இசையின் ஸ்வரங்கள் ஏழுதான். அந்த ஏழு ஸ்வரங்களை வைத்து ஏழு கோடி தமிழர்களின் இதயத்தை உறங்க வைக்கவும், உசுப்பி எழுப்பவும் ஒருவரால் முடியுமென்றால் அது இளையராஜா ஒருவரால் மட்டுமே ஆகக்கூடிய மந்திர வித்தை. தென்றலாய் இதயம் வருடும் இசையும், தாலாட்டும்,மேற்கத்திய இசையும் அவரிடம் வயப்பட்டு நிற்கின்றன. அவற்றின் வழியாக மனித உணர்வுகளை மீட்டுவதில் ஞானி அவர். அதனால்தான் அவருக்கு இசை ஞானி என்னும் பட்டத்தை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
இத்தகைய ராகதேவன் ஒரு சர்ச்சைப்புயலில் சிக்கி பரபரப்பாக அடிபட்டுக்கொண்டு இருப்பதுதான் காலத்தின் மாயம்.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள், திட்டங்களை அம்பேத்காருடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நூலை, ’ப்ளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன்’ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நூலுக்கு இளைய ராஜாவின் ஆர்மோனியக் கைகள் எழுதுகோலைப் பிடித்து முன்னுரை எழுதி இருக்கின்றன. அதில் அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு பெருமைபட சிலாகித்துள்ளார் அவர். அம்பேத்கரின் கனவுகளை எல்லாம் மோடி செயல்வடிவங்களாக ஆக்கி இருக்கிறார்.
இது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை திகைக்கவும் அதிரவும் வைத்திருக்கிறது. பிரதமர் மோடியைத் தனிப்பட்டு பொதுவாக அவர் வாழ்த்தியிருந்தால், திரைத்துறையினர் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் யார் உள்ளார்களோ அவர்களை மகிழ்விக்க பேசுபவர்கள்தானே என மக்கள் கடந்திருப் பார்கள்.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமரசமில் லாமல் போராடிய சட்டமேதை அம்பேத்கருடன், அவர் மோடியை ஒப்பிட்டுப் பேசியது கடும் எதிர்ப்பு அலைகளையும், அந்த எதிர்ப்பு அலைகளைப் பார்த்து இன்னொரு பக்கம் ஆதரவு அலைகளும் வீசிக்கொண்டிருக்கிறது. பொதுமக்களில் சிலரை சந்தித்து இது குறித்துக் கேட்டபோது...
எழுத்தாளர் சொ.பிரசன்னபாரதி
மனித குலத்தின் அதிசயம் அம்பேத்கர். இவரோடு மோடியை ஒப்பிட்டு புத்தகம் எழுதியதே தவறு. அந்தப் புத்தகத்துக்கு இளையராஜா முன்னுரை எழுதியிருப்பது அதைவிடத் தவறு. இதன் பின்னணியில் மதவாதம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய செயல்திட்டத்தில் பிரபலமானவர்களைப் பிடித்து இப்படி பேசவைப்பதை தொடர்ந்து ஒரு அரசியல் பணியாகச் செய்கிறார்கள். அந்த வரிசையில் இளையராஜா இப்போது அவர் களிடம் சிக்கி இருக்கிறார். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை அவர் இழந்திருக்கிறார்.
பெரியார், மார்க்ஸ் குறித்த சிந்தனை எதுவும் இல்லாதவர் இளையராஜா. அவர் தனது சகோதரரோடு இணைந்து இடதுசாரி மேடைகளில் கச்சேரிகள் செய்திருந்தாலும், திரைத் துறையில் இளையராஜா புகழடைந்ததும் அவரு டைய பேச்சு, செயல்கள் எல்லாம் மாற்றமடைந் தன, ரமணரின் பக்தராகி விட்டார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் கரங் களால் விருது தர முற்போக்குவாதிகள் முயற்சித்தபோது, நான் வலதுசாரிகளை எதிர்க்கவில்லை. எனக்கு பிராமணர்கள்தான் பல விதங்களில் உதவியாக இருக்கிறார்கள் எனச் சொல்லி மறுத்ததா கச் சொல்லப்படுகிறது. பெரியார் படத்துக்கு இசை யமைக்க மறுத்த இளையராஜா, பாரதி படத்துக்கு இசையமைத்தார்.
