வனஜாவும் மகனும் ஏறிய புகைவண்டி விலகி விலகிச் செல்வதைப் பார்த்தவாறு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். வண்டி நீங்கியபிறகு உண்டான வெறுமையில் அந்தப் பார்வை ஆழமாகப் பதிந்ததைப்போல தோன்றியது.
இவ்வாறு எவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தார் என்பதே தெரியவில்லை. மனதில் என்ன நினைத்தார் என்பதும் தெரியவில்லை. உண்மையிலேயே ஏதாவது நினைத்திருப்பாரா? ஒரு விஷயத்தை மட்டுமே மனம் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
"எல்லாரும் போயிட்டாங்க... எல்லாரும் போயிட்டாங்க.'
கடுமையான கவலையோ அமைதியற்ற நிலையோ அப்போது தோன்றவில்லை. எதையும் உணர இயலவில்லை என்றொரு நிலை...
""நாம திரும்பிப் போகலாமா?'' பின்னாலிலிருந்து வேலு கேட்டான். பதில் கூறவில்லை. அங்கேயே அப்படியே நிற்கவேண்டுமென்றுதான் விரும்பினார்.
கண்ணுக்கு முன்னால் விலகிப்போகும் அனைத் தையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், எதையும் ரசிக்கவில்லை. தடிமனான சேட்டு மெலிலிந்துபோய்க் காணப்பட்ட மனைவியின் கையைப் பிடித்தவாறு மேலும்கீழும் மூச்சு விட்டவாறு கதவைக் கடந்து சென்றார். என்னவோ ஏற்றப்பட்ட ஒன்றிரண்டு "ட்ராலிகள்' முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தன.
அவை நகர்ந்தபோது எழுந்த காதுகளைக் கிழிக்கக்கூடிய சத்தத்தில் மனக் கஷ்டம் எதுவும் உண்டாகவில்லை.
அதுவரை உரத்த குரலில் கூப்பாடு போட்டு நடந்துகொண்டிருந்த பீடி- சிகரெட் விற்பனை செய்யும் மனிதனும், சோடா- லெமனட் விற்பவனும் களைப்படைந்துவிட்டதைப்போல, நடைமேடையின் திண்ணையிலும் தரையிலும் அமர்ந்திருப்பதைப் பெரியவர் பார்த்தார். அவர் நினைத்தார்: "எல்லா ஆரவாரமும் முடிஞ்சிட்டது. எல்லாரும் போயிட்டாங்க.'
மேற்கு திசையில் நின்றுகொண்டிருந்த மாமரத்தின் நிழல் நடைமேடையில் நீண்டு வந்துகொண்டிருந்தது. ஒரு இரும்பு கதாயுதத்தை தள்ளித்தள்ளி கொண்டுவருவதைப்போல இருந்தது. அந்த நிழலைப் பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றார். தொடர்ந்து உள்ளங்கையை புருவத்திற்கு அருகில் வைத்து மாமரத்தைப் பார்த்தார். அதன் கிளையிலிருந்த ஓணக்கிளி எங்கோ பறந்துசென்றது.
""நாம திரும்பிப் போவோம்.'' மீண்டும் வேலு ஞாபகப்படுத்தினான்.
""போவோம்'' என்று கூறினாலும், அசையவில்லை.
அந்த நிழலைப் பார்த்துக்கொண்டு நிற்பதென்பதே ஒரு சுவாரசிய விஷயமாக இருந்தது. தெளிவற்ற என்னவெல்லாமோ மனதிற்குள் நுழைந்து வருவதும், வந்த அதே வேகத்தில் மறைந்துபோவதுமாக இருந்தன.
மீண்டும் வேலு ஞாபகப்படுத்தினான். ""வண்டி போய் கொஞ்சநேரம் ஆயிடுச்சு. முதலாளி... திரும்பிப் போலாம்.''
""திரும்பிப் போறதுக்கு நேரமாயிடுச்சா?''
""நேரமாயிடுச்சு.''
நடைமேடையில் குறுக்காகக் கிடந்த மாமரத்தின் நீண்டதும், குறும்புத்தனத்துடனும் இருந்த நிழலைக் குறுக்காகக் கடந்து, அவர் வேலுவுடன் சேர்ந்து நடந்தார்.
""நான் இங்க... இப்படி நிக்கறப்போ உனக்கு கஷ்டமா இருக்கா வேலு?''
""மனசுக்கு கஷ்டமா இருக்குன்றது மட்டும்தான்.''
""எதுக்கு?''
""முதலாளி தனியா இங்க... இப்படி நிற்கிறாரேன்னு நினைச்சு...''
