வருக்கு குதிரைகள் பிடிக்கும்.

தன்னை ஒரு பந்தயக் குதிரையாக, வெற்றிக் குதிரையாக, சக்தி வாய்ந்த குதிரையாக நினைத்துக் கொள்வதும் பிடிக்கும். குதிரை படம் வரையவும் பிடிக்கும். அதனால்தான் இரும்புக் குதிரைகள் என்று தொடர்கதைக்கு தலைப்பும் வைத்தார்.

பல வாசகர்களை மேம்படுத்திய, பல வாசகர்களை நல்வழிப்படுத்திய, பல வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றிய மாய எழுத்துக்குச் சொந்தக்காரரான இந்த எழுத்துக் குதிரை கடைசி வரை நுரை தள்ள ஓடிக் கொண்டேயிருந்தது. உடல் பிரச்சினைகள் இல்லையென்றால் இன்னும் ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கும்.

பாலகுமாரன் மீது அவரின் எழுத்தின் காரணமாக ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது. அவர் கதைகளில் நான் படித்த முதல் கதை ஒரு குறுநாவல். "ஏதோ ஒரு நதியில்...' என்று தலைப்பு. அதே மோனா இதழில் இன்னொரு குறுநாவல் "எங்கோ ஒரு இரவில்...' என்கிற தலைப்பில் சுப்பிரமணிய ராஜு எழுதியிருந்தார்.

Advertisment

பாலகுமாரனின் அந்தக் குறுநாவல் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அதன் பாத்திரங்கள் பளிச்சென்று என் மனதில் ஒட்டிக்கொண்டன. ஒரு பிடித்த சங்கீதம்போல மனதிற்குள் சுற்றிக்கொண்டே இருந்தது. அவரின் பல கதைகளை தேடிப் படிக்க வேண்டும் என்று உந்துதலை விதைத்த கதை அது.

அவருடைய எழுத்துக்களில் கண்டிப்பாக அவர் இருப்பார். பாத்திரங்கள் மிகவும் பக்குவமாக சிந்தித்துப் பேசும். தர்க்கம் செய்யும். அனைத்துப் பிரச்சினைகளையும், சூழ்நிலைகளையும் நுணுக்கமாக அலசும். சிநேகமாக உரையாடும். கொஞ்சிக் கொஞ்சிக் காதலிலிக் கும். படிப்பவர்களுக்கு இப்படி ஒரு சிநேகிதி, காதலிலி, தோழன் நமக்கில்லையே என்று ஏங்க வைத்து விடுவார். தன் எழுத்தின் மீது ஒரு பரிபூரண கமாண்ட் அவருக்கு உண்டு. எதையும் குரலுயர்த்திச் சொல்வார். சட்டமன்றத்தில் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. மாதிரி ஆணித்தரமாகச் சொல்வார்.

பாலகுமாரனின் கதைகளில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும், கடுமையான விவாதங்களை ஏற்படுத்தும். இரண்டு அணிகளாகப் பிரிந்து வாதிடச் செய்யும். இதெல்லாமே ஒரு எழுத்தாளனுக்கு வெற்றிதான்.

Advertisment

அப்போது நான் பத்து பன்னிரண்டு சிறுகதைகளே எழுதியிருந்த சமயம். எதை எழுத வேண்டும், எதை எழுதக்கூடாது என்றும் எதை எப்படி எழுத வேண்டும் என்றும் எந்த சூத்திரங்களும் அறியாத நிலை. எழுத்து பழகாத பால பருவம்.

நான் எந்த எழுத்தாளரையும் அதுவரை சந்தித்த தில்லை. ஆனால் பாலகுமாரனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்தக் கதையைப் பாராட்டி சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவருடன் முதல் சந்திப்பு சென்னையில் எதேச்சையாக ஒரு திருமண வீட்டில் நிகழ்ந்தது.

அங்கே பாலகுமாரன் வந்திருக்கிறார் என்பதை தூரத்திலிலிருந்து பார்த்துவிட்டாலும், அருகில் சென்று பேசத் தயக்கம். ஒரு இயல்பான கூச்சமும் இருந்தது. தயங்கித் தடுமாறி தவிர்த்தபடி இருந்தபோது இருவரும் உணவு ஹாலுக்குச் செல்ல ஒரே லிஃப்ட்டில் நுழைகிறோம்.

