மனித நாகரிகமும் பண்பாடும் ஆற்றங்கரைகளில் தோன்றி வளர்ந்தன என வரலாறுகள் கூறுகின்றன. ஆதிமனிதன் முதலிலில் உணவைத்தேடி ஓரிடம் விட்டு ஓரிடம் நகரத் தொடங்கினான். அச்செயல் தனக்கான உணவைத் தேடல், பிறகு தன் குழுவுக்கான உணவைத் தேடல் என விரிவடைந்தது. இவ்வுணவை நடந்தே சென்று தன் தலையிலும் இடுப்பிலும் சுமந்துவந்தான். பிறகு அருகில் தனது கட்டுப்பாட்டிலிருந்த விலங்குகளைப் போக்குவரத்திற்காகவும், வாணிபத்திற்காகவும் பயன்படுத்தினான்.
நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் உணவுத்தேடலுடன் தன் அறிவால், புதிய தேடலால் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தான். அதன்பின் அதன் பயன்பாட்டையும் கண்டெடுத்தான் பிறகு இடம் விட்டு இடம் நகர்ந்தும், அதன் தொடர்ச்சியாக கடலிலில் பயணித்தும் தன் தேவையை நிவர்த்தி செய்து கொண்டான். பிறகு ஒவ்வொரு துறையிலும் ஆளுமையை ஆழப்பதிக்கத் தொடங்கினான்.
இடம்விட்டு இடம் நகரத் தொடங்கியவன் ஊரையும், உறவையும் கண்டான். அன்பினால் மனிதனை வென்றான். விலங்கினங்களை வென்றான். தனது உற்பத்தியை மற்றொரு இடத்திற்கு நகர்த்தினான்.
நகர்ந்துசென்ற இடத்திலிலிருந்து தனக்கான பொருள்களைத் தன் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்தான். ஓரிடம் விட்டு ஓரிடம் நகர்ந்து செல்வதற்கும், வாணிபத்திற்கும் ஆதியில் அவன் பயன்படுத்திய ஊர்திகள் சுற்றுச்சூழலோடு ஒத்திசைந்து இருந்தன. தனக்கும் தான் சார்ந்த இயற்கைச் சூழலுக்கும் எந்தவித இடையூறுமின்றி மிக நுட்பமான தன்மையுடையதாய் அது விளங்கியது.
அந்த ஊர்திகளால் இரைச்சல் இல்லை, கரியமில வாய்வு இல்லை, மனிதன் சுவாசத்திற்கு எவ்வித சிக்கலுமில்லை. அவன் கட்டமைப்பு அவனுக்கு மட்டுமல்ல அவன் எதிரிக்கும் நன்மை பயத்தது. இன்று வளர்ச்சி என்று சொல்லிலி இயற்கையை சிதைத்து வருகின்றோம். இதனால் அண்டப்பெருவளி தூய்மையற்றதாய் மாறிவருகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழ்க்குடி மக்கள் தரைவழிப் பயன்பாட்டிற்கு ஊர்தியையும், கடல் வழிப் பயன்பாட்டிற்கு கலனையும் பன்படுத்திய விதம் மிகச்சிறப்புடையது.
போக்குவரத்துப் பயன்பாட்டில் குதிரைமிக விரைவான போக்குவரத்து ஊர்திகள் இன்று உள்ளது போல் அன்று இல்லை. குதிரை, அத்திரி, எருது, கழுதை, போன்றவை தரைவழி போக்குவரத்திற்கும் தரைவழி வாணிபத்திற்கும் பயன்பட்டன.
பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. குதிரைகள் சிந்து, பாரசீகம், அரபியா போன்ற நாடுகளிலிலிருந்து கலன்கள் மூலம் இங்கு கொண்டுவரப்பட்டன. குதிரை போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டதுடன், போக்குவரத்திற்கு குதிரைகளையும் குதிரைவண்டிகளையும் அரசர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தினர்.
குதிரை வண்டிகள் தேர் என்று அழைக்கப்பட்டன. சங்க நூல்களில் குதிரைபூட்டிய தேர்கள் குறித்த பதிவுகள் நிரம்பிக் காணப்படுகின்றன. அதில், வீங்கு சுவல் மொசியத் தாங்குநுகம் தழீஇ,
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடை வலவன் ஏவலின், இகுதுறைப்
புனல் பாய்ந் தன்ன வாய்மான் திண்தேர்
(அகம் 400-11-14)
பல வடங்கள் ஒலிலிக்கும்படி நுகத்தடியில் பூட்டி பாகன் செலுத்த, குதிரைகள் அம்புபோன்று பாய்ந்து தாவிச்சென்றன என்ற பதிவு குதிரைப் பயன்பாட்டை உணர்த்துவதுடன் அது விரைந்துசெல்லும் தன்மையது என்பதை வெளிப்படுத்துகிறது.
