ஐந்து வருடங்கள் எங்களுடைய பூந்தோட்டம் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தது. சில பணியாளர்களை வரவழைத்து கோடரி, மண்வெட்டி ஆகிய கருவிகளுடன் நானும் அவர்களுடன் சேர்ந்து பூந்தோட்டத்தைச் சீர் செய்ய ஆரம்பித்தேன்.
காய்ந்த கிளைகளையும் களைகளையும் நாங்கள் வெட்டி நீக்கினோம்.
அதேபோல தேவையற்ற மரங்களையும் சிறிய செடிகளையும்...
பாப்லார்களும் (நெட்டிலிங்கம்) செரி மரங்களும் மற்றவற்றை விட வளர்ந்து அவற்றை சுவாசிக்க விடாமல் செய்துகொண்டிருந்தன.
வேர்களிலிருந்து வளரக்கூடியது பாப்லார். அதனால், அதை அவ்வளவு எளிதாக பிடுங்கி நீக்கிவிட முடியாது. முதலில் வேர்களை அறுத்து அகற்ற வேண்டும்.
குளத்திற்கப்பால் ஒரு பெரிய பாப்லார் மரம் நின்றுகொண்டிருந்தது.
இரண்டு மனிதர்கள் ஒன்றாக கைகளைச் சேர்த்து சுற்றிப்பிடிக்கக்கூடிய அளவிற்கு இருக்கும் பெரிய மரம்... அந்த பகுதி முழுவதும் வளர்ந்து பெரிதான பாப்லார் மரங்களைக்கொண்டு நிறைந்திருந்தன.
அவற்றை வெட்டி அகற்றும்படி நான் கட்டளையிட்டேன்.
அந்த இடத்தை மேலும் சற்று அழகாக இருக்கும் வண்ணம் செய்ய வேண்டுமென நான் நினைத்தேன்.
அனைத்திற்கும் மேலாக... பெரிய பாப்லார் மரத்திற்குக் கொஞ்சம் நிம்மதியை அளிக்கவேண்டுமென நான் விரும்பினேன்.
சிறிய மரங்களெல்லாம் வேர்களிலிருந்து முளைக்கின்றன என நான் கருதினேன். அதன் நீர் சக்தி முழுவதும் அவற்றிற்கு போய்ச் சேர்கின்றன எனவும்...
சிறிய பாப்லார் மரங்களை வெட்டி அகற்றியபோது, அடியிலிருந்த நீர் சக்தி நிறைந்த வேர்களையும் அவர்கள் அறுத்தார்கள். வெட்டப்பட்டு நீக்கிய சிறிய பாப்லாரை நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து பிடித்து இழுக்க முயற்சித்தும்... அது முடியவில்லை. முழு பலத்துடன் அது உறுதியாக அதே இடத்தில் நின்றிருந்தது. அதற்கு இறப்பதற்கு விருப்பமில்லை.
உயிரை அவை இந்த அளவிற்கு இறுகப் பிடித்து வைத்திருந்ததால், அவை வாழ வேண்டியவை என்று நான் நினைத்தேன்.
ஆனால், அவற்றை வெட்டி நீக்கவேண்டியது மிகவும் அவசியமாக இருந்தது. அதனால், நான் அதைச் செய்தேன். பின்னால்.. எதுவுமே செய்ய முடியாத நிலையில்...
அவற்றை வெட்டி அகற்றியிருக்க வேண்டியதில்லை என்று நான் நினைத்தேன்.
பழைய பாப்லாரிலிருந்து புதிய நாற்றுகள் மரத்தின் நீரைப் பருகி, வற்றச் செய்கின்றன என்று நான் கருதினேன். ஆனால், அது அப்படியல்ல என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். நான் அவற்றை வெட்டி நீக்கும் வேளையில் பழைய பாப்லார் மரமும் சேர்ந்து இறந்துகொண்டிருந்தது.
புதியதாக இலைகள் உண்டாகும் நேரத்தில் இரண்டு கிளைகளில் ஒன்று எதுவுமே இல்லாமலிருந்தது.
அந்த கோடை காலத்தில் பாப்லார் மரம் முற்றிலுமாக காய்ந்து போனது.
அந்த மரம் இறக்க ஆரம்பித்து சில நாட்கள் ஆகிவிட்டன. அந்த விஷயம் அந்த மரத்திற்குத் தெரிந்திருந்தது.
அதனால், தன் உயிரை புதிய நாற்றுகளுக்கு அளித்துவிட அது முயற்சித்தது.
அதனால்தான் அவை இவ்வளவு சீக்கிரமாக வளர்ந்தன. மரத்தின் இருத்தலை மேலும் சற்று சிரமமில்லாமல் ஆக்குவதற்கு நான் முயற்சித்தேன்.
ஆனால், நான் அதன் குழந்தைகள் அனைத்தையும் கொன்று தீர்த்துவிட்டேன்.
____________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 சிறந்த சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
"செல்லக் குழந்தையின் தேம்பல்கள்' என்ற கதையை எழுதியவர்... கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர்.
வெறிநாய் கடித்த ருக்கியா என்ற சிறுமியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
இது ஒரு உண்மைச் சம்பவம்.
எழுத்தாளருக்கு நன்கு தெரிந்த ஒரு சிறுமியின் வாழ்க்கையில் நடைபெற்ற பரிதாபத்திற்குரிய நிகழ்வை கதை வடிவத்தில் எழுதியிருக்கிறார்.
கதையில் வரும் சிறுமியின் நிலைக்காக நிச்சயம் நாம் கவலைப்படுவோம்.
"நினைவுகள்' என்ற கதையை எழுதியவர்...
மலையாள பெண் எழுத்தாளர்களின் அரசியும், தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான மாதவிக்குட்டி. அம்மிணி என்ற ஒரு அன்புத் தாயையும், அவளின் அருமை மகளான சீதாவையும் மையக் கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட கதை.
1953 ஆம் வருடத்தில் இந்த கதையை மாதவிக்குட்டி எழுதியிருக்கிறார்.
இந்த கதையின் மூலம் அன்னை- மகள் இருவரையுமே நம் உள்ளங்களில் வாழ வைத்திருக்கிறார் மாதவிக்குட்டி.
கதை எழுத அவர் கையாண்டிருக்கும் உத்தி... பாராட்டக்கூடியது!
"பழைய பாப்லார் மரம்' கதையை எழுதியவர்... உலக இலக்கிய மேதைகளில் ஒருவரான லியோ டால்ஸ்டாய்.
"நெட்டிலிங்கம்' என்று நாம் அழைக்கும் பாப்லார் மரத்தை வைத்து எழுதப்பட்ட கதை.
தன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை கதையாக டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார் என்பதே உண்மை.
ஒரு சிறிய கதையின் மூலம் எவ்வளவு பெரிய நீதியைக் கூறுகிறார் டால்ஸ்டாய்!
நான் மொழிபெயர்த்திருக்கும் இந்த 3 சிறுகதைகளும் உங்களுக்கு புதிய இலக்கிய அனுபவங்களை அளிக்கும் என்பது உறுதி.
'இனிய உதயம்' மூலம் என் மொழிபெயர்ப்பு படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதய நன்றி.
அன்புடன்,
சுரா