ரவு எட்டு மணிக்குத்தான் அவன் அலுவலகத் திலிருந்து வெளியேறினான். நடந்தபோது, அவனுக்கு தாங்கமுடியாத அளவுக்கு களைப்பு தோன்றியது. பேருந்து நிறுத்தத்திலிருந்த வரிசை, நடைபாதையில் நீண்டு... நீண்டு போய்க்கொண்டிருந்தது. அவன் வரிசையில் நின்றான். வசிக்கும் இடத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே செல்கிறது. முப்பத்து இரண்டாம் எண். அதிலோ ஏராளமான வியாபாரிகள்... ஏழரை மணிக்கு கடைகளை அடைத்துவிட்டு, கரோல் பாகிலிருந்தும் கனாட் ப்ளேஸிலிருந்தும் வருபவர்கள்...

பேருந்து நிறுத்தத்தின் ஆரவாரத்திற்கு மத்தியில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருப்பதற்கு அவனால் முடியவில்லை. தாங்கமுடியாத அளவுக்கு சோர்வு...

இது அசாதாரணமானது. எட்டு மணிவரை நிறுத்தாமல் பணி செய்ததால் இந்த களைப்பு உண்டாகியிருக்குமோ? ஆனால், எட்டு மணிவரை வேலை செல்வது அசாதாரண விஷயமில்லையே? நின்று நின்று கால்கள் வலித்தன. இறுதியில் அவன் வாடகைக் காரைப் பிடிக்கலாமென்ற தீர்மானத்திற்கு வந்தான். இருக்கட்டும்... அலுவலகத் திலிருந்து வசிக்கும் இடத்திற்கு ஒரு ரூபாய் எண்பது பைசா வரும். மேலதிகாரியின் வீட்டிலிருந்து என்றால் ஒரு ரூபாய் பத்து பைசா வரும். வாடகைக்கார்காரனுக்கு காசு கொடுத்து அவன் வெறுப்படைந்து போயிருந்தான்.

வாடகைக் கார்களின் நிறுத்தத்தில் எந்தவொரு ஆரவாரமும் இல்லை. இறந்துவிட்டதைப்போல சில வாடகைக் கார்கள் நின்றுகொண்டிருந்தன. அவன் ஒரு காரில் ஏறி அமர்ந்தான். கார் ஓட ஆரம்பித்தவுடன், மெல்லிய ஓசையுடன் காற்று உள்நோக்கிக் கடந்து வந்தது. அப்போது அவனுடைய கண்கள் சுருங்கின. தூக்கம் தலையை ஆக்கிரமித்துவிட்டிருந்தது. நேற்று வசிக்கும் இடத்தை அடைந்தபோது, தாமதமாக தூங்கக்கூடிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மல்லிக் கூட தூங்கியிருந்தார். நேற்று மேலதிகாரியின் வீட்டில் பணி... ஒரு சிறிய உடல்நலக்கேடு உண்டான காரணத்தால் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை. வாடகைக் காருக்கு காசு கொடுக்கக்கூடாது என்று மனதிற்குள் பிடிவாதம் உண்டானது. நடந்தான். அறையை அடைந்தபோது, நாணு சுவரில் சாய்ந்தவாறு தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.

Advertisment

இன்று நன்றாகத் தூங்கவேண்டும். சரீரத்தின் களைப்பு அப்போது மாறும்.

வாடகைக்கார்காரனுக்கு காசு கொடுத்தான். மீதி இருபது நயா பைசாவை அவன் தரவில்லை. அதற்கு பதிலாக ஒரு அசட்டு சிரிப்பைச் சிரித்தான். ""சில்லறை இல்லை...''

திருடர்கள்... அவனுடைய உள்ளாடையின் பையில் தொங்கிக்கொண்டிருப்பது சில்லறை இல்லாமல் வேறென்ன?

Advertisment

அவனைப் பார்த்ததும், வேலைக்காரன் நாணு கூறினான்: ""சாலினி அக்கா வந்திருந்தாங்க.''

""பிறகு... என்ன சொன்னாங்க?''

""எதுவும் சொல்லல... நான் தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். அதை குடிச்சிட்டுப் போயிட்டாங்க.''

சாலினியின் வீட்டிற்குச்சென்று இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. அவன் நினைத்துப் பார்த்தான். இன்று போகலாம், நாளைக்குப் போகலாம் என்று நினைத்தான். இப்படியே நாட்கள் கடந்து சென்றுவிட்டன. அலுவலகத்திற்கு அவள் ஃபோன் செய்தாள். இரண்டு வார்த்தைகள் பேசுவதற்குக்கூட அப்போது முடியவில்லை. முதலாளி மிகவும் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். மூச்சுவிட முடியாத அளவுக்குப் பணி நெருக்கடியும்... இப்போது அப்பிராணி இளம்பெண் இங்கு வந்திருக்கிறாள்.

நாளை எப்படியும் சாலினியின் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவன் முடிவுசெய்தான்.

