லைஞர் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார். எத்தனையோ சோதனைகளை வென்று, அவற்றைக் கடந்து வந்த கலைஞர், இந்த சோதனையிலும் வெற்றிகரமாக மீண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் உருக்கத்தோடு பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது.

கலைஞர், ஒரு மாபெரும் சகாப்தம். பூமிக்கு ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு நிலவு என்பது போல், அவருக்கு நிகர் அவர் மட்டும் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. ’

"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்’

Advertisment

-என்ற குறளுக்கு, ’அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்’ என்று கலைஞர் உரை எழுதினார்.

kalaingar

அவரது உரைப்படி, சான்றாண்மைக்குரியவர் கலைஞர்தான் என்பதை இந்தக் குறள் உணர்த்துகிறது.

Advertisment

எத்தனையோ கலை விற்பன்னர்களும் தலைவர்களும் இங்கே இருக்கலாம். என்றாலும், ஒட்டுமொத்த இந்தியாவிற்குமாக இருக்கும் பல்வகைத் திறன்கொண்ட ஒரே தலைவர், ஒரே கலைஞர், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக, 1969 ஜூலை 27-ல் பொறுப்பேற்றார் கலைஞர். இந்த கிரீடத்தை அவர் சுமக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனையோ சோதனைகள் வந்தபோதும், கட்சியை இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காத்து, தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைமைப் பதவியிலே தொடர்கிறார்.

இன்று அதற்கான பொன்விழாவைத் தி.மு.க. உணர்வோடு கொண்டாடுகிறது. இப்படியொரு பெருமை கலைஞரைத் தவிர இந்தியாவில் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்கவில்லை.

அவர் மாணவப் பருவத்தில் தொடங்கி, தன் தலையிலே தூக்கிச் சுமந்த முரசொலிலி, 75 -ஆம் ஆண்டு பவள விழாவை அண்மையிலே கண்டது. 13 முறை சட்டமன்றத் தேர்தலிலே நின்று அத்தனை முறையும் வெற்றிபெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவத்தைக் கொண்ட ஒரே தலைவராகவும் கலைஞரே திகழ்கிறார்.

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறது. எத்தனையோ முதல்வர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள். ஆனால், கலைஞரைப்போல், எல்லாத் துறையிலும் சாதித்த ஓர் ஆற்றல் வாய்ந்த முதல்வரை இதுவரை நாடு பார்த்ததில்லை.

67-ல் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற அறிஞர் அண்ணா 69-ல் மறைந்தார்.

69 பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட கலைஞர் அவர்கள், 69-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 என 5 முறை முதல்வராகி, தனது திராவிட ஆட்சியால், சமூக நீதிக்காகவும் சமூக நலனுக்காகவும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்திருக்கிறார். படிக்கவும் படிப்பின்மூலம் உயரவும் வழிதெரியாமல் இருந்த தமிழகத்தை அப்படியே விடியலை நோக்கி நகர்த்தி வந்த தனிப்பெருந்தலைவர் கலைஞராவார்.

கலைஞர் என்ற பிரம்மாண்டத்தின் ஒளிச்சிதறல், இந்திய வரலாற்றில் பலமாக சுடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் திருக்குவளை என்ற குக்கிராமத்திலே 1924 ஜூன் 3-ல் பிறந்து, இன்று தமிழகத்தின் தலையெழுத்தை, தந்தை பெரியாரோடும் அறிஞர் அண்ணா வோடும் இணைந்து நின்று திருத்திய மாமனிதர்தான் நம் கலைஞர். அவரது பெயர் தமிழக விடியலுக்கான மந்திரச்சொல்லாக மாறியிருக்கிறது என்றால், அதற்காக அவர் நடத்திய பயணமும், சிந்திய வியர்வையும் சந்தித்த போராட்டமும் சொல்லி மாளாதவை.

ஆயிரக்கணக்கான ஆண்டு களாக திராவிட சமூகத்தினரைத் தன் காலடியில் போட்டு நசுக்கிவந்தது ஆரியரின் வர்ணாசிரமம். பஞ்சமன் என்றும், சூத்திரன் என்றும் நீதி மறுக்கப்பட்ட சமூகமாக திராவிட சமூகமான தமிழ்ச்சமூகம் இருட்டில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தது. அப்போதுதான் ஈரோட்டிலிலிருந்து கிளம்பிவந்த பெரியார் என்ற பூகம்ப மனிதர், வர்ணாசிரமத்தைக் கீழே தள்ளி, அதன் நெஞ்சிலே மிதித்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அவர்கள் அடித்த அடிக்குப் பகுத்தறிவைக் கொண்டு பதிலடி கொடுத்தார். அப்போதே திராவிடத்தின் எழுச்சியும் தமிழகத்தின் மலர்ச்சியும் தொடங்கிவிட்டது. தந்தை பெரியாரோடு அறிஞர் அண்ணாவும் கலைஞரும் கைகோர்த்தபோது, தமிழினம் புத்தெழுச்சிபெறத் தொடங்கியது. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நடத்தப்பட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தமிழகம் முழுக்க மறுமலர்ச்சிப் பூக்கள் கண்விழிக்க ஆரம்பித்தன. தி.மு.க. என்னும் அரசியல் கட்சியை 49-ல் தொடங்கிய அண்ணா, 67-ல் ஆட்சியைப் பிடித்தார். மெட்ராஸ் மாகாணம், தமிழ்நாடு என்ற அழகிய பெயரை அவரால் சூட்டிக்கொண்டது. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தைக் கொடுத்தார் அண்ணா.

