பார்த்தால் சமூகம் முகம் திருப்பிக்கொள்ளும் இடத்திலிருந்து தொடங்கி, இவரை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா... இவரது பழக்கம் நமக்கு கிடைத்துவிடாதா என்று பலரும் ஏங்கும் உயரத்தைத் தொட்டிருக் கிறார் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ். இந்த மாற்றத்தை கலையின் துணைகொண்டு அவர் சாதித்திருக்கிறார்.

அவரது பாதையில் கிடந்த முட்கள், மலர்களாக மாறிய புதிரின் விளக்கமே இந்தக் கட்டுரை!

பத்து வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத் தினால் உலகம் அறியாமல் மறைவாக அழுது கண்ணீர் வடித்த அந்த செந்தாமரை முகம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது தாமரை திரு (பத்மஸ்ரீ) விருதினால். எட்டி விடும் தூரத்தில் வெற்றிகளும் இல்லை -அதை விட்டுவிடும் தூரத்தில் நானும் இல்லை என்று விடாமல் போராடி வெற்றிக் கனிகளைத் தொடர்ந்து பறித்துக்கொண்டே இருப்பவர் பத்மஸ்ரீ கலைமாமணி டாக்டர் நர்த்தகி நடராஜ்.

d

Advertisment

கனவுகளும் கற்பனைகளும் நிறைந்தது மனித மனம். ஆணோ பெண்ணோ ஒவ்வொருவரும் அவரவர்க்கான கற்பனைகளின் ஊடாக வாழ்ந்து முடிக்கின்றனர். இளமை முதலே அப்படிப்பட்ட கற்பனைகளுடன் வாழ்ந்தவர்தான் நடராஜ். அதீத கற்பனைகளுடன் வாழ்ந்த அந்த இளம் மனது காயப்பட்டுப் போக இந்த சமுதாயம் பெரும் காரணமாக இருந்துள்ளது.

உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையில் நடைபெற்ற போராட்டம் ஒருபுறம்; உறவுகள், சமுதாயம் என்று எல்லோரின் அவமதிப்பு, ஏளனம், நகைப்பு எல்லாம் ஒருபுறம். இடையில் தவித்துத் தள்ளாடியது அந்த இளம் மனம். தன்னுள் இருந்த உணர்வுகள் இன்னதென்று புரிந்தும் புரியாதும் இருந்த தன்னைப் புரிந்து கொள்ளாத சமுதாயத்தை விட்டு விலகி வாழ ஆரம்பித்தார் நடராஜ்.

இந்த உலகத்தோடு ஒட்ட முடியாத அந்த சீவனுக்குத் தோள் கொடுத்தது அதே போன்ற ஒரு சீவன். அது புதிய சக்தியைக் கொடுத்தது இந்த நடராஜுக்கு. மெல்ல மெல்ல உருவானாள் நர்த்தகி. இந்த நர்த்தகியை உருவாக்கித் தந்தது ஒரு சக்தி.. அது அவரது தோழி சக்திம்மா என்னும் சக்தி பாஸ்கர்தான். நான் நடனம் ஆடுவதால் எனக்கு பெண்மை வந்துவிட்டதோ என சொல்வார்கள். ஆனால், உண்மையில், என் பெண்மையை எடுத்துச் செல்வதற்கான களமாகத்தான் நடனத்தை எடுத்துக்கொண்டேன் என்று கூறும் நடராஜ் தனக்குள் இருந்த பெண்மையையும் நடனத்தையும் உணர்ந்த தருணமும் இதுவே.

ஒவ்வொரு நடனக்கலைஞருக்கும் ஆரம்பகால ஆசிரியர் ஒருவர் இருப்பார். நடராஜுக்கு பலர். வைஜெயந்தி மாலா, லலிதா, பத்மினி, ராகினி, குமாரி கமலா அத்தனை பேரும் நடன ஆசிரியர்களாய் நர்த்தகிக்கு நடனம் கற்றுக் கொடுத்தனர் நிழல் வடிவில். நர்த்தகியின் நடனப்பள்ளி திரை அரங்குகள்தான். வைஜெயந்தி மாலாவின் ஆசிரியர் கே.பி.கிட்டப்பாபிள்ளையிடம் நடனம் பயில கனவு கண்டார் நர்த்தகி. அவர் வீட்டின் முன்பு நாள்தோறும் தவமிருந்தார். ஓராண்டு கால தவத்திற்குப் பிறகு அந்தக் கனவு பலித்தது. தஞ்சை நால்வர் பரத நாட்டிய முறைகளை கற்றுக் கொடுத்த நடராஜின் குரு கே.பி.கிட்டப்பாபிள்ளையே 'நர்த்தகி' என்ற பெயரைச் சூட்டினார்.