வேலைக்காரன் தட்டை மேஜையின்மீது கொண்டுவந்து வைத்தான். சிறுவன்... எனினும், நாணுவிற்கு மரியாதை தெரியும். எஜமானன் கையைக் கழுவிவிட்டு மேஜைக்கு அருகில் வந்து அமர்ந்தால் மட்டுமே அவன் சோற்றைப் பரிமாறுவான். எதிர்காலத்தில் அவன் ஏதாவது ஒரு வி.ஐ.பி.யின் "பேரர்' ஆக வாய்ப்பிருக்கிறது. ""நாளைக்கு எனக்கு அலுவலகம் இல்ல. அதனால அதிகாலையில தேநீர் வேணாம். கேட்டுக்கிட்டியா நாணு?'' சோறு சாப்பிடுவதற்கு மத்தியில் அவன் கூறினான்.

""காலையில தேநீர் வேணாம்.''

நம்பாததைப்போல நாணு திரும்பக் கூறினான்.

""நான் நல்லா தூங்கணும். அலுவலகம் இல்லாத நாள்தானே? நீயும் தூங்கு...''

நாணுவுக்கு பெரிய அளவில் சந்தோஷம் உண்டானது. அதிகாலையில் கண் விழித்து, ஸ்டவ்வைப் பற்றவைத்து தேநீர் தயாரிக்க வேண்டாமே! பாவம் நாணு! இரவு உணவு சாப்பிட்டு முடித்து, அவன் படுக்கையை விரித்தான். அதிகாலையில் அருகிலிருக்கும் தேவாலயத்திலிருந்து பாடல்கள் உரத்து ஒலிக்கும்.

ஒலி பெருக்கியில்... கடவுளுக்கு காது கேட்காததைப்போல... சில நேரங்களில் அந்த கோலாகலம் போதும்- தூக்கத் திலிருந்து எழுவதற்கு... அவன் எல்லா சாளரங்களையும் மூடினான். திரைச்சீலைகளை இறக்கிவிட்டான். வெளிச்சமும் ஆரவாரமும் எதுவும் கடந்துவரக்கூடாது.

விளக்கை அணைத்துவிட்டு, அவன் படுக்கையில் கால்களை நீட்டிப்படுத்தான். என்னவொரு சுகம்! இப்படி சிறிது நேரம் படுத்தாலே களைப்பு இல்லாமல் போய்விடும். அவனுடைய கண்கள் மூடிக்கொண்டிருந்தன. அப்போது யாரோ வாசல் கதவைத் தட்டினார்கள். அவன் எழுந்து, விளக்கைப் போட்டுவிட்டு கதவைத் திறந்தான் மனதில் நினைத்ததைப்போலவே பக்கத்து வீட்டிலிருக்கும் மல்லிக்தான். அந்த மனிதருக்கு மரியாதை உணர்வு என்ற ஒன்று இருக்கிறதா? நள்ளிரவு வேளையாக இருந்தாலும் தூங்குவதில்லை. மற்றவர்களை சிரமத்திற்குள்ளாக்குவார்.

""தூங்கிட்டீங்களா? எனக்கு பதினஞ்சாம் தேதி நாளிதழ் கொஞ்சம் வேணும்.''

""இப்பவே வேணுமா?''

""கிடைச்சா பெரிய உதவியா இருக்கும். வீடு கட்டுறதுக்கான கடனைப் பற்றிய ஒரு தகவல் அதில் இருக்கு'.' எந்தவொரு கூச்சமும் இல்லாமல் மல்லிக் கூறினார்.

அவன் அலமாரியைத் திறந்து நாளிதழைத்தேட ஆரம்பித்தான்.

""எட்டாயிரம் ரூபாய் தர்றாஙக. ரெண்டு மாசம் ஆயிடுச்சு. வீடு கட்டினா உங்களுக்கு ஒரு அறை தர்றேன். நீங்களும் வேலைக்காரனும் மட்டும்தானே இருக்கிறீங்க? ஒரு அறை தாராளம்...''

மல்லிக் இதை நூறாவது முறையாகக் கூறுகிறார்.

அவரும் அவருடைய ஒரு வீடும்!

""நீங்க இன்னிக்கும் தாமதமாவே வந்தீங்க இல்லியா? தனியார் நிறுவனத்தில வேலை செஞ்சாலே இப்படித்தான் நடக்கும். மணி அடிச்சிட்டா ஃபைலை மடக்கி வைச்சிட்டு கிளம்பிட முடியாது.'' மல்லிக் தொடர்ந்து கூறினார்.

அவன் அலமாரியிலிருந்து பத்திரிகைகள் முழுவதையும் அள்ளிக் கீழேபோட்டான். பத்து... பதினைந்து நாட்களுக்கு முந்தைய அந்த நாளிதழ் எங்கு கிடக்கிறதோ?

""நாளைக்கு உங்களுக்கு விடுமுறையா?''

""ஆமா.''

""அது எப்படி? சாதாரண மதம் சம்பந்தப்பட்ட விடுமுறையெல்லாம் உங்களுக்குக் கிடையாதே?''