அதைக் கேட்டபோது பெரியவரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ""நான் தனியா இருக்கேனா? டேய் கழுதை... உனக்கு கண் இல்லியா? அறிவில்லியா? நான் எப்படி தனி மனிதனாவேன்? எனக்குப் பிள்ளைங்க இல்லியா? ஆண் பிள்ளைங்களும்... பெண் பிள்ளைங்களும்...?'' மேலும் சற்று நெருங்கி நின்று, ரகசியத்தைக் கூறுவதைப்போல கேட்டார்: ""டேய் வேலு... என் பிள்ளைங்களுக்கு என்மேல, எந்த அளவுக்கு விருப்பம்ங்கற விஷயம் உனக்குத் தெரியாதா? வண்டி புறப்பட்டப்போ வனஜாவின் நிறைஞ்ச கண்களை நீ கவனிச்சியா? அப்பாவை விட்டுட்டுப் போறதுல அவளுக்கு அந்த அளவுக்கு கவலை! ஆனா, ஒரு பெண் பிள்ளையால கணவனோட போகாம இருக்க முடியுமா?'' இவ்வளவையும் உறுதியான குரலில் கூறிவிட்டு, பெரியவர் நின்று மேலும்கீழும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். வேலு பதைபதைப்பு உண்டானதைப்போல தன் முகத்தையே எதற்காகப் பார்க் கிறான் என்பதைப் பெரியவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
வேலுவின் அந்த பரிதாபத்திற்குரிய நிற்றலைப் பார்த்தபோது கோபம் அடங்கியது. கவலை உண்டானது. அவன் தனக்கு சேவகம் செய்ய ஆரம்பித்து எத்தனை வருடங்களாகிவிட்டன! மாவட்டப் பதிவாளராகப் பதவி உயர்வு கிடைப்பதற்குமுன்பே, தன்னுடன் வந்து இணைந்துகொண்டவன்! பென்ஷன் பணம் வாங்கி, பதினைந்து வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. எனினும், வேலு போகவில்லை. அதிக ஆதாயம் கிடைக்கும் பணிக்கு அழைக்காமலிலில்லை.
அப்போதெல்லாம் அவன் கூறினான்:
"பெரியவர் இறக்குறவரை... நான் எங்கயும் போகமாட்டேன்.'
அவன் அவ்வாறு தீர்மானிக்கவில்லை யென்றால், தன்னுடைய இப்போதைய நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தபோது, கண்கள் நிறைந்துவிடுகின்றன.
""போலாமா?'' மீண்டும் வேலு கேட்டான்.
""போலாம்.''
கண்ணாடியை மேலும் சற்று நகர்த்தி சரியாக வைத்துக்கொண்டு ஊன்றுகோலை ஊன்றியவாறு மெதுவாக... மெதுவாக நடந்தார்.
நடைபாதை பெரும்பாலும் வெறுமையாகி விட்டிருந்தது. தலையில் சிவந்தநிறத் துணியைக் கட்டியிருந்த ஓரிரண்டு சுமை தூக்கும் மனிதர்கள் என்னவோ கூறி, குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உரத்துக்கூவும் சேவல்கள் ஞாபகத்தில் வந்தன.
கூவட்டும்... கூவட்டும்... இளமை இருக்கும்போதே கூவட்டும்... அருகில் கட்டப்பட்ட சுமையுடனும், மடியில் ஒரு பெண் குழந்தையுடனும் காங்க்ரீட் பெஞ்சின்மீது அமர்ந்திருந்த தடிமனான மராத்திப் பெண்ணைப் பார்த்ததும் பெரியவர் நின்றார்.
அந்த குழந்தையைக் கூர்ந்து பார்த்தார். மகளின் தலையில் தாய் பேன் எடுத்துக்கொண்டிருந்தாள். மகளோ... மிட்டாயை சுவைத்துக்கொண்டும்,

அந்த குழந்தையைக் கூர்ந்து பார்த்தார். மகளின் தலையில் தாய் பேன் எடுத்துக்கொண்டிருந்தாள். மகளோ... மிட்டாயை சுவைத்துக்கொண்டும், இனிப்பான விரல்களை நக்கிக்கொண்டும், பாட்டு பாடிக்கொண்டும் இருந்தாள். என்ன பாட்டு?
மராத்தி மொழியில் உள்ளதாக இருக்கலாம்.
திரும்பி... வேலுவிடம் கேட்டார்: ""சந்தோஷைவிட வயசு அதிகமா இருக்கும்ல?''
""ஆமா.''
பேரனைப் பற்றி நினைத்தபோது, சிரிப்பு வந்தது. என்ன குறும்புத்தனம்! தாத்தாவின் பார்வையையும் நடையையும் என்ன அருமையாக நடித்துக் காட்டுகிறான்! தான் ஒரு இளம் உயிரின்மூலம் செயல்படுவதுபோல தோன்றியது.
சந்தோஷின் சுறுசுறுப்பு ஓணக்காலத்திற்கு நிறத்தைக் கூட்டியது. வெளியே ஓண வெயிலும், உள்ளே சந்தோஷமும் வெளிச்சத்தைப் பரப்பின.
அவன் அவ்வப்போது கேட்டான்: "தாத்தா... நீங்க பைலட்டா இருந்திருக்கீங்களா?'
"இல்லையே?'
"நான் பைலட்டாவேன் தாத்தா. உலகத்தில இருக்குற எல்லா பகுதிகளுக்கும் விமானத்தைப் பறக்கச் செய்வேன். தாத்தா... உங்களை ஒருநாள் நான் விமானத்துல டில்லிலிக்கு அழைச்சிட்டுப் போவேன்.'
"தாத்தா இனி ஒரேயொரு விமானத்திலதான் ஏறமுடியும். அது அங்கிருந்து புறப்பட்டுடுச்சோ என்னவோ?'
புறப்பட்டிருக்கும் தாத்தா அவன் சமாதானப் படுத்துகிற குரலிலில் கூறினான்.
புகைவண்டி நிலையத்திற்கு வெளியே கால்களை எடுத்துவைத்தபோது நினைத்தார்: "இப்போது வனஜாவும் சந்தோஷும் எங்குபோய் சேர்ந் திருப்பார்கள்?'
