ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்!

சூரியக் கோளம், சந்திரக் கோளம், நட்சத்திரக் கோளம், துருவக் கோளம் என்பதாக அவளும் ஒரு சதைக்கோளம் என்பதே அவனின் ஒற்றை நினைப்பு. அவளுடைய உணர்வுகளும் உணர்ச்சிகளும் அறங்களும் ஏதுமற்ற வெறும் சதை எனில், அவன் நினைப்பு ஏற்றுக் கொள்ளலாம். அவளின் ஊடும் பாவும் நெடுக்கும் குறுக்கும் எல்லாமே அவனே ஊடுருவி இருக்கிறான் என்பதை புரியாமலே யுகங்களைக் கடத்தி விட்டான் யுகாகாந்திரமாக.

அதனால்தான் அவனால் மேய்ச்சல் நிலம் தேடி புறப்பட்டு, வெளியே கண்டெடுக்க முடிகிறது. வீட்டுக்குள் பசுமை கோலமே வாய்க்கட்டும்... நீ வீட்டுக்கு வெளியே குப்பைத் தொட்டி அருகே, சாக்கடை அருகே, தூரத்தில் கிடக்கும் கற்றை புல்லும் அவன் மேய்ச்சல் நிலமாகிறது.

அவனுக்கு அவள்- எந்த ஒரு இறைச்சிக் கடையிலும் வெட்டி வாங்கி, சுகித்து உண்டு முடிக்கக் கூடிய சதைப்பிண்டம். அவளுக்கு அவன் -எந்த சொர்க்கத்திலும் தேடினாலும் பெற முடியாத உயிர் பந்தம். அவனுக்கு அவள்- அந்த வெறி பொழுதுக்கான இருட்டுப்பள்ளம். அவளுக்கு அவன்-

Advertisment

நெறி விழுதுக்கான அழகிய உள்ளம். அவனுக்கு அவள்- தாய், மகள், மனைவி, சகோதரி, சிறு குழந்தை, பெரும் மூதாட்டி. வேறுபாடுகள் ஏதுமற்ற சேலை கட்டிய உருவம். அவளுக்கு அவன்- வாசனை, யோசனை எல்லாவற்றாலும் அடையாளம் உணரக்கூடிய ஒற்றைத் துருவம்.

வரைவின் மகளிர் என்று எள்ளி நகையாடுதல் நியாயம்தானா? சொல்வீர்கள் நியாயமாரே... என்பதே கண்காணாத காலத்திலிருந்து அவளின் கதறல்.

வரைவின் மகன்கள் முகமூடிகளை அம்பலப்படுத்த, இன்றைய பெண் வார்த்தைகள் அச்சப்படுவதில்லை. வீட்டில் இருக்கும் கிளியின் நேசம் போதாமல் கோட்டானைத் தேடிப்போகும் அவனுக்கான கேள்விகள், அவளின் அகவெளி, புறவெளி இரண்டிலும் தெரிகின்றன.

Advertisment

’என்ன செய்ய?/ பழசாகி விட்டது

ரொம்பவே சீக்கிரமாய் உண்டியல்/

aa

அடிக்கடி திறந்து/ சேமிப்பு தீர்ந்து போனது/

கட்டிலில் குலுக்கியே/ காலாவதியானது/

அடிப்பக்கம் அரதப் பழசு/ கீறல் கிழிசல்/

தழும்புகளோடு உண்டியல்/ சோகம் சுகம்

துக்கம் சந்தோசம்/ சகலத்துக்கும்

உண்டியலைத் திறக்கிறான் அவன்/

எப்போது கேட்டாலும் அள்ளிக் கொடுக்க/

அட்சய பாத்திரமா உண்டியல்/

எப்போதும் இளமையாய் இருக்கச்/

சூரியன் இல்லை உண்டியல்/

திறக்க மறுக்கிறது இப்போதெல்லாம்/

அவனின் கோபத்துக்குப் புரியட்டும்/

உண்டியலுக்கும் மனசு உண்டு என/

-அவன் உண்டியல் குலுக்குவதில் பெரும் விற்பன்னன். உத்தியோகம் புருஷ லட்சணம் என்பதாக மொழியை, அவன் கைப்பாவையாக மாற்றியமைத்து, உண்டியல் குலுக்கும் வேலை செய்கிறான். அவளோ இப்படியான வசனம் சொல்கிறாள் காலகாலமாக. என்ன தெரியுமா?

’என் பெற்றோர் பொன்மழையால்

என்னைச் சீராட்டி கண்ணை பறிக்கும்

நவரத்தின மாளிகையில் என்னைக்

குடியமர்த்தினாலும் அது எனக்கு வேண்டாம்.