நாளை குருநானக்கின் பிறந்தநாள். ஒரு மத குருவின் பிறந்த நாளுக்கு அவனுடைய அலுவலகத்தின் பணி நிற்காது. நாளை உயரதிகாரி டேராடூன் வரை செல்லவேண்டியதிருக்கிறது. அதனால் அவர் அலுவலகத்திற்கு விடுமுறை அளித்துவிட்டார்.

அதை எப்படி மல்லிக்கிடம் கூறமுடியும்.

""இன்னிக்கு நீங்க சீக்கிரமே வந்துட்டீங்களோ?''

எதையாவது கூற வேண்டாமா என்று நினைத்து அவன் கேட்டான். மல்லிக் பலமாக சிரித்தார்.

""நான் அலுவலகத்துக்குப் போய் ரெண்டு நாள் ஆச்சு. ஃப்ரெஞ்ச் விடுமுறையில...''

அவன் பதினைந்தாம் தேதி வெளிவந்த நாளிதழைக் கண்டுபிடித்தான். அதை வாங்கி மடித்து மடியில் வைத்வாறு மல்லிக் கேட்டார்: ""உண்மையிலேயே உங்க அலுவலகத்தில என்ன செய்வீங்க?''

""எங்களுக்கு அங்க பிரதிநிதிகள் மட்டுமே இருக்காங்க. ஆனா பணியாளுங்க குறைவா இருக்கறதால எப்போதும் பணி நெருக்கடி. போனஸ்... பிராவிடண்ட் ஃபண்ட்... இப்படிப்பட்ட எந்த விஷயங்களும் எங்களுக்கு இல்ல.''

""நீங்க எல்லாரும் கொடுத்து வச்சவங்க.'' மல்லிக் தொடர்ந்து கூறினார்: ""சம்பளத்தில் ஆறு சதவிகிதத்தை ஜி.பி.எஃப்பில் செலுத்தணும். கட்டாயம்... மீதி பணம்தான் கிடைக்கும். பிறகு.. எங்களோட ஒவ்வொரு அதிகாரியும் வாங்குறதைவிட அதிகமான சம்பளத்தை தனியார் நிறுவனத்தில வேலை செய்யற ஒரு ஸ்டெனோக்ராஃபர் வாங்குறார். வெறுமனே அரசாங்க வேலையில சேர்றாங்க.'

மல்லிக் நீண்ட பெருமூச்சை விட்டார். பாவம்! தலை நரைத்துவிட்டது. இப்போதும் பழைய உதவியாளர்தான். மல்லிக் வாங்கும் சம்பளத்தில் இருமடங்கு சம்பளத்தை அவன் வாங்குகிறான். அந்த விஷயத்தில் அவனுக்கு சந்தோஷம் உண்டாகவும் செய்தது. பரவாயில்லாத சம்பளம் கிடைத்தால்... எதற்கு போனஸும் ப்ராவிடண்ட் ஃபண்டும்?

நாளிதழைக் கையிடுக்கில் வைத்தவாறு மல்லிக் சென்றார். அலுவலகத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவன் தூக்கத்தையும் களைப்பையும் மறந்து விட்டான். அவன் அப்படித்தான்... கதவை அடைத்து விட்டு, விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் படுத்தான். அப்போதும் அலுவலகத்தைப் பற்றிய விஷயங்கள் அவனுடைய தலையிலிருந்து விலகிச்செல்லவில்லை.

இனி வேறு மாதிரி பணிகளைச் செய்யவேண்டிய திருக்கும். கிளை ஆரம்பமாவதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கிவிட்டன. கட்டடத்திற்கு முன்பணம் கொடுத்தாகிவிட்டது. ஒன்றிரண்டு மாதங்களுக்குள் புதிய அலுவலகம் செயல்பட ஆரம்பிக்கும். பெரும்பாலும் அவனுக்கு ஒரு பணி உயர்வு நிச்சயம். அலுவலகக் கட்டடத்துடன் சேர்ந்திருக்கும் பணியாட்களுக்கான குவார்ட்டர்ஸின்மீதும் அவனுக்கு கண் இருக்கிறது. கிடைத்தால் அதிர்ஷ்டம். இப்போது அறைக்கு தரக்கூடிய வாடகைப் பணம் மிச்சம். இந்த அளவிற்கு இளம்வயதில் இப்படி நடக்கிறதா என்று ஆட்களுக்குப் பொறாமை தோன்றலாம். ஆனால், சாப்பாட்டையும் தூக்கத்தையும் மறந்துவிட்டு, சிரமப்பட்டு வேலை செய்ததால்தான் இவையெல்லாம்... இன்று காலையில் எட்டு மணிக்கு அலுவலகத்திற்குப் போய்விட்டு, இரவு எட்டு மணிக்குத் திரும்பி வந்தான். மதிய உணவிற்கான இடைவேளையில்கூட வேலை செய்துகொண்டிருந்தான்.