மேற்கத்திய இசையமைப்பாளர் பீத்தோவன், உலகம் கொண்டாடும் இசையமைப்பாள ராக இருந்தபோதே மக்களுக்கான போராட் டங்களுக்கு முன்னின்றார். மார்க்ஸிய சிந்தனையாளராக ஐரோப்பாவில் மன்னராட்சியை எதிர்த்தார் பீத்தோவன். நெப்போலியனின் நண்பராக இருந்து அவர் குறித்து சிலாகித்து எழுதினார். அதே நெப்போலியன் மாமன்னராக முடிசூட்டிக்கொண்டபோது அவரைப் போற்றி எழுதிய பக்கங்களைக் கிழித்து எறிந்தார். அவரின் நினைவிடத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ற இளையராஜா, விழுந்து வணங்கி உங்கள் ஆற்றலை எனக்குத் தாருங்கள் என வேண்டியதாகச் சொன்னார். பீத்தோவனின் மாணவராக, பக்தராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இளையராஜா, மக்கள் விரோதிகளை, பாசிச சக்திகளை ஆதரிப்பவராக இருப்பது நகை முரண்.
இளையராஜா இசையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் அவரின் பேச்சை மூன்று நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாது. வானத்தில் இருந்து நேரடியாக பூமிக்கு வந்ததுபோல் பேசுவார். அவரைக் குறித்து விமர்சித்தாலே சாதி வன்மத்தோடு பேசு கிறார்கள் என சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். ஒடுக் கப்பட்ட சாதி என்பதால் தவறைச் சுட்டிக்காட் டக் கூடாது, விமர்சிக்ககூடாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எழுத்தாளர் கவிஞர் செல்வி சிவஞானம்:
இளையராஜா இசை மேதை. அவர் நம் மனதைத் தாலாட்டுகிறவர். நம் இரவுகளை நிம்மதியாகத் தூங்க வைக்கிறவர். நம் விடியல்களை இதமாகத் துயில் எழுப்புகிறவர். அவர் ஒரு இசை சகாப்தம். அதற்காகவே, அதற்காக மட்டுமே அவரை நாம் கொண்டாடு கிறோம். அவரிடமிருந்து வருகிற இசையை மட்டுமே நாம் ரசிப்போம். அவர் சொல்வதை எல்லாம் நாம் கடந்துவிடலாம். ஏனென்றால் அவர் இசைக்குதான் இங்கு மரியாதையே தவிர அவர் பேச்சுக்குக்கும் கருத்துக்கும் மதிப்பு எதுவும் இல்லை.
பல் மருத்துவர் ஸ்ரீதர்முருகையன்,
இளையராஜா அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவருக்கு ஒரு கருத்தைச்சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. பெரியார் சொன்னதுபோல் என் கருத்தை ஏற்றுக்கொள்வது, ஏற்றுக்கொள்ளாதது உங்கள் விருப்பம், ஆனால் உங்களுக்கு என் கருத்துக்கு எதிர் கருத்துச்சொல்ல முழு உரிமையுண்டு என்றார். ஆனால் இங்கு நம் எண்ணத்துக்கு எதிராக கருத்துச்சொல்லி விட்டார் என்பதற்காக அவர்மீது கடுமையான விமர்சனங்களை வைக்கி றார்கள். அவருக்கென தனிப்பட்ட கருத்திருக்க க் கூடாதா?. அவரது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் கடந்து செல்லுங்கள். அவரது இசையைக் கொண்டாடுங்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வேறு, கருத்தென் பது வேறு. யாரையும் நம் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்கிறார்கள் என மோசமாக விமர்சிப்பது பாசிசமே.
கீழ்பென்னாத்தூர் பன்னீர் செல்வம்,
இளையராஜா மோடியைப் புகழலாம். அது அவருடைய கருத்துச் சுதந்திரம். ஆனால் இளையராஜா யாரை யாருடன் ஒப்பிட்டார் என்பதில்தான் கருத்து வேறுபாடே. அம்பேத்கர் பட்டியலின, ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும், எழுதியும் வந்த சட்டமேதை. தன் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே சாதியும், கடவுளும் தான் என்றவர்.