அப்போது காதுகளில் ஒரு பாட்டு வந்து விழுந்தது. சுற்றிலும் கண்களை ஓட்டினார். புகைவண்டி நிலையத்தின் ஓரத்திலிருந்து கம்பிவேலிக்கு அருகில் ஒரு சிறுமி அமர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். விரிப்பில் வைக்கப்பட்டிருந்த ஹார்மோனியத்தை அவ்வப்போது இயக்கியவாறு பாடிக்கொண்டி ருந்தாள். மூன்று... நான்கு பிச்சைக்கார சிறுவர்களும், ஒரு ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளியும், இரண்டு சபரிமலைக்காரர்களும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் நாட்டிலுள்ள பத்தாயிரம் மக்களுக்கு மத்தியில் பாடுவதைப்போல அவள் நினைத்துக்கொண்டிருந்தாள்.
பாட்டு எந்த மொழியைச் சேர்ந்ததென்பது தெரியவில்லை. ஒருவகையில் கூறுவதாக இருந்தால்... குழந்தைகளுக்கும் பாடலுக்கும் மொழி வேறுபாடு இல்லாமலிருக்கலாம். அந்த சிறுமியின்மீது மிகுந்த நெருக்கம் தோன்றியது. எங்கேயோ பார்த்ததைப்போல தோன்றியது. எங்கு...?
திரும்பி, வேலுவிடம் கேட்டார்:
""உன் கையில சில்லரை இருக்கா?''
""இருக்கு.''
நாலணாவை வாங்கி, அந்த விரிப்பின்மீது போட்டபோது, இளம் கைகளை ஹார்மோனியத் திலிருந்து எடுத்து, அவள் தலையை உயர்த்தி வணங்கினாள்.
அதைப் பார்த்தபோது, சிரிப்பை அடக்குவதற்கு முடியவில்லை. ஊன்றுகோலை ஊன்றி முன்னோக்கி வைத்தபோதும் அவளுடைய பாட்டு காதுகளில் வந்து விழுந்து கொண்டிருந்தது.
""வாடகை கார்ல ஏறலாம்.'' வேலு ஞாபகப்படுத் தினான்.
கார் நகர்ந்தபோது நினைத்தார்- எத்தனையோ பேர் இந்த வண்டியில் ஏறியிருப்பார்கள் என்று. பிள்ளைகளை விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தனியாகத் திரும்பிவரும் மனிதர்களும் இதில் ஏறியிருப்பார்கள். இருக்கை முழுவதிலும் கண்களை ஓட்டினார். ஒரு ரிப்பன் துண்டு அங்கு கிடந்தது.
யார் விட்டுச் சென்றதோ?
அதை எடுத்து கண்ணாடிக்கு அருகில் வைத்துப் பார்த்தார். பச்சை நிறத்தில் இருந்தது. கையில் வைத்து மெதுவாக... மெதுவாகத் தடவினார். என்ன மினுமினுப்பு!
பால்ய வயதில் வனஜாவுக்கு ரிப்பன்மீது விருப்பமில்லை என்பது அப்போது ஞாபகத்தில் வந்தது. நகைகளின்மீதும், ஆடைகளின்மீதும் சிறிதும் விருப்பமே இல்லாத சிறுமியாக இருந்தாள். தலைமுடியை அவிழ்த்துப் பறக்கவிட்டாறு ஓடிக்குதித்து நடப்பாள். "பறச்சி காளி' என்று அம்மா அழைப்பாள். அவள் "பறச்சி காளி'யாக இல்லாமல் ஆனபோது, பார்ப்பதற்கு அம்மா இல்லை.
வனஜாவின் தாயைப் பற்றி நினைத்தபோது, ஞாபகத்தில் பலவும் தோன்றி மறைந்தன. ஐஸ்வர்யமுள்ள அந்த முகம் மறைந்தபோது, அனைத்துமே மறைந்துவிட்டன. தன்னுடைய இப்போதைய நிலையை அம்மு தெரிந்து கொண்டிருப்பாளா? தெரிந்திருந்தால், தேம்பி அழுவாள். தொடர்ந்து அவள் பிள்ளைகளிடம் கூறுவாள்: "எல்லாரும் போங்க... சாகுறவரை நான் உங்க அப்பாவைவிட்டுப் பிரியமாட்டேன்.'
ஆனால், அவளுக்குத்தான் முதலிலில் போகவேண்டிய நிலை உண்டானது. காரில் அருகில் அமர்ந்திருக்கும் வேறொரு மனிதரிடம் கூறுவதைப் போல ரகசியமான குரலிலில் கூறினார்: "அம்மு... இங்க யாருமே இல்லை. உண்மைதான்... ஆனா, பிள்ளைங்ககிட்ட கோபப்பட்டு பயனில்ல. அவங்க வாழவேணாமா?'
""இறங்குவோம்.'' வேலு கூறியபோதுதான் கார் நின்ற விஷயமே தெரிந்தது. கோலை ஊன்றியவாறு மெதுவாக... மெதுவாக... படிகளில் ஏறினார்.
வாசல் பகுதி வெறுமையாக இருந்தது. போவதற்குமுன்பு சந்தோஷ் கிழித்துப்போட்ட கொஞ்சம் சிகரெட் பெட்டிகள் அங்கு சிதறிக் கிடந்தன. ஒரு பழைய சிறிய சாக்ஸ் நாற்காலிலியில் தொங்கிக்கொண்டிருந்தது. எடுத்துப் பார்த்தார். சந்தோஷுடையது என்று தோன்றியது. அதன்மீதிருந்த சிவப்பு நிறக் கோடுகளை விரல்களால் தடவினார்.