விருப்பத்திற்கு நேர்மாறாக அவன் அதிகாலையிலேயே கண்விழித்துவிட்டான். எப்போதும்போல சாளரங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால், அறையில் மெல்லிய இருட்டு இருந்தது. போர்வையைத் தலைப்பக்கம் இழுத்துவிட்டு, அவன் மீண்டும் தூங்குவதற்கு முயன்றான். ஆனால், அதற்குப்பிறகு உறக்கம் வரவில்லை. நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு விடுமுறை நாள் கிடைத்தது. எனினும்... காலையில் தாமதமாக கண்விழித்த காலம் மறந்துபோய்விட்டதே.

அவன் தூங்கும் முயற்சியைக் கைவிட்டான். எழுந்து, சாளரத்தைத் திறந்துவிட்டான். இளம் மஞ்சள் வெயில் அறைக்குள் நுழைந்து வந்தது.

அவன் தேநீருக்காகக் காத்திருந்தான். அப்போதுதான் வேலைக்காரனிடம் காலையில் தேநீர் வேண்டாமென்று கூறிய விஷயம் ஞாபகத்தில் வந்தது. நாசம்! கண்களைத் திறந்துவுடனேயே தேநீர் பருகுவது என்பது பழக்கமாகவே ஆகிவிட்ட விஷயம்... வேறொரு தேவையற்ற எந்த பழக்கமும் அவனுக்கில்லை. புகைப்பிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை.

ஆனால் "பெட் டீ' கிடைக்கவில்லையென்றால், எந்தவொரு செயலும் சரியாக நடக்கவில்லையென்ற நிலைமை உண்டாகும்.

அவன் சமையலறையை நோக்கி நடந்தான். சமையலறையின் ஒரு மூலையில் நன்றாகப் போர்த்தி, சுருண்டு படுத்திருந்தான் நாணு. பாவம்! தூங்கட்டும்... எழுப்ப வேண்டாம்.. அவனை மிதிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவாறு அவன் சமையலறைக்குள் நுழைந்தான்.

அவன் ஸ்டவ்வைப் பற்றவைத்தான். ஒரு சிறிய பணி உயர்வு கிடைத்தபோது சமீபத்தில் நாணுவை வேலைக்கு அமர்த்தினான். அதுவரை அவனேதான் தேநீர், சாப்பாடு தயாரிப்பதைச் செய்துகொண்டிருந்தான்.

அவற்றையெல்லாம் தயாரிப்பதற்கு அவனுக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால்... நாணு தயாரிப்பதைவிட சுவையாக...

""யாரது?''

பாத்திரங்களின் சத்தத்தைக் கேட்டதும் நாணு அதிர்ச்சியடைந்து கண்விழித்தான். அவனைப் பார்த்ததும், அவன் பதைபதைப்புடன் படுத்திருந்த பாயை ஒரு மூலையில் சுருட்டிவைத்தான்.

""சார்... நீங்க என்ன செய்றீங்க?''

தூக்கத்தின் சாயல் விலகிய நாணு கேட்டான்.

அவன் எதுவும் கூறவில்லை. அவன் தேநீர் தயாரிப்பது நாணுவுக்கு ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும். பேண்ட்டும் டையும் அணிந்து அலுவலகத்திற்குச் செல்லும் ஆளாயிற்றே! அவன் பாத்திரத்தை மேஜைகளின்மீது வைத்துவிட்டு, அறையை நோக்கி நடந்தான். தப்பித்தாகிவிட்டதே!

கால் மணி நேரத்திற்குள் நாணு தேநீர் தயாரித்துக்கொண்டு வந்தான். அவன் அதைப் பருகிக்கொண்டிருக்கும்போது, அவன் கூறினான்.

""சார், நீங்கதானே நேத்து சொன்னீங்க. தேநீர் வேணாம்னு?''

""என்ன செய்றது நாணு? காலையில கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நினைச்சேனில்லியா?''

""அது அப்படித்தான் சார். ரொம்ப காலையில் கண் விழிச்சு... அதுவொரு பழக்கமாவே ஆகிட்டது.''

அவன் தேநீரை ஊதிக்கொண்டே பருகினான்.

அப்போது நாணு தொடர்ந்து கூறினான்:

""சார்... நீங்க எதுக்கு ஸ்டவ்வைப் பத்த வச்சிங்க? என்னை எழுப்பியிருக்கலாமே?''

"உனக்கு சிரமம் தரவேணாம்னு நினைச்சேன்.''

அது நாணுவுக்குப் புரியவில்லையென்று தோன்றுகிறது. அவன் காலியான குவளையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

தேநீர் பருகி முடித்துவிட்டு, அவன் காலைச் செயல்களை ஆரம்பித்தான். கழிவறைக்குச் சென்றான்.

சவரம் செய்தான். அதற்குள் வாளியில் நாணு நீர் நிறைத்து வைத்திருந்தான். அவன் எப்போதும் குளிர்ந்த நீரில்தான் குளிப்பான். மெர்க்குரி நடுங்கச் செய்யும் நிலையை எட்டும் ஜனவரி மாதத்தில்கூட!

அந்த காலகட்டத்தில் குளிர்ந்த நீரைக் கையால் தொடுவதற்குக்கூட மனிதர்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.

