பரபரப்பிலிருந்து அவர் விலகி யிருந்தார். மார்க்கெட்டின் அருகில், மூன்று சாலைகளும் ஒன்றுசேரக்கூடிய திசையில்... அங்கு முன்பு எப்போதோ மண்ணில் குழிதோண்டி அமைக்கப்பட்டிருந்த, இப்போது பயன்படாத, முக்கால் பகுதி துருப்பிடித்த தபால் பெட்டிக்கு முன்னால், அதன் ஒரு பகுதி என்பதைப்போல அவர் தரையில் குத்திட்டு அமர்ந் திருந்தார். அவருக்கு முன்னால் விரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோணித்துண்டில் சில மரச்சீனிக் கிழங்குகள் இருந்தன.
கடைவீதியின் பரபரப்பில் மூழ்கிய யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.
அவருடைய மரச்சீனியின்மீதும் யாருடைய கவனமும் பதியவில்லை. அதே நேரத்தில்- அவரும் யாரையும் கவனிக்க வில்லை. வெறுமனே வெறித்துப் பார்த்தவாறு, எந்தவொரு அசைவுமில் லாமல் அவர் அங்கு...
அவர் ஒரு முரட்டுத்தனமான வேட்டியை மட்டுமே கட்டியிருந்தார். தேய்த்துக் குளித்து நீண்டகாலமான அவருடைய சரீரத்திலிருந்து எண்ணெய் சரியாகப் போகாமலிருந்தது. சாயங்கால நேரத்து தளர்வடைந்த வெயில் மெழுகாலான பலவீனமான ஒரு சிலையின் தோற்றத்தை அவருக்குத் தந்தது.
அவர் என் கவனத்தில் எப்போது பட்டார் என்பதை என்னால் கூறமுடியவில்லை. நானும் மற்றவர்களைப் போலவே சில நேரங்களில் வேகமாகவும் சிலவேளைகளில் எந்தவித இலக்கு இல்லாமலும் நடந்திருக்கிறேன் அல்லவா? தரையிலும் கைவண்டிகளிலும் குவியலாக வைக்கப்பட்டிருந்த பல நிறங்களைக்கொண்ட பழங்களிலும் காய்கறிகளிலும் கண்களைப் பதித்துக்கொண்டும், ஒருவேளை விலைபேசிக்கொண்டும் நான் மார்க்கெட்டில் நீண்டநேரம் செலவழித்திருக்கவேண்டும்.
ஆனால், என்ன காரணத்தாலோ நான் எதுவுமே வாங்க வில்லை. குழம்பு வைப்பதற்கு ஏதாவது வாங்க வேண்டுமென்று நினைத்துதான் ஒரு பையுடன் சாயங்கால வேளையில் மார்க்கெட்டிற்கே வந்தேன். ஆனால், பொருட்களின் விலையைக் கேட்டபோது, எனக்கு ஏனென்றே தெரியாமல் வெறுப்பு தோன்ற, நான் அங்கொரு அந்நியனானேன்.
தொடர்ந்து வெறுமனே சுற்றித் திரிந்து கொண்டிருந்ததற்கு மத்தியில் எப்போதோ அவர் என் பார்வையில் பட்டார்.
முதலில் சற்று தூரத்திலிருந்தவாறு அவரை கவனத்துடன் பார்த்தேன். ஆட்கள் யாருமே இல்லாத திசையில் அவர் குத்திட்டு அமர்ந்திருந் ததும், அவருக்கு முன்னாலிருந்த சில கிழங்குகளும் எனக்கு வினோதமாகத் தோன்றின. தொடர்ந்து நான் அவரை நோக்கிச் சென்றதற்கு அதுதான் காரணமாக இருந்திருக்கவேண்டும். அவ்வாறு அங்கு சிறிது நேரம் நின்றபோது, என் கால்கள் வலிக்க, நானும் அவரைப்போலவே அங்கு குத்திட்டு அமர்ந்தேன். அறிமுகமானவர்கள் யாராவது பார்ப்பார்களோ என்பதையெல்லாம் அப்போது நினைக்கவேயில்லை. என் மனதில் அப்போது அவர் மட்டுமே இருந்தார். மார்க்கெட்டின் பரபரப்பிலிருந்து விலகி, கிழிந்த ஒரு வேட்டி மட்டும் அணிந்து, தரையில் வைக்கப்பட்டிருக்கும் சில மரச்சீனிக்கிழங்குத் துண்டுகளுக்கு முன்னால் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் துறவியைப்போல மிக அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு வயதான மனிதர்... பலவீனமானவர்...