காட்டில் விறகு பொறுக்கி, கேழ்வரகுக்

கூழாக்கி, உப்பின்றி குப்பைக் கீரையுடன்

தின்ன நேர்ந்தாலும் ஏற்பேன். உண்ணும்

தட்டு கூட அக்கம் பக்கத்தில் இரவலாய்ப்

பெறும் வாழ்வும் சுகமே... கிழிந்த சேலையே

என் சுகானுபவம்... ஆளன் இருக்கும் இடமே

எனக்கு அரண்மனை... என் கண்ணாளன்

அருகிருக்க வாழ்வதே கற்புநெறி வாழ்வு’

-இப்படியாகச் சொல்லும் தங்கத் தமிழச்சிகள் இனத்தில்தான்- தனக்கென வரைவின் மகளிர் என்ற குழாமையே உருவாக்கினான் அவன். கண்ணகியும் தவறு இழைக்கவில்லை. மாதவியும் கிடைக்கவில்லை. தவறுக்கு பொறுப்பாளன் கோவலன். எனினும்- வரைவின் மகளிர் சிலுவை அவளின் முதுகில்.

ஆள்காட்டி விரல் நீட்டி- அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கவிஞர் மாலதியின் சொல் நேர்மையும் சொல் வரமும் கடைசி ஆண் காதுகளுக்கும் கேட்டாலே பெண் அறமாக அமையும். ‘எங்களை வியர்வைத் தேனடை/

மூலதனங்களை/ உயிர் வடிப்பில் தருகிறோம்/

எங்கள் கணவன்மார்களை/

எங்களுக்கே திருப்பித் தாருங்கள்/

எங்கள் இனியவராக/

வெற்றிலைச் சாற்று உதடுகளின்/

உலர்வு போல் இயல்பான/

ஆயிரமாயிரம் பல இரவுகளைக் கொண்டு/

கால்மாட்டில் வையுங்கள்/

கற்பைப் பற்றின உங்கள்/

மலைப் பிரசங்கத்தில்/

கலந்துகொள்ள வருகிறோம் நாங்கள்/

-இந்தக் குரலின் தொனியும் கற்பிதங்களைத் துச்சமென உதறும் துணிவும், தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புதிதானவை.

தன் வீட்டில் இல்லாமல்- அடிக்கடி காணாமல் போகும் அவனைத் தேடுகின்ற குரல் இது. தண்டோரா போட்டு முரசறைந்து, காற்றினைத் தூது அனுப்பி, கதவுகளைத் தட்டிக் கட்டில்களை வேவு பார்க்கின்ற வேலையும், உத்தியோகமும் பெண்ணுக்கு காலாதீதமாக நிகழ்கிறது.

‘அவனைக் காணவில்லை’ ’காணவில்லை’

என்று அவள் ஏன் தேடுகிறாள்? அவன் -

அவளிடம் நிறைவு காணாமல். அவன் -அவளிடம்

குறைவு காண்பதால். குழந்தை பெற்றெடுத்த

அவள் பச்சை உடம்பு, அவனுக்கு குமட்டுகிறது.

அவனது காமமுத்திரையாக, அவனது இச்சை முத்திரையாக அவள் வயிற்றில் குடியேறி இருக்கும் பிரசவத் தழும்புகள் அவனுக்குக் குமட்டுகிறது.

எனவே அவன் புத்திளம் பெண்மை தேடுகிறான். இதைத் தேடித் தேடி தான் தொலைந்து போவதை இத்தனை நீளமான காலப்பரப்பில் , அவளது பெருமை, கௌரவம், ஆண்மை, வீரம் இன்னபிற ஜரிகை சொற்களால் தன்னைத் தானே சிலாகித்துக்கொண்டான்.

இனியும் இந்த சிலாகிப்பு ஏற்கப்படாது. சானதன அரிப்பு ஏற்கப்படாது. மேய்ச்சலே பொதுகுணம் என்கிற சிலபல சமாதானங்களும் ஏற்கப்படாது.