எட்டு மணி ஆகும்போது, அவன் தன்னுடைய பணிகள் அனைத்தையும் முடித்து ஆடைகளை அணிந்து, சாவியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கச் செல்வதுதான் நடக்கக்கூடிய செயல். ஆனால், இன்று அலுவலகம் இல்லையே! அவனுக்கு ஒரு வெறுமை உணர்வு உண்டானது. நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு நாள்அலுவலகத்திற்குச் செல்லாமல் இருக்கிறான். சாளரத்திற்கு அருகில் வெயில் விழுந்து கிடக்கும் சாலையை வெறுமனே பார்த்தவாறு நின்றுகொண்டிருக்கும்போது, அவனுக்குத் தோன்றியது... இன்று விடுமுறை தேவையற்றது. உயரதிகாரி எங்காவது போகவேண்டுமென்றால் போகட்டும். அதற்காக மற்றவர்களுக்கு எதற்கு விடுமுறை அளித்தார்?

office

""குட் மார்னிங்!''

சாலையிலிருந்து மல்லிக் உரத்த குரலில் கூறினார்.

அவர் தன்னுடைய காதி "க்ளோஸ் நெக்' கொண்ட கோட் அணிந்திருந்தார். தலையில் பனித்தொப்பி இருந்தது. பயணத்திற்கான ஆயத்தத்தில் இருக்கிறார்.

""ஹாஸியாபாத் வரை கொஞ்சம் போய்ட்டு வரணும். என் மனûவியோட வீட்டுக்கு...''

அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. இந்த காலைப்பொழுதில் பேருந்திலும் வண்டியிலும் பயணம் செய்து, நகரத்திற்கு வெளியே இருக்கும் ஹாஸியாபாத்திற்குப் போவதென்பது...! அடர்த்தியான தோல்தான்!

""எப்போ திரும்பி வர்றீங்க?''

சமையலறையிலிருந்தவாறு நாணு உரத்த குரலில் கேட்டான்.

""ராத்திரி...''

அறையைப் பூட்டிவிட்டு திருமதி மல்லிக் வெளியேறினாள். குழந்தைகளும்... அவர்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றார்கள்.

அப்போது அவனுக்கு சாலினியைப் பற்றிய ஞாபகம் வந்தது. அவளுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டாமா? அப்பிராணி இளம்பெண்! நேற்று இங்குவரை வந்திருக்கிறாளே! சாலினியின் வீடு நகரத்தின் தெற்கு எல்லையில் இருக்கிறது. ஒன்றரை மணிநேரம் பேருந்தில் அமர்ந்திருக்கவேண்டும்.

ஒரு விடுமுறை நாளான இன்று அவ்வளவு நேரம் பேருந்தில் பயணம் செய்வதைப்பற்றி நினைக்காமல் இருப்பதே நல்லது.

சாலினியை அவனுக்குப் பிடிக்கும். மிகவும் மெதுவாகவே அவள் கண்களைச் சிமிட்டுவாள்.

அதனால் கண் இமைகளுக்குச் சுமை இருப்பதைப்போல தோன்றும். கண்களை மெதுவாக மூடிக் கொண்டும் திறந்து கொண்டும் அவள் இனிமையாகப் பேசுவதைக் கேட்பதென்பதே சுவாரசியம் தரக்கூடிய செயலாக இருக்கும்.

ஒருமுறை மட்டுமே அவளுடைய வீட்டிற்குச் சென்றிருக்கிறான். பேருந்தில்தான் பயணம்... அங்குபோய்ச் சேரும்போது, மிகவும் களைத்துப் போயிருந்தான். அனைத்து உற்சாகமும் இல்லாமற்போயிருந்தது.

அப்போதுதான் அவளுடைய தந்தையை முதல்முறையாகப் பார்க்கிறான். ஒரு ஸ்வெட்டரையும், அதன்மீது ஒரு பழைய கோட்டையும் அணிந்திருந்தார். அது போதாதென்று, காதுகளையும் தலையையும் ஒரு மஃப்ளரில் மூடியிருந்தார். அவர் "ஹூ ஈஸ் ஆஃப்டர் நேரு'வின் விமர்சனத்தை மிகுந்த கவனத்துடன் வாசித்துக் கொண்டிருந்தார். அதற்கிடையில் அவனிடம் கேட்டார்.

""ஹு ஈஸ் டூ ஸக்ஸீட் நேரு இன் யுவர் ஒப்பீனியன்?''

அந்தக் கேள்வி அவனுக்குப் பிடிக்கவில்லை. காரணம்- அந்த விஷயத்தில் அவனுக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை. அதனால் பதிலெதுவும் கூறவில்லை. அவனுடைய மௌனத்தை, ஆழமான சிந்தனையென்று தவறாகப் புரிந்துகொண்டு கிழவர் கூறினார்: ""தலையைப் புண்ணாக்கிக்க வேணாம். இப்படிப்பட்ட விஷயங்கள்ல கணிப்புக்கு எந்தவொரு அர்த்தமும் இல்ல. மாக்மில்லுக்குப் பிறகு ஹ்யூ! வாஸ் இட் எக்ஸ்பெக்டட்?''