"உங்களைப் பார்த்துதான் என் வாழ்க்கை தொடங்கியது, ஒப்பனை, அடவு, நாட்டியம் எல்லாம் உங்களை நினைத்தே செய்வேன். உடல்தான் என்னுடையது. உள்ளே இருக்கும் உயிர் உங்களுடையது' என்று வைஜெயந்தி மாலா பாலி அவர்களிடம் பின்னாளில் நெஞ்சு நெகிழ்ந்து கூறிய நர்த்தகியின் கனவு வைஜெயந்தி மாலா முன்பு ஆட வேண்டும் என்பது. அதுவும் நனவானது ஓர் நன்னாளில்.

பிற நாட்டின் நடனங்கள் உடலால் ஆடப்படுவது. பரதக்கலையோ உணர்வால் ஆடப்படுவது என்று கூறும் நர்த்தகி தமிழின் சங்கத் தமிழ்ப் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள், சைவத்தமிழ்ப் பாடல்களான தேவாரம், வைணவத் தமிழ்ப் பாடல்களான நாலாயிர திவ்ய பிரபந்தம், பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என பலரின் பாடல்களுக்கு மேடையில் உயிர் கொடுக்கிறார்.

p

அவருக்குள் இருந்த காதல்தான் அவரைப் பெண்களே பொறாமை கொள்ளும் கொள்ளை அழகாக வைத்திருக்கிறது. நிறைவேறாத அந்தக் காதல்தான் அவரை ஆழமாகப் பரதத்தில் புதைத்துள்ளது. காதலை மறக்க மாற்று மருந்து நடனம் ஒன்றே என்று கூறும் நர்த்தகிக்கு நடனம் நடனம் நடனம். நடனம் மட்டும்தான் பேச்சு, மூச்சு எல்லாம். அதிலும் நாயகன் நாயகி பாவம் என்று கூறப்படும் காதல் ரசத்தை அதாவது சிருங்கார ரசத்தை தன் உள்ளத்துக் காதலோடு குழைத்து உணர்வு சொட்டச் சொட்ட வடித்துக் காண்பவரைக் காதல் வயப்பட வைத்துவிடுகிறார். இவரது தனிச் சிறப்பு தமிழிசை நடனத்தையும் தஞ்சை நால்வர்மரபின் அரிய நாட்டிய வகைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது.

““Dance is a vehicle to uplift women, and womanhood is also a vehicle for dance என்று கூறும் நர்த்தகி நாட்டியத்தையும் தன் பெண்மையையும் நெகிழ்ந்து போற்றுகின்றார். பெண்களாகப் பிறந்தவர்கள் பெண்மையை இந்த அளவு உணர்ந்திருப்பார்களோ அல்லது நேசித்திருப்பார்களோ என்பது ஐயமே. ஆணாகப் பிறந்து பெண் உணர்வுகளைத் தாங்கி வாழ்வது எவ்வளவு மன வேதனையான வாழ்க்கை. உறவுகளையும் உறவுகளின் நேசத்தையும் எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது அந்த உள்ளம். எழுபது எண்பதுகளில் பால்திரிபு உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளாத சமுதாயம். அன்றே சந்திப்பிழை போன்ற

சந்ததிப்பிழை நாங்கள்...

காலத்தின் பேரேட்டைக்

கடவுள் திருத்தட்டும்!’’

என்று முதல் குரல் இவர்களுக்காகக் கொடுத்தான் நா. கா. என்னும் மாக்கவிஞன். ஆனால் இம்மங்கை நர்த்தகியோ கடவுள் திருத்தும் வரை காத்திருக்கவில்லை. தன் பெயர் ஏட்டை தானே திருநங்கை என்று முதன் முதலில் திருத்தி எழுதிக் கொண்டார். அதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் அபாரம். அழகும் திருவும் சேர்ந்த நர்த்தகி என்னும் அந்நங்கை. அழகிய நங்கை நான். லட்சுமி கடாட்சமுள்ள நங்கை என்பதால் திருநங்கை என்று நங்கைக்கு திரு என்னும் அடைமொழி கொடுத்துக்கொண்டேன் என்கின்றார்.