அண்ணாவிற்குப் பிறகு 69 பிப்ரவரி 10-ல் முதன்முதலாக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் கலைஞர். தமிழ்ச் சமூகமும் தமிழகமும் விறுவிறுவென விடிய ஆரம்பித்தது. சரித்திரச் சாதனைகள் அணிவகுக்க ஆரம்பித்தன.

தேசியகீதத்திற்கு இணையாக ’"நீராரும் கடலுடுத்த'’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை, 72-ல் இருந்து தமிழகம் முழுக்க ஒலிலிக்கச் செய்தார். குடிசைகள் இல்லாத் தமிழகத்தை உருவாக்க, குடிசை மாற்றுவாரியம், மனிதரை மனிதர் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாத் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், தொழுநோய் ஒழிப்புத்திட்டம், இலவசக் கண்ணொளித் திட்டம், விதவைத் திருமண உதவித் திட்டம், கலப்புத் திருமண உதவித் திட்டம், நில உச்சவரம்பு சட்டம், கல்லூரிப் படிப்புவரை இலவசக் கல்வி, ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று ஏழைகளை நோக்கி அரசுத் திட்டங்கள் பாய்ந்து, மக்கள் மனதில் பசுமையைத் தழைக்கச் செய்தன.

1929-ல் தந்தை பெரியார் செங்கல்பட்டு மாநாட்டில், பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்ற புரட்சிகரமான தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். அவரின் இந்தக் கனவை நனவாக்கும் வகையில், பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை என்று கலைஞர் மகத்தான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு என அதிரடி கிளப்பி பெண்ணுலக மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கராகலாம் என்கிற புரட்சிமிகும் சட்டத்தை நிறைவேற்றி, திராவிட இயக்கத்தின் தன்னேரில்லாத் தலைவராக மக்கள் நெஞ்சிலே உயர்ந்தார்.

இதுமட்டுமா? கிராமப்புறங்கள் செழிக்க அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சாதியின் வேர்களை வெட்டும் வகையில், பெரியார் சமத்துவக் குடியிருப்புகள் என நாளுக்கொரு திட்டத்தைக் கொண்டுவந்தபடியே இருந்தார். கிராமப்புற மக்களின் உயிரைக் காப்பாற்ற அவர் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ், பல லட்சம் பேரின் உயிரை மீட்டுக் கொடுத்திருக்கிறது. இலவச கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை 2009-ல் கலைஞர் கொண்டுவந்தார். ஒரே ஆண்டில் 2 லட்சம் பேர் இதய அறுவை, சிறுநீரக அறுவை சிகிச்சை என செய்துகொண்டு புத்துயிர் பெற்றனர். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியைக் கொடுத்து, பசிப்பிணியைத் தமிழகத்தில் இருந்தே துடைத்தெறிந்தார். இவையெல்லாம் கலைஞரின் நினைத்துப் பார்க்க முடியாத நிகரில்லாத சாதனைகள்.

தமிழர்கள் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் உரிய பங்களிப்பையும் உரிமையையும் பெற வேண்டுமென்று, 89-ல் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அதிரடியாகக் கொண்டுவந்தார் கலைஞர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு 30% என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு 18% என்றும், பழங்குடியினருக்கு (எஸ்டி) 1% என்றும் அந்த 69% சதவீத இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சமுதாயத்திற்கும் உரிய விகிதாச்சாரப்படி நீதி செய்தார். அதிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு 3.5% சதம் என்று தனி ஒதுக்கீட்டையும் கொடுத்து இசுலாமியப் பெருமக்களின் முன்னேற்றத்திற்கு ஒளிப்பாதை போட்டார். அதேபோல் தாழ்த்தப்பட்டோருக்கான 18%-ல் 3%-ஐ, உள் ஒதுக்கீடாக அருந்ததியினருக்கு வழங்கி, நீதியிலும் நீதி செய்தார். இதுதவிர, இந்த ஒதுக்கீடுகளில் தமிழில் படித்தோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சீர் மரபினருக்கும் இந்தியாவிலே முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கும் நீதி செய்து, சமூக நீதிகாத்த நாயகனான நிமிர்ந்து நின்றார்.