அவன் எதுவும் கூறவில்லை. உண்மையைக் கூறுவதாக இருந்தால்... லார்ட் ஹ்யூம் எப்போது ஸர் அலக்டக்ளஸ் ஹ்யூமானார் என்று அவனுக்குத் தெரியாது. சமீபகாலமாக அவன் பத்திரிகைகள் வாசிப்பதில்லை- வாங்கினாலும். வாசிக்காமல் வெறுமனே எதற்காக பத்திரிகையை வாங்கவேண்டும்? வெறுமனே பணச் செலவு... பத்திரிகை வாங்குவதை நிறுத்திவிடலாமா என்ற சிந்தனை அவனிடம் இருந்துகொண்டிருக்கிறது.

""பட்லரின் விஷயம் ரொம்ப மோசம். அட்லாஸ்ட் ஹீ பிகேம் தி விக்டிம்.'' அவர் கூறினார். அப்போதும் அவன் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. கிறிஸ்டின் கீலரைப் பற்றிக் கூறியிருந்தால் அவன் ஏதாவது கருத்தைக் கூறியிருப்பான். ஆனால் கிழவருக்கு விருப்பம் சர்வதேச அரசியல்தான் என்று தோன்றுகிறது.

அவனால் கிழவருடன் ஒன்றிப்போக முடியவில்லை.

மீண்டும் அந்த கிழவருக்கு முன்னால் செல்வதற்கு அவனுக்குத் தோன்றவில்லை. சாலினியை வேறொரு நாளில் பார்த்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் நாளையே அவளுடைய அலுவலகத்திற்குச் செல்லலாம். பணியெதுவும் இல்லாமல் அலுவலகத்தில் அமர்ந்து அவள் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறாள்.

அவன் சாளரத்திற்கு அருகிலேயே நின்றிருந்தான். பொழுது போகவில்லை. பத்திரிகையை வாசிக்க முயற்சித்தான். அறையைச் சுத்தம் செய்வதற்கு முயற்சித்தான். எதையும் செய்யமுடியவில்லை. வெளியே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். இளம்வெயில் விழுந்து கிடக்கும், அடர்த்தியான மரங்கள் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கும் தெரு... சாலை நிறைய ஆட்கள்... மல்லிக்கிற்கு இதுவரை பேருந்து கிடைக்கவில்லையா? சிறிதளவே முடியைக் கொண்ட அவரது தலையை தூரத்திலிருந்து அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும்.

அவனுக்கு மிகவும் வெறுப்பு உண்டானது. நேரமே நகரவில்லை. மணி ஒன்பதுகூட ஆகவில்லை. இனி என்ன செய்வது?

அவன் ஆடையை அணிந்தான். அறையைப் பூட்டினான். நாணுவிடம் சிறிது நேரம் கடந்தபிறகு திரும்பி வருவதாகக் கூறினான். சாலைக்குச் சென்று நடந்தான். பேருந்தில் போவதாக இருந்தால் ஐந்து நிமிடங்கள் போதும். ஆனால், பேருந்திற்காக எவ்வளவு நேரம் காத்து நின்றுகொண்டிருக்க வேண்டும்? நடப்பதுதான் நல்லது. இளம்வெயில்... இளங்காற்று...

சிவந்த செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய கட்டடத்திற்கு முன்னால் அவள் சென்று நின்றான். படிகளில் ஏறியபோது அறைக்குள்ளிருந்து நாராயணனின் சொற்பொழிவை அவன் கேட்டான். ""ஆ ஃப்ராம்ஸ், ஏம் ரெப்பாஸோம், ஃப்ரோமாழ் எ காம்யூன்பெல் ஃபிகனக் எனய்.' (ஃப்ரெஞ்ச்காரர்களுக்கு பால்கட்டி கலக்காத உணவு, ஒரு கண் மட்டுமே உள்ள ஒரு அழகியைப் போன்றது.

அவனும் அவனுடைய ஒரு ஃப்ரெஞ்சும்!

""யாராப்பா அது? வேப்பின் காட்டில் ராமகிருஷ்ணன் நாயரா?''

கதவைத் திறந்த நாராயணன் அவனைப் பார்த்ததும் கூறினான். நாராயணன் அவனைத் தோளைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். தரையில் அமர்ந்து ஹரிஹரன் ஷுக்களுக்கு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தான். பேபி சட்ட புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தான்.

""உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு...'' ஹரிஹரன் கூறினான்.

""உட்காரு.'' பேபி அவனுக்கு நாற்காலியை நகர்த்திவிட்டான்.

""உன் சட்டை புதுசு போல தோணுதே.'' அவனுடைய சுருக்கங்கள் விழாத, டையை இணைப்பதற்கு வசதியான காலர்களுடன் இருந்த டெர்லின் சட்டையின்மீது நாராயணனின் கண்கள் பதிந்தன.

""அரிஸ்டோ.. அப்படித்தானே?''

""ஆமா...''

""க்ரீம் கலர் எடுத்திருக்கலாம்.''