அவரின் போராட்டத்தால்தான் பட்டியலின மக்களுக்கு சட்டரீதியாகப் பாதுகாப்பு அளிக்கப் பட்டது. தான் படித்த கல்வி வழியாக போராடிய காந்தியவாதி அவர். அவருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுகிறார். மோடி எந்த சித்தாந்தத்தை சார்ந்தவர்? இந்துத்துவா கொள்கையாளர், குஜராத் முதல்வராக இருந்தபோது இஸ்லாமியருக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் நரமனிதராக உலக மீடியாக்கள் அவரை அடையாளப் படுத்தின. தமிழக மக்கள் கொண்டாடும் இளையராஜா வுக்கு அதே தமிழக மக்கள் இந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் காரணம், காந்திய வாதியை கசாப்புக்கடைக் காரரோடு ஒப்பீடு செய்ததால் தான்.
கவிஞர் கு.பாலாஜி,
இசைஞானி இளையராஜா டாக்டர் அம்பேத் கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டுப் பேசுவது மிகவும் தவறு. இசைஞானி இளையராஜாவின் இசை என்றென்றைக்கும் எல்லோர் மனங்க ளிலும் இருக்கக்கூடிய ஒன்று. அதேவேளையில் அவர் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த பாவலர் சகோதரர்களின் கலைக் குழுவைச் சேர்ந்தவர். வந்த வழியை மாற்றி இடதுசாரியிலிருந்து வலதுசாரிக் களத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் ஆதாயத்தை விரைவில் நாம் கண்முன் காணலாம் என எண்ணுகிறேன். இதற்கு முன்பாக அவருடைய சகோதரர் கங்கை அமரனும் வலதுசாரி அமைப்பிற்கு சென்று அங்கிருக்கிறார். இவர்களுக்கு இடதுசாரி அமைப்புகள், கட்சிகள் தளத்தை உருவாக்கி மேடை களை வழங்கியதை மறந்து வலதுசாரி தளத்தை நோக்கி சென்றுகொண்டு இருக் கிறார்கள். மக்கள் அதனை எல்லாம் கவனித்துக் கொண்டு, கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.
எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம்,
இளையராஜாவின் அரசியல் தளம் என்பது மிக குறுகியது. ஏ.ஆர்.ரஹ்மான் வந்தேமாதரம் கொடுத்த காலத்தில் இருந்தே ஏதோ ஓரிடத்தில் சின்னச் சின்னதாக அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துகி றார். ஆனால் இளையராஜா, அரசியல் விமர்சனம் எதுவும் செய்ததில்லை. மாநில அரசியல் குறித்தே அவர் எந்த கருத்தையும் இதுவரை சொன்னதில்லை. அப்படிப்பட்டவர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு எழுதியுள்ளார். அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடவேண்டும் என்றால் அம்பேத்கரை அவர் முதலில் தெரிந்திருக்கவேண்டும். மோடியைப் பற்றியும் இளையராஜாவுக்கு தெரிந்திருக்கவேண்டும். ராஜா, பல முற்போக்கு இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அந்தப் படத்தின் கதையைப் பார்க்காமல் இசையமைத்துத் தந்ததோடு நிறுத்திக்கொண்டுள்ளார். அந்த படங்களில் வரும் தலைவர்கள் குறித்து அவர் தெரிந்துகொள்ளவோ, ஆய்வு செய்யவேயில்லை என்பது தெரிகிறது.
மோடியின் திட்டங்கள் பெண்களுக்கானது என புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் பெண்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள்தான் அதிக ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இதை மறைக்கும்விதமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தை தங்கள் பக்கம் இழுக்கும் என நம்பப்படும் தேர்தல் அறிக்கை போன்றதுதான், இளையராஜா மூலம் அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிடுவது என்பது. கிராமப்புறங்கள், தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் களமிறங்கி, அவர்களை ஒருபக்கம் இழுக்கப் பார்க்கிறது. இது இன்னொரு முனைத் தாக்குதல். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2005-ல் இந்துத்துவா அன்ட் தலித் என்கிற பெயரில், புத்தகம் எழுதியிருக்கிறார் ஆனந்த் டெல்டும்டே.