அதை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அந்த பெரிய கூடம் வெறுமையாகக் காணப்பட்டது. கோலை ஊன்றியவாறு சிறிதுநேரம் நின்று சுற்றிலும் பார்த்தார்.
கொஞ்சநாட்களாக இந்தக் கூடம் எப்போதும் ஆரவாரத்தில் மூழ்கியிருந்தது. வனஜாவும் சந்தோஷும்... பாலாவும், நான்கு குழந்தைகளும்... அப்பு, ஸ்ரீதரன் ஆகியோரின் குடும்பமும், குழந்தைகளும்... எப்போதும் பேச்சும் சிரிப்பும் குழந்தைகளின் உரத்த சத்தங்களும்... இந்த அளவுக்கு நிறைய மனிதர்கள் ஒன்றுசேர்ந்து இந்த வீட்டிலிருந்து எத்தனை வருடங்களாகி விட்டன! இந்த வருட ஓணம்... ஓணமேதான்!
எல்லாரும் வருகிறார்கள் என்ற விஷயத்தை அறிந்துகொண்டபோதே, மனம் நிறைந்து ததும்ப ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீதரனின் விஷயத்தில்தான் மனக் கவலை... கல்கத்தாவில் வசிக்கிறான் என்று கூறி பிரயோஜனமில்லை. வங்காளம் முழுவதிலும் ஓடி நடக்கவேண்டியதாக இருந்தது அவனுடைய பணி. விரைவில் பணி உயர்வு கிடைக்குமென்று கேள்விப்பட்டார். அதற்குப் பிறகு ஒரே இடத்தில் இருக்க முடியலாம்.
அவன் இப்படி ஆவான் என்று ஆரம்ப காலத்தில் நினைக்கவில்லை. என்ன பிரச்சினைகளையெல்லாம் உண்டாக்கினான்! படிப்பு, வேலை, திருமணம்- அனைத்தையும் ஆரவாரமாகச் செய்தவன் அவன். சங்கரக்குட்டிப் பணிக்கரின் வீட்டில் ஒரு திருமணத்தை முடிப்பதென்பது எளிதான விஷயமல்ல. ஆனால், தன்மீது பணிக்கர் மிகப்பெரிய மதிப்பை வைத்திருந்தார். எது எப்படியோ... அந்த திருமணத்துடன் அவனுக்கு ஒரு பணிவு வந்தது.
அவருக்கும் மனதில் நிம்மதி உண்டானது. தந்தைக்கு கெட்ட பெயரை உண்டாக்காமல் இருக்கட்டும்!
அவன் நான்கு வருடங்களாக வீட்டிற்கு வருகிறான். அவ்வாறு எல்லாரும் வருவார்கள்.
ஒரு ஆள் மட்டும் வருவதில்லை- அம்மு.
ஸ்ரீதரின் கடிதம் கிடைத்த நாளன்று படுக்கையறையிலிருந்த அம்முவின் படத்திற்கு அருகில்சென்று சிறிது நேரம் நின்றார்: "அம்மு... பிள்ளைங்க எல்லாரும் வர்றதா சொல்லியிருக்காங்க!' இவ்வாறு கூறியபோது, என்னவோ ஒரு நிம்மதி!
அன்று உணவு பரிமாறியபோது, வேலுவிடம் கூறினார்:
"இனி உனக்கு என்னால கஷ்டம் இருக்காது. என் பிள்ளைங்க எல்லாரும் வர்றாங்க. இனி அவங்க என்னை இங்கு விட்டுட்டுப் போகமாட்டாங்க.'
"முதலாளி... நீங்க போகணும்.'
"வேலு... நீ வர்றியா?'
"விருப்பம்போல...'
"நீயும் வரலாம்.'
அந்த உரையாடல் மனதிலிலிருந்து மறையவில்லை.. பாவம்... வேலுவும் ஆசைப்பட்டிருப்பான். பிறகு...
அப்புதான் முதலிலிலில் வந்து நுழைந்தான்.
அப்புவிடம் என்ன மாறுதல் உண்டாகியிருக்கிறது! செவியின் உரோமங்களில் நரை விழுந்துவிட்டது. எனினும், உடல்நலத்திற்கு எந்தவொரு குறையுமில்லை.
அவனுடைய முதல் மகள் வளர்ந்துவிட்டாள். எனினும், உற்சாகத்திற்குக் குறைவில்லை. இறக்கம் குறைவான பாவாடையும், துள்ளி குதிக்கக்கூடிய நடையும், படபடவென்றிருக்கும் வார்த்தைகளும் ஞாபகத்தில் வருகிறது. "தாத்தா... உங்க இந்த ஊன்றுகோலை நான் எடுத்துக்கிட்டுப் போவேன்.'
"தாத்தாவையே கொண்டுபோகலாமே?'
"அப்படின்னா... ரொம்பவும் நல்லது.'
"தாத்தா வந்தா உனக்கு என்ன நல்லது?'
"எனக்கில்ல... நாக குன்றுகளோட பாதுகாப்புக்கு இந்த ஒரேயொரு ஊன்றுகோல் இருந்தா போதும். ஒரு ஊன்றுகோல் ஒரு டிஃபன்ஸ் டிப்பார்ட்மென்ட் முழுவதும்! தாத்தாவின் ஊன்றுகோல் கீ ஜேய்!'