""கடந்த ஞாயிற்றுக்கிழமை நாங்க உன் வீட்டுக்கு வந்திருந்தோம். வேலைக்காரன் சொன்னான்- நீ அலுவலகத்துக்குப் போய்ட்டதா...'' ஹரிஹரன் கூறினான்.

""ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகமா?'' "வக்கீல்' சட்டப் புத்தகத்தை மூடினான்.

அவன் நினைத்துப் பார்த்தான்... கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தான். புகழ்பெற்ற ஒரு வெளிநாட்டு விஞ்ஞானிக்கு அளித்த வரவேற்பு மற்றும் விருந்து சம்பந்தப்பட்ட கணக்குகளை சரிபார்ப்பதற்காக அது... அவசரமாக!

""சட்டையின் தோள்பகுதி கொஞ்சம் சின்னதா தெரியுது.'' நாராயணன் கூறினான்.

""சாலினி நல்லா இருக்காளா?'' பேபி கேட்டான்.

அவன் சிரித்தான்.

""நீ கல்யாணம் செய்தபிறகும் இப்படித்தான் இருப்பியா?''

""அதிகாலைல கண்விழிச்சு அலுவலகத்துக்குப் போனா திரும்பி வர்றது நள்ளிரவு வேளையில. ஞாயிற்றுக்கிழமையிலயும் விடுமுறை இல்லாம இருக்கிறது. அவ உன்னை விவாகரத்து செஞ்சிடுவா ஒரே வாரத்தில்!''

""வாரத்தில் ஏழு நாள் அலுவலகத்திற்குப் போனா என்ன? அவனோட சட்டையும் பேன்ட்டையும் கொஞ்சம் பாரு. நாகரீகமா ஆடை அணியறதும் ஒரு அதிர்ஷ்டம்.'' நாராயணன் கூறினான்.

""நாங்க ஒரு சினிமாவுக்குப் போறோம். நீ வர்றியா?'' ஸாக்ஸிற்குள் காலை நுழைத்தவாறு ஹரிஹரன் கேட்டான்.

""பிரதர்ஸ் காரமஸோவ... உனக்குப் பிடிக்குமான்னு தெரியாது.''

""அவனுக்குப் பிடிக்காது. ப்ரீழ்த் பாரதத்தும், மரிலீனும் இல்லயே?''

""மூணு வருஷத்துக்கு முன்ன நான் பார்த்த படம் "பிரதர்ஸ் காரமஸோவ்.' படிச்சிருக்க இல்லியா?''

"நான் படிச்சதில்லை' அவன் கூறினான்.

""நல்ல படம்... நீயும் வா. நீ எங்கும் போகல இல்லியா?''

""நான் வரல.' அவன் ஹரிஹரனின் அழைப்பை மறுத்தான்.

எல்லாரும் ஆடைகளை அணிந்து முடித்தார்கள். கதவைப் பூட்டிவிட்டு வெளியேறும்போது பேபி கூறினான்: ""இடையில அப்பப்ப நீ இங்க வரணும். நாம ரெண்டு வருஷம் சேர்ந்து வாழ்ந்தவங்க இல்லியா?''

அந்த மூன்று இளைஞர்களும் நடந்துசென்றார்கள்.

அவன் ஒரு நிமிடம் அதைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். பிறகு வீட்டைநோக்கித் திரும்பி நடந்தான்.

வீட்டை அடைந்தவுடன், அவன் வேலைக்காரனிடம் கேட்டான்: ""சோறு தயார் பண்ணிட்டியா?''

""பத்து மனிதானே ஆகியிருக்கு.''

""சீக்கிரம் தயார் பண்ணு. நான் போகணும்.''

""சார்... நீங்க எங்க போறீங்க? சாலினி அக்கா வீட்டுக்கா?''

""நீ சீக்கிரம் சாப்பாடு தயார் பண்ணு.'' அவன் அவசரப்படுத்தினான்.

அவன் சாளரத்திற்குகருகில் சென்று நின்றான். சாலையில் ஆட்களின் கூட்டம் அதிகரித்திருந்தது. பேருந்து நிறுத்தத்தில் வரிசை இல்லை. அதற்கு பதிலாக ஒரு பெரிய ஆரவாரம்... நெரிசல்... சத்தம்...

சாப்பிட்டு முடித்துவிட்டு, அவன் வீட்டைவிட்டு வெளியேறினான். பேருந்து நிறுத்தத்தைப் பார்க்கக்கூட இல்லை. நேராக வாடகைக் கார் நிறுத்தத்திற்குச் சென்றான். அலவலகக் கட்டடத்திற்கு முன்னால் வாடகைக் கார் சத்தத்துடன் வந்து நின்றது. அடுத்த கட்டடத்தின் வாசலில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த காவலாளி ஓடி வந்தான். காவலாளியின் முகம் வெளிறிப் போனது. பூனை வெளியே குதித்துவிட்டது அல்லவா? அவன் எதுவும் கூறவில்லை. விடுமுறை நாள் அல்லவா? எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவனும் சந்தோஷமாக இருக்கட்டும்.