மோடியை ஆதரிக்கிறேன், மோடி நல்லவர், மோடி ஒரு காந்தி என பச்சைமுத்து சொல்லியதுபோல் இவரும் சொல்லியிருந்தால் இப்படி ஒரு சர்ச்சை வந்திருக்காது. ஒப்பீடுதான் பிரச்சனையே. இளையராஜாவை நம் வீட்டில் ஒருவராகப் பார்க்கி றோம். நான்கு தலைமுறைக்கு பொதுவான மனிதனாக இருக்கிறார். நம் வீட்டில் உள்ள தாத்தாவோ, அப்பாவோ ஒரு கருத்தைச் சொல்லியிருந்தால் எப்படி கோபப்படுவோமோ அப்படித்தான் இந்தக் கருத்தால் நாம் வேதனைப்படுகிறோம். அவரின் கருத்தைப் பார்க்கும்போது இளையராஜாவுக்கே அம்பேத்கரை நாம் கொண்டு சேர்க்கவில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.
கவிஞர் கனகா பாலன்:
இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுதான் நாம் வளர்ந்திருக்கிறோம். அவரது இசையில்தான் இப்போதுவரை உயிர்ப்பாக வாழ்ந்து வருகிறோம். அது போதும். இசை என்றால் ராஜா ராஜாதான். மோடியைப் பற்றி இங்கு எல்லோருக்குமே தெரியும். அவர் ஆட்சிக்கு வந்ததே, எல்லோர் கணக்கி லும் 15 லட்ச ரூபாயை வரவு வைப்போம் என்று ஏமாற்றித்தான் ஆட்சிக்கு வந்தார். அதனால் அவரும் அம்பேத்கரும் எதிர் எதிர் துருவங்கள். கடவுளே வந்து சொன்னாலும் அவர் பேச்சை எவரும் நம்பமாட்டார்கள்.
ராமமூர்த்தி கண்ணையன்,
இந்து சனாதன தர்மத்தை எதிர்த்த அம்பேத்கருடன், சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய நாட்டை கட்டமைப்போம், ராமராஜியத்தை நிறுவுவோம் என பரப்புரை செய்து ஆட்சியை பிடித்த மோடியை ஒப்பிட்டு எழுதுவது என்பது எத்தனை பெரிய முரண்? எத்தகைய ஒப்பீட்டுக்கும் ஒவ்வாத செயல். உண்மையில் இளையராஜா அம்பேத்கரைப் படித்து அவரது கருத்துக்களை உள்வாங்கித்தான் இவ்வாறு ஒரு முன்னுரையை எழுதினாரா? அல்லது மோடியின் கடந்த கால வரலாறும் இன்றைய அவரது இந்துத்துவ அரசியல் யுக்திகளை பற்றி நன்கு அறிந்து, தெளிந்து தான் இவ்வாறாக பதிவிட்டாரா என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.
இளையராஜா சாதி, மதங்கள் கடந்து ஒரு இசைத் தாயின் மகனாக, இசை உலகின் அறிவு ஜீவியாக தமிழ்நாட்டு மக்களால் பார்க்கப்பட்டுபவர். அன்று இளையராஜா வீட்டில் வரி ஏய்ப்பு நடவடிக்கையில் 50 லட்சம் கைப்பற்றப்பட்டபோது கூட, அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டே நடுவன் அரசு செய்வதாக மன்மோகன் சிங்கை ஏகத்திற்கு திட்டித்தீர்த்தார்கள் தமிழ்நாட்டு மக்கள். ஸ்ரீரங்கம் கோவில் குடமுழக்கின்போது, இளையராஜா கோபுர கலசத்தின் மீது கைவைக்கக்கூடாது என தடுத்த வைதீக கூட்டத்திற்கெதிராக கொதித்தெழுந்தது தமிழ்ச் சமூகம். "அவர் கொடுக்கும் நன்கொடை வேண்டும் மரியாதை மட்டும் அவருக்கு இல்லையா? 'என கேட்டு பல போராட்டங்களை மேற்கொண்டது தி.க. சில ஆண்டுகள் கடந்தபின் பெரியார் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக்கும் தறுவாயில் பெரியார் படத்திற்கு இசை அமைக்கமாட்டேன் என்று சொன்னார் இளையராஜா. அப்போதும் கூட அவர் ஒரு ஆன்மீகவாதி அவர் மறுப்பதில் என்ன தவறு என்றே சொல்லி. அவரது மாண்பினைக் காத்துநின்றது தமிழ்ச் சமூகம்.