அந்தப் பெண் பிள்ளைக்கு என்ன நாக்கு!
அவளுடைய தங்கை ப்ரீதா மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவளாக இருந்தாள். அந்த சிறுமி அவ்வப்போது வந்து காதில் முணுமுணுப்பாள்: "தாத்தா... எனக்கு இலஞ்சிப் பூ கொண்டுவந்து தரும்படி வேலுகிட்ட சொல்றீங்களா?'
"எவ்வளவு சிறிதான தேவையை நிறைவேற்றிக் கொடுத்தாலும், அவளுடைய முகம் ஒரு தாமரை மலரைப்போல மலரும். இனிமேல் அந்த முகத்தைப் பார்ப்போமா?' அவர் தனக்குள் கேட்டுக்கொண்டார்.
ராஜுவும் சுரேஷும் புத்திசாலிகள். இருவரும் அப்பாவைப்போலவேதான்... அப்பாவுக்குத் தன்னுடைய சாயல் இருக்கிறதென்பதை நினைத்துப் பார்த்தார். அவனுடைய தாய் எப்போதும் கூறுவாள்:
"அப்பு... தன் அப்பாவோட அச்சு அசல்...
அந்த முன்கோபம் மட்டும் இல்லாமலிருந்தா போதும்.'
அதைக் கூறிவிட்டு, ஒரு சாய்வான பார்வையைப் பார்ப்பாள் அம்மு. அவருக்கு கோபம் வரவில்லை என்பதைப் பார்த்தால், அவள் குலுங்கிக் குலுங்கி சிரிப்பாள்.
அதை நினைத்தபோது, உள்ளே பார்த்து உரத்த குரலில் கூறத்தோன்றியது: "இதோ... அப்பு வந்திருக்கான். பிள்ளைங்களும் இருக்காங்க.'
ஆனால், கூறவில்லை.
அப்பு வந்ததற்கு மறுநாள் பெண் பிள்ளைகளும் கணவர்களும் வந்துசேர்ந்தார்கள். பாலாவின் கணவன் மேலும் சற்று தடித்து, சதைப்பிடிப்புடன் இருந்தான். அதைப்பற்றி பாலா கூறினாள்: "ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினீயருங்க அஞ்சு வருடங்களுக்கான சேவையை முழுமை செய்தா ஒரு உப்புமூட்டை அளவுக்காவது தடிமனா இருக்கணும்ங்கறதுதானே சட்டம்...
அப்பா?'
அவள் கண்களைச் சுருங்கி சிரித்துவிட்டு, வேலுவிடம் கூறினாள்: "வேலு... ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினீயராகறதுக்கு தாமதமாகியிருக்கு. புரியுதா?' பாலாவின் பரிகாச ரசனைக்கு எந்தவொரு குறைவும் உண்டாகவில்லை.
அவளுடைய கணவனும் மோசமல்ல...: "எஞ்ஜினீயர்களோட மனைவிங்க... பிம்பத்தை நக்கற பூனைகளைப்போல மெலிஞ்சிருக்கணும்னு இருக்கு.'
இந்த அளவுக்கு ரசிப்புத் தன்மை கொண்ட இளைஞனை பாலாவுக்கு கிடைக்கச் செய்வதற்கு எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம் என்பதையும் அப்போது நினைத்துப் பார்த்தார். வனஜாவின் திருமணம்தான் முதலில் நடந்தது. அக்கா இருக்கும்போது, தங்கையின் திருமணத்தை நடத்தவேண்டிய நிலை வந்ததற்காக பெரிய அளவில் மன வேதனைப்பட்டார். ஆனால், தீவிரமான முயற்சியாலும் கடவுளின் அருளாலும் மூன்று மாதங்களுக்குள் இந்த இளைஞனைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதுவும் வரதட்சணையோ, பெரிய அளவில் செலவுகளோ இல்லாமலேயே...
பாலா, வனஜா ஆகியோரின் கணவர்களை மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. ஒருவனுக்கு ஒரு குணம் இருந்தால், இன்னொருவனுக்கு வேறு குணம்... வனஜாவின் கணவன் மிகவும் அரிதாகவே பேசுவான். அதைப்பற்றி வனஜா கூறுவாள். "இந்த வார வார்த்தைக்கான அளவு தீர்ந்துவிட்டது' என்று, எனினும், சந்தோஷ் இப்போது குணத்தை நன்றாக ஆக்கிக்கொண்டிருக்கிறான். இடைவெளி விடாமல் கேள்விகள்தான்... : "ஓணக்கிளியோட வால்மேல எதுக்கு மஞ்சள் நிறம் இருக்கு? நெல்லுக்குப் பூ இருக்குதா? அம்பலச்சிறையில இருக்கற முதலை எங்கிருந்து வந்தது?'
அந்த கேள்விகளும் பதில்களும் முடிந்துவிட்டன. படிகளில் ஏறியபோது, அவர் நினைத்தார்: "திருவிழா முடிவடைந்த கோவில் பகுதிபோல ஆகிவிட்டது வீடு... ஓணமும் முடிந்துவிட்டது.'
அப்போது கீழேயிருந்து வேலு உரத்த குரலிலில் அழைத்துக் கேட்பது காதில் விழுந்தது:
""காபி வேணுமா?.''