இப்படி ஒரு தனிமையான ஒரு சந்தர்ப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. பேசிவிட்டேன்.

""சார்... நான் பட்டுக்கோட்டை பிரபாகர்... உங்க...''

அவ்வளவுதான் ஆரம்பித்தேன். அதற்குள்...

balakumaran

""ஓ... நீதானா அது? படிச்சேன். உன் கதை எல்லாம் தொட்டா டப்புன்னு உடைஞ்சி போற முட்டை ஓடு மாதிரி இருக்கு.'' என்றார் படபடவென்று.

அதற்குள் லிலிஃப்ட் மேல்தளத்திற்கு வந்துவிட்டதால் வெளியேறி அவர் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விட்டார்.

எனக்கு கோபமென்றால் அப்படி ஒரு கோபம். இவர் கதையை மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டுமென்று நினைத்தால்... இப்படி என் கதைகளைக் கிழித்து விட்டாரே... அதுவும் இவர் எப்படி என்னை ஒருமையில் பேசலாம்... என்று கடுப்பாய் இருந்தது.

அந்த திருமண வீட்டிலிலிருந்து மீண்டும் அவர் கண்களில் பட்டுவிடாமல் வெளியேறினேன்.

ஊரில் என் சில நண்பர் களிடம் சொன்னபோது...

""வித்யா கர்வம் சில பேருக்கு இயற்கையா இருக்கும். ஜெய காந்தன்கூட இப்படித்தான். எல்லாரும் ஒரேமாதிரி இருக்க மாட்டார்கள்'' என்று என்னை சமாதானப்படுத்தினார்கள்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு...

திடீரென்று ஒரு நாள் பாலகுமாரனிடமிருந்து ஒரு கடிதம். முகவரி பார்த்ததுமே திக்கென்றது. என்னடா இது... இப்போது கடிதம் மூலம் திட்டப் போகிறாரா என்ற பதட்டத்துடன்தான் பிரித்தேன்.

மிக அழகான கையெழுத்தில் தன் கைப்பட ஒரு முழு பக்கத்திற்கு விகடனில் வந்திருந்த என் ஒரு சிறுகதையைப் பாராட்டி எழுதியிருந்தார்.

கடைசியில் கையெழுத்துக்கு அருகில் ஒரு குதிரை படமும் போட்டிருந்தார். அவர் ஓவியம் வரைவதிலும் புலிலி என்று அந்தக் குதிரை சொன்னது.

என்னால் நம்பவே முடியவில்லை. உடனே நெகிழ்ந்து போய் பதில் கடிதம் எழுதினேன்.

அன்றைக்கு ஏன் திட்ட வேண்டும்? இன்றைக்கு ஏன் பாராட்ட வேண்டும்? அவரைப் பொருத்தவரை நான் அவருக்கு நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. என் படைப்பு குறித்துதான் அவரின் விமரிசனம். அது தனி நபர் துவேஷமில்லை. "நல்ல படைப்பை உன்னால் தர முடியுமே' என்கிற ஒரு உரிமையான தார்மீக கோபம்... சக நேசம்.

இதெல்லாம் அப்போதுதான் புரிந்தது. என்னையே நான் நொந்துகொண்டேன்.

அந்தக் கடிதம் அவரின் மனதில் என் மீது உள்ள சிநேகத்தையும்... உண்மையான திறமையை மனம் விட்டுப் பாராட்டும் அவரின் நாகரிகப் பண்பையும் வெளிப்படுத்தியது. எனக்கு அவர் மீது கொஞ்சூண்டு இருந்த ஒரு சின்ன விலகல் மனப்பான்மை அன்றோடு விலகிக்கொண்டது.

prabhakar

அதன் பிறகு அவரின் பல படைப்புகளுக்குள் பாலகுமாரன் என்கிற எழுத்தாளனுக்குள் இருக்கும் மனிதம் மிக அழகாக வெளிப்பட்டு மிகவும் ரசிக்க வேண்டிய ஒரு கேரக்டராகவே அவர தெரிந்தார்.

சென்னையில் நான் குடியேறியதும் பல சந்திப்புகள். அந்த முதல் சந்திப்பின் தடயம் கொஞ்சமும் என்னிடமும் இல்லை. அவரின் புத்திசாலிலித்தனமான பேச்சும், தோளில் கைபோட்டு உரிமையுடன் ஒருமையில் பேசும் நட்பின் நெருக்கமும் முரணாகவே படவில்லை.

