எஸ்பிபி பாடிய டாப் டென் பாடல்களில் ஒன்றான 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ் எஸ்.பி.பி.சார்ந்த அனுபவங்களை நம்மிடம் பகிந்துகொண்டார்.
""நான் சிறுவயதில் இருந்து கேட்டு ரசித்து வளர்ந்த எஸ்பிபி அவர்களின் பாடலுக்கு நானே இசையமைப்பேன் என்று கனவெல்லாம் கண்டதில்லை. பல வகையிலும் அவருக்கு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடமுண்டு.
எனது முதல் பக்திப் பாடலை அவர்தான் பாடினார். அந்த முதல் ஒலிப்பதிவு அனுபவமே ஒரு கனவு மாதிரி இருந்தது.நான் தமிழில் ’காதல் மன்னன்’ படத்தின் மூலம் 1998-ல் அறிமுகமானேன்.ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் சுமார் பத்துப் படங்கள் இசையமைத்து விட்டேன். நான் 100 படங்கள் இசையமைத்த போதும் பல்வேறு வகையில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த போதும் அதிலெல்லாம் எஸ்பிபி பாடிய போதும் அவர் மேல் அதே பிரமிப்பு இருந்துகொண்டே இருந்தது.
எனது முதல் தனிப்பாடலான பக்திப் பாடலுக்கும் முதல் தெலுங்குப்படம் ’சொகசு சூட தரமா’ வுக்கும் முதல் கன்னட படம் ’நீனாந்த்ர இஷ்டா ’வுக்கும் மட்டுமல்ல எனது முதல் தமிழ் படமான 'காதல் மன்னன்' படத்துக்கும் எனது முதல் தொலைக்காட்சி தொடருக்கும் அவர்தான் பாடினார்.
தமிழில் முதலில் நான் இசையமைத்த 'காதல் மன்னன்' படத்திற்காக 'உன்னைப் பார்த்த பின்பு தான்' பாடலை அவர்தான் பாடினார். என் இசையில் மெகா கமர்சியல் ஹிட் பாடலான 'ஜெமினி 'படத்தில் வரும் 'ஓ போடு' பாடலையும் அவர்தான் பாடினார்.
ஆனால் 'அமர்க்களம்' படத்தில் வரும்' சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என்ற பாடலுக்கு நான் இசையமைத்ததையும் அதில் அவர் பாடியதையும் என்னால் மறக்கவே முடியாது.
அந்த ஒலிப்பதிவு அனுபவம் நன்றாக நினைவிருக்கிறது. அது ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்தின் சசி ஸ்விடியோவில் தான் நடந்தது. சவுண்ட் இன்ஜினியராக சத்யா பணியாற்றினார்.
எஸ்பிபி நாற்பத்தி ஐந்தாயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் அவர்பாடிய திரைப்படப் பாடல்களில் 90 வரிகள் கொண்ட மிகப்பெரிய பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது.. எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடினாலும் இவ்வளவு பெரிய பாடலை அவர் அதற்கு முன்போ பின்போ பாடியதில்லை.
அந்த வகையில் நான் பாக்கியம் செய்தவனாக நினைக்கிறேன்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் அந்தப் பாடலை 'சத்தம் இல்லாத தனிமை வேண்டும் 'என்று 'வேண்டும் வேண்டும் 'என்று முடியும் வகையில் எழுதியிருந்தார். திரைப்படத்தில் ஓசை நயத்துக்காக ’கேட்டேன் ’என்று இயக்குநர் சரண் தான் அதை மாற்றச் சொன்னார் .அப்படித்தான் இப்பாடல் உருவானது.இந்தப்
எஸ்பிபி பாடிய டாப் டென் பாடல்களில் ஒன்றான 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ் எஸ்.பி.பி.சார்ந்த அனுபவங்களை நம்மிடம் பகிந்துகொண்டார்.
""நான் சிறுவயதில் இருந்து கேட்டு ரசித்து வளர்ந்த எஸ்பிபி அவர்களின் பாடலுக்கு நானே இசையமைப்பேன் என்று கனவெல்லாம் கண்டதில்லை. பல வகையிலும் அவருக்கு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடமுண்டு.