வண்பரி நெடுந்தேர் பூண்க’ (புறம் 146-11)
என்ற அடிகள், தேரை நின் குதிரைகள் பூண்க என்று விளிப்பதன் மூலம் குதிரைகள் தேரை இழுக்கப் பயன்பட்டதையும், அத்தேரில் அரசர்கள் ஊர்ந்து சென்றதையும் விளக்குகின்றது.
நூல்நெறி நுணங்கிய கால்நவில் புரவி (அகம் 314-8)
புரவி நூல் கூறும் இலக்கண முறைப்படி நுட்பமாக அமைந்து காற்றெனக் கடுகிச் செல்லும் குதிரை என்று வரும் இத்தொடர்கள், மிக வேகமாகச் செல்லும் குதிரைகள் பற்றி குறிப்பிடுகின்றது. போக்குவரத்திற்கு இத்தகு குதிரைகளையே அன்று பயன்படுத்தினர்.
இத்தகு குதிரை வண்டிகள் (தேர்கள்) வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை. போக்கு வரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
அத்திரி
கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர். இவை வெளிநாடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட்டன. அன்று சமூகத்தில் செல்வ நம்பிகளாக இருந்தவர்கள் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினர். அத்திரிக்கு இராச ஊர்தி என்று பெயர் வழங்கப்பட்டது.
கடற்கழி வழியாக அத்திரி ஊர்ந்து வரும் வழக்கம் இருந்தது என்ற செய்தியை,
கழிச்சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பிலும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே
(நற்றிணை 278-7-9)
என்கிறது. இப்பாடல் உணர்த்தும் பொருள் என்னவெனில் தலைவன் கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரிலே ஏறி வந்தான். அத்தேரின் சக்கரங்களின் கடற்கரையில் உள்ள சேறுபட்டது. தேரை இழுக்கும் கோவேறு கழுதைகளின் குளம்புகளில் சிவந்த இறாமீன்கள் சிக்கி அழிந்தன என்று பொருள் உணர்த்துகிறது. இப்பாடல் வழி கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரில் பயணிக்கும் வழக்கம் இருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.
பாண்டிய நாட்டில் உள்ள கொற்கை கடலுக்கு அருகில் உள்ள பரதவர் குடியிருப்புக்கு ஒருவன் அத்திரி ஊர்ந்து சென்றதை
கொடுநுக நுழைந்த கணைக்கால் அத்திரி
வழமணி நெடுந்தேர் பூண (அகம் 350-6-7)
என்ற அகப்பாடல் வழி அறியமுடிகின்றது.
மதுரையம்பதியில் வைகையாற்றில் நடந்த நீராட்டு விழாவிற்கு சிலர் அத்திரி ஊர்ந்து வந்தார்கள் என்பதை பரிபாடலிலின் வழி அறிய முடிகின்றது.
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய்மாச்
சகடமும், தண்டு ஆர; சிவிகையும் பண்ணி
வகைவகை ஊழ் ஊழ் கதழ்வு மூழ்ந்து (பரி 10-16-17)
அத்திரி, காளைப்பூட்டி வண்டி, அழகிய பல்லக்கு என இவற்றையெல்லாம் அழகுபடுத்தி, கூடிநின்று அவரவருக்கு உரியவற்றின் மேல் ஏறினர் என்கிறது இவ்வடிகள். இதன்மூலம் போக்குவரத்திற்கு அத்திரியுடன் காளைபூட்டிய வண்டியும் அழகிய பல்லக்கும் பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகின்றது. சிலம்பில் கடலாடு காதையில் கோவலன் கடலாடுதற்கு கடற்கரைக்குச் சென்ற போது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான்.
வான வண்கையன் அத்திரி ஏற (சில: கடலாடுகாதை 119)
கடலாடுதற்காக வானமழை போன்று வழங்கி மகிழும் கோவலன் அத்திரி ஊர்ந்து சென்றான் என்று கூறுகின்றது.