சமூக நீதியில் அக்கறை காட்டியதுபோலவே சமூக நலத்திலும் அதிக அக்கறை காட்டினார் கலைஞர். கல்வி, மருத்துவம், அடிப்படை உரிமைகள், அடிப்படைத் தேவைகள், அடிப்படைக் கட்டமைப்பு என களமிறங்கிய கலைஞர், சென்னை அண்ணா மேம்பாலம் தொடங்கி, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மேம்பாலங்களை அமைத்துப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்த்தார். தமிழகமெங்கும் கல்லூரிகளை உருவாக்கியதோடு, மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தினார். தமிழின் பண்பாட்டு அடையாளங்களைப் புதுப்பிக்கும் வகையில் பூம்புகார் நகரைப் புனரமைத்தார். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையைப் புதுப்பித்தார். வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கினார். அரும்பெரும் தலைவர்களுக்கு நினைவிடங் களை எழிலுடன் உருவாக்கினார். குமரியில் வானளாவிய வள்ளுவர் சிலையை நிறுவி, வள்ளுவனின் புகழை கால நெடும்பரப்பில் தூக்கி நிறுத்தினார். ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை சென்னையில் நிறுவினார்.

செம்மொழிப் பூங்காவை உருவாக்கினார். புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை எழுப்பி, கட்டடவியல் நிபுணர்களையே வியக்கவைத்தார். இப்படி இவர் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிலிட்டுக்கொண்டே போகலாம்.

தாய்மொழி தமிழுக்கு கலைஞர் ஆற்றிய சாதனைகள் சொல்லிலிமாளாதவை.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தை 2004-ல் பெற்றுக் கொடுத்த கலைஞர், 2010-ல் கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி, தமிழின் மாண்பை உலக நாடுகளின் பார்வையில் மேலும் உயரவைத்தார்.

செம்மொழி மாநாட்டுக்காக கலைஞர் எழுதிய ’"செம்மொழியான' பாடலே, உலகத் தமிழர்களை தமிழ்வீறு கொள்ளவைத்தது.

இதுமட்டுமா? தமிழுக்கு, சரித்திரமே வியந்து பார்க்கும் அளவிற்கு படைப்பியல் சாதனைகளையும் நிகழ்த்தினார். அவர் எழுதுகோலைத் தொட்ட பிறகுதான் திரைப்பட வசனங்கள் பகுத்தறிவையும் சமூகத்தையும் பேசின. அவர் வசனங்களே நடிகர் திலகம் சிவாஜியைப் போன்ற மாபெரும் கலைஞர்களை வார்த்தெடுத்தன. திரைப்படப் பாடல்களிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.

கலைஞர் குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பிய உரை, ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர், திருக்குறள் உரை போன்ற அவரின் படைப்பிலக்கியங்கள், தமிழன்னையின் மணிமகுடத்தில் வளமாகச் சுடர்கின்றன. நான்கு சுவர்களுக்குள் நடந்து கொண்டிருந்த கவியரங்கை, லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் கொண்டுவந்து நிறுத்திய பெருமையும் கலைஞருக்கே உரியது. அவரால் கவிஞர்கள் பலர் புகழ்மகுடம் தாங்கினர்.

தனது கம்பீரமான செந்தமிழ்ப் பேச்சாலும், எழுத்தாலும் சாதனைகளாலும் கோடானு கோடித் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் கலைஞர், இன்று ஓடிக்களைத்த சிங்கம் போல் தனது 95-ஆம் வயதில் முதுமை கொடுத்த நோய்களால் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்.

தீவிர மருத்துவம் அவருக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. கவலையடையும் தகவல்கள் மனதை கனக்கச் செய்கின்றன. ஒட்டுமொத்த தமிழகமும் அவருக்காகக் கலங்கி நின்று கை பிசைந்துகொண்டிருக்கிறது.

மீண்டும் கலைஞரின் குரல் கேட்கவும் அவர் முகம் பார்க்கவும் தமிழ்ச்சமூகம் பரிதவிக்கிறது.

கலைஞர் மீண்டெழ வேண்டும் என்றும், விரைந்து நலம்பெற வேண்டும் என்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பில், கலைஞரை நெகிழ்ச்சியோடு வாழ்த்துகிறோம்.

மீண்டும் சொல்கிறோம். பூமிக்கு ஒரு சூரியன், ஒரு நிலவு. நம் தேசத்துக்கு ஒரு கலைஞர். அவர் வாழ்வார்...!

-நெகிழ்ச்சியோடு

நக்கீரன்கோபால்