எனது முதல் பக்திப் பாடலை அவர்தான் பாடினார். அந்த முதல் ஒலிப்பதிவு அனுபவமே ஒரு கனவு மாதிரி இருந்தது.நான் தமிழில் ’காதல் மன்னன்’ படத்தின் மூலம் 1998-ல் அறிமுகமானேன்.ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் சுமார் பத்துப் படங்கள் இசையமைத்து விட்டேன். நான் 100 படங்கள் இசையமைத்த போதும் பல்வேறு வகையில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த போதும் அதிலெல்லாம் எஸ்பிபி பாடிய போதும் அவர் மேல் அதே பிரமிப்பு இருந்துகொண்டே இருந்தது.
எனது முதல் தனிப்பாடலான பக்திப் பாடலுக்கும் முதல் தெலுங்குப்படம் ’சொகசு சூட தரமா’ வுக்கும் முதல் கன்னட படம் ’நீனாந்த்ர இஷ்டா ’வுக்கும் மட்டுமல்ல எனது முதல் தமிழ் படமான 'காதல் மன்னன்' படத்துக்கும் எனது முதல் தொலைக்காட்சி தொடருக்கும் அவர்தான் பாடினார்.
தமிழில் முதலில் நான் இசையமைத்த 'காதல் மன்னன்' படத்திற்காக 'உன்னைப் பார்த்த பின்பு தான்' பாடலை அவர்தான் பாடினார். என் இசையில் மெகா கமர்சியல் ஹிட் பாடலான 'ஜெமினி 'படத்தில் வரும் 'ஓ போடு' பாடலையும் அவர்தான் பாடினார்.
ஆனால் 'அமர்க்களம்' படத்தில் வரும்' சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என்ற பாடலுக்கு நான் இசையமைத்ததையும் அதில் அவர் பாடியதையும் என்னால் மறக்கவே முடியாது.
அந்த ஒலிப்பதிவு அனுபவம் நன்றாக நினைவிருக்கிறது. அது ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்தின் சசி ஸ்விடியோவில் தான் நடந்தது. சவுண்ட் இன்ஜினியராக சத்யா பணியாற்றினார்.
எஸ்பிபி நாற்பத்தி ஐந்தாயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் அவர்பாடிய திரைப்படப் பாடல்களில் 90 வரிகள் கொண்ட மிகப்பெரிய பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது.. எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடினாலும் இவ்வளவு பெரிய பாடலை அவர் அதற்கு முன்போ பின்போ பாடியதில்லை.
அந்த வகையில் நான் பாக்கியம் செய்தவனாக நினைக்கிறேன்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் அந்தப் பாடலை 'சத்தம் இல்லாத தனிமை வேண்டும் 'என்று 'வேண்டும் வேண்டும் 'என்று முடியும் வகையில் எழுதியிருந்தார். திரைப்படத்தில் ஓசை நயத்துக்காக ’கேட்டேன் ’என்று இயக்குநர் சரண் தான் அதை மாற்றச் சொன்னார் .அப்படித்தான் இப்பாடல் உருவானது.இந்தப் பாடலின் வரிகளைப் படித்த போதே இதை பாடப்போகும் எஸ்பிபியின் குரல் என் மனதில் ஒலித்தது .சொன்னால் நம்பமாட்டீர்கள் அதை நான் மானசீகமாக எஸ்.பி. பி யின் குரலில் தான் படித்தேன்.
பாடலின் அனைத்து வரிகளும் கவிதையாக எழுதப்பட்டவைதான். ஆனால் நாலைந்து வரிகள் மட்டும் படத்துக்கான கதைக்களத்துடன் சேர்க்கப்பட்டு இணைக்கப்பட்டது.
எஸ்பிபி ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து அவர் பாடுவது பார்ப்பதற்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்.
அவர் எனது இசையில் பாட வரும்போது மிகவும் உற்சாகமாக இருப்பார். அவரது செயலாளர் விட்டல்கூட அதைச் சொல்வார். ""உங்களது ஒலிப்பதிவுக்கு வருவது என்றால்அவர் மிகவும் மகிழ்ச்சியாக வருகிறார்"" என்று.காரணம் நான் அவரை தொழில் சார்ந்த ஒருவராக எப்போதும் நினைத்ததில்லை. என் பிரியத்துக்குரிய ஒருவராக நினைப்பதால் வந்தவுடன் பாட்டைப் பற்றி பேசவே மாட்டேன். பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்போம் .அவரது உலக விஷயங்கள் பேசுவது கிரிக்கெட் பற்றிப் பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். இப்படியே பேசிக்கொண்டு இருப்போம். அரைமணி நேரம் இப்படியே போகும். பிறகு காபி, டீ சாப்பிடுவோம் .பிறகுதான் பாடலைப் பற்றிய பேச்சை ஆரம்பிப்போம்.அவர் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் அன்றைக்கு ஒரு பாடல் பாட வருகிறார் என்றால் அன்றைய தேதி, ஒலிப்பதிவுக் கூடம், ஒலிப்பதிவு செய்பவர், படம் ,பாடல் எழுதியவர். இசையமைப்பாளர், இயக்குநர் .பட நிறுவனம் எல்லாவற்றையும் எழுதிக் கொள்வார். அதற்குப்பிறகுதான் அந்தப் பாடலை எழுதுவார்.