சுபாவுடன் இணைந்து பத்திரிகை நடத்தத் துவங்கியபோது நாங்கள் மூவருமாக அவரை அவர் வீட்டில் சந்தித்தோம். மொட்டை மாடியில் நாற்காலிகள் போட்டுக்கொண்டு காபி சாப்பிட்டு மணிக்கணக்கில் பேசினோம். அப்போது எனக்கு வேறு ஒரு விஷயத்தில் திக்கென்று இருந்தது.

டீப்பாய் மீது இருந்த ஆஷ்ட்ரே நிரம்பி வழிந்தது. ஒரு சிகரெட் முடிய அதிலிருந்து அடுத்த சிகரெட், அது முடிய... இதிலிலிருந்து இன்னொன்று என்று தொடர, செயின் ஸ்மோக்கராக இருந்தார்.

எங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து நாவல்கள் எழுதச் சொல்லிலிக் கேட்டுக் கொண்டோம். உடனே நண்பர் ஒளிந்துகொண்டு சாமர்த்தியமான புதிய பாலகுமாரன் களத்திற்கு வந்தார்.

""பத்திரிகையின் சர்க்குலேஷன் என்ன? ஒரு புக்குக்கு என்ன லாபம் வருது? அதுல எவ்வளவு குடுப்பே?'' என்று லாஜிக்கலாக லௌகீகம் பிரமாதமாகப் பேசினார்.

இந்த விஷயத்தில் பாலகுமாரன் படுகெட்டி, அவரை யாரும் ஏமாற்றிவிட முடியாது. சுஜாதாவுக்கு நேர் எதிர்.

முதலில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத சம்மதித்தார். "என்ன தலைப்புல எழுதலாம்' என்றார். அவருக்கு குதிரைகள் பிடிக்கும் என்பதால் "மேய்ச்சல் மைதானம்' என்கிற தலைப்பில் எழுதுங்களேன் என்றோம்.

அவருக்கு அந்தத் தலைப்பு மிகவும் பிடித்துவிட்டது. மிக அற்புதமான கட்டுரைகளை எழுதித்தந்தார்.

பாக்கெட் நாவல் அசோகன் எனக்கும், ராஜேஷ் குமாருக்கும் மியுசிக் அகாடெமியில் ஒரு பாராட்டு விழா நடத்தினார். விழாவுக்கு தலைப்பு கேட்டபோது வாசகர்களால்தான் நாம்... அதனால் "உங்கள் விழா' என்று பெயர் வையுங்கள் என்றேன். அதே தலைப்பில் அந்த விழா மிக பிரமாண்டமாக நடந்தது.

வெளியூர்களிலிருந்தெல்லாம் வாசகர்கள் திரண்டு வந்து... அரங்கம் நிறைந்து வெளியே டெலிவிஷன்கள் வைத்ததில் அங்கு நின்றுபார்த்தார்கள். என்னையும், ராஜேஷ்குமாரையும் அரங்கத்திற்குள் நுழையவே முடியாமல் வாசகர்கள் மொய்த்துக் கொண்டார்கள். (நிஜம்மாங்க!) அந்த விழாவில் பாலகுமாரன் பேசினார்.

ஒவ்வொரு வார்த்தையிலும் வாஞ்சையுடன் புகழ்ச்சி இருந்தது. தன் மனைவி என் ரசிகை என்றும், என்னைப் போல ஒரு துப்பறியும் நாவல் எழுத முடியுமா என்று அவர் சவால் விட்டதாகவும், அதற்காக ஒன்று முயன்று பார்த்ததாகவும், ஆனால் அவரின் துப்பறியும் கதைக்கு குடும்பக் கதைகளுக்கிருந்த அளவுக்கு வரவேற்பில்லை என்று பகிரங்கமாகச் சொன்னார்.

என் இல்லத் திருமணங்களுக்கு வந்திருக்கிறார்.