""கொண்டு வா.. குடிக்கிறேன''.
படிகளில் ஏறியபோது, காலடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஒவ்வொரு காலடி வைத்தலும், சத்தத்தின் ஒரு உருண்டையை காற்றில் எறிவதைப்போல தோன்றியது.
மேல்மாடியில் பறந்து விளையாடக்கூடிய வவ்வால், காலடி ஓசையைக் கேட்டதும் சாளரத்தின் வழியாக வெளியே சென்றது. கையிலிருந்த ஸாக்ஸையும் ரப்பர் துண்டையும் மேஜையின்மீது வைத்துவிட்டு, திறந்து கிடக்கும் சாளரத்திற்கு அருகில் சென்று நின்றார். நிலத்தின் எல்லையிலிருந்த இலஞ்சிப் பலாவின் நெற்றியில் மலர்ந்த பூவைப்போல சூரியன் காணப்பட்டது. நினைக்காமல் கூறிவிட்டார்:
"மறைகிறது...'
கூறிமுடிந்தபோது, என்ன காரணத்தாலோ கூறியிருக்க வேண்டியதில்லையென்று தோன்றியது.
சில நாட்களுக்குமுன்பு இந்த நிலமெங்கும் பூக்கள் காணப்பட்டன. மூக்குத்தியும், தும்பையும், அலரியும், செம்பருத்தியும்... அனைத்தும் பறிக்கப்பட்டும் உதிர்ந்தும் போயின. காம்புகள் மட்டும் எஞ்சிநிற்கின்றன. நிலமும் தன்னைப் போலவே இருக்கிறது.
""காபி...''
""அங்க வச்சிட்டுப் போ.''
வேலுவின் காலடிச் சத்தம் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தது. அந்த சத்தம் விலகி மறைந்துபோனது.
கடந்துசென்ற நாட்கள் மீண்டும் எழுந்து... எழுந்து வருகின்றன. பிள்ளைகளின் மனங்களிலும் சந்தோஷம் முற்றி மலர்ந்து நின்றது. தந்தையின் மனதிற்குள்ளும் அப்படித்தான் இருக்குமென்று அவர்கள் நினைத் திருப்பார்கள்.
அப்புவுடன் சேர்ந்து போகவேண்டுமென்றுதான் முதலிலில் ஆசைப் பட்டார். அப்புவிடம் கூறினார்.
"தனியா இருந்து வெறுப்பாகிப் போச்சு...'
"என்ன செய்றது அப்பா? என்னால இங்க இருக்கமுடியுமா?'
"இல்ல... நான் உன்னோட வந்தா...?'
அப்பு எதுவும் கூறவில்லை. மனைவிதான் பதில் கூறினாள்:
"நீங்க இதைவிட அதிக கவலைப்படுவீங்க. ஒரு ஃப்ளாட்ல ஒடுங்கிப்போய் நாங்க வாழ்ந்துகிட்டிருக்கோம். மொத்தத்தில இருக்கிறதே ஒரு படுக்கையறைதான். ஒரு வரவேற்பறையும் இருக்கு. உங்களுக்கு மூச்சே விடமுடியாமப் போகும். வீட்ல யாருமே இருக்கமாட்டோம். நாங்க காலையில போனா, திரும்பி வர்றது ராத்திரியிலதான். குழந்தைங்க கான்வென்ட்ல...!'
அப்பு மிகவும் அமைதியாக நின்றுகொண்டி ருந்தான். அவனுடைய கஷ்டத்தைப் பார்த்து கவலை உண்டாக, "நான் வெறுமனே கேட்டேன். அவ்வளவுதான்...' என்றார்.
வனஜாவுக்கும் பிரச்சினை இருந்தது. அவளுடைய கணவனுக்கும் விரைவிலேயே ரூர்க்கலாவிலிலிருந்து மாறுதல் உண்டாக வாய்ப்பிருக்கிறது. இனி எங்கு என்பதே தெரியவில்லை.
"அப்பா, உங்களை அழைச்சிட்டுப்போனா நீங்களும் நாங்களும் கவலைக்குள்ளாவோம். இன்னும் சொல்லப்போனா... அப்பா... நீங்க இங்க இருந்தாதான். சந்தோஷம் கிடைக்கும்!' வனஜா இறுதியாகக் கூறினாள்.
அவளைப் பெற்றெடுப்பதற்கு எவ்வளவோ காலம் முன்பே, தந்தையின் ஒவ்வொரு ஊராகச் சென்று பணிசெய்யும் செயல் ஆரம்பமாகிவிட்டதென்ற விஷயம் அவளுக்கு ஞாபகத்தில் இல்லாமல் போய்விட்டது. பிள்ளைகள் யாரையும் பெற்றெடுத்தது வீட்டில் வைத்தல்ல. பணிசெய்யும் இடங்களில்தான்...
அதைக்கூறிப் பயனில்லை. இன்றைய வாழ்க்கை நேற்று இருந்ததைப் போன்றதல்ல.
ஸ்ரீதரனிடம் கேட்கவே முடியவில்லை. அவன் பல இடங்களுக்கும் இடைவெளியின்றிப் போய்க்கொண்டிருந்தான். இல்லையென்றாலும்...