எவ்வளவுதான் நாம் அச்சிட்டு அச்சுப் பிரதியை கொடுத்தாலும் ஜெராக்ஸ் பிரதியை எடுத்துக் கொள்ளவே மாட்டார். அதைத் தன் கைப்பட எழுதித்தான் அவர் பாடுவார்.எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி வந்த போதும் இதைக் கடைசிவரை அவர் செய்து கொண்டிருந்தார். அவரது பாடலை அவர் கைப்பட எழுதி அதைப் படித்துத் தான் பாடுவார்.அந்த வரிகளை அவர் கையால் எழுதும் போது அவருக்கும் அந்தப் பாடலுக்கும் ஒரு அந்தரங்கமான உறவு ஏற்பட்டு விடுகிறது.அதைப் பார்த்து தயாரிப்பு செய்துகொண்டுதான் பாடுவார்.
அப்படி இந்த ’சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலைப் பார்த்துப் பார்த்து எழுதினார்.
முதல் ஆறு வரிவரை எழுதினார்.என்னைப் பார்த்தார். பிறகு 10 வரிவரை எழுதினார். 15 வரிகள் எழுதினார். என்னைப் பார்த்தார். பிறகு 20 வரிகள் எழுதியவர் ""என்னது போய்க்கொண்டே இருக்கிறது?"" என்றார். அப்புறம் 40 வரிகள் எழுதினார் ""என்ன விளையாடுகிறாயா? "" என்றார்.அப்புறம் 50 வரி வரை போனது. நிறுத்திவிட்டு '’என்ன இது? ஒரு பாடல் என்றுதானே சொன்னாய்?"" என்று செல்லமாக முறைத்தார்.
நான் சொன்னேன் ""சார் இது வித்தியாசமான பாடல்.இது நீளமாகத்தான் இருக்கும். எழுதிவிட்டு படித்துப் பாருங்கள்.பாடுங்கள் பிரமாதமாக வரும் "" என்றேன். அதன் பிறகு ஒருவழியாக 90 வரிகளையும் எழுதி முடித்தார்.
முடித்து விட்டு என்னிடம் கேட்டார் ""என்னய்யா இந்த ஒருபாட்டைப் பாட வைத்தே என் தொண்டையைக் கிழித்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டாயா?"" என்றார்.அவருக்கு கோபப்படவே தெரியாது. இப்படி கேட்டபோது கூட ஒரு பொய்க் கோபம் தான். செல்லக் கோபம்.
பொதுவாகத் திரைப்படப்பாடல்களைப் பொறுத்தவரை பத்துப் பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும். சினிமாப்பாட்டு என்றால் ஒரு பல்லவி, சரணம், மீண்டும் பல்லவி என்கிற ரீதியில் முடிந்துவிடும்.அதில் பல்லவி, சரணம் என்று இரண்டு மெட்டுகள்தான் இருக்கும்.
ஆனால் ’சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் அப்படி இருக்காது. ஒவ்வொருவரியும் ஒவ்வொரு மெட்டில் இருக்கும். அந்த வகையில் பார்த்தால் அந்த ஒரு பாடலில் பல பாடல்கள் அடங்கி இருப்பது போல் இருக்கும். ஒவ்வொரு வரியும் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். பாடுபவர்களுக்கு இது மிகவும் சவாலானது. இந்தப் பாடலை நாங்கள் வெவ்வேறு வகையான ட்ராக்கில் எடுத்தோம். தொடர்ச்சியாக எடுக்காமல் முதல் இரண்டு வரிகளைப் பதிவு செய்வோம். மூன்றாவது நாலாவது வரிக்குப் பதிலாக இடைவெளி விடுவோம். பிறகு ஐந்தாவது ஆறாவது வரிகள்.பிறகு ஏழாவது எட்டாவது வரிக்கு இடைவெளி. இப்படியே இடைவெளி விட்டு விட்டு இரண்டு டிராக்கில் இதைப் பதிவு செய்தோம்.