’குழந்தைகளைப் பெற்றதற்குப்/ பிந்தைய

இரவுகளில்/ பழகிய நிர்வாணத்துக்கு இடையில்

அதிர்ச்சியுற்றுத் தேடுகிறாய்/ என் அழகின்

களங்கமின்மையை / பெருத்த உடலும்/

பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்/

ரொம்பவும்தான் அறுவெறுப்பூட்டுவதாய்ச்

சொல்கிறாய்/ இன்றும் இனியும் எப்போதும்

மாறுவதில்லை எனது உடல் என்றும்/

இதற்கு முன்னும் கூட/ உன் குழந்தைகள்

வேறு எங்கெங்கோ/ யார் யாருக்கோ

பிறந்திருக்கலாம்/ உன்னிடம் தடயங்கள்

இல்லை என்பதால்/ நீ பெருமை கொள்ளலாம்

உன்னிடம் இருந்து தானே தொடங்கிற்று/

என் தோல்விகள் முதலாவது நிலை’

- அவள் சிறு துளியும் மிச்சம் மீதியின்றி தன்னை அளிக்கிறாள். அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது அவளது உடல். முழுதும் உழுது உழுது விதைக்கப்பட்டு, அறுவடை செய்யப்படுவது அவளது உடல். விதைப்பது அவன் செயல்.

சரி செய்யட்டும். ஆனால் தனது நிலத்தில் மட்டுமே விதைக்க வேண்டும் என்பது அவனுக்கு புரிவதில்லை. நிலம் கண்ட இடமெல்லாம் அவனின் விதைப்பு நிலமே என அவன் கருதுவது, இன்றல்ல. நேற்றல்ல. நாளையும் அல்ல. எக்காலத்துக்குமான அவனது அறமற்ற செயல்.

’நீ எல்லோருடைய ஆசை நாயகன் ஆவாய்/

நீ யாரிடம் போனாலும்/ கழுகைப் போல

சதையை புசிப்பாய்/ விலைமாதின்

உடம்புக்கும் காதலிக்கும் உனக்கு/

வித்தியாசம் புரியாது/ காதலை விட/

உனக்கு போகம் பிடித்திருக்கிறது/

சமுத்திரத்திற்கு சாக்கடைக்கும் உனக்கும்/

வித்தியாசம் தெரியவில்லை/ நீ வெறுக்கும்

ஆசைநாயகன் ஆவாய்/ எல்லாருடையவனாகவும்/

இருக்கிற அவன்/ என்றும்/

என்னுடையவன் ஆவதில்லை’

- இப்படியாக மறுதலிக்கிற குரலாக தஸ்லீமா நஸ்ரின் ஒலிக்கிறார். பிறர்மனை நோக்கா பேராண்மையை விதந்தோதிப் பேசும் இலக்கிய மரபு இருந்தாலும்- ஒரு விஷ முள் விருட்சமாக வளர்ந்திருப்பது இந்த மண்ணியில் தான்.

வீடு அவளுக்கானது. சரி. எந்த ஒரு பெண்ணும் படிதாண்டாப் பத்தினியாகவே கரியானாள். உலகம் அவனுக்கானது. சரி. படிதாண்டுதலே அவனின் கடமை, உரிமை, ஆண்மை என்று வெற்றி மாலையாக்கியதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? என்ற அவ்ள் கேள்வியும் சரிதானே? அவனை எண்ணிப் புலம்பெயராது, அவனைத் தேடி தெருக்களில் இறங்கித் தேடுதல் வேட்டை நடத்தக் கூடாது என்று பெண்ணின், தேடும் பாதங்களை முடக்கிப் போட்ட சமுதாயமும் நான் தான்.

’நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,

விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,

நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,

குடி முறை குடி முறை தேரின்,

கெடுநரும் உளரோ, நம் காதலோரே?’

-வேறெங்கும் அவன் போயிருக்க மாட்டான்.

ஒவ்வொரு வீடாகத் தேடிப்பார்த்தால் கண்டுபிடித்து விடக் கூடிய, காம உருண்டை தான் அவன் என்று தீர்மானம் மொழிகிறாள் அவள். காலகாலமாக இந்த சத்தியப்பிரமாணம் பெருமையா? சிறுமையா? அவமானம் அவளுக்கா? அவனுக்கா? கேள்விகள் துரத்தினாலும் தனது மேய்ச்சல் நிலப்பரப்பை, விஸ்தீரண எல்லைக் கற்களை, விசாலப் படுத்துவதே அவனின் வாழ்வியலாக இருக்கிறது.

இதற்குச் சிவப்பு விளக்கு சத்தியப் பிரதேசங்கள் சாட்சி கூறுகின்றன.

இப்படியான அலைவுறும் ஆண் காற்றுக்கு அவள் என்னவெல்லாம் செய்கிறாள்?