ஏ.ஆர். ரகுமான் என்னிடம் கீ போர்டு வாசித்தவன் என எள்ளியபோதும் ஆமாம் அவர் கீ போர்டு வாசித்தவர் தானே அதைச் சொன்னால் என்ன தவறு எனக் கூறி அன்றும் ராஜாவின் அகந்தைக்கு அடைக்களம் தந்தது இதே தமிழ்ச் சமூகம். தமிழ் திரைப்பட இயக்குனர் கள் ராஜாவுக்கு எதிராக ஓரணியில் நின்று அம்சலேகா, மரகதமணி, சந்திரபோஸ், சௌந்தர்யன், ஆதித்யன் என பல இசையமைப்பாளர்களை தமிழ்த் திரைஉலகில் களமிறக்கினார்கள்.
அப்போதும், ராஜா என்றுமே ராஜா தான் அவருக்கு நிகர் அவர் மட்டுமே என கொண்டாடி மகிழ்ந்தது இச்சமூகம். தனது உற்ற நண்பனான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீது முரண்பட்டு நின்றபோதுகூட இளையராஜா சொல்வதில் தவறென்ன ஏன் எஸ்.பி.பி யாருக்காக கோடி கோடியாக சம்பாதிக்கிறாராம் என கேட்டு இளையராஜாவிற்கு சாதகமாகத் தீர்ப்பெழுதியது. இறுதியாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளருடன் ஏற்பட்ட இடத்தைக் காலி செய்யும் பிரச்சனையின்போதும், தமிழ்ச் சமூகம் ராஜாவின் பக்கம்தானே நின்றது. இப்படி அவர் மீது எத்தனை சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தபோதும் தமிழ்நாட்டு மக்கள் அவர் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பின் காரணமாகவும் அவரது இசையின் மீது அவர்கள் கொண்டிருந்த தீராத காதலினாலும் அவரை ஒரு நாளும் தமிழ்நாட்டில் தலைகுனியவிட்டதே இல்லை. ஆனால் இன்றோ ஒரே முகவுரையில் அவரது மங்காத புகழுக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது . இதுவரை அமைதிகாத்த தமிழ் சமூகம் இன்று அவரை தூக்கி எறிகிறது. காரணம்! அவர் எழுதிய எழுத்துக்கள் வரலாற்றுப் பிழை என்றும் அவரது வாழ்க்கைக்கு ஏற்பட்ட களங்கம் என்றும் மக்கள் அவருக்கு உணர்த்தியிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இளையராஜாவுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே வைப்பேன். அவருக்கு நேரம் இருக்கும்பட்சத்தில் அம்பேத்கர் எழுதிய நூல்களான 1)ஆய்ய்ண்ட்ண்ப்ஹற்ண்ர்ய் ர்ச் ஈஹள்ற்ங், 2) ரட்ர் ஜ்ங்ழ்ங் ற்ட்ங் மய்ற்ர்ன்ஸ்ரீட்ஹக்ஷப்ங்ள் , 3) ரட்ர் ஜ்ங்ழ்ங் ற்ட்ங் நட்ன்க்ழ்ஹள், 4) ஈஹள்ற்ங் ண்ய் ஒய்க்ண்ஹ போன்ற புத்தகங்களை வாசித்து இந்திய சாதிய அமைப்பு முறை மற்றும் இதன் சமூக கட்டமைப்பு பற்றி அவர் தெரிந்துகொள்ளட்டும். மேலும் பட்ங் டழ்ர்க்ஷப்ங்ம்ள் ர்ச் தன்ல்ங்ங் மற்றும் ஒய்க்ண்ஹய் ஈர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய் ஆகிய இந்த ஆறு புத்தகங்களையும் வாசிக்கும்பட்சத்தில் அவருக்கு தெரியவரும் மோடி யார் அவர் முன்னெடுக்கும் சமூக, பொருளாதார திட்டங்கள் எத்தனை கேடானது, அது இந்த நாட்டிற்கு எத்தனை பெரிய ஆபத்துக்களை விளைவிக்கக் கூடியது என்பது.