அவர் எப்போதும் இப்படிப் பாட வரும் போது அந்தப் பாடலைத் தன் கைப்பட முதலில் எழுதிக் கொண்டுபிறகு வாசித்துப் பார்ப்பார் .வரிகள் பொருள் புரிந்து கொண்டு ஒரு பத்து நிமிடம் மனதில் பாடி ஒத்திகை பார்ப்பார்.அவ்வளவுதான் அவருக்குப் பயிற்சி நேரம். அதன் பிறகு பாடி விடுவார். இதுதான் அவரது பாணி.அப்படித்தான் அந்த பாடலையும் அவர் அனாயசமாகப் பாடி முடித்தார்.90 வரிப் பாடலையும் அப்படிப் புரிந்து கொண்டு விரைவில் பாடி முடித்தார் .இப்படிப்பட்ட ஒரு பாடலை அவரை விட்டால் யாராலும் பாடியிருக்க முடியாது.
ஒவ்வொரு வரியையும் ஏற்றமும் இறக்கமும் ,இடையிடையே கம்பீரமும் ,மகிழ்ச்சியும்,குழைவும், விரக்தியும், வருத்தமும் என சகல உணர்ச்சிகளையும் காட்டியும் அதில் பாட வேண்டும்.அப்படியே பாடியும் காட்டினார். அதில் கடைசியாக வரும் வரி 'மரணம் மரணம் கேட்டேன் 'என்று வரும். அந்த வரியைப் அவரைப் பாட வைக்கும் போது மட்டும் எனக்கு ஒரு சிறு சங்கடமாக இருந்தது.
இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பையும் அது அடைந்த வெற்றியையும் பார்க்கும்போது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. அவருக்கும் மகிழ்ச்சி.
""ஆனால் என்னை இவ்வளவு பெரிய பாடலைக் கொடுத்து பாட வச்சுட்டே.. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் அந்தப் பாடலைப் பாட சொல்றாங் களேப்பா. பாடுவதற்கு கஷ்டமாக இருக்குதுப்பா .""என்பார்.
பல இசைக் கச்சேரிகளில் பாடும் ஆர்க் கெஸ்ட்ரா பாடகர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு பயிற்சி பெறுகிறார்கள் பாடுகிறார்கள் என்பதை அறிந்து அவர் மகிழ்ச்சி அடைவார்.
"அமர்க்களம்' படத்தை திரையரங்கில் நாங்கள் போய் பார்த்தபோது ஆச்சரியம் அடைந்தோம்.பொதுவாக பாடல் காட்சிகளை கிளுகிளுப்பாக இருப்பதாக ரசிப்பார்கள். நடிக்கும் நடிகர் நடிகைகளுக்காகப் பார்ப்பார்கள் என்பார்கள். வரிகளுக்குள் உள்ளே செல்ல மாட்டார்கள். ஆனால் இந்தப் பாடலை பொறுத்தவரை முதலில் ஒரு நிமிடம் சாதாரணமாக நினைத்து பிறகு வரிகளுக்குள் நுழைந்த அவர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.பாடல் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அதைப் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது.
இந்தப் பாடலில் அதன் பெருமையும் வெற்றியும் அற்புதமான வரிகள் எழுதிய வைரமுத்து அவர்களையும் உணர்ச்சியோடு பிரமாதமாகப் பாடிய எஸ்பிபி அவர்களையுமே சேரும் என்பது எனது கருத்து .
ஆர்கெஸ்ட்ராவில் அவர் பாடும்போது அந்தக் கடைசியில் வரும்' மரணம் கேட்டேன் 'என்ற வரியை மட்டும் பாட மாட்டார். தவிர்த்து விடுவார்.இப்போது நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. மரணம் என்பதை பாடக் கூட தவிர்த்த மெல்லிய மனசுக்காரரின் வாழ்க்கையில் மரணம் நிகழ்ந்தது எனக்குத் தாங்க முடியாத துயரம்.
எஸ்.பி. பியின் பாடலுக்கு நடிகர்கள் சாதாரண மாக வாயசைத்தாலே போதும் .ஏனென்றால் பாடலில் பாதி நடிப்பு வரை அவரே நடித்துக் கொடுத்து விடுவார். வரிகளுக்கு உரிய அர்த்தத்தையும் ஆழம், உணர்வு என அனைத்தையும் அவரே கொண்டுவந்து விடுவார். இப்படி நடிகரின் வேலையையும் பாடலில் செய்தவர் அவர்.