தன் வாழ்க்கையையும் திருத்தமாக அமைத்துக் கொண்டார். இளமையில் கிடைக்காது போன தான் ஏங்கித் தவித்த உறவுகளின் நேசத்தை, அணைப்பை, அன்பு மொழிகளை இப்போது மூச்சு முட்ட பெற்று மகிழ்கின்றார்.

வலிகளே வெற்றிக்கான வழிகள் என்று கூறும் இவரது வெற்றிக்கு இவரது வலிகளே காரணமாக இருந்துள்ளன. திருநங்கைகளுக்கான கரடுமுரடான பாதையை மென்மையான மலர்ப் பாதையான ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தவர் இவர் எனலாம். இன்று திருநங்கைகள் மிக எளிதாக உலகமெங்கும் சென்று வருகின்றனர் என்றால் அதற்குக் காரணம் நர்த்தகியே. பால்திரிபு காரணமாகக் கடவுச் சீட்டு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி முதன் முதலில் பாலினம் பெண் (எங்ம்ஹப்ங்) என்று பதிவு செய்யப்பட்ட கடவுச் சீட்டைப் பெற்ற திருநங்கை இவரே.

உலகம் முழுவதும் சுற்றிச் சுழன்று புகழ் பெற்று வரும் இவர் வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூடம் என்ற பெயரில் ஒரு நடனப்பள்ளியைத் தொடங்கி ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி வருகிறார்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று கல்வி நிறுவனங்கள் தோறும் தம் கலைப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றார். வருகைதரு பேராசிரி யராகப் பல பல்கலைக்கழங்களுக்குச் சென்று வரும் இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் நான்கு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சமுதாயத்தால் ஒதுக்கப்பெற்ற ஓர் இனம் இன்று அனைவரும் படிக்கும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்றால் அது நர்த்தகி என்னும் ஒரு தனி மனித முயற்சியின் விளைந்த முடிவு. நர்த்தகியின் இந்த அற்புதப் பயணத்தை, அடைந்த இமாலய வெற்றியை, படைத்த சாதனைகளை தமிழகத்துப் பதினோராம் வகுப்பு மாணவர்கள் பாடமாக படித்துத் திகைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கியுள்ளது. நவீன கவிதைகளையும், சங்க இலக்கியங்களையும் நவீன கவிதைகளையும், தமிழிசையையும் தம் நடனத்தில் பயன்படுத்தி பெருமை சேர்த்ததற்காகவும், பால்திரிபு பயப்பட அல்ல. பயன் பட என்று தன் சந்ததியினர்க்கு ஓர் வெற்றிகரமான முன்மாதிரியாக விளங்கியதைப் பாராட்டியும் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ்தான்.

நிருத்ய சூடாமணி, சங்கீத நாடக அகாதமி, நாயகி ஃபாவ ரத்னம், நாட்டியப் பிரியா, நாட்டியப் பேரொளி, நாட்டிய ஞான வாரிதி, கலை நன்மணி, நற்றமிழ்க் கூத்தர், நாட்டிய கலா ரத்னா, நாட்டியப் பேரரசி, நாட்டிய ரத்னா, கலா சேவா பாரதி, திருப்புகழ் நாட்டியச் செம்மணி, கலைஞர், 2007ல் கலைமாமணி என்று தொடரும் இவரது விருது வரிசையில் இப்போது இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல முதன் முதலில் கடவுச்சீட்டுப் பெற்றவர், முதன் முதலில் மதிப்புறு டாக்டர் பட்டம் பெற்றவர், முதன் முதலில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர், முதன்முதலில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர், முதன்முதலில் அரசின் கல்வி உதவித்தொகை பெற்றவர் என்று பெரும் முதலாளியாகத் திகழ்பவர் இவர். தளராத முயற்சியாலும் அயராத உழைப் பினாலும் பத்மஸ்ரீ வரை தம் நிலையை உயர்த்திக் கொண்ட அவரை முதன் முதலில் பாராட்டுவது நம் கடமை. நர்த்தகியைப் பாராட்டும் விதமாக முதன் முதலில் அறம் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆற்றல் அரசி பட்டத்தை வழங்கி சிறப்பு செய்தது. இந்தப் பேராற்றல் என்றும் தொடரட்டும். இவரது ஆடும் பாதம் நாடும் வெற்றிகள் எல்லாவற்றையும் எட்டட்டும்.