’எனது கன்னங்களில் கண்ணீர் துளிகள் எனது கண்களில் கண்ணங்களில் கண்ணீர்த் துளிகள்

உருண்டோடினாலும்/ அவனுக்காக நான்/

சப்பாத்தி சுடவேண்டும்/ புனித தீர்த்தம்

போலும்/ நாற்றம் பிடித்த அவன் உடலின்

திரவங்களை/ நான் நக்கி குடிக்க வேண்டும்/

மெழுகுபோல் நான் உருக வேண்டும்/

வாழ்நாளெல்லாம் அவனுக்கு- நான்

என் கர்ப்பை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும்’

- சமூகச் சட்டங்கள், சட்டகங்கள், அவளை இந்த இறுக்கத்திற்குள் ஆணி அறைந்து மாட்டுகின்றன. நம் மாபெரும் தலைவன் கோவலன் கூடப் பெண் கற்போடு இருத்தலே பேரறம் என்று சொல்லுவது நகைச்சுவையாகத் தெரியவில்லையா?

’கன்னி தன்னைப் புணர்ந்தாலும்,

புலவாய்; வாழி காவேரி!

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்,

புலவா தொழிதல் கயல் கண்ணாய்!

மன்னும் மாதர் பெரும் கற்பு என்று

அறிந்தேன்; வாழி காவேரி!’

-இது கோவலன் புளகாங்கிதம். மாதவியின் உளங்காகிதம் இப்படிச் சொல்கிறது.

’எல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல்

வளையாமை’

- உண்மையை உரத்துச் சொன்னதுமே மாதவி,

‘மாயப்பொய் பல கூட்டும் மாயத்தால்’ ஆகிவிடுகி

றாளே... அடடா... அடடா... எப்படித்தான் வியப்பது ஆண் நீதியையும் ஆண் அநீதியையும்? எப்படித்தான் நயப்பது ஆண் பரத்தமையையும், வரைவில் மகன்களையும்?

ஆனால் ஒரு நெருடல் தான் இன்றுமே வாழ்வியலாக இருக்கிறது. அவள் தரும் பொதுமன்னிப்பு - கண்ணகி மன்னித்தாள்- சீதை மன்னித்தால்- மாதவி மன்னித்தால்- கூடையில் வைத்துப் பரத்தையிடம் கணவனைக் கூட்டிச் சென்ற நளாயினி மன்னித்தாள்.

’பாய்கள் விரிகின்றன;

மனைவியின் மன்னிப்பில்’

-இது தமிழகக் குரல்.

‘நீ எனக்கு விசத்தைக் கொடுத்தாய்/ நான்

உனக்கு எதைத் திருப்பித் தருவது/ நான்

உனக்கு என் காதல் வெளியைத் தருகிறேன்/

அதன் கடைசித் துளிவரைக்கும்’

-இது உலகக்குரல். மன்னிப்புச் சமுத்திரம் வற்றிப்போகாமல், அவளின் இதய ஈரம் நீர் சுரக்கும். இந்த உண்மை தெரிந்துதான் அவன் அடிக்கடி காணாமல் போகிறான்.

’அழகி பிடிபட்டாள்/

தலைப்புச் செய்தி/ சரி/

கூட இருந்த அழகன்/

என்னவாணான்?’

-இந்தக் கேள்விக்கான சமூகநீதியின் பதில், சட்டம் ஆகும் வரைக்கும் அவள்மீது கல்லெறியாமல் இருக்கட்டும் சமூகம். ஆண் வார்த்தைகளால் கட்டமைக்கப் படாமல் இருக்கட்டும் பெண் நீதி.

’இன்று வந்திருக்கிறாய் நீ/

துணை இழந்து/ நிழலின்றி/

உனக்கு ஒரு ஆறுதல் தேவை/

ஒரு மாறுதல் தேவை/

ஒரு துணைவி தேவை /

பாவம் நீ அறிய மாட்டாய்/

எனக்குத் துணை தேவையில்லை’

-இப்படி இடது கையால் ஆண் காற்றை ஒதுக்கிப் புறந்தள்ளவும் அவளுக்குத் தெரியும்.

‘‘யாரை யோநிற் புலக்கேம் வாருற்று...

சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ?’.

- அவள் வீட்டுக்கு திரும்பிச் செல். என்னுடன் சேராது என்று பெண் நீதி சொல்கிறது. சங்கக் குரல். காலகாலமாக அக்கரைப்பச்சையில், மேய்ச்சல் செய்யும் மந்தை கூட்டம் திருந்தட்டும். சிவப்பு விளக்கு இனியும் காம விளக்கு அல்ல. அது எச்சரிக்கை விளக்கு. நீதி விளக்கு.

(சுடரும்)