சில பாடலைப் படிக்கும்போதே அதற்கான பாடகர்களின் குரல் என் மனதில் கேட்கும். அப்படி எஸ்பிபியை வைத்து பல பாடல்களை நான் உருவாக்கி இருக்கிறேன் .அவரது குரல் நட்சத்திரத் தகுதி கொண்டது. அவர் பாடினால் பாடலின் வியாபாரம் வெற்றி எல்லாமும் பெரிதாகிவிடும்.
எனது இசையில் படங்கள் தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் வெற்றி பெற்றன. அதற்கெல்லாம் காரணம் அவர்தான்.நான் தெலுங்கில் இசை அமைத்த போது எனக்குத் தெலுங்கு தெரியாது. என்றாலும் அவர் அர்த்தத்தைப் புரிந்து பாடி பாடல் முழுமையாக வருவதற்கு உதவி செய்தார். அதுமட்டுமல்ல ஏவிஎம்மின் பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதி நான் இசையமைத்து எஸ்பிபி பாடிய அனுபவங்கள் நிறைய உண்டு கவிஞர் வைரமுத்து, எஸ்பிபி, பரத்வாஜ், ஏவி.எம். சரவணன் என்கிற கூட்டணி பல தொடர்களில் தொடர்ந்தது.
எஸ் பிபி சார் என்மேல் அக்கறை கொண்டவர். எப்போதும் மாறாத அன்பு காட்டியவர் என்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு. அவர் தெலுங்கில் பல இசை நிகழ்ச்சிகளுக்கு பாடல் போட்டி நிகழ்ச்சிகளுக்கு என்னை நடுவராக அழைத்து பெருமைப் படுத்தி இருக்கிறார்.ஈடிவியில் 'ஸ்வராபிஷேகம் 'என்ற நிகழ்ச்சியில் என் போன்ற இசை அமைப்பாளர்களை அழைத்துக் கௌரவித்து பெருமைப்படுத்தினார்.இப்படிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னையும் அழைத்து பாராட்டி பெருமைப்படுத்தி எல்லாருக்கும் தெரியப்படுத்தினார்.
தனிப்பட்ட முறையில் என் பிரியத்திற்கும் மதிப்பிற்கும் பாசத்துக்குமுரிய ஒருவராக அவரைப் பார்க்கிறேன்.
நான் அவரை விட வயதில் இளையவன், அவர் அனுபவம் மிக்கவர் மூத்தவர் என்றாலும் என்னுடன் நட்புடன் பேசுவது ஏதோ நான் ஒரு இசையமைப்பாளர்,அவர் ஒருபாடகன் என்கிற தொழில் ரீதியில் இருக்காது. ஒரு குடும்ப நட்பு போல் என்னிடம் அந்தரங்கமாகப் பேசுவார்; விசாரிப்பார் .எனது திருமணம், குழந்தை, கார் வாங்கியது, வீடு மாறியது என அனைத்தையும் அவர் தெரிந்துகொள்ள விசாரிப்பார் .அவ்வப்போது அறிவுரைகளும் கூறுவார். என்னுடன் அவர் காட்டும் அன்புக்கு அடையாளமாக எனது வெளிநாட்டுக் கச்சேரிகளில் பலமுறை வந்து அவர் பாடி இருக்கிறார்.
அப்படிப்பட்ட மாபெரும் இசை மேதையுடன் நான் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன் அவரது நெருக்கமான அன்பு வட்டத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்று நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
அவர் மருத்துவமனை சென்றபோது வருத்தமாக இருந்தது. லேசான அறிகுறிகள்தான் என்று சொல்லியிருந்தார். நாங்கள் மிகவும் நம்பி இருந்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக நம்மையெல்லாம் விட்டு செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அவரது மறைவுச் செய்தியை கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் இந்த நூற்றாண்டின் பெரிய பாடகர் .அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவர் மாபெரும் கலைஞர் மட்டுமல்ல மிகப்பெரிய மனிதாபிமானி. மனிதநேயர். அவரைப் பற்றி ஒரு சொல் கூட கசப்பாக யாரும் இந்த உலகத்தில் சொன்னதில்லை. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மனிதராக வாழ்ந்து சென்றிருக்கிறார்
அவருக்கு யாரையும் இணையாக வைக்க முடியாது. அவரது மரணமும் சத்தம் இல்லாத யுத்தமாய் நம் மனதைச் சாய்த்துவிட்டது""
-அவரது குரலில் கலக்கம் அடர்ந்திருந்தது.
- அபூர்வன்