால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் கண்ணீரும் வற்றிப்போகும் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

5

தூரத்தில் வரிசை வரிசையாக நின்றிருந்த சில மொட்டைக் குன்றுகளுக்கு மத்தியில், ஆரஞ்சு நிறத்தைக்கொண்ட சூரியன் மறைவதை ஃபுல்லறா பார்த்தாள். நேரம் மாலையாகிறது. அந்த ஊரின் பெண்களைப் போல, தலையில் குடத்தை வைத்துக் கொண்டு சீராக நடப்பது இன்னும் ஃபுல்லறாவிற்குப் பழக்கமாகவில்லை.

நீர் நிறைக்கப்பட்ட குடத்தை அவள் இப்போதும் தோளில்தான் வைத்திருக்கிறாள். மிகப்பெரிய பித்தளைக் குடத்தில் நீர் நிறைந்து முடியும்போது, ஃபுல்லறாவின் சரீரத்தால் தாங்கிக்கொள்ளும் அளவையும் கடந்து அதன் கனம் அதிகமாக இருக்கும்.

ஒருநாள் நீருடன் வீட்டின் வாசலை அடைந்ததும், நிலைகுலைந்த ஃபுல்லறா தளர்ந்து விழுந்துவிட்டாள். அதற்காக அன்று ஆஷாபாய் அவளை பலமாக அடிக்கவும் செய்தாள். பிறகு... பிறகு... அவள் அடிப்பதை நிறுத்திவிட்டாள். ஆனால், சாட்டை வாரால் அடிப்ப தைப்போன்ற கெட்டவார்த்தைகளால் திட்டுவது தொடர்ந்தது.

கிஷன்லால் ஒருமுறைகூட ஃபுல்லறாவிடம் பேசியதில்லை. கயிற்றுக் கட்டிலில், சொன்னபடி கேட்கக்கூடிய வளர்ப்பு மிருகத்தைப்போல எல்லா நேரங்களிலும் அவன் இருந்தான். ஆஷாபாயின் கூர்மையான பார்வையை சந்திக்க முடியாமல் அவன் தடுமாறினான்.

மற்ற நாட்களில் இருப்பதைப்போல அன்று அதிகமான வெயில் இல்லை. எனினும், மாதவிலக்கின் சோர்வில் பாதையோரத்திலிருந்த ஒரு மரத்திற்குக் கீழே ஃபுல்லறா ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தாள். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும்போது, வங்காளத்திலிருக்கும் தன்னுடைய கிராமமும், அங்குள்ள நதியும் அவளுக்கு ஞாபகத்தில் வந்தன. தாயின் ஞாபகம் வந்தது. தாயிடம்பேசி எவ்வளவோ காலமாகிவிட்டது! தொலைபேசியில் அழைப்பதற்கு அவளது கையில் காசோ, வழியோ இல்லை. நீர் எடுப்பதற்காச் செல்லும் வழியில் ஃபோன் பூத்தும் இல்லை. விலைமதிப்புள்ள நகையென்று கூறும்வகையில், வெள்ளியாலான ஒரு மூக்குத்தியை மட்டுமே அவள் அணிந்திருந்தாள். மரத்திற்குக்கீழே அமர்ந்திருக்கும்போது, தூரத்தில் ஒருசெம்பருத்தி மரம் பூத்து நிற்பதை அவள் பார்த்தாள். நிறைய சிவப்புநிற மலர்கள் மூடிய மரத்தைப் பார்த்து அவளு டைய இதயம் துடித்தது. அது வசந்தகாலம் என்பதை அவள் உணர்ந்தாள். இனிமேல்தான் வைசாக மாதம் வரும். வைசாகத்தில்தான் கிராமத்திலுள்ள இளம்பெண்கள் நன்கு அலங்கரித்துக்கொண்டு, திருவிழா குதூகலத்துடன் இருக்கக்கூடிய ஹரிசபை கொண்டாட்டம்... தாயிடம் பேசுவதற்கு அவளுடைய மனம் துடித்தது. சிற்றப்பா வந்தால், எப்படியாவது ஊருக்குப் போகவேண்டுமென்று அவள் மிகவும் ஆசைப்பட்டாள்.

மழைக்காலம் வந்து சேர்ந்தது. ஆஷாபாய் மீண்டும் கர்ப்பிணியாகியிருக்கிறாள் என்பதையும், அதிகம் தாமதிக்காமல் தன் தாய்வீட்டிற்குப் பிரசவத்திற்காக செல்வாள் என்பதையும் அவளுடன் இருக்கும் பெண் கூறி, ஃபுல்லறா அறிந்து கொண்டாள். அவளு டைய பெயர் யசோமதி. ஆஷாபாய் இல்லாத வேளையில் காமவெறியைத் தீர்த்துக் கொள்வதற்கு கிஷன்லால், ஃபுல்லறாவைத் தேடிவருவான் என்று யசோமதி கூறியதைக் கேட்டு, அவளுடைய மனதில் பதைபதைப்பு உண்டானது. ஆனால், அதில் எந்தவொரு நடைமுறையற்ற செயலையும் யசோமதி பார்க்கவில்லை. அவ்வாறு நடந்தால், பிறகு வயது அதிகமாகி நீர் சுமக்கமுடியாத நிலை உண்டானாலும், அங்கு இருப்பதற்கான அனுமதி கிடைக்குமென்று அவள் தன் வாழ்க்கையை உதாரணமாகக் காட்டி ஃபுல்லறாவிடம் கூறினாள்.