அரும்பத உரையாசிரியர்அத்திரிக்கு இராசவாகனமாகிய அத்திரி என்று உரை வகுத்துள்ளார். அடியார்க்கு நல்லாரோ அத்திரி, கோவேறு கழுதை. அது குதிரையில் ஒரு சாதி என்று குறிப்பிடுகின்றார்.
ஆதித்தமிழர்கள் போக்குவரத்திற்கு குதிரை யையும், காளை பூட்டிய வண்டியையும்,அத்திரிகளையும் பல்லக்கையும் பயன்படுத்தி உள்ளனர்.
வாணிபப் பயன்பாட்டில் ஊர்திகள்
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான பொருள்கள் உற்பத்தியானதால் அவற்றை ஓரிடம் விட்டு ஓரிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளையும், கழுதைகளையும் பயன்படுத்தினர்.
தமிழகத்தில் நான்கு வகையான நிலங்களிலும் மிக சிறந்த பொருட்கள் உற்பத்தியாயின. கடல் தரும் வளமும் கணக்கற்றதாய் இருந்தது. தமிழனின் வேளாண் பொருளாதாரமும், கடல் பொருளாதாரமும் வானளாவிய உற்பத்தியின் வளமையாகத் திகழ்ந்தன. இதனால் தான் வாழும் இடத்தில் உற்பத்தியான பொருளைக் கொடுத்தும் கிடைக்காததைப் பெற்றும் நிலத்திலும் கடலிலிலும் தன் ஆளுமையை செலுத்தினர். இதற்கு அவன் பயன்பாட்டில் இன்று உள்ளதுபோல் உந்துவண்டிகளோ, இரயில் வண்டிகளோ, வான ஊர்திகளோ இல்லை.
தரை வழி வணிகத்திற்கு எருது, கழுதை போன்றவைகளும் கடலில் கலன் பயன்பாடும் வணிகத்திற்கான பயன்பாடாக இருந்தது.
எருது பூட்டிய வண்டி
எருது பூட்டிய வண்டி, ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாண்டுவண்டி என்று அழைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு மட்டுமின்றி வாணிபத்துக்கும் பயன்பட்டது.
உப்பு வணிகம் செய்பவர்கள் மாட்டு வண்டிகளில் நெல்லைக் கொண்டுவந்து கொடுத்து உப்பை மாற்றிக் கொண்டனர். வணிகர்களில் உப்பு வணிகர்கள் தன் மனைவி மக்களோடு வந்து நெல்லைக் கொடுத்து, உப்பை வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு ஊர் ஊராக வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றனர்.
தந்நாடு விளைந்த பெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி v அவன்; உறை முனிந்த ஒக்கலோரு புலம்பெயர்ந்து
உமணர் போகலும்: ( நற்றிணை 183- 1-5)
இப்பாடல் வழி உப்பு வணிகத்திற்கு வண்டியைப் பயன்படுத்திய உமணர்களைக் காணமுடிகின்றது. உமணர் வண்டிகளை ஓட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாகச் சென்றுள்ளனர்.
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேண்புலம் படரும்
ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்
கணநிரை வாழ்க்கை (அகம் 390-1-4)
உப்பு வணிகர்கள் பெரும்பாலும் எருது பூட்டிய வண்டியைப் பயன்படுத்தினர். இன்று காட்சிப் பொருளாகக்கூட காணக்கிடைக்காத எருது பூட்டிய வண்டியின் பயன்பாடு சிறந்தே இருந்துள்ளது. எருது பூட்டிய வண்டி, பண்டமாற்று வணிகத்தில் சமீபகாலம் வரை இருந்தது. உலகமயமாதல், தாராளமயமாதல் கொள்கையால் இவை மறைந்துவிட்டன என்பதே மெய்மை.