நான் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்.
அவர் மிகவும் களைத்துப்போய்க் காணப்பட்டார்.
அவர் அணிந்திருந்த வேட்டி சுத்தமானதாக இருந்தாலும், இங்குமங்குமாகக் கிழிந்தும், சேர்த்துத் தைத்தும் இருந்தது.
அவருடைய முடி முழுமையாக வெட்டப் பட்டிருந்தது.
முகத்திலிருந்த உரோமங்களில் பெரும்பாலானவை வெளுத்திருந்தன.
ஆனால், அப்போதும் அவருடைய கண்களை என்னால் பார்க்க முடியவில்லை.
வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்த அவர் திடீரென்று தலையை உயர்த்தி இருட்டப்போகும் ஆகாயத்தைப் பார்த்துக் கவலையுடன் என்னவோ முணுமுணுப்பதைப் பார்த்தேன்.
அவருக்கு மிக அருகிலேயே நான் இருந்தேன் என்றாலும், தனக்குத்தானே அவர் என்ன கூறிக் கொண்டார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு தேம்பலில் கரைந்துவிட்டன என்பதைப்போல இருந்தன அவருடைய வார்த்தைகள்.
நேரம் சாயங்காலமாகி விட்டிருந்தது.
திடீரென்று நான் எதுவுமே யோசிக்காமல் கூறினேன்:
""கிழங்குக்கு என்ன விலை?''
ஏதோ நம்ப முடியாததைக் கேட்டதைப்போல அவர் மெதுவாகத் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார்.
அவருடைய பார்வையில் சந்தேகம் இருந்தது.
அவர் மெதுவான குரலில் கூறினார்:
""பத்து ரூபா.''
நான் ஆச்சரியத்துடன் கூறினேன்:
""பத்து ரூபாயா? ஒரு கிலோ கிழங்கு பத்து ரூபாயா?''
அப்போது அவர் கூறினார்:
""கிலோவுக்கு இல்ல... இது எல்லாத்துக்கும் சேர்த்து...''
இவ்வாறு கூறும்போது, அவருடைய விரல்கள் அந்த கிழங்குத் துண்டுகளைத் தடவிக்கொண்டிருந்தன.
மீண்டும் அவர் கூறினார்:
""நல்ல... முதல்தரமான கிழங்கு... எல்லாரும் கிலோ மூணு ரூபாய்க்கு வாங்குறப்போ, இதுக்கு இரண்டு ரூபாய்கூட வராது. ஆறு கிலோ இருக்கு. நான் எடைபோட்டுப் பார்த்தது...''
நான் அப்போது முதன்முறையாக அவருடைய கண்களைப் பார்த்தேன். அவருடைய களைத்துப்பேன கண்கள் ஆசையுடன் என் முகத்தில் பதிந்திருந்தன.
என் விரல்கள் அந்த கிழங்கில் இருந்தன.
உடனடியாக நான் கூறினேன்:
""சரி...''
நான் ஒரு பத்து ரூபாய் நோட்டினை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை ஒரு நிமிடம் கண்களுக்கு நேராக உயர்த்திப் பிடித்துப் பார்த்தார். தொடர்ந்து கோணித்துண்டிலிருந்து கிழங்கை என்னுடைய பையில் போட்டுவிட்டு, எதுவுமே கூறாமல் கூட்டத்தை நோக்கி நடந்துசென்றார்.
சுருட்டி மடிக்கப்பட்ட கோணித்துண்டினை விலைமதிப்புள்ள ஒரு பொருளைப்போல தன் கையில் பத்திரமாக அவர் பிடித்திருந்தார்.