அவரில்லத் திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன். திரைத் துறையில் சில காரணங்களால் சில படங்கள் எழுத முடியாமல் போகும். போனில் அழைத்து "நீ எழுதாத அந்தப் படத்திற்கு என்னைக் கேட்கிறார்கள்... எழுதவா, உனக்கொன்றும் ஆட்சேபணையில்லையே?' என்று கேட்டிருக்கிறார். இது அவர் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. கூடவே உனக்கு எவ்வளவு பேசினார்கள் என்றும் கேட்பார். நான் நெளிவேன். "யோவ்... நான் ஏமாந்துடக் கூடாது பாரு... சும்மா சொல்லு' என்று வரவழைத்துவிடுவார்.

அவருக்கு உடல்நிலை சுகமில்லாதபோது ஒரு முறை சென்று நேரில் சந்தித்தேன். அவரின் உடல் மட்டுமே சோர்ந்திருந்தது. மனதில் அந்த எழுத்து வெறி, அந்த ஜோதி அப்படியே சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

அடுத்தடுத்து அவர் எழுத வைத்திருக்கும் திட்டங்களை எல்லாம் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார். "ச்சே!' இந்தாளு ஒரு எழுத்து ராட்சசன்யா!' என்று தோன்றியது.

சினிமாவிலும் சாதிக்க ஆசைப்பட்டு முறையாக இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி சினிமா கற்றுக்கொண்டவர் அவர். இயக்குனர் மணிரத்னம், சங்கரின் பல வெற்றிப் படங்களுக்கு இவரின் திறமை எந்த அளவிற்கு உதவிகரமாக இருந்தது என்பதை எல்லோருமே அறிவார்கள். கதை விவாதங்களின்போது பாலகுமாரன் அருவிபோல கொட்டும் காட்சிகளைக் கேட்டு பல உதவி இயக்குனர்கள் பிரமித்ததை இன்றும் புகழ்ந்து பேசுவதுண்டு.

"இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' என்கிற தலைப்பில் அவரின் சினிமா அனுபவங்களை அவர் தொடர் கட்டுரையாக எழுதியிருந்தது பல இளைஞர்களுக்கு நடைமுறை வழிகாட்டியாகவும் ஆலோசனை சொல்லும் ஒரு தோழனாகவும் அமைந்திருந்தது. அந்தத் தலைப்பு மிகவும் பிரபலமாகி அதை ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாக வைக்கும் அளவிற்குப் பிரசித்தி பெற்றது.

ஆன்மிகத்திலும் அதிகமான நாட்டம் கொண்டு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த பாலகுமாரன் இனி புதிதாக எதையும் எழுதி சாதித்துக் காட்ட வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. அவரின் நூற்றுக் கணக்கான புத்தகங்கள் விற்பனையில் சாதனை புரிந்து வருகின்றன. அந்தப் படைப்புகளின் மூலம் அவர் காலம் கடந்தும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தானிருப்பார்.

ஜீரோ பப்ளிகெஷன்ஸ் நிறுவனம் தமிழில் நல்ல படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட இறங்கி யிருக்கிறது. அதில் என் படைப்புகளும், பாலகுமாரனின் படைப்புகளும் முதல் அறிமுகங்களில் இருந்தன. அதன் விழாவில் பெருமையாக அமர்ந்திருந்தார்.

மிக சமீபத்தில் விகடன் ஒரு எழுத்தாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து கட்டுரையாக்கியது. அந்தச் சந்திப்பின்போது நெடுநேரம் பாசத்துடன் பேசிக் கொண்டிருந்தார். உடல்நிலை பிரச்சினைகள், வயதின் முதிர்ச்சி இதெல்லாம் மீறிய அவரின் கமிட்மெண்ட் அன்றும் பளிச்சிட்டது.

இன்னும் தான் செய்யப்போகிற படைப்பு முயற்சிகளை விழிவிரியச் சொன்னார். என்ன நினைத்தாரோ அன்று எல்லோருக்கும் தன் கையெழுத்திட்டு இரண்டிரண்டு புத்தகங்கள் கொடுத்தார். ஒவ்வொருவருடனும் தன் சொந்த போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

"ரொம்ப நாளாச்சி, உங்களோட மணிக்கணக்கா உக்காந்து பேச ஆசை சார். உங்க உடல்நிலை, எழுத்து வேலைகள் காரணமாதான் வரலை' என்றேன்.

"உனக்கென்னப்பா... அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. எப்ப வேணா வா' என்றார்.

ஆனால் இறுதி மரியாதை செலுத்தத்தான் போவன் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.