இறுதியாக நீங்கள் இசைக்கு தந்தையாக இருக்கலாம், இசை உலகின் தலைசிறந்த மேதையாகக் கூட இருக்கலாம் ஆனால் அம்பேத்கர் இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான தந்தை. பாலின, வகுப்புவாத பேதமையற்ற சமத்துவம் எனும் தத்துவத்தின் தாய். எப்படி பெரியார் எனும் பெருங்கிழவன் தெற்கே அம்பேத்கர் வழியில் மக்கள் எவ்விதம் சமத்துவமாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்வதற்கான ஓர் சூழல் இங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ அந்த சூழல்தான் இங்கே மக்களை கல்வி, பொருளாதார விடுதலை பெறச் செய்திருக்கிறது. அந்த சமூக பொருளாதார விடுதலைதான் உங்கள் இசை பக்கமும் மக்கள் தங்கள் செவிகளை மடுக்கச் செய்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். பொதுவுடமைக் கூட்டங்களில் வீதிப் பாடகரான உங்களின் புகழ் இன்று விண்ணை முட்டக் காரணமாக இருப்பது சமூக நீதி, பொதுவுடமை எனும் தத்துவங்கள் என்பதை மறக்க வேண்டாம். இந்த நாட்டின் ஒன்றுபட்ட சமூகம், சமத்துவம் எனும் இரண்டு உயரிய சிந்தனைகளுக்கு தாய் தந்தையாக விளங்கிய அம்பேத்கருக்கு தான் உள்ளபடியே நீங்கள் நன்றி சொல்ல வேண்டுமே தவிர மோடிக்கல்ல. மக்களின் மனங்களை வெல்வது வேறு அவர்களின் மனங் களில் என்றுமே நிலைத்திருப்பதென்பது வேறு. இளையராஜா இனி நேர்மையாகவும், தெளிவாகவும் பேசுவதுதான் நல்லது.
ஆம்பூர் கருணாசகாயம்,
இளையராஜா மோடியை மட்டும் புகழ்ந்திருந்தால் பிரச்சனையில்லை, அதிகாரத்தில் இருப்பவரை புகழ்கிறார் என கடந்து சென்றிருக்கலாம். மோடி எளிமையாக இருக்கிறார் எனச்சொல்வதை வைத்து அம்பேத்காருடன் ஒப்பிடுவதை ஏற்கமுடியாது. எளிமையானவர் என மோடி கட்டமைப்பது பிம்பம். அம்பேத்கர் எளிமையாகவே மக்களுக்காக வாழ்ந்தார். அம்பேத்கர் எல்லோருக்கும் பொதுவானர். மோடி சனாதன வழியை ஏற்றுக் கொண்டவர், அம்பேத்கர் அந்த சனாதனத்தை தன் இறுதி மூச்சுவரை எதிர்த்தவர். பெருந்தலைவரை மோடியுடன் ஒப்பிட்டு எழுதியதால்தான் எதிர்க்கிறேன்.
கவிஞர் அழகியபெரியவன்,
இசைஞானி இளையராஜா திரைத்துறையில் இசையமைக்கத் தொடங்கிய 1970-களிலிருந்தே அவர் மீதான விமர்சன ஆலாபனைகளும் தொடங்கி விட்டன. தொடக்கத்தில் அவருக்கு கிராமிய இசையைத் தவிர எதுவும் தெரியாது என்றார்கள். பின்னர் மேற்கத்திய இசையும், சாஸ்திரிய சங்கீதமும் தெரியாது என்றார்கள். எல்லா விமர்சனங்களுக்கும் அவர் தன் இசையால் பதில் சொல்லி, தன்னை ஒரு மேதையாக நிரூபணம் செய்திருக்கிறார்.
அவர் உலக அளவில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர். அவர் ஒரு கர்வி, மனிதர்களை மதிக்கத் தெரியாதவர், சொந்த சாதி பற்று இல்லாதவர் என்றெல்லாம் பலவகையில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, அவர் வார்த்தையிலேயே சொல்வது என்றால் 'ஒரு காகத்தின் எச்சத்தை துடைத்துக்கொண்டு கடந்து செல்வதைப்போல' கடந்து சென்றிருக்கிறார். பொதுவாக சமூகம் சார்ந்த கருத்துக்கள் எதையும் சொல்லாதவரான இளையராஜா அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு ஒரு நூலுக்கு முன்னுரை எழுதி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சிக்கியிருக்கிறார் என்பதுகூட சரியல்ல சிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்.
அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டது பெரும் தவறு. அதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஆனால் 'அம்பேத்கரும் மோடியும்' என்ற ஒரு நூலுக்கு ஒருவரை முன்னுரை எழுதச் சொன்னால் மரியாதை நிமித்தமாக அவ்வாறுதான் ஒப்பிட்டு எழுதமுடியும். இதை இளையராஜா மட்டும்தான் முதலில் செய்தார் என்று இல்லை. இந்த மாதிரியான ஒப்பீடுகளை பொதுவெளியில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னரே செய்திருக்கிறார்கள். மரியாதை கருதி செய்யப்பட்ட இந்த ஒப்பீட்டை 'இது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து' என்று சொல்லி கடந்து போவதே சரியாக இருக்கும். ஏனென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துரிமையை இளையராஜா அவர்களுக்கும் வழங்கியிருக்கிறது. ஆனால் இளையராஜாவை பிடிக்காதவர்களும், சாதிய வன்மம் கொண்டவர்களும், கருத்தியல் சார்ந்த பகைமையை உடையவர்களும் 'மோடி எதிர்ப்பு' என்ற முகமூடியை வைத்துக்கொண்டு சாதியைச் சொல்லி கீழ்த்தரமாக விமர்சிப்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு விமர்சிக்கிறவர்கள் திட்டமிட்டோ அல்லது அறியாமலோ பி.ஜே.பி.யை வளர்த்துவிடும் வேலையைச் செய்வதோடு, விமர்சனங்கள் முழுவதையும் இளையராஜாவின் பக்கமே திசை திருப்பிவிடுகிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இந்துத்துவ கருத்தியலுக்குள் அடைத்துவிட வேண்டும் என்று சங்பரிவாரங்கள் தொடர்ந்து செய்துவரும் சூழ்ச்சிகளில் ஒன்றுக்கு இளையராஜாவும் பலியாக்கப்பட்டிருக்கிறார் என்ற உண்மையை பொது உலகிற்கு மறைக்கிறார்கள். மேலும் தலித்துகள் என்றாலே இம்மாதிரியானவர்கள்தான் என்ற ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை கட்டமைப்பதற்கும் இந்தச் சூழ்ச்சி அவர்களுக்கு உதவுகிறது.
தற்போது நடத்தப்படும் விமர்சனங்களிலே முதலில் ரகுமானை தொடர்புபடுத்தி செய்தவை முகம்சுளிக்க வைத்தன. அடுத்து இந்த விமர்சனம் கீழ்த்தரமான நிலையை எட்டியுள்ளது. மிகக் கேவலமான முறையிலான பதிவுகள். அதில் தாங்கமுடியாத அளவுக்கு சாதிய நெடி. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான இழிவான பிம்பத்தை உருவாக்குவதற்கு பன்னூறு ஆண்டுகளாக புனித நூல்களிலும் இலக்கியங்களிலும் இவர்கள் எழுதி வைத்திருக்கின்றவற்றுக்கு சளைத்தவை அல்ல இந்த விமர்சனங்கள். இளையராஜா மீது வைக்கப்படும் இந்த விமர்சனங் கள் எல்லாவற்றையும் மிகவும் நேர்மையானவை என்றோ, உள்நோக்கம் இல்லாதவை என்றோ ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. "உன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் உன் கருத்துரிமையை என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன்" என்ற வால்டேரின் கருத்தையே இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.