அவர் சென்ற வழியைப் பார்த்தவாறு மேலும் சிறிது நேரம் நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அப்போதும் மனதிலிருந்த காட்சிகள் தெளிவற்று இருந்தன. தொடர்ந்து மெதுவாக... மெதுவாக நான் வாங்கிய ஆறு கிலோ மரச்சீனியை வீட்டில் பயன்படுத்தக்கூடிய பிரச்சினைகள் தோன்றிவர ஆரம்பித்தன. நான் ஒரு அதிர்ச்சியுடன் நினைத்துப் பார்த்தேன். இந்த ஆறு கிலோவை யார் பயன்படுத்தித் தீர்ப்பது- வெறும் இரண்டு பேர் மட்டுமே இருக்கும் ஒரு வீட்டில்... பிறகு.. இந்த இரண்டு பேர்களில் ஒருவர் எந்தக் காலத்திலும் மரச்சீனியையே விரும்பாத நபர்!
பிறகு... இந்த விருப்பத்திற்கும் விருப்பமின்மைக்கும் அப்பால் வேறொரு முக்கிய விஷயமும் இருக்கிறதே?
நானும் மனைவியும் கடுமையான சர்க்கரை நோயாளிகள் ஆயிற்றே!
நான் நினைத்துப் பார்த்தேன். ஒரு நாள் மனைவி, டாக்டரிடம் புகார் கூறியதை...
டாக்டர் கேட்டார்:
"இது சரியா? நீங்க இப்போதும் மரச்சீனி சாப்பிடுறீங்களா?'
நான் தயங்கியவாறு கூறினேன்:
"இல்ல டாக்டர். அப்படி எதுவுமில்ல. எப்போதாவது ஒரு ஆசை உண்டானா ஒரு சிறிய துண்டு...'
டாக்டர் கூறினார்:
"கூடாது... நீங்க ரெண்டு பேரும் மரச்சீனி சாப்பிடவே கூடாது. எப்போதாவது ஒரு சிறிய துண்டு... ஆசையை அடக்குறதுக்கு. அப்படி சொல்லித்தான் ஆரம்பிப்பீங்க... அதனால வேணாம்... சாப்பிடவே வேணாம்.'
எனினும்... இப்போது... இந்த ஆறு கிலோ சுமையுடன் வீட்டிற்குச் சென்று...
வேறொரு குற்றச்சாட்டும் உண்டாகுமல்லவா?
எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆரம்ப பரபரப்பெல்லாம் முடிந்தபிறகு மனைவி கேட்பாள்.
"இது ஆறு கிலோ இருக்குமா?'
"இருக்கும்' என்று நான் தலையை ஆட்டினாலும், வீட்டுக்காரிக்கு முழுமையான நம்பிக்கை உண்டாகவில்லை.
சந்தேகத்துடன் பையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, மனைவி கூறுவாள்:
"என்னவோ... எனக்கு நம்பிக்கையில்ல... யாரோ ஒருத்தன் ஆறு கிலோ இருக்குன்னு சொன்னதும், நீங்க அதை நம்பிட்டீங்க. சரியான்னு எடைபோட்டுக் பார்க்காம... இல்லையா? அப்படித்தானே?'
என்னால் எதுவுமே கூறமுடியவில்லையே!
என் மனதில் பழைய ஒரு நினைவும் எழுந்து வந்தது. சில வருடங்களுக்குமுன்பு நான் பணியில் இருந்தபோது நடைபெற்றது. ப்ரஸ் க்ளப் சாலையின் வழியாக மாலை வேளையில் நான் காரை ஓட்டி வந்துகொண்டிருந்தேன். அப்போது அங்கு சாலையின் அருகில் ஒரு வயதான மனிதர்- அவரும் ஒரு பெரிய மேற்துண்டினைப் போன்ற வேட்டியை மட்டுமே அணிந்திருந்தார். ஒரு துணித்துண்டில் கொஞ்சம் நாட்டுக் கத்திகளை அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து, சில அடிகள் முன்னோக்கிச் சென்றவுடன் நான் திடீரென்று காரை நிறுத்தினேன். என்னை கவலைக்குள்ளாக்கிய ஏதோவொன்று அவருடைய முகத்தில் இருந்தது.
நான் அவரை நோக்கி நடந்துசென்றேன். காய்கறி களை நறுக்குவதற்குப் பயன்படக்கூடிய கத்திகளைத் தான் அவர் அடுக்கிவைத்திருந்தார். நல்ல...
