கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார் என்று கடந்த அக்டோபர் 6 ஆம் நாள் செய்தி வந்தபோது, உலகத் தமிழர்களின் உள்ளம் பேரதிர்வை சந்தித்தது. ஏனெனில் 60 வயதான இந்த மாமனிதர் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் தமிழ் உறவுகளைத் தேடினார். பல்வேறு நாடுகளைச் சார்ந்த தமிழ் மக்களை தனது தமிழ் சார்ந்த பேச்சால் ஒன்றிணைத்துத் தென்புலத்தார் என்ற குழுவின் கீழ் கொண்டு வந்திருந்தார். அதுபோலவே உலகளாவிய அடுத்த தலைமுறை இளம்பிள்ளைகள் அனைவரையும் இளந்தமிழர்கள் என்ற அமைப்பின் கீழ் கொண்டுவந்திருந்தார். அவரது இழப்பு உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்!
ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்படும் சிவ பாலசுப்பிரமணியம் ஏப்ரல் 7, 1963-ஆம் ஆண்டு, திருச்சி மாநகரில் உள்ள உறையூரில் பிறந்தவர்.
தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வந்தவர்.
இனப்பெருக்கத்திற்கு தமிழக, ஒரிசா கடற்கரைகளுக்கு வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாக மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளைத் தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ்க் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்கிற ஆய்வுக் கருத்தையும் உலகின் முன் எடுத்துவைத்தார்.
ஆமைகள் தொடர்பான இடங்கள் நான்கு ஆயிரத் திற்கு மேற்பட்டு தமிழ்ப் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்துவந்தார். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிரூபித்தார். கடலோடிகளை, மீனவர்களை பாய்மரத்தில் மீன்பிடிப்பவர் களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்றுச்சூழல் அறிவு பெற்றவர்களாகப் பார்த்தார். கடல் வள மேலாண்மை பற்றியும் மீனவர்களுக்கு பயிற்சி தந்துவந்தார்.
தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்றுச்சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொலிக் காட்சிகள் நடத்தியும், முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வந்தார்.
கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராக பணிபுரிந்தார். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல்சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல்சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.
இறுதிக் காலத்தில் சென்னை யில் வசித்து வந்த இவர் ஒருங் கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு தமிழருடைய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயங்கி வந்தார்.
குமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நிலப் பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிக்கண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென்புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்துவந்தார்.
கடலோடிகளோடு படகு களில் பயணம் செய்து ஆய்வில் ஈடுபடுவது, ஆழ்கடலில் முத்துக் குளிக்கும் தொழிலைச் செய் வோரை அடையாளப்படுத்துவது, இனப்பெருக்கத்திற்கு வரும் ஆமைகள் பாதுகாப்பாக முட்டையிட்டு அவை குஞ்சு பொரித்து கடலில் கலக்கும் வரை கடல்வாழ் மக்களின் உதவி கொண்டு அவற்றை பார்த்துக் கொள்வது என இடைவிடாது தமிழரின் வாழ்வியல் நலனில் அக்கறை கொண்டார்.
தனது சொந்த செலவில் மாலத்தீவு, இலங்கை போன்ற பல இடங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழர்கள் எப்பொழுது இடம்பெயர்ந்தார்கள் அவர்கள் வாழும் ஊரில் தமிழ்ப் பண்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்தவர் அவர்.
இந்நிலையில் அவருக்கு வாயில் நெடுநாளாக இருந்த வாய்ப்புண் புற்று நோயாக மாறியது, எந்த நாவால் தமிழர்களின் நலன் குறித்து ஆண்டாண்டு காலமாக பேசி வந்தாரோ அதே நாவின் பாதியை அறுவை சிகிச்சை மூலமாக பாதி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார், ஆனால் அவரது அந்த நிலையிலும் அவர் உள்ளம் உறங்கவே இல்லை, குழுவில் இருந்த அந்தந்த தொழில் வல்லுநர்களுடன் அடுத்து என்ன செய்யலாம், யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தார்.
அவர் நோயுற்றிருந்தபோது அவர் மேல் அன்பு செலுத்திய அனைத்து நாட்டு மக்களும் அவருக்கு பொருளாதாரத்திலும், உளரீதியாகவும் பெரும் பக்க பலமாக இருந்தனர், மகளே என்று அன்புடன் அழைக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட அந்த நல்ல மனிதருக்கு, தமிழர்களின் உள்ளத்தில் விழிப்புணர்வை கொண்டுவந்ததற்காக நானும் இந்த வேளையில் நன்றி நவில்கிறேன்.
தமிழ் மேல் பற்று கொண்ட அதன் பெருமையைக் குறித்து பெரிதும் தெரியாத அனைத்து தரப்பு தமிழ் மக்களுக்கும் இவர் எளிய நடையில் தமிழ் குறித்த கருத்துகளை சொல்வது புரிந்தது மேலும் ஆராய்ச்சியாளர்கள் என்றாலே பொதுமக்களுடன் அந்த அளவில் இணக்கம் கொண்டவர்களாக இருப்பதில்லை, ஒரிசா பாலு ஐயாவை மக்களால் எளிதாக அணுகமுடிந்தது, அதுமட்டுமின்றி அவரோடு சமகால ஆராய்ச்சியாளர்கள் பலரும் தொடர்பில் இருந்தனர். அவர் கூறுவது தவறு என்றிருந்தால் அவர்களே அதைச் சுட்டிக்காட்டியிருப்பார்கள் அப்படி நடக்காத நிலையில் அவர் கூறிய கூறுகள் யாவுமே உண்மைதான் என்று எளியவருக்கும் புலப்படும், மேலும் நீதிமன்றமே, குமரிக்கடல் லெமூரியா ஆய்வில் இவருடைய எண்ணங்களை கேட்டு அவரை வழக்கில் உதவிக்காக வைத்துக் கொண்டார்கள்.
வாழும் வரை தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் பாடுபட்ட அதனைக் குறித்தே எண்ணிய எளிமையும், அன்பும், அடக்கமும் கொண்ட அந்த மாபெரும் மனிதரோடு நானும் குறுகிய காலம் பயணித்ததை எண்ணி மகிழ்கிறேன். ஒரு தனி மனிதராக இருந்துகொண்டு உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் இணைத்த பெருமை இவருக்கு உண்டு.
இந்த வேளையில் இது போன்ற தமிழர் நலன் குறித்து எண்ணும் சான்றோர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும், அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படும்போது பொருளுதவி செய்ய வேண்டும், அவர்களின் மறைவிற்கு பின்னர் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு அளவான தொகையை ஒவ்வொரு மாதமும் வழங்கவேண்டும் என்பதை என்னைப் போன்ற பல்வேறு தமிழர்களின் வேண்டுகோளாக வைக்கிறேன், இந்த வேண்டு கோளுக்கு தமிழக அரசு செவிசாய்க்கும் என்று நம்புகிறேன்.