கழுதை
வணிகப் பெருமக்கள் ஊர் ஊராக வணிகப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு கழுதைகளைப் பயன்படுத்தினர். பாறைகள் மற்றும் குன்றுகள் உள்ள ஊர்களுக்கு கழுதையின் முதுகின் மேல் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கூட்டமாகச் சென்றனர். வணிகர்கள் கூட்டமாகச் செல்வதற்கு வணிகச் சாத்து என்று பெயர். வழிப்பறிக் கொள்ளையர்கள் இவ்வீரர்களை கொலை செய்து பொருள்களைக் கொள்ளை அடிப்பதும் உண்டு. அப்பொழுது வில், வாள் ஏந்திய வீரர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
களர் பரந்த கல்னெடு மருங்கின்
விளரூன் தின்ற வீங்கு சிலை மறவர்
மைபடு திண்டோள் மலிர ஆட்டிப்
பொறை மலிலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் அமழும் ஞாட்டு (அகம் 89-9-14)
மிளகு மூட்டைகள் பலாப்பழம் அளவுடையதாய் கட்டப்பட்டு, அம்மூட்டைகளைக் கழுதைகளின் முதுகின்மேல் ஏற்றிக் கொண்டு வாணிகச் சாத்துகள் தங்களுடைய வில் வீரர்களோடு சென்றனர். இதனை பெரும்பாணாற்றுப்படை,
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் புணர்ப் பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டியளவு (பெரும்பாணாற்றுப்படை 73-82)
என்ற அடிகள் வணிகச் சாத்துக்கள்; வாணிபத்திற்காக கழுதையைப் பயன்படுத்தியதை உணர்த்துகின்றன.
கடற்கரையில் ஒருபுறம் விளைந்த உப்பை, மறுபுறம் உள்ள ஊர்களுக்கு கழுதைகள் மேல் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
அணங்குடை முந்நீர் பரந்த செருவின்
உணங்குதிறம் பெயர்ந்த ரெவண் கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப்
படையமைத் தெழுந்த பெருஞ்செய்யாடவர்
நிரைபரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம் புதைத்த கற்பிறழ் இயவு
(அகம் -2017-1-6)
பல்வேறு நிலைகளில் தரைவணிகம் சிறப்பாக நடைபெற கழுதை பயன்படுத்தப்பட்டதை இதன்வழி அறியமுடிகின்றது. பொதிசுமக்கும் கழுதை’ என்ற சொல் வடிவம் இதை உறுதி செய்கிறது.
கடல் வாணிபத்தில் கலன்
கடலில் கலன் செலுத்தி வாணிபம் செய்தனர். கடல் வணிகம் வளர்க்கப்பட்டது. மரக்கலனின் மூலம் உள்நாட்டு பொருள்களை ஏற்றிக்கொண்டு போய் வெளிநாடுகளில் விற்றனர். அந்நாடுகளிலிருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு இங்கு வந்தனர்.
இவர்கள் வாணிபம் செய்த நாடுகளாக இலக்கியங்களிலும் வரலாற்றிலும் சாவகம், காழகம், கடாரம் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் கிழக்கிந்தியத் தீவுகளான பர்மா, மலேசியா போன்ற நாடுகளுடனும் வாணிபத்தொடர்பு வைத்திருந்தனர். இவர்கள் கடல் கடந்து செல்கையில் மகளிரை உடன் அழைத்துச்செல்வதில்லை இதனைப் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம்,
முந்நீர் வழக்கம் மகடு உவோடு இல்லை தொல்
பொ.அ 37
என்று சுட்டுகிறது.
பாண்டிய நாட்டைச் சார்ந்த வணிகர்கள் சாவகத் தீவு சென்று வாணிபம் செய்துள்ளனர்.
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறத்தலின்
ஊனுயிர் மழந்தது உரவோய் என்றலும்
(மணிமேகலை பாத்திரமரபு கூறிய கதை 76-72)
தீவுக்குள் சென்று வாணிபம் செய்து திரும்பியதை இவ்வடிகள் விளக்குகின்றன.
கடுமையான காற்றினால் தாக்குதலுற்று திண்மையான கயிறுகளையும் பாய்மரத்தை ஒடித்து, நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லிலில் மோதி, நீர்ச்சுழியில் சிக்கிக் கொண்ட நாவாய் பற்றிய ஒரு பதிவு மதுரைக் காஞ்சியில் இடம்பெற்றுள்ளது.
அன்று வாணிபத்தில் கலன் பயன்பட்டது என்பதுடன் இயற்கையோடு போராடி வாணிபம் செய்து வாழ்ந்ததை இவ்வடிகள் உறுதிசெய்கின்றன.
பன்மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
விலங்குபிணி நோன்கயிறு அறீஇதைபுடையூக்
கூம்பு முதல் முருங்கா எற்றிச் சாய்ந்துடன்
கடுங்காற்று எடுப்பக் கல்பொருது இரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்
(மதுரைக்காஞ்சி-375-3)
கலன்கள்; துறைமுகத்தை அடைந்தபோது அதை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டழைத்தனர்.
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவெதிர் கொள்வார் போல் (பரிபாடல்-10-38-39)
என்று பரிபாடல் அடிகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
தமிழகத்தின் அழகிய நதியான காவிரியின் முகத்துவாரம் ஆழமாகவும் அகலமாகவும் பல கலன்கள்; தங்குவதற்கு ஏற்றதாகும் இருந்தது. வாணிபக் கலன்கள் பாய்களைச் சுருட்டாமலும், பாரத்தைக் கழிக்காமலும் நேரே ஆற்றினுள் புகுந்து துறைமுகத்தை அடைந்துள்ளது
கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந்த தோண்டாது
புகா அர்ப் புகுந்த பெருங்கலம், தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியுங்
கடற்பல தார்த்த நாடுகிழ வோயே (புறம் 30.11-15)
கலன் மிக நுட்பத்துடன் துறைமுகத்தை அடைந்த தன்மையை அவதானிக்க முடிகின்றது. கடியலூர் உருத்திரங்கண்ணார் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருள்களை பட்டியல் இடுவதைக் காணின் கலன் மூலம் கடல் வணிகப் பயன்பாடு எப்படி இருந்தது என்பதை அறியமுடியும்.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரம்அகிலும்
தெறிகடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெறிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தில மறுகு
பட்டினப்பாலை 185-193)
குதிரைகள் பாரசீகம், சிந்து தேசம் முதலிலிய நாடுகளிலிலிருந்து கொண்டு வரப்பட்டன.
சிறந்த மிளகு சேர நாட்டு மலைச்சரிவுகளில் தான் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக ஜாவா, சுமத்ரா தீவுகளில் கிடைத்தன. அம்மிளகு அவ்வளவு சிறப்புடையதன்று. சேர நாட்டு மிளகை பெரிய கலன்களில் யவனர்கள் வந்து வாங்கிப் போனதால் உள்நாட்டில் அது பற்றாக்குறை பொருளாக இருந்தது. ஆகவே காற்றின் உதவியால் கலத்தின் மூலம் ஜாவா, சுமித்ரா, தீவுகளில் இருந்து வந்த கறி (மிளகு) மூட்டைகளை சோழநாட்டு வணிகர்கள் உள்நாட்டில் கடல் வாணிபத்தின் மூலம் கொண்டுவந்து விற்றனர்.
வடமலை மணியும், பொன்னும் வடஇந்தியாவிலிலிருந்து கங்கையாற்றின் முகத்துவாரத்தில் நுழைந்து கிழக்கு கடற்கரைக்கு வந்தன. .மேற்குத் தொடர்ச்சி மலையில்; சந்தனம், அகிற்கட்டைகள் கிடைத்தன. இவை அல்லாமல் சாவக நாட்டிலிலிருந்தும் வாசனை பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
தெளிகடல் முத்து, குணக்கடல் துகிர் போன்ற பொருள்கள், வாரணாசி முதலான ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருள்கள், காவிரி பாயும் சோழ நாட்டுப் பொருள்கள், ஈழத்து பொருள்கள்; தமிழ்நாட்டில் கிடைத்தற்கு அருமையானவையும், விலையுயர்ந்தவையுமான ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள் எனக் காவிரி துறைமுகத்தில் குவிந்து கிடந்தன.
இவற்றையெல்லாம் காற்றின் திசையறிந்து கலன் செலுத்தும் வல்லமையால் பெற்றிருந்தனர்
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக (புறம் 66 -2)
என்ற அடிகள் இதனை உறுதிசெய்கின்றன.
தரைவழிப் பயன்பாட்டில் போக்குவரத்திற்காகவும், வாணிபத்திற்காகவும் முறையே குதிரை, அத்திரி, எருது, கழுதை போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.
கடலில் கலன் பயன்பாடு தமிழர்களின் ஆளுமையின் வெளிப்பாடாகவே இருந்துள்ளது. ஆதலால் உலகப் பொது வெளியில் தமிழனின் பொருளாதாரம் வல்லமை பெற்று விளங்கியது.
சோம்பி இருக்கவில்லை திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற நிலையில் அவர்களின் கடல் வழி பயன்பாடு இருந்ததை அவதானிக்க முடிகின்றது. இயற்கையை மிகப் பேரழகாய் கையாண்டுள்ளனர்.
தன்னைச் சுற்றி இருக்கும் எதையும் அவன் அழிக்க வில்லை. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தான். அவ்வளர்ச்சிக்காக அவன் பயன்படுத்திய உத்திகளும் மேன்மை யுடையதாகவே இருந்தன.