அழகான கைப்பிடிகள் எதுவுமில்லையென்றாலும், நல்ல கூர்மையைக்கொண்ட கத்திகளாக இருந்தன. பெயருக்கு சில கேள்விகளைக் கேட்டபிறகு- அவரே தயாரித்த கத்திகளாக இருந்தன அவை அனைத்தும்.
அவர் கூறிய விலைக்கு நான் இரண்டு... மூன்று கத்திகளை வாங்கினேன். விலை அப்படியொன்றும் அதிகமாக இல்லை. வேறேதாவது திசைகளில் இருந்திருந்தால், நிச்சயம் அதிகமாகக் கொடுக்கவேண்டியது வரும். என்னால் மிக உறுதியாகக் கூறமுடியும். தொடர்ந்து இதனால் உண்டான சந்தோஷத்தில் வீட்டை அடைந்தவுடன் மனைவியிடம் கத்திகளைக் காட்டியபோது, எந்தவொரு சந்தோஷமும் இல்லாமல் கேட்டது "இது என்ன?' என்பதுதான்.
நான் ஒரு பள்ளிக்கூட சிறுவனின் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் கூறினேன்:
"கத்தி.'
அப்போது மனைவி கோபத்துடன் கூறினாள்:
"அது எனக்கும் புரியுது. ஆனா புரியாத விஷயம்- இது எதுக்குங்கறதுதான்.'
நான் கூறினேன்:
"நல்ல... முதல்தரமான கத்திங்க.... விலையும் அதிகமில்ல. அதனால நான் நினைச்சேன்...'
மனைவி கூறினாள்:
"நான் வெறுத்துப் போயிட்டேன். உங்களுக்கு என்னவோ நடந்திருக்கு. இங்க... இப்ப கத்திக்கான என்ன தேவையிருக்கு? இங்க... இப்போதே தேவையான அளவுக்கு கத்திங்க இல்லையா? இன்னும் பாக்கெட்டே பிரிக்காத கத்திங்களும் இல்லியா? உங்களோட மருமக்கள் கொண்டு வந்தவை. நல்ல.. முதல்தரமான ஷெஃபீல்ட் கத்திங்க. அதெல்லாம் தேவைக்கும் அதிகமா இருக்க, ஏதோ ஒரு வயசான கொல்லன் உண்டாக்கிய இந்த காய்கறி நறுக்கும் கத்திகளை வாங்கிக்கிட்டு...'
நான் எதுவுமே கூறாமல் நின்றிருந்தேன்.
இரவு வேளை... நேரம் அதிகமாகவில்லை யென்றாலும், ஆகாயத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தன. அருமையான இளங்காற்றும் இருந்தது. பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றாலும், இறுதியில் நினைத்தேன்: "வேண்டாம்... நடக்கலாம்.
அந்த அளவுக்கு தூரமில்லையே! நட்சத்திரங் களைப் பார்த்தவாறு, காற்றை வாங்கிக்கொண்டு, மெதுவாக...'
பலவற்றையும் சிந்தித்தவாறு மெதுவாக நடந்தேன். வீடு வந்துவிட்டதா, இல்லையா என்ற சிந்தனை எதுவும் என்னிடமில்லை. என் மனதில் அப்போது முக்கியமாக இருந்தது- எனக்கு பத்து ரூபாய்க்கு ஆறு கிலோ மரச்சீனியைத் தந்த அந்த வயதான மனிதர்தான். நான் கொடுத்த பத்து ரூபாய் நோட்டினைக் கூர்ந்து பார்த்துவிட்டு மடியில் வைத்துக்கொண்டு மார்க்கெட்டிற்கு அவர் வேகமாகச் சென்றார் அல்லவா? அப்போது அவருடைய மனதில் என்ன இருந்திருக்கும்? நான் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தேன். என்ன இருந்திருக்கும்? அவருடைய நோய்வாய்ப்பட்ட மனைவியைப் பற்றிய சிந்தனை இருந்திருக்குமோ? இல்லாவிட்டால்... அப்படியொரு மனைவி இல்லையென்றால், அவருடைய வருகையை எதிர்பார்த்து ஆர்வத்துடன் அமர்ந்திருக்கும்...