காவலாளி கேட்டைத் திறந்துவிட்டான். லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஆபரேட்டர் இல்லையே! அதனால் அனைத்துப் படிகளையும் ஏறவேண்டிய நிலை அவனுக்கு உண்டானது. அந்த பெரிய கட்டடம் தூங்கிக்கொண்டிருந்தது. ஒரு மூலையில் அவனுடைய அலுவலகம் இருக்கிறது. அவன் அறையைத் திறந்தான். எந்தவொரு சத்தமும் இல்லை. ஒரே மனநிலையுடன் பணி செய்வதற்கேற்ற சந்தர்ப்பம்!

முதலில் சி.எஸ். கோயலுக்கும் லால் சந்த்னிக்கும் பதில் அனுப்ப வேண்டுமென்று அவன் முடிவுசெய்தான். கோயலின் மூன்றாவது கடிதம் இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்தது. அவர் தெரிந்துகொள்ள வேண்டியவை- சில சாதாரண தகவல்கள் மட்டுமே. எனினும், அவனுக்கு கூச்சமாக இருந்தது.

"எங்களுடைய நிறுவனத்திற்கு இங்கு கிளை கிடையாது. பிரதிநிதி மட்டுமே இருக்கிறார். சிக்கிரமே கிளையைத் திறக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு கிளை இருக்கக்கூடிய நகரங்களின் பெயர்களையும் மற்ற தகவல்களையும் கீழே இணைத்திருக்கிறோம்.' அவன் கோயலுக்கான பதிலைத் தயார் செய்தான்.

லால் சந்த்னிக்குத் தேவை- சில தொழில்நுட்பத் தகவல்கள். அவற்றை எடுப்பதற்காக அவன் பழைய கோப்புகளையும் நூல்களையும் ஆராய ஆரம்பித்தான். அந்த பேரமைதி நிறைந்திருந்த அறையில் அமர்ந்து, சாந்தமான மனநிலையுடன் பணி செய்துகொண்டிருந்த போது அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். சாலினியையும்... நண்பர்களையும்... பரபரப்பான சாலைகளையும்... அது மட்டுமல்ல; தன்னைத் தானேயும்...

___________________________

மொழிபெயர்ப்பாளர் உரை

வணக்கம்.

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று முத்தான சிறுகதைகளை மொழிபெயர்த் திருக்கிறேன்.

"சிலை' கதையை எழுதியவர் இலக்கியத் திற்கு அளிக்கப்படும் உயர்ந்த விருதான "ஞானபீடம்' விருதைப் பெற்றவரும், மலையாள இலக்கியத்தின் தலைமைச் சிற்பிகளில் ஒருவருமான எஸ்.கெ. பொற்றெக்காட். உலகின் பல நாடுகளுக்கும் பயணித்திருப்பவர் அவர். தான் பயணம் செய்த இடங்களையும், நாடுகளையும் மையமாக வைத்து ஏராளமான கதைகளை எழுதியவர். இந்தக் கதையும் அப்படிப்பட்டதே. சுவிட்சர்லாந்தின் "தூண்' என்ற ஏரியின் கரையில் நடைபெறும் காதல் கதை. கவித்துவத் தன்மையுடன் கதையை எழுதியிருக்கும் பொற்றெக்காட் கதையின் ஒவ்வொரு வரியிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால்... நம் ஒவ்வொருவரின் கையையும் பிடித்து அவர் இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற இடத்திற்கே அழைத்துச் செல்கிறார்.

"அலுவலகம்' கதையை எழுதியவர் நவீன மலையாள இலக்கியத்தின் நிகரற்ற அரசரான எம். முகுந்தன். ஒரு அலுவலகத்தையும், அதில் முழுமையான அக்கறையுடன் பணியாற்றும் ஒரு இளைஞரையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு கதாபாத்திரத்தை எந்த அளவுக்கு நூறு சதவிகிதம் உயிரோட்டத்துடன் படைப்பது என்பதை முகுந்தனிடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்குச் சரியான உதாரணம் இந்தக் கதையும், இதன் கதாநாயகனும்.

"கல்யாணி' கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தில் தன் எழுத்துகளின்மூலம் ஆழமான முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கும் மாதவிக்குட்டி. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் ஒரு புதுமையான கருவை வைத்து, கதையை எழுதிய மாதவிக்குட்டியை நாம் பாராட்டவேண்டும். ஒரு சிறிய கதைக்குள் எத்தனை திருப்பங்கள்! புதிர்கள்! "இப்படிப்பட்ட ஒரு கதையை எழுதலாம்' என்ற மாறுபட்ட முயற்சியில் கால்வைத்து, அதில் வெற்றியும் பெற்ற மாதவிக்குட்டியை... அவர் விடைபெற்றுச் சென்றுவிட்ட திசையை நோக்கி வணங்குகிறேன்.

இந்த மூன்று கதைகளும் வாசிக்கும் உங்களுக்கு புதுமையான அனுபவங்களை நிச்சயம் தரும்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா.