மனிதரில் உயர்ந்தவர்கள்
மறுபடிக் குதிரையாவார்
மறுபடிக் குதிரையாகி
மனிதரைக் காணவருவார்.
"இரும்புக் குதிரை'களில் பாலகுமாரன் கனவுகளையும் கற்பனைகளையும் வானில் பறக்கவிட்டுக் கொண்டிருந்த என் இருபதை ஒட்டிய வயதுகளில் திரைப்படத்துறைக்குள் புகுந்துவிடும் ரகசிய வேட்கை மனதுக்குள் கனல்போலத் தகித்துக் கொண்டிருந்தது. ஆனால் வெளியில் சொல்ல பயம். வீட்டிலோ சினிமா பார்க்கப் போவதற்கே அனுமதி மறுக்கப்படும் சூழல். அந்த நேரத்தில் என் கைக்குக் கிடைத்தது "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'.
பாலகுமாரனின் எழுத்துக்களை அதற்கு முன்பே படித்திருக்கிறேன். "மெர்க்குரிப் பூக்கள்' நாவலைப் படித்துவிட்டு கிறங்கியிருக்கிறேன். கல்கியில் தொடராக வந்த "இரும்புக் குதிரை'களை வாரந்தோறும் வாங்கி வாசித்து என் நண்பர்கள் நா.தென்னிலவன், ரவி சுப்பிரமணியன் ஆகியோரோடு விவாதித்திருக்கிறேன்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் பிரகாரம், ராமசாமி கோவில், சாது சேஷய்யா ஓரியண்டல் லைப்ரரி, மேலக் காவேரி போன்ற இடங்கள் நாங்கள் சந்திக்கும் இலக்கியத் தலங்கள். இரவு பகல் பாராது பேசியிருக்கிறோம். பின்னர் அ.முத்து இந்த ரசிகர் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்.
ஆனந்த விகடனில் வெளிவந்த "கரையோர முதலைகள்' அதன் இடைஇடையே வந்த கவிதைகள், கதாநாயகிக்குத் திடீர் திடீரென வரும் கோபம், அவளது கணவனின் அனுசரணை, ஏமாற்றிய பழைய காதலன், அவனைப் பழி வாங்கத்துடிக்கும் அவளது வன்மம், அதனால் உண்டாகும் பிரச்சனை எல்லாம் திரைப்படம் போல் விறுவிறுப்பாக அமைந்து வசியம் செய்தது.
"இரண்டாவது சூரியன்' என்றொரு நாவல். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றியது. இதை இப்போதுகூட திரைப்படமாக எடுத்தால் கலாச்சாரக் காவலர்கள் கண்டனக்குரல் கொடுப்பார்கள். எண்பதுகளில் எழுதினார் பாலகுமாரன்.
இரும்புக் குதிரைகள் நாவலில் வரும் குதிரைகள் பற்றிய கவிதைகள் ஓசைநயத்தோடு வாழ்வின் சூத்திரங்களை இனிமையாகச் சொல்லின. அவற்றை நான் உரக்கப்படிக்க நண்பர்கள் ரசிப்பார்கள். படிப்பதற்கு அவ்வளவு சுகமாக இருக்கும். ஓசைநயமும் பொருள்நயமும் மனசைக் கிறங்கடிக்கும். வாழ்க்கையின் சூத்திரங்களை, சூட்சுமங்களைக் குதிரையைக் குறியீடாக்கிச் சொல்லியிருப்பார்.
குளம்படி ஓசை கவிதை
குதிரையின் கனைப்பு கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு - இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்.
"இரும்புக் குதிரைகள்' நாவல் முழுக்க இது போன்ற குதிரை வேதங்கள் வந்துகொண்டே இருக்கும்.
கவிதை மீது ஈடுபாடு கொண்ட எனக்கு இதுபோல் கவிதை கலந்த கதைகளைப் படிப்பது பெருத்த இன்பத்தைக் கொடுத்தது.
இதுபோல் அவருடைய எல்லாக் கதைகளிலும் கவிதைகள் கலந்திருந்தன. உரைநடையும் கவிதை போலவே இருக்கும். கவிஞனாக வேண்டியவர்தான் கதாசிரியராகிவிட்டார். அதனால் நஷ்டமில்லை. இரட்டை லாபம் கிடைத்தது நமக்கு.
அவரது பெண் பாத்திரங்களின் மீது அலாதியான ஈடுபாடு வந்தது. அவர்களில் ஒருவரைச் சந்திக்க மாட்டோமா என ஏக்கம் வந்தது. ஆண்களை விட மன உறுதி மிக்கவர்களாக, ஆண்களுக்கு நம்பிக்கை தருபவர்களாக இருந்தார்கள்அவர்கள்.. வாழ்க்கையின் ஒளி அவர்களின் தோற்றத்தில், பேச்சில் சுடர்விட்டது. அது அருகில் இருப்பவர்கள் மீதும் படர்ந்தது.
அப்போது டபீர்நடுத்தெருவில் எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு குடியிருந்தார். நாராயணஸ்வாமி என்பது அவரது இயற்பெயர்.
"இரும்புக் குதிரைகள்' நாவலில் வரும் நாராயண
ஸ்வாமி அய்யர் கதா
பாத்திரம் கரிச்சான்
குஞ்சு அவர்களின் இன்ஸ்பிரேஷன் என்று பாலகுமாரனே ஒருமுறை குறிப்பிட்டார். ‘கரிச்சான்குஞ்சு’ மீது பாலகுமாரனுக்கு அந்த அளவுக்கு ஈடுபாடும் மதிப்பும் இருந்தது.
ஒருமுறை பாலகுமாரன் கும்பகோணம் வந்தபோது ரவி சுப்ரமணியன் அவரைச் சந்தித்து அவருடன் நவக்கிரக ஸ்தலங்களுக்குக் கூடவே சென்றுவந்தார். பாலகுமாரன் கதைகளைப் பற்றி தினந்தோறும் உருகி உருகிப் பேசுகிறோம். அவர் வந்த தகவலைக்கூட என்னிடம் நீ கூறாமல் போனது எப்படி என்று அவருடன் சில மாதங்கள் பேசாமல் இருந்திருக்கிறேன்.
அப்போது தொலைபேசி வசதியோ அலைபேசி வசதியோ இல்லை. தகவல் சொல்ல வேண்டும் என்றால் அவர்தான் தன் மிதிவண்டியில் வந்து என்னை அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் பாலகுமாரன் குடும்பத்தோடு வந்திருந்தார். குளித்துவிட்டு உடனே கோயில்களுக்குப் புறப்படலாம் என்று கூறியதால் வர இயலவில்லை என்றார் ரவி. ஆனால் அவ்விளக்கத்தை ஏற்கும் மனநிலை அப்போது இல்லை. அந்த அளவுக்கு பாலகுமாரனைச் சந்திக்க முடியாதுபோன ஏமாற்றம் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.
பாலகுமாரனின் நடை ஒரு கவிதை நடை.
அதே நேரத்தில் சுறுசுறுப்பான வேக நடை. பேசும் விஷயங்களும் அந்த வயதின் குழப்பங்களான காதல், காமம், வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் இவற்றைப் பற்றியதாக இருக்கும்.
இந்த நேரத்தில்தான் என் கைக்குக் கிடைத்தது "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' அவரது போராட்டங்கள், இலக்கியத்தில் ஓர் இடத்தைப் பெறவும், அந்த இடத்தில் இருந்து திரைப்படத்துறைக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து தைரியமாக நுழைந்ததையும் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தார்.
என் குழப்பத்திற்கு விடுதலை கிடைத்தது. வாழ்வது ஒரு முறை. விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடலாம் என்ற தைரியம் பிறந்தது. வெளிப்படையாக சொல்லத் தொடங்கினேன்
அது வரை ரகசியமாக வைத்திருந்த என் சினிமாக் கனவை. முதலில் கஷ்டமாக இருந்தது. பின் அவன் இஷ்டப்படி செய்யட்டும் என்று என் அப்பாவும் விட்டுவிட்டார். சென்னை வந்து உதவி இயக்குநராவதற்கு மறைமுகக் காரணமாக அமைந்தது பால குமாரனின் அந்தப் புத்தகம்.
அவருடைய "கானல் தாகம்' என்ற கதை மாத நாவலாக வெளிவந்த போது அக்கதையைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.
அக்கதை நூல் வடிவம் பெறும்போது புத்தகத்தின் முதல் பக்கத்தில் அதை இணைத்திருந்தார். பெருமை பிடிபடவில்லை எனக்கு. பின்னர் அவர் வசனம் எழுதிய நாயகன், குணா, பாட்ஷா ஆகிய படங்கள் நான் அடிக்கடிப் போட்டுப் பார்த்து ரசிக்கும் படங்களாயின.
இன்றும் நான் வசனம் எழுதக் கற்றுக்கொண்டது பயிற்சிக்காகப் பிறருக்குப் பரிந்துரை செய்வது பராசக்தியும், நாயகனும்தான்.
நாயகன் படம் ஒன்று போதும் பாலகுமாரனின் திரை இலக்கியப் பங்களிப்புக்கு.
ஒரு மனிதனின் முழுவாழ்க்கையின் உணர் வெழுச்சிகள், மனதின் கொந்தளிப்புகள், கோபங்கள், அவமானங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் அனைத்தும் இலக்கியத் தரத்தோடு திரைப்பட ஊடகத்தின் அளவோடும் இலக்கணத்தோடும் அமைந்திருந்தன அப்படத்தில்.
"நான் அடிச்சா நீ செத்துருவே' என்று போலீசால் அடித்துக் கந்தலாகி ஜீப்பில் இருந்து இறக்கிவிடப்படும்போது அடித்த காவலரிடமே கூறுவது கைத்தட்டலும் விசிலும் பறந்த காட்சி.
"குடியிருக்கிற வீட்ட இடிச்சா எப்படி இருக்கும்னு சேட்டுக்குத் தெரியவேண்டாம்?' என இளம் தஞ்சை செழியன் அவர்களுடன் வேலு தங்கள் குப்பத்தை புல்டோசரால் இடித்த சேட்டு வீட்டை அடித்துத் துவம்சம் செய்த காட்சியின் நியாயமான கோபமாகட்டும்,
துரோகம் செய்த விஜயனிடம், ‘"எங்களை எல்லாம் எவ்வளவு ரூபாய்க்கு வித்த?' என்று கேட்கும் துணிச்சலாகட்டும், "அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்' என மகளிடம் தன் வாழ்க்கைக் கதையை அடுக்கடுக்கான கேள்விகளால் விவரிக்கும் பொருமலில் ஆகட்டும்,
விலைமாதர் விடுதியில் சரண்யா கமலிடம், "சீக்கிரமா விட்ருவீங்களா... காலைல கணக்குப் பரீட்சை' என்று கேட்கும் அப்பாவித்தனமாகட்டும்,
"நாயக்கரே உன்னை ஒண்ணும் பண்ண முடியாது. நாங்கள்லாம் இருக்கோம் நீ போ நீ போ நாயக்கரே' என்று நண்பன் ஜனகராஜ் வேலு நாயக்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் நட்பிலாகட்டும், "அப்பா… உங்கள என்னனு நீங்க நெனச்சுக்கிட்டு இருக்கீங்க...… கடவுள்னா' என்று மகள் கார்த்திகா கேட்கும் விசாரணையாகட்டும், "என்னைக்காவது ஒரு நாள் வீட்டவிட்டு வெளியபோய்ட்டு உயிரோட திரும்பி வருவோம்ன்னு உத்திரவாதம் இருக்காடா' என்று மகள் முன் நண்பனிடம் கேட்கும் சுய பச்சாதாபத்தில் ஆகட்டும், ‘"எங்கேர்ந்து இவ்ளோ தைரியம் வந்ததுன்னு தெரியலை நாயக்கரே' மனசுல உங்களை நெனைச்சுக்கிட்டேன்' என்று நாயக்கரைத் தேடி வந்த காவலர்களால் தாக்கப்பட்டபின் கணக்குப் பிள்ளையாகப் பணிபுரியும் டெல்லி கணேஷ் கூறும் விசுவாசத்தில் ஆகட்டும், "நீலாவோட அஸ்தி கரையறதுக்குள்ள ரெட்டி குடும்பத்துல ஒரு ஆம்பள உயிரோட இருக்கக்கூடாது' என்று மனைவி கொலை செய்யப்பட்ட பின் நாயகனின் நெஞ்சில் எழும் ஆவேசத்தில் ஆகட்டும்.
"நீங்க நல்லவரா… கெட்டவரா' என்று ஆறு வயது பேரன் அறுபது வயது தாத்தாவிடம் கேட்கும் அப்பாவித்தனமான ஆனால் தத்துவார்த்தமான கேள்வியிலாகட்டும்.
"தெரியலயேப்பா...' என்று வானத்தைப் பார்த்து கைவிரித்துக் கூறும் வேலு நாயக்கரின் நேர்மை யிலாகட்டும் நாயகன் திரைப்பட வசனங்கள் அனைத்தும் காவியம் என்று சொல்வேன்.
இலக்கியத்தைத் திரையில் பிழிந்த பாலகுமாரனை எந்த சந்தேகமும் இல்லாமல் மனச்சாளரம் திறந்த மாஸ்டர் என்று போற்றுவேன்.