ஆயுட்காலம் முழுவதும் நீரைச்சுமந்து வாழ வேண்டியதிருக்கும் என்பதையும், யசோமதி யைப்போல கிஷன்லாலுடன் சேர்ந்து படுக்கவில்லை யென்றால் வயதானபிறகு அங்கிருந்து விரட்டியடிக்கப் படுவோம் என்பதையும் நினைத்து ஃபுல்லறா நடுங்கி னாள். சிவப்புநிறப் பூக்கள், அபாய அறிவிப்பைப் போல அவளுடைய கண்களுக்கு முன்னால் நடனமாடின. அடுத்த நொடியே... அங்கிருந்து ஓடித்தப்பிக்கவேண்டுமென்ற ஆசை அவளுக்குள் பலமாக எழுந்தது. நீரைக் கொட்டியபிறகு, அவள் குடத்தைத் தூக்கி வீசியெறிந்தாள். வறண்டு கிடந்த மண் ஆவலுடன் நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டது.

6

நீண்டநேரமாக பிளாட்ஃபாரத்தில் அமர்ந்திருந்த அந்த இளம்பெண்ணையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கோஸ்ஸெ. மராத்திப் பெண்ணின் ஆடைகளை அணிந்திருந்தா லும், முக வெளிப்பாட்டை வைத்து அவள் ஒரு வங்காள இளம்பெண் என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார். மும்பையின் சிவப்புத் தெருவிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு கூட்டம் வங்காள இளம் பெண்களை, கொல்கத்தாவிலிருந்து வந்து சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுடன் அனுப்பிவைப்ப தற்காக அவர் வந்திருந்தார்.

ஹவ்ரா ஸ்டேஷனில் ரயில் வண்டி வந்ததும், எதிர்பார்த்து நின்றிருந்த ஊடகச் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற மறுத்து, மற்ற இளம் பெண்கள் துப்பட்டாவைக் கொண்டு முகத்தை மறைத் துக்கொண்டபோது, ஒருத்தி மட்டும் சாதாரணமாக நின்றிருந்தாள். அடுத்தடுத்துள்ள அவர்களின் கேள்வி களுக்கு உணர்ச்சியற்ற ஒரே வார்த்தையில் பதில் கூறினாள்; "பானிபாய்!'

7

கடக்பூகூருக்குத் திரும்பி வந்த ஃபுல்லறா சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பத்தான் விரும்பினாள்.

ஆனால், ஒவ்வொரு நாளும் முடிய முடிய. எதுவும் பழைய மாதிரி இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். குடிநீர் எடுப்பதற்காகச் செல்லும் போதும், குளிக்குமிடத்திலும் கிராமத்துப் பெண்கள் கிண்டல் நிறைந்த வார்த்தைகளைக் கொண்ட அம்பின் நுனியால் அவளை காயப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் கையிலிருந்த ப்ளாஸ்டிக் புட்டியால் ஃபுல்லறா நீர் வரக்கூடிய குழாயின் உதட்டில் தட்ட, பின்னால் இடைவெளிவிட்டு நின்றுகொண்டிருந்த பெண் கோபப்பட்டு அவளைச் சபிக்கவும் திட்டவும் செய்தாள். அவள் புலம்பினாள்: ""நீயெல்லாம் போய் சாகக்கூடாதா? உன் கைபட்ட குழாயிலிருந்து நீர் எடுத்ததால உண்டான அசுத்தத்தைப் போக்க நான் இனி மறுபடி குளிக்கணும்.''

நிறைய கேட்டுப் பழகிவிட்டிருந்தாலும், எதிர் பாராத ஒன்று நடந்துவிட்டது என்பதைப்போல ஃபுல்லறாவின் கண்கள் நிறைந்து வழிய ஆரம்பித்தன. சிறிதும் அறிமுகமற்ற ஒரு தூர கிராமத்தில், சில நாட்களுக்கு முன்புவரை, பல மைல்களைக் கடந்து கொண்டுவரப்படும் குடிநீருக்காக தாகமெடுத்து ஆசையுடன் காத்திருக்குள் கிஷன்லாலும், அவனுடைய பல மனைவிகளில் ஒருத்தியான ஆஷாபாயியும், அவர்களின் பிள்ளைகளும் ஃபுல்லறாவின் ஞாபகத்தில் வந்தார்கள். வீட்டிற்குச் செல்லவேண்டுமென்றும், தாயைப் பார்க்கவேண்டுமென்றும் கூறி தேம்பித் தேம்பி அழுத இரவுவேளைகளில் அணைத்துக் கொண்டு தேற்றிய யசோதமதி என்னும் கிழவி நினைவில் வந்தாள். ""தாகமெடுக்கறவங்களுக்கு நீர் கொடுக்கறது மாதிரி புண்ணியம் வேறில்லை. அதுக்காக... எல்லாரா லும் பானிபாயாகவும் முடியாது மகளே!'' என்ற அவளு டைய வார்த்தைகள் ஞாபகத்தில் வந்தன. சில மாதங் களின் இடைவெளியில், தன் கைபட்டதால் ஒரே பூமியின் நீர் அமிர்தமாவதையும், அசுத்தமாவதையும் அறிந்து, ஃபுல்லறாவின் கண்கள் நிறைந்து வழிந்தன.