அவனுடன் சென்று பிரயோஜனமில்லை. மாதத்தில் இருபத்தைந்து நாட்களும் ஊர்ஊராகச் சுற்றிக்கொண்டிருப்பான். குடும்பத்துடன் செல்லும்போது ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு அவன் மறக்கவில்லை. "அப்பா... என்ன தேவைப்பட்டாலும் எழுதியனுப்ப தயங்க வேணாம்.'
தந்தைக்கு வேண்டியது கொஞ்சம் வாழ்க்கை... அதை பெங்களூர் கடைவீதியில் வாங்கமுடியுமா என்று கேட்கவேண்டும்போல தோன்றியது. ஆனால், இவ்வாறு கூறினார்:
"சொல்றேன்.'
தங்களுடைய பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் அழைத்துச்சென்று தங்கவைத்து, தந்தையை சிரமப்படுத்த வேண்டாமென்று எல்லா பிள்ளைகளும் நினைக்கிறார்கள். நல்ல நினைப்பு!
தன்னுடைய பணி வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் அப்போது நினைத்துப் பார்த்தார். அன்று நிலைமை நேரெதிராக இருந்தது. எப்போதும் வயதான தந்தையும் தாயும் கூடவே இருந்தார்கள். மெதுவாக... மெதுவாக நடந்துகொண்டும் பாசத்துடன் பேசிக்கொண்டும் இருந்த அவர்கள் குடும்பத்தின் சூழலுக்கு எப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை அளித்தார்கள்! நெற்றி நிறைய சந்தனத்தைப் பூசினால் கிடைக்கக்கூடிய சுகம்!
சந்தனத்தின் வாசனையல்ல... புல் தைலத்தின் வாசனைதான் இன்று ஆட்களுக்கு விருப்பமான வாசனை. தந்தையிடம் ஆலோசிக்காமல் எந்தவொரு குடும்பத்தின் காரியத்தையும் நடத்தியதில்லை. சிந்திக்காமல் செய்யும் செயல்களிலிருந்து அவர் தன்னைத் தடுத்தார். தேவைப்படுமிடத்தில் முன்னோக்கிச் செல்வது எப்படி என்பதைப் பற்றி அறிவுரைகள் கூறவும் செய்தார்.
ஆனால், இன்று அப்படிப்பட்ட அறிவுரைகளுக்கு சாத்தியம் இருக்கிறதா? தேவை இருக்கிறதா?
நான்கு நாட்களுக்கு முன்பு வனஜாவின் கணவனும் ஸ்ரீதரனும் சேர்ந்து வாசலிலில் அமர்ந்து பேசியது ஞாபகத்தில் வந்தது. என்னவென்று விசாரித்ததற்கு, "ஒரு நிறுவனத்தோட பங்குகளை வாங்கறதைப் பத்தி ஆலோசித்தோம்' என்று கூறிவிட்டு, அவர்கள் ஒவ்வொரு வழிக்கும் சென்றுவிட்டார்கள். அவர்கள் செய்தது சரிதான். பங்குச் சந்தையைப் பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் அவருக்கு என்ன தெரியும்?
எனினும், அவர்கள் கடந்துசென்றபோது, தனிமையாக்கப்பட்டதைப்போல தோன்றியது. சுற்றிலும் வெறுமை... அப்போது வீட்டிற்குள்ளே பார்த்து அழைக்க வேண்டுபோல இருந்தது:
"அம்மு... நீ அங்க இல்லியா?'
அந்த அழைப்பு விழுங்கப்பட்டுவிட்டது.
தாழ்ந்து... தாழ்ந்து செல்லும் சூரியனைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தபோது, இளம்வயது காலத்தில் பார்த்த "களி' அரங்குகள் ஞாபகத்தில் வந்தன. களி சிறப்பாக ஆடிமுடிக்கப்பட்டபிறகு, ஒப்பனையறைக்குச் செல்லும் பெரிய வேடம்...
இனி கிரீடம் அவிழ்த்து வைக்கப்படும்... எல்லா வண்ணங்களும் அழியும்... எல்லா அசைவுகளும் நின்றுவிடும்... ஒரு பெரிய கதாபாத்திரம் விலகியும் கலங்கியும் போகிறது. தூக்கம் நிறைந்திருக்கும் கண்களின் இமைகளில் மை மட்டும் எஞ்சியிருக்கும்.
அரங்கிற்குள் உரத்து ஒலித்துக்கொண்டிருக்கும் தாளமேளங்களைக் கேட்டவாறு படுத்திருக்கவேண்டும்.
பிறகு... உறக்கம்!
"எனக்கு தூங்கறதுக்கான நேரம் வந்திருச்சா?'
சற்று உரத்த குரலிலேயே கேட்டார். பதில் வரவில்லை.
விடைபெறுவதற்காக நின்றுகொண்டிருக்கும் வெளிச்சம்... மரங்களில் வந்து தொங்கிக்கொண்டி ருக்கும் வவ்வால்கள்... வெறுமையாகக் காட்சி யளிக்கும் நிலங்களில் கனவில் என்பதைப்போல மெதுவாக... மெதுவாக நடந்துகொண்டிருக்கும் நான்கு கால் உயிரினங்கள். எதற்காகவோ அழுதவாறு, தாயைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் குழந்தை... ஒவ்வொன்றும் முன்னால் வருகிறது.
மறைந்து போகிறது.
சாளரத்திற்கருகிலிருந்து திரும்பியபோது, மேஜையின்மீதிருந்த காபியைப் பார்த்தார்: "ஓ... இதைக் குடிக்க மறந்துட்டேன்!'
எடுத்து உதட்டுடன் சேர்த்துவைத்தார். அடடா! குளிர்ந்து போய்விட்டது!
கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சிறிது நேரம் நின்று சிந்தனையில் மூழ்கினார். வெறுமையை நோக்கி நீண்டு... நீண்டு செல்லும் சிந்தனைகள்...
இறுதியில் படுக்கையறையின் வாசலுக்கு அருகில் சென்று கூறினார்:
"அம்மு... எனக்கு குளிக்கறதுக்கான நேரம் வந்திடுச்சு!'
கொடியிலிருந்து மேற்துண்டினை எடுத்துத் தோளில் இட்டவாறு, கீழ்நோக்கி இறங்கினார். வாசலுக்குச் சென்றபோது, வேலு கேட்பது காதில் விழுந்தது.
""எங்க?''
""குளத்துக்கு...''
""குளியலறையில குளிக்கலையா?''
""இல்ல...''
""நானும் வரணுமா?''
""வேணாம்.''
குளத்தின் படிகளில் இறங்கியபோது, எதையும் நினைக்கவில்லை. சிந்தனைகள் அனைத்தும் கற்களைப்போல ஆகிவிட்டன என்று தோன்றியது. நல்லது... ஊன்றுகோலையும் கண்ணாடியையும் படியில் வைத்துவிட்டு, இறுதிப்படியில் அமர்ந்தார். நீரில் மூழ்க ஆரம்பித்திருந்த படியிலிலிருந்து ஒரு கல்லை மெதுவாக எடுத்து, மேற்துண்டின் ஒரு நுனியில் கட்டினார். இன்னொரு நுனிப்பகுதியை தன் கழுத்திலும்...
நீருக்குள் இறங்கிச் செல்லும்போதுகூட, கல்லின் கனம் தோன்றவில்லை. இளம்வயது காலத்தில் கற்ற ஆர்க்கிமிடிக்ஸின் தத்துவத்தை அவர் முணுமுணுத்தார்: "ஒரு பொருள் ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும்போது, வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்கு நிகரான எடை அந்த பொருளுக்கு இழக்கப்பட்டு விட்டதைப்போல தோன்றும்.' இழக்கப்பட்டு... இழக்கப்பட்டு...
கையைப் பிடித்து யார் இழுப்பது? அம்முவா?
அம்மு...! அம்மு...!
=
______________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். மூன்றும் மாறுபட்ட கதைக் கருக்களையும், வேறுபட்ட களங்களையும் கொண்டவை.
"ஓணம் முடிந்தது' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்ற பிரபல மலையாள எழுத்தாளரான உறூப் என்ற பி.ஸி. குட்டிகிருஷ்ணன். தன் பிள்ளைகளின் குடும்பத்தைப் புகைவண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, வீட்டிற்குக் கவலையுடன் திரும்பிவரும் ஒரு வயதான மனிதரின் கதை. அம்மு என்ற தன்னருமை மனைவியை இழந்துவிட்டு, தனிமையில் கவலைகளுடன் வாழும் அந்த மனிதரைப் பார்த்து நிச்சயம் நம் கண்களில் கண்ணீர் அரும்பும். இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய எத்தனை மனிதர்களை நம் வாழ்க்கைப் பாதையில் தினமும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். கதையின் இறுதிப்பகுதி அதிர்ச்சி தரக்கூடியது. இந்த கதை என்றும் நம் மனங்களில் வாழும். எழுதிய உறூப் நிரந்தரமாக வாழ்வார்.
"மீண்டுமொரு முறை' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளரான டி. பத்மநாபன். சாலையில் மரச்சீனிக்கிழங்கு விற்பனை செய்யும் வயதான மனிதரிடம் பத்து ரூபாய்க்கு ஆறு கிலோ மரச்சீனியை வாங்கிக்கொண்டு, நடந்தே வீட்டிற்கு வரும் ஒரு மனிதனின் கதை. டி. பத்மநாபனின் வாழ்க்கையில் உண்மையிலேயே நடைபெற்ற ஒரு சம்பவமாக இது இருந்திருக்கவேண்டும். அதனால்தான் இந்த அளவிற்கு அது உயிரோட்டத்துடன் இருக்கிறது. கதையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது அளவற்ற மரியாதையும், மதிப்பும் பத்மநாபனின்மீது நமக்கு இயல்பாகவே உண்டாகும்.
"சார்லி துரை' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நவீன மலையாள இலக்கியத்தின் நட்சத்திரமான எம். முகுந்தன். என்றோ மண்ணிலிருந்து மறைந்துவிட்ட சார்லி என்ற மனிதரை மனதில் நினைத்துப் பார்க்கும் கதை. குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத்தந்த, அவர்களுக்கு பறவைகளையும் செடிகளையும் மரங்களையும் பிராணி களையும் பற்றி கற்றுத் தந்த சார்லி துரை என்ற அந்த உன்னத உள்ளம் படைத்த மனிதரை எம். முகுந்தனால் எப்படி மறக்கமுடியாதோ... அப்படியே நம்மாலும் மறக்கமுடியாது.
நான் மொழிபெயர்த்திருக்கும் இந்த மூன்று கதைகளும் இவற்றை வாசிக்கும் உங்களுக்கு மாறுபட்ட அனுபவங்களை நிச்சயம் தரும்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி!
அன்புடன்,
சுரா